தூய திருமணம்.


லவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார்.

“காலை வணக்கம்… மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?”

வார இறுதியில் துணிகளை சலவைசெய்யும் வேலை அவருடையது, ஆனால் வங்கியில் நீண்டநேரம் பணிபுரிந்துவிட்டு கடைசி தொடர்வண்டியை பிடித்து நேற்று அவர் தாமதமாகத்தான் வீடுவந்து சேர்ந்தார், எனவே சலவையை அன்று நானே செய்துவிடலாம் என எண்ணினேன். “அதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஓ, உங்கள் பச்சை சட்டையை நான் துவைத்துவிட்டேனே. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள்தானே” என்றேன்

“இல்லவே இல்லை. நன்றி.”

சலவைசெய்த துணிகளை பால்கனியில் உலரவைத்துக்கொண்டிருந்தேன், அதற்குள் அவர் குளியலை முடித்துவிட்டு உடைகளை அணிந்துகொண்டார். ரொட்டிவாட்டியில் ரொட்டியை இட்டு எடுத்துக்கொண்டு, மேஜையைத் துடைத்துவிட்டு அமர்ந்து தன் காலையுணவை உண்டார்.

என் கணவருடன் வாழ்வதென்பது அதீத தூய்மையும் சாமர்த்தியமும் மிக்க ஒரு ஆந்தையுடன் வாழ்வதைப் போன்றதென்பேன். சுத்தம் பேணும் விலங்கொன்றை வீட்டில் வளர்ப்பது நல்லதுதான். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன, இவையெவையும் இன்றுவரை மாறவில்லை. நான் மணம்புரிந்த அதே காலத்தில், காதலித்து மணம்புரிந்துகொண்ட என் தோழியொருத்திக்கு இப்போதெல்லாம் தன் கணவனைக் கண்டாலே மிகுந்த வெறுப்பு உண்டாகிறதாம், ஆனால் எனக்கு அப்படியேதும் நிகழவேயில்லை. மிக ஒழுங்குமுறையான பழக்கவழக்கங்களை என் கணவர் கொண்டிருந்தார், கழிவறையையோ குளியலறையையோ அவர் உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கு அவரது உடற்திரவங்களின் சுவடோ, கழிவுகளின் சுவடோ துளியும் இருக்காது. வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டபோது வீட்டை சுத்தப்படுத்துவதற்கான வேலையை ஏன் அவரிடம் ஒப்படைத்தோம் எனக்கூட நான் சில நேரங்களில் எண்ணிக்கொள்வதுண்டு.

சலவையை முடித்ததும் இதை அவரிடம் கூறினேன், அதைக்கேட்டதும் சிரித்தார். “அப்படியானால் நானொரு ரூம்பா* என்கிறாயா?” உண்மையைக் கூறுவதானால் அவரை அவ்வாறு குறிப்பிடுவதொன்றும் மிகையல்ல.

(*ரூம்பா – ஐரோபாட் நிறுவனத்தால் தயாரித்து விற்கப்படும் தூசகற்றும் இயந்திரம்.)

“அதேநேரம், மிசுகி, நீ ஒரு முயலைப்போல, அணிலைப் போல இருக்கிறாய். அமைதியானவளாய், இரைச்சலுக்குக் கூருணர்வு கொண்டவளாய் இருக்கிறாய், அத்துடன், நீ என்மீது எரிச்சற்படுவதோ ஆத்திரப்படுவதோ கூட இல்லை.” என்றார்.

“அணில்கள் ஆத்திரப்படுவதே இல்லையா?”

“இல்லையெனத்தான் நினைக்கிறேன். நீயும் நானும் சுத்தமான மிருகங்கள், ஒருவர் வழியில் ஒருவர் குறுக்கிட்டுக் கொள்வதேயில்லை. இது நல்ல விஷயம் அல்லவா?”

ஆம், அது உண்மைதான். அவர்குறித்து எனக்கும் சில குறைகள் உண்டுதாம், உதாரணத்திற்கு, கழிவறையில் உபயோகிக்கும் காகிதச்சுருள் தீர்ந்துபோகும் முன்னரே புதியதை வைத்துவிடுவார், எனக்குப் பிடித்தாற்போல அழுக்குப்பாத்திரங்களை அவற்றின் பிசுக்குத்தன்மைக்கு ஏற்றவாறு அடுக்காமல் அவற்றின் வடிவங்களுக்கு ஏற்றவாறு அடுக்கிவைத்துவிடுவது போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் எனக்கொரு பொருட்டேயில்லை, இதற்கு எங்களிடையே இருந்த நியாயமான இடைவெளிதான் காரணமென எண்ணுகிறேன்.

திருமணப்பொருத்தம் காணும் ஒரு வலைதளத்தின் வழியாகத்தான் நாங்களிருவரும் சந்தித்துக்கொண்டோம். ‘நேசம் மிக்கக் குடும்பமொன்றை அமைக்க விரும்புகிறேன்’, ‘நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ போன்ற வேண்டுகோள் பட்டியல்களுடன் ‘லட்சியத் திருமணம்’ செய்துகொள்வதில் ஆர்வமாயிருந்த இளைஞர்களிடையே ‘தூய திருமண பந்தத்தை நாடுகிறேன்’ என ஒரு வரியைக் கண்டேன். அதைக் கூறியிருந்தவரின் சுயவிவரங்களை ஆராய்ந்தபோது, ‘கலவியின்பத்திற்கு அடிமையாகிவிடாமல், ஒரு சகோதரன் சகோதரியைப் போல தினசரி வாழ்வை மிக இணக்கமான முறையில் நான் மேற்கொள்ளத்தக்கதொரு துணை வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் படித்ததும் என்னுள் ஆர்வம் எழுந்தது. இருவரும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம், இறுதியாக இருவரும் சந்தித்துக் கொள்ளவும் முடிவுசெய்தோம். அவர் அணிந்திருந்த வெள்ளிவிளிம்புகொண்ட மூக்குக்கண்ணாடி அவரின் பதட்டத்தை பறைசாற்றியது, ‘தூய திருமணம்’ என்றால் ‘வெறிகொண்ட தூய்மையுணர்வோ’ எனத்தான் முதலில் திகைத்திருந்தேன். நாங்கள் உரையாடத்துவங்கியதும்தான் அவர் குறிப்பிட்டிருந்த ‘தூய்மை’ முற்றிலும் வேறுவிதமானது என்பதை அறிந்துகொண்டேன்.

”நம் மனதிற்கு மிகவும் அணுக்கமான அறைத்தோழன் ஒருவனுடன் வெளியே சுற்றித்திரிவதைப்போல, பெற்றோர்கள் வெளியே சென்றபிறகு நமக்குச் செல்லமான தங்கையுடன் விளையாடி நேரம் கழிப்பதைப் போல எனது குடும்ப வாழ்வை அமைதிததும்ப வாழ விரும்புகிறேன்.”

“சரி. என்னால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.”

“உண்மையில், காதற்பிணைப்பின் ஒரு நீட்சிபோல குடும்பம் இருக்கவேண்டுமெனும் கருத்தின் மீதே எனக்கு உடன்பாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் உணர்வுகளுக்கும் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது – அதுவொரு எளிய கூட்டாண்மையாகத்தான் இருக்க வேண்டும்.”

“இதையே நானும் ஆமோதிக்கிறேன். நானும் பல ஆண்களுடன் வாழ்ந்திருக்கிறேன், ஆனால்  ஒரு குறிப்பிட்டப் புள்ளியைத் தொட்டதும் நாங்கள் பிரிய நேர்ந்துவிடுகிறது. நாங்கள் இருவரும் ஒரு குடும்பமாக வாழவேண்டுமெனத்தான் விரும்புவோம், ஆனால் அவர்களுக்கு நான் ஒரேசமயத்தில் ஒரு பெண்ணாகவும் இருக்க வேண்டும், புரிதல்கொண்ட தோழியாகவும் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றனர், எத்தனை முரண்பாடான விஷயமல்லவா இது? அவர்களுக்கு நானொரு மனைவியாக, தோழியாக, தாயாக இருக்கவேண்டுமாம்…. அதற்கு பதிலாக சகோதரன் சகோதரி போல வாழ்ந்துவிடலாமெனவே நானும் விரும்புகிறேன்.”

“இதைத்தான் நானும் கூறவருகிறேன். ஆனால் எவருமே இதைப் புரிந்துகொள்வதில்லை – மணப்பொருத்தம் பார்க்கும் அந்த வலைதளம் கூட இதைப் புரிந்துகொள்ளவில்லை. ஆணின் வருமானம் என்ன, பெண்ணிற்கு சமைப்பதில் விருப்பமுண்டா போன்ற வழமையானக் கேள்விகளைத்தான் அவர்கள் கேட்கிறார்கள் – ஆனால் என்னைப் பொறுத்தவரை குடும்பமென்றால் இதுவல்ல. எனக்குத் தேவை ஒரு கூட்டாளி தானே தவிர இந்த ஆண்-பெண் விஷயமல்ல.”

