ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory Police”


சுமார் 300 ஆண்டுகளுக்கு  முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஜப்பானில் நாவல் வெளிவந்துள்ளது. அதுவும் முரசாக்கி சீமாட்டி என்னும் பெண் எழுத்தாளர் எழுதியது. கெஞ்சிகதை எனப்படும் அந்த நாவல், தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் விபரம். ஆனால் இலக்கிய அரங்குகளில் இவை கவனப்படுத்தப்படவில்லை என்பதுதான் பிரச்சனை.

இப்போதும், ஜப்பானில் நாவல் இலக்கியம் தொடர்ந்து செழுமையுடன் திகழ்ந்து வருகிறது. இதில் யோகோ ஒகாவை (Yoko Ogowa) முக்கியமானவராகக் குறிப்பிடலாம். இவரது The Memory Police அரசியல் சார்ந்த பிரக்ஞையை கூர்மைப்படுத்துகிறது.

ஒரு தொலைதூரத்தீவில், ஒரு நாள் பறவைகள் திடீரென்று காணாது போகின்றன. அடுத்து அவற்றின் நினைவும் மாயமாகிறது. விதிவிலக்காக யாரேனும் ஒருவரிடம் அந்நினைவு அழுத்தமாகப் பதிந்திருந்தால், அவர் கண்காணிக்கப்படுகிறார். அடுத்து அவரும் மாயமாகிறார். இதைச் செயல்படுத்துவது Memory Police. பொதுவாக பொருட்களின் சொத்துகளின் பாதுகாப்புக்கு, சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்குப் பொறுப்பாயுள்ள போலீஸ், இத்தீவில் ஞாபகம் இல்லாது போய்விடுவதை உறுதிப்படுகிறது.

ஞாபகம் இருந்தால்தான் இல்லாதவற்றின் இழந்தவற்றின் நினைவுகள் எழுந்து மக்களை துயரப்படவைக்கும், எதிர்ப்புக்குரல் எழுப்ப வைக்கும். எனவேதான் நெடுநாள் ஞாபகம் இல்லாதவாறு, மக்களை மரபணு பரிசோதனைக்கும்  உட்படுத்துகிறது போலீஸ். இவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி, இழந்த உயிரினங்களின்/ அவயவங்களின்/ பொருட்களின் வடிவங்களை சிற்பங்களாக்கி, ரகசிய அறையில் பாதுகாத்துவர முற்படும், நாவலின் பிரதான பாத்திரத்தின் தாய், மாயமாகின்றாள்; பறவைகளை ஆராய்ந்து பதிந்து வரும் ஆய்வாளரான தந்தை இல்லாமல் ஆக்கப்படுகிறார்; ஏன், அப்பாத்திரமே நாவல் எழுத முற்படுவதால், குரலினை இழந்துவிடுகிறது. குரல் போனாலும், எழுத்தில் பதிவு செய்துவிட எத்தனிக்கையில், தட்டச்சுப்பொறி இயங்காது போக, பின்னர் அதனுடன் எழுத்தாளரான யுவதியும் ரகசியமாக அடைத்துவைக்கப்படுகிறாள்.

கடிகாரக் கூண்டுள்ள கோபுரத்தில் காலமும் இடமும் பற்றிய உணர்வின்றி, பார்வைத்திறன் இழந்துவிட, தனிமையில் தனக்குள்ளேயே இயக்கமின்றி உறைந்த நிலைக்கு வந்து விடுகிறாள்.

அவளது நாவல்களை வெளியிட்டு வரும் நிறுவனத்தின் ஆசிரியர் R மற்றும் அவளுக்கு உறுதுணையாயுள்ள படகுக்கார கிழவன் ஆகியோர் போலீஸால் கண்காணிப்புக்கு உள்ளாகிவிட, அவர்களை வீட்டின் அடித்தளத்தில் ரகசியமாகப் பாதுகாத்துவருகிறாள். கடைசியில் அவள் தன் அவயவங்களை இழந்து, வெறும் ஞாபகமாக மட்டும் எஞ்சி விடை பெறுகிறாள்.

