முகடுகள் கோடிட்ட நிலம், துல்லிய நீலத்தில் மின்னும் கடற்பரப்பு, அதை நோக்கி விரிந்த பசிய வயல்கள் இவையெல்லாம் இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தன. அடுத்து இந்தத் தொகுதியின் தலைமை விமானியான எனது முறை. எனக்கு நேர் கீழே விமான ஓடுதளம் பூமியின் அசிங்கமான காரைத்தழும்பைப் போல விரிந்திருக்கிறது. விமானத்தின் இயங்குபிடியை இடப்பக்கமாக வளைக்கிறேன். பூமி என்னை நோக்கி சாய்ந்தவாக்கில் மேலேறுகிறது. முன் செல்லும் விமானத்தின் வாலைப் பின்பற்றி வேகமாய் கீழிறங்குகிறேன். விமான ஓடுதளம் அதிவிரைவாய் என்னை நெருங்குகிறது. கட்டிடங்கள் பெரிதாய் வளர்கின்றன. விமானதள கட்டுப்பாட்டுக் கோபுரம் அச்சமூட்டக்கூடிய வகையில் விஸ்வரூபம் எடுக்கிறது. இவை அனைத்தும் இப்போது எனக்கு மிக அருகில். . .
யாசுவோ குவஹாரா என்ற கமிகாசே சிறப்புப் படையின் தலைமை விமானி தனது பயிற்சி அனுபவத்தை இது போல விவரிக்கிறார். கமிகாசே சிறப்புப் படை என்பது இரண்டாம் உலகப் போரின் இறுதி காலகட்டத்தில் ஜப்பானியர்கள் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது உருவான படைப்பிரிவு. கமிகாசே என்ற ஜப்பானியச் சொல்லுக்கு தெய்வாம்சம் பொருந்திய காற்று என்பது பொருள். பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலிய அரசன் குப்ளாய் கான் 1274 மற்றும் 1281 ஆகிய ஆண்டுகளில் ஜப்பான் மீது படையெடுத்து வர அந்த இரண்டு முறையும் கடலில் உக்கிரமான புயற்காற்று உருவாகி அவனது படைகளைத் தாக்கி தோற்றோடச் செய்தது. இப்படித் தொடர்ந்து தங்கள் நாட்டைக் காத்த காற்று தெய்வத்தின் அருளால் உருவானது என்று நம்பிய ஜப்பானியர்கள் அதற்கு கமிகாசே என்று பெயரிட்டார்கள். இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியான சூழலில் உருவான சிறப்புப் படைப்பிரிவுக்கும் இந்தப் பெயரே வைக்கப்பட்டது.
கமிகாசே படைப்பிரிவில் இடம்பெற விமானத்தை இயக்கத் தெரிந்தால், இலக்கை நோக்கிப் பாய்ச்சத் தெரிந்தால் போதுமானதாக இருந்தது. நன்கு பயிற்சி பெற்ற விமானிகளெல்லாம் பிற இடங்களில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போருக்குச் சென்றுவிட, இந்தச் சிறப்புப் படைக்கு அப்போது தான் பயிற்சியைத் தொடங்கியிருந்த பதின்மவயது இளையர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தாங்களே முன்வந்து இப்படையில் சேர்ந்திருக்கிறார்கள். அந்த இளம் வயதிலேயே தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தக் கூடிய அளவிற்கு அவர்களின் மனம் எவ்விதம் தயாராகியிருக்கும் என்பதை அறிய அவர்களின் பாரம்பரியத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஜப்பானிய மொழியில் தற்கொலையைக் குறிக்கும் வார்த்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்டவை. அதிலொன்றான செப்புக்கு என்ற முற்கால சாமுராய் வீரர்கள் கடைப்பிடித்து வந்த முறை மதிப்புமிக்கதாய் கருதப்பட்டது. தங்கள் நாட்டுக்கோ தலைவனுக்கோ தங்களால் கீழ்மை ஏற்பட்டுவிடும் என்ற நிலையில் வாளால் தங்கள் வயிற்றைக் கிழித்து மெல்ல உயிர்விடும் தியானத்திற்கு நெருக்கமான தற்கொலை முறை இது. சுனெடொமோவின் The