‘சந்திரப் பிறையின் செந்நகை’


1

நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே மனதில் ஒரு வகைப்பாட்டை உருவாக்கியுள்ளது. சில நாவல்களைக் கலைப்பெறுமதி மிக்கவை என்றும் சிலவற்றைக் கலையம்சம் குன்றியவை என்றும் வகை பிரித்துள்ளது.

தி.ஜானகிராமன் நாவல்களில் மோகமுள், அம்மா வந்தாள், மலர் மஞ்சம், மரப்பசு, உயிர்த்தேன் ஆகிய ஐந்தையும் கலைப்பெறுமதி மிகுந்த படைப்புகளாகக் கருதுகிறேன். தொடர்ந்த மறுவாசிப்புகளுக்குத் தகுதியானவை, ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய தளத்தை வெளிக்காட்டுபவை, எனது தனி வாழ்க்கை அனுபவங்களைப் பாதிக்கக் கூடியவை; அவற்றுடன் ஒப்பு நோக்க உதவுபவை, கலைவாயிலாக அடையும் மகிழ்ச்சியை அளிப்பவை என்று  வகைப்பாட்டுக்குக் காரணங்களையும் கண்டடைகிறேன்.

பெரும் படைப்புகளின் உலகில் திளைக்கும் வாசகரிடம் இதுபோன்ற வகைப்படுத்தல் நிகழ்வது தவிர்க்க இயலாதது. அந்த வாசக இணக்கம் தனக்கு உவப்பான படைப்புகளை மகத்தானவையாகக் கருதுவதனாலேயே விருப்பத்துக்குகந்த படைப்பாளியின் பிற ஆக்கங்களையும் புறக்கணிக்கப்பட முடியாதவையாக நிலைநிறுத்துகிறது. அவற்றின் சாயல்களை மகத்தான ஆக்கங்களாகக் கருதப்படும் பிற படைப்புகளில் தேடத் தூண்டுகிறது. அதன் மூலமாக அந்தப் படைப்பாளியின் கலைப்பெறுமதி பெறாதவை என்று ‘ஒதுக்கிய’ எழுத்துக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அந்தரங்க ரசனையை அடிப்படையாகக் கொண்ட இந்த நடவடிக்கை  ஒருவகையில் இலக்கிய வரலாற்றுடனும் தொடர்புகொண்டதுதான். ஓர் எழுத்தாளர் அவரது படைப்பு வாழ்வில் அடைந்திருக்கும் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் கலை முதிர்ச்சியை மதிப்பிடவும் இது துணையாகிறது. இலக்கியப் பரப்பில் அவரது இடத்தை நிர்ணயிக்க ஏதுவாகிறது.

‘உயிர்த்தேனை’ தி.ஜானகிராமனின் உச்சமான படைப்புகளில் ஒன்றாக முன்னர் மதிப்பிட்டிருக்கவில்லை. அதை மானசீகப் பட்டியலில் முதன்மை இடம் பெற்ற படைப்புகளில் ஒன்றாகச் சேர்த்திருக்கவுமில்லை. எனினும் தொடர்ந்த வாசிப்புகளில் இந்த விடுபடல் உறுத்தத் தொடங்கியது.‘மோக முள்’ளையும் ‘அம்மா வந்தா’ளையும் ‘ மலர் மஞ்ச’த்தையும் எத்தனை முறை வாசித்திருப்பேனோ அதற்குச் சற்றும் குறையாதமுறை உயிர்த்தேனையும் வாசித்திருக்கிறேன். அந்த வாசிப்புத் தருணங்களில் அவற்றுடன் ஒப்பிட்டும் அவை தந்த அதே வாசிப்பனுபவத்தை எதிர்பார்த்துமே உயிர்த்தேனை வாசித்த பிழை விளங்கியது. மிகவும் முயன்று இந்த ஒப்பீட்டையும் எதிர்பார்ப்பையும் தவிர்த்து வாசித்த பின்னர் நாவலின் தனித்தன்மைகள் புலப்பட்டன. அவற்றில் முதன்மையானது இதில் தெளிந்து தெரியும் இலட்சியவாத நோக்கு. தி.ஜானகிராமனின் பிற நாவல்களிலிருந்து ‘உயிர்த்தே’னைத் தனித்துக் காட்டுவது இந்த இயல்புதான்.

தி.ஜானகிராமன் படைப்புகள் அனைத்தையும் நடப்பியல் சார்ந்தவை  என்று ஒற்றைப் பிரிவில் அடக்கிவிடலாம். சிறுகதைகளிலும் நாவல்களிலும் எதார்த்தமான கதை சொல்லலையே அவர் கையாளுகிறார். சோதனை முயற்சி, புதுமை வேட்கை என்று நடப்பியலை மீறிய எதையும் எழுதியதுமில்லை. எதார்த்தத்தை வலுவாக முன்வைப்பதற்காகக் கதைகளில் பின்பற்றும் எளிய உத்திகளைத் தவிர்த்து உருவ ரீதியிலான கசரத்துகள் எதற்கும் அவர் முனைந்ததில்லை. நடைமுறை வாழ்வில் நிகழும் சம்பவங்களையே கதைகளாக உருமாற்றுகிறார். எனினும் அவற்றில் உயிர் நாளமாக ஓடுவது இலட்சியவாதம் என்பதை நுட்பமாகக் காணமுடியும். அது அவரது இலக்கியப் பார்வையால் உருவானது. மானுடக் கரிசனையால் செழுமை பெற்றது. சில சமயங்களில் இந்தக் கரிசனம் கற்பனாவாதத் தோற்றத்தையும் கொண்டதுதான். மனிதர்கள் இயற்கையில் மேலானவர்கள். சூழ்நிலைகளே அவர்களது சேஷ்டைகளுக்குக் காரணம். அந்த மனிதச் சேஷ்டைகளை வியப்புடனும் அனுதாபத்துடனும் சீற்றத்துடனும் பரிவுடனும் பெருமிதத்துடனும் சுட்டிக்காட்டுவதே அவரது படைப்பு நோக்கம். இந்த மன நிலையை இலட்சியவாதம் கொண்டது என்றால் தி. ஜானகிராமனை இலட்சியவாத எழுத்தாளர் என்று சொல்லலாம். ஆனால் அது செவ்வியல் பண்புகொண்ட படைப்பாளியைக் குறுக்கிப் பார்க்கும் அநீதியாகி விடலாம்.