திடீரென இத்தனை உணர்ச்சிப்பெருக்கோடு பேசியதால் அவருக்கு வியர்த்துக்கொட்டியது, நீலக் கோடுகளிட்ட கைக்குட்டையை எடுத்துத் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டார். ஒரு குவளை நீரை மடக்மடக்கென்று குடித்துவிட்டு, பெருமூச்செறிந்தார். “என் உணர்வை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதே எனக்கு அத்தனை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இது கொஞ்சம் நடைமுறைசாத்தியமற்ற லட்சியவாதம் போலவும் உங்களுக்குத் தோற்றமளிக்ககலாம்….”

“இல்லவே இல்லை. இதை முயன்று பார்க்காதவரை நம்மால் எதையும் முடிவுசெய்ய இயலாது.”

“ஹஹ்?” வியப்புடன் அவர் தன் மூக்குக்கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டார்.

அவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, “என்ன சொல்கிறீர்கள்? கலவியற்ற திருமணபந்தத்தில் என்னோடு இணைகிறீர்களா?” எனக் கேட்டேன்.

“நாம் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நேரமல்லவா இது?” சுட்டரொட்டியை உண்டவாறே செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்த என் கணவர், தலையுயர்த்திக் கேட்டார்.

“ஆஹ்., மருத்துவமனை..”

“மிசுகி, உனக்கு ஏற்கனவே முப்பத்துமூன்று வயதாகிவிட்டது. நீ கருத்தரிக்க வேண்டிய காலமிது.”

“உண்மைதான்” தலையாட்டியபடியே என் தேநீரில் மிதந்த எலுமிச்சைத்துண்டை வெறித்துக்கொண்டிருந்தேன். நானும் இதையேதான் எண்ணிக்கொண்டிருந்தேன். “என் வேலையிலும் எல்லாமே உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கு இதுதான் சரியான சமயமென எண்ணுகிறேன்.”

”அடுத்த வாரம் மருத்துவரைச் சந்திப்பதற்கான முன்பதிவை செய்துவிடவா?”

“ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இப்போதும் மாத்திரை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நாளையே என் மாத்திரையை நிறுத்திவிட்டாலும்கூட, கருத்தரிப்பதற்கு என் உடல் தயாராவதற்கு சிறிது காலம்பிடிக்கும்.”

“அப்படியா, சரி, அப்படியானால் அடுத்த வாரம் செல்வதென்பது முன்கூட்டியே செல்வதாகிவிடும்,” என்றவர் ஏதோவொரு அசாதாரணமான சங்கடத்தில் நெளிவதாய் தெரிந்தது. “ஆனால், முதல் வருகையிலேயே அவர்கள் கருத்தரிப்பு முறையை துவங்கிவிடமாட்டார்கள் எனத்தான் எண்ணுகிறேன். அதற்குமுன்னர் உனக்கு சில பரிசோதனைகளை மேற்கொள்வார்கள், வேண்டுமானால் உனக்கு உதிரப்போக்கு துவங்கியதும் முன்பதிவு செய்துகொள்ளலாமா?”

பொதுவாகவே, மாத்திரை உட்கொள்வதை நிறுத்திய இரு தினங்களுக்குப் பிறகு எனக்கு உதிரப்போக்காகும். வழக்கமான மாதாந்திரப் போக்கை விடவும் குறைந்த உதிரப்போக்குதான் இருக்கும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நின்றுபோகவும் செய்யும். இதை என் கணவரிடம் எடுத்துக்கூறினேன், எனவே இருவாரங்கள் கழித்ததும் வரும் சனிக்கிழமையன்று மருத்துவமனை செல்லலாம் என முடிவு செய்தோம்.

கலவியற்ற இந்தத் திருமணவுறவு நான் நினைத்ததை விடவும் மிக வசதியாகவே இருந்தது. நான் 4 மில்லியன் யென்களும், என் கணவர் 5 மில்லியன் யென்களும் சம்பாதிக்கின்றோம். ஒவ்வொரு மாதமும் நாங்கள் இருவரும் வீட்டுச்செலவுக்கென ஆளுக்கு 1,50,000 யென்களை வங்கிக்கணக்கில் செலுத்திவிடுவோம், மீதமிருந்த பணத்தை எங்களுக்கென தனித்தனியாக இருந்த கணக்குகளில் போட்டுவைத்துக்கொண்டோம். குடும்பச்செலவுகள் போக இந்த 3,00,000 யென்களில் ஏதேனும் பணம் மீதமிருந்தால் அது சேமிப்பாக மாறியது. நாங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து வீடோ அல்லது வேறெதுவும் சொத்துக்களோ வாங்கக்கூடாது என முன்னரே முடிவு செய்திருந்தோம்.

குடும்பத்தின் நிதித்தேவைகளுக்கு இருவருமே சமமாகப் பணமளித்தக் காரணத்தால், வீட்டுவேலைகளையும் இருவரும் பிரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். பணத்தைப் போல வீட்டுவேலைகளை சரிசமமாகப் பங்கிடுவதென்பது முடியாத காரியமாக இருந்தது, என் கணவர் நன்றாக சமைப்பார் என்பதால் அவர் அந்த வேலையை எடுத்துக்கொண்டார், சலவை செய்வதையும் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையையும் நான் மேற்கொண்டேன். நாங்கள் இருவருமே வாரநாட்களில் வேலைமுடிந்து காலம்தாழ்த்தியே வீடுவந்து சேர்வோம் என்பதால் இரவு உணவை நாங்களே தனித்தனியாகச் சமைத்துக்கொண்டோம். இதன்மூலம் எனக்கு வீட்டுவேலை அதிகமானதால், அதை ஈடுகட்ட வார இறுதிநாட்களில் அவர் சலவையை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானித்துக் கொண்டோம்.

இதுவரை எல்லாமே எளிமையாகத்தான் இருந்தன. கலவி விஷயங்களில்தான் பிரச்சினைகள் முளைத்தன.

எங்கள் வீட்டில் உடலுறவு சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் தடைசெய்துவிட வேண்டுமென்பதுதான் என் கணவரின் விருப்பம். எனக்கும் அதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

”என்னைப்பொறுத்தவரை கலவியென்பது ஓரறையில் நான் மட்டும் தனியாக ஈடுபடுவது அல்லது வீட்டிற்கு வெளியே ஈடுபடுவது. ஒருசில வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைமுடித்து சோர்வாக வீடு திரும்புவர், அதன்பின்னர் உடலுறவு கொள்வர். நான் இதை முற்றிலும் வெறுக்கிறேன்,” என்றார்.

”எனக்கும் அப்படித்தான். காதலின் துவக்கக் காலங்களில் உடலுறவு கொள்வதென்பது நல்ல விஷயம்தான், ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, இருவரும் ஒன்றாக வாழத்துவங்கியபிறகு, நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது என் கணவர் என்னைத் தொட்டுத்தடவுவதோ அல்லது நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது உடலுறவு கொள்ள என்மேல் திடீரென படர்வதோ கொடுமையாக உள்ளது. என் விருப்பத்திற்கேற்ப என் பாலியல் விருப்பங்களை இயக்கவும் நிறுத்தவும் விரும்புகிறேன், வீட்டில் அவ்விருப்பங்களை அறவே நிறுத்திவைக்கவே விரும்புகிறேன்.”

”மிகச்சரியாகக் கூறுவதானால் இதுவேதான் என் எண்ணமும் கூட. நான் ஒருவன் மட்டும்தான் இப்படி விபரீதமாக எண்ணுகிறேனோ எனும் ஐயத்தில் இருந்து இன்று விடுதலை கிடைத்தது.”

ஆரம்பத்திலிருந்தே கலவியற்ற, கலவிகொள்ளாத திருமணபந்தத்தில் தான் நாங்கள் இருந்தோம், ஆனால் எங்கள் இருவருக்குமே குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டுமெனும் சங்கடமான விருப்பமிருந்ததுதான்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பும் ஓரினச்சேர்க்கையாளர்கள், உடலுறவில்லாமல் கருவுற விரும்புபவர்கள், செயற்கைக் கருத்தரிப்புக்கு பணவசதியில்லாதவர்கள் அல்லது அவர்களின் நிலையைக்கண்டு இரக்கங்கொள்ளக்கூடிய மருத்துவர்கள் வாய்க்காதவர்கள் போன்ற பால்சார்ந்த சிறுபான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கெனவே ஒரு மருத்துவமனை இருப்பதை இணையத்தின் வழியாக எங்கள் திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்து வைத்திருந்தோம்.

“உங்களுக்கு குழந்தைவேண்டுமென முடிவு செய்தீர்களெனில், எங்களிடம் வாருங்கள். பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு உதவி புரியக் காத்திருக்கிறோம்” என என்னுடன் தொலைபேசிய பெண் கூறினாள்.

