ஆதரவின்மையின் தயை

சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி “தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை” என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர் பரிசல் புத்தகநிலைய கடையில் கண்டடைந்தேன். தொகுப்பை அப்போதே வாசித்திருந்தேன். அயோத்தி, யுகதர்மம், மல்லிகா போன்ற சிலகதைகள் அபாரமாக இருக்கிறதே என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்ட “எஸ்தர்” சிறுகதையின் ஆழம் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை. இந்தக் கதையில் அப்படி என்ன இருக்கிறது என்று கொஞ்சமும் கூச்சமின்றி எம்.கோ அவர்களிடம் பேசியபோது, அவர் இந்தக் கதை ஏன் சிறப்பானது என்பதற்குச் சொன்ன விஷயம் என் இலக்கிய அறியாமையைக் கேலி செய்ததோடு, சிறுகதைகளை எப்படி அணுகவேண்டும் என்ற பெரிய திறப்பையும் கொடுத்தது. மறுபடி இப்போது எஸ்தர் வாசித்தபோது எப்படிப்பட்ட கதையிது என்ற ஆழ்ந்த அனுபவம் கிடைத்தது. இந்த கட்டுரை எழுதும் பொருட்டு வண்ணநிலவன் நாவல்கள் கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு, தேர்ந்தெடுத்த கதைகள் அடங்கிய தொகுப்பு, தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை, இரண்டு உலகங்கள், தாமிரபரணி கதைகள் ஆகிய புத்தகங்களைச் சமீபமாக வாசித்தேன். ஆர்ப்பாட்டமில்லாத கதைமொழி, வித்தியாசமான கதைக்களங்கள் என்று அவர் கதைகள் விரியும் விதம் பரவசத்தைக் கொடுத்தது. அன்பும், பரிவும் நிறைந்த மனிதர்களுக்கு வாழ்க்கை எப்படி கசப்பைக் கொடுக்க முடியும் என்பதே வண்ணநிலவன் கதையுலகம் எழுப்பும் ஆதாரமான கேள்வி.  அவர் படைத்த கதை மாந்தர்களின் வாழ்க்கையின் கசப்பு பொருளாதாரத்தின் பொருட்டு வரலாம், வாழ்க்கைச் சூழல் பொருத்து வரலாம், சபிக்கப்பட்ட நடவடிக்கைகளால் வரலாம். ஆனாலும் ஒரு போதும் அவை கதாப்பாத்திரங்களின் அகத்திலிருந்து வருவதில்லை இதுவே கசப்பும் இனிப்பாகும் அல்லது கசப்பையே இனிப்பென வரிந்துகொண்டு வாழ்க்கை சுவைக்க வண்ணநிலவனின் எழுதுகோல் காட்டும் தத்துவம்.

துயமனதோடும், தயையோடும் நோக்கும் போதெல்லாம் தீமையும் நன்மையே என்ற நோக்கில் பார்க்க முடிகிறது. அது தான் முடிந்து விட்டதே என்று மிகச் சாதாரணமாகக் கடந்துபோக முடிகிறது. அதனால்தான் கம்பாநதியில் வரும் கோமதிக்கு தனக்குப் பிடித்த பாப்பையாவோடு திருமணம் செய்ய முடியாததற்கு முக்கியக் காரணியான சங்கரன்பிள்ளை மீது துவேஷம் கொள்ளத் துணியவில்லை. கடல்புரத்தில் நாயகி பிலோமிகுட்டி சாமிதாஸிடம் தன்னையே கொடுத்துவிட்ட பின்னும், அவன் இன்னும் கொஞ்ச நாளில் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு அவன் பொண்டாட்டியோடு வருவான் அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. ரெயினீஸ் ஐயர் தெருவில் ரோஸம்மாவுக்கு தன் வீட்டிலில்லாமல் எங்கோ தாழாகுடியில் செத்துப்போன தன் கணவனின் உடல் மீது விழுந்து