ஒன்பதாவது கனலி இணையஇதழில், ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு ஒரு மணி நேர வாசிப்புக்குத் தீனியாக எழுதிய மிக நீண்ட கடிதத்தின் முதல் பகுதியை வாசித்திருப்பீர்கள். இம்மாத கனலி இதழ், ‘என் மென்நயமிகு காமக்கிழத்திகள்’, ‘குந்துகைகள்’ ஆகிய கவிதைகளைத் தன்னனகத்தே கொண்ட இரண்டாவது ‘தீர்க்கதரிசனக் கடிதத்தின்’ இரண்டாம் பாகத்தை ஏந்தி வருகிறது.
ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு எழுதிய கடிதம் (பகுதி 2)
உரைக்கு வெளியே, இங்கு நான் இரண்டாவது பாடலை இடைநுழைக்கிறேன்: அதற்கு ஒரு நட்புச்செவி கொடுங்கள்; எல்லோரும் மகிழ்வார்கள். கையில் வில் வைத்திருக்கிறேன், நான் தொடங்குகிறேன்:
என் மென்நயமிகு காமக்கிழத்திகள்
கண்ணீர்க் கசாயம்
முட்டைக் கோசுப் பச்சை
வானத்தைக் கழுவுகிறது:
மென்றளிர்கள் தாங்கி,
சொட்டுச் சொட்டாய் சொட்டுகிற
மரத்தின் கீழே,
உங்கள் நீர்புகாக்கள்.
விநோதமான நிலவுகளால்
வெண்மையாக்கப் பட்டு
மருளும் வட்ட விழிகளுடன்,
உங்கள் முழங்கால்களை
ஒன்றுடனொன்று
இடித்துக் கொள்ளுங்கள்,
என் அழகிலிகளே!
அந்த நாட்களில் நாங்கள்
ஒருவரையொருவர் நேசித்தோம்,
நீலநிற அழகிலியே!
சிக்வீட்டையும் (chickweed)
அவித்த முட்டையையும்
விரும்பி உண்டிருந்தோம்!
ஒரு மாலை வேளையதில்
கவிஞன் என்னை நீ
நறுநெய் ஆட்டினாய்,
பொன்னிற அழகிலியே:
இறங்கி வா இங்கே,
என் மடிமீது உனையிருத்திச்
சடாரொலி எழுப்புதற்கு;
உன் கூந்தல் மெருகுநெய்யை
நான் வாந்தி எடுத்தேன்,
கருநிறஅழகிலியே!
என் புருவத்தின் விளிம்பில்
நீ எந்தன் மண்டலின்
இசையைத் துண்டிப்பாயாக.
ஐயையே! செங்கூந்தல் அழகிலியே!
என் உலர்ந்த எச்சில் இன்னமும் உன்
திரண்டுருண்ட கொங்கையதன்
சிறுமடிப்பைக் கறைபடுத்துகிறது!
ஓ! என் மென்நயமிகு காமக்கிழத்திகளே!
எப்படி உங்களை வெறுப்பது!
வலிமிகும் கொப்புளங்களுக்குப்
பிளாத்திரியைப் போல,
உங்கள் அழகிலிப் பெருந்தனங்கள்!
என் உணர்வுச் சிறுபானைகளை
மிதித்துத் துவையுங்கள்!
இப்போது குதியுங்கள்!
என் ஆடல்நங்கையர் ஆகிடுங்கள்!
ஒரே ஒரு கணம்!
உங்கள் காறை என்புகள்
மூட்டுகளினின்றும் கழன்றுவிட்டன,
ஓ! என் காதலிகாள்!
முட்டுக்கட்டையாய் இருக்கும்
முதுகிலொரு நட்சத்திரம்,
உங்கள் திருப்பங்களில் திரும்புங்களேன்!
இன்னும், யாவற்றிலும் மேலாக,
இந்தத் தோள் மாமிசத்துக்காகத் தான்
நான் செய்யுள்களைப் படைத்துள்ளேன்!
நேசித்த குற்றத்துக்காக உங்கள்
இடுப்புகளை ஒடிக்க அவாவுகிறேன்!
தோல்வியுற்ற நட்சத்திரங்களின்
மங்கிய குவியல்
மூலைகளை நிரப்புகிறது!