“ஹ்ம், ஆனால் நாங்கள் கலவிகொள்ளாத தம்பதியர்..”

“அதுவொரு பிரச்சினையே அல்ல. இதுபோன்ற பலருக்கு நாங்கள் இங்கு சிகிச்சையளிக்கிறோம். மிக அசாதாரணமான சூழல்களும் விருப்பங்களும் கொண்ட பலவகையினரும் இங்கு வருகின்றனர். இதுபோன்றோருக்கு உடலுறவை சிகிச்சையாக அளித்து நாங்கள் சேவை புரிகிறோம்.”

”உடலுறவை சிகிச்சையாக அளிப்பது” எனும் வரி மட்டும் எங்களுக்குப் புரியவில்லை, ஆனால் எங்களுக்குரிய விருப்பத்தேர்வுகளும் அங்கிருக்குமென நம்பினோம்.

ரொட்டியை உண்டுமுடித்ததும் என் கணவர் வீடியோகேம் விளையாடத்துவங்கினார். அவரது செயல்களை கவனித்தபடியே, மருத்துவமனை எண்ணிற்கு அழைத்து, சிகிச்சை ஆலோசனைக்காக முன்பதிவு செய்துகொண்டேன்.

செழித்த வளமைகொண்ட ஆவோயாமா பகுதியில், வெண்ணிற உயர்ரகக் கட்டிடமொன்றில் அம்மருத்துவமனை அமைந்திருந்தது.

அந்த இடத்தில் செல்வச்செழிப்பு கொழித்தது.. காத்திருப்பு அறையில் பட்டினால் வேயப்பட்டிருந்த வெளிறிய பழுப்புவண்ண நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, பின்னணியில் இதமான இசை வழிந்துகொண்டிருந்தது. எங்களுக்கு அருகில் ஒரு பெண் தனியாக அமர்ந்திருந்தார், வரவேற்பாளர் அவரிடம் ஏதோ மருந்துகளைப் பரிந்துரைத்ததும் அப்பெண் கிளம்பிச்சென்றுவிட்டார்.

“திருவாளர் மற்றும் திருமதி டகஹாஷி, தயவுசெய்து உள்ளே செல்லுங்கள்” என வரவேற்பாளர் அறிவித்ததும், குட்டைக்கேசம் வைத்திருந்த பெண் மருத்துவரின் அறைக்குள் செல்ல ஒரு பெண் எங்களுக்கு வழிகாட்டினார்.

“சரி, நீங்கள் எங்களின் தூய இனப்பெருக்க முறைக்காக முன்பதிவு செய்திருக்கிறீர்கள்.”

“மன்னிக்கவும், என்ன கூறினீர்கள்?”

”எங்களுடைய தூய இனப்பெருக்க முறை. அதன் பெயரே சொல்லிவிடுகிறதே, இது மிகத்தூய்மையான முறையில் இனப்பெருக்கம் செய்யும் முறையென. இங்கு உடலுறவை ஒரு மருத்துவ சிகிச்சையாக உபயோகிப்பதன் நோக்கம் இன்பம் உண்டாக்குவதல்ல.”

“ஆஹ்.”

நாங்கள் பதிலளித்திருந்த வினாநிரலின் மீது தன் பார்வையை பதித்திருந்த மருத்துவர் பலமுறை தனக்குத்தானே தலையாட்டிக்கொண்டார். “ஆம், ஆம், சரிதான்”, “திருமணம் ஆனதுமுதல் ஒருமுறைகூட உடலுறவு கொள்ளவில்லை.”, “தூய இனப்பெருக்க முறையை விரும்பியதற்கான காரணம்: குழந்தை வேண்டும்.” ஆக, இங்கு இன்று நீங்கள் வந்ததற்கான காரணம் இதுதான், சரிதானே?”

“ஆம், ஆனால் நாங்கள் இன்னமும் அதுகுறித்து முடிவுசெய்யவில்லை…. என்ன சொல்லவருகிறேன் என்றால், தூய இனப்பெருக்கமுறை என்றால் என்னவென்றோ, அது எவற்றையெல்லாம் உள்ளடக்கியிருக்கும் என்றோ எங்களுக்குத் தெரியவில்லை, எனவே தயவுசெய்து நீங்கள் அதுகுறித்து எங்களுக்கு விளக்கிக்கூறமுடியுமா?” என்றார் என் கணவர்.

கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டுக்கொண்டு மருத்துவர் தலையாட்டினார். “நல்லது, எங்கள் முகப்புப்பக்கத்தைப் பார்த்தீர்களானால் அதிலேயே அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்தான், எனினும் உங்களுக்காக மீண்டுமொருமுறை அவற்றைக் கூறிவிடுகிறேன்.”

“உளவியல்ரீதியானப் பிரச்சினைகளின் காரணமாக தங்கள் வாழ்க்கைத்துணையோடு கலவிகொள்வதை தவிர்ப்போரின் எண்ணிக்கை இக்காலத்தில் பெருகி வருகிறது. உங்களுடைய பாலியல் விருப்ப நடத்தைகளுக்குப் பொருத்தமாய் இருக்கும் நபரே குடும்ப வாழ்விற்கும் ஏற்றவராய் இருப்பார் என நிச்சயமாகக் கூறவிடமுடியாது, பெரும்பாலும் இதன் மறிநிலைதான் நிஜமாகிறது. எவர் ஒருவருடன் சேர்ந்து குடும்பவாழ்வைத் துவங்க எண்ணுகிறோமோ அவராலேயே பாலியல் எழுச்சியடைவதென்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

முதற்காரணமாகச் சொல்லவேண்டுமெனில், தம்பதியினரிடையே கலவியின் மூலமாகக் குழந்தைப்பேறு உண்டாக வேண்டுமென எண்ணும் பாரம்பரிய வழக்கமெல்லாம் வழக்கொழிந்துப் போய்விட்டன. சமகாலத்தோடு ஒத்துப்போகும் வழக்கமாக அது இப்போதில்லை. இன்பத்திற்காக உடலுறவு கொள்வதும், குழந்தைப்பேற்றிற்காக உடலுறவு கொள்வதும் முற்றிலும் வெவ்வேறான செயல்களாகும், அவையிரண்டையும் ஒன்றாக இணைப்பதென்பது சுத்த அபத்தம். இக்காலத்தில் மக்கள் வாழும் வாழ்வோடு இது பொருந்துவதேயில்லை.” என்றவாறே அவர் ஒரு துண்டுச்சீட்டை எங்களிடம் கொடுத்தார், அதன்மேல் ‘தூய இனப்பெருக்கி முறையும் புது குடும்ப அமைகையும்” என எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து அவர், “பாலியல்விருப்ப நடத்தை என்பது பல்வேறுவகையானவை. இளம்பெண்களின் மீது விருப்பம் கொண்ட ஒரு ஆண்மகனுக்கு முப்பத்தைந்து வயதான தன் மனைவியைக் காணும்போது அவன் உறுப்பில் விறைப்புத்தன்மை தோன்றுமா? இரு பரிமாணம்கொண்ட கற்பனை ஆணின்பால் ஈர்க்கப்படும் ஒரு பெண், உயிருடன் இயங்கும் முப்பரிமாண ஆணுடன் கலவிகொண்டால் அவளுக்கு வலிதானே உண்டாகும்? உங்கள் துணை உங்களுக்கான செக்ஸ் பொருளாகவும் இருக்கவேண்டியதில்லை என்பதே இக்காலத்தின் எத்தனை அற்புதமான முன்னேற்றமல்லவா! அதாவது உங்களுக்கான குடும்பத்தை உங்கள் அறிவைக்கொண்டு, பகுத்தறிந்து அமைத்துக்கொள்ளலாமே தவிர இனியும் இதற்காய் உங்கள் ஆண்பெண் குறிகளைக்கொண்டு சிந்திக்கத்தேவையில்லை. எங்களிடம் வரும் தம்பதியினருக்கு எங்கள் நிபுணர்களின் உதவிகள் வழங்கப்படுகின்றன, இனப்பெருக்கத்திற்கான எங்களின் மிகத்தூய வழிகாட்டிச் செயல்முறையான தூய இனப்பெருக்கியின் மூலம் அவர்களின் மிகச்சிறந்த மரபணுக்கள் சந்ததி உருவாக்கத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றன….”

மருத்துவர் பேசிக்கொண்டே போக, நான் அந்த துண்டுப்பிரசுரத்தின்மேல் பார்வையை ஓடவிட்டேன். ‘புதுயுகத் தம்பதியினர்’, ‘எமது அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் வசீகரமான, பாலின்பமற்ற அனுபவம்’ போன்ற சொற்றொடர்கள் அதில் கொட்டிக்கிடந்தன.

