ஈடிபஸ்


நான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும்? எங்கே தான் என்னை அழைக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ஒரு ஊரின் பெயரைச் சொன்னான். அது ஆந்திராவில் இருந்தது. ஏறக்குறைய இருந்த பணிகளை எல்லாம் கொஞ்சம் ஓரமாக மூட்டை கட்டிப் போட்டு புறப்பட்டேன். அவனிடம், அதுதான் நவநீதனிடம் கார் இருந்தது. பகல் நேரங்களில் குடிப்பதில்லை என்கிற செமி பாலிசி இருந்தாலும் நாங்கள் புறப்பட்ட நான்கு மணி விடியற்காலையிலேயே கூட ஒரு அறுபது மில்லி விஸ்கியால் தொண்டையை நனைத்துக் கொண்டேன். வயிற்றுக்குள் இருந்த எரிச்சல் ஒருவாறான வெறிப்பை உண்டு பண்ணும். வண்டியோட்டுகிறவனின் சில்லி பிரச்சினைகளை யோசித்துக் கொண்டே வந்தேன். என் வயதுக்கு இதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று சொல்ல முடியாது. ஆனால் நான் காதல் விஷயங்களைச் சொல்லும்போது வெளுத்து வாங்குவதாகவும், இதில் உங்களுக்குத் தெரியாதது இருக்க முடியுமா என்பதற்கும் சில்லிட்டு பார்க்கலாம் என்று விட்டேன். நாங்கள் இரண்டு பேரும் தோளில் கைபோட்டுக் கொள்கிறவர்களாக இருந்தாலும் நவநீதன் எனது நண்பனின் மகன். பத்து பேராகக் கூட்டம் கூடிக் கொண்டு இலக்கியம் பேசி சினிமா பேசி நாடகம் நடத்தி வெட்டியாகவும் பிசியாகவும் இருந்த கூட்டத்தில் இருந்தவாரிருந்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது என்று வந்த கட்டத்தில் இவனது அப்பன் கப்பலில் தன்னை ஒளித்துக் கொண்டு போனான். இரண்டு மூன்று  நாட்கள் சாலேட்டுகளைத் தின்று தண்ணீர் தீர்ந்ததும் மூத்திரத்தைக குடித்துக் கொண்டு மறைந்திருந்து கப்பல் கரைக்குத் திரும்ப முடியாத தூரத்துக்குப் போனதும் வேண்டுமென்றே வெளிப்பட்டு  அதிகாரிகளிடம் மாட்டினான். கேப்டன் சாட்டையால் அடித்தான் கூட. அப்புறம் வேலை கொடுத்தான். நல்ல சம்பளம் கொடுத்தான். உப்புக்காற்றில் இரும்பு மீது  பற்றுகிற துருவை ராட்ஷச சுத்தியலால் பெயர்த்துக் கொண்டு, பெயின்ட் அடித்துக் கொண்டே வருவார்கள். எலும்பை முறிக்கிற அந்த வேலையிலிருந்து காத்திருந்து ஒரு நாள் துபாயில் இறங்கி, வேறு ஒரு கப்பலில் ஏறி அடிபட்டு கடைசியாக லண்டனில் இறங்க முடிந்தது. கொஞ்ச நாள் அங்கே ஓரிரு பெட்ரோல் பங்குகளில் வேலையில் இருந்து, சில்லறை தகராறுகளால் சிறையில் இருந்து முடிவாக சுவிஸ் நாட்டை அடைந்து அங்கே சொந்தத்தில் ஒரு பெண்ணைக் கட்டினான். பணம் உண்டாக்கினான். இதுகளையும் உண்டாக்கினான். வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத இது ஒரு தலைமுறை. இல்லையென்றால் ஒரு பிரேக்கப்புக்கு இவ்வளவு நடுங்குவானா? கனடாவிலிருந்து வந்து என்னையும் ஒட்டிக் கொண்டு கிளம்பி விட்டானே?

எட்டு மணிக்கு இன்னும் ஒரு பெக்கை போட்டுக் கொண்டு மசாலா தோசை சாப்பிட்ட சுகம், அதை பத்து பக்கத்துக்கு எழுதலாம்.