நீங்கள் தெய்வீக ஒளியிழந்து
இழிநிலைக்குச் செலுத்தப்படுவீர்கள்!
விநோதமான நிலவுகளால்
வெண்மையாக்கப் பட்டு
மருளும் வட்ட விழிகளுடன்,
உங்கள் முழங்கால்களை
ஒன்றுடனொன்று
இடித்துக் கொள்ளுங்கள்,
என் அழகிலிகளே!
– ஆ. ரைம்போ.
அவ்வளவே. மேலும், தங்கள் மேலான கவனத்துக்கு: அஞ்சலில் அறுபது சென்ரைமிற்கும் (centimes) மேலாகத் தங்கள் பணம் செலுத்த நேரிடும் என்று நான் பயப்படவில்லை என்றால் – ஏழு மாதங்களாக ஒரு வெண்கல சதம் கூட இல்லாத, பிழைக்க வழி தெரியாத ஏழையான நான் – நூறு அறுசீர் செய்யுளடிகளில் ‘பாரிஸ் காதலர்கள்’, இருநூறு அறுசீர் செய்யுளடிகளில் ‘பாரிஸ் இறப்பு’ இரண்டையும் இத்துடன் தங்களுக்கு அனுப்புவேன் ஐயா!
நான் தொடர்கிறேன்:
ஆதலால், கவிஞன் என்பவன் உண்மையில் ஆர்வக்கனல் அழன்றெழும் திருடன்.
மனிதர்களுக்கு, ஏன் விலங்குகளுக்கும் அவனே பொறுப்பு; அவன் தனது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், உணர வேண்டும், தொட வேண்டும், கேட்க வேண்டும்; அவன் அங்கிருந்து திரும்பக் கொண்டுவருவதற்கு ஒரு உருவம் இருந்தால், அவன் உருவம் தருகிறான்; அது உருவமற்றதாக இருந்தால், அவன் அதை உருவமற்றதாகக் கொடுக்கிறான். ஒரு மொழியானது கண்டுபிடிக்கப்பட வேண்டியதொன்று.
தவிரவும், ஒவ்வொரு சொல்லும் ஒரு நினைவுத்தோற்றமாக இருப்பதால், உலகப்பொதுமொழிக்கான வேளை ஒன்று வரும். எந்தவொரு மொழியினதும் அகராதியை முழுமைபெறச் செய்பவர், ஒரு கல்விமானாக – ஒரு புதைப்படிவத்தைக் காட்டிலும் உயிர்ப்பற்றவராகவும் – இருத்தல் வேண்டும். எழுத்துக்களின் முதல் எழுத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிற பலவீன சிந்தை உடையவர்கள் விரைவில் பித்துப்பிடித்தவர்கள் ஆகிவிடுவார்கள்!
இந்த மொழியானது, உயிர்நிலையிலிருந்து உயிர்நிலைக்காக, நறுமணங்கள், ஒலிகள், வண்ணங்கள், சிந்தனையில் இருந்து சிந்தனையைப் பற்றியிருக்கும் இழுக்கும் யாவற்றையும் தன்னகத்தே கொண்டமையும். கவிஞன் தனது சொந்த நேரத்தில் உலகளாவிய உயிர்நிலையின் அறியப்படாத விழிப்புணர்வின் அளவை வரையறுப்பார்; அவன் தனது சிந்தனையை வகுப்பதை விட, முன்னேற்றத்தை நோக்கி அவன் நடப்பதைக் குறிப்பதை விட அதிகமாக கொடுப்பார்! மகத்துவம் விதிமுறையாகும், சகலராலும் ஈர்த்துக்கொள்ளப்படும், அவன் உண்மையில் முன்னேற்றத்தின் பெருக்கற் காரணியாகத் திகழ்வான்.
நீங்கள் பார்ப்பது போல் எதிர்காலம் உலோகாயதமாக இருக்கும்; எப்போதும் தொகைமையும் ஒத்திசைவும் நிரம்பப்பெற்றிருக்கும். இக்கவிதைகள் நீடித்து நிலைத்திருக்குந் தகையனவாக உருவாக்கப்படும். உண்மையில், ஒருவகையில் அது கிரேக்க செய்யுட்கலையாகவே அப்போதும் இருக்கும்.
