கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை.
கீழே இருந்த இவன் அறையில் டேபிள் மீது பழம்பெரும் விளக்கு கண்ணாடிப்பரப்பில் அதிக வெளிச்சத்தை ஊட்டியது. வெளிச்சத்தில் தெரிந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் பழைய புகைப்படம். அவருடன் அன்னாவும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் அடுத்த பக்கத்தில் இருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கி வசித்த வீடு. வெண்ணிற இரவுகளில் வரும் பீட்டர்ஸ்பர்க் வீதி. அதன் சுவர்களில் இருந்த கண்ணாடி ஜன்னலில் பனி படிந்திருப்பது தெரிந்தது. கடைசி நாட்களில் எடுக்கப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கியின் வயோதிக உருவம், அவர் கையெழுத்து மற்றும் கிறுக்கல் காகிதங்கள், கோட்டு உருவங்கள், நாவலுக்கான அடிக்குறிப்புகள். இவற்றுக்குப் பின்னால் தாஸ்தாயெவ்ஸ்கியின் ஏழு சிறுகதைகளும் அச்சிடப்பட்டிருந்தன. அதன் ஊதாநிற அட்டையில் முன்னேற்றப் பதிப்பகத்தாரின் விமர்சனம் அடங்கிய குறிப்பும் இருந்தது. கண்டனத்துடன் வெளியீட்டாளரின் சிறு குறிப்பும் காணப்பட்டது.
அந்தப் புஸ்தகத்தில் அவனுக்குப் பிடித்த பக்கங்களைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தான். கதைகளை முழுமையாக வாசிப்பதிலிருந்து பிடித்த பக்கங்களைத் திருப்புவது காரணமாக ஒரே சமயத்தில் பல புஸ்தகங்களுக்குத் தாவமுடிந்தது அவனால். அந்தப் புஸ்தகத்தில் ‘பலவீனமான இதயத்தை’ மென்மையாகத் தொடுவதற்கு முயலும்போது அதில் வரும் தொப்பிக்கடைப் பணியாளான மேடம் லெரூவிடம் வாஸ்யா நடந்துகொண்ட விதம்தான் அந்தப் பக்கங்களுக்குள் முகத்தை வைத்து கண்களில் ஒற்றிக்கொள்ளச் செய்தது.
“மேடம் லெரூ… மேடம் லெரூ…” கடைக்காரப் பணியாளை அழைத்தான் வாஸ்யா.
“என்ன வேண்டும் சொல்லுங்கள்” என்றாள் லெரூ.
“என்னருமை மேடம் லெரூ!”
அர்க்காதி இவானவிச்சைப் (வாஸ்யா) பார்த்து இரக்கத்தோடு புன்முறுவல் பூத்தாள் மேடம் லெரூ.
“எனக்கு உங்களை இப்பொழுது எவ்வளவு பிடித்திருக்கிறது தெரியுமா… உங்களை முத்தமிட அனுமதியுங்கள்…”
வாஸ்யா கடைக்காரப் பெண்ணை முத்தமிட்டான்.
இப்படிப்பட்ட, தவறினால் தன்னிலை இழக்காமலிருக்க சகலவித மேன்மை குணங்களையும் ஒன்றுதிரட்ட வேண்டியிருந்தது. ஆனாலும் வாஸ்யாவின் குதூகலத்தைச் சந்திக்க மேடம் லெரூ கூடப்பிறந்த உண்மையான விநயமும் ஒயிலும் தேவையென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அவள் அவனை மன்னித்தாள். அவள்தான் அச்சூழ்நிலையிலிருந்து எவ்வளவு புத்திசாலித்தனமாக, எவ்வளவு மேன்மையோடு மீண்டும் வந்தாள்! வாஸ்யா மீது கோபப்பட்டிருக்க முடியுமா என்ன?
“பொருத்தமாயிருக்கும் என்று சொல்லுங்கள்.”
