புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1


கனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து  ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது  புதிய புதிய  முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற  புத்தாண்டு 2020 ல்  எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை  முன் வைத்தோம்.

“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்?  ஏன் அந்த புத்தகம் ?”

இந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக  இந்த பரிந்துரைகளை பட்டியலாக வடிவமைத்தப் போது மிகப்பெரிய நூல் பரிந்துரைப் பட்டியலாக ஆவணமாகியது . படைப்பாளர்கள் பரிந்துரைத்த ஒவ்வொரு புத்தகமும்  வாசகர்களுக்கும்.. புதிதாக வாசிக்க வரும் இளைய தலைமுறையினருக்கும் புத்தாண்டு பரிசாக  பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறோம்.

புத்தகங்கள் பரிந்துரைத்த படைப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கனலி கலை – இலக்கிய இணையதளக்குழுவின் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தக பரிந்துரைகள் இதோ…!

 

எழுத்தாளர் வண்ணநிலவன்:

எல்லா காலங்களிலும் வாசகர்களுக்கு டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலை பரிந்துரை செய்கிறேன். ஒவ்வொரு முறையும் மனதளவில் ஒவ்வொரு மனிதரும் புத்துயிர்பு பெற கட்டாயம் இந்த பேரிலக்கியத்தை வாசிக்கவும்.

 

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்:

இந்த புத்தாண்டில் நான் நண்பர்களுக்கு எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய மனைமாட்சி நாவலை பரிந்துரை செய்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுத்தாளர் எஸ்.சங்கரநாரயணன்

புத்தாண்டுப் பரிசாக நான் மகிழ்ச்சியுடன் அளிப்பது..

தந்திர வாக்கியம் – நாவல்
எழுதியவர் : எம்.ஜி.சுரேஷ்
வெளியீடு ‘சொல்லங்காடி’ சென்னை.

ஒரு ஐ. டி. வளாகத்துக் கதையாகத் துவங்கி, தமிழ் ஆதிகுடி பெண் ஒருத்தியுடன் நாயகனது காதல் என வேர்களை நோக்கி ஒரு எடுப்பு கொடுத்து, நாயகனது தந்தைக்கு நாயகன், சீன யாத்ரிகனின் குறிப்புகள் அடங்கிய பழைய நூலைத் தேடியளிப்பதாக வளர்ந்து, உதிரி உதிரியாகச் சொல்லப் பட்ட கதை. புராதன பிரமைகளைக் கட்டவிழ்க்கிறது நாவல். அரசனின் அந்தப்புரத்து மகராணியர் என்கிற சித்திரத்தை அவர் துலக்கிக் காட்டும் இடம் கலவரப் படுத்துகிறது. எதிரி நாட்டை வென்றதும் அவனது அந்தப் புரத்தில் இருந்து தோற்றுப்போன அரசனின் ஆசைமனைவிகள், பஞ்ச பராரிகளாய் பட்டினியால் எலும்பும் தோலுமான உடலுடன், விடுதலைப்பட்ட ஆவேசத்துடன் வெளியேவரும் காட்சி தமிழுக்குப் புதியது. களப்பிரர் காலம் வரலாற்றின் இருண்ட காலம், என்று இருப்பதைப் பொற்காலமாக நிருவி மிகப் பெரும் கான்வாசில் இயங்கும் கதை. நிகழ் இறந்த எதிர்காலம் என முக்காலப் பரிமாணத்துடன் நாவலின் சிந்தனைப் பயணம் பிரமிக்க வைக்கிறது. எம்.ஜி. சுரேஷின் கடைசி நாவல். மதிப்பீடுகள், தத்துவ தரிசனங்கள் வட்டப் பாதை கொண்டவை என்கிற பதிவாகவும் இதை அவதானிக்கலாம்.

எழுத்தாளர் வெளி ரங்கராஜன்:

சமகால தத்துவ சிந்தனையாளரும்,நியாஸில் தத்துவம் பயில்விப்பவரும்,ஹெக்கோடுவில் உள்ள நிநாசம் அமைப்பின் நாடக செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சுந்தர் சருக்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட `இரண்டு தந்தையர்` நாடகத் தொகுப்பையே நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

இவற்றை மிகவும் சரளமாகவும்,உயிர்ப்பான மொழிப்பிரயோகத்துடனும் தமிழாக்கம் செய்திருப்பவர் சீனிவாச ராமானுஜம். அகம்/புறம் சார்ந்த பண்பாட்டு முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தாது நிலவிவரும் இந்திய/தமிழ்ச் சூழலில் நம்முடைய கலாச்சார மற்றும் சிந்தனைத் தளத்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட கணிதமேதை ராமானுஜன்,அறிவியலாளர் ஐன்ஸ்டீன்,மகாத்மா காந்திஆகிய சென்ற நூற்றாண்டின் மூன்று முக்கிய பரிசோதனையாளர்களின் அக/புற வாழ்க்கையின் முரண்பாடுகள் இப்பிரதிகளில் கேள்விக்குள்ளாகும் விதம் மிகுந்த ஈடுபாட்டையும் ஒரு செறிவான வாசிப்பையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது.இந்தமுரண்பாடுகள் குறித்த கேள்விகளை மேலும்மேலும் கூர்மைப்படுத்தவேண்டிய தேவைகள் நாளுக்குநாள் பெருகிவரும் ஒரு சூழலில் இப்பிரதிகள் அதிக முக்கியம் வாய்ந்தவையாகின்றன.ராமானுஜன்,ஐன்ஸ்டீன்,காந்தி ஆகிய இந்த பரிசோதனையாளர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிச்சத்துக்கு வந்ததும்,வராததுமான பல புனைவுகள் இந்த நாடகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களுடைய அறிவியல்/ஆன்மீக முனைப்புகளுக்கும்,குடும்ப மதிப்பீடுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நாடகங்கள் காலம் குறித்த நேர்கோட்டுத்தன்மையிலான புரிதலை கலைத்துப் போடுகின்றன.ஒரு நிகழ்தளத்தில்,மனித உடல்களின் பிரசன்னத்தில் காலத்தின் பல்வேறு மதிப்பீடுகள் உரசிப் பார்க்கப்படும் சாத்தியங்களை இவை முன்வைப்பவை.

 

எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன்:

ய.மணிகண்டனின் ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ நூலைப் பரிந்துரைக்கிறேன்.

“புதுத்தமிழ் என்று இலக்கிய வரலாறு அங்கீகரித்துள்ள தமிழ் செல்லப்பாவாலும், க.நா.சு, புதுமைப்பித்தன், மௌனி ,மணிக்கொடியாலும் உருவானதுதான்.
புதுமைப்பித்தனையும் மணிக்கொடியையும் தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட யாரும் பாரதிதாசனைப் புரிந்து கொள்ளவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.
தமிழ் இலக்கிய வரலாற்றை வரையறைப்படுத்த இந்த விஷயங்கள் முக்கியமானவைகளாகும்”- தமிழவன் (‘தீராநதி’)

‘காக்கைச் சிறகினிலே’ இதழில் பாரதிதாசனும் மணிக்கொடி எழுத்து கலைஞர்களும் தொடர்பாக மூலபாட ஆய்வு நெறியியல் கூறுகளுடன் 8 கட்டுரைகளை முன்வைத்தார். இவை பாரதிததாசனியல், மணிக்கொடி, எழுத்து ஆய்வுக்களங்களில் புதியவெளிச்சம் பாய்ச்சின. இதன் வாயிலாக பாரதிததாசனுக்கும் அவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுகளும், அவர்களுடைய பங்ளிப்புகளும் பாரதிதாசன் மீதான அவர்கள் மதிப்பீடுகளும் துலக்கமுறுகின்றன. இதனால் தமிழவன் தரப்புகள் தகர்ந்தே போயின. இலக்கிய நவீனத்துவம் அறிவொளிமரபு நவீனத்துவமும் சங்கமிக்கும் சங்கு முகமே இந்நூலின் சிறப்பாகும்.

எழுத்தாளர் எம்.ஏ. சுசிலா

எப்போதும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாக நான் பரிசளிக்க விரும்பும் ஒரே முழுமையான நூல் பாரதி கவிதைகள். முன்னைப் பழமைக்கு முந்தையதற்கும்.. பின்னைப் புதுமைக்கும் ஈடு கொடுத்து என்றும் நிலையாக நிற்பவன் பாரதி என்பதால்.

 

எழுத்தாளர் பவா செல்லத்துரை:

கல்பட்டா நாராயணன் எழுதி, கே.வி ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த “சுமித்ரா” நாவலை இந்த புத்தாண்டில் என் வாசகர்களுக்கு பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

ஒரு மீனின் துள்ளல் அளவிற்கே உள்ள வாழ்வு சுமித்ரா வுக்கு மட்டுமல்ல நாம் எல்லாருக்குமானது. இந்த சின்ன ஜீவித்தில்தான், எத்தனை சறுக்கல்கள், துரோகங்கள், பெருமிதங்கள், மீறல்கள், எழுச்சிகள் என மனிதவாழ்வை சீட்டுக்கட்டுகளை போன்றே அடுக்கிக் கொண்டே போகலாம்.

கல்பட்டா நாராயணன் ஒரு கவிஞன் என்பதால் சுமித்ரா நாவலை அத்தனை கவித்துவமான சொற்களால் ஒரு பெண்ணின் வாழ்வை நுட்பமான சிற்பம் போல சொற்களால் செதுக்கி இருப்பார். கொஞ்சம் பிசகினாலும் தவறான ஓவியமாகிவிடும் சுமித்ராவை நம் எல்லாருக்கும் பிரியமானவளாக நெருக்கி இருப்பார்.

நாம் வாழவேண்டிய வாழ்வு என சுமித்ரா வாழ்வை பார்த்து நம் எல்லாரையும் ஏக்கம் கொள்ள வைத்திருப்பார் கல்பட்டா நாராயணன்.

நாவலின் துவக்கமே அசாத்தியமானது தினம் தினம் நடைபயிற்சிக்கு போகும் வாசுதேவன் எப்போதும் காலை எட்டரை மணிக்கு நடைபயிற்சி முடிந்து , வீட்டிற்கு திரும்பி வருவார். அன்று எழரை மணிக்கு சுமித்ரா மரணித்து விடுவாள்.