தாஸ் அண்ணா !

ம்?

ரேகா கிட்ட என்ன பேசப் போறோம்? அத யோசிச்சுக் கொண்டே வாங்க !

அவனை நன்றாகத் திட்ட வேண்டும் என்று வந்தது. ஆனால் அவன் இப்போது என்னை மதிப்பதன் பொருட்டு அல்லவா உருட்டிக் கொண்டிருக்கிறான்? இருவரும் முகப் புத்தகத்தில் பழக்கமானவர்கள். கண்டிப்பாக அழகியாகத் தான் இருப்பாள். மிகவும் சுட்டி, குறும்பி ,நாட்டி என்று என்னவெல்லாமோ. அதிகப்பிரசங்கி என்றும் சொல்லியிருக்கிறான். காதல் துவங்குவது எப்போதும் மதிப்பு மரியாதையாகத் தானே இருக்கும்? பின்னொரு நாள் இவனுக்கு காதல் உச்சந்தலையில் ஏறி அவளை கொஞ்சிக் கொண்டிருக்கும்போதுதான் அவள் இவனை ரொம்ப நாளாகவே வாடா, போடா என்று அழைத்துக் கொண்டிருப்பது புலப்பட்டது. பேசிய அனைத்தையும் முதலில் இருந்து மனதில் புரட்டியபோது சரி, நீ போனை வைடா மயிரு, அப்புறம் பேசிக்கலாம் ! என்று கூட சொல்லியிருக்கிறாள். இவன் மரியாதை பற்றி புத்தி புகட்டப் பார்த்திருக்கிறான். கோவில் குளம் போன்ற புகைப்படங்களைப் பதிவாகப் போட்டு அவளுக்கு tag பண்ணியிருக்கிறான். முக்கியமாக, தனது அம்மாவைப் பற்றி அவ்வப்போது கவனம் செய்தவாறு இருந்திருக்கிறான். என் அம்மா அப்படி. என் அம்மா இப்படி. நேற்று எனக்கு காய்ச்சல் வந்தது. பக்கத்தில் இருந்தவாறு இருந்தார்கள். கண்ணீர் சுரந்தவாறு இருந்தார்கள். உன்னைப் பற்றிக் கேட்டார்கள். அம்மா பேசுகிறார்கள்,பேசு ! இப்படியாக ஒரு முற்றுகை நடந்திருக்கிறது. ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் அம்மாவைக் கூட்டிக் கொண்டு இந்தியாவிற்கே வந்து நண்பனிடம் இருந்த சாவியை வாங்கி திருவான்மியூர் வீட்டைத் திறந்துகொண்டு அம்மாவை அதில் இருக்கச் செய்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு அவளைப் பார்க்க போயிருக்கிறான். அவள் அப்படி ஒரு சந்தோஷமடைந்தாள் என்பதை அவனே தான் சொன்னான். அப்படியே முத்தமிட்டவாறு கூட்டிப் போய் அவளது தோழியின் வீட்டில் உள்ள படுக்கையறையில் ஆடைகளை உரித்து அவனுக்கு மேல் இருந்து உடலுறவு கொண்டு விட்டு பக்கத்தில் படுத்துத் தூங்கியே விட்டாள். அப்போதும் அவளை எழுப்பி அம்மாவிடம் கூட்டிப் போயிருக்க முடியும். ஆனால் தூங்குவதற்கு முன் மூன்று பெக் ரம்மை விட்டுக் கொண்டதில் அவளது மூச்சுக் காற்று நாற்றமாக நாறியது. அது அவனது அம்மா ஒப்புக் கொள்ளக்கூடிய நாற்றம் அல்ல. மறுநாள் வேலை நிமித்தமாக அவள் வடக்கு பக்கமாக வேறு எதோ ஊருக்குப் போக வேண்டியதாகி போனில் ஒரு பை சொன்னதோடு மறைந்து போனாள். இவர்கள் விமானம் ஏறினார்கள். இவன் நான்கு நாள் அவளுடைய அழைப்புகளை எடுக்காமலிருந்து, அவளுடைய டெஸ்டுகளைப் படிக்காமல் இருந்து இறுதியாக ஒன்றைத் தான் கேட்டான். உனக்கு என் அம்மா முக்கியமா? உன் வேலை முக்கியமா?

