தஸ்தயேவ்ஸ்கியை அறிதல்-சரவணன் மாணிக்கவாசகம்

ல்லூரிப் படிப்பை முடித்து முதல் வந்த நேர்முகத் தேர்வின் இறுதிப்பட்டியலில் இருந்த என்னுடைய பெயர், இந்திரா கொலை நடந்து ஒத்திவைக்கப்பட்டுப் பின் வெளியிட்ட பட்டியலில் இல்லாது போனது. வேலைக்காகக் காத்திருந்த நீண்டபகல் மற்றும் இரவுப்பொழுதுகளில் முதல்முறையாக தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்கினேன். மைனஸ் X மைனஸ் என்ற கணிதச்சூத்திரம் இதில் மெய்ப்பிக்கப்படாமல் தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் வாதையைப் படித்துப்படித்து பயஇருட்டில் ஆழ்ந்தேன்.

தஸ்தயேவ்ஸ்கி எழுதிய காலம் முழுதுமே ஏழடுக்கு, எட்டடுக்கு தணிக்கை நடைமுறையில் இருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் பற்றியோ, தேவாலயத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை மறைமுகமாகக்கூட தவறுதலாகக் குறிப்பிட முடியாத சூழல் அது. எழுத்துச் சுதந்திரம் இல்லாத காலத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் கலைநேர்த்தி முதல் நாவலிலேயே ஆரம்பித்துவிடுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டு, சைபீரியச் சிறையில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து, பத்துவருடங்கள் இடையில் எழுதாமல் விட்டுப்பின் தொடர்ந்தது, குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவேண்டும் என்ற கெடுவுக்குள் அவசரமாக முடித்தது என்று பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எழுத்துலக வாழ்க்கை தஸ்தயேவ்ஸ்கியினுடையது.

Poor folk மற்றும் சிறுகதைகள் மூலமாகப் பரவலான கவனத்தைப் பெற்ற தஸ்தயேவ்ஸ்கி சில நூல்களுக்காக எதிர்மறை விமர்சனத்தைச் சந்திக்க நேர்ந்த போதும் அவருடைய இலக்கிய அந்தஸ்தை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் சிறை வாழ்க்கை முடிந்து பிறகு, எழுதிய பல நாவல்கள் அவரை ருஷ்ய மாஸ்டர்களின் முன்னிருக்கைக்குக் கொண்டு வந்தன. சிறையில் தகப்பனைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவனின் கதை பின்னாளில் The Brothers Karamazovக்கு உபயோகமாகியது போல் பல கதைகள் அங்கே அவருக்குக் கிடைத்திருக்கும். சிறை வாழ்க்கைக்குப் பின்னரே அவருடைய எல்லா உன்னத நாவல்களும் எழுதப்பட்டன.

 

Writers Diaryல் தஸ்தயேவ்ஸ்கி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல “கணிதப் பரிட்சைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்த போதிலும், மனம் கவிதைகளையும், கவிஞர்களைச் சுற்றியே வரும் ”  என்பதே இவருடைய வாழ்க்கைக்கும்  பொருந்தும். பதினாறு வயதிலேயே தனக்குத் தொழில் எழுத்து என்பதில் தீர்மானமாக இருந்த தஸ்தயேவ்ஸ்கியின், வாழ்க்கையில் White Nightsன் கதாநாயகனின் சாயல் கலந்திருந்தது. பூர்வீகச் சொத்தில் தனக்குரிய பங்கை வெறும் 500ரூபிள்களுக்குத் தாரை வார்த்தவர் தஸ்தயேவ்ஸ்கி. பண விசயத்தில் அவர் எவ்வளவு முட்டாள்தனமாக ஒருவரால் நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு நடந்து கொண்டார். இடையில் பத்தாண்டுகள் சூதாட்டத்தில் ஈடுபட்டு, புது மனைவியின் திருமணமோதிரத்தையும் கூடத் தோற்றிருக்கின்றார். இவரது இரண்டாவது மனைவி அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கியபிம்பத்திற்கு வெளிச்சத்தைக் கொடுத்தது மட்டுமன்றி, பணச்சிக்கலில் தஸ்தயேவ்ஸ்கி மீண்டும் சிக்கவிடாது பார்த்துக்கொண்டார்.

டிசம்பர் 22,1849 கடைசி நேரத்தில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்ட தினத்திலேயே தஸ்தயேவ்ஸ்கி சகோதரன் மிக்கேலுக்கு எழுதிய கடிதம் முக்கியமானது.

