உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்

And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great game, the grandest game in the world.

(1963-ஆம் ஆண்டு ஜான் டிக்ஸன் கார் (John Dickson Carr) ‘The Grandest Game in the Worldஎன்ற கட்டுரையிலிருந்து)

ஒருவர் கொல்லப்படுகிறார். அவருடைய எதிர்கால கனவுகள் சிதைவதைப் பற்றியும், அந்தக் கொலைக்கு பின்னான நாட்களில் அவருடைய குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள்  அதை எதிர்கொள்ள முயலும் – அவர் இல்லை என்பதை ஏற்க முடியாமலும், அதே நேரம் நிதர்சனத்தை உணர்த்தும் விதம், கொலைக்கான சமூகக் காரணிகள், இவற்றையெல்லாம் பேசாமல் வெறும் விளையாட்டாக, குற்றப் புனைவுகளைப் பார்ப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும், விளையாட்டு என்று குறிப்பிடுவது ஒரு துயர நிகழ்வை மலினப் படுத்துவதாகாதா என்ற கேள்விகள் இயல்பாக எழலாம். கார் சொல்வது முற்றிலும் தவறு என்று தோன்றினால், குற்றப் புனைவுகளின் உலகினில், குறிப்பாக ‘யார் அதைச் செய்தது’ (whodunnit), என்ற அதன் உள்-வகைமைக்குள் செல்லத் தேவையில்லை. அல்லது மர்மத்தை விடுவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், பிற விஷயங்களையும் பேசும் – ஸ்காண்டிநேவிய – குற்றப்புனைவுகள்  உள்ளன, அவற்றிற்கு நேரத்தை ஒதுக்கலாம். டோன்னா டார்ட்-இன் The Secret History போன்ற, ஒரு கொலையுடன், அதை யார் செய்கிறார்கள் என்பதை முதல் பக்கத்திலேயே கூறிவிட்டு, ‘ஏன் செய்கிறார்கள்’, அதன் பின்னால் என்ன நடக்கிறது என்று அடுத்த ஐந்நூறு பக்கங்களில் விவரிக்கும் நாவல்களை வாசிக்கலாம்.  

விமர்சனங்கள் பல இருந்தாலும்,  ‘யார் செய்தது’ (whodunnit), என்ற வகைமைக்கிருக்கும் வாசகப்பரப்பும், அதன் மேலுள்ள ஆர்வம் கணிசமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. நிலையற்ற அன்றாட வாழ்வில், இறுதிப் பக்கத்தில் யார் குற்றவாளி, ஏன் அதைச் செய்தார், எப்படிச் செய்தார் என்று நமக்குத் தெரிய வருவது, அதுவரை மங்கலாக இருந்த அனைத்தும் துலக்கமாகத் தெரிவது, நமக்கு திருப்தியைக் கொடுக்கக்கூடியதாக இருப்பது, அதன் ஈர்ப்பு குறையாமல் இருப்பதற்கான ஒரு காரணமாக இருக்கக் கூடும்.   இன்னொன்று, ‘யார் செய்தது’ (whodunnit), ஒரு போட்டியும் கூட, புனைவில் துப்பறிபவனுக்கு முன்பாகவே நம்மால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற, துப்பறிவாளனை உருவாக்கிய எழுத்தாளருடன் நம் புத்திக்கூர்மையைப் பரிசோதிக்கும் விளையாட்டு. ஆனால் இந்தப் போட்டியில் வெற்றிக்கு இணையாக அல்லது அதை விட அதிகமாகவே கூட வாசகன் எதிர்பார்ப்பது தன் தோல்வியை என்றும் கூறலாம். இந்த ஆசாமி தான் குற்றவாளி என்று தான் எண்ணியிருந்ததைத் தவறென்று எழுத்தாளர் சொல்லும்போதும் வாசகனுக்குப் பரவசமே ஏற்படுகிறது. இனி இந்த எழுத்தாளரின் நாவலையோ, அல்லது இந்த வகைமையிலேயே படிப்பதில்லை என்று அவன் முடிவெடுப்பதில்லை, மாறாக, அடுத்து எங்குத் துப்பறியலாம் என்று மற்றொரு குற்றப்புனைவுலகைத் தேடிச் செல்கிறான்.

போட்டி என்று வரும் போதும், அதற்கான விதிகளும் தேவையல்லவா? நாவல்  முடிவதற்கு இரு பக்கங்களுக்கு முன் புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தியோ, அல்லது அதுவரை வாசகனுக்குத் தெரியாத தகவல்களைக் கூறியோ (அல்லது வலிந்து திணித்தோ), எழுத்தாளர் வெல்லக் கூடாது. மேலும் ஒரே ஒரு துப்பை (clue) மட்டும் ஓரிடத்தில் வைத்து வாசகனை வெற்றிபெறச் சொல்லக் கூடாது. ஜான் டிக்ஸன் கார் (John Dickson Carr) தன்னுடைய கட்டுரையில் இந்த வகைப் புனைவுகள், துப்புக்களின் ஏணி(ladder of clues) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு படியாக ஏறி இலக்கை வாசகன் அடையலாம். அல்லது, புதிரை எழுத்தாளர் அவிழ்க்கும் போது, அதுவரை மூளைக்குப் புலப்படாத ஏணியின் வடிவமைப்பு கண்முன் தெரிந்து, ‘அடடா இதை விட்டுவிட்டோமே’, ‘இந்தப் படியைக் கவனிக்காமல் விட்டதால்தான் விழுந்து விட்டோம்’ என உண்மை தெரிய வரும்போது ஏற்படும் பரவசத்தோடு, வாசகனுக்கு அவன் செய்த தவறுகளும் கிளர்ச்சியைத் தரும்.

இந்த விளையாட்டின் விதிகள் என்னவாக இருக்க முடியும்?. 1930-ஆம் ஆண்டு, அகதா க்ரிஸ்டி உள்ளிட்ட மர்மப் புனைவு எழுத்தாளர்களால் துவக்கப்பட்ட ‘துப்பறியும் மன்றத்தில்’ (Detection Club) உறுப்பினராகும் போது எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி:

Do you promise that your detectives shall well and truly detect the crimes presented to them using those wits which it may please you to bestow upon them and not placing reliance on nor making use of Divine Revelation, Feminine Intuition, Mumbo Jumbo, Jiggery-Pokery, Coincidence, or Act of God?

