ஏதேன் காட்டின் துர்க்கந்தம்


போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின்  வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில் அவமானமெதுவும் இல்லை என்பதாகவும், அதையொரு கலை அந்தஸ்து மிக்க நிகழ்வாகவும், அச்சிலை சித்தரிப்பதாகத் தெரியும். அதைக் கடந்து உள்ளே செல்லுமிடத்தில், குனிந்து சலாம் வைக்கும் தொனியிலிருந்த இன்னொரு சிலைக்கு, அதைவிடவும் அதிகமாக வளைந்து ஒரு சலாம் வைத்துவிட்டு கதவைத் திறந்தான். அறை அபரிமிதமான குளிரில் திமிறிக்கொண்டிருந்தது. இருளின் மீதிருக்கும் தனி பிரேமையோ என்னவோ, அடியெடுத்து வைத்த நொடியே மனம் ரொம்பவே மிருதுவானதைப் போலிருந்தது.

எப்போதும் ஓடிவந்து தாங்கிக்கொள்ளும் பணியாளைக் கண்கள் தேட ஆரம்பித்தன; காணவில்லை. மேற்பார்வையாளனை அணுகி, அந்தப் பணியாளைப் பற்றி விசாரித்தபோது, பதிலிலிருந்த அசிரத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. 

வாரநாள் இரவாயினும் கிட்டத்தட்ட அத்தனை இருக்கைகளும் நிரம்பியிருந்தன. ஆங்காங்கே நான்கு இருக்கைகள் கொண்ட மேசைகளில் ஓரிருக்கை மட்டும் எஞ்சியிருந்தது. நாகரிகம் கருதி அவற்றைத் தவிர்த்தாகவேண்டும். மூன்றாவது மேசையில், கருப்பு லெதராலான அட்டை மடிப்பு ரசீதுடன் வைக்கப்பட்டிருந்தது – அங்குதான் அமரவேண்டியிருக்கும். காத்திருக்கும் வேளையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மது வகைகளின் பக்கம் பார்வை திரும்பியது. அப்போதைய மனநிலைக்கேற்ப, காட்டமில்லாத ஒன்று குறித்துக்கொள்ளப்பட்டது. இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்ட, சுவரை ஒட்டிய கடைசி மேசையில் ஓரிருக்கை காலியாக கண்ணில் பட, அதை நோக்கி நகரப் போனான். 

அங்கே எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பது ஒரு பெண் என்று இவன் சுதாரிப்பதற்கும், மேற்பார்வையாளன் வந்து இவனைத் தடுப்பதற்கும் சரியாக இருந்தது. பெண்ணினத்தைக் காக்கும் திடீர் அவதாரமாகத்தான் குறுக்கே வந்திருக்கிறான். அவனிடம் எகிற இதுதான் சரியான வாய்ப்பு.

‘ஏன்.. சீட் காலியாதான இருக்கு?’

‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார்.. டூ மினிட்ஸ்.. வேற சீட் அரேஞ்ச் பண்றேன்..’

‘நா என்ன போயி அவங்க மடிலயா ஒக்கார போறேன்.. இல்ல அவங்க ஒங்கக்கிட்ட சொன்னாங்களா.. எதிர்ல ஆம்பள எவனையும் அலோ பண்ணக்கூடாதுன்னு..’

‘சார் தேவையில்லாம.. இதெல்லாம் பேசவேணாம்..’

‘யாரு இப்ப ப்ரெச்சன பண்ணது.. இருக்குற சீட்ல ஒக்கார போனவன, புடிச்சு நிறுத்தி நீங்கதான் இஷ்யூ க்ரியேட் பண்றீங்க.. இல்லேன்னா விடுங்க, நா அந்த லேடிக்கிட்டயே கேக்குறேன்.. எக்ஸ்யூமீ மேம்.. ஹெலோ..’

‘சார் ப்ளீஸ்..’

அதற்குள் அந்த யுவதியே நிமிர்ந்து இவர்களைப் பார்த்தாள். இவனும் முதன்முறையாக அவளது முகத்தைப் பார்த்தான். நிச்சயம் அந்த இடத்தில்தான் அமரவேண்டும்.

‘If u don’t mind, நா அங்க..?’, இருக்கையை நோக்கி கை காட்டினான்.

அவள் உத்தேசமாகத் தலையசைத்தாள். மேற்பார்வையாளனின் உடல்மொழியில் தளர்வு தெரிந்தது. இவன் கண்ணிலிருந்து ஏளனம் அவனுக்குப் புரிந்திருக்கவேண்டும். நாற்காலியை ஆக்கிரமித்து, அவளிடம் ‘நன்றி’ என்றபோது, பெரிதாகக் கண்டுகொள்ளாமல் அலைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். மேசையிலிருந்த காலி கண்ணாடி குவளையும், மிகுந்த கரிசனத்துடன் உண்ணப்பட்ட கறித்துண்டுகளும், தீண்டப்படாத கடலை / வெள்ளரி வஸ்துக்களும் ஒரு மது கூடத்திற்குப் பொருந்தாத அதீத ஒழுங்குடன் இருப்பதாகத் தெரிந்தன. திரையிலிருந்து கண்ணை எடுப்பவளாய் தெரியவில்லை.

மேற்பார்வையாளனை நோக்கி, ‘பாஸ்.. ஆர்டர் எடுக்குறீங்களா?’ என்றான். அவன் பணியாள் எவரும் இருக்கிறார்களா என்று தேடுவதைப் போல பார்க்க, ‘ஏன், நீங்க எடுக்கமாட்டீங்களா?’ என்று மீண்டும் அவனை வம்பிழுத்தான். குரலிலிருந்த ஏகடியத்தை ஒரு முறை அவள் நிமிர்ந்து பார்த்தாள். வேண்டியனவற்றைக் கேட்டுக்கொண்டு அவன் நகர்ந்தான். இவன் தனது அலைப்பேசியை நடுமேசையில் வைத்து, ஸ்விட்ச் ஆஃப் செய்தபோது, அடங்குவதற்கேயான பிரத்யேக ஒலியுடன் அது ஓய்ந்தது. அது அவளது கவனத்தைக் கோரவே செய்யப்பட்டதைப் போலிருந்தது. அவளிடம் ஆனால் அப்படியெதுவும் சலனம் தெரியவில்லை.