கல்பட்டா எழுதுகிறார் ” அவளுடனான உலகத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வாழ்வதற்கு வாசுதேவனுக்கு வாய்த்திருக்கிறது” என்று.

மகத்தான படைப்பாளிகளுக்கு மட்டும் கைகூடும் இந்த சொற்கள் கல்பட்டா என்கிற கவிஞருக்கும்,அதை சிந்தி விடாமல் தமிழக்கு கொண்டுவந்த ஷைலஜா வுக்கும் வாய்த்திருக்கிறது.

என் வாசகர்களுக்கும், என் நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக அல்லது பரிந்துரையாக சுமித்ரா நாவலை அளிக்கிறேன்.

எழுத்தாளர் முத்துநாகு:

புத்தாண்டில் நண்பர்களுக்கு எனது பரிந்துரை ‘Castes of mind’

இந்த நூல் இந்திய சமூகத்தில் எப்படி குலம் என்ற சாதி ஒவ்வொரு தனிமனித மூலைக்குள்ளும் உள்ளது என்பதை அறிவியல், சமூக வரலாறு இவைகளை நாம் ஏற்றுக் கொள்ளும்படி ,மறுக்காத அளவிற்கு எழுதப்பட்ட நூல் என நான் நம்புகிறேன்.

 

எழுத்தாளர் தேவிபாரதி:

அய்ஃபர் டுன்ஷ் எழுதிய அஸீஸ் பே சம்பவம் என்னும் துருக்கிய நாவல், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்தச் சிறிய நாவல் காதலாலும் ஒப்புக்கொடுத்தலாலும் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதன் ஒருவனைப்பற்றிய கவித்துவம் ததும்பும் கோட்டுச் சித்திரம். நம்மாலும் மற்ற பலராலும் எளிதில் கடந்துசெல்ல முடிந்த வாழ்வைக் கடக்க முடியாமல் திணறும் அந்த மனிதனில் ரகசியமாகவேனும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இதற்கப்பால் அது நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் படைப்பு, புத்தாண்டில் நான் இதையே பரிந்துரை செய்ய, பரிசளிக்க விரும்புவேன்.

எழுத்தாளர் ஜி.குப்புசாமி:

நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. 

இந்நூல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த சமயத்தில் வெளிவந்தது. எதிர்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் மூன்று மாபெரும் வல்லரசுகளின் அங்கங்களாக இணைந்துவிட்டிருக்கும் என்று ஆர்வெல் கற்பனை செய்கிறார். அதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்த தேசத்தில் கதை நடக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். வரலாறுகள் அழிக்கப்பட்டு திருத்தியெழுதப் படுகின்றன. மக்களின் பேச்சும் செய்கையும் மட்டுமல்ல, சிந்தனை கூட கண்காணிக்கப்படுகிறது. மக்களுக்கு கற்பனையாக எதிரிகள் உருவாக்கப்பட்டு எந்நேரமும் அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் அரசு ஊடகங்களால் நிகழ்த்தப்பட்டு மக்களுக்கு வெறியேற்றுகிறது. தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதை ஜார்ஜ் ஆர்வெல் 1940களிலேயே எழுதிவிட்டிருக்கிறார். தீர்க்கதரிசி!

 

எழுத்தாளர் சு.வேணுகோபால்:

புதிய வருடத்தில் நான் தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்கிற புத்தகத்தை யாரவது ஒரு நண்பருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

காரணம் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் கடவுளின் இருப்பு குறித்தும். மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் எனக்கு சரியான புரிதல்களை அளித்துள்ளது.
இந்த புத்தகம் அளவிற்கு வேறெந்த புத்தகமும் எனக்கு அந்த புரிதல்களை தரவில்லை.

 

எழுத்தாளர்அனுராதா ஆனந்த்:

கிரீஷ் கர்னாட் தனது 22 ஆவது வயதில் கன்னடத்தில் எழுதிய மஹாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் யயாதி. எளிதாக இதன் கதைச் சுருக்கம்…

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை மணம் கொள்கிறான் யயாதி என்னும் மன்னன். ஷர்மிஷ்டா என்ற தேவயானியின் சேடிப் பெண்ணுடனும் உறவு கொள்கிறான் . இதனால் கடுங்கோபமடைந்த சுக்கிராச்சாரியார் இளமையிலேயே முதுமையடையுமாறு யயாதியை சாபிக்கிறார்.பிறகு மனமிறங்கி யயாதியின் மகன்களுள் யாராவது தமது இளமையை உவந்து தந்தைக்கு அளித்தால் சாப விமோசனமடையலாம் என்றும் அனுமதிக்கிறார்.
யயாதி தன் பிள்ளைகளிடம் இளமை வேண்டி கையேந்தி நிற்கிறான். எல்லா பிள்ளைகளும் மறுத்தபின் கடைசியில் ஷர்மிஷ்டையின் மகன் புரு தந்தைக்காக தன் இளமையைத் துறந்து முதுமை கோலம் பூணுகிறான் . பின் இத் தீரா இளமைத் தரும் சலிப்போடும் குற்ற உணர்ச்சியுடனும் வாழ்கிறான் யயாதி.

அக்காலம் தொட்டு இன்று வரையிலும், பல காரணங்களுக்காக , நம் நாட்டில் , இளைஞர்களின் இளமையும் உயிரும் காவு வாங்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.

இந்நாடகம் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ,நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2007 யில் கிரீஷ் கர்னாட் தானே இதை ஆங்கிலத்திலும் பெயர்த்தார்.

எழுத்தாளர் பெருந்தேவி:

ரூமியின்  ‘தாகங்கொண்ட மீனொன்று.’ தமிழில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தது. இன்றைய சூழலில் ஒரு புறம் சமயத்தின் பெயரில் பாசிஸம் அரங்கேறுகிறது. இன்னொரு புறம் இறைமை, ஆன்மீகம் இவையெல்லாம் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வன்முறையின் தொடர் அரங்கேற்றம். இந்நிலையில் இலக்கியம் குறிப்பாக கவிதை மட்டுமே என்னைப் போன்றவர்களுக்கு அடைக்கலமாக உள்ளது. ‘துச்சமெனத் தூக்கியெறியப்படும்’ நுண்ணுணர்வுகளுக்கும் மேன்மைகளுக்கும் ஒளிந்துகொள்ள இடம் தருகிறது கவிதை எனும் ‘உயிர்த்துத் தளும்பும் உலகு.’ அத்தகையதோர் அற்புதமான உலகு ரூமி படைத்திருப்பது.

 

கவிஞர் ஸ்ரீவள்ளி:

திருவாசகம், நாச்சியார் திருமொழி தாண்டி வாசித்தது சொற்பம். ரில்கே, போதலேர் தாண்டி நவீன கவிதை வெளிப்பாடுகளோடு அதிகப் பரிச்சயமில்லை. தமிழில் சமீபத்தில் கவிஞர் சமயவேல் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஸ்பானியக் கவிஞர் குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் படிக்கக் கிடைத்தன. வீசு தென்றலைப் போன்ற எளிய, இனிய மொழி.

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ படித்திருக்கிறேன். சொல் இறந்து நின்ற தொன்மை கொண்ட பிரபஞ்சத்தில் துகளினும் அற்பமானது நம் இருப்பு. பிரியமே அதை அர்த்தபூர்வமாக்குகிறது. ஆனால், இத்தொகுப்பிலிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் சில்லிட்டுப்போன பிரியங்களின் கோப்பையில் அருகருகே மிதக்கும், உடைந்துபோகும் பனிக்கட்டிகள் நாம் என்பதைத் தவறாமல் நினைவூட்டுகின்றன.

 

எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன்

காலம் தொடங்கியபோது இருந்த கோடிக்கணக்கான உயிர்களில் 99.9% உயிர்கள் அழிந்துவிட்டன. இந்த அறிவியல் உண்மை நமக்கு முறையாக கற்றுத்தரப்பட்டிருந்தால் மனித உலகம் வேறு மாதிரி அமைந்திருக்கும். அதிலும் பாடநூல்களின் அறிவியல் எழுத்துமுறை ஒரு வேகாதப் பண்டம். வெளிநாடுகளிலும் இதே கதைதான். இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் பில் பிரைசன் என்பவரால் எழுதப்பட்டதே, ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ நூல்.

இயற்கை அறிவியலை அறிய உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் நேரடியாக பயணம் செய்கிறார். 18 நாடுகளில் உள்ள 176 அருங்காட்சியகங்களுக்கும் செல்கிறார். சமகாலத்தில் வாழும் 2000 அறிவியலாளர்களைச் சந்திக்கிறார். இவற்றின் ஒட்டுமொத்த உழைப்பே இந்த நூல். இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்ணியல், புவியியல், பரிணாமவியல் அனைத்தையும் இவ்வளவு எளிமையாக விளக்க முடியுமா என்று வியப்பை அளிக்கிறது.

700 பக்கமும் வாசிக்கையில் ஆலி (ஐஸ்கட்டி)போல உருகி கரைகிறது. Creative Non Fiction வகைமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் ஆங்கிலத்தில் வெளியான ஓராண்டிலேயே பத்து இலட்சம் நூல்கள் விற்பனையாகி சாதனைப் படைத்தது. அறிவியல் உள்ளுக்குள் நுழைய நுழைய, மூட நம்பிக்கைகள் மனசிலிருந்து பாம்புச் சட்டையைப் போல உரிந்து விழும் விந்தையை இந்த நூல் நிகழ்த்துவதால் இதைப் பரிசளிக்க விரும்புகிறேன்.