அவளும் பெரிதாக பேச்சைத் தொடரவில்லை. சுருக்கமாகச் சொன்னாள். எனக்கு நான் தான் முக்கியம் ! மேலும் ஒன்றைக் கேட்டிருந்தாள். அதுதான் நவநீதனைப் போட்டு உலுக்கி விட்டது. உன் அம்மா என்ன பெரிய பருப்பா

நான் இரண்டு முறை இரண்டு விதமான ஆட்களுடன் அவர்களுடைய அம்மாக்களைப் பார்க்கப் போயிருக்கிறேன்.

அது குன்றுகளின் ஊர். பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து வந்து பக்கவாட்டில் இறங்கினால் அவ்வீட்டிற்குச் செல்ல மண்பாதை கூட இல்லை. அக்கம்பக்கத்தில் வீடுகள் முளைத்திருக்கவில்லை. யாராவது அங்கே இடம் வாங்கிப் போட்டிருக்க முடியுமா என்பதற்கு ஆதாரமில்லை. வெயில் மண்டையைப் பிளந்து கட்டிக் கொண்டிருந்தது. புதர் காடு தான். தூரத்திலிருந்தே அந்த ஓட்டுவீடு தெரிந்தவாறு இருந்தது. அதிலிருந்த ஒற்றைச் சன்னலில் மணியின் அம்மா எங்களைப் பார்த்தவாறு தான் இருந்திருக்கிறாள். உள்ளே நுழைந்ததும் அது எங்களுக்குத் தெரிய வந்தது. என்னைத் தெரிகிறதா என்பது போல கேட்டான் மணி.

அந்த அம்மா தலை அசைத்தார்கள்.

பேசுவதற்கு ஒன்றுமில்லை. மணி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் எப்போதாவது ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார்கள். கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொண்டிருந்த அவர்களுடைய கண்களில் ஒளியில்லை. அவனை செரித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தார்களா? ஒருவிதமான தர்ம சங்கடத்தினால் இருவரையும் பார்க்காத மாதிரி நான் அக்கம்பக்கம் பார்வையை சுழட்டி வேறு எங்கோ இருப்பது போல பாவனை பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு புகைப்படத்தில் அவர்களுடைய இரண்டு பிள்ளைகளின் முகங்களில் மூத்தவன் அப்படியே அச்சு அசலாக மணியைப் போலவே இருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு குட்டிப் பெண்ணின் புகைப்படமும் இருந்தது. அவளுக்குமே இவனது ஜாடை இருந்தது. கல்லூரிக்கும் பள்ளிக் கூடத்துக்கும் சென்றிருக்கலாம். அவர்களுடைய அப்பா ரயில்வேயில் இருக்கிறார். சாப்பிடக் கொடுக்க எதுவும் இல்லை என்பதாக அந்த அம்மா முனகியபோது பரவாயில்லை, பரவாயில்லை என்று எழுந்து கொண்டு விட்டோம். அப்படியே கிளம்பி வரவும் செய்தோம். அந்த அம்மா சரியென்று கூறி விட்டு மெளனமாக இருந்து விட, மணி டிரெயினில் தூங்கிக் கொண்டே வந்தான். அன்று இரவு எல்லோரும் வழக்கம் போல குடித்தாலும், யாருக்கும் நாங்கள் பயணம் சென்று திரும்பின கதை தெரியாது. படுக்கவும் செய்தோம். ஒருநாள் தம்பதியராகக் கோவிலுக்குச் சென்று இருந்த போது தன்னிடம் கொடுக்கப்பட்ட கைக்  குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார் அப்பா. அர்ச்சனை டிக்கெட் வாங்கப் போன அம்மா திரும்பவில்லை. அவர்களை அங்கே வந்து கூட்டிச் சென்றது அப்பாவுடைய நண்பர்தான். அதற்கு அப்புறம் வந்த பெண்ணினால் மணி வளர்ந்து வாழ்ந்ததெல்லாம் ஒரு திருகல் மட்டுமே. அவன் அந்த காலத்தைய அவமானங்களை ஒவ்வொரு நாளும் மென்று தின்ன வேண்டியிருந்தது. உண்மையில் அவன் நான்கு பேர் அதிகமாக இருக்கக் கூடிய ஒரு கூட்டத்தில் நிற்க பயப்படுவான்

எல்லோரும் தூங்கியிருக்க, மணி இலேசாக விசும்புவதை அறிந்தேன்.