மேசையில் குதிரை குளம்படி தாளம் போட்டுக்கொண்டிருந்தபோது, கேட்டிருந்தவை மேசைக்கு வந்துவிட்டன.

‘மிக்ஸிங் சார்?’

‘ரெட் புல்’

பணியாள் ஒரு வினாடி தடுமாறினான். அவளும் நிமிர்ந்து இவனைப் பார்த்தாள்.

‘ஏன்.. இல்லையா?’

‘இருக்கு சார்..’ 

நகரப்போனவனை நிறுத்தி, தனக்கு வேண்டியவற்றை அவள் குறிப்பிட்டாள். இரண்டாவது சுற்றாக இருக்கவேண்டும்.

‘மிக்ஸிங் மேம்..?’

கொஞ்சம் தயங்கி ’ரெட் புல்’ என்றவள், தவிர்க்க நினைத்தும் இவன் கண்களை ஒரு முறை பார்த்துவிட்டாள். எதிரிலிருந்து கட்டைவிரலை இவன் உயர்த்திக்காட்ட இம்முறை கொஞ்சம் புன்னகைத்தாள். மருந்துக்கும் வசீகரமற்ற முறுவல். அந்த முகவெட்டிற்குச் சாத்தியமான மிக மோசமான புன்னகை அதுவாகத்தான் இருக்கமுடியும். 

பணியாள் விலகிய நொடியில், அவளிடம் ஒரு அமைதியின்மை தெரிந்தது. அலைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு கையைக்கட்டிக்கொண்டு சகஜபாவத்துடன் அவள் அமர முயன்றாள். அந்த நிலையில், அவளது மார்பகங்கள் பகிரங்கமான வளைவாகத் தெரிந்ததும், இவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டு இயல்பாக இருப்பவனைப் போல பாவனை செய்யவேண்டியிருந்தது. இருவருக்கும் ரெட்புல் வந்து சேர்ந்தது.

புது கலவையின் முதல் மிடறை உரிஞ்சியதும் இவனை நோக்கி புருவத்தை உயர்த்தினாள். இவன் அந்த அங்கீகரிப்பை ஏற்பதைப் போல ஒரு முறை கோப்பையை உயர்த்திக்காட்டிவிட்டு குடிக்க ஆரம்பித்தான்.

அந்த முழு கோப்பையையும் குடித்து முடிக்கும்வரை அவளது பார்வை இந்தப் பக்கம் வரவேயில்லை. எந்தவொரு புது மனிதனையும் விலக்கிவைக்கும் முகக்குறிப்பு. ஒரு மாதிரியான உதறலைப் பாவிக்கும் பகட்டு. நிச்சயம் மேற்கொண்டு எதுவும் பேசமாட்டாள் என்று நினைத்திருந்த வேளை…

‘சந்தோஷத்துக்காக குடிக்கிறீங்களா? சோகத்துக்கா?’ திடீரென கேட்டாள். ஆடம்பரமற்ற அந்தக் குரலின் எதார்த்தம் புரியவே இவனுக்கு சில நொடிகள் பிடித்தன.

‘ஏன் அப்டி கேக்குறீங்க?’

‘இல்ல.. தனியா வந்து குடிக்கறீங்களேன்னு.. சாரி..’  

‘pls don’t be..’ ரொம்பவே பொருட்படுத்தி பதிலளிப்பவனைப் போல, கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, உடலைச் சற்று நிமிர்த்தியமர்ந்து, ‘சந்தோஷமா சோகமா..? ஆங்.. அப்டி குறிப்பிட்டெல்லாம் எதுவுமில்ல.. பழக்கத்துல குடிக்கிறேன்..’ என்று கடைசி மிடறை முடித்தான். அவன் சொன்ன விதத்தை அவள் ரசித்ததைப்போலத்தான் தெரிந்தது.

‘நீங்க?’

பதிலில்லை. ஒரு பக்கமான புன்னகை உதயமான வேகத்தில் மறைந்தது.

‘ஹ்ம்.. இதான் மொதவாட்டியா?’

‘தனியா இதான் ஃபர்ஸ்ட் டைம்’ புன்னகை சற்று பெரிதானது; இன்னும் ஆழமாய் ஏதோ சொல்ல முயல்வதாகப் பட்டது. 

‘கவலைக்காக குடிக்கிறது.. இதுவே கடைசி முறையா இருக்கட்டும்’ மெலிதாக சிரித்துக்கொண்டே சொன்னான். அவளுக்கும் கொஞ்சம் முகம் மலர்ந்தது. லேசான வியப்பும் கண்களில் நின்றது.

‘டிப்ரஷனுக்கு குடிக்கிறேன்னு சுருண்டு கெடக்குறது, சந்தோஷத்துல குடிக்கிறேன்னு வண்டிய கொண்டுபோய் மோதுறது.. இதெல்லாம் என்ன பொருத்தவரைக்கும் குடிய அசிங்கப்படுத்துறது.. குடிக்குக் காரணமே தேவையில்ல.. காரணம் இருக்கக்கூடாதுன்னு சொல்லுவேன்.. இது ஒரு மாதிரி.. நம்ம ரொட்டீன்ல ஒரு பார்ட்.. இங்க இருக்கவங்கள்ல பாதி பேரு, பழக்கத்துல குடிக்கிறவங்கதான்.. ஆனா இவங்கக்கிட்டல்லாம் நீங்க இந்த கேள்விய கேட்டிருந்தா, நிச்சயம் எதாவது காரணம் சொல்லுவாங்க..’ – பல் வெளியே தெரியும்படி சிரித்தாள் – ‘ஏன்னா இங்க காரணம் இல்லாம ஏதாவது பண்ணா எல்லாருக்கும் ஒரு பதட்டம் வந்துடுது.. ஏதோ தப்பு பண்ற மாதிரி.. எல்லாத்துக்கும் ஒரு காரணம்.. ஒரு justification..’ அவள் மேசையில் கைகளையூன்றி ஆர்வத்துடன் கேட்பதைப் போல தெரிய, கறித்துண்டை மென்றுகொண்டே இவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