எழுத்தாளர் அழகிய பெரியவன்:

நான் அண்மையில் படித்த, மனதை நிறைத்திருக்கிற அன்னை நாவலையே பரிசாகத் தர இத்தருணத்தில் விரும்புகிறது மனம். அன்னை கிரேசியா டெலடா என்ற இத்தாலிய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு சிறிய நாவல். இந்த நாவலுக்காக அவருக்கு 1927 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அளவில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் டெலடா தான் என்று நினைக்கிறேன். கிரேசியா இத்தாலிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் பிறந்து வளர்ந்தவர். அந்தத் தீவையே கதைக்களமாகக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார். கணவனை இழந்த ஒரு ஏழைத்தாய் தன் மகனை மதகுருவாக்க விரும்புகிறார். அப்படியே அவரின் மகன் பால் கத்தோலிக்க மதகுருவாக ஆகிறான். இருவரும் ஒரு மலை கிராமத்தில் வந்து தங்குகிறார்கள். தாய் தன் மகன் மதகுருவாக ஆகிவிட்டதில் மகிழ்ச்சி அடைய, பாலோ தன் இளம் வயதுக்கே உரிய உணர்வில் மூழ்கி அக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு தடுமாறுகிறான். ஒரு புறம் மனித மனதின் உயர் இலட்சியம். மறுபக்கம் மனித உணர்வின் இயல்பான விருப்பம். இவற்றுக்கு இடையில் நடக்கும் போராட்டம் என நாவல் மனித எண்ணங்களையும் போராட்டங்களையும் மிகத் துல்லியமாகச் சித்தரித்து செல்கிறது. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு ஆழ்மன வெளிப்பாட்டையும், ஆன்ம உணர்வையும், வாழ்வின் இயங்கியல் சார்ந்த தர்கங்களையும் வழங்கிடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த நாவல். இந்த நாவலின் மொழிபெயர்ப்பு பற்றி சொல்லியாகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்தது. மிக இயல்பான உயிரோட்டம் கொண்ட மொழிபெயர்ப்பு.

எழுத்தாளர் க.மோகனரங்கன்:

புதிய வருடத்தில் ஒரு புத்தகத்தை பரிசளிக்க வேண்டுமெனில் என் தேர்வு ‘ பாப்லோ நெரூதா கவிதைகள் ‘ .
ஒரு சமூகஉயிரி என்றவகையில் தீவிரமான அரசியல் பார்வையையும் , தனிமனிதன் என்ற நோக்கில் தன் அகக்கொந்தளிப்புகளையும் தனது கவிதைகளில் நேர்மையாக முன்வைத்த நெருடாவின் கவிதைகள் பரவலான வாசக ஈர்ப்பையும் அதேசமயத்தில் மொழியின் மந்திர மயக்கத்தையும் தன்னில் தக்கவைத்திருப்பவை. படித்து முடித்தபிறகு நினைவில் எதிரொலிக்கும் பலவரிகள் , இக் கவிதைகளை மீளவும் வாசிக்கத் தூண்டும்.

எழுத்தாளர்  வாசுதேவன் :

Professor Borges—A Course on English Literature. 1966ல் தன்னுடைய 67 வயதில் அர்ஜெண்டைனா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைப் பற்றி போர்ஹெஸ் வகுப்பெடுத்துள்ளார். அவர் உரையாடியது மொத்தமாக ஒரு நூலாக சில வருடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது. பல தலைப்புகளில் உரையாடியுள்ளார். கிருஸ்துவ கவிதைகள், இங்கிலாந்தில் கவிதையின் வரலாறு, 5-ம் நூற்றாண்டு ஆங்கிலோ-சாக்ஸன் இலக்கியம் ( அவருக்கு விருப்பமான இந்த தலைப்பில் மட்டும் ஏழு உரைகள்), 18ம் நூற்றாண்டு வரை உலக இலக்கிய வரலாறு, ரொமாண்டிக் காலகட்டத்தில் இலக்கியம், சாமுவல் ஜான்சன், வேர்ட்ஸ்வொர்த், கொலிரிட்ஜ் கவிதைகள், விக்டோரியன் கால இலக்கியங்கள், ராபர்ட் ப்ரொனிங் கவிதைகள், வில்லியம் ப்ளேக், ரொசாட்டி, ஆர்.எல்.ஸ்டிவன்சன் என நம்மை அசரவைக்கிறார். அரிய நூல்களை மேற்கோள் காட்டுகிறார். நூல்கள், ஆளுமைகள் மற்றும் வரலாற்று முக்கிய சம்பவங்கள் பற்றிய அடிக்குறிப்புகள் மட்டும் 33 பக்கங்கள் வருகிறது. மேற்கத்திய ஆங்கில இலக்கியத்தின் வரலாறை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் சீரியஸ் வாசகர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம்….

 

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்:

கவிதைத் தொகுப்பு எனில் பொன்முகலியின் ‘தாழம்பூ‘ (தமிழினி வெளியீடு). மொழி நேர்த்தியும் முற்றிலும் புதிய கவித்துவ நுட்பங்களையும் கொண்ட கவிதைகள்.

நாவல் – குணா கவியழகனின்  ‘கர்ப்ப நிலம்‘. போருக்குப் பிந்தைய ஈழ நாவல்களில் முக்கியமானது.

சிறுகதைத் தொகுப்பு – ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்‘. உழைக்கும் சிறுவர்களின் உலகத்தை வெகு நுட்பமாகச் சொல்லும் கதைகளைக் கொண்டது.

 

எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா:

நண்பர்களுக்கு  இந்த புத்தாண்டில் க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை பரிந்துரை செய்கிறேன்.
காரணம் எப்போதும் க.நா.சு வின் மொழிபெயர்ப்புகள் மற்றும் இலக்கிய விமர்சனங்களை தாண்டி நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டிய அவரின் நாவல்.

 

கவிஞர் தேவேந்திர பூபதி:

இந்த புத்தாண்டில் நான் இரண்டு புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

ஒன்று ஹெர்மன் ஹெஸ்ஸெ எழுதிய ‘சித்தார்த்தன்.’

மற்றொன்று ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு.’

ஒன்று தத்துவம் சார்ந்து என்னை அலைக்கழித்து செல்லும் நாவல். மற்றொன்று வாழ்க்கை பற்றி திரும்ப திரும்ப கேள்விகளை கேட்டு அலைக்கழித்து செல்லும் நாவல்.

 

எழுத்தாளர்  பாதசாரி விஸ்வநாதன்:

கு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பு / காலச்சுவடு /

காரணம் : இந்த வாழ்வை வைத்துக் கொண்டு மனிதன் என்ன செய்வது என்பதை கதை கதையாகச் சொல்கிறார் கு.அ.

எழுத்தாளர் ராஜ சுந்தரராஜன்:

சயந்தன் எழுதிய “ஆதிரை“. ‘தமிழினி’ வெளியீடு.

ஈழப் போராட்டத்தின் எல்லாக் கோணங்களையும் பதிவுசெய்துள்ள நாவல்.

புலிகளைப் பற்றிய உயர்வுநவிற்சி அவ்வளவாக இல்லை. போராளிகளின் துரோக முகங்களும் காட்டப்படுகின்றன. பணமுள்ள தமிழர்களை நாடுபெயர அனுமதித்தல், சுயசாதி அபிமானம் காட்டுதல் முதலியனவும் வெளிப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு பதினைந்து ஆண்டுகால வரலாறு, எதுவும் விலகல் என்று சொல்ல முடியாதபடி, பதியப்பட்டு இருக்கிறது.  ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாசிக்கிற இந்தியத் தமிழர்களுக்கும் தோன்றும் ஒரு குற்ற உணர்வு தவிர்க்க முடியாதது.

எழுத்தாளர் மற்றும் ஒவியர் சீனிவாசன் நடராஜன்:

ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் ஓவிய கலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
ஐரோப்பாவில் துருக்கி குறிப்பிடும்படியான இஸ்லாமிய பண்பாட்டு நிலப்பரப்பு.
கீழைத்தேய நாடுகளான நமக்கு ஐரோப்பிய கலாச்சாரத்திற்கும் பாலமாக கிட்டத்தட்ட இரண்டையும் சமன்படுத்தி பார்க்கும் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல் ஆகவே நான் இதை பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்கிறேன்.
இந்திய மொழிகளில் நேரடியாக எழுதப்பட்ட நாவல்கள் பலவும் இதைத்தாண்டி போயிருக்கலாம்.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் என் பெயர் சிவப்பு மானுடத்தில் அறியப்பட வேண்டிய கலை பண்பாட்டுத் தளத்தை கீழைத்தேய நாடுகளில் நின்று பேசுவதுபோல் அமைந்திருப்பதே என்னுடைய தேர்வுக்கு காரணம்.
தமிழில் மொழிபெயர்ப்பு ஜி.குப்புசாமி

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா :

பரிந்துரைக்கும் நூல் அன்புள்ள ஏவாளுக்கு.

ஆலிஸ் வாக்கர் எழுதி  தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்த இந்த புத்தகத்தை பரிசளிப்பேன். காரணம் கீழே உள்ள  காணொளியில் சொல்லி இருக்கிறேன்.

 

 



கவிஞர் வெய்யில்:

2020 – இந்தப் புது ஆண்டில் என் அன்பிற்குரியவர்களுக்கு நான் பரிசளிக்க விரும்பும் நூல் இது:

கூலித்தமிழ் (கட்டுரைகள்)
மு.நித்யானந்தன்
வெளியீடு: க்ரியா, சென்னை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து இலங்கையின் காப்பித் தோட்டங்களுக்குக் கூலிகளாகச் சென்ற லட்சக்கணக்கான ஏழை மக்களின் பயண அவலத்தை, வேலைக் கொடுமைகளை, அடிமைவாழ்வை, ஆங்கிலேயர்கள் இம்மக்களின்மீது ஏவிய அடக்குமுறைகளை பெரும் சிரத்தையுடன் பல்வேறு தளங்களில்தான் சேகரித்த நூல்கள், நாளிதழ்கள், துண்டுப்பிரசூரங்கள், அகராதிகள், கடிதங்கள், அறிக்கைகள், போன்றவற்றின் ஆதாரங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் நித்யானந்தன்.

இந்தியாவிலிருந்து சென்று, தங்களது நூற்றாண்டுக்காலப் பேருழைப்பால் இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்று, இலங்கையின் குடிமக்களாக மாறிய மலையகத் தமிழர்களின் வரலாற்றில் உருவான முதல் இரண்டு நூல்கள்: ‘கோப்பிக்கிருஷிக் கும்மி’, ‘தமிழ்வழிகாட்டி’. இந்நூல்களின் வழியே நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் குறித்து விரிவாக ஆராய்வதோடு மலையகத்தில் எழுதப்பட்ட முதல் நாவல்களான ‘சுந்தர மீனாள் அல்லது காதலின்வெற்றி’, ‘கண்ணனின்காதலி’ குறித்தும் விரிவாகப் பேசுகிறது கூலித்தமிழ்.