நெஞ்சின் மீது யாரோ ஏறி உட்கார்ந்து விட்ட பாரத்துடன் மெல்ல தட்டிக் கொடுத்தேன்.

நல்லா இருக்கியான்னு கூட அந்த பொம்பள ஒரு வார்த்த கேக்கல பாத்தியா தாசா?

இரண்டாவது முறையாக நான் சென்றது கண்ணூர்.

சொன்னால் நம்ப முடியாது. அந்த அம்மா அதே மாதிரி ஒரு கட்டிலில் காலை வருடிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். என்னை துணையாகக் கூட்டிப் போன அண்ணனுக்கு மணியைக் காட்டிலும் வயது அதிகம். மூன்று வளர்ந்த பையன்கள். திடீர் என்று ஒருநாள் ஒரு துண்டுக் கனவில் அந்த அம்மா முகம் மின்னி விட்டுப் போக நெஞ்சில் ஒரு வலி வந்து கோடிழுத்து சென்றிருக்கிறது.  அப்பா ஒரு துஷ்டனாக வலம் வந்து அம்மாவை நொறுக்குபவராக இருந்திருக்கிறார். ஒருநாள் அப்படிப் பெற்ற பெரும் காயங்களுடன் தனது வீட்டுக்குத் துரத்தப்பட்டவர் திரும்பவில்லை. வேறு ஒரு கல்யாணத்தையும் செய்து கொண்டார். நாங்கள் உள்ளே நுழைந்தபோது அம்மாவின் பிள்ளைகள், பெண்கள் தங்கள் குழந்தைகளோடு பெரும் கூட்டமாகக் கூடி நின்றிருந்தார்கள். அம்மாவின் பிள்ளையைப் பார்க்க அந்த ஊராரும் கும்பல் சேர்ந்திருந்தார்கள். அங்கே அண்ணன் அனைவராலும் துளைக்கப்பட்டார். பழைய கதைக்கும் இதற்கும் சிறிய மாற்றம் தான். அம்மா தனது மருமகள்களைக் கூப்பிட்டு வந்தவர்களுக்கு நெய் சோறு செய்யச் சொன்னார். கோழியிறைச்சி சமைக்கப்பட்டது. விருந்து சாப்பிட்டுக் கிளம்பும்போது அந்தக் காலத்தில் அந்த கலாச்சாரத்தில் பெண்கள் தங்களால் விரும்ப முடியாத புருஷர்களை விட்டுப் போகிற சுதந்திரம் இருந்தது என்பதை அறிந்தேன். கூட்டத்தில் பிரிவு என்பது சரியாக உறைக்கவில்லை. நாங்கள் திரும்பிய ஒருவாரம் பத்து நாளில் அம்மா மரணமடைந்தார். அண்ணன் தனியாகக் கிளம்பிப் போனார். அவர்களுக்கு இனம் புரியாத ஒரு நிம்மதி கிடைத்து மிகுந்த நிறைவுடன் அவர்கள் காணப்பட்டதாக ஒரு பேச்சிருந்தது. அண்ணனுமே இறப்பதற்குள் அவர்களை ஒரு முறை பார்க்க முடிந்த பாக்கியத்தை பலரிடமும் பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம் நினைவில் வருகிறது. மணியுமே கூட திரும்பவும் தனது அம்மாவின் வீட்டுக்கு ஒருமுறை போனான். அம்மாவிற்கு மட்டும் ஒரு தினுசான மௌனம் இருந்து கொண்டிருக்க அந்தக் குடும்பமே அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்ணா அண்ணா என்று வளைய வந்திருக்கிறார்கள். அம்மாவின் புருஷன் கூட மகனே என்றுதான் அழைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அந்த சுகத்தில் அங்கேயே இருந்துகொண்டு வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் இருந்த கோணல்கள் எல்லாம் சரியாகிக் கொண்டு வருகின்றன என்று நாங்கள் உணர்ந்துகொண்டு வரும்போது அங்கிருந்து மணி கொஞ்சம் பணத்தைத் திருடிக்கொண்டு மறைந்து விட்டதாகச் சொன்னார்கள்.  அவனால் மறுபடியும் அங்கே திரும்பிச் சென்றிருக்க முடியாது. அவன் ஒரு வழியாக அழிந்தே போனதாக தான் கேள்வி. 

