வியூகம்-ஹேமா

நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில்.  பலத்த மழை. வானிலிருந்து  ஒளியாய்  கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே! மின்தூக்கியில் பத்தாம் தளத்தை அடைந்து அங்கிருந்து கீழே இறங்கினோம். இப்போது மின்தூக்கி ஒவ்வொரு மாடியிலும் நிற்கிறது என்கிறார்கள். அப்போது அப்படியில்லை. ஏழாம் மாடியை அடைகிறோம், குப்பென சாம்பிராணி மணக்கிறது. கண்கள் தவிர்த்த பிற புலன்களைத் தொட்டுச் செல்லும் நுண்ணிய உணர்வுகளைச் சட்டென என்னால் பற்றிக்கொள்ள முடியும். மகேஸோ தனக்கு அப்படியொரு வாசமே வரவில்லை என்கிறாள்.

நெருக்கமானவர்களை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கச்  செல்லும்போது மனம் நமக்கு முன் பாய்ந்துசென்று அவர்களுடன் காத்திருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்குள்ளும் கூட அப்படியொரு துள்ளல். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே, அது வெறுமையான அறைகளுடன் அத்தனை நாட்கள் எனக்காகத்தான் காத்திருந்திருக்கிறது என்பது புரிந்துவிட்டது. இதைத் தெளிவான சித்தத்துடன் தான் சொல்கிறேன். அதற்கு முன் ஆறு வீடுகளைப் பார்த்திருந்தேன். அப்போதெல்லாம் எழாத  உணர்வு அந்த வீட்டைப் பார்த்ததும் ஏன்  உண்டாக வேண்டும், சொல்லுங்கள்!

மகேஸுக்கு முதற்பார்வையிலேயே வீடு பிடிக்கவில்லை. அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர்கள்  கடனைச் செலுத்த இயலாமல் வீட்டை வங்கியிடம் கைவிட்டிருந்தார்கள். இருந்த பணத்தை முற்றிலுமாய் துடைத்து யாரையோ வறுமையில் தள்ளிய வீடு என்ற பிம்பம் அதைப் பார்க்கும் முன்னரே அவள் மனதில் பதிந்து விட்டிருந்தது.

வீட்டுக் கூடத்துச் சுவரின்  காவிநிறத்துக்குப் பின்னால் சரியாய் பூசப்படாத பெரிய கற்கள் பாளம் பாளமாய் தெரிந்தன.  மங்கிய இளரோஜா நிற தரைக் கற்கள் அங்கங்கு தேய்ந்து விரிசல் விட்டிருந்தன. புதுப்பிப்பு பணிகளைச் செய்துவிட்டுக் குடியேறினால்தான் மதிப்பாய் நான்கு பேரைக் கூப்பிட முடியும். எங்களிடம்  அவ்வளவு பணம் இல்லை. வேண்டாம் என்ற முடிவுடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டோம். பொதுத் தாழ்வாரத்தில் நின்று புளோக்கிற்கு வெளியே பார்க்கிறோம், மேலே பரந்த வானம், கீழே விரிந்த பசுந்திடல், இரண்டையும் இணைத்து வலுவாய்  தைத்துக் கொண்டிருக்கிறது மழை. சில்லென்ற காற்று நுரையீரலுள் நுழைய  அங்கு நின்று பார்ப்பதற்கு அதியற்புதமாய் இருந்தது.  தலைதிருப்பி வீட்டைப் பார்க்கிறேன், அது புன்னகைக்கிறது. எப்படித் தெரியுமெனக் கேட்காதீர்கள். ஒருவர் நம்மை நோக்கி முறுவல் புரியும்போது அவருள்ளிருந்து கிளரும் பரவசம் நம்முள்ளும் பரவி முறுவலிக்க வைக்கும். சூழலை நுணுக்கமாய் உள்வாங்குபவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.

அக்கணமே அந்த வீடுதான் என முடிவு செய்து விட்டேன். மகேஸ் முதலில் சம்மதிக்கவில்லை. பார்த்த பிற வீடுகள் சரியாய் அமையாத காரணத்தாலும், இனியும் என் அம்மாவுடன் தங்கியிருக்க முடியாது என்றிருந்த சூழலாலும் மட்டுமே அவள் ஒப்புக்கொண்டாள். அவளுக்கும் என் அம்மாவுக்கும் திருமணமான நாள் முதலே ஒத்துவரவில்லை. அம்மா ஊரிலிருந்து பெண் எடுத்ததே அவருக்கு மருமகள் அடங்கியிருக்க வேண்டுமென்று தான். மகேஸ் பெருநகரத்தில் வளர்ந்தவள், தபால் வழி பி.ஏ தமிழ்  படித்தவள். மணமானால் மாறிவிடத் தேவையில்லை என்ற அளவிற்கு உலகைப் புரிந்து வைத்திருந்தாள். இருவருக்குள்ளும் வெகுநாளாகச் சலிப்பும் முனகலுமாய் புரண்டு கொண்டிருந்த வெறுப்பு, குழந்தை பிறந்தபின் பொருமலாய் பெருகிக் கொதிநிலையை எட்டியிருந்தது.  குழந்தைக்கு அம்மா சிசிரம் ஏற்று  செய்த கை மருத்துவங்கள்  மகேஸுக்கு பட்டிக்காட்டுத் தனமாய் தோன்றின. மகேஸ் பொறுப்பற்று குழந்தையைக் கையாள்வதாய் அம்மா நினைத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கூரிய வார்த்தைகளால் கீறிக் கொண்டார்கள்.