குறுக்கீடாக இந்த ஒப்பீட்டை முன்வைக்கிறேன். தி.ஜானகிராமன் நாவல்களில் இலட்சியவாதத்தின் சாயலும் கற்பனைவாதத்தின் கீற்றுகளும் தென்படுகின்றன. கதைமாந்தர்கள் எதார்த்தமானவர்களாக இருக்கும்போதே இலட்சியவாதிகளாகவும் கற்பனாவாதிகளாகவும் இயங்குகிறார்கள். ஆனால் அவரது சிறுகதைகளில் இலட்சியவாதத்துக்கு அநேகமாக இடமே இல்லை. கதைக்களங்கள் நடப்புலகிலிருந்து விலகாதவை. கதாபாத்திரங்கள் மண்ணிலிருந்து முளைத்தவர்கள்.

எனினும் ‘உயிர்த்தே’னை  இலட்சியவாதப் பண்பு வெளிப்படையாகத் தென்படும் ஒரே ஜானகிராமன் நாவல் என்றே கருதுகிறேன். பிற நாவல்களிலும் இலட்சியவாதத்தின் மங்கலான அடையாளங்கள் இருக்கின்றன. சில பாத்திரங்கள் மேலானது என்று தாம் நம்பும் புள்ளியைச் சென்றடைவதையே வாழ்க்கையாகக் கொள்கிறார்கள். பசிக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்று உறுதிகொள்ளும் பவானியம்மாள் ( அம்மா வந்தாள்) ,  பிரபஞ்சத்தின் சங்கீதத்தில் கரைந்து விட விரும்பும் ரங்கண்ணா, உடல் இச்சைக்கு மீறிய ஓர் உலகம் இருக்கிறது என்று பாபுவுக்கு உணர்த்தும் யமுனா ( மோகமுள்) – இவர்கள் இந்தக் கூற்றின்  எடுத்துக்காட்டுகள். இந்தப் பாத்திரங்கள் அடைய விரும்பும் ஒளிமயமான நிலைகளும் எதார்த்தத்துக்கு அப்பாற்பட்டவை. பசியே இல்லாத உலகம், இசைமட்டுமே இருப்பான சூழல், சங்கீத ஞானத்தின் தொட்டுவிடக் கூடிய எல்லை- இவையெல்லாம் எதார்த்தத்தின் வரம்பைக் கடந்த கனவுகள். இலட்சியங்கள். இவற்றையே இவர்கள் எட்ட முயல்கிறார்கள்.

தி.ஜானகிராமனின் எல்லா நாவல்களுக்கும் இந்த இயல்பைப் பொருத்திப் பார்க்க முடியும். அதை அவர் நுட்பமான மாற்றங்களுடன் கையாளுகிறார். பிற நாவல்களில் எதார்த்தமான வாழ்க்கையின் மீது இலட்சியவாதம் நிறுவப்படுகிறது. ஆனால் உயிர்த்தேனில் இலட்சியவாதத்தின் மீது எதார்த்தம் கட்டப்படுகிறது. நாவலைத் தனித்துப் பார்ப்பதற்கான முதன்மையான அளவீடு இது.

உயிர்த்தேன் நீங்கலான நாவல்களில் இடம்பெறும் இலட்சியவாதம் தனி மனிதர்களை மையமாகக் கொண்டது. எனில் உயிர்த்தேனில் செயல்படுவது சமூகத்தை மையத்தில் நிறுத்திய இலட்சியவாதம். ஒரு கிராமத்தின் தன்னிறைவுக்காகவே முக்கியப் பாத்திரங்கள் வினையாற்றுகின்றன. இதைத் தவிர்த்த பிற நாவல்களில் இடம்பெறும் கதைமாந்தர்களில் மையப் பாத்திரங்கள் தவிர மற்றவை அவற்றின் இயற்கையான குணங்களிலிருந்து அதிகம் விலகிச் செல்வதில்லை. உயிர்த்தேனில் இடம் பெறும்  அநேகமான எல்லாப் பாத்திரங்களும் இயல்பு மாற்றம் அடைகிறார்கள். ஊருக்கு நன்மை விளைக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக நின்றவர்கள் எல்லாரும் கதைமுடிவில் ‘மனந்திருந்திய மைந்தர்க’ளாகிறார்கள். இந்தக் காட்சி இலட்சியவாதத்தன்மை மிக்கதுதான். பிற நாவல்களில் அதிகம் இடம் பெற்றிராததும் கூட.