book of Samurai என்ற புத்தகம் உயிரைத் துச்சமாக்கி தன் நாட்டிற்காக, தன் தலைவனுக்காகப் போராட ஒரு சாமுராய் எவ்விதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அமைதியான சூழலிலும் கூட, ஆயுதத்தால் தாக்கப்படுவதைப் போன்ற, ஆர்ப்பரிக்கும் அலைகளால் கொண்டு செல்லப்படுவதைப் போன்ற, எரியும் நெருப்பிற்கு நடுவில் தூக்கிவீசப்படுவதைப் போன்ற, தலைவன் இறந்ததும் தற்கொலை செய்துகொள்வதைப் போன்ற சூழல்களை மனதில் நிறுத்தி தியானம் செய்யவேண்டும், ஒவ்வொரு தினமும் தான் இறந்து விட்டதைப் போலவே எண்ணிப் பழகவேண்டும். இப்படியான சுய உதவிக்குறிப்புகள் அவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிய மன்னர் கடவுளுக்கு நிகரானவர், அவருக்காகவும் ஜப்பானுக்காகவும் தனது உயிரைக் கொடுக்க எந்த நொடியும் சித்தமாய் இருக்க வேண்டும் என்று சிறுவயது முதலே ஜப்பானிய இளையர்களுக்கு அக்காலத்தில் போதிக்கப்பட்டு வந்தது. பதின்மவயது மாணவர்கள் மனித வெடிகுண்டாய் மாற முன்வந்ததற்கு முக்கிய காரணமாய் இந்த மனோதத்துவ பயிற்சி அமைந்தது.
கமிகாசே சிறப்புப் படைக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் விமானிகளுக்கு இலக்கை நோக்கிப் பாய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடக்கநிலைப் பயிற்சியின் போது உண்டான சிறு ஒழுங்கின்மைக்கும் அவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். தலையைச் சுவரில் பலமாய் முட்டுதல், பந்தடிக்கும் மட்டைகளால் கண்களில் பொறிபறக்கும் வகையில் பின்புறம் அடித்தல், ஆணி பதித்த காலணிகளைக் கொண்டு முகத்தில் மீண்டும் மீண்டும் அறைதல், தண்டனைகளால் புண்பட்ட உடலுடன் நெடுந்தூரம் ஓடவைத்தல், ஓட முடியாமல் பின் தங்கியவர்களை மூங்கில் கொம்புகளாலும் துப்பாக்கி முனைகளாலும் தாக்குதல் போன்ற பயிற்சிகளின் மூலம் தாங்கள் இறப்பிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டதாக யாசுவோ குவஹாரா தனது புத்தகத்தில் சொல்கிறார். பயிற்சியின் கடுமையைத் தாங்க இயலாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த வலிக்குத் தங்கள் உடலைப் பழக்கிக் கொண்ட பின்னர் விமானங்களைச் சரியாக இயக்கவும் அதைத் தரையிலிருக்கும் குறிப்பிட்ட இலக்கை நோக்கிப் பாய்ச்சவும் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதியாகக் கண்களைக் கட்டிக்கொண்டு மேலிருந்து இலக்கை நோக்கி முழு வேகத்தில் பயணித்து கடைசி நொடியில் மேலேறும் பயிற்சி.
எதிரிகளுக்குப் பெருஞ்சேதத்தை உண்டாக்கும் வகையில் எவ்வாறு விமானத்தை இயக்க வேண்டும், மோதும் கடைசி நொடிகளில் மனதை எவ்விதம் ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகளைக் கொண்ட கையேடுகள் கமிகாசே விமானிகளுக்காக அச்சடிக்கப்பட்டன. அக்கையேட்டில் காணப்படும் சில குறிப்புகள் இவை
- 6000 அடி உயரத்திலிருந்து எதிரியின் கப்பலைத் தாக்கப் போகிறீர்கள் என்றால் பயணிக்கும் வேகத்தை இரண்டு முறையும் 4000 அடிக்குக் கீழிருந்து என்றால் ஒருமுறையும் மாற்றுங்கள். கப்பலின் பிரிட்ஜ் டவர், புகைப்போக்கி இவை இரண்டுக்கும் நடுவிலிருக்கும் பகுதியைக் குறிபார்த்து விமானத்தைப் பாய்ச்சுங்கள்.