அட என்ன இது? எதற்கு இதெல்லாம்?

உலகிற்கே சவால் வைக்கக் கூடிய மதர்ரோல் என்று நவநீதனின் அம்மாவைச் சொல்லி விடலாம். என்னவோ ஒரு எதிர்ப்புணர்வில் அவருக்கு எதிரானவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேனோ? இவனின் அப்பா அடங்காதவன். உலகமெல்லாம் சுற்றி வந்தவனுக்கு இல்லறக் கூட்டில் மூச்சு முட்டுவது இயல்பு தானே? வேலை என்கிற சாக்கில் வாழ்வைக் கொண்டாட தப்பித்தவாறே விலகியதில் நேர்ந்த வெறுமைக்கு அம்மாவிற்குப் பிள்ளையும், பிள்ளைக்கு அம்மாவுமாகப் பிணைந்து கொண்டு விட்டார்கள். சொல்லப் போனால் இவனது அம்மாவிற்கு மகனை மீறிய ஒரு கற்பனை கூட நிமிராது. இவனுமே கூட , என்ன சொல்லுவது? நான் முறைப்படி இவனிடம் பையா, இந்த அன்பு என்று ஒன்றைச் சொல்கிறோமே, அதையெல்லாம் பகுக்க முடியாதென்றும், அது நாம் நம்மை சிக்கக் கொடுக்கிற ஒரு பொறி தானென்றும் சொல்ல விரும்பினால், இந்த அவசரத்துக்குப் பிறந்த பயல் குழப்பமே அடைவான். விளங்காது. மற்றும் இப்போது இதற்கெல்லாம் மூஞ்சி திருப்பி கேட்டுக் கொள்ள முடியாத மற்றொரு லூசைத் தேடி சென்று கொண்டிருப்பது இன்னும் இடித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்னவோ திரைக்கதை செய்து கொண்டிருக்கிறான் ! 

ரேசுக்கு ஓடப் போவதைப் போல நின்றுகொண்டு, இரண்டு கைகளாலும் சிட்டிகை போடுகிறாள் ரேகா. ஒன் டூ த்ரி, ஒன் டூ,த்ரி, ஒன் டூ ஒன் டூ ஒன் என்று அவள் கூச்சலிடுவதைப் பார்க்க அத்தனை அட்டகாசமாக இருக்கிறது. ஆணையிட்ட அந்த கணத்தில் அந்த இசை முழங்க அந்த நாற்பது பேருடைய மெல்லிய அசைவு துவங்கி வளர்ந்து நடனமாகப் பிரவாகித்தது. நடுவே குமுறல் நடனம் செய்து கொண்டிருந்த ஹீரோயின் சந்தேகமில்லாமல் பேரழகி. ரேகா  யா, யா, யா, யா என்று அவள் ஆடுகிறவர்களை பார்த்தவாறு இருந்து, விட்டு விட்டு ஆடிகாட்டிக் கொண்டேயிருந்தாள். எனக்கு இதெல்லாம் எவ்வளவு தான் பீல்டில் இருந்து பார்த்து பழக்கமென்றாலும், இதன் படைப்பு ஒழுங்குக்கு ஒவ்வொரு முறையும் உவகையால் மூச்சு முட்டுவேன். வேடிக்கை எதுவென்றால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நவா தலையை சொறிந்து கொண்டிருந்தான். “ டேய், ஜூட்டு! டேய். ஷோல்டர் ஸ்ட்ரோக்ல வரல பாருடா மயிரு ! “டிச்.டிச்.டிச்.டிச். ஆஹா ! இசை நின்றது. மானிட்டரில் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று, அப்புறம் இயக்குனரிடம் ஓகே என்று சொல்லி விட்டு இலக்கின்றி நடந்தவாறு தோளில் இருந்த டர்க்கி டவலால் முகத்தை தோளை கைகளை எல்லாம் ஒற்றினாள். வியர்வை பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. அலட்சியமாக தலைக்குப் போட்டுக் கொண்டிருந்த கொண்டைக்குக் கீழே பின்னங்கழுத்தை அவள் துடைக்கும் போது தான் நாங்கள் அவளை வழி மறித்தோம்.