தமிழ்நாட்டில் வறுமை நிலையை பூதாகரமாக்கி அதேசமயம் மலையகக் காப்பித்தோட்டங்களில் செல்வ வளம் கொழிப்பதாகச் செய்யப்பட்ட உளவியல் பிரச்சாரங்கள், கடல் பயணங்களில், தரைவழிப் பயணங்களில் மக்கள் அனுபவித்த கொடுமைகள், பலியான உயிர்கள், அக்காலகட்டத்தில் இவ்வுண்மை சார்ந்து எழுந்த எதிர்க்குரல்கள், அவர்கள்மீதான அடக்குமுறைகள் போன்ற அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது நூல்.

1869-ல் ஆபிரகாம் ஜோசப் எழுதிய ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ என்ற நூல் காப்பித் தோட்டங்களில் பயிர் செய்யும் முறையை விவரிக்கும் கும்மிப்பாடல் நூல்தான் என்றாலும், அந்தநூலில் தொனிக்கும் பிரச்சாரக்குரல், வேலைகள் சார்ந்த விவரிப்புகள், மதம் தொடர்பான அறிவுரைகள் என அது அந்த மக்களிடம் செயலாற்றியிருக்கும் பங்கை நூலாசிரியர் பல்வேறு காலகட்டத் தரவுகளோடும் அரசியல் சூழல்களோடும் பொருத்தி, விமர்சன ரீதியிலான பார்வையை முன்வைக்கிறார்.

1877-ல் அதே ஜோசப்பால் எழுதப்பட்ட ‘தமிழ்வழிகாட்டி’ என்ற நூல், கூலிகள் பேசுகின்ற ‘கூலித்தமிழ்’ மொழியை ஆங்கிலத் துரைமார்கள் கற்றறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆங்கிலம் வழி தமிழ் போதினியான இந்த நூலில், கூலிகளை அழைப்பதற்கு, கட்டளையிடுவதற்கு, தண்டனை தருவதற்கு, கூலி தருவதற்கு / மறுப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள், கூலிகளுக்கும் மேனேஜர்களுக்கும் / கூலிகளுக்கும் துரைமார்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் என நிறைய பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவ்வுரையாடலின் வழியாக தொழிலாளர்களின் அடிமை நிலையை, ஆங்கிலேயர்களின் எதேட்சதிகார மனநிலையை அவர்களிடம் நிலவிய மத, பொருளாதார, அதிகாரங்களை நாம் புரிந்துகொள்வதற்கு அந்த நூலில் உள்ள தடயங்களைத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.

மிக ஆழமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. மலையகத் தமிழர்களின் வரலாற்று வேர்களை, அவர்களது ஆரம்பகால இலக்கிய முயற்சிகளை அறிய விரும்பும் ஒருவருக்கு ‘கூலித்தமிழ்’ துயரையும் மகிழ்ச்சியையும் ஆச்சரியங்களையும் ஒருசேர தரும்!


கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்:

குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்

பொதுவாக, நாம் இன்று வாழ்வதைப் போலத்தான் வரலாறு முழுக்கவே வாழ்ந்திருக்கிறோம் என்பதைப் போன்ற மனச்சித்திரம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஆனால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனின் பரிணாமம் மேலிருந்து கீழே அருளப்பட்டது அல்ல. கீழிலிருந்து மேலே செல்லும் வளர்ச்சிப்பாதை உடையது. ஆதி கால மானுட வாழ்வு எத்தகையது, குடும்பம் எனும் மீச்சிறு சமூக அளவு எப்போது, எப்படி உருவானது, அரசு என்ற கருத்தாக்கத்தின் பரிணாமம் என்ன? இன்றைய முதலாளித்துவ சமூகம் எப்படி இந்த வளர்ச்சி நிலைக்கு வந்து சேர்ந்தது என்பதை, மார்க்சிய பொருள் முதவாதப் பார்வையோடு முன்வைக்கும் முக்கியமான நூல்.

பொறுப்புணர்வுள்ள சிவிக் சமூகம் ஒன்றை நோக்கிச் செல்ல மனிதர் கடந்துவந்த பாதை அறிய வேண்டியது அவசியம். அந்த வகையில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான சமூகவியல் ஆவணம் இந்நூல். புதிய வாசக தலைமுறைக்கான புது மொழி பெயர்ப்பு ஒன்றையும் இந்த நூல் இப்போது கோரி நிற்கிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.

கவிஞர் கதிர்பாரதி:

என்னுடைய புத்தகப் பரிந்துரை : ‘நீலகண்டப் பறவையைத் தேடி‘ – அதீன் பந்த்யோபாத்யாய.

கற்பனாவாத எழுத்துமுறையின் முக்கியமான இந்திய நாவல். தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார்.
மனதின் நீட்சி எதுவோ அதுவே கனவின் நீட்சி. மாற்றியும்கூட புரிந்துகொள்ள இதில் இடம் இருக்கிறது… கனவின் நீட்சி உக்கிரம் எதுவோ அதுவே மனதின் நீட்சி. இதுவே நாவல் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அகச்சரடு. பிரிக்கப்படாத இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது லீக் கட்சி, பாக். பிரிவிரினையை முன்வைக்க நிர்பந்திக்கப்பட்ட காலத்தில் நடக்கிற கதை. இந்த நாவல் தமிழக நிலவியலுக்கு மிகவும் நெருக்கமானது. படைப்பு மனநிலையைப் புதுப்பிக்க அல்லது தக்கவைக்க இந்த நாவல் எனக்கு பேருதவியாக இருக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரமான மணீந்திர நாத் போன்ற ஒரு மனிதர் எங்கள் ஊரில் இருந்தார். மேற்கு சூரியனை ஒருநாள் அவர் சொன்னார்… சோபிதமாகப் பேசும் சூரியன் என்று. அந்தியைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு அவரும் மணீந்திர நாத்தும் நினைவுக்கு வருவார்கள். மனித மனதின் மாயத்தன்மை மீது பயணிக்கிற இந்நாவலை வாசிப்புக்குள் நுழைபவர்கள் தவறவிடக்கூடாது எனப் பரிந்துரைக்கிறேன்.

 

கவிஞர் ஜான் சுந்தர்:
அசாத்தியக்கலைஞர் கண்மணி குணசேகரன் அவர்களின் ‘பூரணிபொற்கலை‘ புத்தகத்தையே நான் கொடுப்பேன்.
ஊர் எல்லையில் அமர்ந்திருக்கும் காவல்தெய்வங்களைஎழுப்பி நடமாட வைத்திருக்கும் அந்த புத்தகத்திற்குள் அவ்வளவு புதையல் !
வேடப்பனும், கறுப்பும், குதிரையும், யானையும், துறிஞ்சிமரமும்
புளியமரத்தில் குடியிருக்கும் அமானுடப் பாத்திரங்களும் உங்களை விட்டுவிடும். உங்களால்தான் அவற்றை விடவே முடியாது.

 

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்:

புத்தாண்டு நாளில் ஒரு ரஷ்ய மாஸ்டர் – தஸ்தவ்யெஸ்கியின் சூதாடி

தஸ்தவ்யெஸ்கி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக வாழ்வின் மிகப் பெரிய சிக்கல்களைத் தன் நாவல்களில் அலசுவது வழக்கம்.

இந்த நாவலின் மையப் புள்ளி சூதாட்டம் என்ற செயல் என்று தோன்றினாலும், தஸ்தவ்யெஸ்கியின் பார்வைக் குவிப்பு மொத்தமும் இந்நாவலில் பணம் உருவாக்கும் அடிமைத்தனத்தின் மீதும் அது மனித உறவுகள்மீது கொண்டுள்ள தாக்கத்தைச் சுற்றியே இருக்கிறது.

பாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து மனிதர்களை மீட்க மீட்பர் ஒருவர் வருவார் என்பது கிறித்துவ சித்தாந்தம். ஆனால் இந்த நாவலில் வரும் அத்தைக் கிழவி போலி மீட்பராகிறாள். பணமிருந்தும் ஜெனரலின் குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்க மறுக்கிறாள். தானே சூதாடி அடிமையுமாகிறாள்.

மாறாக சூதாடியாக மாறும் அலெக்ஸெய்யே போலினாவுக்கும் (ஒரு வகையில் ஜெனரலுக்கும்), ப்ளான்ச்சுக்கும் மீட்பராகிறான். ஆனால் பாவத்திற்கு எப்போதும் அப்பாலிருந்த கிறிஸ்து போல் அல்லாமல் அவனே அடிமையாகிறான். தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களின் வரும் பல பாத்திரங்களைப்போலவே (உதாரணத்திற்கு மிஷ்கின்) அலெக்ஸெய்யும் ஒரு வகையில் அசடனான, குறையுள்ள மீட்பன்.

அதனால் அவன் போலினாவுக்கும், ப்ளான்ச்சுக்கும் தந்த மீட்பு போலியானதாகுமா என்பது கேள்வி.

‘சூதாடி’ சின்ன நாவல் என்றாலும் காத்திரமானது. தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் வரும் பல முக்கிய அலசல்களை உள்ளடக்கியது.

 எழுத்தாளர் காலபைரவன்:
இந்த புத்தாண்டில் யாருக்காவது ஒரே ஒரு புத்தகத்தை பரிசீலிப்பதாக இருந்தால் தாராசங்கர் பந்தோபாத்யாயா எழுதிய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவலை பரிசளிப்பேன்.
காரணம், அந்த நாவல் இந்திய தன்மையை அதன் வேர்களின் ஊடாக சென்று எழுதப்பட்ட நாவல். மேலும் ஜீவன் மஷாய் எனும் நாவலின் முதன்மையான பாத்திரத்தை எவராலும் சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது. இந்த நாவலின் அடிநாதம் நவீன அறிவியலுக்கும் மரபார்ந்த மருத்துவ முறைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையே பேசுகிறது. நவீனம் என்ற பெயரால் அனைத்தையுமே வியாபாரமாக்கி வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மரபின் பிடியை இறுகப் பற்றியிருக்கும் இந்த நாவலையே நான் பரிசளிக்க விரும்புகிறேன்.

எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன்:
புதிய வருடத்தில் நான் ஒருவருக்கு பரிசளிக்க விரும்பும் புத்தகம்.

இலக்கியத்துக்குள் புதிதாக நுழையும் யாருக்கும் நான் பரிந்துரைக்கும் நூல் எஸ்ராவின் கதாவிலாசம்.

