ஊரின் அழகான ஆண்


திர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான்.  அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால் அவன் குழந்தையாய் இருக்கும் போது சில விசித்திரமான சம்பவங்கள் நடந்தன. 

கதிர் கைக்குழந்தையாய் இருந்தபோது, அதிக மழை பெய்த மழைக்காலம் முடிந்த பின் வந்த கோடைக்காலத்தில் ஊரெங்கும் பலவித காய்ச்சல்கள் வந்தன. அப்போது கதிருக்கும் முறைக் காய்ச்சல் வந்தது. சாயந்திரம் சரியாய் நான்கு மணி ஆனவுடன் உடலில் காய்ச்சல் கொதிக்க ஆரம்பித்தது. பிறகு அரை மணி நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. 

அவன் அம்மா வெண்ணிலா அவனை அந்த பகுதியின் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் தாமோதரனிடம் காட்ட எடுத்துச் சென்றாள். அவருடைய அறைக்கு முன்பாக ஒரு குழந்தையின் படம் ஒட்டப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு வந்திருந்த எல்லோரும் வெண்ணிலாவின் கையில் இருந்த குழந்தையையும், படத்தில் இருந்த குழந்தையையும் மாறி மாறி பார்த்தார்கள். இருவரும் அச்சு அசலாய் ஒரே மாதிரி இருப்பதாக பேசிக் கொண்டார்கள். நர்ஸ் கூட அவன் கன்னத்தை லேசாகத் தட்டி “தம்பிக்கு என்ன ஆச்சி?” என கேட்டபடி, “அங்க பாருங்க உங்க போட்டோதான அது” என சுவரில் ஒட்டியிருந்த படத்தைக் காட்டிக் கேட்டாள். 

டாக்டரைப் பார்க்க உள்ளே சென்றபோது, டாக்டரும் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, நர்சைப் பார்த்து, ‘நீங்க சொன்னப்போ நான் நம்பல. உண்மைதான் இவன் அந்த குழந்தை மாதிரியே இருக்கான்’ என கண்களாலேயே சொல்லி ஒப்புக் கொண்டார். நர்ஸ் பதிலுக்கு ஒரு புன்னகை செய்தாள். .

இருவரின் சங்கேத மொழிகளைப் பார்த்ததும், கதிர் பிறந்தபோது மருத்துவமனையில் நடந்த இன்னொரு சம்பவம் வெண்ணிலாவின் நினைவுக்கு வந்தது. அப்போது, மிகவும் வசதியான வீட்டுப் பெண் ஒருத்தி  செக்கப்புக்காக அங்கு வந்திருந்தாள். அவள் மேல் கையில் அணிந்திருந்த தங்க வங்கியையே அங்கிருந்தவர்கள் எல்லோரும் பிறருக்குத் தெரியாதபடி லேசாக வாயைத் திறந்து கொண்டு பார்த்தார்கள். கதிரைக் குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் சென்றிருந்த செவிலியின் பின்னாடியே அவளும் வெண்ணிலாவைப் பார்க்க வந்தாள். “அம்மா இது உன் குழந்தையா?” என்று கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தாள். பிறகு மென்று விழுங்கிக் கொண்டு, “தப்பா நினைக்க வேண்டாம், இந்த குழந்தைய எங்களுக்கு தத்து கொடுக்கறீங்களா? உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம். நீங்க எப்ப வேணும்னாலும் குழந்தைய வந்து பாக்கலாம். அவனை ஒரு பெரிய ஆளா ஆக்க வேண்டியது என்னோட போறுப்பு” என்றாள். 

வெண்ணிலா விக்கித்துப் போய் அவளைப் பாரத்தாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்ணீர் கடகடவென கொட்டியது. அவள் அம்மாதான் குறுக்கிட்டு “ஏமனுக்கு (எமன்) ஏழு பிள்ளைய கொடுத்தாலும் உத்தாருக்கு ஒரு பிள்ளைய கொடுப்பாளா ஒரு அம்மா?” என்றாள்.

அந்த பெண் எதுவும் பேசாமல் போய்விட்டாள். 

பின் எமனுக்கு பிள்ளையைத் தருவதாய் தன் வாயிலிருந்து வார்த்தை வந்துவிட்டதே என அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள் அம்மா.

அவன் சிறு அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தபோது, அந்த வீதிக்கே அவன் செல்லப்பிள்ளையாக இருந்தான். ‘கதிர் இன்னைக்கி எங்க வீட்லதான் சாப்பிடனும்’, ‘கச்சாயம் சுட்டேன் கதிருக்கு எடுத்து வந்தேன்’, ‘பணியாரம் சுட்டேன் பையனுக்கு கொண்டு வந்தேன்’ என பெண்கள் அவனை எப்போதும் மொய்த்துக்  கொண்டிருந்தார்கள். 

திருவிழாவில் முருகன், கிருஷ்ணன், மோகினி வேஷம் போட்டு சென்றான் என்றால் சிறுவர்கள் பட்டாளம் முழுவதும் அவன் பின்னால் தான் இருக்கும். அவன் அங்க வஸ்திரம் முழுவதும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் என நோட்டுகளாய் குத்தியிருக்கும். எத்தனை பேர் சாமிக்கு கரைத்து வைத்த மஞ்சள் தண்ணீரை அவன் காலில் ஊற்றி விழுந்து வணங்கியிருப்பார்கள்?