“அது சிறந்தது நீங்கள் தேர்ந்தெடுத்தது…”
தன் பாசம் முழுவதையும் அச்சிறு தொப்பி மீது கொட்டினான் வாஸ்யா.
என்னருமை தொப்பியே, குறும்புக்காரத் தொப்பியே, வேண்டுமென்றா ஒளிந்துகொண்டாய்? அவன் அதை, அதாவது தொப்பியைச் சுற்றியிருந்த காற்றை முத்தமிட்டான். ஏனெனில் தன்னுடைய அருமைத் தொப்பியைக் கைகளால் தொட அவன் பயந்தான்.
… அந்த வரியுடன் படிப்பதை நிறுத்திவிட்டு அதற்கு மேல் முடியாமல் புஸ்தகத்தின் பக்கத்திலிருந்த விளக்கையும் பலவீனமான ஒளியுடன் அரைமயக்கத்தில் இருக்கவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். மொட்டைமாடியில் கைப்பிடிச்சுவரில் அமர்ந்து வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். மையிருட்டு சூழ்வதை – சுவரில் உரசிய தென்னங்கீற்று வாஸ்யா வாஸ்யா என்று புலம்பியது. அவனுக்கு தன் பாலிய கால உருவங்கள் தோன்ற ஆரம்பித்தன. அவனது நண்பனான சித்திரவேலு பக்கத்து ஊர்களுக்கு விளக்குச்சரம் கொண்டு போனான். அவன் தோன்றி மறைந்த தெருக்களோடு காட்டுப்பாதைகளில் அவர்கள் இருவரும் செல்லம் பேசுவது தோன்றியது. அவனது வெங்கட்டம்மாள் எங்கு மறைந்தாள். பொற்கொல்லனின் மகளான வெங்கட்டம்மாளுடன் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கண்மலர்… கண்மலர்… நேர்த்திக்கடனுக்காக அம்மன் கண்ணில் சாத்தப்படும் வெள்ளிக் கண்மலர்கள் விற்றுத்திரிந்த வெங்கட்டம்மாள். தொலைவான நகரமொன்றில் புகைமறைக்கும் சந்தடியில் மறைந்துபோனாள். அவனது பாலியகால நண்பனும் வெங்கட்டம்மாளும் எங்கு போனார்கள். அவன் பார்த்த ஓட்டுவில்லையாக இருந்த பழைய உருவத்தில் வெங்கட்டம்மாள் வீடு. அதன் ஓட்டுவில்லைகளும் உதிர்ந்துவிட்டன… தெருவெல்லாம் சிதறிச் சிதறித்தான் ஓட்டுவில்லைகளும் மறைந்தன.
பூக்கார வீட்டு சித்திரவேலு ஒவ்வொரு கோயிலுக்கும் விளக்கேற்றி விளக்குச்சரம் போட்டுவருவான். அவன் தோன்றி மறைந்த தெருவில் அவனோடு நடக்கும்போது தெருவே அவர்களோடு ஒட்டிக்கொள்ளும்.
அவன் பார்த்த ஒவ்வொரு வீடும் மறைந்துவிட்டது. கூரைகளின் கூம்புகளும் கோயில் கோபுரமும் மறைந்துவிட்டன.
ஆனால் பிள்ளையார் கோயில் படியில் தூங்காவிளக்கு எரிவது தெரிந்தது. பாழ்படும் கிராமத்தின் தெருவழியாக வெங்கட்டம்மாள் எண்ணெய்யும் திரியுமாய் தீபம் போடவரும்போது பிள்ளையாருடன் அவள் மௌனமாகப் பேசுவது அவனுக்குத் தெரிந்துபோகும்.