இந்த அம்சம் உயிர்த்தேனை தி.ஜானகிராமனின் பிற படைப்புகளிருந்து தனித்துக் காட்டுவதுபோலவே அன்று பொதுவழக்கிலிருந்த எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் தூண்டுகிறது. இந்த நாவல் 1966 ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வெளிவந்தது என்ற குறிப்பு இந்தத் தூண்டுதலுக்கு வலு சேர்க்கிறது. அந்தக் கால அளவில் இதழ்களில் தொடராக வெளியான கதைகளுக்கு இலட்சியவாத நோக்கே முதன்மையாக இருந்தது. நாட்டு விடுதலைக்குப் பிந்தைய காலத்தின் தேவையாகவும் வெகுசன இலக்கியத்தின் வணிகச் செலாவணிக்கான தவிர்க்க இயலாத இடுபொருளாகவும் இருந்தது. இந்தப் புறக்காரணிகளை உயிர்த்தேனில் எளிதாகக் காணமுடியும். புதிய சமூக வாழ்க்கைக்கான அமைப்புகளை உருவாக்கும் முனைப்பிலிருந்த சூழலை நாவல் பின்புலமாகக் கொள்கிறது வேளாண்மையில் தன்னிறைவு, கூட்டுறவுச் செயல்பாடு, சமூக நல்லிணக்கம் என்ற இலட்சியவாதச் சேர்மானங்கள் இடம் பெறுகின்றன. இந்தச் சேர்மானங்கள் அன்று வெளியாகிப் பிரபலம் பெற்ற நெடுங்கதைகளின் அடிப்படை. இந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான் உயிர்த்தேன் என்பதை எளிதில் ஊகிக்கலாம். வார இதழ்த் தொடர்களாக வெளியான கதைகளிருந்து  இந்த நாவலை மேம்படுத்திக் காட்டுவது தி.ஜானகிராமனின் கலைப் பிரக்ஞை தான்.

‘அம்மா வந்தாள்’ தவிர தி.ஜானகிராமனின் எல்லா நாவல்களும் பத்திரிகைத் தொடர்களாக வெளியானவை. எனினும் அவை அன்று நடைமுறையிலிருந்த தொடர்கதை இலக்கணத்துக்கு உட்படாதவை. ஓர் அத்தியாயத்தின் முடிவில் அடுத்த அத்தியாயத்துக்கான தூண்டிலைப் பொருத்தி வைக்காதவை.நாடகீயத் திருப்பங்கள் கொண்டிராதவை. கற்பனையான நிலப்பரப்பைக் காட்டாதவை. பொம்மைப் பாத்திரங்களைச் சித்தரிக்காதவை. செயற்கையான மதிப்பீடுகளை வலியுறுத்தாதவை. சுருக்கமாகச் சொன்னால் வழக்கமான தொடர்கதைகளின் வழியை ஏற்காதவை. வெளியீட்டு வசதியை முன்னிறுத்தி மட்டுமே தொடராக அச்சேறியவை.

இவ்வாறு விளக்கமாகப் பேசக் காரணம் இருக்கிறது. தொடர்களாக வந்தவை. எனவே தி.ஜானகிராமன் நாவல்கள் மாற்றுக் குறைந்தவை என்ற கருத்து இலக்கியச் சூழலில் நிலவுகிறது. அவரது படைப்புகளின் தர நிர்ணயத்துக்கான எடைக் கல்லாகவும் இந்தக் கருத்து அழுத்தம் பெற்றிருக்கிறது. அவரது படைப்புகளை மீண்டும் வாசிக்கும்போது இந்தக் கருத்து வலுவற்றதாகவே தென்படுகிறது. நாம் இன்று மகத்தானவை என்று பாராட்டி வாசிக்கும் தமிழ் நாவல்கள் பலவும் இதழ்களில் தொடராகவே வெளிவந்தவை என்ற புரிந்து கொள்ளலில் இந்தக் கருத்தை மறுக்கலாம். தொடராக எழுதப்பட்ட நெடுங் கதைகள் என்று வகைப்படுத்தினாலும் ஜானகிராமன் நாவல்கள் அவருக்கு மட்டுமேயான அடிப்படையான இலக்கியக் கூறுகளைக் கொண்டவை.

தி.ஜானகிராமன் எழுத்துக்களின் முதன்மையான கூறு அவற்றில் வெளிப்படும் தன்னியல்பு. கதைமாந்தர்கள் தன்னியல்பானவர்கள். அவர்கள் உழலும் சூழலில் எவ்வாறு இயங்குவார்களோ அவ்வாறே இயங்கும் சுதந்திரம் பெற்றவர்கள். ஆசிரியரின் கைச்சரடால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் அல்லர். இந்தத் தன்னியல்பு காரணமாகவே சிறு பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. வாசக கவனத்தில் நிலைக்கின்றன. இதே தன்னியல்புதான் பாத்திர உரையாடல்களிலும் தென்படுகிறது. இவற்றை விடவும் முக்கியம், ஆசிரியரின் இடையீடு ஒருபோதும் நிகழ்வதில்லை என்பது. வெகுசன எழுத்துக்கள் விலக்கி வைக்கும் இந்த இலக்கிய இயல்புகளைக்  கைவிடாமல் இயங்கினார் என்பதை யோசிக்கும்போது ஜானகிராமனின் கலைத்திறனை வியக்கத் தோன்றுகிறது.


