தற்கொலை முகம்


நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாதவனைப் பார்த்தேன். முற்றிலும் மாறியிருந்தார். அவர் முகத்தில் இருந்த தூக்கமின்மை கோடுகள் மறைந்திருந்தன. கண்களில் இருந்த வெறித்தப் பார்வை மாறியிருந்தது. எதையோ உற்சாக மிகுதியில் எதிர்நோக்குபவன் போலிருந்தார். “என்ன மாதவன் எப்படி இருக்கீங்க, எங்க இங்க?” என்றேன்.

உற்சாக மிகுதியில் அவர் இருப்பது போன்றிருந்தாலும் வார்த்தைகள் மிக தெளிவாக வெளிப்பட்டன. “கரந்தைக்கு வந்தேன் சார். அங்க ஒரு சாமியார் இருக்கார். முகத்த பார்த்து அருள்வாக்கு சொல்ரவர். முதல்ல எனக்கு நம்பிக்க இல்லைதான். ஆனாலும் வந்து பார்த்தேன். நல்லவிதமா சொன்னாரு, அப்புறம் சில பரிகாரங்கள சொன்னாரு, அத செஞ்சோன்னே எல்லாம் சரியா மாறுன மாதிரி இருக்கு. இப்ப நா நல்லா இருக்கேன். அதான் திரும்பி பார்க்க வந்திருக்கேன்”.

எப்போது வாய்க்குள் வார்த்தைகளை வைத்திருப்பார். யாராவது எதையாவது சொல்லி தூண்டிவிட்டால் போதும் இடைவெளியில்லாமல் பேசிவிடக்கூடியவராக மாறியிருப்பார். ஆனால் இன்று அவர் வார்த்தைகளில் இருந்த தெளிவு என்னை துணுக்குறச் செய்தது.

“அப்படியா நல்ல விஷயம்தான் மாதவன்” என்றேன். உடனே அவனிடமிருந்து பிரிந்து செல்வது சரியாக இருக்காது என தோன்றியது. தன் பேசன்ட் நல்ல முன்னேற்றத்திற்காக தன்னிடமிருந்து போவதை இன்முகத்துடன் வரவேற்க நினைப்பதுபோல பேச்சை மேலும் தொடர்ந்தேன். நான் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் சைக்கிளில் வந்திருந்தார். “போகும்போது சைக்கிள்ளேயே கும்மோணம் போயிடுவீங்களா” என்று சற்று ஆச்சரிய உணர்ச்சியை கூட்டி கேட்டது எனக்கும் புரிந்தது.

“ஆமா சார், அது எனக்கு ஒன்னும் கஷ்டமேயில்ல, இப்படி வாரத்துக்கு ஒருவாட்டி வருவேன்”.

அவர் அம்மா, மனைவியின் உடல்நலங்களை பற்றி விசாரித்தேன். நோயாளிகளை இம்மாதிரியான தனிப்பட்ட கேள்விகள் நெருக்கத்தை முதலில் உண்டுபண்ணுபவை. அதன் பின்னரே நம் கருத்துக்களை அவர்களிடம் எளிதாக செலுத்தமுடியும்.

“பொதுவா மக்களுக்கு இந்தமாதிரியான விஷயங்கள ஆர்வம் அதிகமா இருக்கும், கொஞ்சநாள் அங்க, இங்கன்னு போவாங்க, ஏன்னா நாம சரியான பாதையில போறாமான்னு ஒரு குழப்பம் இருக்கதான் செய்யும். அப்புறம் அலோபதிக்கு வந்துடுவாங்க, இது வாடிக்கைதான், கொஞ்சநாள் டைம் எடுத்துக்கங்க. மனசுல இதே பிரச்சனை தோணிச்சுன்னா அம்மாவ கூட்டிக்கிட்டு கும்போணம் கிளினிக்குக்கு வாங்க” என்று காரை ஸ்டார்ட் செய்தேன்.

அவர் குழப்பமாக நின்றிருந்தார். நான் வண்டியை கிளப்பிவிடும் அவசரத்தை புரிந்து கொண்டவராக வேகமாக பேசினார், “எனக்கு அப்படி தெரியல சார். அப்படி ஒரு அவசியமும் வராதுன்னு நினைக்கிறேன்.  நான் ரொம்ப நல்லா பீல் பண்றேன் இப்ப” தீர்க்கமான பேச்சாக அதை முடித்தார். அப்படி பேசும்போது அவர் கண்கள் எந்த அலைபாய்தலும் இன்றி இருந்தது. அதுவும் என்னை எரிச்சலுற வைத்தது. பரிந்துரைகளை ஏற்காத எந்த நோயாளியையும் மருத்துவர்கள் விரும்புவதில்லை. அதை இன்னும் அவர் கற்கவில்லை என தோன்றியது. ஆகவே அவர் கற்கவேண்டிய பாடத்தை நடத்த நினைத்தேன். சாதாரணமாக முறைத்தபடி ஒரு சிரிப்பு சிரித்தேன். வண்டியை மீண்டும் அணைத்துவிட்டு,

