டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி


குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பிறந்த இந்த நூலின் ஆசிரியர், தாம் பயின்ற டோமோயி ஹாகுன் பள்ளியைப் பற்றியும், அப்பள்ளியை உருவாக்கி நடத்திய தமது தலைமை ஆசிரியர் திரு. சோசாகு கோபயாஷி பற்றியும், இந்நூலில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்து, அவருக்கே இந்த நூலையும் காணிக்கையாக்கி உள்ளார். இந்நூல், சிறிய டோட்டோ-சான் ஆக ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ஒரே ஆண்டிலேயே 45,00,000 பிரதிகள் விற்பனையாகி வரலாறு படைத்த நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பின்னர், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, திரு.அ.வள்ளிநாயகம் மற்றும் திரு.சொ.பிரபாகரன் ஆகிய இருவரால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட்டால் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வகுப்பில் படிக்கும் ஏழு வயது பள்ளிச்சிறுமியான டோட்டோ-சான், தனது பல்வேறு செய்கைகளால், தனக்குக் கற்பிக்கும் ஆசிரியை மற்றும் உடன்பயிலும் குழந்தைகளுக்கு பெரும்தொல்லையாக இருப்பதாகவும், வகுப்பு ஆசிரியை எவ்வளவு முயன்றும் அவளைத் திருத்தி பாடத்தை கவனிக்க உட்கார வைக்க முடியவில்லை எனவும், அவளை, அப்பள்ளியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் டோட்டோ-சானின் தாயை அழைத்துப் புகார் கூறுகிறார்கள்.  இப்படியாக அப்பள்ளியை விட்டு நீக்கப்படும் சிறுமி டோட்டோ-சான், தனது தாயால் கோபயாஷியின் டோமோயி பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகிறாள்.

டோமோயி பள்ளியில் சேர்ந்த முதல்நாள் அனுபவமே டோட்டோ-சானுக்கு புதியதாகவும், இனிமையானதாகவும் ஆகிறது. பள்ளியை விட்டு வீடு திரும்பிய பிறகும், மீண்டும் பள்ளிக்குச் செல்லும் அடுத்த நாளின் விடியலுக்கு ஆவலோடு காத்திருக்குமளவுக்கு அப்பள்ளி டோட்டோ-சானை முதல் நாளிலேயே பெரிதும் கவர்ந்து விடுகிறது.

டோமோயி பள்ளியின் மொத்த மாணவர்களே அனைத்து வகுப்புகளிலும் சேர்த்து ஐம்பது பேர் தான். பயன்பாடு இல்லாத பழைய இரயில் பெட்டிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அப்பள்ளியின் வகுப்பறைகள், டோட்டோ-சானுக்கு மட்டுமன்றி, அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் மிகுந்த குதூகலத்தையும் வியப்பையும் அளிப்பதாக இருக்கின்றன. டோமோயியின் தலைமையாசிரியரான கோபயாஷி தான் அப்பள்ளிக்குழந்தைகளின் முதன்மையான விருப்ப ஆசிரியராக இருக்கிறார்.

ஒவ்வொரு குழந்தையும் உள்ளார்ந்த நல்லியல்புகளோடுதான் பிறக்கிறார்கள். அந்த நல்லியல்புகளைப் பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்ற தலைமையாசிரியர் கோபயாஷியின் திடமான நம்பிக்கை மற்றும் அவரது கல்வி முறை ஆகியவைதான், அக்குழந்தைகள் அவரையும், அப்பள்ளியையும் பெரிதும் நேசிக்க வைப்பதாக இருக்கிறது என்பதை இந்நூலை வாசிக்கும்போது உணரமுடிகிறது. பள்ளிநேரம் முடிந்த பிறகும்கூட டோமோயி பள்ளி மாணவர்கள் தமது வீட்டுக்குச் செல்ல விரும்பியதில்லை என்று நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