அழும் தனக்குப் பிறக்காத அவன் பிள்ளைகளை வாரி அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. யுகதர்மத்தில் ஈஸ்வர மூர்த்தி பிள்ளையைத் தன் நடுமகனிடம் வீட்டை விட்டு ஓடிவிட்ட மூத்த மகளுக்கு வாங்கி வந்த ரிப்பனை கொண்டுபோய் கொடுக்கச் சொல்கிறது. ஆடியகால்களில் ரஞ்சிதத்தை தன்னுடன் ஆடும் சிதம்பரம் ஒரு குவளை டீக்காக ஆட வைக்கும், அடுத்தவன் பொண்டாட்டியான தன்னையும் அவனையும் இணைத்தும் பேசும் கூட்டத்தைப் பார்த்து மரியாதை கெட்டுவிடும் என்று தைரியமாகச் சொல்லவைக்கிறது. ரெயினீஸ் ஐயர் தெரு ரோப்போக்காளை இடிந்து விழுந்துவிட்ட அடுப்படியில் கிடக்கும் மூன்று தாமரைப் பூக்கள் போட்ட படிக்கல்லை அல்பாயிசில் இறந்துபோன தன் மகளை நினைத்துக்கொண்டு வெறுமனே பார்த்து விட்டு வர முடிகிறது. இரண்டு பெண்கள் என்ற ஒரு கதை கொஞ்சம் மன குரோதம் சார்ந்த ஒரே ஒரு சில காட்சிகள் வருகின்றன. அதை விடுத்து வண்ணநிலவன் காட்டும் கதைமாந்தர் எல்லோருமே அவர் வார்த்தையிலேயே சொல்வதென்றால் தேவபாஷை பேசுபவர்களே.

வண்ணநிலவன் தனது பல ஒரே ஒரு வரியில் கதாபாத்திரத்தின் மனநிலையை, வாழ்க்கைச் சூழ்நிலையைக் கடத்திவிடுகிறார். அயோத்தியில் தன் கணவன் மீதிருக்கும் விலகலை, அவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும் குழந்தை பால் கொடுக்கும் மார்பினை இழுத்து மூடிக்கொள்கிறாள் என்ற ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார். கூடவே “இங்க பாக்க என்ன இருக்கு, அதான் என்னை உருக்குலைச்சாச்சே” என்கிறாள். அதே போலவே மல்லிகா கதையில் அவள் கொஞ்சமும் மதிக்காத மாமாவின் ஒரே நாள் உபயோகப்படுத்திய ஜிப்பா மச்சுப்படிக்குக் கீழே காற்றில் உருண்டு சுருண்டு பந்து போலக் கிடக்கும் போதும் அதை எடுத்துக் கொடியில் போடாமல் நிற்கிறாள். இரண்டு பெண்கள் கதையில் “எனக்கெதுக்கு அதான் தாலியறுத்து தட்டழிஞ்சி நிக்கனே” என்று ருக்கு சொல்லுமிடத்தில் அவள் துயரமும், குரோதமும் வெளிப்படுகிறது.  ரெயினீஸ் ஐயர் தெருவில் தாயை இழந்து பெரியம்மா வீட்டிலிருக்கும் டராதி தனியாக மேயும் கோழிக்குஞ்சுகளை ரசிக்குமிடத்தில் “இவ்வளவு குறைந்த  காலத்துக்குள் அவை தெருவில் இறங்கி இரை பொறுக்கத் தெரிந்துகொண்டது பெரிய ஆச்சரியம் தான்.” என்ற இடத்தில் தாயை இழந்த டாரதி பெரியம்மா வீட்டின் வேலைகளைச் செய்யும் பாங்கையும் அவள் அன்னையின் அருகாமைக்கு ஏங்கும் சூழலையும் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். பலாப்பழம் கதையில் திரியற்ற ஸ்டவ் ஏழ்மையைச் சொல்லும் படிமம். மல்லிகாவில் வரும் பூனை கள்ளத்தனத்தில் உருவகம். கரையாத நிழல்களில் “அய்யா சோப்பு போட்டுக் குளிக்கிறதை ஐயா விட்டாச்சு போலிருக்கு” என்ற வரி வேலையற்றவன் வீட்டில் எப்படியெல்லாம் தன்னைக் குறுக்கிக்கொள்வான் என்பதைக் கண் முன்னே நிறுத்திவிடும். இதைப் போல பல உதாரணங்களை அவர் படைப்புக்குள்ளிருந்து எடுத்துச் சொல்லிவிடலாம்.