நகைச்சுவைக்காக வைக்கப்பட்டிருக்கக் கூடும், ஆனாலும் எழுத்தாளர் வாசகனை நியாயமின்றி ஏமாற்றுவதிலிருந்து தடுக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். ஆனால் இந்த உறுதிமொழியும் பொதுப்படையாக உள்ளதே? ஆங்கிலேயே கத்தோலிக்க பாதிரியாரும் சில, ‘யார் செய்தது’ (whodunnit) நாவல்களை எழுதியவரும், துப்பறியும் மன்றத்தைத் துவக்கியவர்களில் ஒருவருமான  ரனால்ட் நாக்ஸ் (Ronald Knox) இன்னும் விரிவாக பத்து விதிகளை வகுத்திருக்கிறார்.

ரனால்ட் நாக்ஸ்

‘குற்றவாளி பாத்திரம் கதையில் சில இடங்களிலாவது முன்பே வந்திருக்க வேண்டும்’, ‘அமானுஷ்ய விளக்கங்கள் இருக்கக் கூடாது’, ‘ரகசிய அறை/பாதை இருக்கக் கூடாது’ (இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பின்னர் பார்ப்போம்), ‘இரட்டையர்கள் இருந்தால், அவர்களை வாசகன் முன் திடீரென்று நிறுத்தக் கூடாது’ போன்றவை அவற்றில் சில.

நாவலின் இறுதியில், குற்றவாளியின் முகத்திரை கிழிக்கப்படுவதற்கு முன்பே, வாசகனுக்கு, அவன் கண்டுபிடிக்கத் தேவையான எல்லாத் தகவல்களும் தரப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்த விதிகளின் ஒட்டுமொத்த சாரமாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றி எழுதப்பட்ட, எழுதப்படும் புனைவுகளை ‘நியாய ஆட்டம்’ (fair play) துப்பறியும் நாவல்கள் என்று சுட்டப்படுகின்றன.  எல்லா எழுத்தாளர்களும் இதைப் பின்பற்றினார்கள், பின்பற்றுகிறார்கள் என்று கூற முடியாது, ஆனால் 1920,30, 40-களில் அச்சு பிசகாமல் அமல்படுத்த முயன்ற எழுத்தாளர்கள் இருந்தார்கள். கடந்த நாற்பதைம்பது ஆண்டுகளில் அருகி விட்டது என்றே கூறலாம். ஜெ.ஜெ கானிங்க்டனின்  (J.J Connington)  நாவல்களில், இந்த அம்சத்தை மிகுதியாகக் காணலாம். ஈ&எம்.ஏ ராட்போர்ட்  (E & MA Radford), என்ற கணவன்/மனைவி இணையர் தங்களின் நாவல்களில் அதைப் பின்பற்றியதோடல்லாமல், வாசகனுக்கு எப்போது, அவனுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் தரப்பட்டு விட்டன என்பதையும் குறிப்பிட்டார்கள். அவர்களுடைய Who Killed Dick Whittington?’ நாவல்  முடிவதற்கு மூன்று அத்தியாயங்களுக்கு முன்பு

It was at this stage that Doctor Manson regarded his investigations into the two mysteries as completed.

He knew in his own mind the answer to the riddle of the fire frauds, and also the answer to the murder of Dick Whittington.

What remained to be done in producing the evidence necessary to convict was, to his mind, routine work. His case was concluded.

Perhaps the inveterate reader of detective fiction can also name the murderer and the fraudulent fire-raiser. All the clues are in the foregoing pages – என்று சொல்லி விடுகிறார்கள். அதுவரை படித்ததை மீண்டும் படிக்க வேண்டுமா, அல்லது நினைவில் இருப்பதைக் கொண்டு புதுப் புலனாய்வை ஆரம்பிக்கலாமா என்பது வாசகனின் கையில் உள்ளது. தாங்கள் எழுதும் முறை குறித்து She kills them off, and I find out how she done it என்று கணவனான எட்வின் கூறுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த, மார்ட்டின் எட்வார்ட்ஸின் (Martin Edwards) ‘Blackstone Fell நாவலில், ClueFinder என்ற தனிப் பகுதியை இறுதியில் தந்துள்ளார். நாவலின் எந்தெந்த பக்கங்களில், என்னென்ன வகையில் வாசகனுக்குத் தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாணியில் உள்ள சிக்கல், வாசகனுக்கு எத்தகைய தகவல்களைத் தர வேண்டும் என்பது தான். மிகச் சிறிய, எளிய தகவல்களால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை, அதே நேரம் முக்கியமான ஒன்றைக் கூறிவிட்டால், அதைக்கொண்டே அவன் குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவான். இரண்டையும் சமன்படுத்தும் விதம் மிகக் கடினம்.  மார்ட்டின் எட்வார்ட்ஸின் ‘ClueFinder’ –ஐ படிக்கும் போது, அவை தகவல்களாக இல்லாமல், எளிய சுட்டுதல்களாக மட்டுமே உள்ளன. நாவலைப் படித்த பின்பே அவற்றில் பலவற்றிற்கு அர்த்தம் கொள்ள முடியும். இந்த உள்-வகைமை அருக இது முக்கிய காரணம்.