ஆலமரத்தில் கொக்குகளும் இலைகளும் மிதந்து வரும் குரல் காற்றில் படரும். தூங்காவிளக்கில் பாலியகாலங்களின் ஒளி மிகுந்து சுடர்கிறது. சுற்றிப் பரவும் ஒளியில் பாலியகாலத்தில் இருந்த சாந்தியிருக்கும். கண்களில் பசுமை படர்ந்த இடங்கள். பிள்ளையாரின் நெற்றிக்கு மேல் மகுடத்தில் சித்திரவேலு படைத்த வெள்ளையரளி காய்ந்திருக்கும்.
பிள்ளையாருக்கு வைத்த சர்க்கரைக்கட்டியில் மழை எறும்புகள் அரித்துச் செல்லும். சர்க்கரைக்கட்டி தேயும்வரை இரவுகள் மாறாத ரகஸியங்களோடு தோன்றும். மழைக்கால இரவில் தூங்காவிளக்கடியில் எறும்புகள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் அவற்றின் சாரை சாரையான பாதைகளில் தேங்காய்த் துண்டு மெல்லிய இணுக்குகளாகிவிடும். இத்தணூண்டு தேங்காய்ப்பூவை எறும்புகள் மாற்றி மாற்றி சுமந்துசெல்லும். எதிர்வரும் எறும்பிடம் நின்று சேதி சொல்லும். ஆயிரமாயிரம் சேதிகளோடு இரவோடு மறையும் விந்தை எறும்புகள் மழையின் இயல்புகளோடு வந்துசேரும். அவர்களும் அருகருகே ஒட்டிக்கொள்வார்கள். பிள்ளையாரும் அவர்களோடு பிசுபிசுத்த உடம்பில் உள்ள ஒட்டும் உயிர். அவர்கள் எங்கெல்லாம் அலைந்துவந்து இரவில் பிள்ளையார் கோயில் திண்டில் அடைந்துகிடந்தார்கள்.
வெங்கட்டம்மாளின் பழுப்புநிற ரப்பர் வளையல் ஒன்றைக் கழற்றி பிள்ளையாருக்கு வைத்துக் கும்பிட்டு பிறகு அதை தீபத்தில் காட்டி திரும்பவும் மாட்டிக்கொண்டாள்.
ஆலமரம் எல்லாவற்றையும் பார்க்கும். தான்தோன்றியான ஆலமரத்தின் விழுதுகள் மெல்ல அசைகின்றன. விளையாட்டில் தோன்றும் மர்மப்பாதைகளுடன் மறையும் சந்துகள் தோன்றிவிடும். விழுதுகள் கும்பலாய் அசைகிறது. இன்னும் விளையாட்டு முடிந்து பொழுதடையவும் கூப்பாடு சுவர்களில் எதிரொலித்தபடி இருக்கும்.
அச்சுவர்கள் பாழில் மூழ்கி அதில் படிந்த வடுக்களும் இருளில் மறைந்துவிடும். சுவர்கள் பாழ்படும் போதெல்லாம் மையிருட்டு தோன்றிவிடும்.
இன்னும் புள்ளியாய் உருப்பெற்ற நிலவு கீழே சரிந்து சிறுபொறியெனத் துடித்துக்கொண்டிருந்தது.
ஊரை நெருங்கிச்சென்ற செல்லக்குருவி ஒன்று குமுறி அடங்கிவிட்டது.
அர்க்காஷா அர்க்காஷா…
என்னருமை நண்பா… தொப்பி… இன்றுதான் ஒரு அழகிய சிறிய தொப்பியைப் பார்த்தேன். நான் கேட்டேன், கருஞ்சிவப்பு நிறமுள்ள ரிப்பன்கள். விலை மட்டும் அதிகமில்லாவிட்டால்.. அர்க்காஷா.. விலை அதிகமாக இருந்தாலென்ன…
அர்க்காஷா…
தொப்பிக் கடையில் தூரத்திலிருந்தே இன்னொரு அழகிய தொப்பியைக் கண்டு அதை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். இத்தொப்பியை வேறு யாராவது எடுக்கப்போவது போல அல்லது திருடப்போவது போல அல்லது தொப்பியே தன் கைக்குக் கிட்டாமல் இருப்பதற்காக தன்னிடத்திலிருந்து காற்றில் பறப்பது போல தொப்பியைப் பார்த்தான்.
