பொன்னுலக்ஷ்மி


நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம்.

பஸ்ஸை பிடிக்கும் வேகத்தில் நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் ஓடும் போதோ, சாலையோர கடைகளில் நின்று பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடும் போதோ, ஒய்யார வாகனத்தில் குளு குளு ஏசியில், இசையை ரசித்துக் கொண்டே, சிக்னலில் காத்திருக்கும் போதோ, உயர்தர ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வருகையில், கலர் கலரான ஜீரக மிட்டாயை வாயில் குதப்பி, மரக்குத்தூசியால் பல்லிடுக்கில் குத்திக் கொண்டு, “ஏப்பம்” விடும் போதோ, சினிமா பார்த்துக்கொண்டு திரும்பும் வேளையிலோ, நீங்கள் அவளைக் கடந்து சென்றிருக்கலாம்.

கருப்பு மணலுடன் கூடிய சாக்கடைக்கழிவு குவியல்களின் அடுத்தோ, வெடித்த மார்பு தெரிய சிரித்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் போஸ்டர் ஒட்டிய, பாசிப்படர்ந்த முனிசிபாலிட்டி சுவரின் அருகிலோ, ஆண்கள் “மூத்திர” நிரூற்றி வளர்த்த “ட்ரான்ஸ்பார்மர்களின்” அருகிலோ, பூங்காவின் வெளியிலோ, கடற்கரையின் வெயிலிலோ “அவளைக்” கண்டிப்பாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இரக்கத்தின் உச்சியில் அவளுக்கு நீங்கள் ஐந்தோ, பத்தோ கொடுத்திருக்கலாம். கொஞ்சம் பெருந்தன்மையுடன் உங்கள் குழந்தை “மிச்சம்” வைத்த சாப்பாட்டை அல்லது பிஸ்கட் பாக்கெட்டை அவளுக்குக் கொடுத்திருக்கலாம். “ஐயோ பாவம்” என உண்மையான இரக்கத்தோடு அவளுக்காக ஐந்தாறு நிமிடங்கள், மனம் வருந்த மட்டும் செய்துவிட்டு , பின்பு உங்கள் வேலையை, உங்கள் போக்கில் பார்த்திருக்கலாம். இப்போதாவது நினைவுக்கு வருகிறதா? கிழிந்த அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு, கட்டியான துணியில் பாவாடைக் கட்டிக்கொண்டு, முடிகள் ஒழுங்கற்று அங்குமிங்கும் அலைபாய, கைகளில், கால்களில் கிழிந்த துணிகளை, கண்ட கயிறுகளைக் கட்டிக் கொண்டு, மலங்க மலங்க விழித்துக்கொண்டு நிற்கும் அந்த உருவத்தை. ஞாபகம் வந்திருக்குமென நினைகிறேன். அவள்தான்.. அவளேதான்.. நம்ம “பொன்னுலக்ஷ்மி”

சரி.. நினைவுக்கு வந்துவிட்டதால் உங்களிடம் சில கேள்விகள். அவளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவளிடம் நீங்கள் எப்போதாவது பேசியதுண்டா? வேறு வேலை ஏதும் இல்லையென்றால், வாருங்கள் என்னுடன். அந்த “பொன்னு லக்ஷ்மி” -யை பிடிக்கத்தான் தளவாடங்களுடன் போய்க் கொண்டிருக்கிறேன்.

‘நீ யாருடே?’ – என்று கேட்கீறீர்களா?

சரியாப் போச்சு?

என்னைத் தெரிய வில்லையா?

உங்களை நம்பி பாதிக் கதையை கூறியாயிற்று?

என்னைத் தெரிய வில்லையா? என்னத்த சொல்ல…. உங்களிடம்.

வேண்டாம்.. விடுங்கள்…

உங்களுக்கு “அன்பு இல்லம்” தெரியுமா.

கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

ஆம்.. சரிதான் நீங்கள் நினைப்பது?

அனாதைகளை அரவணைத்து காக்கும் தொண்டு நிறுவனம்தான். அதில் நான் “பகுதிநேர சமூக சேவகர்”. முழுநேரப் பணி வெளிநாட்டு கணினி நிறுவனத்தில் உதவி மேலாளராக.