ஐம்பது எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் ஒரே தொகுப்பில். வாழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவங்களோடு ஒரு கதையை தொடர்புபடுத்தி அதன் வழியாக ஒவ்வொரு எழுத்தாளரையும் எஸ்ரா அறிமுகம் செய்திருப்பார். இலக்கியமெனும் மாபெரும் கனவின் கதவுகள் எனக்கு இந்நூலின் வழியாகவே திறந்தன. ஆகவே புதிதாக வாசிக்கும் எவருக்கும் நான் கதாவிலாசத்தையே பரிசளிப்பேன்.

 கவிஞர் தி.பரமேசுவரி :

ம.பொ.சி எழுதிய ‘எனது போராட்டம்‘ எனும் நூலைப் பரிந்துரைப்பேன். இன்றைய தமிழகம் எப்படி உருவானது என்பதையே அறியாதவொரு தலைமுறை உருவாகி அரசியல் பேசும் சூழலில் எனது போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நூலாக நிலைக்கிறது. கல்வி பெற முடியாத வறுமைச்சூழலைக் கடந்து தன்முயற்சியால் கற்ற ஒருவர், அரசியல்திறத்துடன் இலக்கிய மொழியில் எழுதிய நூலிது. முக்கியமான தன்வரலாற்று நூல் மட்டுமல்லாது விடுதலைப் போராட்ட காலத்தையும் அதற்குப் பிறகான எல்லைப் போராட்ட வரலாற்றையும் வெளிப்படுத்தும் நூல். இன்றைய தமிழ்த்தேசீய எழுச்சிச் சூழலில், ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

 

எழுத்தாளர் கே.என்.செந்தில்:

குற்றமும் தண்டனையும் – பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

துப்பறியும் நாவலின் கச்சாப்பொருளான கொலையை முன்னிட்டு இந்நாவல் குற்றத்தையும் குற்றவாளியையும் உள்ளோக்கி சென்று ஆராய்கிறது. மலினமானத் தந்திரங்களின் வழியாக வாசகரை ’கட்டிப்போடுவதற்கான’ எவ்வித உபாயங்களையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நாவலாசிரியர் எங்குமே கையாளவில்லை என்பதாலேயே இப்படைப்பு வெகுசனப்பிரதியின் தன்மையிலிருந்து தன்னைத் துண்டிந்துக் கொண்டு பெரும் இலக்கியப்பிரதியாக வாசகர் முன் எழுகிறது.

பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இந்நாவலை வாசித்த பொழுதை இப்போதும் துல்லியமாக நினைவு கூறமுடிகிறது. ரஸ்கோல்நிகோவ் என்னும் முதன்மை பாத்திரம் வட்டிக்கடைக் கிழவியை கொன்றுவிட்டு அடையும் குற்ற உணர்ச்சியும் அவனுள் நிகழும் நியாய- அநியாய மோதல்களும் தனிமையில் அவன் காணும் உருவெளித் தோற்றங்களும் அலைபாய்தல்களின் துயரங்களையும் கண்டு கிட்டத்தட்ட மனக்கொந்தளிப்புக்கு ஆளானேன். குற்றம் அது சிறிதோ பெரிதோ மனிதர்களுள் நிகழ்த்தும் அகப்போராட்டங்களை பதற்றங்களை கட்டுப்பாடுகளை மீறி மனம் செல்லும் இடங்களை அஞ்சும்படியாக எவ்வாறு இப்படி இந்தச் ’சூதாடி தாடிக்காரன்’ காட்டுகிறான் என்ற வியப்பு நாவலின் பக்கங்கள் முன்னேற முன்னேற அதிகமானபடியே தான் இருந்தது. குறிப்பிடத்தக்க ஆனால் குறைந்த அளவிலான பாத்திரங்களை வைத்துக் கொண்டு அக இருளை பேசுவதன் மூலமும் நாடகீயத் தருணங்களுக்குள் அவர்களை நிறுத்தி உரையாடச் செய்வதன் மூலமும் பெரிய நாவலை எழுதிவிட முடியும் என முதன்முறையாக தாஸ்தவெஸ்கியின் மூலமே அறிந்தேன். கிளைப்பாத்திரங்களில் முழுமை உள்ளது என்ற போதும் அவர்களுக்கான பிரத்யேக வாழ்க்கைப் பின்னணிகள் – தல்ஸ்தோய் போல- தாஸ்தவெஸ்கியால் சொல்லப்படுவதில்லை.


இவரது பிற நாவல்களில் உள்ளது போல காதலின் நாடகீயச் சம்பவங்கள், தனக்கு மட்டுமே உரிமை(possessiveness) கொண்டாடுவதன் வழி ஏற்படும் பழிதூற்றல்கள்,வலிகள். அவர்களுள் நிகழும் மாறாட்டங்கள் இந்நாவலில் இல்லை. ( அசடன் : மிஷ்கின் – நாஸ்டாலியா பிலிப்போவ்னா- அக்லேயே ; கரமஸோவ் சகோதர்கள் : திமித்ரி கரம்ஸோவ் – குருஷென்கா- காத்ரினா இவானோவ்னா). மாறாக அன்பின் சுடராக வரும் சோனியா – ரஸ்கோல்னிகோவ் இடையில் காதலின் தத்தளிப்புகள், சிறிய அளவினான பரஸ்பர காயப்படுத்தல்கள் உள்ளன. குற்றத்தின் மனவிடுதலை தண்டனையை ஏற்பதிலேயே உள்ளது என்ற சோனியாவின் சொற்களுக்குப் பணிந்து நாயகன் சைபீரியச் சிறைக்குச் செல்கிறான். (’புத்துயிர்ப்பி’ல் மாஸ்லவாவுக்கு தன் இழைத்த பாவத்திற்காக சைபீரியச் சிறையை பின் தொடரும் அதன் நாயகன் நினைவுக்கு வருகிறான் அல்லவா?)
குற்றமும் அது நடந்த இடம் அங்கிருந்த மனிதர்கள் , சாட்சிகள், விசாரணைகள் , போலீஸ் அதிகாரிக்கும் ரஸ்கோல்னிகோவ்க்கும் இடையே ‘கொலை’யை முன் வைத்து நிகழும் பேச்சுகள் அவனது சஞ்சலங்கள் என அந்ததந்த துறைகளுக்குரியவர்களுக்கான மிகப்பெரிய கையேடாக இன்றளவும் இந்நாவல் விளங்கிவருவதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.


இந்நாவலை வாசித்த பாதிப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் மறுவாசிப்பு செய்த போதும் இந்நாவல் அளித்த அனுபவம் முந்தையதற்குச் சற்றும் குறைந்திருக்கவில்லை. குறிப்பாக ஸ்க்டியானோவின் கனவை வேறு சிலவற்றையெல்லாம் புதிதாகக் கண்டடைந்தேன். அந்த வாசிப்பின் நினைவிலிருந்தே இவ்வளவையும் எழுதியிருக்கிறேன்.
தஸ்தாவெஸ்கியின் பேரிலயக்கங்களுள் ஒன்றான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையே இந்த புத்தாண்டுக்கு உவகையுடன் பரிசளிக்க விரும்புவேன்.

எழுத்தாளர் கே. என். சிவராமன்:

வாசுதேவன் எழுதியிருக்கும் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’.

நீங்கள் ஆரம்பநிலை வாசகர் என்றால், இந்த நூல் உங்களை மாபெரும் பிரபஞ்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே லத்தீன் அமெரிக்க எழுத்துகளுடன் பரீட்சயம் கொண்டவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் அடைப்பட்டிருக்கும் கதவுகளை இப்புத்தகம் திறக்கும்.

கொர்த்தஸாரின் படைப்புகளை ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் இருக்கும் முடிச்சுகளை இப்புத்தகம் அவிழ்க்கும்.

ஆம். அந்தளவுக்கு ஹைப்பர் லிங்க் ஆக இந்த அறிமுக நூலை எழுதியிருக்கிறார். ஒன்றைத் தொட்டு மற்றொன்று… அதிலிருந்து பிறிதொன்று… என இந்தத் தனி மரம் மாபெரும் வனமாக காட்சியளிக்கிறது. மொத்தத்தில் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’ நூல், இன்றைய தமிழ்ச் சிறுபத்திரிகை கலைஞர்களுக்கான அரசியல் ஆயுதம்!

இந்த அறிமுக வரிசையை வாசுதேவன் தொடர வேண்டும். தொடர்ந்து வெப்பன் சப்ளை செய்து ஆயுத வியாபாரியாக கோலோச்ச வேண்டும்!

‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’
வாசுதேவன்
பக்கங்கள்: 156
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.200/-

இந்நூல் குறித்து விரிவான பதிவு வாசிக்க Click Here

எழுத்தாளர் அகர முதல்வன் :

தமிழ் மொழியின் சந்தத்தை தனது கவிதைகளில் சந்நதமாய் ஆக்கிவரும் வெய்யிலின் கவிமொழி சமகாலத்தில் ஏற்படுத்தியிருக்கும் வாசக அலையை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அவரின் கவிதைகளில் உருவாக்கப்படும் காட்சிகள் தொன்மத்தின் ஆணிவேரிலிருந்து வெளிக்கிளம்பி மண்ணின் பிடிமானத்தோடு எழுந்து நிற்கிறது. தமிழ் மொழி கண்டிருக்கும் அசாதாரண கவிதைகளை கொண்டிருக்கும் அக்காளின் எலும்புகள் எனும் வெயிலின் கவிதை நூலை இதுவரைக்கும் நிறையப் பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்.அதுபோலவே கனலி இணையத்தளத்தின் வாயிலாகவும் அதனை செய்ய விளைகிறேன். நன்றி

 

கவிஞர் ச.துரை:

என் பரிந்துரை  கிழவனும் கடலும்.

வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகிற போது இந்த நூலை எடுத்துக்கொள்வேன்.
பிறருக்கு இந்த நூலை பரிந்துரைபதற்கு  முன் இந்நூல் எனக்கு பரிந்துரைக்கபட்ட சம்பவத்தை கூற நினைக்கிறேன். எனக்கு கிழவனும் கடலும் நூலை பரிந்துரைத்த நபர் எழுபது வயது மலையாளி. அவரும் அவரது மனைவியும் தற்கொலை செய்ய இராமேஸ்வரம் வந்திருக்கிறார்கள். துர்தஷ்டவசமாக அவர் மனைவி இறக்க இவர் பிழைத்துக் கொள்கிறார். சிகிச்சைகாக மருத்துவமனையில் இருந்த அவர் அருகில் புத்தகங்களோடு இருந்த  என்னை அழைத்து கிழவனும் கடலும் வாசிச்சுருக்கியா என கேட்டார். நான் இல்லை என்றேன். சாவில் இருந்து மீண்டு  கத்தி கிழித்த கழுத்தின் கட்டுகளோடு  பலமற்று போன நம்பிக்கையிழந்த குரலின் கரகரப்பில் சொன்னார். கண்டிப்பா வாசி அதில் வருகிற கிழவன் நான்தான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது மனைவி இறந்த சுவடு இன்னும் அழியவில்லை. சுற்றி நான்கைந்து காவல் அதிகாரிகள்  அவரை தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என அறிவுறுத்த வந்த தேவாலய கன்னியாஸ்திரி இருவர் என சூழ்ந்திருந்த  அந்த கூட்டத்திற்கு நடுவே இந்நூலை பரிந்துரைக்க என்ன அவசியமிருந்திட போகிறது. வீட்டுக்கு திரும்பிய உடனே வாங்கி வாசித்தேன். அவர் சொன்னது போலவே அந்த கிழவன் அவர்தான்.

எல்லோராலும் இனி தேவையற்றவனாக நிராகரிக்கப்பட்ட பணி ஓய்வு பெற்றவர். தனித்து தன்னை நிரூபிக்க முயன்று தோற்று சலித்துப்போனவர்.


அவர் என்னிடம் சொன்னார். அந்த கதையில் வருகிற கிழவன் அந்த மீனோடு போராடுவான். அது மாதிரிதான் எனது மரணத்தோடு நிதானமாக இனி போராட போகிறேன். அந்த வார்த்தைகள் இந்நூலின் வாசிப்பிற்கு பிறகே
புரிந்தது. அடிக்கடி இச்சம்பவத்தையும் நூலையும் பொறுத்திப் பார்ப்பேன். எதுவுமற்று போவதற்கும் தோற்று போவதற்கும் நிராகரிப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் நிதானம் தேவைப்படுகிறது . தன்னோடான  உரையாடல் தன்னை  நம்பிக்கையுள்ளவனாக மாற்றுகிறது. அதை தத்துவங்களும் நூலும் அனுபவங்களும் கற்றுக் கொடுப்பது மாதிரியே சதைகளை இழந்து வெறும்  எலும்பாய் கரைகண்ட மீனும் கற்றுக்கொடுகிறது.

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்.:

நண்பர் சுரேஷ் பிரதீப்புக்கு ஜஸ்டின் கார்டனரின் சோபியின் உலகம் நாவலை இந்த புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்.
நாவலை ஆங்கிலத்தில் வாசித்து சில ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அதன் மீதான பிரமிப்பு நீங்கவில்லை. வடிவம் உள்ளடக்கம் என இரண்டும் கச்சிதமாக ஒத்திசைந்த நாவல். மேற்கின் மெய்யியல் மரபை பதின்மர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் எனும் குறிப்பு இப்போதும் திகைப்பைதான் அளிக்கிறது. இதை சுரேஷுக்கு பரிந்துரை செய்ய காரணமும் உண்டு. வலுவான அபுனைவு வாசிப்புடையவர். இந்த நாவல் அபுனைவை எப்படி புனைவாக ஆக்கியது எனும் செய்நேர்த்தி அவருக்கு சுவாரசியமளிக்கும் என நம்புகிறேன்.

 

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்:

பின்நவீனத்துவ வாதியின் மனைவி. சுரேஷ்குமார இந்திரஜித் 2017 வரை எழுதிய கதைகளில் இருந்து இருபத்தைந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுனில் கிருஷ்ணனால் தொகுக்கப்பட்ட நூல். இந்த நூலை நான் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதன் “பிரபலமின்மை” தான். வாசகர்களிடம் சென்று சேராத ஒரு நூலினை கவனப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நண்பர்களுடன் சிறுகதைகள் குறித்து பேசும்போது நுண்ணிய சுவைகளை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே தெரியக்கூடிய நுட்பங்களை கொண்டிருக்கும் சிறுகதைகளை யாரும் அதிகம் வாசிப்பதில்லை அல்லது வாசித்தாலும் அது குறித்து உரையாடுவதில்லை என்பதை உணர்கிறேன். அத்தகைய உரையாடலை சாத்தியப்படுத்தும் நூலாக இத்தொகுப்பு இருக்கும்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகத்தை அவரது சிறந்த கதைகளில் ஒன்றின் தலைப்பைக் கொண்டு வரையறுத்துவிடலாம். மாபெரும் சூதாட்டம். அவரது எழுத்துமுறை அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடையும் தன்மையிலானது அல்ல. சிறுகதையாக வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை தன்னகத்தே கொண்டிருப்பவையும் அல்ல. கதைத்தளத்தில் இருந்து சற்று விலகினாலும் ஒரு சாதாரண சித்தரிப்பாக மட்டுமே நின்றுவிடக்கூடியவை. ஆனால் இந்திரஜித் தொடர்ந்து இந்த சூதாட்டத்தை தன் கதைகளில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார். அத்தகைய ஆட்டங்களில் அதிகபட்ச வெற்றிகளை பெற்றவற்றின் தொகுப்பாக பின்நவீனத்துவவாதியினை அடையாளப்படுத்தலாம். ஆசிரியருடனான ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு சுனில் கிருஷ்ணனால் இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறுகதை எழுதுதல் அதன் வளமான சிறுகதை மரபின் காரணமாகவே மிகச் சவாலான ஒரு செயலாகி இருக்கிறது. இத்தகைய சூழலில் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசகனுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுப்பது என்பது மிக அரிதாகவே நிகழக்கூடியது. அவ்வகையில் பின் நவீனத்துவவாதியின் மனைவி தொகுப்பினை வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன்:

ஜெயமோகனின் “புறப்பாடு” புத்தகம் எப்போதும் என் அகத்துக்கு நெருக்கமானது. யாருக்காவது புத்தகம் பரிசளிக்கத் தோன்றினால் என் முதல் தெரிவாக எப்போதும் இருப்பது. வெறுமே பயணக் கட்டுரைகள் என்று ஒதுக்கிவிட முடியாதது. ஜெயமோகன் தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அலைந்த போது சந்தித்த அலைக்கழிப்பை சொல்கிறார். அகமும் புறமும் ஒன்றாக முயங்கி ஒரு நாவலுக்கான விரிவை அடைகிறது. இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரம் பண்பாடுகளை, அதன் முரண் இயக்கங்களை, அதன் இடையே இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டையும் தருணங்கள் அனுபவங்களாக விரிகின்றன. தனியே ஒரு மனிதனின் சொந்த அனுபவங்களாக மட்டுமாக இவை தோன்றுவதில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளை வெவ்வேறு அனுபவங்களில் பெற்று அதன் தீர்வை ஒரு மனத்திற்கான அக விடுதலையாக அணுக முனைகிறது. நீங்களும் நானும் வாழ்கையில் சந்தித்த பல்வேறு அகப்போராட்டங்களை இதில் பார்த்துத் திடுக்கிட முடியும். நம்மால் வசப்படாத தீர்வை இதில் வாசித்துக் கண்டடைந்து ஒரு நிறைவை அடையலாம்.

எழுத்தாளர் ஆத்மார்த்தி:

மதுரையின் அரசியல் வரலாறு 1868

ஜே.ஹெச் நெல்சன் எழுதிய நூல். தமிழில் வழக்கறிஞர் ச.சரவணன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. மதுரை எப்போதும் அணையாத அடுப்புகளையும் விளக்குகளையும் கொண்ட நகரம். அதன் வரலாறு நெடியது. எழுநூறாண்டு கால சரித்திரத்தின் விள்ளல்களை சம்பவத் தொடர்ச்சிகளின் மூலமாக விவரிப்பதன் மூலமாக மனதில் பதியனிட்டபடி செல்கிறது இந்த நூல். சரிவரச் சொல்லப்படுகையில் யாதொரு புனைவுமின்றி நேரடியான வரலாறு புனைவுக்குச் சற்றும் குறைவற்ற சுவையுடனான வாசக அனுபவத்தை நிகழ்த்த வல்லது என்பதை இந்த நூல் இன்னொரு முறை மெய்ப்பிக்கிறது.இறந்த காலத்தைத் திறந்து பார்ப்பது ஒருவகையில் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கதையறிவதைப் போலத் தான். நுட்பமும் ஆழமும் ஒருங்கே சாத்தியமாகிற தரிசனம் இந்த நூல் வாசிப்பின் வழி அறிவதன் மீதான காதல் கொண்ட யாவர்க்கும் இந்த நூலைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
சந்தியா பதிப்பக வெளியீடு முதற்பதிப்பு 2019 விலை ரூ 360/-

கவிஞர் மனுஷி:

கனலி முன்னெடுக்கும் இந்த வாசிப்பு செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.


பொதுவாக யாருக்கேனும் ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினால் குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்) அல்லது ஜன்னலில் ஒரு சிறுமி ( ஜப்பானிய நாவல்) இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் முதலில் தேர்வு செய்வேன். வாசிக்கப் பரிந்துரைப்பதாக இருந்தாலும் எனது தேர்வில் முதலில் வந்து நிற்கும் நூல்கள் இவை இரண்டு தான்.


இந்த முறை புதிதாக ஒரு புத்தகத்தைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். பரிசல் வெளியீடாக வந்துள்ள “மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்” என்ற கொரிய மொழிக் கவிதைத் தொகுப்பைத்தான்.

பா. இரவிக்குமார் – ப. கல்பனா இருவரது கூட்டு முயற்சியில் வெளிவந்துள்ள இந்நூலைப் பரிந்துரைக்க இரண்டு காரணங்கள். ஒன்று, கவிதைகள் தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானதாக, வேறொரு பண்பாட்டை, வேறொரு நிலம் சார்ந்த கவிதைகளை வாசிக்கிறோம் எனும் அந்நியத்தன்மை அற்று, வாசிக்கின்ற வாசகர்கள் இக்கவிதைகளோடு இயல்பாக ஒன்றிப் பயணிக்கின்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பு. இயற்கையும் மனித மன உணர்வுகளும் பாசாங்குத்தன்மை அற்று, ஆன்மாவோடு நெருங்கி உரையாடுகின்றன இக்கவிதைகள்.
இரண்டாவது, தமிழ் நாட்டுக்கும் கொரியாவுக்கும் இடையில் வாழ்க்கை முறையில் நிறைய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கொரிய நாட்டுக் கலாச்சாரம், மொழி, அரசியல், கலை, வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்கவிதைகள் ஒரு கவிதைப்பாலமாக இருந்து செயல்படுகிறது.