‘எங்கள் வினாநிரலுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்களின்படி பார்த்தால், பாலின்பத்தையும் குடும்பவாழ்வையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவேண்டுமென நீங்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே முடிவு செய்துவிட்டீர்கள் எனத் தெரியவருகிறது. பிரமாதமான விஷயம். இதைத்தான் நாங்கள் அதிநவீனத் திருமணம் எனக் குறிப்பிடுகிறோம்.”

“ஓ, அதுவொன்றும் அத்தனை விசேஷமான விஷயமல்ல,” என்றேன், உண்மையில் எனக்கு இவரைப்போன்ற பெண்களைப் பிடிப்பதேயில்லை, சங்கடத்துடன் என் கணவரை ஏறிட்டேன். அவரோ சலிப்பு மேலிட, மருத்துவர் தன் விரல்களிடையே சுழற்றிக்கொண்டிருந்த பந்துமுனை பேனாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“எங்களின் இந்தத் தூய இனப்பெருக்கிமுறையிலான நவீன மருத்துவ சிகிச்சை உங்களைப்போன்ற தம்பதியினருக்கு மிகப் பொருத்தமானது. எனினும் இந்த சிகிச்சை தேசிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராதென்பதால் ஒருமுறை இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கான கட்டணம் 9,500 யென்கள் ஆகும். திருமதி. டகஹாஷி, ஆரம்பக்கட்டமாக உங்கள் உடலின் வெப்பம் எவ்வளவு இருக்கிறதெனத் தொடர்ந்து கவனித்துவரச் சொல்வோம், உங்களின் கருமுட்டை வெளியாகும்போது சிகிச்சையைத் துவங்கிவிடுவோம். பலமுறை முயன்றபின்னரும் நீங்கள் கருவுறாவிட்டால், மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைக்கு உங்களைப் பரிந்துரைப்போம். நீங்கள் இளமையாகத்தான் இருக்கிறீகள், எனவே இந்த தூய இனப்பெருக்கிமுறையைத் தொடர்ந்து மேற்கொண்டாலே கருவுற்றுவிடுவீர்கள், உங்களுக்கு மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை தேவையேயிருக்காது என நம்புகிறேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கருவுறுதலுக்கான பரிசோதனையை நம் சிகிச்சையைத் துவங்குவதற்கு முன்னதாகவே செய்துவிடலாம்.”

“கட்டணம் மிக அதிகமாயிருக்கிறதே!” என் கணவர் மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

மருத்துவர் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். “திரு, டகஹாஷி, அதிநவீன சிகிச்சைமுறையை நாங்கள் உபயோகிக்கிறோம். ஜப்பானில் இந்த சிகிச்சை வெகு சில மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது, பெருகிவரும் இம்மருத்துவத்தேவைகளுக்கு ஏற்றாற்போல எங்கள் சேவையையளிப்பதும் கடினமாயுள்ளது. டோட்டோரியில் இருந்து நேற்று வந்த தம்பதியினர் இம்மருத்துவமுறை தங்களுக்கு மிகப் பிடித்திருக்கிறது என அத்தனை சிலாகித்துக் கூறிவிட்டுச் சென்றனர். நம் முதல் சிகிச்சையை எப்போது வைத்துக்கொள்ளலாம்?  உங்களுக்கு விருப்பமெனில் அதை இப்போதேகூட நீங்கள் முயன்று பார்க்கலாம் – சிகிச்சையின் போது பின்னணியில் என்னவிதமான இசை ஒலிக்கப்படவேண்டும் என்பதையும் கூட நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். கருமுட்டை வெளியாவதற்கான அறிகுறிகளை உடல் வெப்பநிலையைக் கொண்டு கணித்து சிகிச்சையை மேற்கொள்வதுதான் எங்களின் பொதுவான வழிமுறை என்றாலும் கூட, கருத்தரிப்பை மற்ற நாட்களிலும் செய்யலாம்…”

நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்ததும் நான் இடைமறித்தேன், “நாங்கள் இன்று மருத்துவ ஆலோசனைக்காக மட்டுமே வந்துள்ளோம். நான் என் கணவரோடு இதுகுறித்து கலந்துபேசிவிட்டுச் சொல்கிறேன்,” என்றேன்.

புன்னகைத்தபடியே மருத்துவர் தலையசைத்தார். “நிச்சயமாக, உங்களுக்குள் கலந்தாலோசித்து முடிவுக்கு வர எவ்வளவு நேரம் வேண்டுமாயினும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், தூய இனப்பெருக்கிமுறை பெரும்புகழ்பெற்ற சிகிச்சைமுறையாகும் என்பதால், உங்கள் கருமுட்டை வெளியாகும் தினத்தன்று உங்களுக்கு எங்கள் சேவைக்கான முன்பதிவு கிட்டாமல் போகக்கூடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது எல்லாமே சரியாக வாய்த்திருக்கிறது, எனவே உங்கள் முடிவை இப்போதோ அல்லது கூடிய விரைவிலேயோ தெரிவிப்பதுதான் நல்லது என்பேன்.”

“எனக்குப் புரிகிறது. நாங்கள் இதுகுறித்து கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.”

என் கணவர் எழுந்து நின்றார், அவர் முகம் முழுவதும் எரிச்சல் மண்டிக்கிடந்தது. அவரைத்தொடர்ந்து நானும் விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியேவந்தேன்.

ஆவோயாமா பகுதி எங்களுக்குப் பழக்கமில்லாத இடமாதலால், மருத்துவமனையைவிட்டு வெளியே வந்ததும் நாங்கள் ஓமோடெசாண்டோ நோக்கிச் சென்றோம், அங்கு எதிர்ப்பட்ட முதல் காப்பி கடைக்குள் நுழைந்தோம்.

“என்ன செய்வதாக உத்தேசம் கொண்டுள்ளீர்கள்?” cafe au lait பருகிக்கொண்டிருந்த என் கணவரை நோக்கிக் கேட்டேன்.

“இந்த விவகாரம் முழுவதிலும் ஏதோ மர்மம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது அல்லவா?” கோபத்துடன் பதிலளித்தார். “தூய இனப்பெருக்கி சிகிச்சைமுறை – இது செயற்கைக் கருத்தரிப்பு முறையாக இருக்கமுடியாது, அவ்வாறெனில் நாமே அதை செய்துகொள்ள வேண்டுமென அர்த்தமா?”

“அப்படித்தான் இருக்குமென எண்ணுகிறேன்,” என் ஆட்காட்டிவிரலால் தேநீர் கோப்பையை தடவியவாறே வருத்தத்தோடு கூறினேன். “அப்படியானால், நான் இப்போது என்ன செய்வது?”

“என்ன சொல்ல வருகிறாய்?”

“நம் குழந்தை… நாமே அதை உருவாக்கிக் கொள்ளலாமா? நாமிருவரும் சேர்ந்து, வீட்டிலேயே?” இதைக் கூறி முடிக்கும் முன்னரே என் உடல்முழுதும் அருவருப்பின் அலையொன்று திடுமெனப் பரவியது. என் தலையை உயர்த்தாமலேயே, எங்களிருவரிடையே இடைவெளியை அதிகரிக்க நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்துகொண்டேன்.

“எனக்கு… வந்து…. எனக்கு வேண்டாம்…”

என் கணவரும் அவ்வாறே உணர்ந்தார் என வெளிப்படையாகவே தெரிந்தது, கீழே குனிந்து பார்த்தபோது அவர் அவசர அவரசமாகத் தன் பாதங்களை உள்ளே இழுத்து மறைத்துக்கொள்வதைக் கண்டேன்.

இருவருமே இவ்விஷயத்தை வெறுத்தோம் என்பதைக் கண்டுகொண்டதும் தலையையுயர்த்தி அவரைக்கண்டேன், கோபப்பார்வையொன்றை என்மீது வீசினார்.

“செயற்கைக் கருத்தரிப்பு கடினமானது, எனினும் அதை நாம் முயன்று பார்க்கலாம்தான். பாலுறவற்ற தம்பதியினர் அதைத்தாம் தேர்வு செய்கின்றனர், எனவே நம் நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய மருத்துவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். 9,500 யென்கள் குறித்து நாம் கவலைகொள்கிறோமெனில் நாம் இதை யோசிக்க வேண்டியிருக்கும்.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

இப்போது அவர் ஆசுவாசத்துடன் காப்பியின் மீதிருந்து தன் பார்வையை உயர்த்தி, ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். ஒரு பெண் தன் நாயுடன் சென்றுகொண்டிருந்தார், தம் கைக்கடிகாரத்தை அவ்வப்போது பார்த்தபடி அவசரகதியில் அலுவலகப் பணியாளர்கள் விரைந்துகொண்டிருந்தனர், இளைஞர்களோ தம் அலைபேசிகளை தடவிக்கொண்டிருந்தனர். இவர்களில் எத்தனைப்பேர், ஒருவரையொருவர் நேசித்த தம்பதியரின் மனமார்ந்த கலவியின்போது வெளியேறிய விந்தின்மூலம் பிறந்தவர்கள் என வியந்தேன். கருமுட்டை வெளியாகும் நாட்கணக்கையெல்லாம் யோசிக்காமல் தன்னிச்சையாகக் கருவானவர்களா? அல்லது செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் உருவானவர்களா? அல்லது பாலியல் வன்புணர்வின் மூலமா? அவர்கள் எப்படி உருவாகியிருந்தாலும் சரி, ஒரு விந்தணு கருமுட்டையைச் சென்று சேர்ந்துள்ளது, அவ்வாறு உருவாகிய கரு முழு மனித உருபெற்று எதிரே நிற்கிறது என்பதுமட்டும் உண்மை.