2

ந்தப் படைப்பும் காலத்துடனும் இடத்துடனும் மனிதர்களுடனுமான மன வினையிலிருந்தே உருவாகிறது. தி.ஜானகிராமன் படைப்புகளைப் பொருத்தமட்டில் அவர் இடத்துடனும் மனிதர்களுடனும் கொண்டிருந்த பிணைப்பே வலுவானது. அவரது ஒன்பது நாவல்களில் உயிர்த்தேன், மரப்பசு ஆகிய இரண்டு மட்டுமே அவை எழுதப்பட்ட காலத்துடன் மிகுந்த அணுக்கம் கொண்டவை. சமகாலப் பிரச்சனைகளைப் பின்புலமாகக் கொண்டவை. பிற நாவல்கள் கடந்துபோன காலத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வருபவை. அதனாலேயே சமகாலப் பிரச்சனைகள் மீது அக்கறை கொள்ளாதவர் என்ற வீண்பழியைச் சுமக்க நேர்ந்தது. அவரது முதன்மையான அக்கறை மனிதர்கள் மீதும் அவர்களது செய்கைகள் மீதும் குவிந்திருந்தது. இடமும் காலமும் மாறக் கூடியவை. ஆனால் மனித குணங்கள் அடிப்படையானவை என்ற கருத்திலிருந்தே அவரது படைப்புகள் எழுகின்றன.

மேற்குறிப்பிட்ட இரண்டு நாவல்களைத் தவிர்த்த மற்ற நாவல்களின் கால, இடப் பின்புலங்கள் அவை எழுதப்பட்ட காலத்திலேயே பெரிதும் மாறிப் போனவை. இன்று அவை வாசிக்கப்படுவதும்  நினைக்கப்படுவதும் அவற்றின் மானுட விசாரங்களை முன்னிறுத்தித்தான். அக்ரகாரங்களும் வேத பாட சாலைகளும் இல்லாமற் போனாலும் அலங்காரத்தம்மாள்களும் ( அம்மா வந்தாள் ) கலப்பு மணத்தில் பிறந்த பெண்ணுக்குத் திருமணத்துக்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் ‘இதற்குத்தானா?’  என்று கேட்கும் யமுனாக்களும்  ( மோகமுள் ), நிலவுடைமை மரபின் இறுக்கங்கள் தளர்ந்த பின்னும் அண்ணியின் வேட்கைக்கு அஞ்சும் சட்டநாதன்களும் ( செம்பருத்தி ) நிச்சயம் இருக்கக் கூடும். அவர்களின் உளச் செய்கைகள் படைப்புகளில் பேசப்படும். இவற்றில் காலமும் இடமும் மங்கி விடுகின்றன. ஆனால் சம காலத்தின் எதிர்வினையாக எழுதப்பட்ட உயிர்த்தேனும் மரப்பசுவும் இன்னும் காலத்தின் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மிகை நவிற்சியாகத் தோன்றக் கூடும்: எனினும் இந்த இரு நாவல்களையும் காலத்தை முன்  உணர்த்தியவை என்று சொல்லலாம்.

தி.ஜானகிராமன் நாவல்களில் வரும் பெண்கள் பொதுவாக சாதாரணமானவர்கள் அல்லர். பெண்ணுக்கு என்று சமூகமும் மரபும் வரையறுத்து வைத்திருக்கும் எல்லைகளை மீறுபவர்கள். ஆனால் அதைப் பிரகடனம் இல்லாமல் செய்பவர்கள். உயிர்த்தேனின் செங்கம்மா ஆண்கள் வகுத்து வைத்திருக்கும் விதிகளை மீறுபவள்தான். எனினும் அதைப் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை. அவளைப் போன்றவளான அனுசுயாவும் நியதிகளைக் கேள்வி கேட்பவள்தான். அவளும் தன் நிலையை வலுவாக வெளிப்படுத்துவதில்லை. ‘எல்லாரும் மனுஷங்கதானே, எனக்கு எல்லாரையும் அணைச்சுக்கணும் போலத்தான் இருக்கு. எல்லார் கிட்டவும் அப்படி இருக்கறதுக்காகத்தான் நாம பொறந்திருக்கோம்’ என்ற சுய வாக்குமூலமாகவே அந்த நிலை வெளிப்படுகிறது.உயிர்த்தேன் வெளிவந்து ஏறத்தாழப் பதிற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல் ‘மரப்பசு’. மையப் பாத்திரமான அம்மணி உரிமை உணர்த்தலைத் தன்னியல்பான ஒன்றாகவும் அதேசமயம் மீறலைப் பிரகடனமாகவும் கொள்கிறாள். இதை நாவல் உருவான காலத்தின் விளைவாகவே கருதுகிறேன்.