தமிழில் கொரியக் கவிதைகள் இத்தொகுப்பில் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆகிறது.
இத்தொகுப்பை வாசிக்கையில் எல்லா கவிதைகளும் இல்லை என்றாலும் சுமார் இருபது கவிதைகளாவது நமது வாழ்வனுபவத்தோடு இழையோடுவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எழுத்தாளர் தமிழ்நதி:

இவ்வாண்டு நான் வாசித்த நூல்களுள் என்னை அதிகமும் சிந்திக்க வைத்த நூலென்றால், வரலாற்றறிஞரும் பேராசிரியருமாகிய யுவால் நோவா ஹராரியால் எழுதப்பட்ட ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ஐக் குறிப்பிட முடியும். மூலமொழி: ஹீப்ரு. இந்நூல், நாகலட்சுமி சண்முகம் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார். பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிகேசன்ஸ். உலகெங்கிலும் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் தோன்றியது தொட்டு- அறிவுப் புரட்சி, வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி என இன்றுவரையிலான மனிதகுல வரலாற்றின் குறுக்குவெட்டுப் பார்வையாக இந்நூலைக் கொள்ளமுடியும். ஆரம்பத்தில் பிற உயிரினங்களிலிருந்து தன்னைப் பிரித்தறிய முடியாத மற்றொரு உயிரினமாயிருந்தது, இரண்டு கால்களில் எழுந்து நின்று ‘மனிதனாகி’ பிற உயிர்களின்மீது மேலாதிக்கம் செலுத்துமளவு பரிணாம வளர்ச்சி அடைந்ததும், அந்த மேலாதிக்கமானது இயற்கைச் சமநிலையை எவ்வாறு குலைத்ததென்பதும் இந்நூலில் அறிவுபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

இந்நூலை வாசித்து முடித்ததும், ‘மனிதன்’என்ற சொல்லுக்கு நமது மனங்களில் என்னவொரு பொருளை வரித்திருக்கிறோமோ அதுவொரு கற்பனை என்றாகிவிடுகிறது. உலகிலேயே கொடிய விலங்கு மனிதன் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இதன்பொருள், மனிதகுலம் குகைவாசிகளாக நீடித்திருக்கவேண்டுமென்றில்லை. ஆனால், ‘ஆறறிவின் துணைகொண்டு இதர உயிரினங்களது உரிமைகளைப் பறிக்கிறவனது, இயற்கையைச் சீரழிக்கிறவனது அகராதியில் ஜனநாயகம், அன்பு, கருணை இன்னபிற சொற்களுக்கு என்ன அர்த்தமிருக்கமுடியும்?’ என்ற கேள்வி எழுகிறது.

உணவுச் சங்கிலியின் உச்சத்தில் நிற்கிற மனிதன், ஏனைய உயிரினங்களைப் போல இருப்புசார் நியாயங்களோடு இயங்கவில்லை; பிற உயிரினங்களின் வாழ்விடங்களைச் சீரழிப்பது, மிருகவதை செய்வது, சுற்றுச்சூழலைச் சிதைப்பதன் மூலம் இதர ஜீவராசிகளை ஒழித்துக்கட்டுவது, பூமி மாசடைதல், வெப்பமடைதல் இன்னபிறவற்றுக்குக் காரணமாவது என எல்லைமீறிச் சென்றுகொண்டிருக்கிறான் ஆகியன பற்றி இந்நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

இதற்கு மறுவளமாக, அறிவியல் ரீதியான வளர்ச்சி எவ்வாறு மனிதகுலத்தை நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது, நேரத்தை மீதப்படுத்துகிறது, தனிமனித விடுதலையை ஊக்குவிக்கிறது இன்னபிற எண்ணற்ற சாதகங்களைப் பற்றியும் பேசுகிறது.

அரசியல், உளவியல், அறிவியல், பொருளாதாரம், இயற்பியல் என பல்வேறுபட்ட பார்வைகளை உள்ளடக்கிய ‘சேப்பியன்ஸ்’அவசியம் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

 எழுத்தாளர் லதா அருணாச்சலம்:

எழுத்தாளர் பிரியா விஜயராகவன் எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள் என்னும் நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். இது நாவல் என்னும் வரையறைக்குட்பட்ட வடிவத்திலிருந்து சற்றே மாறுபட்டது. புனைவுடன் கலந்த auto fiction வகையை சார்ந்தது . இந்த நாவலின் கதாபாத்திரமான டாக்டர் அஞ்சனா தனது பால்யத்திலிருந்து , தற்கால வாழ்க்கை வரை தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை வாசகர்களுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது கதை. அதனூடாக , சிதம்பரம் மருத்துவக் கல்லூரி, சிஷல்ஸ் தீவு, மொரீஷியஸ், கென்யா ,லண்டன் மாநகர் எனப் பல்வேறு களங்களில் பயணிக்கிறது கதை .அதனூடாக அஞ்சானவின் வாழ்வில் நிகழும் சம்பவங்களும், சந்திக்கும் மனிதர்களும் புனைவில் விரிகிறது .மனிதர்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் பூடகமான உணர்வுகளை, எண்ணங்களை , வக்கிரங்களை எந்தவிதமான பூச்சுகளுமின்றி நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள் இவர் நமக்கு அறிமுகம் செய்யும் மாந்தர்கள். எங்கோ ஒரு தீவில், கடற்கரையில்
தொன்மை வாய்ந்த கல்லறைகளின் நடுவே அமர்ந்து அங்கு தனது மூதாதையர்களின் வேர்களைத் தேடும் பதிவுகளாகவும், உலகெங்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களையும் அதிலிருந்து மீண்டு வந்து பெண்களின் healing process போன்ற வாழ்க்கையையும் பதிவு செய்யும் எழுத்தாளர் சொந்த நாட்டில் , எத்தனை படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் அடையாளங்கள் இன்னமும் சாதியின் அடிப்படையிலேயே உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஒற்றைக் கருதுகோளில் சுற்றாமல் , நாவல் முழுவதும் தனிமனித இழப்புகள், அதன் தாக்கங்களால் விஞ்சி நிற்கும் உணர்வுகள், உலகெங்கும் இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் அன்பின் இறைஞ்சல் , பிழைத்தலின் பொருட்டு செய்யப் படும் சமரசங்கள் , காதலின் பல நிலைகள் எனப் பலப் பல கோணங்களில் நிரம்பியிருக்கிறது இந்த நாவல்.


இதன் மற்றொரு முக்கிய அம்சமாக, மருத்துவக் குறிப்புகள் மூலம் உடல் என்பது வெறும் பை என்னும் நிச்சயமான உண்மையை வலுவாக்கி இருக்கிறார். எழுத்தாளர் மருத்துவராக இருப்பதால் இந்தத் தரவுகள் சிக்கலின்றி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது . மீண்டும் ஒரு அற்புத விஷயத்தை நான் சொல்லாமல் இருக்க முடியாது.. எழுத்தாளர் பிரியாவின் வாசிப்புலகம்.. பல புத்தகங்களிலிருந்து எடுத்தாளப் பட்ட மேற்கோள்களும் , அதன் தொடர்பான செய்திகளும் வாசகர்களை பரந்த வாசிப்புத் தேடலுக்கு இட்டுச் செல்கின்றன.
புதிய வடிவம், கடும் மொழியாக்கத்திற்கு ஆட்படாமல் இயல்பாகப் பொருந்தும் ஆங்கிலச் சொற்கள் மற்றும் அதன் இலகுவான வாசிப்புத் தன்மை..


அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து சொல்வதானால் ‘அற்றவைகளால் நிரம்பியவள் ‘ எனது மனதுக்குள் பிடித்த நாவல். நண்பர்கள் தவறாமல் வாசிக்கவும்.

எழுத்தாளர் வெண்பா கீதாயன்:

கொற்றவை. சிலம்பின் கதையை அடியொற்றிய நவீன காவியம். வாசிக்கும் தருணத்தே பெருங்கனாவென விரியக்கூடியது. இலக்கியம் வாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் இயங்கும் ஒவ்வொருவரும் தங்களது கட்டாய வாசிப்பில் சேர்க்கவேண்டிய காப்பியம் கொற்றவை. பழம்பாடல்களென்றும் குலக்கதைகளென்றும் எழுந்த மரபின் வழியாகவும் தொன்மங்களின் வழியாகவும் சமகாலத்தைத் தொட்டுச்செல்கிற மொழியும் செறிவும் கொண்டது.

எழுத்தாளர் கவிபித்தன் :

உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது

– சிமாமண்டோ என்கோஜி அடிச்சீ

தற்போதைய மனநிலையில் நைஜீரிய பெண் எழுத்தாளரின் இந்த சிறுகதைத் தொகுப்பை பரிசளிக்க விரும்புகிறேன்.
நைஜீரியாவிலும், அமெரிக்காவிலுமாய் வாழ நேர்கிற நைஜீரியர்களின் வாழ்வியலை அசலாகப் பேசுகின்றன இந்தக் கதைகள்.உள் நாட்டுக் கலவரங்களிலும், புலம்பெயர் வாழ்விலும் அவர்களின் கலாச்சாரம் சிதைவதையும், அதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்வதையும் பெண்களின் மன நிலையிலிருந்து இந்தக் கதைகள் பேசுகின்றன.

எழுத்தாளர் நவீனா:

ரொபர்டோ பெலெனோ எழுதிய 2666 என்னும் 5 பாகங்களைக் கொண்ட நாவலை நண்பர்களுக்கு இந்தப் புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்..

2020 சுமந்துவரவிருக்கும் குறியீடுகளையும், இன்னும் 646 வருடங்களுக்குமான மனித வாழ்க்கையையும் ஏதோ மாயன் நாட்காட்டி போல சொல்லிப் போவதான நாவலில் எங்கும் 2666 என்னும் தலைப்பின் காரணத்தை பெலெனோ குறிப்பிடவில்லை.