காமத்தைக் கொண்டாடிய சமூகத்திடம் ஒழுக்கமென்றும் நன்னடத்தையென்றும் சொல்லி காதல் கடவுளின் அம்சமாகவும், காமம் சாத்தானுக்குரியதும் என்ற போதனை இந்தியாவுக்கு நுழைந்தது கிருஸ்துவின் அடித்தொண்டர்கள் இந்தியாவில் நுழைந்த பின்னரே. ஆனால் வண்ணநிலவனின் கதைஉலகு அதிலிருந்து மாற்றுவதற்கு முற்பட்டிருக்கிறது. அவர் கதைமாந்தர்களில் பெண்கள் குறிப்பாக கிருஸ்துவ மதத்தைச் சார்ந்த பெண்கள் சிலர் ஆளுமை மிக்கவர். அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள். எஸ்தரில் வரும் எஸ்தரும், கடல்புரத்தில் மரியம்மையும் தன் விரல்களை அசைக்கும் போது உடன் இருப்பவர்கள் மந்திர சக்திக்கு உட்பட்டது போல காரியங்கள் நிறைவேற்றுகின்றார்கள். மரியம்மை ஒருநாளும் கடலுக்குப் போய் மீன்களைக் கொண்டுவந்து வீடு சேர்ப்பத்தில்லை. ஆனால் அவள் வீட்டு முற்றத்தில் கருவாடு எப்போதும் காய்ந்து கொண்டிருக்கும். எஸ்தர் யாரையும் அதட்டவோ மிரட்டவோ செய்வதில்லை ஆனால் அவள் பேச்சை யாரும் மறுப்பதில்லை. எஸ்தர் கைப்பட்டால் சக்கை போன்ற கம்பும் கேப்பையும் என்னமாய் பரிமளிக்கிறது என்று அடுத்தவர் வியக்கும் வண்ணமிருக்கிறது. அதே சமயம் இப்பெண்கள் மர்மம் நிறைந்தவர்கள். மரியம்மை, எஸ்தர் இருவருமே வசீகரமானவர்கள். இவர்கள் சமூகம் சொல்லி வைத்திருக்கும் ஒழுக்கவிதிகளை மீறியும் மீறாதவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். மரியம்மை வாத்தி வீட்டுக்குப் போனால் வர நேரமாகும் என்று அவள் மகள் பிலோமிகுட்டிக்குத் தெரியவில்லை, ஆனால் பிலோமியின் காதலன் சாமிதாஸுக்குத் தெரிந்திருக்கிறது. மரியம்மை கள்ளச்சாராயம் குடிப்பாள். குறிப்பாகச் சிங்காரித்துக் கொள்வதிலும் சினிமாவுக்குப் போகவேண்டும் என்று நினைப்பவளாக இருக்கிறாள். வீட்டில் எப்போதும் பேய் தூக்கம் கொள்வாள். எஸ்தர் தங்களுக்கு உபயோகமில்லாத பாட்டிக்குத் துணையாகப் படுத்துக் கொள்கிறாள். மறுநாள் யாருக்கும் பாரமில்லாமல் பாட்டி செத்துப் போகிறாள். எஸ்தர் போனால் தான் ரயில் வண்டிக்காரன் தாராளமாய் வழிந்து கொண்டு தண்ணீர் கொடுக்கிறான். எஸ்தர் தன் கொழுந்தன்களுடனும் தாராளமாய் இருக்கிறாள். வேலைக்காரன் குளிக்கும் போது நிர்மாணமாக நிற்பதைப் பார்க்க வெட்கம் கொள்வதில்லை. கதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கும் சில புள்ளிகளை இணைத்துப் பார்க்கும்போது இந்த இரண்டு பெண்களும் தன் மதம் போதிக்கும் கருத்துகளை எட்டி மிதித்து மீறி வரத்துடிப்பவர்கள். ரெயினீஸ் ஐயர் தெருவில் மூன்றாம் வீட்டிலிருக்கும் அற்புதமேரியின் சித்தி எஸ்தரும் அதே விதி மீறலைத் தன் மகன் உறவில் வரும் சாம்ஸனோடு செய்கிறாள். ஆனால் அதே சமயத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் இந்து பெண்களோ, இஸ்லாமியப் பெண்ணோ இந்த விதிமீறலுக்கு அருகிலும் வராதவர்கள்.