டோமோயி பள்ளி, வழக்கமான பள்ளிகளில் இருந்து மாறுபட்டு, உண்மையிலேயே ஒரு அருமையான பள்ளியாக அக்குழந்தைகளுக்கு இருந்துள்ளது.  குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாடத்தைத்தான் படிக்க வேண்டும் என்ற எந்த அட்டவணைக் கட்டாயமும், கட்டுப்பாடும் அங்கு இல்லை!  மாறாக, ஒவ்வொரு வகுப்பு மாணவன் / மாணவியும், காலை பள்ளிக்கு வந்தது முதல் மதிய உணவு இடைவேளை வரை தனக்குப் பிடித்த விருப்பமான எந்த பாடத்தையும் படிக்கலாம்… வரையலாம். மற்ற செய்முறைப் பயிற்சிகளில் ஈடுபடலாம். அவர்களுக்கு தமது பாடத்தில் சந்தேகம் ஏற்படும்போது அந்தந்த வகுப்பு ஆசிரியை / ஆசிரியர் அதை விளக்குவார்கள்.

டோமோயி பள்ளியின் மதிய உணவு இடைவேளை நேரம் என்பது அக்குழந்தைகளுக்கு மேலும் குதூகலம் மிக்கதொரு பொழுதாக இருக்கிறது.  அனைவரும் கூடி உண்ணும் அப்பள்ளியின் மதிய உணவுக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் தலைமையாசிரியர்  “நீங்கள் எல்லோரும் கடலில் இருந்து கொஞ்சம், மலைகளில் இருந்து கொஞ்சம் சாப்பிடக் கொண்டு வந்துள்ளீர்களா?” என்று கேட்கிறார்.  குழந்தைகள் எல்லோரும் தமது உணவுப்பெட்டியைத் திறந்துகொண்டே “ஆமாம்!” என்று ஒன்றாகக் கூவுகிறார்கள். அவர், ஒவ்வொரு குழந்தையின் உணவுப்பெட்டியையும் பார்வையிடுகிறார். அவரது இந்தக்கேள்வி, குழந்தைகளுக்கான சரிவிகித உணவுத்தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இவற்றில் ஏதாவது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தலைமையாசிரியரின் மனைவி தாம் தயாராக வைத்துள்ள உணவிலிருந்து, குழந்தைகளிடம் இல்லாத உணவை சூடாகப் பறிமாறுகிறார். இதன்மூலம் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சரிவிகித உணவு கிடைக்கிறது. பிறகு அனைவரும் “நாங்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்.” என்று கூறி, மதிய உணவை சாப்பிடத்தொடங்குகிறார்கள்.  மேலும், சாப்பிடும்போது தலைமையாசிரியர், “மெல்லு.. மெல்லு.. அதை நன்றாக மெல்லு..” என்ற பாடலைக் கற்றுத்தருகிறார். அதைப் பாடிக்கொண்டே குழந்தைகள் மதிய உணவை சாப்பிட்டு முடிக்கிறார்கள்.  குழந்தைகள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், அதை நன்றாக மென்று உண்ண வேண்டும், அதற்காக போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றை டோமோயி பள்ளியின் மதிய உணவு இடைவேளை உணர்த்துகிறது.

மதியத்துக்குப் பிறகு மாணவர்கள் அந்தந்த வகுப்பாசிரியர்களுடன் இயற்கை அழகைப் பார்வையிட உலாவச் செல்வார்கள். பரந்து விரிந்த வானம், மேகங்கள், நீரோடை, பறவைகள், மரங்கள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள், அவற்றில் மகரந்தங்களை சேகரிக்கும் பட்டாம்பூச்சிகள் வண்டுகள் என, பள்ளிப்பிள்ளைகள் தாம் காண்பனவற்றையெல்லாம் ரசிக்க, ஆசிரியர் அவற்றைக் குறித்து விளக்குகிறார். அப்பள்ளியில் உள்ள மரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டு அவரவர் பொறுப்பில் விடப்படுகிறது. இவ்வாறான பயிற்சிகளால் டோமோயி குழந்தைகள் இயற்கையைப் புரிந்து கொள்ளவும், நேசித்துப் பாதுகாக்கவும் இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்போது, வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கேரட், முட்டைகோஸ், கீரை வகைகள் போன்ற காய்கறிகளே பரிசாக வழங்கப்படுகிறது. ஒருமுறை இதுகுறித்து அதிருப்தி கொள்ளும் ஒரு பெரிய வகுப்பு மாணவனுக்கு, தலைமையாசிரியர், “உங்கள் உழைப்பால் நீங்கள் பெற்ற இந்தக் காய்கறிகளைக் கொண்டு இன்றைய இரவு உணவை தயார் செய்து நீங்கள் மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தார் அனைவரும் சாப்பிடுவது எவ்வளவு மகிழ்ச்சிகரமானது..” என்று அனைத்து மாணவர்களிடமும் கூறுவதன் மூலம் உழைப்பின் அருமையையும் அதன் பலனையும் உணர்த்தி, வெற்றி பெற்ற மாணவர்களை பெருமை அடையும்படிச் செய்கிறார்.