கவிஞர்கள் குடிமக்கள் ஆதலின், நிலைபேறுடைய கலைக்கு அதன் கடமை இருக்கும். கவிதை இனிமேல் நிகழ்ச்சிப் போக்கிலிருந்து சந்தத்தை எடுக்காது, அதனிலும் மேம்பட்டதாய் இருக்கும்.
இந்தக் கவிஞர்கள் வாழ்ந்திருப்பார்கள்! பெண்ணின் முடிவிலா அடிமைத்தனம் உடைக்கப்படும் போது, இதுவரை இருந்தது போன்று அருவருப்புக்கு உரியவளாகவன்றி அவள் தனக்காக வாழும்போது, ஆண் அவளுக்குச் சுதந்திரத்தை அளித்த பின், அவளும் ஒரு கவிதாயினியாக இருப்பாள். பெண்ணும் அறியாதவை சிலவற்றைக் கண்டறிவாள்! அவளது நினைவுத்தோற்றங்களின் உலகம் நம்முடையதிலும் வேறுபட்டதாக இருக்குமா? அவள் நொதுமலான, ஆழங்காண முடியாத, வெறுத்து ஒதுக்கப்படுகிற, புலன்களுக்கு மகிழ்வளிக்கிற விடயங்களைக் கண்டறிவாள். நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்வோம், நாங்கள் அவற்றைப் புரிந்து கொள்வோம்.
இதற்கிடையில், கவிஞர்களிடம் புதிய நினைவுத்தோற்றங்களையும், செயல்முறைகளையும் கோருவோம். இந்த கோரிக்கையை அவர்கள் பூர்த்தி செய்ததாகப் புத்திசாலிகள் அனைவரும் விரைவில் நம்புவார்கள். அது அவ்வாறு இல்லை!
முதல் கற்பனாவாதிகள் அதை முழுமையாக உணராத தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள். அவர்களது உயிர்நிலையின் நயமேம்பாடு விபத்துக்களுடனேயே தொடங்கியது. கைவிடப்பட்ட பின்பும் தன்னாற்றல் கொண்டு இடம்பெயர்ந்து இயங்கு பொறிகள் எரிந்து கொண்டு தானிருக்கும், சற்றுத் தூரத்திற்குப் புகையிரதத்தை இழுத்துச்செல்லும். லமஹ்டினே சில நேரங்களில் தீர்க்கதரிசி; ஆனால் பழைய வடிவத்துக்குக் கட்டுப்பட்டவர். ஹியூகோவும் பிடிவாதக்காரர் தான். அவரது இறுதிப் படைப்புகள் சில காணுந்திறம் கொண்டமைந்துள்ளன. ‘பரிதாபத்துக்குரியவர்கள்’ உண்மையில் ஒரு நல்ல கவிதை. ‘தண்டனைகள்’ என்னிடம் இருக்கிறது. ‘ஸ்டெல்லா’ ஹியூகோவின் வரையறுக்கப்பட்ட காணுந்திறத்தைக் காட்டுகிறது. அதிகளவிலான பெல்மொண்டேட்களும் லமென்னேக்களும், யெகோவாக்களும் தூபிகளும், பழம்பெரும் அறிவுபிறழ்ந்த மகத்துவங்கள்.