மரணதண்டனை தினத்தன்றும், பின்னர் சைபீரியக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போதும் தஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு பார்வையாளன் மனநிலையைத் தாண்டிய பாதிப்பு இருந்ததாகவோ, விரக்திநிலை அடைந்ததாகவோ, தோன்றவில்லை. அதிகபட்சமாக இனி எழுதவே முடியாது போய்விடுமோ என்று பயந்திருக்கிறார். கடிதத்தின் இந்த வரி முக்கியமானது. தஸ்தயேவ்ஸ்கியின் மனநிலையைத் தெளிவாகக் குறிப்பது.

” Life is everywhere life, life in ourselves, not in what is outside us”.

தஸ்தயேவ்ஸ்கி சைபீரிய சிறைத் தண்டனையை முடித்து விட்டு வந்த பிறகு முதலில் எழுதிய நூல் Uncle’s Dream. தஸ்தயேவ்ஸ்கி கடுமையான சிறை அனுபவம் முடிந்து வந்ததும் எழுதிய இந்த நாவல், அவரது வார்த்தைகளில் சொன்னால் ஒரு Comical novel. பத்துவருட இடைவெளிக்குப் பின் என்ன மனநிலையிது? அதனாலேயே தஸ்தயேவ்ஸ்கியைப் புரிந்து கொள்வது என்பது எளிதான விசயமல்ல. பின்னாளில் தன் சிறை அனுபவங்களை Idiotல் ஒரு பகுதியாக, House of Dead ல் பெரும்பங்காக எழுதினார். அவரது நாட்குறிப்பிலும் அந்த அனுபவங்கள் வருகின்றன. ஆனால் அவர் எந்த இடத்திலும், நான் அப்பாவி, எனக்கு நேர்ந்தது அநீதி என்று எழுதவேயில்லை. இவ்வளவிற்கும் Petrashevsky குழுவில் இவர் தீவிரமாக இயங்கவில்லை. கிருத்துவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தஸ்தயேவ்ஸ்கி, கடவுள் ஏதோ காரணத்திற்காகத் தனக்கு இந்த இன்னல்களை அளித்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருந்ததனால் இது குறித்து பேசாதிருந்திருக்கக்கூடும். “The darker the night, the brighter the stars, The deeper the grief, the closer is God!”

தஸ்தயேவ்ஸ்கியின் முதல்நாவல் பிரசுரமாவதற்கும், நல்லதொரு இலக்கிய அறிமுகத்தைப் பரவலாகக் கிடைக்கச் செய்ததற்கும் Belinskyயே காரணகர்த்தாவாக இருந்தார். ஆனால் அவரது கடவுள் மறுப்புக் கொள்கை, தீவிர கிருத்துவரான தஸ்தயேவ்ஸ்கியை அவரிடம் இருந்து விலக வைத்தது. ஆனால் Maikov என்ற ருஷ்யக் கவிஞருடனான நெருக்கமான நட்பு கடைசிவரை தொடர்ந்தது. அவருக்குத் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய கடிதங்கள், தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல்களின் உருவாக்கப் பின்னணியைப் பற்றிப் பேசுகின்றன. Idiot நாவல் உருவான விதம், தெளிவான, சுருக்கமான  The Possessed புத்தகம் குறித்த விளக்கம், இலக்கிய செயல்பாட்டின் உளவியல், டால்ஸ்டாய், துர்கனேவ், Schedrin மற்றும் Danilevsky போன்றோர் படைப்புகள் குறித்த இலக்கிய விமர்சனங்கள், கருத்துகள் என்று இடம்பெறும் பல சுவாரசியமான விசயங்கள், தஸ்தயேவ்ஸ்கி என்ற வாசகவிமர்சகரை அடையாளம் காட்டும்.

