அயோத்தி

வன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே நுழைந்து, கதவடியில் செருப்பைக் கழற்றிவிட்டு, குடையைத் தலைகீழாகக் கவிழ்த்தி சுவரோடு நிறுத்தின பின்பு சந்திராவைப் பார்த்தான். கையில் குடை கொண்டுபோயிருந்தான் என்றாலும் முதுகுப்புறத்தையும் சட்டைக் கைகளையும் நனைத்துக்கொண்டிருந்தான். சட்டைப் பித்தான்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டே சொன்னான்:

“நாயுடு சாப்பிடப் போயிருக்காராம். அந்த வேலைக்காரப் பையன்தான் சொன்னான். அவர் வந்தப்புறம்தான் தரமுடியும்னு சொல்லிட்டான். சாயந்தரம்தான் கடைக்கி வருவாராம்”

அவளுக்கு ஆத்திரமும் துக்கமும் தாங்க முடியவில்லை. அவனை என்ன செய்கிறதென்று புரியவில்லை.

“ஏன், அவர் வர்றவரைக்கும் கொஞ்சம் இருந்து வாங்கிட்டு வந்தா என்னவாம்? இங்கே என்னம்மோ பெரிய வேல பாத்து வெட்டி முறிக்கிற மாதிரிதான் ஓடியாந்தாச்சு. புள்ள முழிச்சதும் நான் என்னத்தைக் கலக்கிக் குடுக்கட்டும்?”

அவளுடைய பேச்சரவத்தில் குழந்தை புரண்டு படுத்தாள். அவன் பேசாமல் ஈஸிசேரில் சாய்ந்துகொண்டு புஸ்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுடைய லட்சியமின்மை அவளுக்கு ரொம்பவும் எரிச்சலூட்டியது. எதைப் பற்றியும் அக்கறையே கிடையாதா? இது என்ன ஜென்மம்?

நேற்று பள்ளிக்கூடம் விட்டு வரும்போதே நாயுடுவைப் பார்த்து பால் டின்னுக்குச் சொல்லிவிட்டு வந்தாள். நாயுடு, “நாளைக்கு வாங்க” என்று சொல்லியிருந்தார். வெளியே எங்கேயும் பால் டின்னே கிடைப்பதில்லை. நாயுடுவுடைய பையன் அவளிடம்தான் படிக்கிறான் என்பதால், நாயுடு பால் டின் தரச் சம்மதித்தார். மாதக் கடைசி ஆகிவிட்டது. வீட்டுக்கார அம்மாள்தான் கடன் கொடுத்தாள். அதை வாங்கிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். அவனானால் வாங்காமல் வந்துவிட்டான். இவளே போயிருந்தால் வாங்கிக்கொண்டுதான் வருவாள். கடைப் பையனுக்கு இவளைத் தெரியும். இவளுடைய சிரிப்பு அவனுக்கு ரொம்பவும் பிடித்தமானது. இவள் பள்ளிக்கூடத்துக்குப் போகிறபோது, கடையில் ஆட்கள் நின்றிருந்தாலும் இவளைப் பார்க்காமல் இருக்கமாட்டான். நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது.

“இங்கே வந்து ஈசி சேர்ல சாஞ்சு கெடக்கறதப் பாருங்களேன்? நேத்துக் காலையில இருந்தே பாலக் கலக்கிக் குடுக்க வழியில்ல. ராத்திரி பூரா முழிச்சி முழிச்சி எத்தனை தடவை அழுதிச்சி. பாதவத்தி செஞ்ச பாவத்துக்குப் பாலும் வராம அடச்சிப் போச்சு. இன்னைக்கு ஒரு நா லீவு. தொண்டத் தண்ணியக் குடுக்காம வீட்ல கெடக்க வழி இருக்கா?”

அவன் புஸ்தகத்தை மூடி மெதுவாக வைத்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றி, வேட்டி முனையில் பிரேமைத் துடைத்தான். மேலே சேலை விலகிக் கிடக்க, வெளியே பெய்கிற மழையையே பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டு சேலையைப் போட்டு மூடிக்கொண்டாள்.

“இங்க பாக்கறதுக்கு என்ன இருக்கு? அதுதான் என்னையே உருக்கொலச்சாச்சே” என்று வாய்க்குள் முனங்கினாள்.