முஸே எங்களுக்குப் பதினான்கு மடங்கு அருவருக்கத் தக்கவர், தூரதிருட்டிகளால் தன்னிலை இழந்து தலைமுறைகளைத் துன்புறுத்தி – அவரது திப்பியமான தேவாங்குத்தனத்தால் யாருக்கு அவமானம்! ஓ! உப்புச்சப்பில்லாத கதைகளும் பழமொழிகளும்! ஓ நுய்ற்! ஓ ரோல்லா, ஓ நமவுனா, ஓ சாலிஸ்! எல்லாம் பிரெஞ்சு, அதாவது மிக உயர்ந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கத் தக்கது. பிரெஞ்சு தான், பாரிசியன் அல்ல! ரபேலைஸ், வால்டேர், ஜீன் லா ஃபோன்டைன் ஆகியோரை ஊக்கப்படுத்திய தீய மேதைகளின் மேலும் ஒரு படைப்பு! எம். டெய்ன் அளித்த வர்ணனையுடன்! வசந்தம் போன்றது, முஸேயின் அறிவு! வசீகரமான, அவரது காதல்! அங்கே அது எனாமல் ஓவியம், திடமான கவிதை! பிரெஞ்சு கவிதைகள் நீண்ட காலத்துக்கு இரசிக்கப்படும், ஆனால் பிரான்சில் தான். ஒவ்வொரு மளிகைக் கடைக்காரர் பையனும் ஒரு ரோலெஸ்க் உரையைச் சரளமாக ஆற்றுவான். ஒவ்வொரு கருத்தரங்காளரும் ஒரு குறிப்புப் புத்தகத்தின் ரகசியத்தில் ஐந்நூறு செய்யுள்களை மறைத்து வைத்திருப்பார்கள். பதினைந்து வயதில், இந்த உணர்வுப் பிரவகிப்புகள் பதின்மவயதினரை உன்மத்தராக ஆக்குகின்றன. பதினாறு வயதில், அவர்கள் உணர்வோடு ஒப்புவிப்பதில் திருப்தி அடைகிறார்கள். பதினெட்டு வயதில், ஏன் பதினேழு வயதில் கூட, ஆற்றலுள்ள ஒவ்வொரு மாணவனும் ரோலா செய்கிறான். ரோலா எழுதுகிறான்! அநேகமாக சிலர் இன்னும் இதற்காக ஏங்குகிறார்கள். முஸேயினால் எதுவும் செய்ய முடியவில்லை; திரைச்சீலைகளின் மறைவில் தூரதிருட்டிகள் இருந்தன: அவர் கண்கள் மூடி இருந்தன. சேறும் சகதியுமான பிரெஞ்சுத் தவறணையிலிருந்து பள்ளி மேசைக்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த நல்ல சடலம் இறந்துவிட்டது, இனிமேல், நம்முடைய அருவருப்பால் அதை எழுப்ப கூட கவலைப்படுவோம்!
இரண்டாவது கற்பனாவாதிகள் மிகுந்த தீர்க்கதரிசிகள்: தியோபில், கோற்றியர், லெகோன்ட் டி லிஸ்ல், தியோடர் டி பான்வில். ஆனால் கண்ணுக்குத் தெரியாதவற்றை ஆராய்வதும், கேட்காததைக் கேட்பதும், வழக்கொழிந்த விடயங்களின் மெய்ப்பொருளை மீளப்பெறுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆதலால், போட்லயரே முதல் தீர்க்கதரிசி. கவிஞர்களின் அரசர். ஒரு மெய்யான கடவுள். ஆனால் அவர் ஒரு கலை வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்தார். மிகவும் பாராட்டப்பட்ட அவரது வடிவம் கடுமையானது: அறியப்படாதவற்றின் கண்டுபிடிப்புகள் புதிய வடிவங்களைக் கோருகின்றன.
பழைய வடிவங்களில் நொடித்துப் போன அப்பாவிகளுள், ஏ.ரெனாட் தனது ரோலாவைச் செய்துள்ளார். எல். கிராண்டெட் தனது ரோலாவைச் செய்துள்ளார். த கோல்ஸ் மற்றும் த முஸே, ஜி. லாஃபெனெஸ்ட்ரே, கோரன், கிளை. போப் லின், சோலரி, எல். சாலேஸ்; கல்விமான்கள் மார்க், ஐகார்ட், தியூரியட்; இறந்தவர்களும் அறிவிலிகளும், ஆட்ரான், பார்பியர், எல். பிச்சாட், லெமொனைன், டெஷ்சாம்ப்ஸ், டெசார்ட்ஸ்; ஊடகவியலாளர்கள், எல். கிளாடல், ராபர்ட் லுசார்ச், எக்ஸ். டி ரிச்சர்ட்; வெறியர்கள், சி. மென்டிஸ்; போஹேமியர்கள்; பெண்கள்; ஆற்றலுடையவர்கள், லியோன் டியெர்க்ஸ், சல்லி-ப்ருதோம், கோப்பே – பர்னசியன் என்று அழைக்கப்படும் புதிய கலைக்கூடம் இரண்டு தீர்க்கதரிசிகளைக் கொண்டுள்ளது: ஆல்பர்ட் மெராட்டும் பால் வெராலினும் – பின்னவர் ஒரு உண்மையான கவிஞர்.