‘என்னையே எடுத்துக்கோங்க.. கண்ணு மறைக்கிற அளவுக்கெல்லாம் குடிக்கவே மாட்டேன்.. இந்த எடத்துக்குன்னு ஒரு எதிக்ஸ் இருக்கு.. உருவான ஒரு எண்ணத்தோடல்லாம் உள்ள வரக்கூடாது.. குடிதான் ஒரு எண்ணத்த உருவாக்கனும்.. செலிப்ரேஷனுக்காக குடிக்கிறேன்னு சொல்லுவானுங்க.. குடிதான் கொண்டாட்டத்த கொடுக்கனும்.. இன்னொன்னுக்காக.. இங்க வந்து.. இத தொட்டு நக்கிட்டிருக்கக்கூடாது.. சாரி..’

‘இட்ஸ் ஓகே..’

‘அதே மாதிரி.. கவலைக்காக குடிக்க ஒக்காரக்கூடாது.. குடிதான் ஒருத்தனுக்கு கவலையையும் கொடுக்கனும்..’

‘ஸ்ட்ரேஞ்ச்..’ கொஞ்சம் வாய்விட்டே சிரித்தாள்.

‘u r done? Or இன்னொரு ரவுண்ட் சொல்லலாமா?’

‘சொல்லலாம்’

முன்பைவிட உற்சாகமாக அந்த மேற்பார்வையாளனை நோக்கி கையசைத்தான்.

‘அவர கலாட்டா பண்ணனும்ன்னு முடிவே பண்ணிட்டீங்க..’

‘அப்படிலாம் இல்ல.. வெளிய போறதுக்குள்ள அவர ஃப்ரெண்ட் ஆக்கிடுவேன் பாருங்க..’

‘ஸ்மார்ட்..’

அவரவருக்கான கோப்பைகள் நிரப்பப்பட்டன. ஓசையில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி திரையில், ரொம்பவே கவர்ச்சிகரமாக அபிநயம் பிடித்துக்கொண்டிருந்த நாயகியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அதனைக் கவனித்தவளாக, ‘ம்யூட்ல பாக்க சிரிப்பா இருக்கு..’ என்றாள்.

‘அப்டியா என்ன? எனக்கு அப்டி தெரியல.. எவ்ளோ தூரம் அவளால வார்த்தையில்லாம எக்ஸ்ப்ரெஸ் பண்ணமுடியுதுன்னு பாக்குறேன்.. she scores..’

‘நீங்க சொன்னதுக்கு அப்றமும் எனக்கு அப்டி தோணல..’ சற்று நேரம் திரையைப் பார்த்திருந்துவிட்டுச் சொன்னாள்.

‘அது எப்டி ரெண்டு பேருக்கு ஒரே மாதிரி தோண முடியும்?’ நாயகியைப் பார்த்தபடியே அடுத்த கோப்பையைக் குடிக்க ஆரம்பித்தான்.

‘நீங்க என்ன இந்த கத கவிதயெல்லாம் எழுதுறவரா? பேச்சே வேற மாதிரி இருக்கு..’ 

சட்டென புரைக்கேறுவதைப் போல செய்துவிட்டு, ’அய்ய.. நாய்ப்பொழப்பு..’ என்று சிரித்துவிட்டான். ‘ஆக்ச்சுவலி, என் ஃப்ரெண்டு ஒருத்தன் எழுதுவான்.. புக்கு கூட வந்துருக்கு.. சூசைடு, தத்துவம்ன்னு ஒரே கேள்வியா இருக்கும்.. பதில் சொல்றேன் வாடான்னா திரும்பிப்பாக்காம ஓடிருவான்..’ வெள்ளரித்துண்டொன்றை வாயில் வைத்து, ‘நா பேசுவேன்.. அவ்வளதான்.. என்ன.. கொஞ்சம் நெறய பேசுவேன்.. ’ மெல்ல ஆரம்பித்தான்.

எல்லாருடைய ஒப்பினியனுக்கும் எதிராதான் பேசுவீங்க..?’ கிண்டலாக கேட்டாள்.

‘ஹ்ம்.. இவ்ளோ கொஞ்ச நேரத்துல என் மேல இப்படியொரு ஒப்பினியன் உருவாச்சுன்னா, அதுக்கு எதிரா நா பேசிதான ஆகனும்..’ அர்த்தப்பூர்வமான நிதானத்துடன் சொன்னான்.

‘நான் உங்களை மதிப்பீடு செய்வதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. மன்னிக்கவும்.. அழுத்தமெதுவும் இல்லாமல்தான் அப்படிச் சொன்னேன்’ ஆங்கிலத்தில் பதிலளித்தாள். 

ஓர் அசெளகர்ய மெளனம் அவ்விடத்தில் கவிந்துவிடாமல் இருக்க, வலிந்து அடுத்த பேச்சை அவனே ஆரம்பித்தான்.

‘அதென்ன சொன்னீங்க..? தனியா ஃபர்ஸ்ட் டைம் குடிக்கிறேன்னு ஏதோ.. ஏன் அப்படி.. இல்ல, காரணம் சொல்லல்லாம் வேணாம்.. பட், அதவொரு கவலை மாதிரி சொல்லாதீங்க..’

தான் பொதுவாகவே இப்படிப் பேசுபவன்தான் என்ற தொனியில் அவனது பேச்சு ஒருவித அசிரத்தையுடன் தொடர்ந்தது.

‘தெரிஞ்ச மனுஷங்களோட குடிச்சு, தெரிஞ்ச விஷயத்தையே வேற மாதிரி பேசுறதவிட குப்பையான சம்பவம் எதுமே இருக்கமுடியாது.. தனியா குடிக்கனும்.. பொது புத்திங்களோட அபத்தத்த புரிஞ்சுக்க மொதல் ஸ்டெப் அதுதான்.. குடி மொதல்ல அறவுணர்ச்சிகளை காலி பண்ணிடும்.. அத ஒதுக்கிவெச்சுட்டு யோசிக்கும்போதுதான், சுத்தியிருக்கிற ஆபாசமெல்லாம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்..’ 

அவளது முகம் குறிப்பற்று இருந்தது. ‘இந்த ஃபேக் செலிப்ரேஷன்ஸ், ஃபேக் டிப்ரஷன்ஸ்லாம் பாத்தா அதுக்கப்றம் உங்களுக்கே சிரிப்பாதான் இருக்கும்.. காலங்காலமா கும்பலா வந்து கூத்தடிச்சு கூத்தடிச்சு, தனிமைல குடிக்கிறவன ஏதோ சீக்காளின்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டீங்க..’ – தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

கோப்பைகள் காலியாக இருப்பதைப் பார்த்த பணியாள் அருகில் வந்ததும், அவளிடம் கேட்காமலேயே இவனே இருவரதையும் நிரப்பச் சொன்னான். அவளும் ஆட்சேபிக்கவில்லை.

‘என்ன மொத்தமா சைலண்ட் மோடுக்கு போயிட்டீங்க..?’ பதில் சொல்லாமல் மீண்டும் புன்னகைத்தாள். அவளாகவே பேசட்டுமென்று மேற்கொண்டு கேட்கவில்லை. மது வருவது தாமதமானது. பரப்பி வைக்கப்பட்டிருந்த பதார்த்தங்களைக் கொஞ்சம் ருசி பார்த்தான். ரச வடை மட்டும் அமிர்தமாக இருந்தது. அவளது மெளனம் ரொம்ப நீளமாகப் பட்டது.

பழுப்பும் சிவப்புமாகக் கோப்பைகள் மீண்டும் நிறைக்கப்பட்டதும், ‘பேசி போரடிச்சிட்டேனா? யோசனையாவே இருக்கீங்க?’ என்றான். 

‘ச்ச.. இல்ல..’ என்றவள் இரண்டு ஆட்காட்டி விரல்களையும் நெற்றியின் இருபக்கங்களில் வைத்து தலைவலி அல்லது அழுத்தம் என்பது போல செய்கை செய்தாள். 

‘சியர்ஸ்.. கொறஞ்சிடும்’ என்று கோப்பையை அவளிடம் நீட்டினான். ஆமோதித்தவாறு பெற்றுக்கொண்டவள், இரு முறை தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு ஒரே மூச்சில் முழு கோப்பையையும் காலி செய்து கீழே வைத்தாள். திகைப்பாக இருந்தாலும், வினோதமான ஒன்றைப் பார்ப்பதைப்போல அவன் காட்டிக்கொள்ளவில்லை. 

‘நா இன்னைக்கு இதோட நிறுத்திக்கனும்ன்னு நெனக்கிறேன்..’, பெருமூச்சுடன் சொன்னாள்.

‘நல்லது.. நமக்கு இவ்வளவுதான் வேணும்ன்னு நமக்கு தெரிஞ்சிருக்கனும்..’

‘ஹஹ்.. தேவயெல்லாம் இன்னும் நெறைய இருக்கு.. ஆனா, திரும்ப ஸ்கூட்டிய ஓட்டிட்டு போகனும்.. அதுக்காக சொல்றேன்..’ 

‘ரெட் ஃபாஸினோவா? உள்ள வரும்போது அதுமட்டும் தனியா தெரிஞ்சுது..’

‘அதுதான்..’  இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்துகொண்டாள். மேற்கூரையிலிருந்த சிறிய விளக்கின் ஒளி நேரடியாக அவள் நெற்றியின் மீது விழுந்தது. இப்போதுதான் முகங்கழுவியதைப்போன்ற துலக்கம். தனக்கு மட்டும் இன்னொரு கோப்பை மது சொன்னான். கூடவே இன்னொரு ரசவடை கேட்டுவாங்கிக்கொண்டான்.

‘எங்க ஒர்க் பண்றீங்க?’ அவள் காதிலேயே வாங்காமல் அமர்ந்திருந்தாள். கண்கள் மூடியிருந்தன. தூங்கிவிட்டாளா? இவன் தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். வந்திருந்த கோப்பையை எடுத்து, இரண்டு மிடறுகள் குடித்தபோது, ‘ஒரு சினாரியோ சொல்றேன்.. நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு சொல்றீங்களா?’ கண்களைத் திறக்காமலே கேட்டாள்.

‘சொல்லுங்க.. முயற்சி பண்றேன்..’

‘ ஆக்ச்சுவலி, என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி.. ரொம்ப க்ளோஸ் எனக்கு.. ப்ராக்ட்டிக்கலான பொண்ணு.. ஓவர் எமோஷனல்லாம் இல்ல.. ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தா..’ அவள் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை என்பதுதான் இவனுக்கு ரொம்பவே ஆர்வமூட்டியது.

‘சோஷியல் மீடியாலதான் பழக்கம் ரெண்டு பேருக்கும்.. ஓப்பன் புக்கா இருக்கறது, அவனோட ஃபார்வேட் ஐடியாலஜீஸ், முக்கியமா ஃபெமினிஸ்டிக் ஸ்டாண்ட்.. எல்லாமே அவளுக்கு டக்குன்னு இழுத்துடுச்சு.. இதெல்லாத்தயும் விட, ரெண்டு பேருக்கும் நடுவுல லைஃப் பத்தி ஒரே மாதிரி எண்ணம் இருந்துச்சு.. கல்யாணம்ங்கற விஷயத்து மேல ரெண்டு பேருக்குமே நம்பிக்கையில்ல.. அதுலயும் அரேஞ்ச்டு மேரேஜ் பத்தில்லாம் அவன் கழுவி ஊத்துவான்.. அவ வீட்ல ஒரு மாதிரி நெருக்கி பிழியற சிச்சுவேஷன்.. வெளிய வந்து நின்னுட முடியும்ன்னு அவனாலதான் அவளுக்கு நம்பிக்க கெடச்சுது.. and she did that..’

கண்களைத் திறந்தபோது, நெற்றியைச் சுருக்கியபடி இவன் கூர்ந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும், சட்டென மேசையிலிருந்த எதையோ நோக்கி பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

‘உங்களுக்கும் இன்னொரு லார்ஜ் சொல்லவா?’