திருவிழாவுக்கு வந்த ஸ்ரீ வள்ளி நாடகம் நடத்துவதில் பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்றிருந்த கல்லாங்குத்து லட்சுமி நாடக கோஷ்டி, கதிர்வேலன் முருகன் அலங்காரத்தில் ஊரெல்லாம் வலம் வருவதைப் பார்த்துவிட்டு வெண்ணிலாவையும் காசிலிங்கத்தையும் தேடிக் கொண்டு வந்துவிட்டார்கள். 

“தாயி இப்படி சர்வ லட்சணமும் பொருந்திய சாட்சாத் முருகப் பெருமானே போல இருக்கிற இந்த பையனை பெற நீ எத்தனை ஜென்மத்தில எத்தனை தவம் செஞ்சிருப்ப தெரியுமா?” என வியந்து போய் கேட்டாள் லட்சுமி. “உன் மகனை எங்க கூட அனுப்பு. அவனுக்கு தேவாரம், திருப்புகழ், ராமாயணம், மகாபாரதம் எல்லாம் படிப்பிச்சி உலகமே மெச்சும் படி உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன்” என்றாள். காசிலிங்கம் கைகூப்பி, “அதெல்லாம் வேண்டாம்மா. இவன் எங்க கூடயே இருக்கட்டும். பள்ளிக்கூடம் போகட்டும்” என்றான்.  

லட்சுமி பெருமூச்சு விட்டுக் கொண்டு, “என்ன இருந்தாலும் விதி இருக்கே அதுப்படித்தானே நடக்கும்” என்றுவிட்டு கிளம்பினாள்.

காசிலிங்கத்திடம் யாராவது ஒருத்தர். ‘நீங்க மட்டும் மெட்ராஸ்ல இருந்திருந்தா உன் மகனை ஏதாவது ஒரு சினிமா கம்பெனிக்காரன் கொத்திகிட்டு போயிருப்பான். இன்னேரம் அவன் நடிகனாயிருப்பான்’ என சொல்லாமல் ஒருநாள் கூட கழியவில்லை. 

காசிலிங்கமும் அதை நம்பி ஒருமுறை கொஞ்சம் காசு சேர்த்துக் கொண்டு, பையனோடு சென்னைக்கு ரயிலேறிவிட்டான். ஆனால் ஒவ்வொருவரும் அவனையும், கதிரையும் பார்த்த பார்வை அவனுக்கு வயிற்றைப் பிசைந்தது. எங்கே குழந்தையை கடத்திக் கொண்டு வந்துவிட்டதாக தன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டுவிட்டு, பையனைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என பயந்து போய் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிவிட்டான். 

ஆனாலும் காசிலிங்கம் வெண்ணிலாவிடம் சொல்லிக் கொண்டே தான் இருந்தான். “என்னைக்கி இருந்தாலும் ஒருநாள் நம்ம பையன் பெரிய ஆளா வருவான். நாம அத பாக்கத்தான் போறோம்” 

ஆனால், கதிர் ஆறாம் வகுப்புக்கு போகும்போதே, காசி பக்கவாதத்தில் விழுந்து ஒரு வருடம் வரை படுக்கையில் கிடந்துவிட்டு செத்துப் போய்விட்டான்.. அவன் கிடந்த கிடப்பை ஒல்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருந்த கதிர் வாழ்க்கையைப் பற்றி பல கருத்துகளை அவனாகவே உருவாக்கிக் கொண்டான்.  

வறுமை அவர்களைப் பேயாய் பிடித்து ஆட்டியது. அப்பாவுக்கு மருந்து வாங்க வேண்டும். தினமும் எதையாவது சாப்பிட வேண்டும். அப்புறம் சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும் அதைச் செய்ய  கொஞ்சமாவது பணம் வேண்டும். 

காசிலிங்கம் நடமாட்டமாய் இருந்தவரை வெண்ணிலாவை வெளியே எங்கும் விட்டதில்லை. இப்போது வேலைக்குப் போக வேண்டும் என்றால்? கடவுள் ஏதாவது ஒரு வழியைக் காட்டுவார் என அவளும் பல நாட்களாக பொறுமையாக இருந்தாள். ஆனால், வாழ்க்கை சுற்றிலும் அடைத்துக் கொண்டு இருந்தது. அவள் ஓட்டல் கடையில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். 

அவர்கள் வீட்டுக்கு கடன்காரர்களின் வருகை ஆண்டுக் கணக்காக நீண்டது. இன்று நல்ல சாப்பாடு சாப்பிட முடியுமா என தெரியாது. அம்மா ஓட்டலில் இருந்து மீந்து போன உணவை எடுத்துக் கொண்டு வருவாள். பிச்சைப் பாத்திரத்தில் இருப்பது போல அதில் எல்லாம் கலந்து இருக்கும். கதிரால் அதை சாப்பிடவே முடியாது. 

நோட்டு வாங்க காசில்லாமல் போய் பிரம்மானந்தம் வாத்தியாரிடம் கைகள் பழுக்கப் பழுக்க அடிவாங்கியிருக்கிறான். எப்படியோ பத்தாவது வரை படித்துவிட்டான். அதுவே கடலில் தனியாக நீந்தி ஒரு தீவை அடைந்தது போல மலைப்பாய் இருந்தது. 