- எதிரியின் மீது மோதும் இறுதி நொடிகளில், தெய்வங்களும் போரில் வீரமரணம் அடைந்த சக தோழர்களும் உங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலக்கை மோதும் அந்த கடைசி கணங்களில் உங்கள் வேகம் அதிகபட்சமானதாய் இருக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகில் வாழ்ந்து விட்டீர்கள். இறுதியாக ஒருமுறை உங்கள் முழு பலத்தையும் அமானுடத்தனமாய்க் காட்டுங்கள். கண்களை மூடிவிடாதீர்கள். இலக்கை இடிப்பதற்கு இது மிகவும் முக்கியம். இதற்கு முன்னால் கண்களைத் திறந்தபடி இலக்கில் மோதிய உங்கள் நண்பர்கள் அதில் கிடைத்த சுகத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள்.
- இலக்கிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில் உங்கள் வேகம் பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கும். அதுவரை தூரத்தில் தெரிந்த காட்சிகள் அண்மையில் விரியும். இலக்கிலிருந்து இரண்டு மூன்று மீட்டர் தொலைவில் இருக்கும் போது எதிரியின் துப்பாக்கி முனையை உங்களால் நன்கு பார்க்க முடியும். திடீரென காற்றில் மிதப்பதை உணர்வீர்கள். அந்த நேரம் உங்கள் தாயின் கண்ணீரோ புன்னகையோ அற்ற சாதாரண முகம் உங்கள் முன் தோன்றும்.
- இறுதியாக மோதும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
உங்களால் எதிரிக்கு ஏற்படும் சேதாரம் மிக அதிகம் என்பதால் அவன் உங்களைத் தவிர்க்கவே முனைவான். அப்போது குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிரியின் கப்பலை மூழ்கடிக்கப் போகிறேன் என்ற எண்ணத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு, உரத்த குரலில் ‘ஹிசாட்சு!’ (தவறாமல் மூழ்கவும்) என்று அலறியபடியே அவன் மீது பாயுங்கள். அந்த நொடி யாசுகுனி கோவிலின் செர்ரி மலர்கள் உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும்.
போரின் காரணமாக எண்ணெய், எஃகு போன்ற கச்சாபொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்க, நன்கு இயங்கும் விமானங்கள் முக்கிய போருக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டன. ஓரளவிற்கு இலக்கை அடையக்கூடிய வகையில் எஞ்சியிருந்த மட்டரக விமானங்கள் கமிகாசே சிறப்புப் படைக்கென்று வந்து சேர்ந்தன. இதனால் விமானத்தில் அவ்வப்போது பழுது ஏற்படுவது சகஜமாயிருந்தது. இறுதித் தாக்குதலின் போது அப்படி ஒரு நிலை உண்டாகித் தாக்கமுடியாமல் போகும் பட்சத்தில் குற்றவுணர்வு எதுவுமின்றி கிளம்பிய இடத்திற்கே பத்திரமாக மீண்டும் வந்து அடுத்த தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று விமானிகளுக்குப் போதிக்கப்பட்டது.
கமிகாசே வீரர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தாமாக விரும்பி அப்படையில் இணைந்திருந்த போதிலும் தொடர்ந்து வந்த நாட்களில் தங்கள் தேர்வு குறித்து மனச்சஞ்சலம் அடைந்திருக்கிறார்கள். பெண்கள் அதிகம் வசித்த நகரங்களின் அண்மையிலிருந்த கமிகாசே குடியிருப்புகளில் இது போன்ற மனமாற்றங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. தங்களின் இறுதி நாட்களில் மேலதிகாரிகளின் அனுமதியுடன் அந்த இளம் விமானிகள் பாலியல் உறவில் ஈடுபட, அதுவே அவர்களுக்கு வாழ்வின் மீது பிடிப்பு உண்டாக ஒரு காரணமாய் இருந்திருக்கிறது. இப்படி ஏற்படும் இறுதி நேர மனமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக கமிகாசே வீரர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவென்று ஒரு துறை அந்நாட்களில் உருவானது. நாட்டிற்காக உயிர்விடுவது புனிதமானது, அப்படி உயிர்த்தியாகம் செய்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்ற அர்த்தம் பொதிந்த தன்முனைப்பு முழக்கங்கள் புழக்கத்திற்கு வந்தன. எதிரிகளை அரக்கர்களாகச் சித்தரித்து அவர்களின் மேல் வெறுப்பை உண்டாக்கும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கமிகாசே விமானிகள் தங்களின் அஸ்தி குடும்பத்தினர்களுக்குக் கிடைக்காது என்பதை அறிந்திருந்ததால் தன் நினைவாகத் தலைமுடியையோ, நகங்களையோ விட்டுச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இறுதித் தாக்குதலை மேற்கொள்ளக் கிளம்பும் சமயம் தங்களின் சகவிமானிகளிடம் யாசுகுனி ஆலயத்தில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றுச் செல்பவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். கமிகாசேவில் இணைய வீரர்கள் தாங்களே ஆவலுடன் முன்வந்தார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டாலும் அது முற்றிலும் உண்மையல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. கமிகாசே வீரர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எழுதிய இறுதிக் கடிதங்களில், தாங்கள் முடித்திராத கடமைகளுக்காக குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியதுடன், தன் இளம் மனைவியின் நலனை மனதில் கொண்டு அச்செயலைச் செய்வதாகவோ, தன் தாய் தந்தையருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அந்தத் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாகவோ சொல்லிச் சென்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
அக்டோபர் 1944 இல் தொடங்கிய இந்த கமிகாசே சிறப்புப் படையின் அதிகாரப்பூர்வ முதல் தாக்குதலை நிகழ்த்தியவர் லெப்டின்ன்ட் யுக்கியோ சைக்கி. அவருக்குத் தலைமையதிகாரியாய் இருந்த கர்னல் அசைச்சி டமாய் பின்னாட்களில் தனக்கு ஏற்பட்ட மனவுறுத்தல் காரணமாக புத்தபிட்சுவாக மாறிவிட்டார் என்கிறது Kamikaze- Japan’s sucide gods என்ற புத்தகம். ஏறத்தாழ பத்து மாதங்கள் நடைபெற்ற இந்த கமிகாசே தற்கொலைத் தாக்குதல்களில் 3800க்கும் அதிகமான விமானிகள் இறந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவாக கமிகாசே சிறப்புப் படை உருவான இடமாகக் கருதப்படும் பிலிப்பைன்ஸின் மபாலகாட் நகரத்தில் கமிகாசே வீரனின் உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அன்று நாட்டிற்காக வானிலிருந்து செர்ரிமலர்களாய் சிதறி உதிர்ந்த கமிகாசே வீரர்கள் இன்று ஜப்பானின் யாசுகுனி ஆலய வளாகத்தில் இருக்கும் செர்ரி மரங்களில் கொத்து கொத்தாய் பூத்துப் புன்னகை புரிந்தபடி இருக்கிறார்கள்.
– ஹேமா
References
- Kamikaze – Japan’s sucide gods- Albert Axell and Hideaki Kase
- Kamikaze -Yasuo Kuwahara and Gorden T. Allred
- The book of Samurai – Yamamoto Tsunetomo, translated by William Scott Wilson
- Kamikaze- Steven J Zaloga
[tds_info]
ஹேமா இவர் கடந்த பத்து வருடங்களாக எழுதி வருகிறார். இவரது சிறுகதைகளும் குறுநாவல்களும் உள்ளூர் மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிங்கப்பூர் மாத இதழான ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இல் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது சிங்கப்பூரில் நடந்த நிகழ்வுகளைக் குறித்து இவர் எழுதிய கட்டுரைத் தொடர் 17 மாதங்களுக்கு வெளிவந்தது. அக்கட்டுரைகளின் தொகுப்பான ‘வாழைமர நோட்டு’ இவரது முதல் புத்தகம். இந்தப் புத்தகம் சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020 அபுனைவு பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. இவரது சிறுகதை ‘பெயர்ச்சி’ தங்கமுனை விருது 2019இல் இரண்டாம் பரிசைப் பெற்றது. இவரது ‘வெயிற்துண்டுகள்’, ‘பகடையாட்டம்’ ஆகிய கவிதைகள் முறையே சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசையும், 2020ல் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி, கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு முதலிய இதழ்களிலும் கனலி, அரூ, திண்ணை, மலைகள்.காம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும், வம்சி பதிப்பகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிராங்கூன் டைம்ஸ், தங்கமீன் வாசகர் வட்டம், அகநாழிகை பதிப்பகம் தொகுத்த நூல்களிலும், கவிதைகள் கவிமாலை, poetry festival Singapore தொகுத்த நூல்களிலும் வெளிவந்திருக்கின்றன.
[/tds_info]