மகேஸை நான் மிகவும் காதலித்தேன். அவள் என்னை விடச் சற்று அதிகம் படித்திருந்தாள். பார்ப்பதற்கு அப்போது பிரபலமாயிருந்த நடிகையின் சாயலில் இருப்பாள்.  திருமணத்துக்குப் பின் போதை வஸ்துக்களை விட்டுவிட வேண்டும் என்று அவள் நிழற்படத்தைப் பார்த்ததுமே முடிவு செய்து விட்டேன். தினமும் ஊரிலிருக்கும் அவளை அழைத்துப் பேசுவேன். அப்போதெல்லாம் போன் அட்டை வாங்கிப்  பேச வேண்டும். பத்து நிமிடம் பேசுவதற்கு  பத்து வெள்ளிகள் செலவு செய்வேன். தினமும் ஒரு அட்டை வாங்குவேன், சில நாட்கள் இரண்டு.

அச்சமின்றி நடமாட முடிந்த, வெளிச்சம் நிறைந்த சிங்கப்பூரின் இரவுகள் மகேஸை ஆச்சரியப்படுத்தின. புருவங்கள் மேலேற ஒளிரும் கண்களுடன்  சாலைகளைப் பார்த்தபடி வருவாள். அவளது முகம் பூப்பதைப்  பார்ப்பதற்கென்றே அவ்வப்போது அவளை வெளியே அழைத்துச் செல்வேன். ஒவ்வொரு சனியும் பெருமாள்  கோவில், மாரியம்மன் கோவில், சிவன் கோவில் என்று ஏதோவொரு கோவிலுக்குப் போவோம். பின் அங்கிருந்து  கடலுக்கு. கரையில் வெகுநேரம் அமர்ந்திருப்போம். வாரம் முழுக்க வீட்டில் தனியே அடைந்து கிடந்த அவளுக்கு அது ஒரு திறப்பு.

மகேஸும் என்னை மிகவும் காதலித்தாள். எனக்காகவென்றே கணவாயையும் சிகப்பு மாமிசத்தையும் சமைக்கக் கற்றுக் கொண்டாள். அவளுக்கு அவை பிடிப்பதில்லை. எங்களுக்குள்ளிருந்த அன்பை வெளிப்படுத்தும் உதாரண நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வீட்டை வாங்க, அம்மா கொடுத்தது போக மிச்சப் பணத்தைச்  சேர்க்குமளவிற்கு நிலையாய் ஒரு வேலையில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நீதிமன்றம் இவற்றையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. நான் கூறிய முக்கியப் புள்ளிகளை,  வழக்கு மன்றத்தில் நிற்காது என்று சொல்லி என் வழக்கறிஞன் புறந்தள்ளிவிட்டான். அவற்றை எடுத்துப் பேசியிருந்தானென்றால் தீர்ப்பு சாதகமாய் வந்திருக்கும். இவன் கற்றுக்குட்டி, தான் புத்தகத்தில் படித்த விதிகள் வேலை செய்கிறதா என்று என்னை வைத்து முயன்று பார்த்திருக்கிறான். என்னைப் போன்றவர்களை வைத்துத் தொழில் பழகி இப்போது பெரிய ஆளாகிவிட்டான். சமீப நாட்களாய் சிறைக்கு வருபவர்களில் பத்தில் மூன்று பேரை உள்ளே அனுப்புபவன் அவன் தான்.

அந்த வீட்டுக்குப் போன முதல் நாளே கதவுத் தாழில் மாட்டி மகேஸின் ரோஜா நிறப் பட்டுச் சேலையின் முந்தானை நீள் வாக்கில் கிழிந்தது. சிந்தியிருந்த நீரில் குழந்தை வழுக்கி விழ, அவளின் மேலுதடு கிழிந்து ரத்தம் பெருகியது. ரத்தபலி, முக்கியமாய் குழந்தைகளுடையதைக் கேட்கும் வழக்கம் அந்த வீட்டுக்கு இருந்தது என்பதைப் பின்னாட்களில் அறிந்தேன். இதெல்லாம் பிரமை என்று நினைக்காதீர்கள். என்னுடைய இந்த எழுத்துகளை நீங்கள் படித்துக் கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு நான் சொல்வதும் உண்மை. பல கண்களுக்குத் தெரியவில்லை என்பதாலேயே தெளிவாய்ப் புலப்படாத விஷயங்களை மனித மனம் புறந்தள்ளிவிடுகிறது. மீதமிருக்கும் சில கண்கள் பார்த்த உண்மைகளைக் கேலி செய்கிறது, உண்மை சொல்பவர்களை நான்கு சுவர்களுக்குள் அடைக்க முயல்கிறது.

அந்த வீட்டில் குடியேறிய பின்னர் நாங்கள் குடும்பமாய் வெளியே போவது குறைந்தது. உடலுறவில் நாட்டம் இருக்கவில்லை. இதைக் கவனிக்கவே எனக்குச்  சில வாரங்கள் ஆனது. சூழல் அப்படி.  சுவரையெல்லாம் பூசி வீட்டைப் புதுப்பிக்க ஐம்பதாயிரம் வெள்ளிகளுக்கு மேல் ஆகியிருந்தது. கடன் தான். அதைக் கட்ட நான் இரவு நேரங்களில் கார்களைத் துடைக்கும் பணியைக் கூடுதலாக எடுத்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்து குளித்து உடைமாற்றி இரண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு இரவில் கார்களைத் துடைக்க ஓடுவேன்.  தூங்குவதற்கு விடியற்காலை ஆகிவிடும்.  ஒரு நாளில் இருபது மணிநேர உழைப்பு, இயந்திரமாகியிருந்தேன். நானும் மகேஸும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவே நேரமிருக்கவில்லை, இதில் உடலாவது உறவாவது!

முதல் வேலை முடிந்து முன்னிரவில் வீட்டிற்குள் நுழையும் போது மகள் வேகமாய் தவழ்ந்து வந்து கால்களைக் கட்டிக் கொள்வாள். அப்போதிருந்த நிலையில் என்னை மனிதனாய் உணரவைத்தது அவளின் தொடுகை மட்டும் தான். அவள் பெயர் ரூபா. இப்போது சென்னையில் மகேஸின் அம்மாவிடம் இருக்கிறாள். அவர்கள் என் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அவளது புகைப்படத்தைக் கூட அனுப்பி வைக்க மாட்டேன் என்கிறார்கள்.

நாங்கள் குடியேறிய முதல் இரண்டு மாதங்களில் பெரிதாய் எதுவும் நிகழவில்லை.  குழந்தை தூக்கத்தில் வீரிடுவாள். எனக்கு ஏதேதோ கனவுகள் வரும். என்ன கனவு என்று நினைவிருக்காது. நட்டநடு ராத்திரியில் இதயம்  பகீரென அதிரும், திடுக்கிட்டு எழுவேன். என் கழுத்து வியர்வையில் நனைந்திருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாய் தான் அந்தச் சப்தங்கள் கேட்க ஆரம்பித்தன. அதிகாலை நல்ல தூக்கத்தில் இருப்பேன்.  குழந்தை வலியால் முனகும் ஓசை எங்கோ ஆழத்திலிருந்து கேட்கும். ஓடிச் சென்று அறைக்குள் எட்டிப் பார்த்தால் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பாள். குளித்துக் கொண்டிருப்பேன், குழந்தையின் அலறல் கேட்கும். துடைத்தும் துடைக்காமலும் ஓடுவேன். அறை மூலையில் பில்டிங் ப்ளாக்ஸை பொருத்த முயன்றுகொண்டிருப்பாள் அல்லது  பச்சை மரக்குதிரையில் ஏறி முன்னும் பின்னுமாய் ஆடிக் கொண்டிருப்பாள்.

நாளாக ஆக மகேஸின் பேச்சில் சிடுசிடுப்பு ஏறியது. பார்த்த அனைத்திலும் குறை சொல்ல ஆரம்பித்திருந்தாள். நாள் முழுவதும் வீட்டில் பேச ஆளின்றி அடைந்து கிடப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. வேலைக்குப் போகப் போவதாகச் சொன்னாள். ஆனால் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது. என் அம்மாவிடம் விட்டு வளர்க்க அவள் விரும்பவில்லை.