‘அடைபட்ட அறையில் அவள் தொடர்ந்து மறைந்து கொண்டிருக்கிறாள்.’ படகோட்டிக் கிழவன் இடையில் மறைந்திருக்க/ மாயமாகியிருக்க, நூலை வெளியிட வேண்டிய R மட்டும் விடுபடுகிறார். அவரிடமே  ஞாபகம் விடாது ஒட்டிக்கொண்டிருக்கிறது.

”வெளியுலகிற்கு திரும்பிச் செல்லும் வகையில் நீங்கள் சுதந்திரமானவர். Memory police தன் வேட்டையை நிறுத்தியிருக்கிறது. குரல்கள் மட்டுமே எஞ்சியிருக்க, உடலளவில் இல்லாது போய்விட்டவர்களை அவர்கள் எப்படி வேட்டையாடிக்கொண்டிருக்க முடியும்.”

ஞாபகத்திலிருந்து பொருட்கள் மறைந்து போனால் வாழ்விலிருந்தும் அவை மறைந்து போகும் என்றொரு கருந்திழையை நீட்டிச் செல்கிறது நாவல். அறிவியல் புதினமாக இது கருதப் படுவதை விட அரசியல் புதினமாகவே கருத்தப்படத்தக்கது.

ஏனெனில் யோகோ ஓகாவா, பேரின அழிப்பு மையத்தை ஜெர்மனியில் பார்த்து வந்த பிறகு, ஆன் ஃபிராங்க் பதிவு செய்து பாதுகாத்து வந்த நாட்குறிப்பின் முக்கியத்துவத்தை உத்வேகமாகக் கொண்டு எழுதியது இந்நாவல்.

அரசியல் சார்ந்த பிரச்னைகளுக்குள் சித்தாந்த விவாதங்களுக்குள் செல்லாமலேயே, ஃபாஸிஸத்தின் தீண்டல் எவ்வளவு கோரமாக இருக்கும், எவ்வளவு துயரத்தை ஏற்படுத்தும் என்பதை இந்நாவலால் விவரிக்க முடிகிறது. போலீஸின் கண்காணிப்பால் அழிவுகள் நிகழ்கின்ற போது சுனாமியும் ஆழிப்பேரலைத்தாக்கத்தை கட்டவிழ்த்து விடுகிறது. சுனாமியின் கோரத்தாண்டவத்தில் பலியாகுபவை பொருட்கள், சொத்துக்கள், உயிர்கள் மட்டுமே. ஆனால் போலீஸின் வேட்டையில் பலியாகிவிடுபவை, இவற்றையும் தாண்டி குரல், ஞாபகம், பதிவு என்பதாக உள்ளன.

”இக்கதையை எழுதியுள்ள கை, கண்ணீர் ததும்பியுள்ள கண்கள், கண்ணீர் படிந்த கன்னங்களெல்லாம் அடுத்தடுத்து மறைந்துவிட, எஞ்சியிருப்பது குரல்தான். உருவமுள்ள அனைத்தையும் தீவுவாசிகள் இழந்திருந்தனர். எமது குரல்களே நோக்கின்றி மிதந்தலைந்தன.”

ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்று விருதுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் ஓகாவா (1962 -) இத்தலைமுறையினர், வாசிக்க வேண்டிய / கவனிக்க வேண்டிய ஒரு எழுத்தாளர். இவர் உணர்த்தும் / வெளிப்படுத்தும் பிரக்ஞை மறதியை விலக்கி நினைவை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.

ஆதாரங்கள்;

  1. The memory police/ yoko ogawa/ trby Stephen Snyder/ vintage, 2019
  2. com
  3. com 25.03.2014

சா. தேவதாஸ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.