‘ரகசிய அறை/பாதை இருக்கக் கூடாது’ என்று விதியை பார்ப்போம். பெரும்பாலான துப்பறியும் நாவல்களில் உள்ள பொது அம்சம், குற்றத்தைச் செய்திருக்கக் கூடும் என்று நாலைந்து பாத்திரங்கள் இருக்கும். தாங்கள் செய்யவில்லை என்பதற்கான சான்றுகளை அவர்கள் தருவார்கள், அதில் எது பொய் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பார். இது வழமையான ஒன்று. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலைப் பார்ப்போம். அறை வாசலில் அமர்ந்திருக்கும் ஒருவர், அதனுள் மற்றொருவர் நுழைவதைப் பார்க்கிறார். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்தும் உள்ளே சென்றவர் வரவில்லை, கதவைத் தட்டுகிறார், பதிலில்லை, திறக்க முயல்கிறார், உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. கதவை உடைத்துத் திறக்கிறார். உள்ளே சென்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எப்படி? அறை வாசலில் அமர்ந்திருந்தவர், தான் அங்கேயே அமர்ந்திருந்ததாகவும், வேறு யாரும் வரவில்லை என்றும் உறுதியாகக் கூறுகிறார். அவர் கூறுவது உண்மை, எனில் யார் கொலைகாரன்? ‘அமானுஷ்யம்’ கூடாது என்ற விதி வேறு உள்ளது. இங்கு தான் ரகசிய அறை வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் முகிழ்ந்த காதிக் (Gothic) எழுத்து வகைமையில், ரகசிய அறை முக்கிய பங்கு வகித்தது. அப்போதைய கதைக் களங்கள், கோட்டைகள் (Castle), பெரும் மாளிகைகளில் என இருந்ததால் அது பொருத்தமாகவும் இருந்தது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின், சராசரி வீடுகளிலும் ரகசிய அறை, சுரங்கப் பாதை என்று துப்பறியும் நாவல்களில் அதைப் பயன்படுத்த ஆரம்பித்த போது அவை, துப்பறிவதை மலினப்படுத்துவதாகவே இருந்தன. எனவே, ரகசிய அறை இருக்கக் கூடாது என்ற விதி. அதுவுமில்லையென்றால் குற்றம் எப்படி நிகழ்ந்தது?

இன்னொரு குற்றத்தைப் பார்ப்போம். இரவு முழுதும் பெய்த பனியால் சூழப்பட்ட வீட்டினுள் ஒருவர் கொலையுண்டு கிடக்கிறார். வீட்டை நோக்கிச் செல்லும் ஒருவருடைய காலடித்தடங்கள் மட்டுமே பனியில் தெரிகிறது. அந்தத் தடம் கொலை செய்யப்பட்டவருடையது. எனில் கொலைகாரன் எப்படி வீட்டினுள் நுழைந்தான், எப்படி வெளியேறினான்? இந்தக் குற்றம் எப்படி நடந்திருக்கும்?

அதிசயங்களை விளக்கியவர் (‘The Men Who Explained Miracles’) என்று வாசகர்களால் போற்றப்படும் ஜான் டிக்ஸன் கார் (John Dickson Carr)  இவற்றை மட்டுமல்ல, இன்னும் பல விசித்திர குற்றங்களைத் தெளிவுபடுத்துகிறார். (‘The Men Who Explained Miracles’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே அவருக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது)

எட்கர் ஆலன் போ-வின் The Murders in the Rue Morgue சிறுகதையை, விளக்கவியலா/பூட்டிய அறை மர்மங்களின் ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாகக் கொள்ளலாம், ஆனால் அதன் விடை, அதை அந்த வகைமைக்குள் வைக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. 1891-இல் தொடராக எழுதப்பட்டு 1892-ல் நூலாக வந்த இஸ்ரேல் ஸாங்விலின் (Israel Zangwill) ‘The Big Bow Mystery’, 1907-ஆம் ஆண்டு தொடராக வெளியாகி, 1908 நூல் வடிவம் பெற்ற, பிரெஞ்சு எழுத்தாளரான, கேஸ்டோன் லெஹோவின் (Gaston Leroux), ‘The Mystery of the Yellow Room இரண்டையும் இந்த வகைமையின் ஆரம்பகால முழு நீள முயற்சிகள் என்று கூறலாம். குறிப்பாக The Mystery of the Yellow Room மிகச் சுவாரஸ்யமான துப்பறியும் நூல்.

(கேஸ்டோன் லெஹோ)

இந்த வகைமை பிரபலமாகிக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான ஆக்கங்கள் ‘புதிரை உருவாக்குவதில் வெற்றி, அதை அவிழ்ப்பதில் தோல்வி’ என்ற அளவில் தான் இருந்தன. எழுத்தாளர்களுக்கே இந்த வகைமை மீது முழு ஆளுமை இல்லாததால், பெரும்பாலும், வாசகன் – எழுத்தாளன்/துப்பறிவாளன் இடையே  நியாய ஆட்டம் நடைபெறவில்லை.

இந்தச் சூழலில் தான்,  விளையாட்டிற்கான விதிகளை உருவாக்கி, சாத்தியமற்ற குற்றங்களின்/பூட்டிய அறை நூல்களின் இன்றைய வடிவை உருவாக்குகிறார் ஜான் டிக்ஸன் கார் (John Dickson Carr). அமெரிக்காவில் பிறந்து, இடையில் சிலகாலம் இங்கிலாந்தில் வசித்து, பின் மீண்டும் இறுதிக்காலம் வரை அமெரிக்காவில் வாழ்ந்த, கார், இன்று இங்கிலாந்து குற்றப்புனைவு புனைவு எழுத்தாளராகவே பார்க்கப்படுகிறார். நாற்பதாண்டுகள் எழுத்துப் பயணத்தில்,  கிட்டத்தட்ட எழுபது நாவல்களும், சில சிறுகதைத் தொகுப்புகளும், எழுதியவரின் புனைவு நிலவியல் பெரும்பாலும் இங்கிலாந்தாக இருந்தது முக்கிய காரணம்.

(ஜான் டிக்ஸன் கார்)

அப்படி இந்த சாத்தியமற்ற/பூட்டப்பட்ட அறை உள்-வகைமையில் அவர் என்ன சாதனைகள் செய்தார்? எழுத ஆரம்பித்து பிரசுரமான ஐந்தாவது ஆண்டிலேயே, ஏழு சாத்தியங்கள் மட்டுமே இந்த வகைமையில் இருக்கக் கூடும் என்ற பட்டியலை உருவாக்குகிறார். அதுவும் அ-புனைவு கட்டுரையில் அல்ல, The Hollow Man (The Three Coffins என்று அமெரிக்காவில் தலைப்பிடப்பட்டது) என்ற அவருடைய நாவலில். துப்பறிவாளர் இதை மற்ற பாத்திரங்களுக்கு விளக்குகிறார்.