“அப்படியா சொல்றீங்க, சரி, அப்ப என்னையும் அங்க கூட்டிகிட்டு போங்க ஒருநாள், நானும் எப்படியிருக்குன்னு பார்க்கிறேன்” மருத்துவர் மீது நோயாளி நம்பிக்கையை இழப்பதைவிட அவரிடம் சவால் விட்டு வெற்றி பெறுவது அல்லது அப்படி ஒரு சமநிலையை தக்கவைப்பது நல்லது என தோன்றியது. அவர் முகபாவனை மாறியது. அவர் தன்னை குறித்து சிந்திக்கிறார் என தோன்றியது கூடவே தன் நிலைப்பாட்டை குறித்த சந்தேகமும் அவருள் எழுந்திருக்கும். சற்று தயக்கத்துடன்,

“சரி சார், அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அங்க போவோம். காலைல மொத அப்பாயின்மென்ட் வாங்கி வெட்சிடறேன், ஏன்னா செவ்வா வெள்ளிதான் பாப்பாரு மத்த நாளு பாக்கமாட்டாரு”

“ஒகே, செய்யுங்க”

விடைப்பெற்று, வண்டியை மீண்டும் கிளம்பி எப்போதுமல்லாது அதிவேகமெடுத்தேன். வண்டி என் கட்டுப்பாட்டை மீறுகிறது என்கிற நினைப்பு வந்தபோது மாதவனின் முதல் வருகை நினைவிற்கு வந்தது.

நான் ஒரு ஊருக்கு செல்கிறேன் என்றால் அந்த ஊரின் ஒரு மூலையில் ஒரு சிறுவீட்டில் தன் அறையில் தன் கடந்தகால துயரங்களையோ அல்லது எதிர்கால பயங்களையோ நினைத்து பயந்தபடி இருசுவர்கள் இணையும் இடத்தில் அமர்ந்திருக்கும் மனிதனின் மனவோட்டத்தையும், நடத்தையையும், அவன் அணியும் உடைகளைக் கொண்டும், அவன் முகத்தையும் முகத்தின் மேலிருக்கும் கண்களின் அலைச்சலையும் வைத்தும் கண்டுபிடித்துவிடுவேன். அவன் கூறும் சிறுவார்த்தையின் மூலம் அவன் எங்கே நிற்கிறான், எவ்வளவு தொலைவு வந்திருக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டுவிடமுடியும். படித்து பட்டம்பெற்று இரு ஆண்டுகளுக்குப்பின்னே மனதில் அவ்விஷயங்கள் கூடிவந்துவிட்டன. சிறப்பு தேர்வுகளின் வெற்றிக்குபின்னே அதிகளவில் என் துறையில் தேர்ச்சிப் பெற்றவனானேன்.

நீரில் மிதக்கும் திடப்பொருட்கள் சல்லடையில் வந்து விழுவதுபோல என் மனதில் குவிந்துவிட்டன மனிதர்களின் அகவடிவங்கள். நான் வாசித்தது அகத்தை மட்டும்தான். அப்படி சொல்வதுதான் எளிது. அகத்தின் வழியே முகத்தையும் முகத்தின் வழியே அகத்தையும் அறியும் கலை என்று எளிமைப்படுத்திக் கொள்ளலாம் இதை.

டாக்டர் பா. சதீஷ்வரன், எம்பிபிஎஸ், டிஎஸ்எம், எம்என்ஏஎம்எஸ் என்கிற என் பெயரை தாங்கும் போர்டை ஆணியில் முதன்முதலில் மாட்டும்போது காலையில் குளித்த இளம் கன்றுக்குட்டியை நினைவுபடுத்தி கொண்டிருந்தது. அதன் நீலவண்ணம் ஆகாயத்தையும் வெள்ளை வண்ணம் மேகங்களையும் குறிப்பதாக தோன்றியது. ஒரு முறை சற்று பதறினேன். இப்படி தோன்றுவது மனநலமற்றவனின் தோற்றங்கள் என்ற நினைப்புதான். ஆனால் அது என் வேலையை எளிதில் கற்றுக் கொள்வதன் வழிகளின் ஒன்று என தோன்றும்போது அமைதியாகிவிட்டது மனது. அதுதான் ஆழ்மனதின் விளையாட்டும் கூட.