தினமும் இரவுகளில் கொசுவின்  ரீங்காரத்தைப் போன்றதொரு சத்தம் அந்த வீட்டில் கேட்டுக்கொண்டே இருந்தது என்பது அங்குச் சென்ற இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தான் என் கவனத்தில் படிந்தது. வீட்டைப் பார்க்கச் சென்ற முதல் நாளிலேயே அந்தச் சத்தம் எனக்குக் கேட்டிருக்கிறது. இதை இங்கு, பக்கத்து செல் பைத்தியக்காரனின் அலறல்களுக்கு மத்தியில் அமர்ந்து யோசிக்கும் போது உணர்கிறேன். அது அந்த வீட்டின் குரல். தொடக்க நாள் முதலே அது என்னுடன் பேச முயன்று வந்திருக்கிறது. என் உள்மனம் தானாய் அதை ட்யூன் அவுட் செய்திருக்கிறது.  மெல்ல மெல்ல  அந்த ரீங்காரம்  தெளிவு பெற்று சொற்களாய் ஆனது. வார்த்தைகள்  தம்மைக் கோர்த்துக்கொண்டு சங்கிலிகளாய் வெளிவந்தன, ஒரே சீராய் கீழ்ஸ்தானியில்  ஒலிக்கும் அவை குறிப்பிட்ட இடைவெளியில்  கணீரென ஓங்கியொலித்து கீழே விழுந்து மீண்டும் சீராய் தொடரும், மந்திர உச்சாடனத்தைப் போல. அப்போது அது என்னை உறுத்தவில்லை.  நான் ஏற்றுக் கொண்டிருந்த வேலைகள் அப்படி. பாதுகாப்பு கவசமணிந்து எண்ணெய் டாங்கிற்குள் இறங்கிச் சுத்தம் செய்யவேண்டும், நாள் முழுவதும். அயற்சியூட்டும் வேலை. உடற்சோர்வு அப்படியே படுத்துக்கொள் எனச் சொல்லும். ஒருமுறை உடன் வேலை செய்த மலேசியன் டாங்கிற்குள் தவறி விழுந்துவிட்டான். விழுந்த அதிர்ச்சியில் மூச்சை  வேகமாய் உள்ளிழுத்திருக்கிறான்.  அடியில் தேங்கியிருந்த எண்ணெய், சுவாசக் குழாய்க்குள்  புகுந்துவிட்டது. சுவாசப்பைகள் செயலிழந்துவிட்டன. இரண்டு வாரம் அவனை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துச் செயற்கை சுவாசம் கொடுத்தார்கள். அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்த இயந்திரங்களின் ஓட்டத்தை நிறுத்த மருத்துவர்கள் முடிவு செய்த நாளில்  வாய்விட்டு அழுதபடி ஓடி வந்த அவனுடைய மாமியாரின் முகம் எனக்குத் தெளிவாய் நினைவில் நிற்கிறது. மிகக் கவனமாய் செய்யவேண்டிய வேலை. 

வந்த இரண்டு மூன்று வாரங்களில் என் கவனத்தை தன்புறம் இழுக்கும் வேலைகளைத் தொடங்கியது அந்த வீடு. அப்போது வாரயிறுதிகளில் கொஞ்சமாய் மது அருந்தும் வழக்கம் எனக்கிருந்தது. சமையலறைச் சன்னலிடைக் கம்பிகளை விலக்கிவிட்டு வெளியே பார்த்தபடி குடிப்பதை விரும்பினேன். அங்கு நிற்பது எனக்குப் பிடித்தது. அவ்வழியே சில்லென உள்நுழைந்து வாசல் வழி வெளியேறும் காற்றில் ஏதேதோ நினைவுகள் மனதின் அடியாழத்திலிருந்து  கிளர்ந்தெழும். இதே போல இந்த இடத்தில் வெளியே பார்த்தபடி முன்பே நின்றிருந்திருக்கிறேன். முன்பே என்றால் அந்த வீட்டை வாங்கிக் குடிபுகுந்த பின் அல்ல, அதற்குப் பல காலம் முன்பு. வேறொரு பரிணாமத்தில் என்னில் ஒரு பகுதி அதே இடத்தில் நின்றிருந்து வானின் முழு நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. எப்போது, எப்படி என்பதெல்லாம்  நினைவின் விளிம்பில் சிக்கித் தடுமாறும். அது என் வீடு,  ஆதிகாலம் தொட்டு என் வசமிருக்கும் வீடு. அதன் சுவர்க் கற்கள் என் கைகள் பட்டு மழுங்கியவை, தரைக்கற்கள் என் கால்பட்டுத் தேய்ந்தவை. என் மேற்தோல் சிலிர்க்கும்.