அதற்குப் பின்தான் அவன் ஜவ்வரிசி மில்லுக்கு வேலைக்குப் போனான். வாழ்க்கையின் இந்தத் தொடர்ச்சியான தாக்குதலால், அவன் மனதுக்குள் ஒட்டிக் கொண்டிருந்த தான் அழகு என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.  

“கதிர் ரெடியாயிட்டானா” என கேட்டுக்கொண்டே வந்தான் தாமு. வெண்ணிலா குடத்தை எடுத்துக் கொண்டு வந்து, “குளிச்சிட்டு இருக்கான் உக்காரு” என்றுவிட்டு வெளியே போனாள். டிவியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. வெண்ணிலா பரபரப்பாக குடத்தில் தண்ணீரைக் கொண்டு வநது தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்தாள். இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதுபோல ஓட்டமும் நடையுமாக போய் வந்து கொண்டிருந்தாள். கதிர் வெளியே இருந்த குளியலறையில் இருந்து துண்டைக் கட்டிக்கொண்டு உள்ளே வந்தான். 

தலையை துவட்டிக் கொண்டே “அம்மா போதும்மா தண்ணி எடுத்தது எனக்கு சாப்பாடு போடு” என்றான்.  “சோத்த போட்டு தின்னு. தண்ணி வர அப்புறம் பத்து நாளாவுமோ பதினஞ்சி நாளாவுமோ” என குடத்தோடு ஓடிவிட்டாள் வெண்ணிலா.

கதிர் பேண்டை மாட்டிக் கொண்டு சட்டைக்குள் கையை நுழைத்தவாறே வந்து “தாமு நீ சாப்டியா?” என்றான். 

‘நான் சாப்டுதான் வந்தேன். இன்னும் பத்து நிமிசம் தான் இருக்குது சட்டுனு கிளம்பு” என்றான். தாமு ஈரத்தலையை வாரிக்கொண்டு தட்டில் சாப்பாட்டை போட்டு வாயில் திணித்துக் கொள்ள ஆரம்பித்தான். தாமு ”டேய் கொஞ்சம் மெதுவா தின்றா” என்றான். அவன் எதுவும் பேசாமல் டிவியைப் பார்த்தபடி சாப்பாட்டை அள்ளி அள்ளி விழுங்கிக்  கொண்டிருந்தான். 

இரண்டு நிமிடத்தில் தட்டைக் காலி செய்ததும், பேக்கை எடுத்துக் கொண்டு பஸ் நிறுத்தம் நோக்கி இருவரும் ஓடினார்கள். ஸ்கூல் போகும் பிள்ளைகள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என  நூறு பேருக்கும் மேல் அங்கே சாலை நெடுக நின்றிருந்தார்கள். 

அதில் கண்ணுக்குப் புலப்படாத இரண்டு பிரிவுகளை அனுமானிக்க முடிந்தது. ஒன்று வேலைக்குப் போகும் இளைஞர்கள் கூட்டம். இன்னொன்று அரசு கல்லூரிக்குப் போகும் இளைஞர்கள் குழு. இரு பிரிவினரும் தங்களுக்கே உரிய உடல் மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் சிரித்துக் கொள்வதுமாய் இருந்தார்கள். கல்லூரி மாணவர்களின் அமைதியான பேச்சு ஒரே அலட்டலாய் இருந்தது. வேலைக்குப் போகும் இளைஞர்களில் சிலர் பெரும் சத்தம் போட்டு பேசுவதும் சிரிப்பதுமாய் இருந்தார்கள். 

வரும் பஸ்சில் எல்லாம் கூட்டமாக இருந்தது.  இவர்கள் பஸ் இன்னும் நான்கு நிமிடத்தில் வந்துவிடும். கதிர் அருகில் இருந்த டீக்கடைக்குப் போய் பீடி பற்ற வைத்தான். தாமுவிடம் உனக்கு வேணுமா என்றான். 

“டேய் பஸ்ல கூட்ட நேரத்துல பீடி குடிச்சிகிட்டு இருக்கற? எனக்கு வேண்டாம் வா’ என்றான். 

 மில்லில் ஒன்பது மணிக்கு ஷிப்ட் மாறும். அதற்குள்  அங்கு இருக்க வேண்டும். கதிர் பீடியை வீசிவிட்டு வந்து மீண்டும் பஸ் ஸ்டாப்பில் நின்றான்.” டேய் நூறு ரூபாய் இருந்தா குடுக்குறியா அடுத்த வாரம்  சம்பளம் வாங்கி தந்துர்றேன்” என்றான் தாமு. “எதுக்கு சாயந்திரம் கட்டிங் போட காசில்லையா?” என்றான் கதிர். 