எத்தனை மனிதர்களை பார்க்கிறேன், விதவிதமான மனிதர்கள் அவர்களின் வேடிக்கை செய்கைகள், தினமும் ஒன்றையே செய்தாலும் அவர்களது மாறாத பழக்கவழக்கங்கள். துணுக்குற செய்யும் பழக்கவழக்கங்கள். அவர்களை பாதுகாக்கும், அவர்கள் மேல் அக்கறைகொள்ளூம் அல்லது அவர்களோடு நேரத்தை செலவிடும் மனிதர்கள்தாம் சற்று பயந்து போகிறார்கள். அம்மனிதர்கள் விரும்புவது தம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் தாம். தம்மை போன்றே, பிறர் போன்றே சிந்தனைகள், செயல்கள், பேச்சுகள் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

அர்த்தமற்ற வார்த்தைகள், செய்கைகள் அவர்களை குழப்புகிறது. உடனே அதை மனதில் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். தங்களை அது ஏதோ ஒரு கொலை கருவியின் அழைப்புபோல பயந்து அதை குறித்து பேசி மாய்கிறார்கள். அவர்களை கூட்டிக் கொண்டு என்னை மாதிரியான ஆட்களிடம் வந்துவிடுகிறார்கள். அப்படியான கேஸ்கள்தாம் அதிகம். தாங்களாகவே வருபவர்களும் சிலர் உண்டு. அப்படியான ஒருவர் மாதவன் வரதராஜன், கும்பகோணத்தில் சில்லறை வேலைகளை செய்பவர். நாட்டு மருந்துக் கடையில் தற்காலிகமாக வேலையில் இருக்கிறார். அதைத் தவிர வேறு சீசனுக்கு தகுந்த வேலைகளும் அவருக்கு உண்டு.

திங்கள், செவ்வாய் கிழமைகளில் கும்பகோணத்தில் சந்தித்தால் மீண்டும் ஒரு வாரம் ஆகும் அவரை சந்திக்க. புதன், வியாழன் கிழமைகளில் மயிலாடுதுறையிலும் வெள்ளி சனி, ஞாயிறு கிழமைகளில் தஞ்சாவூரில் என் கிளினிக்கில் இருப்பேன். அந்தந்த ஊர்காரர்கள் ஒரு வாரம் காத்திருந்து அங்கேயே சந்திப்பார்கள். ஆனால் மாதவன் அப்படியல்ல, சமயங்களில் வேறு ஊர்களுக்கும் வந்துவிடுவார். இன்னென்ன பிரச்சனைகள் என்று அவர் சொல்லும் காரணங்கள் ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக சொல்வது போன்றிருக்கும்.

பொதுவாக நோயாளியை பேச விடுவதும் அவர் மூலமே அவர் சொல்லும் விஷயத்தை குறித்து கொள்வதுமாக இருக்கும் என் பணி. ஆனால் மாதவன் மிகுந்த பேச்சு சுவாரஸ்யத்தை தன்னிடம் கொண்டவர். இது சாதாரண நோயாளிகளைவிட எதிர்தன்மையை தன்னிடம் கொண்டிருப்பது. ஒரே விஷயத்தை திரும்பி சொல்லதவரை அவரின் மனதை கண்டறிவது கடினம்.

மாதவன் பெரிய வீட்டு பணக்காரப் பிள்ளையில்லை. வயதான ஒல்லியான வெள்ளையும் கருப்பும் கலந்த கோரை முடிகள் கொண்டவர். வற்றிய முகத்தில் ஒட்டியிருக்கும் சிரிப்பு அவர் இழந்ததை மறைக்கும் முயற்சியை காட்டுகிறது. குழிவிழுந்த கண்கள் அவரிடன் உடல்மன பிரச்சனைகளை குறிக்கிறது. இவரை சற்று வயதான தோற்றத்தில் பெண்ணாக மாற்றினால் எப்படியோ அப்படி அவர் அம்மா இருப்பார். அவர் அம்மாவை சொல்வதற்கு காரணம் அவரின் அத்தனை குணங்களும் மாதவனுக்கு உண்டு. அப்பா இளம்வயதில் காலமாகிவிட்டார். அப்பாவைப் பற்றி கேட்கும் போதெல்லாம் கண்கலங்கினார். அந்த கேள்விக்கு காத்திருப்பவர் போன்றிருப்பார். அது அதீதமாக முன்பே தீர்மானிக்கப்பட்டது போன்ற பாவனையாக இருந்தது.

அவருக்கான பிரச்சனை தூக்கமின்மைதான். எத்தனை வகையான தூக்க மருந்துகள் விழுங்கியும் அவருக்கும் தூக்கம் வருவதில்லை. ஹெவிடோஸை கூட எடுத்துகொண்டார். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தூங்கினால் அதிகம் என்றார். காலையில் என் வேலைகள் செய்ய முடிகிறது என்றார். ஆனால் கவனமாக எதையும் செய்ய முடியவில்லை என்பது அவரது குறை. முப்பத்தியெழு வயதான அவருக்கு திருமணமாகியிருக்கிறது ஆனால் குழந்தைகள் இல்லை.