மீண்டும் மேஜையின் கீழே பார்த்தேன். என் கணவரின் கால்கள் இப்போதும் என் பார்வைக்கு அகப்படாமல் மறைந்தே இருந்தன.

அலுலகத்தில் என் மதிய உணவை முடித்துவிட்டு, பெண்கள் ஓய்வறையில் பல்துலக்கிக் கொண்டிருந்தபோது என் அலைபேசி ஒலித்தது.

எனக்குப் பரிச்சயமில்லா எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. சிறு தயக்கத்தின்பின் அந்த அழைப்புக்கு பதிலளித்தேன்.

“மிசுகி டகஹாஷி?” ஒரு பெண்ணின் குரல்.

“நீங்கள் யார்?” எனக் கேட்டேன், அவள் இத்தனை நேரடியாகக் கேட்டது எனக்கு எரிச்சலை அளித்தது.

“நான் நொபுஹிரோவின் தோழி” என்றாள்.

“ஆங். நீ அவருடைய காதலியல்லவா?” முட்டாள்தனமாகக் கேட்டேன்.

நானும் என் கணவரும் திருமண வாழ்விலிருந்து கலவியை விலக்கிவைத்திருந்தோமே தவிர எங்களுக்கெனத் தனிப்பட்ட பாலியல் விருப்பங்களே இல்லை என அர்த்தமில்லை. வேறெவரிடமேனும் பாலியல் இன்பம் பெற்றுக்கொள்ள எங்களுக்கு முழுசுதந்திரம் இருந்தது. நாங்களிருவரும் பருவ வயதில் இருக்கும் சகோதர சகோதரியைப் போலத்தான் பழகினோம், நாங்கள் கலவிகொள்ள எங்களுக்கென இரகசிய துணைகளைக் கொண்டிருந்தபோதும் கலவியெனும் சொல்லுக்கான அர்த்தம்கூட அறியாதவர்களைப் போல்தான் எங்களுக்குள்ளே பழகிவந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் துரோகமிழைப்பது போல் தோன்றும், ஆனால் எங்கள் பார்வையில் அது மிகச் சரியான விஷயமாகும். இருமாதங்கள் முன்னர்வரை எனக்கும் ஒரு காதலன் இருந்தான், நான் அவனை முகநூல் மூலம் அறிந்திருந்தேன், ஆனால் காலப்போக்கில் அந்த உறவு எங்களுக்குச் சலித்துப்போனதால் பிரிந்துவிட்டோம்.

நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதை ஒரு வாய்ப்பாக வைத்து இந்தப் பெண்ணுடனான தன் தொடர்பை முறித்துக்கொள்ள என் கணவர் முயன்றுள்ளார். குழந்தையை உருவாக்கும் கருமுட்டையின் சொந்தக்காரி மட்டுமே நான், அவர் விரும்பினால் அவர் தன் எத்தனை விதைகளை வேண்டுமாயினும் பரப்பிக்கொள்ளலாம் எனும்போது இவர் ஏன் இந்த விஷயத்தில் இத்தனைத் தீவிரமாக இருக்கிறார் எனத்தான் எனக்கு முதலில் தோன்றியது, ஆனால் அந்தப் பெண் வெறிபிடித்தாற்போல அலைபேசியில் கத்தியைதைக் கேட்டதும்தான் அவளிடமிருந்து விலகவே குழந்தைப்பேற்றை என் கணவர் ஒரு சாக்காக உபயோகித்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

“என்மேல் வழக்கு பதியப்போகிறாயா? செய், ஆனால் அதனால் உன் மானம்தான் போகும், எனதல்ல,” அந்தபெண் அலறினாள்.

“இல்லை, நான் உன்மீது வழக்கு பதியப்போவதில்லை. அதேசமயம் அவரைவிட்டு நான் பிரியப்போவதுமில்லை. கேள், நீ ஏன் அவரிடமே இதுகுறித்து நேரடியாகப் பேசக்கூடாது? உங்கள் இருவருக்கிடையேயான இந்த உறவில் நான் செய்வதற்கு ஏதுமில்லை.”

என் அலட்சியமான பதிலைக்கேட்டு அவள் மேலும் ஆவேசமானாள்.

“நீங்கள் இருவரும் புணர்வதில்லை அல்லவா? நீயெல்லாம் ஒரு பெண்ணா? நான் எப்போதும் அவரைத் திருப்திபடுத்திவிடுகிறேன், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம்.”

“நிச்சயமாக நீங்கள் காதலிக்கிறீர்கள்தான், நீ அவரது காதலியேதான். நாங்களோ குடும்பமாக வாழ்கிறோம், எனவே எங்களுக்குள் உடலுறவு கிடையாது. இங்கே பார், என் மதிய உணவு இடைவேளை முடிந்துவிட்டது, இதற்குமேல் என்னால் பேசமுடியாது.”

“அவருக்குத் தகுந்தபடியான உடலுறவை உன்னால் அவருக்குத் தர இயலவில்லை. அதனால்தான் அவருக்கு உன்மேல் விருப்பம் எழவில்லை.”

“சரியாகச் சொன்னாய். அதனால்தான் நாங்கள் குடும்பவாழ்க்கையை மேற்கொண்டுள்ளோம்.”

அலைபேசியை வைத்துவிட்டு, அவள் எண்ணை முடக்கிவிட்டேன்.

“மிசுகி, என்ன ஆனது?” குளியலறையில் இருந்து வெளியேவந்த என் கணவர், கையில் அலைபேசியுடன் சோபாவில் அமர்ந்திருந்த என்னிடம் கேட்டார். “இப்போதெல்லாம் எப்போது பார்த்தாலும் உன் அலைபேசியையே நோண்டிக்கொண்டிருக்கிறாயே.”

“ம்ம்ம், தேவையற்ற மின்னஞ்சல்கள் நிறைய வருகின்றன. என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற வேண்டுமென எண்ணுகிறேன்.”

“அதன் அமைவை மாற்றிவிட்டாலே போதும், அத்தகைய மின்னஞ்சல்கள் வருவதை நிறுத்திவிடலாம். தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் நீ பூஜ்யமாக இருக்கிறாயே.”

என் கணவரின் காதலியிடமிருந்துதான் அந்த மின்னஞ்சல்கள் வந்திருந்தன. என் கணவரின் அலைபேசியில் இருந்து எனது மின்னஞ்சல் முகவரியை அவள் கண்டெடுத்திருக்க வேண்டும், தினமும் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியபடியே இருந்தாள். ஆரம்பத்தில் அவளுடைய மின்னஞ்சல் முகவரியை முடக்கிவிடலாம் எனத்தான் எண்ணினேன், ஆனால் நானே வியக்கும்வகையில் அவள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மீது எனக்கு ஏனோ ஆர்வம் உண்டானது. அவர்கள் இருவரும் உடலுறவு கொள்ளும் புகைப்படங்களை எனக்கு அனுப்பியிருந்தாள்.

அப்புகைப்படங்களைப் பார்த்தபொழுது என் தம்பி சுயமைதுனம் செய்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவன் அறைக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றுதான் உணர்ந்தேன். அவை மிகுந்த சங்கடமளிப்பவையாக இருந்தன. அப்புகைப்படங்களில் என் கணவர் தன்னை ஒரு குழந்தையாக பாவித்து நடித்துக்கொண்டிருந்தார், ஒன்றில் அவள் முலையை உறிஞ்சிக்கொண்டிருந்தார், மற்றொன்றிலோ அவள் அவரது அணையாடையை மாற்றிக்கொண்டிருந்தாள். இச்செயல்களின் மூலமாக அவர் மிகுந்த காமவயப்பட்டிருந்தார் என்பதை, அவரது அணையாடைக்குள் புடைத்துக்கொண்டிருந்த அவரது ஆணுறுப்பின்மூலம் தெரிந்துகொண்டேன். சொல்லப்போனால், அவரது ஆணுறுப்பை இந்தளவிற்கேனும் நான் காண்பதுவும்கூட இதுவே முதன்முறையாகும்.

