நீங்குதல்
எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன.
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தானே தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவார்கள்
காலத்தை தூவி விசுறும் பகல் கனவுகள்
ஏன் காணப்படுகின்றன
மணல் புயல்களின் சூறைகளை
மூடிக்கொண்டிருக்கும் புற்றுகளின் சுரங்கங்கள்
இடம்பெயரக் கூடியது.
புற்று மணல் நிறம் மாறி மாறி
கனவின் சாயலை உமிழ்கின்றது
சமிக்ஞைகள் வழங்கப்பட்ட எறும்புகள்
புற்றிலிருந்து விரைகின்றன.
மர்மங்கள் வெளியேறும்
மணிக்கட்டின் அறுந்த நரம்பிலிருந்து
வழியும் குருதியில்
அந்தியின் சூரிய ஒளி பட்டு ஒளிர்கிறது.
உயிர்ச்சொல்
நீலநாரை
உயிர்ச்சொல்லின்
மேலிருந்த கோதுகளை உடைத்தாள்
குஞ்சுப் பறவையின்
மெழுகுச் சொண்டு ஒளிர்ந்தது
இருபுறமும்
பன்னிரெண்டு சிறகுகள் விரிந்தன
ஒன்றைப்போல் இல்லாத
வெவ்வேறு நிறங்கள் அப்பறவைக்கு.
முதல் தீனியாக
நீலநாரையின் முத்தத்தைத் தின்றது.
பூமியின்பள்ளத்தாக்குகளை
மரகத நிறங்களால்
நிறைப்பேன் என்றது.
உடலைச் சிலிர்த்து
பறப்பதற்கு முன்
அப்பறவை
தன் பெயரை “நுக்தா“ என்றது.
-அனார்
கவிஞர் அனாரின் கவிதைகள் தனியோரு வார்த்தை மாய வித்தை, சொற்களை இப்படியெல்லாம் கருத்தரிக்க செய்ய முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறது