இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன்
என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள்
அப்போதுதான் முதன்முறையாக
சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன்
அச்சு அசல் அது
மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது
நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன்
அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு
வலியும் வலிசார்ந்த இடமும் ஆறாம் திணை
இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு நீளக்குச்சி
இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு பெரிய பாரம்
இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு ஆழ்ந்த தூண்டில்
இந்த வாழ்வில் இப்போது எனக்கென நான் சூட்டிய பெயர் இருக்கிறது
பொன்மடலின் அருகே அதை நான் மெல்ல உச்சரிப்பேன்.
– நிலாகண்ணன்
அருமை அண்ணா