1970 களை ஒட்டிய கால அளவில்தான் புதிய கருத்தாக்கங்கள் அறிமுகமாயின. அவற்றையொட்டி உலகம் தழுவி நிகழ்ந்த உரையாடல்கள் நமது சூழலிலும் எதிரொலித்தன. பெண் உரிமை குறித்த விவாதமும் அவற்றில் ஒன்று. பெண்ணின் உலகைச் சித்தரிப்பதில் பெரும் அக்கறை காட்டிய படைப்பாளியான தி.ஜானகிராமன் அதைத் தனது சிந்தனைக்குள் கொண்டு வந்தது பொருத்தமானது என்று யூகிக்கிறேன். சமகால நிகழ்வுகளை அச்சுப் பிசகாமல் படைப்புகளில் இடம்பெறச் செய்தவர் அல்ல; எனினும் அந்த நிகழ்வுகளின் சாயலைக் கதையின் போக்கில் பதிவு செய்தவர். கறுப்பு முக்காடு போட்ட தெரு விளக்குகள் என்று  உலக யுத்தத்தையும் நாளிதழ்ச் செய்தியின் வழியாகக் காந்தியின் மறைவையும் ( மோகமுள் ), கிண்டலான உரையாடலில் சுயமரியாதை இயக்க அறிமுகத்தையும்  ( செம்பருத்தி ) சித்தரிக்கிறார். இது காலத்துடன் அவர் கொள்ளும் உறவு. இதைச் சான்றாகக் கொண்டால் மரப்பசு நாவலின் உருவாக்கம் காலத்துடனான நெருக்கத்தின் விளைவு என்று காண முடியும். இதை நிறுவுதற்கான வலுவான ஆதாரத்தை நாவலிலிருந்தே எடுத்துச் சொல்லவும் முடியும். புதிய கருத்தாக்கங்கள் தீவிர விவாதங்களுக்குள்ளான சூழலில் மேற்கோள்களாகச் சொல்லப்பட்ட பெயர்கள், நிகழ்வுகள் நாவலுக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

மரப்பசு நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் தன்னையே இவ்வாறு கேள்வி கேட்டுக் கொள்கிறாள் அம்மிணி. ‘’  நீ யார்? ப்ராய்ட், யுங், காமு, ஸார்த், பிண்ட்டர், அடமோவ், ப்ரெக்ட், அயொனஸ்கு என்று அடுக்குகிற பேர்வழியா?’’ இந்த வாக்கியத்தில் இடம்பெறும் பெயர்கள் எல்லாமும் எழுபதுகளை ஒட்டிய காலப்பகுதில் இந்தியச் சூழலிலும் தமிழகச் சூழலிலும் விவாதிக்கப்பட்டவை. இவற்றை நாவலுக்குள் எடுத்தாள்வதன் வாயிலாகத் தி.ஜானகிராமன் நிகழ் காலத்துடன் உறவைப் புலப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. இதுபோன்ற செய்கை அவரது முந்தைய நாவல்கள் எதிலும் இல்லை. பின்னர் எழுதிய நாவலிலும் இல்லை. எனவே இதை வலுவான சான்றாகக் கருதுகிறேன். இதில் கலாச்சாரப் பின்புலத்தின் ஊடாகக் காலத்தை அடையாளப் படுத்துகிறார். ‘உயிர்த்தேனில் சமூக நிகழ்வின் பின்னணியில் காலத்தைப் பதிவு செய்கிறார்.

உயிர்த்தேன் நாவலில் சித்தரிக்கப்படும் காலம் விடுதலைக்குப் பிந்தையது.  நாடு தனக்கான விதியைத் தீர்மானித்துக் கொள்ள முனைந்திருந்த காலம். விடுதலைப் போராட்டக் காலத்தின் பொது உணர்வாகச் சுதந்திர வேட்கை இருந்தது. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எல்லாப் படைப்புகளிலும் அந்த உணர்வு ஊடுருவியிருந்தது. விட்டு விடுதலையாக நிற்கும் கனவேக்கம் பரவியிருந்தது. விடுதலைக்குப் பின்னான காலத்தில் அந்தக் கனவு கலைந்து சிதைவதைக் கண்முன் காண நேர்ந்தது. புதிய நடைமுறைகள் பழைய கனவின் தொடர்ச்சியல்ல என்ற உண்மை அம்பலமானது. இது நுண்ணுணர்வுள்ள படைப்பாளிக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கலாம்.  தனது கையறு நிலையை உணர்த்தியிருக்கலாம். இந்த அதிர்ச்சியும் இழப்பும் படைப்பாளியை நினைவேக்கத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.

மேற்சொன்ன இவையெல்லாம் என் வாசக யூகங்கள். ஆனால் அவற்றை நிறுவுவதற்கான தடயங்களை நாவலுக்குள்ளிருந்தே திரட்ட முடிகிறது. விடுதலைக்குப் பின்பு சுதந்திரமும் தன்னிறைவுமான வாழ்க்கை மலரும் என்ற நம்பிக்கைக்குப் புதிய சமூகக் கோளாறுகளும் மனிதர்களின் தன்னலப் பேராசைகளும் மங்கல் ஏற்படுத்துகின்றன. கனவு கலைந்த ஏமாற்றத்தில் படைப்பாளிக்கு இரண்டு வழிகள் எஞ்சுகின்றன. ஒன்று: தான் போற்றிய விழுமியத்தைப் பற்றிய நினைவேக்கத்தில் ஆழ்வது. மற்றது: தனக்குப் பழக்கப்பட்ட மையப் பொருளிலேயே முன் நகர்வது. இந்த இரண்டின் சரிவிகிதப் படைப்பாகவே ‘உயிர்த்தேனைப் பார்க்கிறேன். பழைய பொருட்படுத்தத் தகுந்த நன்மரபுக்கான ஏக்கத்தையும் தனக்கு ஆகி வந்த கதைப் பொருளான ஆண் – பெண் விழைவின் மர்மங்களை அலசும் மனப்பாங்கையும் நாவலில் தி.ஜானகிராமன் திறம்படக் கையாளுகிறார்.