குறிப்பாக அவருக்கான பிரச்சனை மனதில் இருக்கும் எண்ண அலைகள் தாம். அவை தன் சிந்தனையின் ஒரு வடிவம் என நினைக்க ஆரம்பித்திருந்தார். தன் மனைவியை தன்னால் திருப்திபடுத்த முடியவில்லை என்கிற அடியாழத்து பதைப்பாக இருக்கலாம். ‘அங்சைட்டி’ என்ற ஆங்கில வார்த்தையை அப்படிதான் குறிப்பிட வேண்டும். தம்வசமாகாத நீண்டநாள் ஆசைகளால் ஏற்படும் பதைப்பும் ஒரு காரணம். வேலையின்மை, குழந்தையின்மை, அன்பின்மை போன்றவைகளை கூறலாம். அது இரவில் முழுவதும் தன் வசம் இருப்பதை அவரால் உணரமுடியவில்லை. இந்த எண்ண அலைகள் தம்மை தற்கொலைக்கு தூண்டுவதாக நினைத்தார். முழுநேரமும் சிந்தனை அவரை ஆட்கொண்டிருப்பதால் என்ன சிந்திக்கிறேன் என்பதை விட சரியாக தூங்கவில்லை என்று நினைக்க ஆரம்பித்தார். தூங்கும்போது அந்த சிந்தனைகள் இருக்கும். அதன் காட்சிவடிவம் மறையும் போது வரிவடிவம் தொடங்கிவிடும். அவர் முழுமையாக சிந்திப்பதன் வழியாக நிகழ்கிறது என நினைக்க இடமிருக்கிறது. அதன் காரணமாக காலையில் எழுந்ததும் அந்த எண்ணங்களை சொற்களாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். எண்ண குவியலை பேச்சுகளாக வருவதை அவர் தனக்கே உரியதான பெரிய கலையாக நினைக்க ஆரம்பித்தார்.

பொதுவாக தனக்கிருக்கும் பிரச்சனைகள் மற்றவர்களிடம் இருப்பதாக கூறுவார்கள், மற்றவர்களிடம் காணும் பிரச்சனைகள் தனக்கும் இருப்பதாக நினைப்பார்கள். ஒருவகையில் அது தப்பித்தல்தான். மனம் போடும் புதிர்கள் அவை. அவற்றை பிரிந்தரிந்து உண்மைகளை கண்டறிவது மருத்துவரின் கடமை.

பேச்சு ஒரு கட்டத்தில் நிற்கவேயில்லை, எதிர்வீடு, பக்கத்து வீடு என்று எல்லோரிடமும் பேச ஆரம்பித்தார் மாதவன். மற்றவர்கள் உணர தொடங்கும்போது அவர்களாகவே அவர் அம்மாவை வந்து பார்த்தார்கள். அவர் அம்மாவை முதலில் இது குழப்பிவிட்டது. தொடர்ந்து அவர் அம்மாவின் நச்சரிப்பால் டாக்டரை காண வேண்டி தனியாக என்னை வந்து பார்த்தார்.

கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றில் இருக்கிறது கிளினிக். உள்ளே வந்ததும் புன்சிரிப்போடு வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார். எப்போது போன்ற பேச்சுகளைதான் பேசினார் என்றாலும் அவர் முகத்தில் ஏதோ மாற்றம் இருந்தது. கண்களை அடிக்கடி சுருக்கிக் கொண்டார். ஏதோ ஒரு யோசனையில் இருப்பது போல மேல்நோக்கி பார்த்தபடி இருந்தார். பேசும்போது மட்டும் அவர் திரும்பி நேரே முகம்பார்த்து பேசினார். எதிரில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆட்கள் என்பது போலிருந்தது அவர் முகம்.

“சொல்லுங்க மாதவன் உங்க பிரச்சனை என்ன?”

“நா நிறைய பேசுறேன் சார்”

“அது தப்பில்லையே, ஒரே விஷயத்த திரும்பதிரும்ப பேசுறீங்களா?”

“இல்லையே”

“அப்படி யாராவது சொல்லியிருக்காங்களா?”

“சிலபேரு சொல்லியிருக்காங்க”

“தூங்கும்போது கனவுகள் வருதா?”

“தூக்கமே வர்றதில்ல, தூங்கினா உடனே கனவுதான்”

“என்னமாதிரியான கனவு?”

“நிறைய குழப்பமான கனவு. நான் நடந்து போறேன், பின்னாடி ஒரு உருவம் கருப்பா என்ன பின் தொடருது. நா திரும்பி பாக்குறேன். அது மறைஞ்சுடுது”

“அப்புறம்”

“கலவையா பெயிண்டிங்க் பண்ணமாதிரி ஒரு சுவரு அதுமேல ஒரு பூனை உட்காந்திருக்கு, அது கருப்பு பூனை, உட்காந்திருக்கிறதே சரியா தெரியல, ஆனா நா பாக்குறேன். நா சுவத்துல இருக்குற பெயிண்டிங்க பாக்கும்போது அது என்னையே பாக்குது. அங்க மத்த மக்கள் இருக்காங்க ஆனா அது என்னையே பாக்குது. நா நகர பாக்குறேன், அப்ப எம்மேல அது பாயுது, பதறிபோயி எழுந்து உட்காருறேன்”

“இத மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டிங்களா?”