அறை பூட்டப்படவே இல்லை, முதலில் அதைச் சரி பார்த்தவர் பொய் சொல்லியிருக்கிறார் (ஏனென்றால் அவர் தான் குற்றவாளி), அறையில் இருப்பவர் இறக்கவில்லை, அவரை முதலில் பரிசோதித்தவர் பொய் சொல்லிவிட்டு, பின் மற்றவர்களின் கவனம் அறையில் வேறுஇடங்களில் இருந்தபோது தான் கொன்றார், கொலையாளி அறைக்குள்ளேயே தான் ஒளிந்திருந்தான், இறந்தவரின் மேல் மட்டுமே அனைவரின் கவனம் இருந்ததால், அந்த இடத்திலிருந்து வெளியேறினான், போன்றவை ஏழு சாத்தியங்களில் சில.

இன்று இதை மெட்டா-பிக்க்ஷன் என்று சிலர் கூறக் கூடும், கார் அப்படி எண்ணியிருக்க மாட்டார் என்று யூகிக்கலாம். ‘தொழில் ரகசியத்தை’ வெளியிட்டு விட்டாலும், அதன் பின்பும் இத்தகைய பல உயர்தர ஆக்கங்களை உருவாக்க முடிந்தது காரின் ஆற்றலுக்கு ஒரு சான்று.

துப்பறியும் மன்றத்தின் (Detection Club), அதிகாரப்பூர்வ விதிகள் போல் இல்லையென்றாலும், கார் குறிப்பிட்ட ஏழு சாத்தியங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும், இழைகள் இன்றும், இந்த உள்-வகைமையின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. 

‘The Problem of the Green Capsule’ (’The Black Spectacles’ என்ற தலைப்பும் உண்டு) என்ற அவருடைய நாவலில், நேரடியாக ஒரு நிகழ்வைப் பார்க்கும் சாட்சிகளின் நம்பகத்தன்மை மிகக் குறைவே என்று நிரூபிக்க, மார்க்ஸ் என்பவர் உளவியல் பரிசோதனையொன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அறையொன்றில் அவர் அமர்ந்திருக்க, அவர் முன்னால் மூன்று பேர். நாடகம் போன்ற நிகழ்வை அவர் நிகழ்த்துகிறார், திறந்திருக்கும் பெரிய ஜன்னல் வழியாக உள்ளே வரும், முகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் நபர், அவருடைய வாயில் எதையோ திணிக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக நடக்கும் நிகழ்வு.  அது அன்றைய படப்பிடிப்புக் கருவி மூலமாகப் பதிவு செய்யப்படுகிறது.

நிகழ்வு முடிந்த சில நிமிடங்களில் மார்க்ஸ் இறந்து விடுகிறார். அவருக்குப் புகட்டப்பட்ட குப்பியில் விஷம். மூன்று பேருக்கு எதிரே நடக்கும் கொலை, அதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன விளக்க முடியாத ஒன்றாக இருக்க முடியும் என்று தோன்றலாம்? இந்த, மிக வெளிப்படையாகத் தெரிவது போலுள்ள, ஆனால் விளக்க முடியாத குற்றத்திலிருந்து, எப்படி இது சாத்தியம் என்ற புதிரை உருவாக்கி, அதற்கு மிக எளிமையான, அதே நேரம் மிகப் பொருத்தமான விடையைக் கார் அளிக்கிறார்.

இங்கு ஒக்கம்ஸ் ரேஸர் (Occam’s razor) நியமத்தை நினைவு கொள்வோம். சாத்தியமற்ற குற்றப்புதிர்களின் விடை, எந்தளவுக்கு எளிமையாக உள்ளனவோ அந்தளவுக்கு அவை பொருத்தமாகவும், வாசகனுக்குப் பரவசத்தைத் தருவதாகவும் இருக்கும். இந்த நாவலின் ஒரு இடத்தில், துப்பறிவாளர் ஒரு கருத்தை முன்வைக்கிறார், அது குற்றத்தை அணுகும் முறையில் ஓரளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு கார், துப்பறிவாளர் சொல்வது உண்மை, என்ற அடிக்குறிப்பைத் தருகிறார், அதாவது, இது வாசகனைத் திசைதிருப்பும் முயற்சியாக இருக்குமோ என்று கொள்ளத்தக்க கருத்தை, அவ்வாறு அல்ல என்று உறுதிப்படுத்தி, நியாய ஆட்டத்தை உறுதி செய்கிறார். ‘யார் செய்தது’, ‘நியாய ஆட்டம்’, ‘சாத்தியமற்ற குற்றம்’ என்ற மூன்று வகைமையின் கூறுகளையும் கொண்டுள்ள நாவல் இது.

அவருடைய She Died A Lady’ நாவல், ஒரு ஆணும், பெண்ணும் கடலையொட்டியுள்ள குன்றின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதாக ஆரம்பிக்கிறது. அவர்கள் உடல்கள் கரையொதுங்கும்போது, அவர்களுடைய உடம்பில் தோட்டாக்கள் உள்ளன. சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றால், தடயவியல் பரிசோதனையில் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. இங்கும் காலடிச் சுவடுகளின் சிக்கல். குன்றின் உச்சிக்குச் செல்லும், இருவருடைய  சுவடுகள் மட்டுமே கிடைக்கின்றன. யார் அவர்களைச் சுட்டது, எப்படி மேலே ஏறி, பின் தப்பிச் சென்றான். ஒருவேளை இது தற்கொலையாகவே இருக்குமோ என்று சந்தேகிக்க, இன்னொரு சாத்தியக் கூறு வெளிவருகிறது. இந்த முடிச்சையும்  லாவகமாக விடுவிக்கிறார் கார். 