மாணவர்களது வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்க, மற்றுமொரு இரயில் பெட்டியானது பெருமுயற்சியோடு பள்ளிக்குக் கொண்டுவரப்பட்டு அது நூலகமாக மாற்றப்படுகிறது.  அந்த நூலகத்தில் இருந்து மாணவர்கள் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வீட்டுக்கு எடுத்துச்சென்று படித்துவிட்டு கொண்டுவரலாம். மேலும், தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களையும் அப்பள்ளி மாணவர்கள் வாசிக்க நூலகத்தில் கொண்டுவந்து வைக்கலாம். இவ்வாறு, மேலும் ஒரு இரயில் பெட்டியானது, டோமோயி பள்ளியில் மாணவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் புத்தகசாலையாகிறது.

டோமோயி பள்ளியின் வெந்நீர் ஊற்றுப்பயணம், மாணவர்களின் கடல் மற்றும் நீச்சல் குறித்த அச்சத்தைப் போக்குவதாக அமைகிறது.   மேலும், குழந்தைகளுக்கு பொறுப்பையும், கூடிப்பணி செய்வதன் அருமையையும் உணர்த்தும் வகையில் பள்ளியின் திறந்தவெளிச் சமையல் நிகழ்வுப் பயணம் அமைகிறது.

அன்றாடம் வயலில் விவசாய வேலை செய்யும் ஒரு விவசாயி, டோமோயி பள்ளி மாணவர்களுக்கு விவசாய ஆசிரியராக தலைமையாசிரியரால் அறிமுகப்படுத்தப் படுகிறார். அவர், மாணவர்களை வயலுக்கு அழைத்துச்சென்று விவசாயத்தின் அவசியம், பாத்தி கட்டுதல், களைகள், அவற்றை நீக்குதல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களை செயல்முறையாகக் கற்பித்து, மாணவர்களை குழுக்களாகப் பிரித்து வயல் வேலைகளில் ஈடுபடுத்துகிறார். பிறகு அவற்றை, மாணவர்கள் தம் பள்ளியிலும் செயல்படுத்துகிறார்கள்.

டோமோயி பள்ளியில் எவ்விதப் பாகுபாடும் இன்றி மாற்றுத்திறனுடைய குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  வேறுபாடு பாராட்டாமல், மாணவர்கள் அனைவரும் அன்பாகவும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்க இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும், உணவு இடைவேளைக்குப் பிறகு, அனைத்து மாணவர்களையும் ஒன்றாக அமரவைத்து, தலைமையாசிரியர் தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் குறித்துப் பேசுவதோடு, மாணவர்களையும் ஒவ்வொருவராக முன்னே வந்து நின்று தனக்குத் தெரிந்த ஏதாவது ஒன்றைப்பற்றிப் பேச ஊக்கப்படுத்துகிறார்.  இதன்மூலம் குழந்தைகளின் அச்சம் நீங்குவதோடு பேச்சாற்றலை அவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கை. இவ்வாறு, டோமோயி பள்ளி, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளையும் குதூகலமும் வியப்புகளும் நிறைந்த மறக்க முடியாத அனுபவமாக ஆக்குகிறது.