‘இல்ல.. சொன்னேனே.. டூ வீலர் ஓட்டனும்..’

‘உங்களுக்கு எதும் பிரெச்சனயில்லேன்னா நா டிராப் பண்றேன்.. அதுக்காக யோசிக்கவேண்டாம்..’ அவன் கண்களில் எதுவும் விஷமம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆமோதித்தாள். அவளது கோப்பை மீண்டும் நிரப்பப்பட்டது.

‘மேல சொல்லுங்க..’

‘ரெண்டு பேருக்கும் நல்ல வேவ்லெங்த்.. லிவின்ங்கறது ஆரம்பத்துல ஒரு எக்ஸ்பரிமண்ட் மாதிரி தெரிஞ்சுது.. ஒரு மாதிரி புதுசா.. ஃப்ரெஷ்ஷா.. அப்ப ஒரு பயமும் இருந்துச்சு.. போகப் போக இது சலிச்சுப்போயிடுமோங்கற பயம்.. பட், அப்டியில்ல.. நியர்லி ஒன் ஃபுல் இயர்.. அந்த ரிலேஷன்ஷிப் துளிகூட சலிக்கல.. அண்ட் அவங்க ரெண்டு பேருக்குமே கொழந்தங்கற கான்செப்ட்டே புடிக்கல.. ஒர்த்தக்கொர்த்தர் நல்ல ஸ்பேஸ் அண்ட் அண்டர்ஸ்டாண்டிங்..’

‘ஹ்ம்..’

‘அவனோட ஃப்ரெண்ட் ஒருத்தன்.. அவ வேல பாக்ற அதே ஆஃபிஸ்ல வொர்க் பண்றான்.. ஒரு ஈவ்னிங் அவன் வீட்டுக்கு இவ போயிருந்தபோது..’ சற்றுநேரம் அமைதியாக இருந்தாள். இவனும் எதிர்க்கேள்வியெதுவும் கேட்கவில்லை. ‘…ஒரு மாதிரி.. லைக்.. ஏதோவொரு மொமெண்ட்ரி இம்ப்பல்ஸ்.. they happened to have sex..’. எதையோ யோசிப்பதைப் போலத் தெரிந்தாள். வந்திருந்த கோப்பையை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

‘இவளாப்போயிதான் அவன்கிட்ட சொன்னா.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த புரிதலுக்கு இத மறைக்கவேண்டிய எந்த அவசியமும் அவளுக்கு தெரியல.. நாளைக்கு அவனுக்கும் வேற ஒரு பொண்ணுக்கூட இப்டி ஆச்சுன்னா அவனுக்கும் சொல்றதுல எந்த தயக்கமும் இருக்கக்கூடாது.. அந்த ஸ்பேஸ் ரொம்ப முக்கியம் அப்டின்னுதான் நெனச்சு சொன்னா..’ மீண்டும் மெளனம். லேசாக உதடு துடித்ததைப் போல தெரிந்தது. ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்றவள் மேசையிலிருந்த திசுக்காகிதத்தை எடுத்து கண்ணோரத்தில் லேசாக ஒற்றியெடுத்தாள்.

‘குடிச்சு முடிங்க.. ஸ்மோக் பண்ணுவீங்களா?’ அவளை இயல்பாக்க முனையும் குரல்.

‘இல்ல.. no, thanks..’

அதற்குள் மேசையின் மீது அவன் சிகரெட் பெட்டியை எடுத்துவைத்திருந்தான்.

‘ஸ்மோக்ரூம் இருக்கா இங்க..? அடசலான ரூம்ல i prefer to smoke passively..’ அவளாகவே சொன்னாள்.

இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தபோது ஒரு வயதானவர் அங்கு நின்று புகைத்துக்கொண்டிருந்தார். இவர்களை அவர் சட்டையே செய்யாதது இருவருக்குமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ‘தேசம் முன்னேற்றப் பாதையில் போயிட்டிருக்கு’ என்று அவள் மெதுவாகச் சிரித்தாள். 

புகையை இழுத்து மெல்ல இவன் வெளிவிட, ஒரு மாதிரி கண்களை மூடி அதனை சுவாசித்தபடி அவள் நின்றுகொண்டிருந்தாள். பச்சை நிற குர்த்தி, சாம்பல் நிற ஜீன்ஸ், ஹீல்ஸ் இல்லாத செருப்பு – மிக இயற்கையான அழகி – இப்போதுதான் அவளை முழுமையாகப் பார்த்தான்.

‘ஓகே.. ஐ யம் நாகேந்திர பூபதி.. நாகா, நாகு, பூபதி.. எப்டி கூப்ட்டாலும் ஓகே..’

‘பேரெல்லாம் எதுக்கு? தெரியாதவங்களாவே இருந்துப்போம்..’ கண்டிப்பதாய் அல்லாமல் ஸ்நேக பாவத்துடன்தான் சொன்னாள். 

‘ஃபைன்..’ என்று சிரித்துக்கொண்டே அவளுடன் கைக்குலுக்கினான். ‘அப்றம்.. விட்டத சொல்லுங்க.. உங்க… ஃப்ரெண்டோட கதைய..’

‘இல்ல.. சொன்ன வரைக்கும் நீங்க என்ன நெனைக்கிறீங்க.. அத சொல்லுங்க..’

‘ஹ்ம்ம்..’ இரண்டு இழுப்புகளுக்குப் பின் தொண்டையைக் கொஞ்சம் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான், ’இன்னய தேதிக்கு முற்போக்குங்கறது ஒரு ஃபேஷன்.. ஒரு மாதிரி சோஷியல் மீடியா சர்வைவல் இன்ஸ்டிங்க்ட்.. ம்ம்.. அதெல்லாந் தாண்டி அது ஒரு பக்கா டேட்டிங் மெட்டிரியல்.. பெரியார், அம்பேத்கர் எல்லாருக்கும் இவனுங்க மஞ்சப்பைய கொடுத்து ரொம்ப நாளாச்சு..’ நகர்ந்துபோய் அதற்கான கிண்ணத்தில் சாம்பலைத் தட்டிவிட்டு வந்தான். 