The Red Widow Murders’ நாவலில் கொலை செய்யும் அறையொன்று உள்ளது. ஆம், இது பூட்டிய அறை தான், ஆனால் ஒருமுறை மட்டும் அதில் கொலை நடப்பதில்லை. எழுபதாண்டு கால இடைவெளியில், அந்த அறையில் தங்கும் நான்கு பேர், இரண்டு மணி நேரத்திற்குள் இறந்து விடுகிறார்கள். அறையில் எந்தக் கொலைக் கருவியோ, ரகசியப்பொறியோ இல்லை. பின் எவ்வாறு இது நிகழ்கிறது? இதென்ன ரத்த வெறி பிடித்த அறையா? உண்மையை கார் மட்டுமே அறிவார். அவர் அதை வெளிப்படுத்துவதற்கு முன், வாசகன் கண்டுபிடித்தால், தன்னைத்தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

காரின் நூல்களைப்பற்றித் தனி கட்டுரையாகத்தான் எழுதவேண்டும், மாதிரிக்குச் சில நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கார் மறைந்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகப் போகும் நிலையிலும் இந்த வகைமையின் முதன்மையான எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார். சாத்தியமற்ற குற்றப் புனைவுகளில் சிறந்த பத்து நாவல் என்ற ஒரு பட்டியலிட்டால், குறைந்தபட்சம் அவருடைய ஐந்தாறு நூல்கள் அதில் இருக்கும். பல பட்டியல்களில் முதல் இடத்திலும் கூட. (88 வருடங்களுக்கு முன், ஆட்ட விதிகளை வகுத்த அவருடைய The Hollow Man நாவல், சக எழுத்தாளர்கள்/ விமர்சகர்கள்/ வாசகர்களின் பட்டியலில் பல முறை முதலிடத்தை இன்றும் பெறுகிறது.)

எழுபதுக்கு மேலுள்ள அவருடைய நாவல்களில், The Hollow Man /The Three Coffins, Till death do us part, He Who Whispers, The Judas Window, The Case of the Constant Suicides, The Burning Court ஆகியவை  என்னளவில் மிகச் சிறந்தவை. இந்த வகைமையின் சிறந்த பத்து பட்டியலில், இவை அனைத்தையும் சேர்த்தால் கூட பொருத்தமாக இருக்கும். இதற்கு அடுத்து உள்ள 25-30 நாவல்கள் தரத்தில் குறைந்தவை எனக் கூறமுடியாது, மிகச் சிறந்தவற்றில் சிறந்தவை எனப் பிரிக்கும் போது விடுபடுபவை மட்டுமே அவை. அடுத்து பரபரப்பான, நல்ல வாசிப்பின்பத்தைத் தரும் 15-20 நாவல்கள் இருக்கக் கூடும். மிச்சமிருப்பவை இறுதியாக வாசிக்கத்தக்கன. எல்லா கலைஞர்களையும் போல், ஆரம்பம், எழுச்சி, உச்ச கட்டம், பின் மெல்லிய சரிவு என காரின் எழுத்துப் பயணத்தையும் வகைப்படுத்தலாம்.

குற்றம் எப்படி நடந்தது என்பதில் எளிமையின் பங்கு, ஒக்கம்ஸ் ரேஸர் (Occam’s razor) நியமம் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். அதை மார்ஸல் எப்.லான்டோம்-இன் (Marcel Lanteaume), ‘The Thirteenth Bullet’ நாவலைக்கொண்டு விரிவாகப் பார்க்கலாம். பிரான்ஸில், ஒற்றைத் தோட்டாவில், பல பேரைக் கொன்று வருகிறான் ஒருவன். அவனுடைய அடுத்த குறி என்று நம்பப்படுபவர் ஜன்னல் இல்லாத, உறுதியான சுவர்கள் கொண்ட பூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்படுகிறார். வெளியே காவலாளிகள் வேறு. அப்படியும் அவர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்ற தோட்டா, எங்கிருந்து வந்தது, எப்படி உள்நுழைந்தது? இதற்கான விடை தர்க்க ரீதியாக விளக்கப்படுகிறது, அது பொருத்தமாகவும் உள்ளது. ஆனால் பல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, விஷயங்கள், ஒத்திசைவாக இணைந்திருந்தால் மட்டுமே நடந்திருக்கக் கூடும் என்றும் இதைப் படிக்கும்போது வாசகனுக்குத் தோன்றுகிறது. இங்கு, கடினமான கேள்விக்கு  எளிமையான பதிலின் பரவசத்தை விட, கேள்விக்கு இணையான சிக்கலான பதில் உருவாக்கும் அவநம்பிக்கையும் எட்டிப் பார்க்கிறது.

க்ளேட்டன் ராஸன் (Clayton Rawson) நாவல்களும் சாத்தியமற்ற குற்றங்களே. இவற்றின் முக்கிய பாத்திரம் ‘தி க்ரேட் மெர்லினி’ (The Great Merlini’) என்ற ஒரு தொழில்முறை மாயாஜாலக்காரர் (professional magician). சாத்தியமில்லாததாகத் தோன்றுவதை மாயாஜால வித்தைக்காரரைத் தவிர வேறு யார் கச்சிதமாக விளக்க முடியும்., எனவே முக்கிய பாத்திரத்தின் உருவாக்கத்தில் ராஸனின் தேர்வு மிகச் சரியான ஒன்றே. ஆனால் வாசகனாக என்னால் இதைக் கண்டுபிடித்திருக்க முடியும் என்ற நம்பிக்கை இந்தப் புனைவுகளில் நமக்குக் கிடைப்பதில்லை. மாயாஜால வித்தைக்காரர் (மெர்லினி) மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்த்திருக்க முடியும் என்று தோன்றுவதால், நியாய ஆட்டம் இங்கு நடப்பதில்லை.