தாமுவின் அப்பா சமையல் மாஸ்டர். அம்மா பூ கட்டி வியாபாரம் பண்ணுகிறாள். இவர்கள் இருவருக்கும் இருபத்தெட்டு வயதாகிறது. வீட்டில் மும்முரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த இடமும் தகையவில்லை.கதிரின் ஜாதகத்தில் ஏதோ ஒரு குறை இருந்தது. அது என்னவென்று அவனுக்குத் தெரியாது. எத்தனையோ பெண் வீட்டார் அவனுக்குப் பெண் கொடுக்கத் தயாராய் இருந்தும், ஜாதகம் சரியில்லை என பின்வாங்கிவிட்டார்கள். தாமுவுக்கும் அப்படித்தான் கல்யாண வாய்ப்பு நழுவி நழுவி போய்க் கொண்டிருந்தது. எப்படி கல்யாணம் முடிப்பது என்ற யோசனையோ, வீடு கட்டலாமா? வேறு ஏதாவது தொழில் செய்யலாமா என்றெல்லாம் அவர்கள் மூளைக்குள் எந்த யோசனையும் வந்ததில்லை. 

வருடத்தில் ஒருமுறை மாலை போட்டுக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்கு போவார்கள்.குற்றாலம் கன்னியாகுமரி பழனி என ஒரு ஐந்து நாள் சுற்றிவிட்டு வருவார்கள். அதுவே அவர்களுக்கு உலகத்தை சுற்றிப் பார்த்துவிட்ட திருப்தியைத் தந்துவிடும். அதற்கு மேல் உலகத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்த்ததும் இல்லை.

பஸ்கள் எல்லாம் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. பஸ்சில் ஏறிச் செல்பவர்களைப் போல இரண்டு பங்கு ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அதில்லாமல் பைக்கில் போகிறவர்கள், வேகவேகமாய் நடந்து போகிறவர்கள், ஆட்டோவில் போகிறவர்கள் என அந்த இடமே பெரும் பதற்றத்தின் பிடியில் இருந்தது. 

மணி சரியாக எட்டரை. அவர்கள் போக வேண்டிய பஸ் இப்போது வரப்போகிறது. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அதில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என இருவரும் தயாராக இருந்தார்கள். அப்போது, கல்லூரி இளைஞர்கள் இரண்டு பேர் அவர்களிடம் வந்து ஹலோ என்றார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை எதற்காக வந்து தங்களிடம் பேசுகிறார்கள் என தெரியாமல் புருவத்தை உயர்த்திக் கொண்டு அவர்களைப் பார்த்தார்கள்

அதற்கு மேல் அவர்களிடம் நடந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால் அவர்கள் தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யுனிகேஷன் படிக்கும் மாணவர்கள். அவர்கள் ப்ராஜெக்ட்டுக்காக ஒரு குறும்படம் இயக்கப்போகிறார்கள். அதில் நடிக்க முடியுமா என கதிரை கேட்டார்கள். (நன்றாக நடித்தால் அவார்ட் எல்லாம் கிடைக்குமாம்)

ஐந்து நிமிடத்தில் அந்த உரையாடல் முடிவதற்கும் அவர்கள் போக வேண்டிய பஸ் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. திங்கள் கிழமை இதே இடத்துக்கு இதே நேரம் வாங்க பேசிக்கலாம் என்று ஓடிப்போய் பஸ்சில் ஏறிவிட்டார்கள். 

கூட்ட நெரிசலில் பிதுங்கிக் கொண்டு உள்ளே போனார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மில் ஸ்டாப்பில் இறங்கியதும் “டேய் தாமு இத மில்லுல யாருகிட்டயும் சொல்லிகிட்டிருக்காத. எல்லாம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருவாங்க” என்றான் கதிர். 

இருவருக்கும் வேலையே ஓடவில்லை. எதிர் எதிரே நின்று கொண்டு சாயந்திரம் வரை ஜவ்வரிசி வறுத்தார்கள். அவர்கள் மனதில் முடிவற்று காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த காட்சிகள் தந்த இன்பத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

“டேய் நல்லா பண்ணுனா பெரிய நடிகனாய்டுவ இல்ல” என்றான் தாமு.

“டேய் ஒரேயடியா கற்பனை பண்ணாத இது மாதிரி வருசம் ஆயிரக்கணக்கான பசங்க படம்னு எதையாவது எடுப்பாங்க. அதுல நடிச்சவங்க எல்லாம் பெரிய நடிகராயிடுவாங்களா” என்றான் கதிர். ஆனாலும் அவன் கண்களுக்குள் ஓடும் கனவை தாமுவால் பார்க்க முடிந்தது. மாலையில் வேலை முடிந்து திரும்பும்போது, கதிர் எப்போதும் போல் இல்லாமல் ஸ்பெஷலாய் தெரிந்தான். தாமு அவன் கண் காது மூக்கு தலைமுடி எல்லாவற்றையும் உற்று உற்று பார்த்துக் கொண்டே இருந்தான். “டேய் உன்ன சினிமாவுல பாத்தா நல்லாத்தாண்டா இருக்கும்” என்றான். கதிர் வெட்கமாய் சிரித்துக் கொண்டான். 

இருவரும் சிரித்துக் கொண்டு வருவதைப் பார்த்த வெண்ணிலா “என்னடா எதுவும் விசேசமா” என்றாள். பால் பாக்கெட்டை உடைத்து காப்பி வைக்க அடுப்பைப் பற்ற வைத்தாள். 