மெட்ராஸில் பணமும் செல்வாக்கும் நிறைந்த பரபரப்பான வாழ்க்கை நடத்திய பூவராகனுக்கு ஆறுகட்டி கிராமத்தின் நிம்மதியான வாழ்க்கை மீது நாட்டம் ஏற்படுகிறது. அது அவன் அப்பா சொல்லிச் சொல்லித் திரண்ட கனவு. சொந்த ஊரோடு வாழவந்தவனுக்கு முதலில் ஊர் விருந்தாளிக் காட்சியாகக் கவர்ச்சியளிக்கிறது. ‘’ ஜோரான ஊருடா’’ என்று வியக்கவைக்கிறது. ஊர்க் குடிமகனான பின்னர் பின்னமான தோற்றத்தைக் காட்டுகிறது. ஊர் பிளவுபட்டுக் கிடக்கிறது. ‘’ இருக்கிறது முப்பது வீடு. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மூலையைப் பார்த்துகிட்டு முப்பது கட்சி கிளப்பி விட்டிருக்கான்’’ என்ற நிலவரம் விளங்குகிறது. அப்பாவின் ஆசையிலிருந்து வேர் பிடித்துத்  தனக்குள் கனவாக முளைத்த ஏக்கத்தை ஊர் முழுக்க நிழல் பரப்பும் விருட்சமாக்கும் செயல்பாட்டை மேற்கொள்கிறான்.

பூவராகனை மையமாகக்கொள்ளும் நாவலின் இந்தத் தளத்தைப் படைப்பாளியின் நினைவேக்கத்தின் விளைவாகவே எண்ணுகிறேன். முன்னைப் பெருவாழ்வின் நன்மைகளைப் பற்றிய ஏக்கத்தைத் தி.ஜானகிராமனின் எல்லா நாவல்களிலும் பார்த்திருப்பதால் இதை அவரது இயல்பு என்றே சொல்ல முடிகிறது. பெரும்பாலும் தனி மனிதர்களின் ஏக்கங்கள் தனி மனிதர்களிடமே நிறைவையோ நிறைவின்மையையோ அடையும் வகையில் அவரது நாவல்கள் அமைந்திருக்கின்றன. விதிவிலக்கு உயிர்த்தேன். தனியொருவனின் கனவு, ஊரின் சுபிட்சமாகிறது  நாவலில். பிற நாவல்களிலிருந்து உயிர்த்தேன் வேறுபட்டது என்று குறிப்பிட இதுவும் காரணம்.

தி.ஜானகிராமன் நாவல்களின் பிரதான தளம் மனித உறவுகள் மீதான கவனமே. அந்த அக்கறையின் பகுதியே ஆண் பெண் விழைவும் அதன் சிக்கல்களும். ஒருவகையில் அந்தப் பகுதியே அவருக்குப் பழக்கப்பட்ட மையப் பொருளாகக் கருதப்படுகிறது. உயிர்த்தேனும் இந்தக் கருத்திலிருந்து மாறுபட்டதல்ல. பூவராகனுக்கு செங்கம்மாவின் மீது ஏற்படும் ஆரம்ப ஈர்ப்பும் பழனிவேலுக்கு அவள்மேல் தோன்றும் மாளாக் காதலும் ( அல்லது தீராக் காமமா? ) நாவலின் இன்னொரு தளத்தைக் காட்டுகின்றன. பிற நாவல்களில் ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் கொள்ளும் ஈடுபாடும் விழைவும் காதலும் காமமும் அந்த இரு தரப்பினருக்குள்ளேயே முழுமையடைகின்றன. பாபுவின் வேட்கை யமுனாவை அடைந்ததும் பூர்த்தியாகிறது ( மோகமுள்). இந்துவின் காதல் அப்புவை வரித்துக் கொண்டதும் முற்றுப் பெறுகிறது ( அம்மா வந்தாள் ). உயிர்த்தேனில் மட்டும்தான் இந்த விழைவு மனித வாஞ்சையாகப் பேருருவம் கொள்கிறது. செங்கம்மா சூழ்நிலை காரணமாகக் கார்வார் கணேசப் பிள்ளைக்கு மனைவியாகிறாள். தனது ஈடுபாட்டையும் காதலையும் காமத்தையும் அவருக்கே அளிக்கிறாள். அவளை ஆவேசத்துடன் அடைய நினைக்கும் பழனியிடம் இப்படிச் சொல்கிறாள். ‘’ நான் எனக்கு இஷ்டப் பட்டவங்களுக்கோ இஷ்டப் படறவங்களுக்கோ கிடைக்கிற மாதிரி இல்லையே?’’. அது அவளுடைய தன்னிலை விளக்கம். ஒருவேளை அவளுடைய சூழல் வேறாக அமைந்திருந்தால் பழனிவேல் மீது காதல் பிறந்திருக்கவும் கூடும். நாவலின் உச்சமான தருணத்தில் அவளே அவனைத் தேடிச் செல்கிறாள். அவனிடம் ஊர்மீதான பாசத்தின் பேரில், பூவராகனின் தன்னலமற்ற மனப்பான்மையின் சார்பில் விவாதிக்கிறாள். முதலில் அவள் காலில் விழுந்து கும்பிடும் பழனி பின்னர் அவளை அணைத்துக் கண்களில் முத்தமிடுகிறான். இரும்புப் பிடிக்குள் திமிறும் செங்கம்மா விருப்பமில்லாமல் அதை ஏற்கிறாள். அவனை உதறி விட்டு ஓடியிருக்கலாம். கூச்சலிட்டிருக்கலாம். ஆனால் இவை எதையும் செய்யாமல் அங்கேயே நிற்கிறாள். அவள் தரப்பாக  இரண்டு நியாயங்களைச் சொல்ல முடியும். இந்தக் காம அலைச்சலின் காரணமாகவே பழனி ஊருக்கு எதிரியாக இருந்திருக்கிறான். ஊரின் நன்மைக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறான். அவனுடைய காமத் தணிப்புக்கு ஒப்புக் கொடுப்பதன் மூலம் ஊருக்கு நல்லது செய்ய அவளால் முடிகிறது. ‘இது இவ்வளவுதான்’ என்று பழனியின் வேட்கையைத் தோல்வி காணச் செய்யவும் முடிகிறது.