ஆம், இந்த வகை புனைவுகள் அன்றாட வாழ்வில் சாத்தியமில்லாமல் போகலாம், தர்க்கத்தைச் சற்றுத்தள்ளி வைக்கவேண்டும் தான், ஆனால் புனைவிலேனும் அது நடக்க வாய்ப்புள்ளது என்பதும், என்னாலும் இதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதும்  அவற்றின் ஈர்ப்பு அல்லவா. அந்தச் சாத்தியத்தைச் சந்தேகம் கொள்ளச் செய்யும் விடைகள், வெறும் தொழில்நுட்ப ரீதியிலான ஜாலங்களாக மட்டுமே எஞ்சுகின்றன. ‘அட, இது இவ்வளவு தானா’ என்ற வியப்பு அவற்றில் கிடைப்பதில்லை. இதை இந்த பாணியிலான நாவல்களின் குறைகளாகக் கூறவில்லை, அதன் எல்லைகளாக மட்டுமே சுட்டுகிறேன்.

விளக்கவியலாத குற்றம் என்ற உள்-வகைமையின் மிக முக்கியமான நாவல் ஹகே டால்பட்டின் (Hake Talbot) ‘Rim of the pit’. ஆவியைத் தொடர்பு கொள்ளும் முயற்சி, கொலை செய்தவன் பறந்து செல்வது, பனித்தடத்தில் திடீரென்று ஆரம்பித்து, மறைந்து விடும் காலடிச் சுவடுகள் என அமானுஷ்யமாகத் தோன்றும் பல விஷயங்களைக் கச்சிதமாக விளக்கும், கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல் இது,

ஜோயல் டவ்ன்ஸ் ராஜர்ஸின் (Joel Townsley Rogers ) ‘The Red Right Hand’ நாவலும் மிகச் சுவாரஸ்யமான ஒன்று. திருமணம் செய்துகொள்வதற்காகக் காரில் சென்றுகொண்டிருக்கும் எர்மி, எலினோர் வழியில் ஒருவனை ஏற்றிக் கொள்கிறார்கள். அவன் எர்மியைத் தாக்கிக் கொன்றுவிட்டு, பிணத்துடன் வண்டியை ஓட்டிச் செல்கிறான். கை வெட்டப்பட்ட நிலையில் பிணம் கிடைக்கிறது. இறந்தது எர்மி தானா? மர்மப் புனைவின் அம்சங்களுடன் திகில் (horror) புனைவுகளின் உணர்வையும் தரும் இந்த நாவல் அனைத்தையும் விளக்குகிறது.

சாத்தியமில்லாத குற்றங்களைப் பற்றிக் கிட்டத்தட்ட ஆயிரம் சிறுகதைகளை மட்டுமே எழுதிய (ஆனால் அறிவியல் புனைவு/குற்றப்புனைவுகளை இணைக்கும் நாவல்களை எழுதியுள்ளார்) எட்வர்ட் டி. ஹோச் (Edward D. Hoch), மற்றொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். நாவல் வகைமையிலேயே அதற்கு நியாயம் செய்வது கடினம் எனும் போது, சிறுகதைகளில் அவர் அதை நிகழ்த்தியது பெரிது. சிறுகதைகள் என்றாலும், நான்கைந்து முக்கியப் பாத்திரங்களை உருவாக்கி, ஒவ்வொருவருக்கும் பல சிறுகதைகளைக் கொடுப்பது, தொடர்புடைய கதைகளைக்கொண்ட நூல்போல வாசிக்க உதவுகின்றன.

Frederic Dannay மற்றும் Manfred Bennington Lee இருவரும் சேர்ந்து உருவாக்கிய, எல்லரி க்வீன் (Ellery Queen) என்ற முதன்மை பாத்திரத்தின் பெயரையே தங்களுடைய புனைபெயராகவும் வைத்துக் கொண்டார்கள். நியாய விளையாட்டு, யார் செய்தது (whodunnit), தொடர் கொலைகாரன் (serial killer) பற்றிய ஆரம்பகால புனைவு முயற்சி, எனத் துப்பறியும் எழுத்தில் பல வகைமைகளில் உயர் தர ஆக்கங்கள் படைத்துள்ளார்கள்

இவர்களுடைய யார் செய்தது பாணியிலான, The Chinese Orange Mystery’, காரின் (Carr) மிகச் சிறந்த, சாத்தியமற்ற குற்றப் புதிர்களுடன் ஒப்பிடத்தக்கது. துப்பறியும் நாவல்களை வாசிக்க விரும்புபவர்கள் இவர்களைத் தவறவிடக் கூடாது.

(‘Frederic Dannay’ மற்றும் ‘Manfred Bennington Lee‘)

எட்மண்ட் க்றிஸ்பினின் (Edmund Crispin), ‘The Moving Toyshop’ நாவலில், ஒரு விளையாட்டு பொம்மைக்கடையே காணாமல் போய்விடுகிறது. இரவுநேரத்தில், அந்தக் கடையில் கொலை செய்யப்பட்ட உடலைக் காணும் ஒருவர் அங்கு சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பி, காவல்துறை அதிகாரிகளை அழைத்து வந்தால், அங்கு வேறு கடை உள்ளது!!  ஒன்பது குற்றப்புனைவுகளை எழுதிய க்றிஸ்பின் பி.ஜி. வோட்ஹவுஸின் (P.G Wodehouse) ரசிகர், எனவே அவருடைய படைப்புக்களிலும் நகைச்சுவை தூக்கலாகவே இருக்கும். எனவே இதை விளக்க முடியாத குற்றப்புனைவு என்று மட்டுமே கொள்ளாமல், அந்த வகைமையை முயல்வோம் என்று எழுதப்பட்டதாகவும் கருத வேண்டும். ஆனால், சுவாரஸ்யத்திலும், புதிருக்கான விடையிலும், உயர்தரமான படைப்புக்கள் இவருடையவை.