“அம்மா உங்க பையன் சினிமாவுல நடிக்கப் போறான்” என தாமு ஆரம்பித்தான். அதற்குப் பின் அன்று காலை பஸ் ஸ்டாப்பில் நடந்த சம்பவத்தை உரையாடலை விதம் விதமாக சொல்லிக் கொண்டிருந்தான் தாமு. வெண்ணிலாவுக்கு அலுக்கவே இல்லை. கதிருக்கும் தாமுவுக்கும் கூட அலுக்கவில்லை. இப்படி ஒருநாள் அவர்கள் வாழ்க்கையில் வந்ததே இல்லையே அதை அப்படியே போக விட்டுவிட முடியுமா என்பது போல எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

வெண்ணிலாவின் மனதில் காசிலிங்கம் வந்து ‘எல்லாம் நான் பார்த்துக்கறேன்’ என்றார். அவளுக்கு அவன் குழந்தையாய் இருந்தபோது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ஆரம்பித்தன. கண்கள் கலங்கின. ‘ஆயி மகமாயி எல்லாம் உன் செயல்’ என ரகசியமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். 

“இப்போ இந்த படத்துல நல்லா நடிச்சா பெரிய சினிமாவுலயும் நடிக்க கூப்பிடுவாங்க இல்ல? என்றாள். கதிர் சட்டென விழித்துக் கொண்டு கற்பனை எங்கெங்கோ தறி கெட்டு ஓடுவதைக் கட்டுப்படுத்த நினைத்தவனாய் “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ போய் சாப்பாடு செய்யி. டேய் நீ வீட்டுக்குப்போ” என்றான். தாமு காபி குடித்துவிட்டுக் கிளம்பினான்.

இருவரும் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை. ராத்திரி சாப்பாட்டை சாப்பிடும்போது வெண்ணிலா டிவியில் எப்போதும் பார்க்கும் நாடகத்தை அதீத ஈடுபாட்டோடு பார்த்தாள். சாப்பிட்டு முடித்ததும் கதிர் எனக்கு தூக்கம் வருது எனப் படுத்துக் கொண்டான். 

எப்போதும் இல்லாத அதிசயமாய் நடு இரவில் எழுந்து தண்ணீர் குடித்தான். வெண்ணிலா எழுந்து உட்கார்ந்து கொண்டு, “என்னடா தூக்கம் வரலையா” என்றாள். “எனக்கும் கொஞ்சம் தண்ணி கொடு. என்னமோ தெரியல தூக்கமே வரல” என்றபடி தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள். 

அன்று காலை வெண்ணிலா நெய், முந்திரியெல்லாம் நிறைய வாங்கி வந்து போட்டு கேசரி செய்து மகனுக்குக் கொடுத்தாள். தாமு வந்த போது அவனுக்கும் கொடுத்தாள். இன்று அவர்கள் அதைப் பற்றி அதிகம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கேசரி எப்போதையும் விட ருசியாய் இருந்தது, நல்லதின் அறிகுறி என வெண்ணிலாவுக்குப் பட்டது.

சனிக்கிழமை இரவு சம்பளம் வாங்கியதும் தாமு கதிரை தேடிக் கொண்டு வந்தான். “சீக்கிரம் வா, டாஸ்மாக் மூடிருவான்” என்றான். “டேய் நாளைக்கு நைட்டுதாண்டா போவோம், இன்னைக்கே கூப்புடுற” என்றான் கதிர்.  “நீ சினிமாவுல நடிக்கப் போறியில்ல நீதான் இன்னைக்கி சரக்கு வாங்கித் தரணும்”. என்றான் தாமு. கதிர் “டேய் உனக்கு இன்னைக்கி குடிக்கணும், அதுக்கு இது ஒரு சாக்கு” என்றான். 

இருவரும் டாஸ்மாக் கடைக்குப் போனார்கள். தறி, கொட்டாய், மில்கள் எல்லாவற்றிலும் அன்று சம்பள நாள் என்பதால் கடையில் கசகசவென்று கூட்டம் இருந்தது. 

தாமு பாரில் போட்டிருந்த கடப்பைக் கல் டைனிங் டேபிள் ஒன்றில் இடம்பிடித்தான். அவர்கள் வேலை செய்யும் மில்லில் உடன் வேலை செய்பவர்கள் பாதிப் பேர் இங்கே தான் இருந்தார்கள். மீதிப் பேர்  ஊருக்கு வடக்கே இருக்கும் இன்னொரு கடையில் இருப்பார்கள் என தாமு நினைத்துக் கொண்டான். அவர்களோடு வேலை செய்யும் வீரன் அவர்களைப் பார்த்துவிட்டு, “டேய் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு தானே வருவீங்க? என்ன இன்னிக்கே வந்துட்டீங்க” என்றான். இருவரும் சிரித்துக் கொண்டே ஒண்ணுமில்லை என்றார்கள். 

முதலில் எதுவும் பேசாமல் குடித்தார்கள். கதிர் “கிளம்பலாம்” என்றான். தாமு “நில்ரா” என்றான். “உனக்கு சினிமாவுல எப்படி நடிக்கணும் தெரியுமா? நான் சொல்றேன் கேளு” என்றான். கதிருக்கு அப்போது போதை ஏறவில்லை. “டேய் நீ ஒண்ணும் ஆரம்பிக்க வேண்டாம். போதும் கிளம்பலாம்” என்றான். 