வண்ணநிலவன் காட்டும் மதம் சார்ந்த காட்சிகள் ஆச்சரியமூட்டுபவை.  இஸ்லாத் சார்ந்த இன்னொரு கதை சமத்துவம் சகோதரத்துவம் இதில் அவர்களுக்குள் இருக்கும் போலித்தனத்தை மதமாற்றம் என்பது எவ்வளவு வியாபார நோக்கோடு நடைபெறுகிறது என்ற பதிவுமிருக்கிறது. கிருஸ்துவத்திலும் அப்பாவிகளான ஹிந்துக்களின் பொருளாதரபாடுகளைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யத் தூண்டிலிடும் காட்சிகள் அப்பட்டமானவை. இப்படி மதம் மாறிய பிறகு அவர்கள் கொண்டாடுவது ஒரே மதமென்றாலும் ஜாதியைப் பொறுத்து அவர்களின் நடவடிக்கை மாறுபடுகிறது என்ற பதிவு கம்பாநதியில் மிக ஆழமாகப் பதிவாகியிருக்கிறது. நாட்டார் கிருஸ்துவர்கள் குளிக்க ஆற்றுக்கு வருவார்கள் என்றும், பிள்ளைமார் கிருஸ்துவர்கள் யாருமே நதிக்கரைக்கு குளியலுக்கு வருவதில்லை என்பது சொல்லியிருப்பது மிக நுட்பமான யோசிக்க வேண்டிய விஷயம். மத நல்லிணக்கங்கள் சார்ந்த பல நிகழ்வுகள் கடல்புரத்தில் நாவலில் பதிவாகியிருக்கிறது. அறுப்பு பண்டிகையின் எட்டாம் நாள் மரியம்மையின் சப்பரம் விடும் கட்டளையின் முழுச்செலவும் மீன் தரகர்கள் சாயுபுமார்களுடையது, இந்த கட்டளை ரொம்ப காலமாக நடந்து வருகிறது என்ற பதிவு இருக்கிறது. கடல்புரத்தில் வரும் தரகனார், குரூஸ் மைக்கல் குடும்பத்தோடு சக கிருஸ்தவர்களை விட மிகவும் நெருக்கமான நிகழ்வான நட்புறவோடு பழகுகிறார் அவ்வுறவானது மீன் தரகோடு வியாபாரகதியில் நின்றுவிடுவதில்லை. நட்பு, அன்பு, அக்கரை ஆகியவற்றாலான உணர்விலைகளால் பின்னப்பட்ட வலை தரகனார், பிலோமி, குரூஸ் வருமிடங்கள்.