வாஸ்யாவின் தொப்பி மட்டும் இரவில் பதிந்து போயிருந்தது. அவன் மொட்டைமாடியிலிருந்து கீழே இருந்த தன்ன்றைக்குத் திரும்பிச் சென்றான். பலவீனமான இதயம் படைத்த வாஸ்யாவின் பக்கங்களோடு அறை முழுவதும் துடித்துக்கொண்டிருந்தது. புஸ்தகத்தை மூடிவிட்டு சூரல் நாற்காலியில் சரிந்தான். சாம்பல் கிண்ணத்திலிருந்து அரைகுறையாக எரிந்துகிடந்த சிகரெட் துண்டு ஒன்றைப் பற்றவைத்து காரமான புகையை உள்ளிழுத்து ஊதினான்.
சாம்பல் கிண்ணத்தில் மேலும் பல துண்டு சிகரெட்கள் கிடந்தன. டேபிளில் கிடந்த ‘அந்த மஞ்சள் நிறப்பூனை’ நகுலனின் நாவலைப் புரட்டி வாசிக்கத் துவங்கினான். சில பக்கங்கள் நகர்ந்ததும் அந்த மஞ்சள் நிறப் பூனை காகிதங்களிலிருந்து அச்சு ரூபத்திலிருந்து எழுந்து உடம்பை நெளித்ததும், அதன் மேல் ஒட்டியிருந்த வார்த்தைகள் கீழே விழுந்தன.
லாந்தருக்கு மேலிருந்த சுவரில் தாஸ்தாயெவ்ஸ்கியின் கோட் ஸ்டாண்ட். விளக்கு வெளிச்சத்தில் கருப்புக் கோட்டு இருளைப் போலத் தொங்கிக்கொண்டிருந்தது. ‘அந்த மஞ்சள் நிறப்பூனை’ மீசையைக் கோதியபடி திரும்பிப் பார்த்தது அவனை. தாஸ்தாயெவ்ஸ்கியின் கோட்டு மாட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றது. பழுதான கோட்டின் பெரிய ஜேப்பில் புகுந்தது. கோட் ஜேப்புக்குள் விளையாடியது. பின்னர் அதன் சாட்டை போன்ற வால் கோட்டுக்கு வெளியில் தொங்கியது.
தாஸ்தாயெவ்ஸ்கியின் கோட்டு அசைந்தது. டேபிளில் இருந்து கீழே குதிக்கும் சத்தம் கேட்டுக் குனிந்து பார்த்தான். சுவர் ஓரமாக நடந்து திறந்திருந்த கதவுப்பக்கம் போனது. வராண்டாவில் கிடந்த ஸ்லிப்பரைத் தாண்டி வாசல் நடையில் நின்றது. அவனும் பின்தொடர்ந்தான். பெருகிவரும் அமாவாசை இருட்டில் புகுந்துகொண்டது. அதன் இருப்பிடம் தெரியாமல் உற்றுப்பார்த்தான் இருளை.
