கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25, 1970 அன்று ஓர் இராணுவக் கேந்திரத்தில் கண்டன. துண்டிக்கப்பட்ட அவரது தலை பல வருட உடற்பயிற்சியின் மூலமாக முறுக்கேறியிருந்த அவரது உடலைப் பார்த்திருந்தது. அவருக்குப் பொருத்தமான உருவகப் பண்பு நிறைந்த மரணம், இராணுவக் கேந்திரம்/துண்டிக்கப்பட்ட தலை/செப்புக்கு செய்யப்பட்டு வெளியே தொங்கும் குடல்/சீருடை/புகழ் மற்றும் நித்தியத்துவம்.
ஹவியர் மரியாஸ் (Javier Marias), மிஷிமாவின் மரணம் அதுவரையிலும் அவர் செய்து வந்த பல முட்டாள்தனங்களையும் மறக்கச் செய்ததோடு, அவரது வாழ்வின் உச்ச நிகழ்வான மரணத்தின் மீதான கவன ஈர்ப்பாகவே, இடைநில்லாத பகட்டாரவாரங்கள் அனைத்தையும் செய்தார் என்கிறார். மிஷிமாவின் எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு அவர் சொன்னது உண்மைதான் எனப் புரியும்.
மார்கிஸ் தே சேட், ஹென்ரி மில்லர், ழார் பத்தாய், ழான் ஜெனே, ஆந்த்ரே ழீடு, ஃப்ரெட்ரிக் நீட்ஷே, வில்லியம் பர்ரோஸ், யுகியோ மிஷிமா ஆகியோரை வாசிப்பவர்கள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. மேற்சொன்ன அனைத்து மேதைகளும் மனித வாழ்வின் சராசரித்தனங்களின் மீது அலுப்புற்றவர்கள் மட்டுமல்ல சமூகமாகத் திரண்டு வாழ்வதினால் கட்டுப்படுத்தப்பட்டு வீணாகும் மனித ஆற்றலின் மீது ஒவ்வாமை உடையவர்கள். ஆற்றலின் பெருவெடிப்பால் வலுவற்றவை அனைத்துமே நீங்கி வலுவுள்ளவை மட்டுமே நிரம்பியிருக்கும் நடைமுறை சாத்தியமற்ற ஓர் அழகிய உலகைக் கற்பனை கண்டவர்கள். வன்முறை/பாலுறவு/மரணம் எனும் திரித்துவம் அளிக்கும் ஒப்பற்ற கிளர்ச்சியை வாழ்வின் ஒவ்வொரு நொடியின் அரங்கிற்குள்ளும் இசையாகக் கேட்க விரும்பியவர்கள்.
நீட்ஷேவின் மூளைக்கோளாறுகள் அனைத்தும் அவரது வரன்முறையற்ற சுயமைதூனத்தினால் உண்டானவை என்கிறார், ரிச்சர்ட் வாக்னர். மிஷிமாவோ, குவெடோ ரெனி வரைந்த புனித செபஸ்டியனின் ஓவியத்தைப் பார்த்தே தனது முதல் சுயமைதூனத்தை செய்ததாகப் பதிவு செய்கிறார். நாம் இதனை ஆரம்பகட்ட அறிகுறிகள் உடைய பிணப்புணர்ச்சி விழைவு எனக் கொள்ளலாம். எந்த மனிதனும் தன் முன்னே நடனமாடும் மரணத்தைக் கண்டு நடுங்கும் ஒரு புனிதரின் முக்கால் நிர்வாண ஓவியத்தைக் கண்டு தனது உளப்புணர்ச்சிக்கு ஏதுவாக உழைப்பின் கருவியான கரத்தினை ஒரு பாலுறுப்பாக உருமாற்றும் பயணத்தைத் துவங்க மட்டான், மரணத்தில் பாலுறவின் உச்சத்தக் கற்பனை செய்பவர்களைத் தவிர. ழார் பத்தாய் மரணத்தையே ஆக எரோடிக்கான அனுபவம் எனச் சொல்வதை ஒட்டியே இதனைப் புரிந்து கொள்ளலாம். மிஷிமாவின் பயணமோ ஒரு புனிதரின் உடலிலிருந்து துவங்கி தன்னுடலையே அறுத்துக் கொள்ளும் எரோடிக் அனுபவத்தில் உச்சமடைந்த ஒன்று.