தாமு அடுத்த டேபிளில் உட்கார்ந்திருந்த வீரனிடம், “வீரன்னே இவன் சினிமாவுல நடிக்கப்போறான் தெரியுமா” என்றான். ஆனால் அங்கே அவர்கள் பேச்சை கேட்கும் நிலையில் யாரும் இல்லை. தாமு ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கதிரிடம் ஒன்றை நீட்டினான்,

அவர்களின் உளறல்களுக்கு இடையே கதிர் சினிமாவில் நடிக்கப் போகும் விசயம்  மில் ஆட்களுக்கு சென்று சேர்ந்துவிட்டது. . 

வெண்ணிலா தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். போதையில் தள்ளாடிக் கொண்டு வரும் கதிரை ஆச்சரியமாகப் பார்த்தாள். “என்னடா இது எப்பயும் இல்லாத வழக்கமா இன்னிக்கி குடிச்சிட்டு வந்திருக்க. சம்பளப் பணம் எங்க?” என்றாள்.

கதிர் எதுவும் பேசாமல் பணத்தை எடுத்து நீட்டினான். வழக்கத்தை விட அதிகமாக குடித்திருந்தான். சம்பளத்தில் கணிசமான தொகை காலியாகியிருந்தது. வெண்ணிலா எதுவும் பேசவில்லை. மகனுக்கு சாப்பாடு போட்டு வைத்தாள். அவன் உட்கார்ந்த வாக்கிலேயே தூங்கி விழுந்து கொண்டிருந்தான். பிறகு அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான்.  

திங்கள் கிழமை காலை, பஸ் ஸ்டாப்பில் அந்த கல்லூரி இளைஞர்களை காணவில்லை. பஸ் ஸ்டாப் மூலை முடுக்கு எங்கும் அவர்கள் நிற்கவில்லை. ஒருவேளை தங்கள் கண்களுக்குதான் அவர்கள் தென்படவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரும் அந்த பிரதேசத்தையே அணு அணுவாக அளந்தார்கள். உண்மைதான்.  அவர்களைக் காணவில்லை.

கதிருக்கு ஏமாற்றத்தை எப்படி ஜீரணிப்பது என தெரியவில்லை. கண்களில் ஈரம் பூத்தது. இருவரும் கடைக்குப் போய் பீடி பற்ற வைத்தார்கள். “விட்றா, பசங்க இன்னைக்கி லீவு போட்டிருப்பாங்க” என்றான் தாமு.

பஸ் வந்ததும் பீடியை வீசிவிட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டார்கள். மில்லில் எல்லோரும் ‘கதிரு நீ சினிமாவுல நடிக்கப் போறியாமா’ என்றார்கள். கதிர் பொறுமையாக எல்லோரிடமும் ‘அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான். 

அவனுக்குள் இனம்தெரியாத கோபமும் ஆவேசமும் கொப்பளித்தது. யார் மீது என்று தெரியவில்லை. அந்த கோபத்தை எங்கே செலுத்துவது என தெரியாமல் தத்தளித்தான்.. 

மாலையில் வெண்ணிலா எப்போதும் இல்லாத மலர்ச்சியோடு அவர்களை வரவேற்று “என்ன ஆச்சி?” என்றாள். “அட போங்கம்மா அந்த பசங்கள காணம்” என்றான் தாமு.

“அட எதாவது லீவு போட்டிருப்பாங்க. நாளைக்கு தான் பாப்பமே” என்றாள். ஆனால் அவள் முகம் கொஞ்சம் இருண்டுவிட்டதை உணர முடிந்தது.  இருவரும் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்தார்கள். எதிலும் மனம் ஒட்டவில்லை. எப்போதும் பாட்டு சேனல்தான் பார்ப்பார்கள். இன்று சினிமா பாட்டைப் பார்க்கும்போது அவ்வளவு ஆத்திரமாய் வந்தது. “டேய் வேற எதாவது மாத்துறா” என சத்தம் போட்டான் கதிர்.

என்னதான் ஏமாற்றமாய் இருந்தாலும் மறுநாள் மனதில் வந்து சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்ட நம்பிக்கையை உதற முடியவில்லை.  

புதன் கிழமை அன்று அந்த மாணவர்கள் பஸ் ஸ்டாப்பில் தென்பட்டார்கள். ஆனால், அவர்கள் இவர்களை யார் என்றே கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “நாமே போய் கேட்போமா” என்றான் தாமு. கதிர் அவன் கையைப் பிடித்து தடுத்துவிட்டான். “வேண்டாம் திரும்ப அவங்க வந்து கேட்டா பாத்துக்கலாம்” என்றான். 

இருவரும் அன்று முழுவதும் யோசித்தார்கள். அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஒருவேளை வேறு யாராவது கிடைத்திருப்பார்களோ? அப்படி என்றால் சொல்லலாமே? ஏன் முன் பின் பார்க்காதவர்கள் மாதிரி இருக்க வேண்டும்? என யோசித்தபோதுதான் அவர்கள் தன்னிடம் விளையாடி இருக்கிறார்கள் என கதிருக்கு புரிந்தது. 

வெண்ணிலா “நான் வேணா வந்து அவங்களை கேக்கட்டா” என்றாள். கதிர் “உனக்கென்ன பைத்தியமா” என பல்லைக் கடித்தான்.. 

