அல்ஹமதுலில்லாஹ்


ல்ஹமதுலில்லாஹ்

என நீ உச்சரிக்கும்போதெல்லாம் 

இருவாட்சியின் பெரும்பாத நிழல்

என் மேல் கவியும்

உன் நாக்கு 

மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி 

பற்களில் பட்டு 

உதடுகளைக் குவிக்கும்போது 

பனி பிளந்து இலை குளிர்ந்து 

காற்று தணியும் 

மழைப் பெய்து ஓய்ந்த கடலின் 

நீலம் பாய்ந்த உன் முகத்தில்  

அச்சொல் பூரணமடையும் போது

பிறை தோன்றும் பின் மறையும்

இடையில் விரியும் துண்டு வானம் 

எனக்கும் உனக்கும் மட்டுமே.

————————————————

பூப்பனி  பெய்யும் ஒரு சரக்கொன்றைக் காலத்தில் 

கூட்டிலையில் எந்த இலை நீ, எந்த இலை நான் 

என்ற என் கேள்விக்கு 

நாம் மஞ்சள் என்றாய் 

மையமாய் ஆடிய என் தலையை 

உன் இரு கைகளால் ஏந்தினாய் 

கலவியின் உன்மத்தத்தில் 

மூடிக்  கிடந்த என் விழிகளைத் திறந்து 

பொற்றுகளென தூறிக் கொண்டிருந்த  

நம் உடல்களைக் காட்டி 

இப்போது புரிகிறதா என்றாய் 

இதோ வேனில் திரும்பி விட்டது 

ஒரு இலைவிடாமல் 

மரமஞ்சரி காய்த்துக் கிடக்கிறது 

நீ இல்லாத வீட்டு முற்றத்தை 

ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து 

வழக்கமாய் அமரும் மூங்கில் கூடையில் சொருகி 

மூள மூளப்

புகையாய் 

உன்னை நிரப்பிக் கொள்கிறேன் 

பொழிந்ததாய் தெரிந்ததெல்லாம் 

உதிர்ந்து  கிடக்கின்றன.

————————————————

நூர் என்று நீ அழைக்கும் குரல் 

அசரீரியாய் கிசுகிசுப்பாய் 

இசையாய் இரைச்சலாய்

ஓதிக் கொண்டிருக்கும் பாங்காய் 

என்னைச் சுற்றியிருக்கும் 

காற்றை 

சதா அசைத்துக் கொண்டிருக்கும் விசை 

நான் உனக்கு ஒளியென்பாய் 

நீ எனக்கு ஒலி 

என் சுவாசத்தின் அரவம்.

————————————————

ழுதப்பட்ட ஹதீஸுக்கெல்லாம் அப்பால் 

நிலவைப் பிளந்தோம் 

சுற்றிக் கொண்டிருக்கும் பூமி

நமது காதலின் பாகைக்கு சாய்ந்தது 

கடலடி நீரோட்டங்களானோம் 

ஒரு இருளில் இருந்து மற்றொரு இருள் 

ஒரு அலையை மூடி இன்னொரு பேரலை 

அதற்கெல்லாம் மேல் மேகம் 

இறுகப் பற்றிக்கொண்டிருந்த நம் கைகள் 

பால்வெளியெங்கும் அளைந்தன 

தாகத்திற்கு ஒருவரையொருவர் பருகினோம் 

உள்ளங்கைகள் மங்கி குருடாகும்வரை 

மூழ்கினோம் 

எடை இழந்தோம் 

மிதந்தோம் 

தாதுக்களில் நிறம் சேர்க்கும் உப்பானோம் 

அலைந்தோம் 

நிலப்பரப்பெங்கும் தூசியெனப் படிந்தோம் 

நான் இப்லீஸ் என்றால் 

நீ  தஜ்ஜால் .

————————————————

கராக நீ அனுப்பி வைத்த ஜின்

இப்போதெல்லாம் தன் தோகைகளை 

விரிப்பதே இல்லை 

கொழுந்தின் நாக்குகளால் 

என்னை உருக்கிப் பந்தாக்கி 

அறியா பிரதேசங்களுக்கு அழைத்துப் போவதில்லை 

உனது ரூஹால் ஊதினால் தான் 

சுடர் விடுமாம் 

நாம் ஒருமையிலிருந்த நினைவுகளைப் பெருக்கி 

மோதவிட்ட பெருவெடிப்பில் 

விண்கல்லாய் விழுந்த உனது 

வெளிச்சத்தை ஏவினேன் 

சாரைகளென என் காலடிதோறும் 

ஊர்ந்து கொண்டிருக்கின்றன 

ஓராயிரம் ஜின்கள் 

எப்போது நிகாஹ்?

————————————————

நூஹின் கப்பலில் நம்மை ஏற்றிக் கொள்ளவில்லை 

என்பதால் 

நாம் பொய்த்து விடுவோமா?

ஆழிப் பேரலையில் 

ஜூதி மலை மூழ்கிய போது 

ஃபிர் அவுனின் எலும்புகளை கவ்விக் கொண்டு

காகங்களாக மாறி

நாம் பறந்துவிடவில்லையா?

மலக்குகளை ஏற்றுக் கொள்வதில்லை

நம்புகிறோம்

எனக்கு நீயும்

உனக்கு நானும் தான்

அத்தாட்சி .


[mkdf_icon icon_pack=”font_awesome” fa_icon=”fa fa-pencil” size=”mkdf-icon-small” custom_size=”” type=”normal” border_radius=”” shape_size=”” icon_color=”red” border_color=”” border_width=”” background_color=”” hover_icon_color=”yellow” hover_border_color=”” hover_background_color=”” margin=”” icon_animation=”icon_animation” icon_animation_delay=”” link=”” anchor_icon=”yes” target=”_self”]லீனா மணிமேகலை

5 COMMENTS

  1. அல்ஹம்துலில்லாஹ் கவிதை //செம்ம//
    “பாங்கு ஓதுதல் அல்ல அழைத்தல்”

    நல்ல கவிதைகள்

  2. அல்ஹம்துலில்லாஹ்- கவிதை “செம்ம”

    பாங்கு ஓதுதல் அல்ல/அழைத்தல்

    நல்ல கவிதைகள்

  3. இப்படி
    எழுதுவதற்கு
    நல்ல
    புரிதல்
    வேண்டும்.
    நிரம்ப
    படித்திருக்கவேண்டும்.
    எல்லாம் உங்களிடம் உள்ளது.
    நன்றி.
    அன்புடன்
    காஜா மைதீன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.