The Sailor Who Fell From Grace with the Sea, எனும் சிறு நாவலின் கவித்துவமிக்க சொற்றொடர்களின் ஊடாக, நாவலின் POVவான நொபுருவினால் ஒரு நாயகனாகப் பார்க்கப்படும் ரியுஜீ கொல்லப்படும் இறுதிக் காட்சி வரை நாம் தசைகளின் உள்ளே குறிப்பாக ஆண் உடலின் உள்ளே திரண்டிருப்பதாக நம்பப்படும் ஆற்றலின் தடுமாற்றத்தைப் பார்க்கலாம். ரியுஜீ எனும் மாலுமி, நொபுரு எனும் 13 வயது சிறுவனின் விதவைத் தாயாரான ஃபுசாகோவைக் கண்டு, காதலுற்று, மெய்கலந்து, மணம் செய்ய முடிவு செய்து, இறுதியில் நொபுருவின் வகுப்புத் தோழர்களான, அந்த வயதிலேயே வாழ்வின் பொருளின்மையை வன்முறையே ஈடு செய்ய முடியுமென்ற புரிதலை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படும் சிலரால் கொல்லப்படுகிறான்.
ழான் ஜெனே எவ்வாறு நவீன பிரெஞ்சு வாழ்வின் மீது குறைமதிப்பு கொண்டிருந்தாரோ அதைப் போன்றே மிஷிமா, இரண்டாம் உலகப் போரின் தோல்வியினால் மனங்குன்றியிருந்த ஜப்பானிய வாழ்வின் மீதும் குறைமதிப்பைக் கொண்டிருந்தார். முன்பு குறிப்பிட்ட அனைவருமே ஒரு வகையில் மேற்கத்திய ஜனநாயத்தின் சராசரிப் பண்புகளைக் கண்டு சீற்றமடைந்தவர்கள். மிஷிமா, ஜப்பானிய மன்னரிடமே அதன் பாரம்பரியம் எஞ்சியிருக்கிறது எனப் பார்க்கிறார். இயல்பிலேயே ஜனநாயகம் பல சராசரித்தனங்களை உள்ளடக்கியது. அனைவருக்கும் பகிரப்படும் நோக்கில் அனைத்தும் குறைவாகவே கிடைக்கக் கூடியவற்றைக் கொண்டது. Democrary is one way of accepting the multitude of any society, but by doing this it tries to keep its growth horizontal. மிஷிமா, வாழ்வின், சமூகத்தின் செங்குத்து வளர்ச்சியைக் காண விரும்பியவர். ஒரேயொரு அமைப்பு மட்டுமே விண்ணைத்தொட்டு நிற்க, மற்றவையனைத்துமே அதன் முன்பு மண்டியிடும்.
பூனையின் உடல் ஒவ்வொரு பகுதியாகக் கிழிபடும் நீண்ட காட்சியை நாவலில் எழுதும் மிஷிமா, தோல் நீங்கிய, எவ்வித வேறுபாடுகளுமற்ற தசையிலேயே வாழ்வின் நிர்வாணத்தைக் காண்கிறார். தனது தாயும், அவளது புதிய காதலனும் அவளது படுக்கையறையில் நிர்வாணிப்பதை சிறு துளையின் வழியாகக் காணும் நொபுரு, பூனையின் தோலற்ற உடலே முழுமையான நிர்வாணத்தை அடைந்திருப்பதை தோல்போர்த்திய அவர்களது அரைகுறை நிர்வாணத்தோடு ஒப்பிடுகிறான். காண்கிறான். நாவலின் ஐந்தாவது பகுதியில் தோலுரிக்கப்பட்டு, ஒவ்வொரு அங்கமாக வெட்டப்படும் பூனையைக் கண்டு இவ்வாறு சிந்திக்கிறான்: `The liver, limp beside the corpse, became a soft peninsula, the sqaushed heart a little sun, the reeled-out bowels a whitle atoll, and the blood in the belly the tepid waters of a tropical sea. Death had transfigured the kitten into a perfect, autonomous world.’ ஒவ்வொரு மனிதரும் தன்னாட்சி உலகிற்கான உள்ளார்ந்த வேட்கையோடு இருப்பவர்கள். பொருட்களும் அப்படியொரு இயங்குதளத்திலேயே முழுமை பெறுகின்றன. மிஷிமாவைப் பொறுத்தவரை இந்தத் தன்னாட்சி உலகின் எல்லையாக இயங்குபவை வன்முறையும், அழகிற்கான கனவும், கொப்பளிக்கும் ஆற்றலும், முழுமையுமேயாகும்.
உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்களான ரியோனசுகே அகுதகவா, யசுவனாரி கவபட்டா, கோபே அபே, ஹருகி முரகாமியோடு சேர்த்து நாம் தமிழில் மிஷிமாவையும் மொழிபெயர்த்திருக்கிறோம். ஜுனிசிரோ டானிசகியைத் தவிர. இவ்விதத்தில் மட்டுமே நாம் மற்ற மொழி இலக்கியங்களோடு இணைந்திருக்கிறோம். மேற்கையும், கிழக்கையும் அற்புதமாக இணைந்த வளர்ந்த ஒரு நாடாக ஆசியக் கண்டத்தில் ஜப்பானே இருக்கிறது. மாபெரும் போர், அணுகுண்டு வெடிப்பு, தொடர் நிலநடுக்கம், அணுக்கதிர் கசிவு, நிலத்தடி நச்சுவாயு வெடிப்பு என அதன் வரலாறெங்கிலும் மரணத்தின் கைகள் ஜப்பானை தொடர்ச்சியாக உலுக்குகினறன. அத்தனையும் மீறி, ஜப்பான், அழகிய கார்களை, மின்னணுச் சாதனங்களை, இசைக்கருவிகளை, தொழில்நுட்பத்தை உலகிற்கு வழங்கியிருக்கிறது. வாழ்விற்கான தீராத துடிப்பையே தனது தலை வெட்டப்பட்ட உடலின் துடிப்பிலும் மிஷிமா பார்த்திருப்பார். உடலின் துடிப்பையே தனது சொற்களின் துடிப்பாக வடித்த மிஷிமா அவர் எழுதிய நாடகமொன்றில் நாற்பத்தியாறு கதாபாத்திரங்களாக அவரே நடித்தார். நாம் அவரது அனைத்துப் பாத்திரங்களின் வழியாகவும் அவரையே பார்க்கிறோம்.
பால்கனியில் நின்று மிஷிமா நிகழ்த்திய இறுதி உரையை யாராலும் கேட்க முடியாமல் போனதற்கு கீழே நின்று வேடிக்கை பார்த்த பலரும், அவரை வசவுச் சொற்களால் ஓயாது திட்டியதே காரணம் என்கிறார் மரியாஸ். மேற்சொன்ன நாவலை வாசித்த பிறகு, அவரது மற்ற படைப்புகளிலும் தொடரும் வாசிப்பின் இடையிடையே எனது ஜப்பானியப் பிறப்பொன்றில், இச்சிகயா இராணுவத் தலைமையகத்தின் வெளியே நெருக்கித் தள்ளும் கூட்டத்தில், காதில் விழாத ஓர் உரையை ஆற்றும், பழுப்பு வண்ண சீருடையணிந்த மிஷிமாவை வசைச் சொற்களால் திட்டும் ஒருவனாக இருந்திருப்பதைப் பார்க்கிறேன்.