எட்மண்ட் க்றிஸ்பின்

எளிதில் பிடிபடாததாக இருக்க வேண்டும், அதே நேரம் வாசகன் அணுக முடியாததாக இருக்கக் கூடாது, வெறும் ஒற்றைப் புதிராக மட்டுமே இல்லாமல், போலி தடயங்கள்/துப்புக்கள் (red herrings), அதிர்ச்சி தரும், அதே நேரம் நியாயப் படுத்தப்படக் கூடிய திருப்பங்கள் கொண்ட வாசிப்பின்பமும் கிடைக்க வேண்டும், எனப் பல ‘வேண்டும்’ தேவைப்படுவதால், காரின் சமகாலத்தவரும் சரி, அதற்குப் பின் வந்தவர்களும் சரி, அவரளவுக்கு இந்த வகைமையை முயலவில்லை என்று கருதலாம். உதாரணமாக நாம் மேலே பார்த்த ராஜர்ஸ், ஹகே டால்பட் போன்றோர் அவர்களுடைய குற்றப் புனைவுலகின் உருவாக்கத்தில் சிறிய பகுதியாக மட்டுமே இதை எடுத்துக் கொண்டனர். பிற வகை மர்ம நாவல்களையும் அவர்கள் எழுதினர், இந்த வகைமையில், எண்ணிக்கை அளவில் அவர்களுடைய பங்களிப்பு மிகக் குறைவே. 

பல்ப் (pulp) வகை நாவல்களில் இந்த உள்-வகைமை நிறைய முயலப்பட்டிருக்கிறது. பல்ப் இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில், அறிவியல் புனைவு, அதிகற்பனை (fantasy), குற்றப்புனைவுகள் என எழுதிக் குவித்த ஜான் ரஸ்ஸல் பர்ன் (John Russell Fearn), இத்தகைய நாவல்களை முயன்றிருக்கிறார். பல்ப் படைப்புகளின் தன்மைக்கேற்ப, ஆரம்பத்தில் மிகப் பரபரப்பூட்டும் மர்மம், இறுதியில் எப்படியோ முடிந்தால் போதும் என்ற ரீதியில் விளக்கப்படும். அரை, ஒரு மணி நேரப் பரபரப்பு போதும் என்ற அளவுகோல் இருந்தால் வாசிக்கப்படக்கூடிய படைப்புகள் இவை.

oOo

ஜப்பானில் ‘யார் செய்தது’, ;நியாய விளையாட்டு’, ‘சாத்தியமற்ற குற்றம்’ கொண்ட புனைவுகளுக்கு நீண்ட பாரம்பரியம் இருந்துள்ளது. நாற்பதுகளில், இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின் எழுதப்பட்ட Seishi Yokomizo’-வின் The Honjin Murders, The Inugami Curse இரண்டும் உயர்தர ஆக்கங்கள். அவருடைய The Village of Eight Graves’ விசித்திரமான களனைக் கொண்டது.

எண்பதுகளில் shin-honkaku’ என்ற ‘நவீன-பாரம்பரிய’ புனைவுகள் தோன்றின. Shimada Soji’ அதில் முதன்மையானவர். அவருடைய இரண்டு நாவல்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன, அவையிரண்டும் (‘The Tokyo Zodiac Murders’, ’Murder in the Crooked House’) முக்கியமானவை. அது போல Yukito Ayatsuji – ன் The Decagon House Murders’ குறிப்பிடத்தக்க ஆக்கம்.

இந்த வகைமையின், பல முக்கிய எழுத்தாளர்கள் இப்போது தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறார்கள், அதுவும் அவர்களுடைய ஒரு சில ஆக்கங்கள் மட்டுமே. எனவே நீண்ட பாரம்பரியம் இருந்தும் கூட, அவற்றைப் பற்றி விரிவாக, குறுக்குவெட்டு பார்வையுடன்  எழுத இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. 

oOo

காருக்கு பின் பலர் வந்திருந்தாலும், அவருடைய இடம் அப்படியேதான் இருந்தது, இருக்கிறது. அடுத்த தலைமுறைகளில், அவரை ஓரளவேனும் நெருங்குபவர் என்று, எண்பதுகளின் இறுதியிலிருந்து, சாத்தியமற்ற குற்றப் புனைவுகளை மட்டுமே, எழுதிக் கொண்டிருக்கும், பால் ஹால்டரை (Paul Halter) கூறலாம். ப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த இவருடைய ஆக்கங்களும் இங்கிலாந்தில் களம் கொண்டுள்ளன.

(பால் ஹால்டர்)

திடீரென்று தோன்றி மறையும் தெரு (The Phantom Passage), ரத்தக் காட்டேரிகள் (The Mask of the Vampire), கொல்லப்பட்டவரின் உடல், பல பேரின் முன்னால் காணாமல் போவது, பின் வேறொரு இடத்தில் தோன்றுவது (The Seventh Hypothesis), பூட்டிய அறையில் கொலை, அதுவும் ஒவ்வொருமுறை அது நிகழும்போது, அறையில் தரையிலுள்ள கம்பளத்தின் ஒரு சிறு பகுதியில் தோன்றும் ஈரம் (The Madman’s Room), இறுதி வரை கண்டுபிடிக்கப் படாத நிஜத் தொடர் கொலைக் குற்றவாளியான ஜாக் தி ரிப்பரை (Jack the ripper) அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்ட The Crimson Fog, ரிப்பருக்குச் சற்றுப் பிந்தைய கால கட்டத்தைக் களமாகக்கொண்ட ‘The Lord of Misrule’, போன்ற அவருடைய படைப்புகளை வாசித்தால் காரின் ஆன்மாவை, முற்றிலும் உள்வாங்கியவர் ஹால்டர் என்று உறுதியாகக் கூறலாம். காரின் தரமும் கொண்டவை இவை.

The Demon of Dartmoor, Death Invites You, The Fourth Door, Penelope’s Web, The Gold Watch, he Man Who Loved Clouds ஆகியவை இவருடைய பிற குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.

oOo

இன்றைய தலைமுறையில் இந்த வகைமைக்கு மீண்டும் முக்கியத்துவமும், புது வாசகப் பரப்பும் கிடைத்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், மின் புத்தங்களின் வருகை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில், பல பத்தாண்டுகளாக, புதிய பதிப்புக் காணாத பல எழுத்தாளர்கள், நூல்கள், மின்னூலாக்கம் பெற ஆரம்பித்துள்ள. பல மறக்கப்பட்ட எழுத்தாளர்கள், மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளார்கள். ஜோசப் ஜெபர்ஸன் பார்ஜன் (J. Jefferson Farjeon) அவற்றில் முக்கியமானவர்.