அங்கு நிற்கும் எல்லா நேரமும் இப்படி ஆவதில்லை. கிரக்கத்தை உண்டு பண்ணும் அவ்வுணர்வு மீண்டும் எழுந்து விடாதா என்ற ஆவலில் அவ்வப்போது குடித்துவிட்டு அங்கே நிற்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த மாதங்களில்  பௌர்ணமியை ஒட்டிய தினங்களில் அப்படி உண்டாகிறது என்பதைக் கண்டுபிடித்தேன். சாலையோர தகர டின்களில் எரிக்கப்படும் ஜாஸ் தாள்களின் புகை அடங்கிய முழுநிலவின் இரவுகளில் அந்த வீடு தன் உள்ளடுக்குகளில் பொதித்து வைத்த நினைவுகளை மீட்டெடுக்கிறது என்பதைப் பின்னாட்களில் உணர்ந்தேன். அதை உணர்ந்த சமயம் அந்நினைவுகளின் அங்கமாய் நான் மாறியிருந்தேன். வீட்டில் குடியேறிய ஆறு மாதங்களில் என் போதைப் பழக்கம் முழுவதுமாய் மீண்டிருந்தது.

ஓர் இரவில் அப்படிக் குடித்து விட்டு சன்னலோரம் நிற்கிறேன்,  என் கண்களுக்கு முன்னிருந்த காட்சியின் விளிம்புகள் மெல்ல அழிகின்றன, மையால் வரைந்த ஓவியத்தின் மீது நீர் கொட்டினால் கலையுமே அது போல. கீழேயிருந்த மரங்கள், கார்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தன. சில நொடிகளில் மையிருட்டு, கண்கள் கொட்டும் கணங்களில்கூட மறைந்துவிடாத ஆழ்ந்த  இருட்டு.

மெல்ல மெல்ல அவ்வெளியின் அடர்ந்த இருள் தானே பிசைந்துகொண்டு உருவமாய் திரள ஆரம்பித்தது. முதலில் விரிந்த கீழுடல் உச்சியில் சுருங்கி மீண்டும் விரிந்து மேலுடலாய் எழும்பியது, ஒரு உடுக்கைப் போல. அதற்கு மேல், கீழ்ப்புள்ளியை நோக்கிச் சரியும் முகவாய், ஓவெனத் திறந்த வல்லிய உதடுகள், அதனுள்ளிருந்து வெளிநீண்ட கருஞ்சிவப்பு நாக்கு, கூர்மூக்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிருந்து மேலாக அவ்வுருவம் எழுந்தது. சிறிது நேரத்தில் நாக்கைத் துருத்தி உறுத்து விழிக்கும் முழங்கையளவு காளி சிலையாய் கண்களுக்குத் தெரிகிறாள். அவள் கறுத்த மேனி வேப்பெண்ணெய்யைத் தேய்த்து உருவிவிட்டது போலப்  பளபளக்கிறது 

அவளுக்குப் பக்கத்தில் சீன புத்தர். அவர் மீது சிவப்பொளி படர்ந்து அவரின் முகச்சாந்தத்தைத் தீவிரமாக்கிக் காட்டுகிறது. அவருக்குப்  பின்னால் காவிச் சுவரில் சிலுவை தொங்குகிறது. காளியின் நீண்டிருந்த நாவில் சிவப்புப் பொட்டு, இல்லை பொட்டு ரத்தம் வழிந்து சொட்டுவதற்குத் தயாராய் நிற்கிறது. அதன் முன் ஒரு பூசாரி, நடுமுதுகு நிமிர்த்தி கண் மூடி அமர்ந்திருக்கிறேன், அது நான் தான். இல்லை, அது சீன முகம். ஆனால் அவனை நானாய் உணர்கிறேன். அருகில் இரண்டு பெண்கள். ஒருத்தியின் முகம் ஒட்டி, கன்னத்து எலும்புகள் புடைத்துத் தெரிகின்றன. அடுத்தவளுக்கு வட்ட முகம். இருவரும் கண்கள் செருக நின்றிருக்கிறார்கள்.  படர்ந்திருக்கும் சாம்பிராணிப் புகைக்கு மத்தியில் அவர்களின் முகம் மட்டுமே தெளிவாய் தெரிகிறது. என் வாயிலிருந்து வரப்போகும் சொல்லுக்காக அவர்களின் காதுகள் காத்திருக்கின்றன.