‘பொழுது விடிஞ்சா பேசறதுக்கு ஒரு பிரெச்சன கெடச்சிருது.. இல்லாட்டி, குலதெய்வம் கோயிலுக்கு போற அப்பாவ காமெடி பீஸாக்கி போஸ்ட் எழுதுறது, என்னமோ இவனுக ஜாதிய ஒழிக்கதான் லவ் பண்றமாதிரி பேசறது.. சூப்பரான சினிமா ஒன்னுல வில்லனுக்கு சுத்தமான தமிழ் பெயர் இருந்துட்டா போதும்.. வழவழன்னு நாலு பக்கத்துக்கு அரசியல் கட்டுரை எழுதறது.. இத வெச்சி சீன் போடுறது.. காண்டாக்ட்ஸ் புடிக்கிறது.. அத வெச்சி வேல வாங்கிக்கிறது.. அப்றம் நா சொன்ன இந்த டேட்டிங்..’ 

மூன்றடி தூரத்திலிருந்த சிறிய எவெர்சில்வர் குப்பைத்தொட்டிக்குள் கையிலிருந்த சிகரெட்டை சுண்டி வீச, நெருப்புப்பொறி தெறிக்க சரியாகப்போய் உள்ளே விழுந்தது. இன்னும் தாட்டியமானக் குரலில் தொடர்ந்தான். ’அதுல ஒரு பையன, அதுக்காக பாத்து ஒங்க ஃப்ரெண்டு செலக்ட் பண்ணிருந்தா அவங்கள நான் முட்டாள்ன்னுதான் சொல்லுவேன்’, சொல்லிவிட்டு உன்னிப்பாக அவளது முகமொழிகளைக் கவனித்தான். சஞ்சலமுறுவது தெளிவாகத் தெரிந்தது.

‘டேபிள்க்கு போலாமா?’ என்றதும், அவளும் பின்தொடர்ந்து வந்தாள். வந்ததும் இருவருக்கும் மீண்டும் மது கொணரப்பட்டது.

விழுந்த இடைவெளியைச் சமன் செய்வதைப் போல, பேச்சு சாதாரணத் தொனியில் மீண்டும் துவங்கியது ’அப்றம்.. இந்த முற்போக்கிஸ்டுகள்ட்ட இன்னொரு ப்ரெச்சன எல்லாத்தையும் பைனரியாவே பாக்குறது.. இது இல்லேன்னா அது.. rationalityக்கெல்லாம் வேலையே இல்ல.. ஒரு பீடத்துல தன்ன தூக்கி வெச்சுப்பானுங்க.. அந்த மாதிரி இமேஜ்க்கு இங்க ஒரு ஸ்டார் வேல்யூ இருக்கு.. பட் கொஞ்சம் வெளிய வந்து பாத்தா, பொழக்கத்துல மகாமட்டமான சாக்கட இவனுகளாதான் இருக்கானுங்க..’   

இருக்கையின் சாய்மானத்திலிருந்து முன்னே வந்து, ‘உங்க ஃப்ரெண்டு, நெஜமாவே அவன் காமிச்சுக்கற மாதிரியான ஆள்தான்னு.. ஒரு வருஷம் இல்ல, இந்த ஆயுசு முழுக்க அவன நம்பியிருந்தாலும் அதுல எந்த ஆச்சர்யமுமில்ல.. அந்த இமேஜ வெச்சு ஒருத்தன புடிச்சுப்போய், லவ் பண்ணி போறாங்கற எடத்துலயே, தெளிவாயிடுச்சு she is.. என்ன சொல்றது.. an absolute fool..’, வேண்டுமென்றேதான் மீண்டும் அப்படிச் சொன்னான். அவளை உடைத்துவிட்டுத்தான் மேற்கொண்டு பேசவேண்டும் என்பதுபோல அவ்விடத்தை ரொம்பவே அழுத்திச் சொன்னான்.

  ‘அப்றம் அவங்க பண்ணது சரியா தப்பாங்கற எடம்.. மனுஷ மனசுக்கு இயற்கையாவே ஒரு polygamous tendency உண்டுங்க.. ஒருத்தருக்கிட்டயே அது சரணாகதியாகி கெடக்கனும் நெனைக்குறதுதான் இருக்குறதுலயே மோசமா உருவாக்கப்பட்ட நியதின்னு நெனைக்குறேன்.. சோ, அவங்களுக்கு அப்படி தோனுனத தப்பே சொல்லமாட்டேன்.. மோரோவர், அவங்க ரொம்ப க்ளியரா அத ஒரு வெறும் ஒடம்பு சார்ந்த தேவையா மட்டும் சுருக்கிக்க தெரிஞ்சவங்களாதான் தெரியிறாங்க.. nothing more than a fling.. அந்த தெளிவு இருக்கு.. அதே நேரம் இவனோட ரிலேஷன்ஷிப்ப வேல்யூ பண்ணவும் தெரிஞ்சிருக்கு.. அதுல இருக்க பாண்டிங் மேல அவங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அதே நம்பிக்கையோடதான் போயி இப்படி நடந்துச்சுன்னு அவங்களால ரிவீல் பண்ணமுடிஞ்சிருக்கு.. என்ன கேட்டா i would say, அவங்க thoroughly genuine..’ அவளது பார்வை பணிந்து கண்களிலிருந்த இறுக்கம் இளகுவது அலையலையாக தெரிய ஆரம்பித்தது.

‘இதத்தாண்டி என்ன நடந்துருக்கும்ங்கறத நானே கொஞ்சம் கெஸ் பண்றேன்..’ கொஞ்சம் கடலைகளையள்ளி வாயில் போட்டுக்கொண்டு சொன்னான், ‘ஏன்னா நா ஏதோ இங்க இருக்கற எஸ்டாப்ளிஷ்டு மாடல எல்லாம்.. அதோட மேன்மையயெல்லாம்.. ஜஸ்ட் ப்ரேக் பண்ணி பேசுறவன்னு மட்டும் உங்களுக்கு தோனுதுல்ல.. அதனால சொல்றேன்..’