இந்நூலாசிரியர் டெட்சுகோ குரோயாநாகி தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள டோட்டோ-சான். டோமோயி பள்ளியில் சேர்வதற்கு தனது தாயுடன் வந்த ஏழு வயது சிறுமி டோட்டொ-சான், முதல்நாளே தன்னைப் பேசச்சொல்லி நான்கு மணி நேரம், அதாவது மதிய உணவு இடைவேளை நேரம் வரும்வரைதான் பேசுவதை அன்போடும் பொறுமையோடும், ஒரு கொட்டாவியைக்கூட வெளிப்படுத்தாமலும் தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டு இருந்தார் என எழுதியுள்ளார். பொதுவாக, இந்த இயல்பு பெரியவர்கள் எவருக்கும் இல்லாத ஒன்றாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

பல கலைகளைக் கற்றுத்தேர்ந்த மிகச்சிறந்த கல்வியாளரான தலைமையாசிரியர் கோபயாஷி, தனது பள்ளி குறித்தும், பாடத்திட்டங்கள் குறித்தும் உயரிய நோக்கமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு இருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், அப்[பள்ளிச்சிறுமியாக இருந்த தன்னை அவர் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ”நீ உண்மையிலேயே நல்ல பெண்.. உனக்குத் தெரியுமா?” என்று கூறுவதை மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றியுணர்வோடும் குறிப்பிட்டு உள்ளார்.

ஜப்பான் தொலைக்காட்சியில் அனைவரும் மிகவும் விரும்பும் ‘டெட்சுகோ அரங்கம்’ என்ற பேசும் நிகழ்ச்சியை நடத்தியவரும், ஜப்பான் தொலைக்காட்சியில் தோன்றும் சிறந்த நபராகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான இந்நூலாசிரியர் டெட்சுகோ குரோயாநாகி திரு. கோபயாஷியை சந்திக்காமலும், அவரது தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கேட்காமலும் இருந்திருந்தால், நான் உண்மையில் ’மோசமான பெண்’ என்ற முத்திரை குத்தப்பட்டு குழப்பமும், மன அழுத்தமும் நிறைந்தவளாய் ஆகியிருப்பேன்” என்று எழுதியுள்ளார்.

1945-ல், குண்டுவீச்சு விமானங்கள் டோக்கியோவை தாக்கியபோது டோமோயி பள்ளி எரிந்து போனதாகக் கூறியுள்ள நூலாசிரியர், அப் பள்ளியைத் தனது சொந்தப் பணத்தில் கட்டியிருந்த தலைமையாசிரியர் கோபயாஷி, தம் பள்ளி எரிந்து கொண்டிருந்த வேளையிலும், தொலைவில் நின்றுகொண்டு அதை அமைதியாகப் பார்த்தபடி, அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவரான தனது மகனிடம் அப்பள்ளியை மீட்டுருவாக்கம் செய்வது குறித்துப் பேசிக்கொண்டு இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். டோமோயி பள்ளி எரிந்துபோன சில ஆண்டுகள் கழித்து தலைமையாசிரியர் கோபயாஷி அங்கு ஒரு மழலையர் பள்ளியை நிறுவியதாகவும், தமது எண்ணத்தில் உருவான பள்ளியை மீண்டும் உருவாக்கும் முன்பே 1963-ல் அவர் இறந்துவிட்டதாகவும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி குறித்து மிக உயர்ந்த நோக்கங்களையும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து முழுமையான ஈடுபாட்டையும் கொண்டிருந்ததோடு, மாணவர்களிடத்தில் தனது நேர்மறையான உரையாடல்களால் அன்பையும், அறிவையும் வளர்த்த ஒரு தலைசிறந்த ஆசிரியர் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்துகொண்ட மனநிறைவையும் நெகிழ்வையும் இந்நூல் ஏற்படுத்துகிறது.