“சரி போவுது வுடு. நீ படத்தில நடிச்சா சமயபுரம் வந்து மொட்டை போட்டுக்கறதா வேண்டிகிட்டேன். இப்ப அத செய்யணுமா வேண்டாமா” என்றாள். கதிர் மேலும் பல்லைக் கடித்துக் கொண்டு “இப்ப என்னத்துக்கு மொட்டை போட்டுக்கறதால்லாம் வேண்டிகிட்ட? எதுன்னா உடனே ஒரு வேண்டுதல். உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று கத்தினான். 

“இல்லடா ஒரு நல்ல விஷயம் நமக்கு நடக்கும்போது சாமிக்கு நாம ஏதாவது செய்ய வேண்டாமா?” என்றாள். தாமு “சரி நான் வீட்டுக்குப் போறேன்” என்று கிளம்பிவிட்டான். 

கதிர் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்துவிட்டு படுத்துக் கொண்டான். கண்ணுக்குள் அகன்ற வெள்ளைத் திரையில் அவன் ஆடிக் கொண்டிருந்தான். டிவியை சுவிட்ச் ஆப் செய்வது போல இந்த மனதை செய்ய முடியாதா என  ஆத்திரமாய் வந்தது.

மறுநாள் எழுந்தபோது அவனை நினைத்து அவனுக்கே வேடிக்கையாய் இருந்தது.  அவர்கள் தங்கள் வழக்கமான நாளுக்கு திரும்பிவிட்டார்கள். என்ன, மில்லில் தான் கதிருக்கு ஆர்ட்டிஸ்ட் என புதிய பட்டப்பெயர் வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை சினிமாவுக்கு போகவே வெறுப்பாய் இருந்தது. கல்லூரி பசங்கள் யாரைப் பாரத்தாலும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பும் கோபமும் அவனை அறியாமல் வந்தது. இந்த குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தான். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக்கில் குடிக்கும்போது “டேய் அந்த பசங்க எதுக்குடா அந்த மாதிரி பண்ணாங்க? அவங்கள நாமளும் முட்டாளாக்க வேணும்டா” என்றான் தாமு. கதிர் “நாம அவங்கள முட்டாளாக்கறது கஷ்டம்டா. அவங்க இனிமே நம்மகிட்ட உஷாராத்தான இருப்பாங்க” என்றான். 

“சரி அப்ப வேற எவனையாவது முட்டாளாக்கி வைக்கணும் என்ன சொல்ற?” என்றான் தாமு. “லூசு மாதிரி பேசாத. அவன் செஞ்சதுக்கு வேற எவனையாவது எதுக்கு நாம ஏமாத்தணும்? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அதெல்லாம் ஐயப்பன் பாத்துக்குவான். அவனவன் கர்ம வினைய அவனவனே அனுபவிப்பான்” என கதிர் முடித்துக் கொண்டான். 

அந்த சம்பவம் நடந்து முடிந்து சரியாய் ஒரு மாதம் கழித்து, வேறு இரண்டு பேர் அதே போல அவர்களிடம் வந்து கேட்டார்கள். ‘அண்ணே எங்க காலேஜ்ல ஒரு குறும்படம் பண்றோம் நீங்க நடிக்கணும்’ என்றார்கள். கதிரும் தாமுவும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொண்டார்கள். கதிர் என்னவோ சொல்ல வாய் எடுத்தான். தாமு அவன் கையைப் பிடித்துக் கொண்டு “சரிப்பா நாங்க இப்ப மில்லுக்குப் போறோம். அப்புறம் பேசிக்கலாம்” என்றான்.

அதே நேரம் வந்த பஸ்சில் இருவரும் ஏறிவிட்டார்கள். கதிர் “அவனுங்களுக்கு நம்மள பாத்தா கேனையனுங்க மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். செவுனியில ஒண்ணு விடாம நீ எதுக்கு பாக்கலாம்னு சொன்ன” என்று கறுவினான். 

“விடுடா ஒருவேளை இது நெஜமா இருந்துச்சுன்னா?” என்றான் தாமு. “ஆமாம் மயிறு இவனுங்களும் அவனுங்க மாதிரியே பண்ணாங்கன்னு வச்சுக்க, ரெண்டு பேர்த்து வாயையும் பேத்து கையில கொடுத்துருவேன்” என்றான் கதிர். 

அன்று சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து குடித்தார்கள். காலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அவர்களை கண்டபடி திட்டுவதில் ஒரு சுகம் இருந்தது. போதை விறுவிறுவென ஏறியது. பிறகு அவர்களை என்று இல்லாமல் யார் யாரையோ திட்டினார்கள்.  

மறுநாள் காலையில் கறி எடுக்க கதிர் விடியற்காலையிலேயே போய் நாட்டு சேவல் ஒன்றைப் பிடித்து வந்தான். வெண்ணிலா “டேய் கோழி அறுக்க நல்ல கத்தி ஒண்ணும் இல்லயே” என்றாள். கதிர் கடைவீதிக்குப் போய் நல்ல கனமான கத்தி ஒன்றை வாங்கி வந்தான். அதை வாங்கும்போது ஏனோ அவனுக்கு அந்த கல்லூரி மாணவர்களின் நினைவு வந்தது. 