காளிக்கும் எனக்கும் நடுவில் ஒரு சிறுமி தலை துவள படுத்திருக்கிறாள். அவளது கைகள் பின்னிழுத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. வாய்க்குள் துணி. என் மகள் வளர்ந்தால் அப்படிதான் இருப்பாள் என்று அந்த நேரம் தோன்றுகிறது. மனம் பதறுகிறது. என் வாய் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறது. அவளைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடு என்று உள்மனம் அலறுகிறது. மந்திர உச்சாடனத்தின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகப்படுகிறது. வாயிலிருந்து உதிரும் சொற்களின் விசையில் சுற்றிலுமிருக்கும் காற்று அதிர்கிறது. கண் செருகிப் படுத்திருக்கும் மகளின் உருவம் மனதின் சமநிலையைக் கலைக்கிறது. வியர்வையின் உப்புச் சுவையை நாநுனியில் உணர்கிறேன். என் உதடுகள் நடுங்குகின்றன. கண்களிலிருந்து நீர் வழிகிறது. மகளை அணைத்துத் தூக்க என் கைகளை அவளருகில் கொண்டு செல்கிறேன். செலுத்தப்பட்டவை போல என்னையும் மீறி அவை அவளது தோள்களுக்கு மேல்  செல்கின்றன. என் கைகளுக்குள் அவள் கழுத்து சுலபமாய் அடங்குகிறது. பலவந்தமாய் கைகளை இழுத்துக்கொள்ள முயல்கிறேன்.  என் கைக்கட்டை விரல்களுக்குக் கீழே அவளின் தொண்டைக்குழி  கோலி குண்டைப் போல மேலும் கீழும் அலைகிறது. பாருங்கள், அதை நினைக்கும் போதே மயிர் சிலிர்க்கிறது. அவள் ஹக்ஹக் என்கிறாள். மடேரென மண்டையில் அறையப்பட்டவனாய் திகைத்து விழிக்கிறேன். கொஞ்சம் தள்ளி ரூபா கண் செருகிக் கிடக்கிறாள். அவளுக்கும் எனக்கும் இடையில் ஆங்காரமான காளியாய் மகேஸ் நிற்கிறாள், கையில் காய் வெட்டும் மரக்கட்டையுடன்.

ரூபாவைத் தூக்கிக் கொண்டு ஓடு என்று மனம் ஓலமிடுகிறது. பதட்டத்துடன் அவள் பக்கம் நகர முயல்கிறேன். கட்டையால் என் தலையை மீண்டும் பலமாய் தாக்குகிறாள் மகேஸ். அதிர்ச்சி நடுமண்டையிலிருந்து வெளிவட்டமாக நகர்ந்து பரவுகிறது. அது மண்டையின் ஓரங்களைத்  தொடுவதற்குள்ளாக என்னை ஆவேசமாய் தள்ளி விடுகிறாள் மகேஸ். அவளின் கைகளுக்கு ஐந்து யானை பலம் வந்துவிட்டிருந்தது.  குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகமாய்  படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அது தான் என் மகளை இறுதியாய் நான் பார்த்த தினம்.  

மறுநாள் கண்விழிக்கும் போது நடுப்பகலாகி இருந்தது. வீட்டில் மகேஸும் ரூபாவும் இல்லை. அம்மாவைத் தொலைப்பேசியில் அழைத்தேன். அங்கேயும் இல்லை. மாலையில் மகேஸ் மட்டும்  வந்தாள். பேச முயன்றேன்.  கேட்டதாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவளிடம் குழந்தையைப் பற்றிக்  கேட்கப் பயமாக இருந்தது. மகேஸ் அன்று முதல் படுக்கையறைக்குள் கதவைத் தாழிட்டுக்கொண்டு இருக்க ஆரம்பித்தாள். என் பலவீனங்களை முழுமையாய் தெரிந்து வைத்திருந்த அந்த வீடு திட்டமிட்டு மகேஸை விலக்கி என்னைத் தனிமைப்படுத்தியிருந்தது. தன் கோர ஆட்டத்தை முழுமையாய் அது வெளிக்காட்டத் தொடங்கியது அதன் பின்னர் தான்.

அந்த  வீடு உயிருள்ள மிருகமாய் மாறி  தன்னுள் எப்போதோ நடந்த சம்பவங்களை நாவால் மீட்டு அசை போடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. தன் நினைவடுக்குகளில் பதிந்த  வரலாற்றை  மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கும் வழக்கம் பலகாலமாகவே அதற்கு இருந்து வந்திருக்கிறது. இதை வழக்கு மன்றத்தில் சொன்ன போது  யாரும் நம்பவில்லை. சக்தியை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது என்று அறிவியல் பேசுகிறார்கள். முழு சக்தியுடன் செயல்பட்ட மனிதன் இறந்த பின் அதுவரை உள்ளிருந்து அவனைச் செயல்பட வைத்த சக்தி எங்கே போனதென யோசிக்க மறுக்கிறார்கள். அந்தச் சக்திக்கு மூலமாய் இருந்த நிகழ்வுகளும் நினைவுகளும் என்ன ஆனதென யாரும் சிந்திப்பதில்லை. 

அந்த வீடு  உருவாக்கி வைத்திருந்த வலிய வியூகத்துள்  நுழைந்துவிட்ட நான் வெளியேறும் வழியின்றி அதன் வலுவான பற்களுக்கிடையில்  சிக்கி அரைபட ஆரம்பித்தேன். கொஞ்சம் நாட்களில் அந்த வீட்டின் நினைவுகளின் அங்கமாய் மாறி அதன் நாவசைப்பிற்கேற்பச் சுழலத் தொடங்கினேன். என்னுடன் சேர்ந்து காளியும் புத்தரும் ஏசுவும் சுழன்றார்கள். நம்புங்கள், இதெல்லாம் நூறு சதவிகித உண்மை. ஐம்புலன்களையும் அதிவிழிப்பில் வைத்திருப்பவர்களால் மட்டுமே இவற்றை உணர முடியும்.