செய்யும் வேலைக்கதிகமாக கொடுக்கப்படும் சம்பளத்தை வைத்து, தேவையில்லாதப் பொருள்களையெல்லாம் வாங்கி குவித்து, பின்பு எதற்கு அப்பொருள்களை வாங்கினேன் என்று தெரியாமல் மாதம்தோறும் “பில்” கட்டியே சாகப்போகும் “கணிணிப் பொறியாளன்” நான். கடவுளைப் போல் நேரில் கண்டிராத, இல்லாத “கௌரவத்தை” கடன் வாங்கியாவது, கட்டிக், காப்பாற்றிக் கொண்டிருக்கும் “ஹைகிளாஸ் பிச்சைக்காரன்தான்”- நான். அடுத்தவர்கள் “மெச்ச” வேண்டுமென்பதற்காக, என் வாழ்கையை, அவர்கள் விரும்பிய வண்ணம், வாழ்ந்து கொண்டிருக்கும் “அப்பர் மிடில் கிளாஸ் மனிதன்”. கிரிடிட்க் கார்டை தேய்த்து, தேய்த்துக் கிளம்பிய “கடன் தீயில்” எப்போது வேண்டுமானாலும் விழ சாத்தியமுள்ள “சூழ்நிலைக்கைதியே” – நான்.

இப்படி நெறைய சொல்லலாம் என்னைப் பற்றி. ஆனால் நான் கெட்டவன் இல்லை. அம்மா சத்தியமா நல்லவனாக்கும்.. அதனால்தான் “ஞாயிற்று கிழமை அதுவுமாய், மனநிலைப் பாதிக்கப்பட்ட “பொன்னுலஷ்மியை” தேடி, தெருத்தெருவாய் அலையப் போகிறேன். அவளை கண்டு பிடித்து விட்டால், அவளோடு ஒரு செல்பி எடுத்து “social work on Sunday” -னு என்னுடைய பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேனென்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். என்னைப் போலவே வெட்டி பந்தாவிற்கு ஆசைப்பட்ட “ஜீவ ராசிகள்” ஒவ்வொருத்தரும் போடுவாங்க பாரு கமெண்ட்ஸ்…

பாசப்பிணைப்பே…

கருணைக் கடலே..

பரிவின் சிகரமே..

ஆம்பிள்ள தெரசாவே…

அன்பின் விளிம்பே..

ஆவ்சம் ப்ரோ… – என சும்மா.. நாலஞ்சு நாளைக்கு பேஸ்புக்குல எங்க திருப்பினாலும் நம்ம போட்டோதான். நேரம் போவதே தெரியாது.

கிரிடிட் கார்ட தேய்த்து கடனில் வாங்கிய Canon DSLR – க்கு வேலை வேண்டாமா.. என்ன?? புகழ் சும்மா கிடைக்குமா? “புகழ்ச்சியை” விரும்பாதோர் உலகில் உண்டா.. என்ன..? ஒரு மிடில்கிளாஸ் கணிணித் தொழிலாளி வேறு என்ன செய்து “புகழ்” பெற முடியும். சமூக சேவை, புகழ், பொழுதுபோக்கு இந்த மூன்றையும் ஒன்றாகச் செய்யும், என்னைப் போன்ற “அறிவாளியைக் கண்டிருக்கிறீர்களா? இதைத்தான் ஒரேகல்லில் “மூணுமாங்கா” என்பார்கள். சிரிக்காதீர்கள்…. ஆனால் இப்போதும் சொல்கிறேன். அம்மா சத்தியமா, நான் நல்லவனாக்கும்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னுடைய திட்டம் இதுதான்… இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

