கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா
இடம் : கலைச் செல்வியின் வீடு.
காட்சி 1
( கலைச் செல்வி கையிலிருந்த கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்)
அப்பா : ”எதுக்கு கேக்?”
கலைச்செல்வி : “உலகம் அழியாமெத் தப்பிச்சிருச்சு.. அதுக்குத்தா..”
அப்பா : “ எத்தினி மணிக்கு உலகம் அழியுமுன்னாங்க செல்வி..”
கலைச்செல்வி : “ மத்தியானம் மூணு மணி “
அப்பா : “ இல்லே.. மாயன் காலண்டர்லே ராத்திரி பன்னிரண்டு”
கலைச்செல்வி : “ அதுவும் கடந்து போயிருச்சு . நல்லதுதா .”
அப்பா : “ செரி .. தப்புச்சுட்டோம்.”
கலைச்செல்வி : “ ஒரு பெரிய எச்சரிக்கை.. எச்சரிக்கையா யாரும் சரியா எடுத்துkகலே போல “
( அப்பாவின் கையில் இருக்கும் கேக்கைப் பார்க்கிறார் )
. கலைச்செல்வி : “ அம்மா செம்பருத்தி எப்பிடி இருக்கா”
அம்மா : “ இருக்கா . இத்தனி நேரம் எப்பிடி மறந்திட்டு இருந்தேன்னு ஆச்சர்யம்தா
( கலைச்செல்வி கல்லூரி விடுதியில் இருந்து திரும்பியிருந்தாள்.கையில் கொண்டு வந்த கனத்த பை வாசலில் கிடந்தது. அழுக்குத்துணிகள் நிறைய இருந்தன. எல்லாம் அம்மா துவைத்துப் போட என்று கொண்டு வந்திருந்தாள். துணிப்பையைப் பார்த்தபடி இடது பக்கம் காலி இடத்தில் இருக்கும் தோட்டத்திற்குச் செல்கிறாள் )
காட்சி 2
அப்பா: “என்ன திடீர்ன்னு லீவு ..காலேஜ்?”
கலைச்செல்வி : உலகம் அழிகிற நாள் என்று களேபரமா இருந்துச்சு கல்லூரியில “ டெஸ்ட் வேண்டாம். கண்டிப்பு வேண்டாம். உலகம்தா அழியப் போகிறதே “ ன்னு ஆசிரியைகளை கிண்டலடிச்சு பாடம் நடத்தாம செஞ்சாங்க.. சனின்னு விடுதிக்கும் விடுமுறை விட்டாங்க. . திவ்யா ஆசிரியை” எல்லாரும் கோயிலுக்குப் போய் சாமிக்கு தெங்க்ஸ் பண்ணுங்க “ ன்னாங்க .” காசிக்குப் போனா தப்பிச்சுக்கலாம். எல்லாம் அழிஞ்சாலும் காசி அழியாதுன்னு கடைசி நேரத்திலே ரயில் ஏறுன கோஷ்டியிலே எங்க தாத்தாவும் இருந்தார்”ன்னாங்க தனலட்சுமி மாம். எல்லாம பொய்ன்னு அறிவியல் இயக்க பிரசுரங்களை எக்கோ கிளப் மாணவிகள் நாலு நாள் முன்னம் இருந்தே கொடுத்துட்டு இருந்தாங்க. எல்லாம் ஒரே ரகளையா இருதுச்சு.விடுமுறை வுட்டுட்டாங்க
அம்மா: “அப்பப்போ உலகம் அழியுதுன்னு இப்பிடி ஏதாச்சும் களேபரம் இருந்துட்டே இருக்கு. அப்புறம் கொறையுது. ஒண்னூம் இல்லாமெப் பேகுது.நல்லதுதா .”
( அப்பாவின் குட்டிக் கார் தெரு முன்னால் நிற்பதை தூரப்பார்வையில் பார்க்க்கிறாள் கலைச்செல்வி… அப்பா வீட்டு காம்பவுண்ட்டுள் காரை நிறுத்த வரும் போது இடது பக்கம் இடிக்கிறதென்று ப்ப்பாளி மரத்தை வெட்டியிருந்தார். அந்த இடம் வெறுமையாகக் கிடந்தது).