அவ்வளவே. இவ்வண்ணம் நான் என்னை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கிக் கொள்ளப் பாடுபடுகிறேன். ஒரு கடமைபேணுகின்ற பாடலுடன் முடித்துக் கொள்வோம்:
குந்துகைகள்
வயிற்றைக் கலக்குவதை அவன் உணர்ந்த போது
மிகவும் தாமதமாகி விட்டது,
சகோதரர் மிலோட்டஸ், முகட்டுப் பலகணியில்
ஒரு கண்ணும்
தாங்கள் பதில் அனுப்பாதிருப்பதென்பது வெறுக்கத்தக்கது: விரைவாக அனுப்புங்கள். ஏனென்றால், ஒருவேளை ஒரு வாரத்தில் நான் பாரிஸில் இருப்பேன்.
விடைபெறுகிறேன்.
ஆ. ரைம்போ.
ஆங்கிலம்/தமிழ் : குகதர்சனி (தமிழ்க்கிழவி)
பிரெஞ்சு/ஆங்கிலம்: கேத்தரின் (கடிதம்), ஆலிவர் பெர்னார்ட்(கவிதை)
நன்றி : www.mag4.net
- ஆசிரியர் குறிப்பு :
ஜீன் நிக்கோலாஸ் ஆர்தர் ரைம்போ (20.10.1854 – 10.11.1891) வடகிழக்கு பிரான்சின் ஆர்டென்னெஸ் பகுதியில் உள்ள சார்லவில்லில் வளர்ந்தார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஞானம் மிக்க குழந்தையாகப் போற்றப்பட்ட ரைம்போ, பிரெஞ்ச் குறியீட்டு இயக்கக் கவிஞராக அறியப்பட்டவர். தன் 16 வயதிலிருந்து 19 வயதிற்குள் கவிதை எழுதி முடித்தவர். ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
அவர் சிறு வயதில், பக்தியும் பணிவுமுள்ள மாணவராக, மற்றைய மாணவர்கள் அனைவர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கோலேஜ் டி சார்லவில்லில் அனைத்துப் பாடங்களிலும், குறிப்பாக இலக்கியத்திலும் காண்பித்த தனது அசாத்தியத் திறமையால் தனது ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். ரைம்போ தீவிரமாக வாசிப்பவராயிருந்தார். சமகால, கடந்தகால பிரெஞ்சு இலக்கியங்களை எல்லாம் வெகு விரைவில் துறைபோகக் கற்றதோடு, இலத்தீன் மொழிக் கவிதைகளைப் படைப்பதிலும் வல்லவாராயிருந்தார்.
குகதர்சனி: பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகப் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், குறும்படங்கள், விரிவுரைகள், அகராதி அத்தியாயங்கள், ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள், மருத்துவர்/ இயன்மருத்துவர்/ உளநலவியலாளர்/ நகரசபை வாடிக்கையாளர் சந்திப்புகள், சத்திர சிகிச்சை முற்பொழிப்புக்கள், குடிவரவு நேர்காணல்கள், நீதிமன்ற சாட்சிக்கூற்றுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவற்றை மொழி/உரை பெயர்த்தவர்.
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
நன்றி சகோதரி.
அரிய இலக்கியத்தை
அறிமுகம் செய்தமைக்கு.
மொழியாக்கத்திற்க்கு சற்றே முரண்டு பிடிக்கும் சொற்களால் எழுதியிருப்பார் போல் தெரிகிறது. அஃதையும் எளிதாக்க அருமையாக மொழியாக்கம் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இனிய பாராட்டுக்கள் சகோதரி..💐💐
உண்மை தான் சகோ.. தமிழாக்கம் செய்வதற்குச் சற்று சவாலான கடிதம் தான்.. குழந்தை ஷேக்ஸ்பியரல்லவா..! இயன்றளவு செம்மையாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன். தங்கள் ஊக்குவிப்பான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நன்றியும் அன்பும் சகோ.
அருமை… வணக்கம் வாழ்த்துக்கள்
நன்றியும் அன்பும் சகோ.
மிகவும் சவாலான வேலையாக தான் ரைம்போவின் கடிதங்களின் மொழிபெயர்ப்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அருமை! வாழ்த்துக்கள் சகோதரி. ரைம்போவை பற்றி அறிந்து கொண்டால் இந்த கடிதம் மேலும் சுவைபடும் போல…
ஆமாம் சகோ. ரைம்போ வைத் தேடி வாசியுங்கள். நன்றியும் அன்பும்.