நவாவை அவள் எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.

அதற்கு ஒரு கணம் பின்னடைந்து, அவன் என்னைக் காட்டி, “ இவரு சிவ தாசன் சார் ! ரைட்டர் ! ஸ்க்ரிப்ட் ரைட்டர் ! “ என்றான்.

அவள் “ ஹலோ சார் ! “ என்றாள்.

அந்த ஊரிலேயே கொஞ்சம் தள்ளித் தான் அவளுடைய அப்பாவின் வீடு இருந்தது. அவர் ஓவியர். வீட்டோடு பெரிய ஸ்டுடியோவும். ஆனால் இரவு தங்குவதற்கு ரேகா எங்களை அங்கே அழைத்துச் செல்லவில்லை. தாமோதரன் தம்பதியினரின் வீட்டில் சாப்பிட்டு பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். ரேகா நவாவை கண்களால் அழைப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. அவர்கள் மாடிக்குச் சென்று திரும்பவில்லை. நிச்சயமாக ரேகா போடுவதற்குத் தான் அழைத்தாள் என்பதில் ஒன்றுமில்லை. போட்டுக் கொண்டிருப்பார்கள். புது இடம், சரக்கு போட்டிருந்தும் தூக்கம் வராமல் புரண்டிருந்த போது ஒரு விஷயம் எனக்கு சர்வ நிச்சயமாகத் தெளிவாயிற்று. ரேகாவின் கண்களில் தென்பட்டிருந்த நவாவின் மீதான காதல் லேசுப்பட்டதல்ல. நம்ம பயலுக்குத் தான் கண்கள் காலியாக இருந்தது. மறுநாள் நாங்கள் விடைபெற்றுக் கிளம்பும்போது நானும் அவளும் தனியாக பேசியிருந்தோம். நான் நினைப்பதை அவள் உறுதிப்படுத்தினாள். அவன் என் கண்ணின் மணி என்றாள். ஆனால் ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான், தாங்க முடியவில்லை என்றாள்.

“ சார். நான் அவன கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்க நெனைக்கறீங்களா? அவனுக்கு ஒரு அம்மா இருக்கு. அது என்ன கொன்னுரும். அது கொல்லல ன்னா அதுக்காக இவன் என்ன கொன்னுருவான் ! ஒருவேள இதெல்லாம் நடக்கலேன்னு வெச்சுக்கங்க, ரெண்டுத்துல ஒன்ன நான் கொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்? வேணா சார். யாராவது ஒரு மகாலச்சுமியை பாத்து கட்டிக்க சொல்லுங்க ! “

திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

“ நவா “ 

“ சொல்லுங்க? “

“ ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் னு ஒண்ணு. படிச்சிருக்கியா? “

“ ஐயோ, அறுக்காதீங்க, ப்ளீஸ்? “

“ இல்லடா. சோபாக்ளிஸ் னு ஒர்த்தர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால ஒரு நாடகம் எழுதி….”