அப்புகைப்படங்களோடு சேர்த்து, “நான்தான் அவருக்குத் தாயாக இருக்க முடியும்.”, “எனது பின்புறங்களை அவர் தடவிக்கொடுப்பார், நானும் அவருக்கு அவ்வாறே செய்துவிட வேண்டுமென என்னைக் கெஞ்சுவார்”, “நீ தோற்றுவிட்டாய் பெண்ணே!” போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன – அவையனைத்துமே அவள் மூளை காமத்தாலும் காதலாலும் குழம்பிக்கிடந்ததைத்தான் உணர்த்தின.

இருகைகால்களையும் தரையில் ஊன்றி, வாயில் ரப்பர் நிப்பிளை திணித்துக்கொண்டு, எச்சில்வழிந்தோடவென குழந்தைகள் அணியும் கழுத்தாடையையும் அணிந்துகொண்டிருந்த என் கணவரின் புகைப்படங்கள் மிகவும் ஈர்த்தன. அதேசமயம், அவருடைய பாலியல் தேவைகளுக்கான இணையராய் நான் இல்லாதுபோனதையெண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைந்தும் கொண்டேன்.

“உம்ம்…” பேச வாயெடுத்தேன்.

கேசத்தைத் துவட்டியவாறே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் திரும்பி என்னைப் பார்த்தார். “ம், என்ன?”

“நான் யோசித்துப் பார்த்துவிட்டேன். நாம் இதை முயன்று பார்க்கலாமா?”

“எதை முயன்று பார்க்கலாமா?”

“அந்த மருத்துவமனையைத்தான் சொல்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பும் கூட விலையுயர்ந்த சிகிச்சையாகவே இருக்கக்கூடும், மேலும் நம் நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மருத்துவரைத் தேடிக்கண்டடைவதும் அத்தனைச் சுலபமல்ல. இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் நமக்கு இந்த தொல்லைகளாவது இருக்காது, அதேசமயம் மருத்துவப் பரிசோதனைக்குக் கட்டணமும் கிடையாது. அத்துடன், அவர்களின் சிகிச்சை இயற்கைமுறை உடலுறவைப் போலவேதான் இருக்குமென்பதால், எனது உடல் அதை ஏற்றுக்கொள்வதும் எளிதாக இருக்கும்.”

“நிஜமாகவா? சரி, பெண்களின் உடற்சார்ந்த விஷயங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனவே இவ்விஷயத்தில் உன் இஷ்டப்படியே நடந்துகொள்கிறேன்” என்றார். அவர் சங்கடமாகத்தான் தெரிந்தார், ஆனால் அந்தப் பெண் மருத்துவரின் மீதிருந்த வெறுப்பின் காரணமாக என் கோரிக்கையை அவர் புறந்தள்ளாமல் இருந்ததே பெரிய விஷயம்தான்.

“அன்று நாம் மருத்துவ ஆலோசனை பெற்றுவந்தது முதலே நான் என் உடல்வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். அடுத்து கருமுட்டை வெளியாகும் நாளின்போது நாம் சிகிச்சைக்கான முன்பதிவை செய்துகொள்வோமா?”

“சரி, எனக்கு விடுமுறை கிட்டினால் அன்றே நாம் சென்றுவிடலாம்” எனத் தலையாட்டியபடியே விட்டேத்தியாகக் கூறிவிட்டு தொலைக்காட்சியில் மீண்டும் தன் கவனத்தைச் செலுத்தத் துவங்கினார். திரையில் ஏதோ தூரதேசத்தின் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க, பின்னணியில் வயலின் இசை வழிந்தோடியது.

நல்வாய்ப்பாக நான் கருவுறுதலுக்கான நாள் சனிக்கிழமையில் வந்தது. இருவரும் ஒன்றாக மருத்துவமனைக்குச் சென்றோம்.

எங்களை வரவேற்க வந்த செவிலிக்கு மரியாதைசெலுத்தும் விதமாகக் குனிந்து வணங்கிவிட்டு “நாங்கள் சிகிச்சையை மேற்கொள்ள விரும்புகிறோம்” என்றேன். என் கணவரும் அவசர அவசரமாக அதை ஆமோதித்தார்.

“உங்கள் இருவருடைய ஆடைகளையும் களைந்துவிட்டு இவற்றை அணிந்துகொள்ளுங்கள்” என்றபடியே அந்த செவிலி எங்கள் இருவருக்கும் வெண்ணிற கவுன்களை அளித்தார். “அனைத்து உள்ளாடைகளையும் கூடக் கழற்றிவிடுங்கள். நீங்கள் தயாரானதும், என்னை அழையுங்கள்” என்றார்.

அங்கிருந்த சதுரவடிவத் தனியறைகளுக்குள் நுழைந்து, திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொண்டு, உடைமாற்றிக்கொண்டோம். நீளமான கைகளும், நீளமான கீழ்ப்பகுதியும் கொண்டிருந்த அந்தப் பெண்கள் கவுனில் விசித்திரமாக சிறிது இடைவெளியும் இருந்தது. நடக்கும்போது இந்த கவுன் இடையூறாக இருக்குமென எண்ணிக்கொண்டேன், ஆனால் அதை வெளியே சொல்லவில்லை.

“நல்லது. திரு. டகஹாஷி, இந்தப்பக்கம் வாருங்கள்” என செவிலி கூறினார்.

திரையை விலக்கியதும், என் கணவரும் என்னைப்போன்றே ஒரு கவுன் அணிந்திருப்பதைக் கண்டேன். அந்த உடை அவருக்கு அசவுகரியமாக இருந்ததால், பதட்டத்துடனேயே காணப்பட்டார், செவிலியைத் தொடர்ந்து நாங்களும் அந்த அறைக்குள் நுழைந்தபோது அவர் தன் அந்தரங்கப்பகுதியை கைகளால் மறைத்துக்கொண்டார். முழுவதும் வெண்ணிறமாய் இருந்த அந்த அறையில் ஜன்னல்கள் ஏதுமில்லை, பல்மருத்துவமனைகளில் காணக்கிடைக்கும் நாற்காலிகளை விடவும் பெரிதாகத் தோற்றமளித்த இரு வெண்ணிற சாய்வு நாற்காலிகள் மட்டுமே அங்கிருந்தன, அவை ஒன்றையொன்று பார்த்தவண்ணம் இருந்தன. அறுவைசிகிச்சையின்போது மருத்துவர்கள் அணிந்துகொள்ளும் முகக்கவசங்களை அணிந்தபடி இரு செவிலியர் அந்நாற்காலிகளின் அருகே நின்றுகொண்டிருந்தனர். லாவண்டர் தைலமணம் காற்றைத் திணறச் செய்துகொண்டிருக்க, பாரம்பரிய இசை பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

“இந்த நாற்காலியில் படுத்துக்கொள்ளுங்கள்.”

சிறிது தள்ளியிருந்த நாற்காலியை நோக்கி என் கணவர் அழைத்துச் செல்லப்பட்டார். நாற்காலியின் தாங்கும்பகுதி ஏறத்தாழ கிடைமட்டமாக இருந்ததால், படுக்கையொன்றில் படுத்திருப்பதைப் போலத்தான் அவர்  காட்சியளித்தார்.

“திருமதி. டகஹாஷி, இங்கே வாருங்கள்.”

அவர்கள் கூறியபடியே என் கணவரை நோக்கியிருந்த மற்றொரு வெண்ணிற சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டேன். நாற்காலி மிருதுவாக இருந்தது, அவர் இருந்த நாற்காலியை விடவும் சற்றே உயர்ந்திருந்தது.

“உங்கள் கால்களை இங்கே வைத்துக்கொள்ளுங்கள்.”

அவர்கள் கூறியபடியே, மகப்பேறு சோதனையின்போது வைத்துகொள்வதைப்போல, நாற்காலியின் இருபக்கமும் இருந்த தாங்கிகளின்மீது என் கால்களை அகலவிரித்து வைத்துக்கொண்டேன். நல்லவேளை, நான் அணிந்திருந்த கவுன் என்னை சங்கடத்தில் இருந்து காப்பாற்றியது.

“இப்போது, திரு. டகஹாஷி விந்தணுக்களை உற்பத்தி செய்வார்.”

எங்களை அந்த அறைக்கு அழைத்துவந்த செவிலியும் கூட இப்போது முகக்கவசத்துடன் காணப்பட்டார். அறுவைசிகிச்சையொன்றை மேற்கொள்வதைப்போல அம்மூவருமே மெல்லியக் கையுறைகளை அணிந்துகொண்டனர், தமக்குள் எதற்காகவோ ஆமோதித்து தலையசைத்தபடியே என் கணவர் அணிந்திருந்த நீள கவுனின் அடியில் தம் கைகளைச் கொண்டுசென்றனர். இசைக்கு ஏற்றார்போல என் கணவரின் ஆணுறுப்பை அவர்கள் தொட்டுத் தடவுவதைப் போலிருந்தது.

“இது சரியாக இருக்கிறதா, திரு. டகஹாஷி? தயவுசெய்து உங்களின் முழு ஒத்துழைப்பையும் தாருங்கள்.”