“பொன்னு லக்ஷ்மி” எங்கிருப்பாளோ? என் அனுமானங்கள் சரியாக இருந்தால், கண்டிப்பாக அவள் நான் முன்பு விவரித்த ஏதோ ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும். சரி.. எனக்கெப்படி அவள் பெயர் தெரியுமென்று, யோசிக்கிறீர்களா? இது அவள் உண்மை பெயர் இல்லை. நகராட்சி அலுவலர்களின் கழிந்த வாரக் கணக்கெடுப்பின் படி, நகரத்தில், பொதுஇடங்களில் சுற்றித் திரியும் “மனநிலை பாதிக்கப்பட்டவர்களின்” எண்ணிக்கை பதிமூன்று. அதில் பகுதி நேர சமூக சேவகராகிய எனக்கு ஒதுக்கப்பட்டவள் தான் இவள். ஊரெங்கும் அலைந்து, அவளைக் கண்டுபிடித்து, அவள் இருக்கும் இடத்தை “மனநிலை காப்பகத்திற்கு” அறிவித்து விட்டால் இவ்வாரத்திற்கான “என் சமூக சேவை” சுமூகமாக முடிந்தது. நான் நல்லவனாக இருப்பதால் அவர்கள் விவரித்த அந்த உருவத்திற்கு “பொன்னுலக்ஷ்மி” என்று ஒரு இன்ஸ்டன்ட் பெயர் வைத்து, தெருத்தெருவாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் அவளும் “மனிஷி” தானே. அவளுக்கும் ஒரு பெயர் இருந்துவிட்டு போகட்டுமே.

இருபத்தி ஒன்றாவது தவணை முடிந்த என்னுடைய “சொந்தக்(?)காரில்” தான் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அங்குமிங்கும் அலைந்து திரிந்து கண்டுபிடித்து விட்டேன் அந்த சொப்பனச் சுந்தரியை. கடற்கரையின் குடிநீர் சுவற்றின் அருகில், அதன் நிழலில், விவரிக்க முடியா ஒரு கோணத்தில் படுத்த நிலையில் குறுகிக் கிடக்கிறாள் அந்த “பொன்னுலக்ஷ்மி”. ஒரு 28 அல்லது 30 வயதிருக்கலாம். சராசரி மனநிலையோடு நெருங்க முடியாத அழுக்கான உடம்பு, கூடவே சிறு நாற்றமும். உடம்பின் அங்க அவயங்கள் தெரியாத “பைஜாமா” போன்ற ஒரே ஆடை. அடிப்புறத்தில் கூடுதலாக ஒரு பாவாடையும். அதில் லேசாக ஈரமாக இருப்பதுபோலிருந்தது. “ஒன்றுக்கு” இருந்திருக்கலாம். ஏராளமான ஈக்கள் மொய்க்க “குப்பைத் தொட்டி ஜிலேபித் துண்டாய்” துவண்டு கிடக்கிறாள் “பொன்னுலக்ஷ்மி”. அவள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. மீண்டும் அவளைக் கவனித்தேன். அழுக்கேறிய முகத்தில் அழகான கண்கள். பெண்களின் கண்களை யாருக்குத்தான் பிடிக்காது.

அவளைக் குளிக்க வைத்து சுத்தப்படுத்திப் பார்த்தால், சில கோணங்களில் அழகாக இருப்பாளெனத் தோன்றியது. உடம்பில் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள். புத்தம் புது காயங்கள். ஆறிய காயங்களின் வடுக்கள். ஆறிக்கொண்டிருக்கும் காயங்கள். பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து “கிளிகளை” ருசி பார்க்கும், “திருட்டு பூனைகள்” நிறைந்த உலகமிது. அழுக்காக இருந்தாலும், சாலையில் கிடக்கும் “சிறகில்லா கிளியை” சும்மா விட்டிருக்குமா என்ன? கண்ணில் பட்ட காயங்கள் அனைத்தும் பூனைகளின் “பரண்டல்களாகவே” தோன்றியது. அவளைப் பார்த்த நிலையில் எனக்கு இப்படியெல்லாம் தோன்றியது. என் அடிமனதின் “ஆண் வக்கரத்தினால்” எனக்கு இப்படித் தோன்றியிருக்கலாம். நடந்த உண்மை வேறாகவும் இருக்கலாம். யாருக்கு தெரியும். கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