“இத சொன்னா மத்தவங்க பயந்துடுவாங்கன்னு பயமா இருக்கு”

“வேற என்ன பிரச்சனை?”

“இந்தமாதிரி கனவுகளைப் பற்றி சொன்னதாலோ என்னவோ, என் மனைவிக்கு எனக்கும் கொஞ்ச விலகல் வந்துபோச்சு. என்னைய சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டா, எந்த பொம்பளகிட்ட பேசினாலும் சந்தேகப்படறா, எங்கம்மா எனக்கு எதாவது நல்லது சொன்னாலே அவளுக்கு கோபம் வருது. வேலைக்கு போனா நீ ஏன் வீட்டுக்கு வரமாடேங்குறன்னு கேட்குறா, வீட்டுக்கு வந்தா நீ டாக்டர போயி பாருங்கிறா.

“உங்கம்மா என்ன சொல்றாங்க”

“எங்களுக்கு ஒரு குழந்த பொறந்தா இல்லேன்னா வெளியூருக்கு போனா சரியாயிடும்னு சொல்றாங்க, ஆனா அவ எதுக்கும் ஓத்துவர்றதில்லை. நல்ல வேலை அமையுதான்னா அதுமில்ல.

அடுத்தநாள் மாதவன் அவர் அம்மாவை கூட்டிவந்திருந்தார். அவரை வெளியே இருக்க சொல்லிவிட்டு, மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன். இது எங்கள் மருத்துவ பயிற்சியில் சாதாரணமானதுதான். ஆனால் மிக தெளிவாக இருக்கும் மாதவனைப் பற்றி அவரை வெளியே இருத்திவிட்டு அவர் அம்மாவிடம் பேசுவதன் உள்ளர்த்தம் அவருக்கு தெரிந்திருக்கும்.

“அம்மா நீங்க உங்க பையன் மேல கவனம் எடுத்துக்கணும்” என்றேன் வெளியில் இருக்கும் மாதவனுக்கு கேட்டுவிடாமல் மிகத்தணிந்தகுரலில்.

முதலில் பதறிய அவர் சகஜநிலைக்கு வந்துவிட்டார். “ஆமா நீங்க சொல்றது சரிதான், இப்பெல்லாம் அமைதியாக இருக்கான், அவன் முகத்துல நீங்க சொல்ற தற்கொல வேகம் எனக்கு இப்ப புரியுது. அருள்வாக்கு ஒன்ன கேக்க வெச்சோம்னா சரியாயிடுவான்னு தோனுது”.

“இங்க பாருங்கமா, இது அருள்வாக்கு, பில்லி, சூனியம் மாதிரி எதையும் செஞ்சு சரி செய்ய முடியாது. இந்த ஒரு வாரம் கவனமா இருங்க. நா சொன்னது அவருக்கு தெரிய வேணாம். மருந்து மாத்திரைகள சரியா கொடுங்க எதையும் மிஸ் பண்ணாதிங்க. ஒரு வாரம் கொஞ்சம் கவனமா இருங்க, உங்க மருமகளுக்கு இத சொல்லி புரியவையுங்க, இப்போதைக்கு அது போதும் ”

“சரிங்க டாக்டர்”

அவரை உள்ளே அழைத்து, மருந்து மாத்திரைகளை எப்படி தரவேண்டும் என சொன்னதை அவர் முன் கூறினேன். நான் சொல்லும்போது அவர் முகத்தை எப்படி கவனிக்கிறேன் என்பதை அவர் கவனமாக பார்த்தார். அவர் அதை மிகவும் எதிர்பார்த்தார். எப்போதும் போல் நான் பார்க்கிறேன் என்பதை செய்ய மிக சிரமமாக இருந்தது. கடைசியாக சரி என்று தலையசைத்து சென்றார்.

ஒவ்வொரு மாத முடிவில் மருந்துகள் தீரும்போது என்னை காணவந்தார், எந்த மாதத்தையும் தவறவிடாமல் வந்துக் கொண்டிருந்தார். மாத்திரைகள் அவரது நிலைக்கு தகுந்தமாதிரி கூட்டியும் அதன் அளவுகள் குறைத்தும் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில மாதங்களாக அவரை காணாதது, அவருக்குள் ஏற்பட்டிருக்கும் சாதகமான மாற்றமாகதான் நான் நினைத்திருந்தேன். மீண்டும் அவரை இப்படி சந்திப்பேன் என நினைக்கவில்லை.

தீவிரமான மனசஞ்சலங்களை சாந்தப்படுத்தப்படுவது எல்லா நோயாளிகளுக்கும் நடந்துகொண்டிருக்கிறது. முற்றிலும் பழைய நிலைக்கு திரும்புவது என்பது சாத்தியமற்றது. ஆனால் நோயாளிகளிடம் அதை தெரிவிப்பதில்லை. இந்த மருந்துகள் எப்படி செயல்படும் என்பதையும் தெரிவிப்பதில்லை. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியும் கூறுவதில்லை. நோயாளிகள் முழுமையாக டாக்டர்களை நம்பும்வரை எந்த நோயையும் குணப்படுத்திவிட முடியும், அதாவது ஓரளவிற்கு.