நாவலில் மாலுமியான ரியுஜீ, பெருஞ்சிறப்பைத் தேடும் ஒருவனாக இருக்கிறான். எத்தனை முறை எதிர்கொண்டாலும் ஒவ்வொரு புயலும் புதியதாகவே இருக்கிறது என்கிறான். கடலின் இந்த புதியதன்மையை நிலத்தில் அவனை ஒரு கணவனாக, ஒரு தந்தையாக மாற்றும் வாழ்வில் காண முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத வனவிலங்கை வீட்டு விலங்காக பழக்கப்படுத்துவதைப் போல, வாழ்வை unbridled parade of masculinityயாகப் பார்க்கும் அவனால் அந்த வீழ்ச்சியை (ஓர் ஆண் ஒரு தந்தையாக மாறுவதே அவனது ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ஆகப் பெரிய பயிற்சி) ஒப்புக் கொள்ள முடியாமல் அதே சமயம் அவனது இந்த மாற்றத்தை மெள்ள மெள்ள உணர்கிறான் (வர்த்தகம் சம்பந்தமான் நூல்களைப் படிக்கிறான்). நாவலில் அந்த சிறுவர்கள் தந்தைகளை இவ்வாறு கேலி செய்கிறார்கள்: `ஆணிலிருக்கும் அத்தனை அசிங்கங்களையும் தாங்கிய தீமையே தந்தைகள். நல்ல தந்தை என்ற ஒன்று இல்லவேயில்லை, ஏனெனில் அந்தப் பாத்திரமே மோசமானது. கடுமைகாட்டும் தந்தைகள், மென்மையான தந்தைகள், இனிமையான தந்தைகள் – ஒன்று மற்றதைவிட மோசமானதே. நமது வழிகளில் குறுக்கே நின்று நமது வளர்ச்சியைத் தடுக்கும் அவர்கள், அவர்களது தாழ்வு மனப்பான்மைகளை, நிறைவேறாத குறிக்கோள்களை, வருத்தங்களை, இலட்சியங்களை, யாரிடமும் சொல்லாத பலவீனங்களை, அவர்களது பாவங்களை, அவர்களது தேனை விடவும் இனிய கனவுகளை, ஒருபோதும் வாழத் துணிந்திருக்காத மூதுரைகளை – எல்லாக் குப்பைகளையும் நம்மீது ஏற்றுகிறார்கள், ஒன்றுவிடாமல்!. ஒருபோதும் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தாதவர்களான அவர்களுக்கு மனசாட்சி உறுத்த, குழந்தைகள் (அவர்களது) வலி எவ்வளவு மோசமானது எனப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் – (அவர்கள் மீது ) பரிதாபப்படவும். ஜேம்ஸ் ஜாய்ஸ் சொல்வதைப் போல பெற்றோராக இருப்பதென்பது எப்படியென்றே மனிதர்களுக்குத் தெரியாதுதான். நாவலின் இறுதி வரியாக, எல்லோரும் அறிந்திருப்பதைப் போல பெருஞ்சிறப்பு ஒரு கசப்பான பொருள் என எழுதுகிறார். இங்கே நாவல் அதுகாறும் பேசிய இலட்சியங்களை தலைகீழாகக் கவிழ்க்கிறது.
பல்கலைக்கழக உணவருந்துமிடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் மிஷிமாவின் இறுதி நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த முரகாமி, ஜப்பான் சிறுகதைகள் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதுகிறார், மிஷிமாவின் இந்த நடவடிக்கையில் எந்தவொரு உடனது `அர்தத்தையும்` காண முடியாதவனாக இருந்தேனென்று. அது எதையாவது அவருக்குக் கற்பித்திருக்கிறதென்றால், ஒரு கருதுகோளை இலக்கியத்தில் பிரதிட்டை செய்வதற்கும் இயல் உலகில் அதனை நிகழ்த்துவதற்குமான மாபெரும் இடைவெளியையே எனவும் எழுதுகிறார்.
மிஷிமாவைப் போன்றவர்கள் தங்களது கருதுகோள்களுக்காக தங்களையே வெடிக்கச் செய்பவர்கள். அதுவே இலக்கியத்தின் தற்கொலைப் போராளியாக அவரை உயர்த்தியிருக்கிறது.
– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
[tds_info]தமிழின் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ஒருவர். ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு தொகுப்புகளும் அவரது எதிர்கால எழுத்துகளின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துபவை. விரிவான வாசிப்பு, தத்துவப் பார்வை, சமூகப் பார்வை, விநோதப் புனைவில் ஈடுபாடு, அறிவியல் ஆர்வம், இசை என்று பல துறைகளின் விளைச்சலாக அவரது கதைகளைக் கூறலாம்.[/tds_info]
சிறப்பு !👍