(ஜோசப் ஜெபர்ஸன் பார்ஜன்)

2014-ஆம் ஆண்டு அவருடைய ‘Mystery in White’ என்ற கிறிஸ்துமஸ் காலத்தில் நடைபெறும் மர்மப் புனைவு, பல தசாப்தங்களுக்குப் பின் மீள் பிரசுரம் செய்யப்பட்டு, பெரும் வாசக, விமர்சன வரவேற்பைப் பெற்றது.  அடுத்த வருடம் வெளிவந்த ‘Thirteen Guests’-க்கும் இதே அதே நேர்மறை எதிர்வினைகள் கிடைத்தன. சிறிதும் புரியாத புதிர்கள், இதை எப்படி விளக்கப் போகிறார் என்ற குழப்பம், கச்சிதமாகச் சாத்தியப்படுத்தி விட்டாரே என்ற வியப்பும் கொண்ட நூல்கள் இவையிரண்டும். பார்ஜனின் பல நூல்கள் அதன்பின் வெளிவந்துள்ளன, ஆனால் இந்த உள்-வகைமையைக் கொண்டவை மிகச் சிலவே. ‘அடுத்து என்ன’ என்று வாசகனை யோசிக்கவைக்கும் (suspense/thriller) பாணியிலான நாவல்களை எழுதியவர், குற்றப்புனைவுகளின் பல எழுத்து முறைகளை முயன்றவர் என்றே அவரைக் கொள்ளவேண்டும். ஆனால் நான் குறிப்பிட்டுள்ள இரு நூல்களும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவை.

வாசகப் பரப்பு அதிகரிக்க, பிரசுரங்களின் போலி விளம்பரங்களும் அதிகரித்துள்ளன. தற்போது வெளியாகும், பத்து குற்றப்புனைவுகளில், ஐந்து அல்லது ஆறாவது, ‘பூட்டிய அறை மர்மம்’, ‘சாத்தியமற்ற குற்றம்’ என்றே விளம்பரப்படுத்தப் படுகின்றன. உதாரணமாக, பனிப் பொழிவு காரணமாக, ஒரு வீட்டில் ஏழெட்டு பேர் தங்க நேர்கிறது. ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர், இந்த வகைமை கூட ‘சாத்தியமற்ற குற்றம்’ என்றே விளிக்கப்படுகிறது. உண்மையில், அந்த நாவலில் ஒருவர் கூட, பூட்டிய அறையிலோ, முற்றிலும் விளக்க முடியாத முறையிலோ கொல்லப்பட மாட்டார், ஆனால் இந்த சொற்றொடர்களின் மதிப்பை பிரசுரத்தார் உணர்ந்திருப்பதால், அதன் உபயோகம் தொடர்கிறது. பல குற்றப்புனைவு வாசகர்களும், விமர்சகர்களும், இந்த வகைமையின், வடிவம், விதிகள் பற்றித் தெரியாமல் அதையே கூறிக் கொண்டிருக்கின்றனர். எனவே வாசகராக இத்தகைய நூலைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய காலத்தில் ஜேம்ஸ் ஸ்காட் ப்ரின்சைட்(James Scott Byrnside), ஜிம் நொய் (Jim Noy), டாம் மீட்(Tom Mead) போன்றோர் சாத்தியமற்ற குற்றங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இருநூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க, யாரையும் சந்தேகிக்க முடியாதபடி நடைபெறும் கொலை (The Opening Night Murders), ரத்தக் காட்டேரி, பனியில் கால்தடம், பூட்டிய அறைகள், என இந்த உள்-வகைமையின் அனைத்துக் கூறுகளையும் ஒரு நாவலிலேயே  (The Strange Case of the Barrington Hills Vampire ) கொண்டு வரும் முயற்சி என ஜேம்ஸ் ஒரு புறம் இயங்குகிறார் என்றால், ஜிம், 2022-இல் வெளியான அவருடைய முதல் நாவலான The Red Death Murders’-இல் பல நூறு வருடங்களுக்கு முன்  வாசகனை அழைத்துச் சென்று, விசித்திரப் புதிர்களை விவரிக்கிறார்.

இந்தப் பாணியில் சில சிறுகதைகளை எழுதியிருந்தாலும், 2022-இல் வெளியான தன்னுடைய முதல் நாவலான ‘Death and the Conjuror’-இல் பூட்டிய அறையில் கொலையை எடுத்துக் கொள்கிறார் டாம். பூட்டிய அறையின் வெளியே நின்று வீட்டு வேலையாள் கதவைத் தட்ட, உள்ளிருப்பவரின் குரல் கேட்கிறது, அவரைப் பார்க்க விருந்தாளி ஒருவர் வந்திருக்கிறார். அவர் சென்ற பின், மீண்டும் வேலையாள் கதவைத் தட்ட, உள்ளே இருப்பவர் பேசுகிறார். அடுத்த சில நிமிடங்களில், இன்னொரு விருந்தினர் வருகிறார். இப்போது, அறைக்குள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. உள்ளிருப்பவர் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறார். எப்படி? தெரிந்த பின், மிக எளிமையாகத் தோன்றும் விடையை டாம் நமக்களிக்கிறார்.

குற்றப்புனைவுலகில் புதிய எழுத்தாளர்கள் வருவார்கள், புதிய வகைமைகள் தோன்றும், குற்றப் புனைவுகள் மலிவான ஒன்றாகப் பார்க்கப்படுவதும் தொடரும், ஆனால் அதற்கான வாசகப் பரப்பும், சாத்தியமற்ற குற்றம்/யார் செய்தது ஆகிய உள்-வகைமைகளும்  இருந்து கொண்டேதான் இருக்கும், அந்த ஆட்டத்தின் புதிர்களை  உருவாக்குபவர்களும், ஆட்டத்தில் பங்கேற்பவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால், உலகின் மாபெரும் விளையாட்டு இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.