மனைவியையும், உலகத்திலேயே மிக நெருக்கமான சகோதரனின் இழந்தபின், முடிவில்லாத கடன்களுக்கிடையே, வலிப்பு நோயின் தீராத வலிகளுக்கிடையே, சூதாட்டப்பேயின் பிடியிலிருந்து விலகாது, வாழ்க்கையின் இருண்டபக்கத்தை முழுமையாகப் படித்தபிறகு, தோல்வியடைந்த முதல் திருமண வாழ்க்கைக்கும் பின்னர், நம்பிக்கை ஒளியாக, அதிர்ஷ்ட தேவதையாக, தஸ்தயேவ்ஸ்கி உலகின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவராக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய பெரிதும் காரணமாக இருந்த அன்னாவிற்கு இன்னொரு ஆணாக இருந்திருந்தால் எவ்வளவு விசுவாசமாக இருந்திருப்பார்கள்! ஆனால் தஸ்தயேவ்ஸ்கி தன் இருமனைவியருக்குமே Loyalஆக நடந்து கொள்ளாது வேறு பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். Suslovaவுடனான காதல் அதில் முக்கியமானது. எந்த ஊருக்கும் கொண்டு சேர்க்காத அந்தக் காதல்தோல்வியின் பாதிப்பு தஸ்தயேவ்ஸ்கியின் பின்வரும் நாவல்களில் பிரதிபலித்தது. மாறாக அன்னா தஸ்தயேவ்ஸ்கியைக் காதலனாக மட்டுமில்லாது கடவுளாகக் கண்டார். அவருடைய Reminiscence of Anna என்ற நூல் தஸ்தயேவ்ஸ்கி குறித்த முக்கியமான பல தகவல்களை உள்ளடக்கியது. பிரியங்களை எழுத்தில் கலந்து எழுதப்பட்ட நூல்.

தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை சரிதம் குறித்த நூல்களிலேயே மிக முக்கியமானது 2010ல் வெளிவந்த Joseph Frankன் Dostoevsky; a writer in time என்ற நூல். (இது இவருடைய 2400 பக்கங்களுக்கு மேலான, ஐந்து பகுதிகள் கொண்ட நூலின் சுருக்கப்பட்ட பதிப்பு). அன்னா மற்றும் Frankன் நூல்கள் தஸ்தயேவ்ஸ்கி என்ற மாபெரும் இலக்கிய மேதையின் உடலைத் தொட்டுப் பார்க்கும் நெருக்கத்தை அளிக்கின்றன. இரண்டுமே வேறுவேறு விதத்தில் முக்கியமான நூல்கள்.

தஸ்தயேவ்ஸ்கியின் கதையுலகம், கடவுள் நம்பிக்கை எனும் நங்கூரத்தால் நிலைநிறுத்தப்பட்ட வாழ்வை, தொடர் மாற்றங்களால், தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது.  அறிவுஜீவிகளின் புதிய சிந்தனைகளும், தத்துவங்களும் மற்றவர்களது மூளையிலும், இதயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதைச் சொல்வது. டால்ஸ்டாயின் முக்கிய நாவல்கள் ஒரு காலகட்ட ருஷ்ய வாழ்வின் கண்ணாடி பிம்பமாக இருப்பது போலல்லாது, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் காலதேசவர்த்தமானங்களை எளிதாகத் தாண்டுவது. மேற்கத்திய வாசகர்கள் டால்ஸ்டாயை விட தஸ்தயேவ்ஸ்கியை நெருக்கமாக உணர்வது இதனாலேயே. ருஷ்யாவில் மற்ற நாடுகள் போலில்லாமல், படிக்கத் தெரியாதவர்கள், படித்த Elite வாசகர்கள் என்ற இரு பிரிவே அப்போது இருந்ததால் ஜனரஞ்சக வாசகர்களுக்காக எந்த இலக்கியமுமே அப்போது எழுதப்படவில்லை. தஸ்தயேவ்கியை வாசிப்பதில் சவால் எதுவும் இருப்பதில்லை. ஒவ்வொரு நாவலையும், சிறுகதைகளையும், வித்தியாசமாகவும், சுவாரசியம் குன்றாமலும் எழுதி இருக்கிறார்.

Pushkin, Gogol போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பாதிப்பில் எழுதத் தொடங்கிய தஸ்தயேவ்ஸ்கி பின்னாளில் தனக்கான தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டார். தவிப்பும், அலைக்கழிப்பும், பழிஉணர்ச்சியும், துரோகமும் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மட்டுமல்ல, மனிதஇனம் இருக்கும் வரை உடன் வருபவை. அதனாலேயே தஸ்தயேவ்ஸ்கியால் இன்றும் ஒரு இந்தியனுக்கோ இல்லை, அமெரிக்கனுக்கோ அல்லது வேறு எந்த நாட்டினனுக்கோ பிரியசிநேகிதன் ஆக முடிகிறது. தஸ்தயேவ்ஸ்கியைப் படித்திராதவர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் தவறாது வாசிக்க வேண்டிய முக்கியமான ஐந்து நாவல்கள்:

  1. Crime and Punishment
  2. Brothers Karamazov
  3. The Idiot
  4. The Possessed
  5. The Notes from the Underground

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.