‘ச்ச.. அப்டி நெனச்சா இதப் பத்தி உங்கக்கிட்ட ஏன் கேக்கப்போறேன்?’

‘ஸ்டில்.. ஒரு சவாலா, கொஞ்சம் கெஸ் பண்ணி பாக்குறேன்..’

‘ம்ம்’ அவளது முகம் மீண்டும் இறுகியது.

‘அவனோட முழு ஈன புத்தியும் அந்த ஒரே நிமிஷத்துல அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. அவங்கள அடைய அவன் கட்டமைச்ச பிம்பமெல்லாம் சட்டுன்னு நொறுங்கிக் கொட்டிருக்கும்.. டோட்டலா அவங்களோட சுயமரியாதைய சுக்குநூறா ஒடச்சு போட்ருப்பான்.. மோசமான character assassination நடந்திருக்கும்..’

அப்பட்டமாக அவள் பலவீனப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

‘லவ்’ங்கறத ஆதிக்கமா நெனச்சு கொச்சப்படுத்துறது.. இதுல ஆம்பள பொம்பள வித்யாசம் இல்ல.. இன்னொருத்தன் கூட இருந்தது அவளுக்கு அந்த நேரத்துல சந்தோஷமா இருந்திருக்குன்னா, அவளோட அந்த நேரத்து சந்தோஷத்துக்கு காதலிக்கிறவன் சந்தோஷந்தானப்படனும்.. ஆனா இதெல்லாம் இங்க எதிர்ப்பாக்கவே முடியாது. நா இப்படி சொல்றது பக்கத்து டேபிள்ல ஒருத்தனுக்கு காதுல விழுந்தா, எந்திரிச்சி வந்து துப்பிட்டு போவான்..’ சொல்லிவிட்டதற்காக பக்கத்து மேசை ஆட்களை சம்பிரதாயமாக ஒரு முறை பார்த்தான். 

‘ஒன்ன பிரியறதுதான் அவளுக்கு சந்தோஷமா? அவள போகவிடு.. இந்த மெச்சுரிட்டிதான காதலா இருக்கமுடியும்?.. அதவிட்டுட்டு.. போட்டு நசுக்கி பிழிய, பொசஸிவ்னெஸ்ன்னு ரொம்ப பாதுகாப்பா ஒரு வார்த்தை இருக்கு… எமோஷன்னால்லே ஆதிக்கம்ங்கறதுதான் இங்க இருக்குற புரிதல்.. நிபந்தனையற்ற அன்புன்னுல்லாம் ஒன்னு கெடையவே கெடையாது.. ஒரு சின்ன ஸ்டார் எப்பவும் மேல நிக்கும்.. ‘conditions apply.. ன்னு’ அவள் ஆமோதிப்பதைப் போல தலையாட்டுவது உற்று நோக்கியபோது தெரிந்தது.

‘இப்ப உங்க ஃப்ரெண்டு வந்து அத அவன்கிட்ட சொல்றாங்க.. எதுக்கு.. குற்றவுணர்ச்சிலயா? கண்டிப்பா இல்ல.. சொல்லும்போது அந்த மாதிரில்லாம் தோணியிருக்கவே இருக்காது அவங்களுக்கு.. ஆனா இப்ப அவன் அவங்கள டோட்டலா ப்ரேக் பண்ணி, அப்டி தோண வெச்சுருப்பான்..’ 

அவளது கண்கள் நிறைந்துவிட்டன. 

அவனுக்கு அது போதுமாக இல்லை. இருக்கையின் விளிம்பிற்கு நகர்ந்துவந்து, குரலைத் தணியவைத்து சொன்னான். ‘நிச்சயம் ஒரு வார்த்தை.. அந்த பொண்ண அவன் தேவடியான்னு திட்டிருப்பான்.. சரியா?’ 

கண்களை மீறிக்கொண்டு நீர் வடிய ஆரம்பித்தது. 

’An angel, he never deserves..’ முடித்துவிட்டதைப் போல உதட்டைப் பிதுக்கினான். அவளது முக ரேகைகள் தடுமாறிக்கொண்டிருந்தன. முன்னாலிருந்த அரை கோப்பை மதுவை கையிலெடுத்து, சிந்தச் சிந்த வாயெடுக்காமல் விழுங்கினாள். 

‘என்னாச்சு..?’

‘நத்திங்..’ என்றவளின் தொண்டைக்குழி தொடர்ச்சியாக விழுங்கலிலேயே இருந்தது. நிமிர்ந்தே பாராமல், ’கெளம்பலாமா?’ என்றாள்

‘ஹே.. ஆர் யூ ஓகே?’

‘இல்ல கொஞ்சம்.. வாமிட் வர்ர மாதிரி இருக்கு..’

‘வாங்க.. நானும் வரேன்.. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துறலாம்..’ 

அவன் சொன்னதுமே எழுந்துகொண்டாள். நடை இடறியது. அவன் அவளது இடையைச் சுற்றிப் பிடித்துக்கொள்ளவேண்டியிருந்தது. வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும்போதும் அவளைத் திடமாகத் தாங்கிக்கொண்டிருந்தான். முகத்தில் நீரையள்ளி இரைத்துக்கொண்டாள். நிமிர்ந்து நிற்க முடியவில்லை. பின்னாலிருந்த அவன் மீது அனிச்சையாகச் சாய்ந்துகொண்டாள்.

‘ரிலாக்ஸ்.. கொஞ்சம் ஓகேன்னா சொல்லுங்க சீட்க்கு போகலாம்’

பதிலே சொல்லாமல் நின்றாள். அவளது இரு தோள்களையும் பற்றியபடி நின்றுகொண்டிருந்தான். மூடியிருந்த இமைகளுக்குள் அவளது விழிகள் ஓயாது இடவலமாக ஆடிக்கொண்டிருப்பது எதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்தது. முழுமையாக மூன்று நிமிடங்கள் – ‘போலாம்’ என்றாள்.

இடத்திற்கு வந்து அமர்ந்தும் அவள் கண்களைத் திறக்கவே இல்லை.