இந்தக் கணத்தை உயிர்த்தேன் நாவலின் ஒளிமிக்க கணமாகக் கருதுகிறேன். இயல்பாகவே மனிதர்கள் மீது கரிசனமுள்ளவளான செங்கம்மா கருணை மிகுந்தவளாக மாறும் அற்புதப் பொற்கணம். தற்செயலாக செங்கம்மாவுக்கு வாய்க்கும் இந்தப் பொற்கணத்தை எல்லாப் பொழுதிலும் வெளிப்படுத்துகிறவளாக வந்து சேர்கிறாள் அனுசூயா ‘’ஸ்வாமி நமக்கு ஒண்ணே ஒண்ணு தான் கொடுத்திருக்கு. அன்பாயிருக்கச் சொல்லிக் கொடுத்திருக்கு. இது எல்லாருக்கும் எங்கேயும் முடியும்’’ என்ற அவளுடைய வார்த்தைகள் வெளிப்படுத்துவது அனுசுயாவை மட்டுமல்ல; இந்தச் சொற்களைக் கேட்டு விட்டு ‘’நான் உங்க மாதிரி பார்த்ததில்லே அம்மா’’ என்கிற கணேசபிள்ளையிடம் ‘’பொய்… இதோ இருக்கே’’ என்று செங்கம்மாவைக் காண்பிக்கிறாள்.  அவளுடைய சொற்களின் இன்னொரு நிஜ வடிவத்தை. தி.ஜானகிராமனின் நாவல்களில் இடம் பெறும் ஆண் பெண் விழைவு அதைக் கடந்தே விரிகிறது. அந்தச் செயல்பாட்டின் துலக்கமான சான்று உயிர்த்தேன்.


3

மகாலத் தொடர்புடைய நாவல் என்று ‘உயிர்த்தேனை’ நிறுவ இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம்.

ஆறுகட்டி கிராமத்தின் இருப்புக்கும் வீழ்ச்சிக்கும் ஆண்களே காரணம்.  ஊர்ப் பணத்தைக் கையகப்படுத்தியிருக்கும் பழனிவேலு அதைத் தர மறுக்கிறான். திருநாவுக்கரசு வீம்புக்காக விளைநிலத்தைக் கோரை மண்டிய தரிசாகக் கிடக்க விடுகிறான். ஊர்க்காரர்களின் இழுபறியால் கோவில் சிதிலமடைந்து நிற்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் களைய முயல்கிறான் பூவராகன். அதற்கு அவன் தேர்ந்தெடுப்பது ‘பிறத்தியாருக்கு உழைக்கவே ஜன்மம் எடுத்த’ செங்கம்மாவை. தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளும் செங்கம்மா பின்னர் ஏறத்தாழ ஊர்த் தலைவியாகவே மாறுகிறாள். கோவில் கும்பாபிஷேகத்துக்கும் கூட்டு வேளாண்மைக்கும் ஆட்களை ஈடுபடுத்துகிறாள். அதுவரை ஊரைப் பற்றிக் அக்கறை காட்டியிராத ஆண்கள் ஊர்ப் பாசம் மிகுந்தவர்களாகிறார்கள். செங்கம்மாவின் தலைமையை மனமார ஏற்றுக் கொள்கிறார்கள்.

பெண்ணிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது இந்த நாவலுக்கு ஆதாரமான நிகழ்வுகளின் காலத்திலும் எழுதப்பட்ட காலத்திலும் அரியதாகவே இருந்திருக்க முடியும். அந்தக் கால அளவில் நடைபெற்ற தேர்தல் பற்றிய தகவல்களிலும் அவ்வாறே காணக் கிடைக்கிறது. ஆனால் பெண்கள் சமூக அதிகாரத்துக்காக உரிமை கோரிய நிகழ்வுகளும் பதிவு பெற்றுள்ளன. ஒரு பெண் பாத்திரத்தை சமூகத்தின் மையமாக நிறுவ தி.ஜானகிராமன் முற்பட்டது இந்தச் சமூக அவதானிப்பிலிருந்துதான் என்று எண்ணுவது காலப் பொருத்தமாகவே தோன்றுகிறது. மேலான படைப்பு அதன் காலத்தைப் பதிவு செய்வதுடன் அதற்கு அப்பாலும் செல்கிறது. வரவிருக்கும் காலத்தின் அடையாளத்தை முன்னுணர்கிறது. இதைப் படைப்பின் விளைவுகளில் ஒன்றாகக் கருதினால் உயிர்த்தேனை அத்தகைய படைப்பாகவும் சொல்லலாம். 1990 களுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த பஞ்சாயத்து அமைப்புச் சட்டமும் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் உருவாக்கிய சமூகச் சூழலைத் தேர்ந்த கற்பனையாளர் முன்கூட்டியே யூகித்திருப்பதையும் உணரலாம்.