வண்ணநிலவனின் பெரும்பாலான ஆண்கள் பொறுப்பற்றவர்கள் கம்பாநதி சங்கரன் பிள்ளை, அழைக்கிறார்கள் கதையின் கதை சொல்லி, உள்ளும் புறமும் சங்கரன் இவர்கள் குடும்பத்தின் மீது அக்கரையில்லாதவர்கள் போலவே படைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சில ஆண் கதாபாத்திரங்கள்  ஆளுமை கொஞ்சமும் அற்றவர்கள், மந்தமானவர்கள் உதாரணமாகச் சொன்னால் அயோத்தியின் கதைசொல்லி அப்படிப்பட்டவன். நம்பிய பெண்களை சுயநலத்துக்காக ஏமாற்றக்கூடியவர்கள் கடல்புரத்தில் சாமிதாஸ், செபாஸ்டின் என்று பல உதாரணங்களை அவருடைய பல்வேறு படைப்புகளிலிருந்து எடுக்க முடியும். குறிப்பாக வண்ணநிலவன் படைக்கும் எழுத்தாளர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கின்றனர். தேடித்தேடிக் கதையில் சாலாட்சியின் கணவன் குடும்பம் நடத்தக் கொஞ்சமும் லாயக்கற்றவர்கள்  என்பதையே வண்ணநிலவனின் கதைகள் சொல்கின்றது. வண்ணநிலவனின் குழந்தைகள் குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளின் இடம் மிக நுட்பமானது. சரஸ்வதியின் தொய்வுக்கு வரும் கோபம் சிறு சிரிப்போடு கடந்து போக முடியாதது. ரெயினீஸ் ஐயர் தெருவில் தாயற்ற டராதிக்கு இருக்கும் குழப்பமான மனநிலையும் அற்புதமானது. ரெயினீஸ் ஐயர் தெரு நாவலில் இடம் பெறும் ஜீனோ அவள் பருமெய்தும் போது அடையும் மனக்குழப்பங்களை அப்பட்டமாய் பதிவு செய்திருப்பது அபாரமானது. ஒரு பெண் குழந்தை தன் தந்தை தன்னைப் பார்க்கும் விதத்தில் ஏதோ மாற்றமிருக்கிறது என்று நினைப்பது எவ்வளவு அபத்தமானதோ அதே அளவு உண்மையானதும். இந்த குழப்பமும் தெளிவும் ஹார்மோனல் இன்பேலன்ஸ் போல வந்து பின்னர் சரியாவது. எனக்குத் தெரிந்த பல பெண்கள் தனது தந்தையிடமிருந்தும் சகோதரர்களிடமிருந்தும் முற்றிலும் விலகிப் போனதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் மனதுக்குள் என்ன சிக்கலான எண்ணங்கள் எழுந்திருக்கக் கூடும் என்பதை இந்த பகுதிகளைப் படிக்கும்போது யோசிக்க வைக்கிறது. இதற்குப் பதில் அவர் படைத்த கதாபாத்திரத்திலிருந்தே காட்ட முடியும். காரணம் வண்ணநிலவன் சில கதைமாந்தர்கள் தலைமுறை தாண்டி தங்களைத் தேடுபவர்களாக இருக்கின்றார். கடல்புரத்தில் பிலோமிகுட்டியிடம் மரியம்மையை வாத்தி காண்பதும், காரைவீடு பெரியபிள்ளை தன் மருமகள் சுப்புலெட்சுமியை மனைவி உலகம்மாள் போலவே இருக்கிறாள் என்று நினைப்பதும், ரெயினீஸ் ஐயர் தெரு ஜீனோவை அவள் அப்பா ஜீனோ தன் மனைவி மங்களவல்லி போலவே இருக்கிறாள் என்று நினைப்பதும் தலைமுறை தாண்டிய ஒரு வாழ்க்கையைத் தேடத் தானோ?