இப்போது மழை வலுத்துவிட்டது. இந்த மழை இப்படி ரெண்டு நாளாகப் பெய்கிறது. தெருவில் யாருமே போகவில்லை. குளிர்ந்த சாரல் காற்று, திறந்து கிடந்த கதவு வழியாக வீசியது. அவன் நிதானமாக எழுந்துபோய் சாத்திவிட்டு வந்து, ஜன்னலருகே நின்றுகொண்டு வெளியே பார்க்க ஆரம்பித்தான். ஒரே ஒரு பையன், அவ்வளவு பெரிய நீளமான தெருவில் சட்டை போடாமல் சைக்கிள் ரிம்மில் குச்சியைக் கொடுத்து உருட்டியவாறு மழையில் நனைந்துகொண்டே வந்துகொண்டிருந்தான்.

குழந்தையைப் பற்றிய நினைப்பு மறுபடியும் வந்தது. குழந்தை அழுதால் எப்படிச் சமாதானப்படுத்துகிறது என்றே அவளுக்குப் புரியவில்லை. அவளிடம் கொஞ்ச நாட்களாகவே பால் இல்லை. வீட்டுக்கார அம்மாள் கூட ஏதோ கைப்பக்குவம் சொன்னாள். ஒன்றுமே சரிவரவில்லை.

கடைச்சாமான் வாங்குகிறது முதல், வண்ணான் கடை, காய்கறிக் கடை என்று எல்லாவற்றுக்கும் அவளேதான் அலைகிறாள். ஒரு சாமான் விலைபேசி வாங்கத் தெரியாது. எல்லாவற்றுக்கும் அவளேதான் போகவேண்டும்.

அன்றோடு அவளுடைய பாஸு அத்தான் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் சாயந்திரம் அவனைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். முடியவே இல்லை.

அவனைப் பற்றி நினைத்ததும் அவளுக்குத் தாங்க முடியவில்லை. கண்ணீர் வந்துவிட்டது. அவன் எவ்வளவு கெட்டிக்காரன்! அவன் மட்டும் இவளுக்குக் கிடைத்திருந்தால் வாழ்க்கை இப்படி நரகமாகி இருக்குமா? எவ்வளவு சந்தோஷமாக இருப்பாள்? அவளைப் பற்றி, அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்கிறதெல்லாம் அவனுக்குத் தெரியும். அவனோடு பேசின நாட்கள் எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தன.

பாஸு அத்தான் அவளுக்கு முறைப்பையன். எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். அம்மா கூட அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பாதான் இவனைப் பெரிய படிப்பாளி என்று ஆசைப்பட்டுக் கொடுத்துவிட்டார். இவன் வீட்டில், அவளுக்கு நகை அதிகமாகப் போடவேண்டாம், போடுகிறதைப் போட்டால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். அப்பாவுக்கு இதெல்லாம் ரொம்ப சௌகரியமாக இருந்தது. அதுக்காக இப்படி இவனோடு வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாகிவிட்டது. அவள் எவ்வளவோ நினைத்திருந்தாள். கடைசியில் இப்படி ஆகிவிட்டது.

கல்யாணம் ஆன பிறகும் பாஸு அத்தானை இவளால் மறக்க முடியவில்லை. அவனைப் பொறுத்து இவளுக்கு எத்தனை எத்தனையோ ஞாபகங்கள் இருந்தன. ஒன்றையும் மறக்க முடியவில்லை. இப்படியெல்லாம், இவ்வளவு ஆன பிற்பாடும் அவனை மறக்க முடியாமல் சங்கடப்பட்டாள். என்ன செய்ய முடியும் அவளால்? எந்த ஞாபகத்தை எங்கே கொண்டுபோய் ஒளித்து வைக்க முடியும்?

இவனோடு எப்படியாவது தன்னைப் பின்னிக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். அவளுடைய பாஸு அத்தானை மறக்க எவ்வளவோ பிரயாசைப்பட்டும் ஒன்றும் முடியவில்லை.

குனிந்தபடியே குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை அவனையே உரித்து வைத்திருந்தது. அது ஒன்றுதான் அவளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. பாஸு அத்தான் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று கொண்டுவரச் சொல்லி விட்டிருக்கிறான். இங்கேயே வருவான் என்றாலும், ஊரிலே பல பேர் பேசுகிறதுக்கென்று விஷயத்துக்காக அலைந்துகொண்டிருக்கிறபோது அவனால் எப்படி வரமுடியும்? இவளுடைய அம்மா வீட்டுக்குப் போனால் ஓடி வந்துவிடுவான். அவனுக்குத்தான் எவ்வளவு ஆசையிருக்கிறது. குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று தம்பியிடம் சொல்லிவிட்டிருக்கிறானே. குழந்தையைப் பார்க்கவா? இவளைப் பார்க்கவா?