திங்கள் கிழமை எதிர்பார்த்த மாதிரியே அவர்களைக் காணவில்லை. கதிர் பாத்தியா என்பது போல் தாமுவைப் பார்த்தான். தாமு யோசனையோடு டீக்கடைக்குப் போய் பீடி பற்ற வைத்தான். திரும்பி வந்து “சரி வுடு, பசங்க என்னமோ விளையாடுறாங்க” என்றான். 

கதிர் ஏதேதோ யோசித்தான். தெருப் பசங்களையெல்லாம் கூட்டிப் போய் அவனுங்கள புரட்டி எடுக்கலாமா என தோன்றியது. 

இரண்டு நாள் கழித்து அவர்களை மீண்டும் பஸ் ஸ்டாப்பில் பார்க்க முடிந்தது. எதுவும் நடக்காத மாதிரி நின்றிருந்தார்கள். கதிர் அவர்களிடம் போய் “தம்பி அன்னைக்கி சொன்னீங்களே என்ன ஆச்சி” என்றான். அவர்கள் என்னைக்கி என்ன என விழித்தார்கள். தாமு “டேய் எதுக்குடா எங்க கிட்ட விளையாடறீங்க” என்று கத்தினான். 

கதிர் பேக்கை திறந்தான். கோழிவெட்ட வாங்கிய கத்தி அதில் இருந்தது. அதற்குப் பின் தாம் என்ன செய்தோம் என்பது அவன் நினைவில் இல்லை. 

கதிர் அந்த கத்தியை எடுத்து அந்த பையனின் கழுத்தில் ஒரு கோடு மாதிரி வைத்து இழுத்திருந்தான் ஒன்றும் நடந்த மாதிரியே தெரியவில்லை. அந்த பையன் காயத்தை தொட்டுப் பார்த்தான். பக்கத்தில் இருந்த பெண்கள்  வீல் என கத்தினார்கள். அவன் “ஒண்ணுமில்ல லேசான காயம்தான்” என காயத்தில் கையை வைத்துக் கொண்டு. “அண்ணே போய் பிளாஸ்திரி வாங்கிட்டு வாங்களேன்” என்றான் கதிரிடம். கதிர் தாமுவைப் பார்த்து “போய் பிளாஸ்திரி வாங்கிட்டு வாடா” என்றான். தாமு கடைப்பக்கம் ஓடினான்.  

கதிர் கத்தியை தூர வீசிவிடலாமா எனப் பார்த்தான். அப்படி வீசிவிட்டால் சுற்றி இருப்பவர்கள் தன்னை அடித்து  விடுவார்கள் என பயமாய் இருந்தது. 

திடீரென காயத்தில் இருந்து ரத்தம் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. அவன் உள்ளங்கையை நன்றாக அதில் வைத்து அழுத்திக் கொண்டான். கதிர் சட்டென கத்தியை கீழே போட்டுவிட்டு, பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து டேய் கையை எடு என்று துணியை அதில் வைத்து அழுத்தினான். கர்ச்சீப்பை வாகாக பிடித்துக கொள்ள  அவனுக்கு அருகில் நெருக்கமாக நின்று அவன் கழுத்தை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். இருவரை சுற்றியும் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. கதிர்தான் அதைச் செய்தவன் என்பதே அங்கிருந்தவர்க்களுக்கு மறந்துபோய்விட்டது. என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. ஏதோ நண்பர்களுக்குள் தகராறு என்று நினைத்துக் கொண்டார்கள். அந்தப் பையன் திடீரென அழுதான். “அண்ணே சும்மா வெளையாட்டுக்குத் தாண்ணே” என்றான். 

ஆம்புலன்ஸ் வருவதற்குள்  அவன்  மயங்கி விட்டிருந்தான். கடையிலிருந்து வந்திருந்த தாமு “டேய் நீ எதுக்கு கத்தி கொண்டு வந்த” என்று கத்திக் கொண்டு அழுதான். கதிர் “சின்ன காயம் தான் ஆம்புலன்ஸ் சீக்கிரம் வந்துச்சுன்னா கொண்டு போய் தையல் போட்டா சரியாயிடும்” என்றான். ஆனாலும் அவனுக்குள் இனம் தெரியாத பீதியும் பதற்றமும் காட்டுத்தனமாய் பெருக ஆரம்பித்தது. “தாமு, டீக்கடையில போய் கொஞ்சம் தண்ணி வாங்கியா” என்றான்.

ஆம்புலன்ஸ் வந்து அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு பறந்தது. செல்லும் வழியிலேயே அவன் இறந்து விட்டிருந்தான். 


  • குமாரநந்தன்

நன்றி- ஓவியம் : marchelle.hanuaw.com

2 COMMENTS

  1. ஒரு சிறுகதைக்கு தேவையான அத்துணை கூறுகளும் சரியாக பொருந்தி உள்ளது, அதிக பாத்திரம் இடம் பெறவில்லை,என்ற போதும், ஒரு பெரிய வாழ்க்கை சம்பவத்தை சுருக்கி கதையாக சித்தரித்துள்ளிர் சம்பவங்கள் மனம் பேசும் மொழி நல்ல முறையில் லாவகமாக கையாண்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.