கடல்புரத்தில் வாழும் மனிதர்கள் வாழ்வாதாரம் கடலையும் அவர்கள் படகையும் நம்பியே இருக்கிறது.  மண உறவு யாருக்கு யாருடன் என்று தீர்மானிப்பதில் படகுக்கோ லாஞ்சிக்கோ முக்கியமான பங்கிருக்கிறது. செபாஸ்டீனால் ஏமாற்றப்பட்ட ரஞ்சிக்கு வாழ்க்கை கிடைப்பது படகால், சாமிதாஸ் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்த பின்னும் பிலோமியை மணக்காதது அவள் அப்பாவிடம் லாஞ்ஜ் இல்லாதது தான். மனிதர்கள் நடுவில் நிலவும் பகை, பாசம் எல்லாமே அவர்களிடமிருக்கும் வல்லம், லாஞ்சியை சார்ந்து இருக்கிறது. செத்தாலும் படகை விற்கமாட்டேன் என்று செல்லும் குரூஸ் வல்லத்தை விற்றதும் தன்னிலை மறந்தவன் ஆகிறான். லான்ச்சுக்காக கேத்தரினை கல்யாணம் செய்துகொண்டு எப்படியாவது பிலோமிக்குட்டியை வளைத்துப்போட வேண்டுமென்று நினைப்பவன் லாஞ்சி எரிந்து போனதும் பைத்தியக்காரனாகிறான். விசுவாசமான சிலுவை குரூஸ் குடும்பத்தைக் கடைசியில் ஏமாற்றுகிறான். அவனுக்கும் வல்லம் கிடைத்ததும் பிலோமி தேவைப்படாதவளாக ஆகிவிடுகிறாள். கம்பாநதி தொன்மமாக வருகிறது. அதுவே ஜமீன்தார்போல இருக்கவேண்டிய சங்கரன்பிள்ளையில் காணாமல்போன மரியாதையும், தோரணயுமாய் திகழ்கிறது. பாப்பையா, கோமதியின் நிறைவேறாத காதலாகத் தோன்றுகிறது. சங்கரன்பிள்ளையோடு ஓடி வந்துவிட்ட சௌந்திரம் அவள் முதல் கணவன்மேல் கொண்ட மரியாதையும் பக்தி கலந்த பாசமும் கம்பாநதி போன்றதே அது கண்ணுக்குத் தெரியாதுஆனால் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒன்று.

வண்ணநிலவனின் எழுபதுக்கும் மேற்பட்ட கதைகளையும், கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு இந்த படைப்புகளைப் படிக்கும்போது உணர்ந்த ஒன்று, சில படைப்புகளுக்குள் இருக்கும் வடிவ குழப்பம் வாசக கவனத்தை மிகவும் சிதறடிப்பதாக உள்ளது. குறிப்பாக எஸ்தர் கதையில் திடீரென பெரிய அமலம் கதையைச் சொல்கிறாள், அதுவரை கதைசொல்லியின் பார்வையில் நகர்ந்த கதை, அங்கிருந்து அவள் போக்கில் சில விஷயங்கள் பதிவு செய்யப்படுகிறது. சிறிது தூரத்துக்குப் பின்னர் மறுபடியும் கதைசொல்லியின் பார்வையில் கதை மாறுகிறது. இப்படி அமைந்தது கதையின் வாசக அமைதியைக் குலைப்பதாக இருக்கிறது. போலவே கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு நாவல்களில் கதைசொல்லிகள் குழப்பமான நடையில் கதையைச் சொல்கின்றார்கள். மிகச்சிறிய நாவல்களில் எண்ணற்ற பாத்திரங்கள் வாசிப்பு அமைதியை வெகுவாகப் பாதிக்கின்றன. யார்க்கு யார் எந்தவிதத்தில் உறவென்று திரும்பத் திரும்ப வாசித்து நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. கம்பாநதி நாவலின் சில கதாபாத்திரங்கள் அழுத்தமில்லாமல் பேருக்கு வந்து போகின்றார்கள். ரெயினீஸ் ஐயர் தெருவில் கடைசி அத்தியாயத்தில் நாவல் முடியும் சமயத்தில் ஜாஸ்லின் பிள்ளை குடும்பத்தைப் பற்றிய கதை ஆரம்பமாகிறது. மற்ற கதாப்பாத்திரங்கள் பற்றிய குறிப்புகள் முதல் அத்தியாயத்திலேயே வந்துவிட இந்த