என் கணவர் தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டிருந்தார், செவிலியரின் கட்டளைகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டாற்போலத் தம் கண்களை இறுக மூடிக்கொண்டார், அவர் முகமோ இருண்டிருந்தது. இறுதியாக, “உயிரோட்டம் உங்கள் கணவரின் உடலுக்குள் நுழைந்துவிட்டது” என செவிலியொருவர் காத்திரமாக அறிவித்தார்.

அந்த செவிலி கூறியதன் அர்த்தத்தை, அவர் என்னருகே வந்து “திருமதி. டகஹாஷி, இப்போது இதை உங்களுக்குப் பூசிவிடப்போகிறேன்’ எனக் கூறியபோதுதான் புரிந்தது.

கையுறைகளுக்குள் இருந்த செவிலியின் கை கவுனுக்குக் கீழே விரிந்திருந்த என் கால்களுக்கிடையே சென்றது, மூலிகை வாசம்வீசிய ஜெல்லியை அவர் என் யோனிப்பகுதியில் தடவினார். அதன் சில்லிப்பில் என் உடல் கூசியது, ஆனால் மகப்பேறு சோதனைபோலவேதான் அது இருந்ததால், அப்படியொன்றும் அசவுகரியமாக நான் அதை உணரவில்லை.

“இப்போது நாம் உயிரோட்டத்தை கருமுட்டையுடன் இணைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யப்போகிறோம்” என அறிவித்த செவிலி, தன் கையில் ஒரு வெள்ளிநிறக் குழாயை வைத்திருந்தார், அதன் ஒரு முனையில் மின்சாரவடம் போன்ற ஏதோவொன்று இணைக்கப்பட்டிருந்தது. உடனடிப்பார்வைக்கு அந்தக் குழாயின் உள்ளே ஜெல்லி போன்ற ஏதோவொன்று அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, அது ஒருவித சுயமைதுனக்கருவியாக இருக்கக்கூடுமென எண்ணிக்கொண்டேன்.

அறுவைசிகிச்சையின்போது மேற்கொள்ளப்படும் அனுபவம் மிக்க அசைவுகளுடன் அந்த செவிலி என் கணவரின் கவுனை உயர்த்தி, அவரது ஆணுறுப்பை அந்தக் கருவியினுள் நுழைத்தாள்.

“திரு. டகஹாஷி, உயிரணுக்கள் வெளியாகும்போது தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்போது உங்கள் கையை உயர்த்தினால் போதும்! புரிகிறதா?”

எதுவும் பேசாமல் என் கணவர் தன் தலையை மட்டும் ஆட்டினார். தன் கவுனின் முனையை இறுக்கமாகப் பற்றியிருந்தார், அவர் முகம் வெளிறத் துவங்கியது.

“திரு. டகஹாஷி, உங்களின் உயிரோட்டம் மின்காந்த அலைகளால் ஊக்குவிக்கப்படுகிறது. புரிகிறதா?” என செவிலி விளக்கினார், ஆனால் அந்த செவிலியேதான் தன் கையின் அசைவுகள் மூலம் உயிரோட்டத்தை ஊக்குவித்துக்கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது,  வெள்ளிக்குழாயினுள் இருந்த அவர் ஆணுறுப்பை மேலேயும் கீழேயும் ஆட்டிக்கொண்டிருந்தார். அந்தக் குழாய் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்ததோடு, சிறிது கூர்ந்து கவனித்ததில் அதன் மீது ‘தூய இனப்பெருக்கி’ எனக் கொட்டை எழுத்துக்களில் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததையும் கண்டேன். கடமையே கண்ணாக செவிலி தன் பணியில் மூழ்கியிருக்க, அவருடைய இயக்கத்திற்கு ஏற்ப அந்த வடமும் ஊசலாடியது. ஜெல்லி போன்ற ஏதோவொன்று பறந்துவந்து என் கால்களின் மீது ஜில்லிப்பாய் விழுந்தது.

“திரு. டகஹாஷி, இது அதிநவீனக் கருவியாகும். கொஞ்சம் சில்லென்று இருக்கும்தான், தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள். இதோ இப்போது முடிந்துவிடும்!”

என் கணவருக்கு வியர்த்துக் கொட்டியது. அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக விந்தணுக்கள் உறிஞ்சியெடுக்கப்படுவதைப் போன்று அவ்வப்போது வேதனையில் முனகினார்.

“திரு. டகஹாஷி, முழுவதுமாக வெளியேற்றிவிடுங்கள்!”

“எந்த நொடியிலும் வெளியேறிவிடும்! உயிரோட்டம் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறது!”

“திருமதி. டகஹாஷி, இன்னும் கொஞ்சம் அருகில் வாருங்கள், பிளீஸ். அவர் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள், ஆங், அப்படித்தான்.”

நான் குழப்பத்தோடு முன்னோக்கி சாய்ந்து, என் கணவர் பலவீனமாக நீட்டிய கரத்தைப் பற்றிக்கொண்டேன்.

“இறுதியாக ஒருமுறை உந்தி வெளியேற்றுங்கள், திரு. டகஹாஷி!” கருவியின் மூலம் அவரது ஆணுறுப்பை உந்தச் செய்தபடியே செவிலி இரைந்தாள்.

“இதோ இப்போது முடிந்துவிடும் அன்பே!” செவிலிகளின் கோரஸ் ஒலிகளோடு சேர்ந்து நானும் கூறியநொடி என் கணவரின் இடதுகரம் நடுங்கியபடியே மேலெழுந்தது.

“உயிரோட்டம் வெளியாகிவிட்டது!” செவிலி கத்தினாள். உடனே நான் சாய்ந்துகொண்டிருந்த நாற்காலியின் தாங்குபகுதி படாரெனப் பின்னுக்குச் சரிந்து, நாற்காலி நகரத் துவங்கியது.

என் பார்வைக்குக் கூரை மட்டுமே தெரிந்தது, சுற்றிலும் என்ன நடக்கிறது என என்னால் காணவே முடியவில்லை. எல்லாமே அதிவிரைவாக நடந்தேறின. நிஜ உலகில் இருந்து நான் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதைப் போலவும், ஏதோவொரு காணொளியில் இருப்பதைப்போலவும்தான் உணர்ந்தேன். என் கால்கள் இரண்டும் விரித்துவைக்கப்பட்ட நிலையிலேயே என் கணவரை நோக்கி செலுத்தப்படுவதை உணர்ந்தேன். நாற்காலி நின்றதும் எனது யோனிக்குள் ஏதோவொன்று நுழைவதைப்போல உணர்ந்தேன், ஏதோ திணிக்கப்பட்டாற்போல இருந்தது. ஜெல்லியின் சில்லிப்போடு என் கணவரின் ஆணுறுப்புதான் எனக்குள் நுழைந்தாற்போல் மங்கலாக தோன்றினாலும், கருவிதான் விந்தணுக்களை எனக்குள் பாய்ச்சுவதாகவும் உணர்ந்தேன்.

“விந்து வெளியாகிவிட்டது!” லேசான வெப்பம் என் அந்தரங்கப்பகுதியில் பரவியதை உணர்ந்தேன். இறுதியாக என் கணவர் வெளியேற்றிவிட்டார்.

“சிறப்பாகச் செயலாற்றினீர்கள், திரு. டகஹாஷி!”

“வாழ்த்துகள், திருமதி. டகஹாஷி.”

நாங்களிருவரும் கூரையைப் பார்த்தவாறே படுத்திருக்க, செவிலியர் ஈரமான பருத்தித்துணிகளால் எங்களின் அந்தரங்கப்பகுதிகளை சுத்தம் செய்தனர்.

விடாய்க்கால அணையாடையொன்றை என்னிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார் செவிலி. நான் என் உள்ளாடையை அணிந்துகொண்டு, அதனுள் அந்த அணையாடையை வாகாகப் பொருத்திக்கொண்டேன். மற்ற செவிலியர்கள் என் கணவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தபடி, அவரது நெற்றியில் பூத்திருந்த வியர்வைத்துளிகளை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தனர். நடப்பவற்றையெல்லாம் காணும்போது, ஏதோ அவர் குழந்தையை ஈன்றெடுத்துள்ளதைப் போன்றும், நான் அவருடைய வாரிசை பெற்றுக்கொண்டதைப் போலவும்தான் எனக்குத் தோன்றியது.

“கவனம், அணையாடையை கட்டாயம் அணிந்துகொள்ளுங்கள், உங்கள் உறுப்பை கழுவிவிடாதீர்கள். உங்களுக்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டுமெனத் தோன்றினால், வீட்டிற்குச் சென்றதும் சிறு குளியலொன்றைப் போட்டுவிடுங்கள். இன்றைக்கு இவ்வளவுதான், திருமதி. டகஹாஷி.”