நோயாளியை நம்பவைப்பது ஒருவகையான வித்தைதான். அந்த வித்தையை சரியாக செய்கிறேனா என்பதை பொறுத்தே மருத்துவரின் வாழ்க்கை இருக்கிறது. அவர் பிரபல்யமடைவது அந்த நம்பிக்கையின் பொருட்டே. அந்த நம்பிக்கையை எந்த மருத்துவரும் இழக்க சம்மதிக்கமாட்டார்.

மாதவனை கரந்தையில் சந்தித்தபின் அவரை பற்றி மறந்துவிட்டேன் என்றே நினைத்திருந்தேன். அவர் சொன்ன அந்த நாள் காலையில் எழுந்ததுமே நினைவிற்குள் சரியாக அது வந்தது. இவ்விஷயத்தை எளிதில் விட்டுக்கொடுத்துவிட கூடாது என்று மட்டுமே என் மனதில் இருந்தது. போன் செய்து கிளினிக்கில் இருக்கும் சரரோஜா அக்காவிடம் சொல்லி சற்று தாமதமாக வருகிறேன் என்று சொல்லிவைத்தேன். ஆனால் அவையெல்லாம் என்மனம் முன்பே திட்டமிட்டிருந்தது.

குளித்து ரெடியான கொஞ்ச நேரத்திலேயே மாதவன் போன் செய்துவிட்டார். “இதோ கிளம்பிவிட்டேன்” என்றேன். நான் அவருடன் செல்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் அவர் இதை புரிந்துக் கொள்ள முடியும் என தோன்றியது. நான் கரந்தை போனபோது, கும்பகோணம் சாலையிலேயே நின்றிருந்தார். வண்டியில் ஏறியபின் அவர் கைகாட்டியபடி கோடியம்மன் கோயிலைத் தாண்டி இடப்பக்க சாலையில் நேராக சென்றேன். செல்லச் செல்ல வயல்கள் வந்தன. பரந்தவெளியில் காரை நிறுத்தி தரையில் இறங்கியதும் நெஞ்சுக்கூடு இலகுவானது போன்றிருந்தது. எதிரே ஒரு சிறிய கோயில் அதன் அருகில் அதைவிட பெரிய குடிசை வீடு. ஆனால் எல்லா வசதிகளும் இருக்கும் தோற்றம் கொண்டிருந்தது. உள்ளே போவதற்கு முன் “என்ன பிரச்சனன்னு சொல்லனும் சார்” என்றார்.

“என்ன சொல்றது, இது ஒரு டெஸ்ட் தானே? ம். குடும்பத்துல பிரச்சன, தூக்கம் சரியா வரமாட்டேங்குது, பொண்டாட்டி பேச்ச கேக்கமாட்டேங்குறா, அவ மேல எனக்கு சந்தேகம், அத்தோட என்னோட துறையில நான் பெரிய பேரும் புகழும் அடையலங்குற கவலை இதெல்லாம் சொல்லுங்க, இது போதாதா?, அப்புறம் நான் ஒரு டாக்டர்ன்னு சொல்லாதிங்க”. அவர் முகத்தில் மிக விசுவாசமான ஒரு வேலையாளின் பணிவு இருந்தது. ஆனால் அது எனக்கு போதவில்லை.

“இது போதும் சார். நா சொல்லிடறேன்” சொன்னதும் அவர் முகத்தில் எதாவது தெரிகிறதா என பார்த்தேன். முகத்தில் ஒரு அவசரம் மட்டுமே இருந்தது. வேகமாக ஓடினார். உள்ளே சென்று அதே வேகத்தில் திரும்பவந்தார். மிககுறுகிய இடைவெளியில் தான் திரும்பவந்தார். ஆனால் அந்த இடைவெளியே என்னை முற்றிலுமாக இழந்துவிட்டது போன்றிருந்தது. நான் என்னை நிதானப்படுத்தியும் அவரசமில்லாமலும் இருப்பது போன்று மெதுவாக எழுந்து நடந்தேன் அவருடன். மாதவனுக்கு பொறுக்கமுடியவில்லை போலும். என் முன்னே கிட்டதட்ட ஓடிக்கொண்டிருந்தார்.