வீட்டு மக்களைப் பற்றி அவ்வளவு விரிவாக இறுதி அத்தியாயத்தின் இறுதியில் வாசிப்பது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. கடல்புரத்தில் முதல் அத்தியாயத்திலேயே அப்பா மகன் இவர்களிடையேயான முரண், அம்மாவின் எண்ண ஓட்டம் வேறு விதமாகவும், பெண்ணின் நினைப்பு வேறு விதமாகவும் மணல் போல ஒன்றுக்கொன்று கலக்காமல் இருக்கிறது. இந்த ஒழுங்கின்மை மொத்த கதையிலும் தொடர்கிறது. வண்ணநிலவனின் கதைகள் பலவற்றில் இருக்கும் கச்சிதத்தன்மையும் அவை நிகழ்த்தும் மாயாஜாலமும் நாவல்களில் நிகழாமல் இருப்பது என்னளவில் வருத்தப்பட வேண்டிய விஷயமாகப் பட்டது. இது என்னுடைய வாசிப்பின் குறைபாடாகவும் இருக்கலாம். அதே சமயம் ஒரு கதைக்களத்தில்  இன்னொரு கதையைச் சொல்லியிருப்பது குறிப்பாக கம்பாநதியில் ரெயினீஸ் ஐயர் தெருவைப் பற்றிய குறிப்புகள் இருப்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது. இதைப் போலவே சில கதைகளில் வேறு கதைகளுக்கான குறிப்பும், நாவல்களின் சிறிய சாயல்களும் பதிவாகியிருப்பது அழகானது.

வண்ணநிலவனின் மொத்த படைப்புகளிலும் ஒற்றை உணர்வாக மேலெழுவது ஆதரவின்மை. அதற்கு புறக்காரணங்களாகப் பொருளாதாரம், வேலையின்மை, தனிமை, தள்ளாமை, வறுமை என்ற எண்ணற்ற வண்ணங்கள் இருந்தாலும் அடிநாதமாய் திகழ்வது வாழ்க்கை திரித்துக் கொடுத்த கசப்பு. என்ன தான் மனிதர்கள் தனித்தனியானவர்கள், விதவிதமானவர்கள், இன்மைகளால் நிறைந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு அடுத்தவர் மேல் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை, மனக் கொந்தளிப்புகள் இல்லை, முக்கியமாய் வன்மம் இல்லை. அதனாலோ என்னவோ அவர் சொல்லும் கதைகளில் விதவிதமான வாசனைகள் வித்தியாசமாய் மனதைக் கிளர்த்துகின்றன. வண்ணநிலவன் கதைகளில் வெயில் ஒரு கதாப்பாத்திரமாக வருகிறது. ரெயினீஸ் ஐயர் தெரு மக்கள் கூட வெயில் காலத்தையே மிகவும் ரசிக்கின்றார்கள். அந்த வெம்மையான கதைக்களத்தில் சுண்ணாம்பு கொழுப்பில் மெழுகிய தண்தரைகளும், அகலமான திண்ணைகளும் அவர் கதை உலகமும் மொத்தமும் நிறைந்திருக்கிறது. தண் என்ற அந்த திண்ணையில் தன் உடலைச் சாய்த்துக்கொள்ளும் காரணத்தாலோ என்னவோ அவர்கள் தயை மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆம் வண்ணநிலவன் படைத்திருக்கும் ஆதரவின்மை தயை நிறைந்தது. வண்ணநிலவன் தனது கடல்புரத்தில் நாவல் முன்னுரையில் சொல்வது போல இந்த தயை மிகுந்தவர் பேசுவதே தேவபாஷையில் தான். வண்ணநிலவன் படைப்புகள் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டுமென்று அவரை வணங்கி வாழ்த்துகிறேன்.

Previous articleகம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
Next articleயதார்த்தம் என்பது நிலையில்லாதது
லாவண்யா சுந்தர்ராஜன்
எழுத்தாளர், கவிஞர் தொடர்ந்து தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் முக்கியமான எழுத்தாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.