இவன் பால் டின் வாங்கி வந்து, காய்ச்சிக் கலக்கிக் கொடுத்துவிட்டு, இனி எப்போது போவாள்?

“நாளைக்குப் போட்டுகிட்டுப் போகச் சட்டை இல்லை. துவைச்சிப் போடணும்” என்றான், ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே.

அவளுக்கு எல்லாம் வெறுத்துவிட்டது. அவனைப் பார்க்க முடியவில்லை. கண்கள் கலங்கி இருந்தன. தெளிவில்லாமல் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

“ம்… ம்… துவைக்கணும். எல்லாம் எந்தலையிலதான்…” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

அவன் சட்டென்று திரும்பி இவளைப் பார்த்தான். குனிந்து அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். அவன் உடம்பிலிருந்து வியர்வை வாடை அடித்தது.

“சந்திரா… ஏன் ஒரு மாதிரியா இருக்கே…” என்று காதுக்குள் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய விசும்பலில் குழந்தை விழித்துக்கொண்டு இரண்டு பேரையும் திரும்பிப் பார்த்தாள்.

“அழுதியா… நீ? ஐயோ…” என்றான்.

அவளுக்காக இரக்கப்படுகிறான். இவைதான் இரக்கத்தைக் காட்டுகிற வார்த்தைகளா? இதற்குமேலே ஒரு வார்த்தை சொல்லத் தெரியவில்லை. எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறான். கட்டினவள் அழுகிறாள். “ஐயோ” என்கிற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகளே கிடையாதா? இது என்ன சுபாவம்? ஒட்டகம் மாதிரி இது என்ன அசமந்த குணம்? மேலும் மேலும் அழுகை பெருகிற்று அவளுக்கு.

“ஆமா அழுதேன். என் தலவிதியை நெனச்சு அழுதேன். தூரப் போங்க…” என்று மேலும் தாங்க முடியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள்.

குழந்தை அவள் மடியில் படுத்திருந்தபடியே மிரள மிரள இருவரையும் பார்த்தாள். அவன் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அது இவனைப் பார்த்துச் சிரித்தது. அவள் இவனுக்கு எதிர்ப்புறமாய் தோளில் முகத்தை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அன்யோன்யத்துடன் இருக்கும் மனைவி, புருஷன் மேலே சாய்ந்துகொண்டுதான் அழுவாள். அவளுடைய அழுகை கூடிக்கொண்டே போயிற்று. அழ அழ பாஸு அத்தானின் ஞாபகம் மேலெழுந்துகொண்டே இருந்தது. இழந்துபோன சந்தோஷங்களை, ஏமாற்றங்களை நினைக்க நினைக்க அழுகையை அடக்க முடியவில்லை. வாயில் சேலைத் தலைப்பைச் சுருட்டிக் கவ்வினபடியே, அரைகுறையாய் விசும்பல்களினூடே சொன்னாள்:

“சண்டாளப் பாவியோ, இப்பிடி என்னயக் கொண்டு போயி பாழுங்கெணத்துல தள்ளுன மாதிரிப் பண்ணிட்டாங்களே. பணத்துக்கு ஆசைப்பட்ட கொள்ளக்காரப் பாவியோ என்னயப் பாழாக்கிட்டாங்களே ஓ… ஓ…”

அவளுடைய அழுகையைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் மனம் பொறுக்க முடியாமல், “சந்திரா… சந்திரா… அழாத. அழாதன்னா அழாத…” அவனுடைய வேட்டி முனையைத் தூக்கித் துடைக்க வந்தவனின் கையைத் தட்டிவிட்டாள். குலுக்கலில் அவள் மடியில் கிடந்த குழந்தையின் தலை கீழே தரையில் இறங்கிவிட்டது. குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். அதன் முதுகில் தட்டிக்கொடுத்து அவனுக்குத் தெரிந்ததைச் சொல்லிச் சமாதானப்படுத்தினான். அவளைப் பார்த்து, “சந்திரா, எந்திரி, எந்திரி… பால் டின் வாங்கிட்டு அப்படியே பாஸு அத்தான் வீட்டுக்குப் போயிட்டு வரலாம்” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தாள் சந்திரா. வெளியே இன்னும் வேகமாய் மழையும் காற்றும் அடித்துக் கொண்டிருந்தது.

(சதங்கை, 1973)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.