லிட்டில் இந்தியா ஆர்கேடில் கருப்புக் காளி சிலையையும், சைனா டவுனில் புத்தர் சிலையையும் வாங்கினேன். சிலுவையில் ரத்தம் ஒழுக அறையப்பட்ட ஏசு சிலையை வீட்டிற்குப் பக்கத்திலேயே வயதான சீனன் ஒருவன் பழைய பொருட்களை விற்கும் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வாங்கிக் கொண்டேன். என் புருவங்களின் ஓரங்களையும் மீசையையும் மழித்தேன். தலையைப் பின்னோக்கி வழித்துச் சீவினேன். இதையெல்லாம் செய்வித்து தன் நினைவு அச்சின் மேடு பள்ளங்களுக்கேற்ப என்னைச்  செதுக்கித் தன்னில் சரியாய் பொருத்திக் கொண்டது  வீடு.

சிலைகளுக்குப் பூஜை செய்யச் செய்ய என் அடையாளம் மங்கியது. உடலில் வெளிர் மஞ்சள் நிறம் படிந்தது. முகம் அகலமாய் விரிந்தது. என் கண்கள் தேங்காய் கீற்றைப் போல முனை இறங்கிச் சிறுத்தன.  மகேஸ் வேலைக்குப் போக ஆரம்பித்து நாளின் பெரும்பகுதியை வெளியே கழிப்பவளாய் மாறியிருந்தாள். என்னுடன் பேசுவதே இல்லை. என்னை விட்டு நிரந்தரமாய் பிரிய அவள் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருந்தாள். அது தவறில்லையா! காளிக்குச் சினம் மூண்டது. தன் சிவந்த கண்களைப் பெரிதாய் விரித்து நாநீட்டி ஓங்காரமிட்டாள். தன் ஆங்காரம் தணிய ரத்தக் காவு கேட்டாள்.

பெரிய தலைவாழை இலையில் படையலாய் கிடக்கிறான் அந்தச்  சிறுவன். அவனது மூக்கிலிருந்து வெளியேறும் ரத்தம்  பசிய இலையில் சிவப்பாய் கொழகொழத்துச் சொட்டுகிறது. இலையின் இரண்டு ஓரங்களில் நறுக்கி குங்குமம் பூசப்பட்ட எலுமிச்சம்பழம். என் குரல் மந்திரங்களை முனகலாய் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. வார்த்தைகள் ஒன்றோடொன்று பிணைந்து அறையெங்கும் புகையாய்  படர்கின்றன. அவற்றின் துகள்கள் படும்போதெல்லாம் காளியின் உடல் திமிறுகிறது. கறுத்துக் கரகரத்த குரலில் தாகமெடுக்கிறது சீக்கிரம் என்கிறாள் காளி. அவளின் சிவந்த நாக்கு அரவத்தினுடையதைப் போல நீண்டு நீண்டு மடங்குகிறது. அவ்வப்போது அவளிடும் ஹுங்காரம் காற்றை அறுக்கிறது.

மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்த கூரான கத்தி. அதைக்கொண்டு படையலின் தொண்டையில் ஒரு கீறல், முதலில் மெலிதாய். துளிர்க்கும் ரத்தத் துளிகளை மூன்று முறை வழித்து காளியின் நாவில் தடவுகிறேன். அவளின் உடல் திமிறல்   மட்டுப்படுகிறது. கத்தியை அழுத்துகிறேன். ரத்தம் பெருகுகிறது. அதனை வழித்து காளியின் நாவில் வைக்க அவளின் உடல் இளகுகிறது. கண்கள் செருகுகின்றன. சாம்பிராணி புகை திக்கெனக் கிளம்பி படையலை மறைக்கிறது, காளியின் உருவம் மறைந்து அவளின் சிவந்து செருகிய கண்களும் தொங்கிய நாக்கும் அதில் சொட்டிக் கீழ் விழும் ரத்தமும் மட்டுமே தெரிகின்றன. எனக்கு மூச்சு முட்டுகிறது.  வாயைத் திறந்து கிடைத்த காற்றை உள்ளிழுக்கிறேன்.  நெஞ்சு எரிகிறது. முளை மங்கிக் காட்சி கரைக்கிறது. நான் அறைக்கு நடுவில்  நிற்கிறேன். எனக்கு முன்னால்  படுக்கையில் மகேஸ். ரோஜா நிற மெத்தை விரிப்பில் ரத்தம். 

நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் எனக்கு மனநலம் கெட்டுப் போனதென்று வாதாடினான் என் வழக்கறிஞன். அம்மா கெஞ்சிக் கேட்டதால் மட்டுமே நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். என்னை ஜாக்கிரதையாகக் கையாளும்படி உங்களிடமும் சொல்லியிருப்பார்கள், சரி தானே! இப்படிச்  சொன்னவர்கள் கண்ணையும்  காதையும்  மட்டுமே கொண்டு மண்ணைத் துழாவுபவர்கள், இந்நிலத்தில் அலையும் கோடானுகோடி நினைவுகளைப் பற்றியறியாத உணர்விலிகள். பார்த்தேயிராத நிலக்காட்சிகளும் மனிதர்களும் கனவுகளில் வருவது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. காற்றில் அலையும் நினைவுகள் தான் கனவுகளுக்குள் புகுகின்றன. நம்மை தம்மிலொரு அங்கமாகத் தைத்து வெளியேறுகின்றன.

நான் இங்கு வந்த சில மாதங்களில் அம்மா இறந்து போனாள். பார்க்க வரும்போதெல்லாம் ‘நம்ம வீட்டிலேயே இருன்னு திருப்பி திருப்பி சொன்னேனேடா, அந்தப் பாவி உன்னை இங்க கொண்டுவந்து நிறுத்திட்டாளே,’ என்று மகேஸைக் குற்றம் சொல்லி  அழுவாள். மகேஸின் மேல் முன்பு எனக்குக் கோபம் இருந்தது, இப்போது இல்லை. மணமான புதிதில் மகேஸுடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது வருத்தமாயிருக்கிறது. அப்படியே இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் வருகிறது.

அம்மா போனபின் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது மாதம் ஒரு ஞாயிறு தேவாலயத்திலிருந்து சிஸ்டர் ஒருவர் வருகிறார். என் முன் மண்டியிட்டு ஜெபித்து என் குற்றங்களை மன்னிக்கச் சொல்லி ஆண்டவரைக் கண்ணீருடன் கெஞ்சுகிறார். அவர் கெஞ்சுவதைப் பார்க்க எனக்கும் அழுகை வரும். மகேஸைக் காயப்படுத்திய கைகளைத் தரையில் வலுவாய் குத்திக் கொண்டு அழுவேன். மகளை நினைத்து அழுவேன். அழுகை என் பாவங்களைக் கரைத்துவிட்டதாக,  ஆண்டவர் என்னை மன்னித்துவிட்டதாக, என்னைப் பரிசுத்தப்படுத்திவிட்டதாகச் சொல்லி சமாதானம் சொல்லுவார் அந்த சிஸ்டர்.

இப்போது எனக்கிருக்கும் ஆசையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். களைப்பாய் வீடு திரும்பிய நாட்களில் தவழ்ந்தோடிவந்து என் கால்களைக் கட்டிக்கொண்டு தலைதூக்கி என் முகம் பார்த்த என் மகளைப் பார்க்கவேண்டும். மெத்தென்ற அவளின் பிஞ்சு உடலைக் கட்டி இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும், ஒரு முறையாவது. உங்களால் இதற்கு எந்த வகையிலாவது  உதவமுடியுமா? குறைந்த பட்சம் அவளின் புகைப்படம் ஒன்றையாவது எனக்குப் பெற்றுத்தர முடியுமா?

Previous articleஉலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்
Next articleஅசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
Avatar
இவர் கடந்த பத்து வருடங்களாக எழுதி வருகிறார். இவரது சிறுகதைகளும் குறுநாவல்களும் உள்ளூர் மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிங்கப்பூர் மாத இதழான ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இல் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது சிங்கப்பூரில் நடந்த நிகழ்வுகளைக் குறித்து இவர் எழுதிய கட்டுரைத் தொடர் 17 மாதங்களுக்கு வெளிவந்தது. அக்கட்டுரைகளின் தொகுப்பான ‘வாழைமர நோட்டு’ இவரது முதல் புத்தகம். இந்தப் புத்தகம் சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020 அபுனைவு பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. இவரது சிறுகதை ‘பெயர்ச்சி’ தங்கமுனை விருது 2019இல் இரண்டாம் பரிசைப் பெற்றது. இவரது ‘வெயிற்துண்டுகள்’, ‘பகடையாட்டம்’ ஆகிய கவிதைகள் முறையே சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசையும், 2020ல் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி, கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு முதலிய இதழ்களிலும் கனலி, அரூ, திண்ணை, மலைகள்.காம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும், வம்சி பதிப்பகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிராங்கூன் டைம்ஸ், தங்கமீன் வாசகர் வட்டம், அகநாழிகை பதிப்பகம் தொகுத்த நூல்களிலும், கவிதைகள் கவிமாலை, poetry festival Singapore தொகுத்த நூல்களிலும் வெளிவந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.