கலைச்செல்வி “ என்னப்பா இப்பிடி பண்ணிட்டீங்க ”
அப்பா : “கார் உள்ளே வர முடியலே.”
கலைச்செல்வி “ அதுக்காக மரத்தை வெட்டறதா..’பப்பாளிப் பழம்..”
அப்பா : “ அதுக்கென்ன தேவைன்னா பழமுதிர்சோலையிலெ வாங்கிக்கலாம்”
கலைச்செல்வி “ கிலோ நாப்பது ரூபாய்.. “
அப்பா : “ பரவாயில்லை.தேவைன்னா வாங்கித்தானே ஆகணும்.”
கலைச்செல்வி: பணம் வேறையப்பா . செடி கொடிக முக்கியமில்லையா .மாலை நேரத்துக் காத்து இல்ல. ஜெனரேட்டர்கள் ஓடும் சப்தம் இப்பிடி கேக்குது .
அம்மா: அப்பாவுக்கு மகள் உபதேசம் ( செடிகளைப் பார்த்து )
கலைச்செல்வி: எப்பிடி இருக்கீங்க( பக்கத்தில் வந்து நிற்கும் அம்மாவைப் பார்க்கிறாள் )
கலைச்செல்வி : “ என்னம்மா.. செடிக வாடிக் கெடக்கு “.
( அப்பா கேக்கைச் சுவைத்துக் கொண்டு அங்கு வருகிறார் )
( கலைச் செல்வி.கோழிக் கொண்டை செடியைத் தடவுகிறாள் . ரோஜாச் செடிகள் தலை தாழ்ந்திருப்பதைப் பார்க்கிறாள் .)
கலைச்செல்வி : “ என்னம்மா.. தண்ணி ஊத்தறதில்லையா ”
அம்மா : “ ஊத்தறன்.. நான் செய்யற வேலையிலெ இதுக்கு தண்ணி ஊத்தறது பெரிசு இல்லையே..”
கலைச்செல்வி : “ அப்புறம்.. ஏதாச்சும் புழு பூச்சி பட்டிருச்சா.. “
அம்மா : “ அப்பிடி ஒண்ணும் தெரியலே.. “
கலைச்செல்வி : “ அப்புறம்..”
“ நீயிருந்தா அதுக கூட பேசிகிட்டுருப்பே. அதுக கூட பேச ஆளில்ல பாரேன்”
கலைச்செல்வி : “ அதுக்குன்னு இவ்வளவு கோபமா இவங்களுக்கு.. “
“ உங்கப்பா வேறெ காரை காம்பவுண்டுக்குள்ள கொண்டுட்டு வர்றப்போ இடிக்குது. இதையெல்லாம் எடுத்தறணும்ன்னு சொல்லிட்டிருந்தார். அதக் கேட்டு மனசு கெட்டுச் போச்சு போல. வாடுதுக. முந்தியே பப்பாளி மரத்தெ வெட்டிட்டார்”
( கலைச்செல்வி முகம் இருள் அடைகிறது)
கலைச்செல்வி : அன்பாக பேசலையென்னா செடிகளும் வாடுமே.
அம்மா : ஆமா. டெய்லி அதோடு பேசறதுக்கு யாரிருக்கா?
கலைச்செல்வி :” உலகம் வாடுவதோ அழிவதோ அதனிடம் அன்பாகப் பேசுபவர்கள் குறையறதாலாதா..”
அம்மா : ச்ச்.. ஆமா..ஆமா
( கலைச்செல்வி ஆழ்ந்து யோசிக்கிறாள் )
அம்மா : “என்ன யோசிக்கறே.. செடிக வாடுறதப்பத்தியா.”
கலைச்செல்வி : “ இல்லம்மா உலகம் வாடறதெப்பத்தி..”
— சுப்ரபாரதிமணியன்.