சற்று திரும்பிப் பார்த்தது அவனை. கண்கள் சீற்றத்துடன் எரிந்துகொண்டிருந்தன. கோட்டைச்சுவரின் திருப்பங்களில் வெட்டிய அதன் ஒளி. உள்ளே தீப்பற்றும்படியான பார்வை, பின்தொடர் என்று இவனை அழைக்க இருளில் நடந்துகொண்டிருந்தான். அவன் கால்களே இருளில் மறைந்து மிதந்துகொண்டிருப்பது போல் இருந்தது. எட்டிய வானத்தில் கருப்பு நிலத்தை யாரோ உழுதுகொண்டிருந்தார்கள். விண்ணுக்கடியில் வாலாட்டி மறைந்த மஞ்சள் நிறப்பூனை. அடிவாரம் வரை பூமியும் வானமும் சேர்கிற பாதை. வானத்தில் நட்சத்திரங்கள் ஏதுமில்லை. தூர தூரத்தில் பூனையின் கண்கள் கொள்ளிக்கட்டை போல் சிவந்து எரிவது தெரிகிறது. நில விளிம்பில் மென்மைமிகு இருட்டு. யாருடைய கால்களோ நடந்துவரும் பதிவு மனசைத் தொடுவதாக இருக்கிறது. அவன் பார்த்துக்கொண்டிருந்தான், உருவங்கள் யாவும் வானத்துடன் இணைக்கப்படுவதை. வானமும் பூமியும் சேர்த்து உழப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். உருவமற்ற அரூபம் ஒன்று அவனைக் கடந்துகொண்டே இருந்தது.
அப்போது வால் நட்சத்திரம் ஒன்று காரிருள் மீது சரிந்துபதிந்தது. அவன் பாலியகால இரவில் தோன்றிய அதே நட்சத்திரம் இருளில் பதிவதை அவர்கள் குழந்தையின் கண்கொண்டு பார்த்தார்கள். பல இரவுகள் வரை நீடித்த அப்பதிவு ஊரிலிருந்த எல்லாரது நினைவாகவும் இருந்தது. அந்த இரவுகளை வாழ்வாகக் கொண்டவர்கள் எல்லோரும் அந்தப் பாதைக்கு தெரிவது போல் பரிச்சயமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை மறதியிலிருந்த பலர் தோன்றி அவனுடன் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. முன்னும் பின்னுமாக அவர்கள் பேச்சுக்குரல் காற்றில் விட்டுவிட்டுக் கேட்கிறது.
வெங்கட்டம்மாளும் பூக்காரனும் வந்துவிட்டார்கள்… என்றோ மாரியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்த பலூன்கார அண்ணனும் மூங்கில் குழல் ஊதியபடி முன்னே போவது போல் இருந்தது. குளிரும் இதமுமான காற்று… மெல்லிய பல ரேகைகளோடு சிறு சிறு அணுவளவான பாலியகால ஞாபகங்களோடும் வீசிக்கொண்டிருந்தது… அவர்களுடைய நாட்களெல்லாம் ஒன்றுசேர்ந்து சொந்தமான பாதையொன்றில்… ஞாபகம் வருகிறது அந்தப்பாதை… எதுவென்று. அருகில் அவனைத் தொட்டு ஓடிவருவது அவனாகத்தான் இருக்கும். சித்திரவேலுவின் கை அவன் மேல் பட்டவுடன் ஏற்படக்கூடிய ஏதோ ஒன்று எப்போதுமே அவனிடம் மறைந்திருப்பது போல்.. வியப்பூட்டியது. போகப்போக இருள் மட்டும் இருப்பதாக அண்ணாந்து பார்த்தபோது எல்லாமே உருகி இருட்டாகிவிட்டது போலத் தெரிந்தது. அவன் நடந்துகொண்டிருந்தான். அவன் தொடர்ந்துகொண்டிருந்தான் எல்லாருக்கும் தெரிந்த, அவனுக்குத் தெரிந்த பாதையை.
நடக்க நடக்க நினைவுகள் யாவும் மறைந்து அவன் அறையில் தொங்கிக் கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் கோட் ஸ்டாண்ட் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது வானத்தில் வெம்பரப்பு காணப்படுவது போல் மெல்லிய மேகம் மிதந்துகொண்டிருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள் நிறைந்த கோட்டு, வானத்தில் மேகத்துண்டைப் போல் மிதந்துகொண்டிருந்தது.
நன்றி:
கல்குதிரை,
கோணங்கி