அந்த குடிசை வாசலில் குனிந்து போனபோது என் உடல்மொழியில் ஒரு மோஸ்தர் உருவாகி இருந்தது. நிமிர்ந்தே பழக்கப்பட்டவன் நான் என்பதுபோல. உள்ளே இருட்டாக இருப்பது போன்றிருந்தது. பின்பக்க வாசலிலிருந்து வந்த வெளிச்சம் மெல்ல சூழலை மாற்றியிருந்தது. ஒரு முறை என் கண்களை உற்றுப் பார்த்தார் சுவரின் பக்கமாக அமர்ந்திருந்த முனீஸ்வரன். அவர் அங்கிருக்கும் சாமியார். சிகப்புநிற ஆடைகளை அணிந்திருந்தார். ஷேவ் செய்யாத முகம். நெற்றி நிறைய விபூதியும் குங்குமமும். கழுத்தில் ஏகப்பட்ட மணிமாலைகள். நரம்புகள் புடைத்த அழுத்தமான கைகள். என் உடல்மொழியில் தெரிந்த பணக்காரதன்மையோ ஏதோ ஒன்று அவரை சங்கடப்படுத்தியது போலிருந்தது. சிறிய புன்சிரிப்போடு கைகளை காட்டி முன்பக்க பலகையில் அமர சைகை செய்தார்.

கைகளை வேகமாக தேய்த்துக் கொண்டார். கண்களை மூடி மேல் நோக்கிய முகத்துடன் உதட்டில் முணுமுணுப்புகளுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மேற்குப் பார்த்து அமரவைக்கப்பட்டிருந்த இடத்தின் முன் பெரிய கனகதுர்க்கை படம் இருந்தது. அதன் கீழே அந்த பெயர் எழுதியிருந்ததால் தெரிந்தது. இடப்பக்கம் கொடியும் வேலும் வைத்திருந்த முருகனும் வலப்பக்கம் வலதுகாலை பிடித்தபடி அமர்ந்திருக்கும் சாய்பாபா படமும் இருந்தது. புலியின் மீது அமர்ந்திருந்த துர்க்கைக்கு எட்டு கைகள் இருந்தன. ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதம். சக்கரம், வாள், சூலம், தாமரை, கடாயுதம், வில் அம்பு, கீழ் இடது கையில் சங்கும் வலது கை அபயமுத்திரையும் இருந்தது. முகத்தில் அப்படி ஒரு சாந்தம். அட்டானி காலில் அமர்ந்திருந்த தோரணை அழகாக இருந்தது. இவையெல்லாம் பார்க்கும்போதே ஒன்று தோன்றியது ஏன் இப்படி வந்து அமர்ந்திருக்கிறேன் என்று. அவருக்கு இது சாதாரணம் என்பதை அவரது முகக்குறியிலிருந்தே காணமுடிந்தது. அவர் இதற்குவாங்கும் பணம் மிக குறைவுதான். இவற்றிற்காக அவர் செலவிடும் நேரம் நிச்சயம் விலை மதிப்பில்லாதது. பணம் மட்டுமே குறியாக கொண்ட மருத்துவ துறையினாரால் இச்சேவையை புரிந்துக் கொள்ளவே முடியாது.

கண்களை திறந்து என்னை புதிதாக காண்பதுபோல பார்த்தார். வேகமாக கணக்குகளை ஒரு நோட்புக்கில் எழுத ஆரம்பித்தார். தயக்கமாக நிமிர்ந்தார். “சோகமும் சுகமும் சேர்ந்த வாழ்க்கை, எல்லாம் இருக்கும் வாழ்க்கை, ஆனா எதுவும் உங்களுக்கு பயன்படபோறதில்ல, எதையும் நீங்க பயன்படுத்தபோறதில்லை, உங்க அறிவும் பணமும் மத்தவங்களுக்குதான் பயன்படும், அப்படியான உயர்ந்த பதவியில இருக்கீங்க நீங்க. அமைதியும் நிம்மதியும் வாழ்க்கையின் பிற்பகுதியிலதான் வரப்போகுது, அதுக்கு முன்னாடி பல கண்டங்களை தாண்டனும் நீங்க. இந்த ஆவணி மாச கடைசியில ஒரு பெரிய கண்டம் இருக்கும். அதத் தாண்டறே பெரிய சவால் உங்களுக்கு. உங்க குடும்பத்துல ஒரு புது ஜீவன் வர்றதுல உங்களுக்கு பல பிரச்சனைகள் இருக்குறதா நினைப்பீங்க. உண்மையை அறிய உங்களுக்கு அந்த கனகதுர்காதேவிதான் அருள்புரியனும்”.

அவர் சொல்வது எதையும் நான் கவனிக்கவில்லை. இந்த யுத்திகள் ஒரு தேர்ந்த மனநல மருத்துவன் அறிந்தவைகள்தாம். அவருடைய வார்த்தைகளில் முந்தாநாள் காலை நித்யா ஒரு வார்த்தையுடன் சேர்வதைக் கண்டு அதிர்ந்து நிமிர்ந்து அமர்ந்தேன்.