காப்பகத்திற்கு போன் செய்து, நாங்கள் இருக்கும் இடத்தை விவரித்து அவர்கள் வருகைக்காக காத்திருக்க தொடங்கினேன். அவளை மீண்டும் கவனித்தேன். யாரோ, என்னவோ கொடுத்திருக்கிறார்கள். அதைத் தின்றுக் கொண்டிருக்கிறாள். என்ன அது? கேக்கா, வடையா? ஏதோ ஒன்று.. சரியாகத் தெரியவில்லை. கையில் வைத்து பிசைந்து, அடையாளம் தெரியாத படி உருட்டி வைத்திருக்கிறாள். அவள் தலைமாட்டில் வைத்திருந்த துணி பொட்டலத்தைக் கவனிக்கிறேன். முழுவதும் ஆங்காங்கே பொறுக்கிய துணிகள். அழுக்குத் துணிகள். துணிகளுக்குள்  ஒரு பிரிக்கப்பட்ட பிரட் பாக்கெட். ஒரு எவர்சில்வர் தட்டம். சில உடைந்த பிளாஸ்டிக் குப்பைகள். கண்ணில் பட்டது இவ்வளவுதான் உள்ளுக்குள் “வேறு பலவும்” இருக்கலாம்.

எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் ஏன் காப்பக காவலர்கள் வரவில்லை? கடற்கரையில் காற்று வாங்க வந்த இரு “காலேஜ்” பெண்கள், “பொன்னுலக்ஷ்மி”-க்கு அருகிலிருக்கும் என்னை “ஒரு மாதிரி” பார்த்துக்கொண்டுச் சென்றனர். சற்று தூரத்தில் வேர்கடலை விற்றுக் கொண்டிருந்தவரும், அடிக்கடி என்னைத் திரும்பி பார்ப்பது போல் தோன்றியது. நேரம் வேறு போய்கொண்டேயிருந்தது.

காப்பகக் காவலர்களுக்கு எல்லாவற்றிலும் “ஒரு அலட்சியம்”. ஒரு மனிதன் சமூகச்சேவை செய்வதற்கு எவ்வளவு இடையூறு பாருங்கள். தீடீரென்று “இந்தியாவின் எதிர்காலத்தை” நினைத்து “பெருங்கவலை” கொண்டேன். அவர்கள் வந்ததும் “காப்பகத்தின் பெயர், லோகோ மற்றும் வண்டியுடன்” போட்டோ எடுக்கும் கோணங்களை மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன். கேமராவின் செயல்பாட்டையும் பரிசோதித்துக் கொண்டேன். முக நூலில் போட்டோ இடும் போது, டேக் செய்து இணைக்க வேண்டிய “பெண் நண்பர்களின்” பெயர்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். வண்டி வரும் என்று எதிர்பார்த்த வேளையில்தான், பாக்கெட்டில் இருந்த போன் அலறித் துடித்தது. காப்பகத்திலிருந்து இருக்கலாம். யோசனையோடு போனை எடுத்தேன். எதிர்முனையில் என்னவள். அன்பு மனைவி, ஆசைத் துணைவி.

ஆவலோடு போனை எடுத்தேன்.

“ஹலோ… சொல்லுடா.”

“………”

“ஆமா டா.. கண்டு பிடிச்சிட்டேன். பீச்சுல
இருக்கேன். அவங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..

“……..”

பாவம் தான்.. பார்க்கவே கஷ்டமா இருக்கு. ஏதோ நம்மால முடிஞ்சத.. நம்ம பண்ணுவோம்.

“………..”

அவங்க வந்த உடனேதான் போட்டோ எடுக்கணும். இப்ப எடுத்து வேஸ்ட்… அம்முகுட்டி எழும்பிட்டாளா?

“………..”

சரி… சரி… அப்பா இப்ப வந்திருவார்னு சொல்லு… உனக்கு வயிறு வலி எப்படி இருக்கு. ஈவ்னிங் மூவி போலாம் ல…..

“……….”

“அதெப்படி மறப்பேன்… வரும் போதே வாங்கி கார்ல வச்சிட்டேன்… அல்ட்ரா சைஸ்ல… நம்பர் த்ரீ வாங்கியிருக்கேன்.”

“………”

சரி டா… மேக்சிமம் ஒரு ஒன் ஆவர்ல வீட்ல இருப்பேன். ஓகேவா.. வச்சிரு..

“…….”

“லவ் யு டூ… பை..”