இந்நூல் வெளியான பிறகு, பல திரைப்படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும், திரைப்பட விநியோக நிறுவனங்களும் குரோயாநாகி அவர்களை அணுகி, இதைத் திரைப்படமாக வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும், இதை வாசிக்கும்போது வாசகர்களின் மனதில் உருவாகும் கருத்துப்படிமங்களையும் உணர்வுகளையும், திரைப்படமாக எடுக்கும்போது, ஏற்படுத்துமா, அவற்றை மேலும் செழுமைப்படுத்துமா என்ற அய்யம் எழுந்ததால், தாம் அதை மறுத்துவிட்டதாகவும் பதிவு செய்துள்ளார். ஜப்பானில் பள்ளிப்பாடத்தில் இந்நூலின் பல அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளிச்சூழல், அணுகுமுறை, இயற்கையோடு இயைந்த இயல்பான கல்வி முறை, குழந்தைகளைப் பற்றிய புரிதல், அவர்களது உடல், மன ஆரோக்கியத்தினை எளிமையான முறையில் இயல்பாக வளர்த்தல் குறித்த செய்திகள் மிக நுணுக்கமாக இந்நூலில் உணர்த்தப்பட்டுள்ளன.

டோட்டோ-சானை வாசிக்கும்போதும், வாசித்த பிறகும், நமக்கும் இப்படியொரு பள்ளியும், ஆசிரியரும் வாய்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் நிச்சயமாக மனதில் தோன்றும், ஜப்பானில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் இப்புத்தகம் பள்ளிப்பாடத்தில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும். மேலும், ‘டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி’ – ஆசிரியராகப் பணியாற்றும் ஒவ்வொருவரும், பெற்றோரும், மாணவர்களும் வாசிக்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த நூலாகும்.


  • சுமதி அறவேந்தன்

[tds_info]

நூல் : டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி

ஆசிரியர்: டெட்சுகோ குரோயாநாகி.

மொழிபெயர்ப்பு : சொ. பிரபாகரன், க. வள்ளிநாயகம்

வெளியீடு :  நேஷனல் புக் டிரஸ்ட்

விலை : ₹105 

[/tds_info]

 

சுமதி அறவேந்தன் வாசிப்பது, நூல் மதிப்பாய்வு எழுதுவது, கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதை எழுதுவது, சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பணிகள் செய்வது போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.கவிஓவியா, இலக்கியச்சோலை, தீக்கதிர்-வண்ணக்கதிர் போன்ற இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை வெளியாகியுள்ளன.  சமீபத்தில் கனலி கலை இலக்கிய மின்னிதழில் ’தாய்’ நாவல் மதிப்பாய்வு. எழுதி உள்ளார்

10 COMMENTS

  1. குழந்தை உளவியல் மலர்சிக்க்கான பள்ளி குறித்த எழுத்தை அறிமுகம் செய்யும் சிறப்பு நூல் அறிமுகம்.

  2. கட்டுரையாளர் இறுதியாகச் சொன்னதுபோல் இதுபோன்று பள்ளிக்கூடத்தில் படிக்க யாருக்குத்தான் மனமிருக்காது.ஏக்கம்தான்.என் பள்ளி படிப்பில் நினைவுகளாக தேர்வு தேர்வு தேர்வு ……என்றே ஆசிரியர்கள் கட்டிக்கொண்டு அழுதார்கள்.மனப்பாடம் பண்ணி தேர்வை எழுதுவேன்.என்னதான் கற்றேன் என்றால் ஒரு எழவும் இல்லை.கோபம்தான் கொப்பளிக்கும்.அடிப்படை அறிவைக்கூட சொல்லிக்கொடுத்ததாக என்னால் உணர முடியவில்லை.வீணாய்ப்போண நாட்கள்தான் அதிகம்.ஆசிரியராகப் போகிற நான் அப்படி இருந்துவிடக்கூடாது என்பதில் இயல்பாய் மனமுள்ளன.மனதில் இப்புத்தகமும் தங்கிக்கொண்டேயிருக்கும்.கோபயாஷியும் தான்.

  3. உண்மை தோழர்… டோமோயி பள்ளியும், கோபயாஷியும் இப்புத்தகத்தை வாசிப்போரின் மனதில் நிரந்தரமானதோர் இடத்தை பிடித்துக்கொள்வார்கள்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.