‘என்னோட வீடு இங்க பக்கத்துலதான்.. ஸ்டே பண்ணிட்டு காலைல வந்து உங்க வண்டிய எடுத்துக்கலாம்..’ என்று சொல்லிவிட்டு பணியாளை நோக்கி கையசைத்தான்.

‘பில் க்ளோஸ் பண்ணிடுங்க.. ஒரே பில்லா இருக்கட்டும்.. ஒரு பட்டர்மில்க்.. அப்றம் கொஞ்சம் ஃப்ரூட்ஸ்.. கட் பன்ணி சாலட் மாதிரி கொடுத்துருங்க..’

‘கொஞ்சம்  ரெஃப்ரெஷ் ஆயிக்கோங்க.. கெளம்பிடுவோம்.. மோர் சொல்லிருக்கேன்..’

‘ஹ்ம்.. தேங்க்யூ..’

பில் தொகையை அவன் செலுத்த முனைந்தபோது, எதிர்ப்பு காட்ட கொஞ்சம் முயன்றாள். அவளால் முடியவில்லை. ரொம்பவே சோர்வாக இருந்தது. உயரமான கண்ணாடி கோப்பையில் வைக்கப்பட்டிருந்த மோரை எடுத்து உறிஞ்சிக்குடித்துவிட்டு, ஓசையின்றி கீழே வைத்தாள். சற்றே துருத்தலான மேலுதட்டில் மோர் ஒரு மெல்லிய கோடாகப் படிந்திருந்து, மேலும் அதற்கு எழிலூட்டியது. அவனது கண்கள் அதில் பதிந்திருந்துப்பதைக் கவனித்துவிட்டாளோ என்னவோ.. கீழுதட்டால் சப்பி உள்ளிழுத்துக்கொண்டாள்.

‘ஃப்ரூட்ஸ் எடுத்துக்கோங்க..’

‘ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்துர்றேன்..’

‘கூட வரனுமா?’

‘பாத்துக்கிறேன்’, கொஞ்சம் திடமான புன்னகையுடன் சொன்னாள்.

பாக்கி தொகை வந்து சேர்ந்தது. மிச்சமிருந்த மதுவைக் குடித்து முடித்தான். அந்த இரவு குறித்த பதற்றம் அவனுக்கு அதிகமாக ஆரம்பித்தது. மணி பத்துதான் ஆகிறது என்பதால் பக்கத்து வீட்டு மாமா வளாகத்தில் வாக்கிங் போய்க்கொண்டிருப்பார். அவரைக் கடந்து, உள்ளே அழைத்துச் சென்றுவிட்டால் போதும். கால்கள் தரையில் தந்தியடிக்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாகியும் அவள் வரவில்லை. அப்படியே போய்விட்டாளா? சுருண்டு ஏதும் விழுந்துகிடக்கிறாளா? ஆஸ்ப்பத்திரிக்கெல்லாம் தூக்கிக்கொண்டு இருக்கமுடியாது.. எழுந்து சென்று பார்த்தான்.

கதவை ஒருக்களித்தபோது, வாஷ்பேசின் கண்ணாடி முன்பு நின்று அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. முகத்தில் மீண்டும் மீண்டும் நீரை வாரி பூசிக்கொண்டாள்.

‘எக்ஸ்க்யூஸ் மீ’ 

இவனது குரல் கேட்டதும், முகத்தைத் திருப்பாமல் கையை மட்டும் கதவின் பக்கமாக தடுப்பதுபோல நீட்டி, ‘ப்ளீஸ்..’ என்றாள். அழுகையை அடக்கிக்கொள்ள முயற்சிக்கவில்லை. ‘I think.. I can help myself here..’

நிதானமாக வந்து இருக்கையில் அமர்ந்தான். தொலைக்காட்சியில் தெரியும் ஓசையற்ற காட்சிகள் ரொம்பவே அருவருப்பாக இருந்தன. மேற்பார்வையாளன் இவனிடம் வந்து, ‘ஏதும் வரவேண்டியது இருக்கா சார்?’ என்றான். இவன் பதில் சொல்லாமல் முறைத்துக்கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், அவன் விலகிச் சென்றான். மேசையிலிருந்த தட்டில் நறுக்கிவைக்கப்பட்டிருந்த ஆப்பிள், நிறம் மாறிப்போயிருந்தது. அவள் அதில் ஒரு துண்டைக் கூட எடுத்துக்கொண்டிருக்கவில்லை. சற்றுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, எதிர்பார்த்திருந்தபடியே அந்தச் சிவப்பு நிற ஃபாஸினோ ஏற்கனவே புறப்பட்டுப் போயிருந்தது.


  •  மயிலன் ஜி சின்னப்பன்

நன்றி ஓவியம் : Madjid Art Print 

 

3 COMMENTS

  1. கதையின் ஆரம்பத்தில் வரும் மதுக்கூடத்தில் முன் உள்ள சிலை குறித்த வர்ணனைகள் அபாரம். ஒரு ஓவியன் தான் பார்த்த கலை வடிவத்தை, அழகை, வார்த்தையால் விளக்கும்செழுமைப்படுத்திய வரிகள். கதையில் வரும் உரையாடல்கள் அட்டகாசம். நிஜமாகவே ஒரு குறும்படம் பார்ப்பதைப்போன்ற உணர்வை தந்தது. Millennials பார்வையில் ஆண், பெண் உறவு, Live-In, மற்றும் முற்போக்கு சிந்தனை எவ்வாறு ஆணுக்கும் பெண்ணிற்கும் வேறுபடுகிறது மற்றும் இது சார்ந்த உளவியல் சிக்கல்களே இக்கதையின் பேசுபொருள். உரையாடல்கள் மூலம் ஒரு சிறுகதையை நகர்த்தி செல்வது சவாலான விஷயம். மயிலன் மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். அற்புதமான கதை சொல்லல் திறமை. வாழ்த்துக்கள்

  2. இயல்பின் இருப்பிடமான எழுத்து. எளிமையான மற்றும் நேர்மையான கருத்துக்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ள விதத்தை ரசித்தேன் . சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்திக்கொண்டு செல்லும் விதமும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.