“ ரேகா மேட்டர் தானே வரீங்க? “

“ அட போடா ! துப்பாக்கிகுள்ள ஏறி உக்காந்து வெடிச்சுகிட்டு !  சொல்றதை ஏதாவது கேட்டுக்கறியா நீ? “

“ எனக்கு ரேகா வேண்டாம். சரிப்பட்டு வராது. நேத்தும் தண்ணிய போட்டுட்டு சாமான் அடிச்சிட்டு தூக்கம் போட்டுட்டா. அவ ஒரு பிச்சுண்ணா. இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாக்கக் கிடையாது ! எப்படியோ சாகட்டும். இதெல்லாம் மம்மிக்கு தெரிஞ்சதுன்னு வைங்கோ, அவளுக்கு ஆர்ட்டு நின்னு போயிடும் ! “

இந்த வாழ்க்கை திடீர் என்று தனது முகத்துக்கு ஒரு பொலிவு எடுத்துக் கொள்ளும் பாருங்கள், அதற்கு ஈடு இணை கிடையாது.

இந்தப் பயணத்தில் எனக்கு இன்னொரு அம்மாவையும் பார்க்கப் போனது சேர்ந்துகொண்டுவிட்டது. தாமோதரன் ரேகாவின் இரண்டாம் அப்பா. மிசஸ் தாமோதரன் ரேகாவின் சொந்த அம்மா தான். அற்புதமான ஒரு ஓவியரான அவளுடைய அப்பா கூட குடும்ப வாழ்வில் தன்னை புதைத்துக் கொள்ள விரும்பாமல் ஓடுபவர். அந்த தனிமையில் அம்மா ஒருவரை விரும்புவது பார்த்து நான் அப்பாவிடம் சென்று இருந்து கொண்டேன் என்றாள் ரேகா. அப்பா என்னை விட்டால் போதும் என்றதில் நான் வற்புறுத்தி அவர்களுக்கு அது நடந்தது. அந்த பதிவுத் திருமணத்தில் அவர்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்தது நான்தான் என்றாள்.

எனக்கு ரேகாவை அவ்வளவு பிடித்துப் போயிற்று என்பதில் என்ன?

“ அண்ணே, நீங்க போன தடவை யாருக்கு வோட் பண்ணீங்க? “ என்று கேட்டு எனது முகத்தைப் பார்க்கிறான் நவநீதன்.


  • -மணி எம்.கே மணி

5 COMMENTS

  1. இவரின் எழுத்து ஒரு மேஜிக். கதையை ரொம்ப எஞ்சாய் பண்ணி வாசித்தேன். நன்றி. ஆனால் முதல் கிளைக்கதை சொல்லும் போது, எழுத்தாளர் தன் திறமையால் என் கையைப் பிடித்து தர தரவென இழுத்து விட்டார். அங்கு தான் எனக்கு மூச்சு விட இடமில்லை. அந்தவகை உத்தி கதைகள் ஆரம்பிக்கும் போது இருக்கலாம். நடுவில் திடீரென ஆரம்பிக்கும் போது அவரின் ‘கிடுகிடு’ திறமையே ஓவர்டோஸ் ஆனது. ரெண்டாவது கிளைக் கதைக்கு முன்னமே தயார் செய்திருந்ததால் அதை ஈசியாக படிக்க முடிந்தது. சொல்லியிருப்பது தப்பாக தோன்றினால் மன்னிக்கவும். மீண்டும் ஒரு நல்ல அனுபவம். நன்றி M.K. மணி சார்.

    • மிகவும் நன்றி வினோத். சில கதைகளின் நடையை ஒருவேளை அந்தக் கதைகளே உருவாக்கி விடுகிறது. மிகவும் மகிழ்ச்சி.

  2. ஒரு வேகமான திரைக்கதை உள்ள படம் போல இருக்கிறது நடை. அதே சமயம் இலகுவாகவும். போகிற போக்கில் புலம் பெயர்பவர்களின் போராட்டத்தை காட்டுகிறார். வெவ்வேறு அம்மாக்களின் கதைகளில் மகன்கள் மட்டும் ஒரேமாதிரி இருப்பதாகத் தெரிகிறது.
    இன்னமும் பிள்ளைகளை பொத்தி வைத்துக்கொண்டும், ‘அம்மா தோசை சுடுகிறாள். அப்பா செய்தித்தாள் வாசிக்கிறார்’ என்று பாடம் நடத்திக்கொண்டும் இருப்பது அவர்களுக்கான அநீதி. கதையாசிரியர் மணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.