நடந்தவை அனைத்துமே எதிர்பாராதவையாக முடிந்ததை எண்ணியவாறே தலையாட்டினேன். என் கணவரின் ஆணுறுப்பில் போதிய எழுச்சியில்லாத நிலையில் விந்தணுக்களை வெளியேற்றச் சொல்லி அவரை செவிலியர் கட்டாயப்படுத்தியிருந்ததால் மூச்சிரைத்தபடி மிகுந்த அயர்வாக இருந்தார், அவருக்கு இது பெரும் அவஸ்தையை உண்டாக்கியிருந்தது என்பதுமட்டும் தெளிவாகவே தெரிந்தது.

“இதற்காகவா ஒன்பதாயிரம் யென்கள்! என்னவொரு மோசடிவேலை!” வீட்டிற்குவரும் வழியில் என் கணவர் சீறினார்.

நான் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். “உண்மையிலேயே இது மிக மோசமாகத்தான் இருந்ததல்லவா? எனினும், பாலியல் ரீதியாக நான் எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை… நல்லவிஷயம்தானே?”

“என் வாழ்வில் இத்தகைய மோசமானதொரு வன்முறைக்கு நான் உள்ளாகியதேயில்லை! அவர்கள் எனக்கு வயாக்ரா மாத்திரையைக் கொடுத்தனர்தான், அதை நான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.” பேசப்பேச மேலும் மேலும் அவர் பதட்டமடைந்துகொண்டே போனார், “அச்சமயம் என்னுறுப்பு உன்னுள் நுழைந்ததா அல்ல அந்த வினோதக் கருவியினுள் நுழைந்ததா என என்னால் வேறுபடுத்திப் பார்க்கவே முடியவில்லை, அத்துடன் அந்த இயந்திரத்தினுள் தான் விந்தணுக்களை வெளியேற்றினேனா அல்லது உன்னுள்ளா எனவும் எனக்குத் தெரியவில்லை.”

“ஆனால், இது நல்ல விஷயம்தானே? இதனால் நம் திருமண வாழ்வை உடலுறவற்ற ஒன்றாக நம்மால் காப்பாற்றிக்கொள்ள முடிந்துள்ளதே?”

“சரிதான், ஆம், ஆனால்….”

வழியிலிருந்த ஒரு சிறு பூங்காவில் இளைப்பாறினோம்.

“நான் கழிவறைக்குச் சென்று வரட்டுமா? என் அணையாடையை மாற்றிக்கொள்ளவேண்டும்.”

“அஹ், சரி” எனக்கூறித் தலையசைத்தார், அவருடைய விந்தணுக்கள்தான் என்னுள்ளிருந்து கசிந்து வருகிறது எனும் உண்மையை அச்சமயம் உணர்ந்து சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்.

பூங்காவில் இருந்த பொதுக் கழிவறைக்குச் சென்றேன், எனது உள்ளாடையை களைந்ததும் அதனுள் பொதிந்து வைத்திருந்த அணையாடை முழுவதும் என் கணவரின் விந்து பரவியிருந்ததைக் கண்டேன். வெள்ளை மாதவிடாயைப் போலிருந்தது. புதிதாக அணையாடையொன்றை மாற்றி வைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். பூங்கா இருக்கையில் அவர் எனக்காகக் காத்திருந்தார்.

“நீண்டநேரம் காத்திருக்கவைத்துவிட்டேனா?”

“இல்லையில்லை. எல்லாம் சரியாக இருக்கிறதா?”

அவரருகில் அமர்ந்தபடி, ”நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்ன கொஞ்சம் சோர்வாக இருக்கிறது, அவ்வளவுதான். வீட்டிற்குச் செல்வதற்குமுன் இங்கேயே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமா?” எனக் கேட்டேன்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பூங்காவைப் பார்த்தபடியே சிறிதுநேரம் அமர்ந்திருந்தோம்.

“ஓ பரவாயில்லை, இதுவொன்றும் அத்தனை மோசமான அனுபவமில்லை.”

“என்ன? சிறிது நேரத்திற்கு முன்புகூட அத்தனை ஆத்திரப்பட்டீர்களே.”

“ஆம், ஆனால் உன்னுடன் எவ்விதத்திலும் நான் உடலுறவு கொள்ளவில்லை என்பது நல்ல விஷயமாயிற்றே. நம் உறவுக்குள்ளே நாம் கலவியைக் கொண்டுவரவில்லையே.” மணற்குழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைப் பார்த்தவாறே மென்மையாகக் கூறினார்.

“நமக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு ஆண்குழந்தை வேண்டுமா பெண் குழந்தையா?”

“பெண்குழந்தைதான் வேண்டுமென எண்ணுகிறேன். பையன் பிறந்தாலும் நல்லதுதான் ஆனால் பெண்குழந்தை மேல் எனக்கு அதிக பிரேமையுண்டு.”

“ஆம்.”

கண்களைப் பாதி மூடியபடி, அந்த சிறுமியையே பார்த்துக்கொண்டிருந்தார், அவள் மணற்குழியில் இருந்து எழுந்து எங்கோ ஓடினாள்.

“அம்மா!” சிறுமி கூவியழைத்ததும் இளம் தாயொருத்தி புன்னகைத்தபடியே எழுந்துநின்றாள்.

அந்தத் தாய் தன் மகளின் தலையை நேசத்துடன் தடவிக்கொடுப்பதையும், சிறுமி புன்னகைத்தபடியே தன் தாயை அணைத்துக்கொள்வதையும் என் கணவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் நெற்றியெங்கும் வியர்வைத்துளிகள் பூக்கத்துவங்கின, திடீரென அவர் முகத்தில் ஒருவித பீதி பரவியது.

“என்னவாயிற்று?”

அவர் பதிலளிக்கவில்லை. சட்டெனக் கையால் வாயைப் பொத்திக்கொண்டு கீழே அமர்ந்து வாயிலெடுக்கத் தொடங்கினார். காலையிலிருந்து அவர் எதையும் உண்ணவில்லை, வயிற்றினுள் சுரக்கும் அமிலம் மட்டுமே வெளியே வந்தது. குமட்டலைக் கட்டுப்படுத்த முயன்று குனிந்து அமர்ந்திருந்த அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கர்ப்பிணிகளுக்கு காலைவேளையில் உண்டாகும் குமட்டலைப் போல அது எனக்குத் தோன்றியது.

‘அம்மா, அம்மா ஆ ஆ ஆ….!’

அந்தச் சிறுமியின் கள்ளங்கபடமற்ற குரல் பூங்கா முழுதும் எதிரொலித்தது.

என் கணவரின் குமட்டல் மீண்டும் அதிகமானது, அவரது முதுகுப்பகுதி நடுங்கத் துவங்கியது. அவரை ஆசுவாசப்படுத்த என் கரத்தை நீட்டினேன். மிகச்சரியாக அந்த நொடியில், அவரது விந்து என் யோனிக்குள் இருந்து பீறிட்டு வெளியேறியது.


சயாகா முராடா.

ஆங்கிலத்தில்: கின்னி தாப்லே டகேமோரி

தமிழில் : சசிகலா பாபு.

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு:

சயாகா முராடா: (ஆகஸ்ட் 14, 1979)

ஜப்பானின் சமகாலப் பெண் எழுத்தாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சயாகா முராடா. இவருடைய நாவலான “Convenience Store Woman” மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இலக்கியத்திற்காக குன்சோ விருது, மிஷிமா யுகியோ விருது, அகுடகாவா விருது உட்பட ஜப்பானின் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

சிற்றங்காடி ஒன்றின் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றியபடியே தாம் கண்ட, கடந்துவந்தவர்களை அடிப்படையாகக் கொண்டே சயாகா முராடா தன் பெரும்பான்மையான கதைக்கருக்களையும், கதை மாந்தர்களையும் உருவாக்கியுள்ளார்.

ஆண்பெண்ணிடையே உண்டாக்கிக்கொள்ளப்படும் பாலியலற்ற உறவுகள், திருமண பந்தத்தினுள்ளேயே இணையர்கள் தமக்குள் வகுத்துக்கொள்ளும் பாலின்பத்துறவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே அவருடைய பல கதைகளும் அமைந்துள்ளது. “தூய திருமணம்” எனும் இச்சிறுகதையும் அதை அடிப்படையாகக் கொண்டே சயாகா முராடாவால் எழுதப்பட்டுள்ளது..

 

மொழிபெயர்ப்பாளர் : 

உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”, “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”, “பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”, “சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”, “குளிர்மலை – ஹான் ஷான்” ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன.

[/tds_info]

Previous articleஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory Police”
Next articleமரண வீட்டு சடங்காளன்
சசிகலா பாபு
உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”, “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”, “பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”, “சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”, “குளிர்மலை – ஹான் ஷான்” ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன. வாக்குறுதி, அமாவும் பட்டுப்புறாக்களும், சொல்லக் கூடாத உறவுகள் போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.