“வர்ற வெள்ளிக் கிழமையும் அடுத்த வெள்ளிக் கிழமையும் உங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள சிவன் கோவிலின் துர்க்கைக்கு விளக்கு போடுங்க, எள்ள துணியில முடிஞ்சி எண்ணையில ஊற…. “, என தொடங்கியவர் நீண்டதாக எதையோ சொல்லிக் கொண்டே போனார். அதன் அர்த்தங்கள் புரிவதற்குள் அடுத்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார். அறையின் நிறம் மாறிவிட்டது போலிருந்தது. அவர் அணிந்திருந்த நெற்றி குங்குமம் அறையை நிறைந்திருந்தது. சூடாக எதையாவது குடிக்க வேண்டும்போல் இருந்தது. “அவ்வளவுதான் நீங்க வெளியில உட்காருங்க” என்றார். கடைசியில் சொன்ன வார்த்தையில் இருந்த அழுத்தம் மற்ற வார்த்தைகளைவிட சற்று அதிகமாக இருப்பது போன்றிருந்தது.

கூடவே வந்து வந்து அவர் சொன்ன பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார் மாதவன். ஒன்றும் புரியவில்லை. நிலமை கைமீறுவது போன்றிருந்தது. நான் யாரிடமும் சொல்லாத என் ரகசியங்கள் அறிந்துவிட்டார் என்பது போன்ற பதட்டம். பேசாமல் காரில் அமர்ந்துக் கொண்டேன். தேவையில்லாமல் என் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம்போட்டன. குழப்பமான மனநிலையை குறிக்கும் செய்கைதான் இது.

மனைவி நித்யாவிற்கு தெரிந்தால் என்ன நினைப்பாள். அவள் ஒரு மகப்பேறு மருத்துவர் அவளுக்கு நிச்சயம் இது புரியப்போவதில்லை. அவள் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்வதால் ரொம்பவும் பிசியாக இருப்பாள். வெள்ளிக்கிழமை அவளுக்கு நைட் டியூட்டி. அந்தநாள் இரவு மட்டும் தூக்கமின்மையில் கழிக்கிறது. ஏன் என்று புரியாத பல்வேறு கேள்விகள் மனம் முழுவதும் அன்றிருக்கும். அவளுக்கு எப்படி விளக்குவது. விளக்கினால் அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்கிற பயமும் வருகிறது. “கொஞ்ச நாளாக நீ சரியில்ல” என்பாள். “நீ ஒரு ஒப்பினியன் யார்கிட்டயாவது எடுத்துக்க கூடாதா” என்பாள். அவள் சொல்வதில் இருக்கும் பொய்யை எப்படி வார்த்தைகளிலும் செயலிலும் வெல்கிறாள் என்று மனதை அரித்துக் கொண்டிருக்கும்.

துர்க்கையின் அமர்ந்திருந்த விதமும் கைகளும் அதன் ஆயுதமும் உள்ளுக்குள் பதிந்துவிட்டது. புலியின் வால் சற்று நீளமாக இருந்தது ஏனெனப் புரியவில்லை. ஆனால் துர்க்கை எந்த ஆயுதத்தையும் உயர்த்தி பிடிக்க வில்லை. சும்மா பிடித்திருந்தார். யாரிடமோ காட்டுவது போல.

வேகமாக வெளியே வந்த மாதவன் வாங்க “சார் போகலாம்” என்றார், “என்ன யாருமே வரலையே?” என்றேன். “அதோ பாருங்க நிக்கிறாங்க, கூப்டோன்ன வருவாங்க”. அவர் காட்டிய இடத்தில் இருவர் நின்றிருந்தார்கள். அவர்களுக்குள் எந்த அவசரமும் இருக்கவில்லை.

மெல்ல திரும்பி, “அவர் என்ன சொன்னாரு?” என்றேன். அவர் முகத்தில் இப்போது சிறுமாற்றம் தெரிந்தது. “சார், இந்த வெள்ளி இல்லாமல் அடுத்த வெள்ளிக்கு அதாவது ஆவணி இருவத்திமூணாம்தேதிக்கு அப்புறம் உங்களுக்கு பெரிய கண்டம் இருக்காம். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும், மரணக் களை உங்க முகத்துல வந்துடுச்சின்னாரு, முடிஞ்சா உங்கமேல ரொம்ப அக்கறையுள்ள குடும்பத்து நபர் யாரையாவது கூட்டிகிட்டு வரச்சொன்னாரு” என்றார்.


  • கே.ஜே. அசோக்குமார்

2 COMMENTS

  1. யதார்த்தமாய் அறிவியலையும் ஆன்மிகத்தையும் எதிர் எதிராய் உலவவிடும் கதை.. ஆசையில் இருந்து விடுபட்டால், தொன்மமாக தெரியும் யதார்த்தம், ஆசைக்குள் சிக்கிக் கொண்டால் வெற்று அறிக்கைகளாக, வெற்று அறிவிப்புகளாகத் தோன்றும் என்று சொல்வார்கள்.. கதாசிரியர் தனது வார்த்தை தடித்துவிடக்கூடாது என்பதில் சுதாரிப்பாக உள்ளார்.. மனவியல் பிரசினையில் அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்குமிள்ள இரண்டுக்கும் இடையே உள்ள பாரிய முரண்பாடுகள் சரியாக அடுத்த நிலைக்குப் பரிணமிக்காமல், சிறுகதை முடிந்து விடுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.