போனை வைத்து விட்டு, மீண்டும் அவளைக் கவனித்தேன். லேசாக இடம் மாறி, அப்படியே இருந்தாள். சுற்றிப்பறந்த ஈக்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருந்தது. சற்று எரிச்சலுற்று, காப்பகக் காவலர்களுக்கு மீண்டும் போன் செய்யலாமென்று நினைத்த போதுதான், தூரத்தில் அவர்களின் வேன் வந்து கொண்டிருந்தது. டிரைவரும், இரண்டு பெண் காவலர்களும் வேனுக்குள் இருந்தனர்.

கேமராவை ஆன் செய்து கொண்டு, அவர்கள் அருகில் சென்று கையசைத்தேன்.

“என்னக்கா… லேட் ஆயிட்டு”

“நீங்க போன் பண்ணும் போது இன்னொரு ஆளை தூக்கிட்டு இருந்தோம் தம்பி.. அதை கொண்டு காப்பகத்துல போட்டிட்டு….. உடனே ஓடி வாரோம்..”

“சரிக்கா… வாங்க” – என்று கூறி,

பொன்னுலக்ஷ்மியை அடையாளம் காட்டி, போட்டோ எடுக்கும் சரியான கோணத்தில் நின்று கொண்டேன்.

இருவரும் அவளை நெருங்கினார்கள். அவளுடைய துணிப்பையை ஒதுக்கித் தள்ளினார்கள். தட்டமும், பிரட் கவரும் துண்டு, துண்டாக கிழிக்கப்பட்ட துணிகளோடு கிழே விழுந்தது. இரண்டு காவலர்களும் சேர்ந்து “பொன்னுலக்ஷ்மி”-யைத் தூக்கினார்கள். சிறிதாக அரண்டு, வெகுண்டு நெளிந்தாள் “பொன்னுலக்ஷ்மி”-. பெரிதாகப் பயந்ததாகத் தெரியவில்லை. அவள் ஒரு அரை மயக்க நிலையில் இருப்பது போலிருந்தது. அந்த நேரத்தில்தான் கவனித்தேன். அவள் பாவாடையின் அடிப்புறத்தில் உறையாத ரத்தத்தின் திரடுகள் வடிய ஆரம்பித்தது. ஏற்கனவே கால்முட்டியில் வடிந்த, உறைந்த, “ரத்த தீற்றலின்” அடையாளங்கள். பெண்காவலர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ “கமுக்கமாக” பேசிக்கொண்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்து “எதையோ” தேடினார்கள்.

எனக்கும் அவர்கள் தேடுவது லேசாகப் புரிந்தது. பரிதாப உணர்சியின் பரிதவிப்பு என் நெஞ்சமெங்கும் படர்ந்தோடியது. ஒரு பெண்ணை அதுவும் இப்படிப் பார்த்தால் யாருக்குத்தான் மனமிறங்காது. ஒரு மாதிரி காண சகிக்காத அசௌகர்ய மனநிலை. நான் நல்லவனாக இருந்தாலும், கெட்டவனாக மாறி “மோசமான வார்த்தைகளால்” கடவுளைத் திட்ட வேண்டுமென்று தோன்றியது. ஏதோ நினைவில் சட்டென்று காருக்குள் சென்று, மனைவிக்காக வாங்கிய “அந்த பொருளை” எடுத்து, அப்பெண்காவலர்கள் முன் நீட்டினேன். அதை அவர்கள் சற்று தயக்கத்தோடு வாங்கி, “பொன்னுலக்ஷ்மி”- யை தூக்கிக்கொண்டு வேனுக்குள் ஏறினார்கள். எந்த போட்டோவும் எடுக்காததால் என் கேமரா தானாகவே அணைந்து கொண்டது.

அன்றிலிருந்து என் “சமூகசேவை’ புகைப்படங்களை நான் பேஸ்புக்கில் இடுவதே இல்லை.

 


  • தெரிசை சிவா

3 COMMENTS

  1. ஆம்… அற்பமான சூழ்நிலை கைதிகள்…. அருமையான வரிகள் முகதில் அரைந்தது…..

  2. நானும் கணினி பொறியாளன் தான் என்னால் எளிதில் சொற்களால் கடத்திவிட முடியாத என் அக முகங்களின் குமுரல்களை தெரிசை சிவா பேனா மை வாய் கொண்டு கக்கியுள்ளார். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தெரிகை சிவா. நன்றியுடனும் மகிழ்வுடனும் இலக்கிய கர்வி ச.பிரபாகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.