இந்தப் பெண்ணுயர்வு நிலைதான் பூவராகவனுக்கு செங்கம்மாவிடம் வழிபாட்டு உணர்வையும் பழனிவேலுக்கு ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது. ஆறுகட்டி கிராமத்தின் கோவில் கும்பாபிஷேகம் செங்கம்மாவின் வழிகாட்டலில் நடக்கவிருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. தான் சொந்தம் கொண்டாட இச்சை கொண்ட ஒருத்தி ஊர் முழுமைக்கும் பிரியமானவளாக மாறுவதை அவனால் ஏற்க முடிவதில்லை. அந்த ஏமாற்றம். தன்னைத் தேடிவந்து தன் அணைப்பில் திணறியும் ஊர்ப் பொதுமைக்காக அதைச் சகித்துக்கொண்ட உறுதி. இரண்டும் அவனை வீழ்த்துகின்றன. வீழ்ச்சியின் முடிவாகத் தற்கொலை செய்துகொள்கிறான். நான் எல்லாருக்கும் அன்பானவள்; ஆனால் யாருக்கும் உடைமையல்ல என்று மறைமுகமாகக் காட்டுகிறாள் செங்கம்மா. இது பிரகடனமற்ற அவள் இயல்பு. இதையே வெளிப்படையாக முன்வைக்கிறாள் அனுசூயா. ஒரே குணாம்சத்தின் அகமும் புறமும் அவர்கள் என்பது பொருத்தமாக இருக்கலாம்.

பிரபஞ்சத்தையே தழுவி அணைத்துக்கொள்ளும் பேரன்பைப் பற்றியே தி.ஜானகிராமன் பேச விரும்புகிறார். அதன் உருவகங்கள்தாம் செங்கம்மாவும் அனுசூயாவும். இந்தச் சித்தரிப்பில் நிறைவு காணாமல்தான் இருவரையும் ஒன்றாக்கிய அம்மணியை மரப்பசுவில் உருவாக்கினாரோ என்னமோ?

இவையெல்லாம் உயிர்த்தேன் நாவல் வாசிப்பின் பல்வேறு தருணங்களில் திரண்ட கருத்துக்கள். இப்போது தொகுத்துப் பார்க்கும்போது சுயவியப்பை அளிக்கிறது. நாவலுக்குக் கட்டியம் கூறலாகத் தி,ஜானகிராமன் எடுத்தாண்டிருக்கும் செய்யுளின் வரி இது. ‘ஞாலமும் அன்பும் ஒன்று’. இந்த ஒற்றை வரியின் விளக்கமே உயிர்த்தேன் என்று காண விரும்புகிறேன்; இதில் பொலிவது சந்திரப் பிறையின் செந்நகை என்றும்.


 –  சுகுமாரன்

குறிப்பு: இந்தக் கட்டுரை ‘கல்யாணராமன்’ தொகுக்கும் “ஜானகிராமம்’” என்ற தி.ஜானகிராமன் பற்றிய ‘படைப்பாவணப் பெருந்தொகுதி’க்காக எழுதப்பட்டது.


3 COMMENTS

  1. தி.ஜா. அவர்களின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் கவனமாகத் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தி.ஜா.வின் இலக்கிய மாண்பையும், பாத்திரப் படைப்பையும் அலசும் விதம் அருமை. பாராட்டுகள்.

  2. தி.ஜா எழுத்து என்னை வெகுவாக பாதித்தது. ஒன்று பட்ட தஞ்சை மண்ணின் மொழியில் கதை மாந்தர்கள் இருப்பதாக அவர் எழுத்தின் மீது அதிக ஈடுபாடு வந்தது ஆகவே அவரின் எழுத்துக்களை தேடித்தேடி சேகரித்து படித்து வருவதோடு அப் புத்தகங்களை பைண்டிங் செய்து பாதுகாத்து வருகின்றேன். அவரின் மோகமுள் செம்பருத்தி மற்றும் சிறுகதைகள் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்.மோகமுள்ளை பல முறை படித்துள்ளேன். அவரின் எழுத்து சாகாவரம் பெற்றவை. ஆழிப்பேரலை எங்கள் ஊரை தாக்குதல் (வேதாரண்யம்) தொடங்கிய தருணத்தில் புத்தகங்கள் அதுவும் குறிப்பாக விழாவின் என்னவாகும் என்றே கவலைபட்டேன்.குடும்பத்தினர் பற்றி கவலை இல்லாமல் இருந்ததை என் மனைவி குழந்தைகள் இப்போதும் அதை குறித்து பேசுவது உண்டு

  3. சுகுமாரன் கவிஞர் என்பதால் இக்கட்டுரைக்கு கவித்துவமான தலைப்பிட்டிருக்கிறார். உயிர்த்தேன் நாவலின் வழி அன்புதன்னில் வையம் செழிக்கும் என்பதை நிறுவியிருக்கிறார்.இக்கட்டுரை ஜானகிராமனின் நாவல்களை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.இம்மட்டிலும் இக்கட்டுரை வெற்றியே.வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.