சீதாத் குவாரிஸில் (மெக்ஸிகோ நகரம்)நடந்த femicide பற்றிய கதைக்கருவை, (பெண்களின் பிரச்சினைகளை இலக்கிய ஆவனமாக்கிய மிகச்சில ஆண்களில் பெலெனோவும் ஒருவர்) historiographic metafiction வடிவில் bildungsroman narrative – வாக சொல்லப்பட்டிருக்கும் நாவல் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கக்கூடிய எழுத்தாக இன்றளவும் நிற்கிறது.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் சிலியில் பிறந்தவராக இருந்தாலும் பெலெனோ மெக்ஸிகோவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதால், இவரது இறப்புக்குப் பின் பிரசுரிக்கப்பட்ட 2666 சிக்கானோ இலக்கியத்தையும், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் ஒன்றோடு ஒன்றாய் பிணைக்கும் முயற்சியாக இருக்க வேண்டுமென எனக்குத் தோன்றும்.
(மெக்ஸிக்கோவை மட்டும் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் சேர்த்துக்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருக்கும், ஒருவகையில் 2666 நாவலின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட அதுவும் ஒரு காரணம்)

அவரது கனவின் சாட்சியாக நிற்கும் இந்த நாவலின் தலைப்பு ஒரு வருடத்தைக் குறிப்பது தான் என பல இலக்கிய விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. அவரது ஆமுயுலெட்டில் கூட பெலெனோ ‘2666ன் மெக்ஸிகோ நகர வீதிகள்’ என ஒரு வரியை எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டில் அப்படியென்ன மர்மம் புதைந்திருக்கிறதென வாழ்ந்து பார்க்க காலம் நம்மை அனுமதிக்காவிட்டாலும், இந்த நாவலை வாசிப்பதற்காக நம் கைகளில் கொடுத்துச் சென்றிருப்பதற்காக காலத்திற்கு என் நன்றிகள்😊

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன்:

பால்யத்திலிருந்து வளரிளம் பருவத்துக்குள் அடியெடுத்து வைக்கும் புத்தம்புதிய இளைஞனுக்கு இந்நிலத்தையும், அதன் விவசாயக் குடிகளின் வாழ்வையும் அச்சுஅசல் கரிகல்காட்டு மொழியில் பேசும் ”கோபல்ல புரம்” நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். தூர தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து, தெற்கில் கரட்டுக்காடாய் கிடந்த ஒரு நிலத்தை செம்மைப்படுத்தி, அதை செழிப்பான ஒரு கிராமமாக உருவாக்கும் அம்மக்களின் கதையை அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆசிரியர் மேலே அமர்ந்து கதை சொல்ல, அதை வாசகன் கழுத்து வலிக்க அண்ணாந்து கேட்பது போலின்றி, உற்ற நண்பன் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டு கதை பேசுவது போன்ற உணர்வை நாம் தமிழின் மூத்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனின் படைப்புகளில் காணலாம். அப்படி கோபல்ல புரம் புத்தகத்தை, ஒரு நாவலாகவோ சம்பவங்களின் கோர்வையாகவோ, ஓர் ஊர் உருவான கதையாகவோ, கோட்டையார் என்பவர்களது குடும்ப வரலாறாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புதிதாய் நவீன இலக்கியத்தை வாசிக்க வரும் இன்றைய இளைஞனுக்கு முதலில் கி.ரா தாத்தாவையே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்தத் தலைமுறையின் புது இளைஞனின் தொடர் வாசிப்புக்கும் கி.ரா.வே வழிகாட்டியாக இருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

எழுத்தாளர் பிரியா விஜயராகவன்:

நான் இந்த வருடம் படித்ததில் பிடித்ததும், பகிர்ந்துக்கொள்ள நினைப்பதும் மணி எம்.கே மணி சார் எழுதியுள்ள “மதுர விசாரம் ?

மணி சாரின் எழுத்து எனக்கு எப்போதும் நழுவும் விலாங்கு மீன் போன்றது. நான் பொதுவாக 300 பக்கத்தை 3 மணி நேரத்துக்குள் வேகமாகப் படித்துக் கடப்பவள். மணி சாரின் புத்தகப்பக்கத்தை அப்படி நகர்த்திவிடமுடியாது. அவர் எழுதும் ஒவ்வொரு வரிகளிலும், பொங்கியும், இழையோடியும், புதைந்து வரும் உணர்வுகளின் வலி, வீர்யத்தை உள்வாங்கவும், மனதில் உட்காரவைத்து செறிமானம் செய்யவும் நேரமும், தைரியமும், உண்மையும் தேவை.

உலகில் 18, 19 வயது வரை தாய் தந்தையை சார்ந்திருக்கும் ஒரே மிருகம் மனிதன் தான். உள்ளும் வெளியும் நடக்கும் மனித வளர்ச்சியின் & விகாரங்களின் permutation combinationகள், இந்த கதையின் மனிதர்களாக மாற்றி எடுத்திருக்கிறார்.

அன்பின் விஸ்தாரம் எல்லையில்லாதது. மிக தூய்மையானது. உயிர்களின் அன்பும் உடலும் தேடிக்கொண்டிருப்பது அமைதி, அரவணைப்பு, அங்கீகாரமும் தான்.
மாறிக்கொண்டே இருக்கும் சமூக moral சுத்தியலும் உளியும், அதன் வளைந்து நெளியும் உண்மைகளும் பொய்களும் கொண்டு அன்பைச் செதுக்கி முடிக்கையில், கண்முன் நிற்கும் மனிதன் என்ன என்ற கேள்வியை எழுப்பக்கூடியது மணி சாரின் எழுத்துக்கள். மனதின் உள்ளே நடக்கும் சம்பாஷணைகளும், சரி தவறு என்று வெளிப்பார்வைக்குத் தூக்கிப்பிடிக்கும் ஜோடிப்புகளும் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும் மனிதர்கள் மூலம் பேசிப் போகிறது.

சத்தியசந்தமாய் என் மனதின் உணர்வும், உண்மையும், காதலும், தேடலும் இது தான் என்ற உண்மையை, வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கமுடியாதும், அப்படி ஏற்காது போவதன் வலி வெறுமையும், ஆனால் சமூகமும், குடும்பத்தினரும், சுற்றம்சூழலும் என் உண்மைகள் தெரிந்தால், என்னை எப்படி நினைத்துவிடுவார்களோ என்று, வெளிப்பூச்சாக தன்னை வேறு ஒன்று என்று பொய்யாக முலாம் பூசிக்கொண்டே இருக்கும் மனிதனின் உள், வெளி malalignmentஐ காட்டும் புத்தகம் மதுரவிசாரம்.

பெண் என்பவள் எத்தனை பயங்கரமான அதிஅற்புத புதிரானவள்! அந்த பெரும்புதிர் ஆணை எப்படி பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. மாபெரும் பேரன்பு மிகுந்த அழகிய கடவுளாகவும், அடுத்த நிமிடம் பொய் கூறி, பசப்பு பேசும் அன்பில்லாத உடல் / மனம் கொண்ட பரத்தையாகவும் மாறியபடியே இருக்கிறாள். Women will always be perceived as a lecherous goddess by men. ஆணுடைய ஆச்சரியமும், பயமும், அது முடுக்கிவிட்ட சாவி கொண்டு நடமாடும் ஆண்களை தான் மணி சாரின் மதுர விசாரம் முழுக்க வாழ்கிறார்கள்.

இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில், உண்மையான மனம் சார்ந்த ஈர்ப்பும், அதை மனிதசமூகம் முழுமனதோடு அங்கீகரிப்பதும் எத்தனை பெரிய சவால் என்று பெருமூச்செடுக்கிறேன்.

 

கவிஞர் பா.திருச்செந்தாழை :

ஜாக் லண்டனின்
மெக்ஸிகன் ” சிறுகதைத்தொகுதி.
( மொழிபெயர்ப்பு – ராஜேந்திரன், தமிழினி வெளியீடு.)
அடிப்படையில் சிக்கலான,நாடோடிவயமான பால்யத்தைக் கொண்ட ஜாக் லண்டனின் இந்த சிறுகதைத் தொகுதியிலிருக்கும் சிறுகதைகள் அற்புதமான உணர்வெழுச்சியிலிருந்து எழுதப்பட்டவை.
வாழ்வு- நிகழ்வுகள்- தத்துவப்பார்வை என்கின்ற வழக்கமான எழுத்துப்பயணம் போலன்றி ஒரு கற்பனைக்குழிக்குள் திடுக்கிடும்படி விழுகின்ற பேரார்வத்துடன் விரிகின்ற இந்த தொகுதியின் கதைகள் தீவிர அரசியல்பிரக்ஞையை தங்களது சுவாரஸ்யத்தைக் குறைத்துகொள்ளாமல் வாசகன் முன்வைப்பவை.
வன்முறைச்செயல்பாடுகளின் மீது மிகுந்த ஈர்ப்புகொண்ட ஜாக்லண்டன் தனது படைப்புகளில் கருணை என்பதை அவ்வளவு குறைவாக வெளிப்படுத்திக்கொண்ட நபர்.உண்மையில் யதார்த்த உலகில் வெளிப்படுகின்ற கருணையின் அளவும் அதே.
ஆனால் அவ்வளவு சிறிய கருணை ஒரு பாலைவனத்தில் நிலவாய் மாறுகின்ற அனுபவத்தையும் ஜாக் நமக்கு அளிக்கிறார்.
வாழ்க்கை சலித்துவிட்டதாகக் கூறி நாற்பதுவயதில் மரணமடைகிற ஜாக்லண்டனின் கதைகளில் காணுகின்ற படைப்பெழுச்சிக்காக  இதைத் தருகிறேன்.

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் :

மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் வாழ்வைப் பேசும், சீன எழுத்தாளர் லியு ஜியாமின், ஜியாங் ரோங் என்ற புனைபெயரில் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலையே வரும் புத்தாண்டில் நண்பர்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறேன். இதைத் தமிழில் எழுத்தாளர் சி.மோகன் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

சீனர்கள் மிகவும் வெறுக்கும் விலங்கென்று ஓநாயைச் சொல்ல முடியும். ஆனால், நாவல் வெளியாகி கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்த நாவல் இது.

ஓநாய் வேட்டையில் ஆரம்பிக்கும் நாவல் மெதுவாகத் தொடங்கி ஆர்ப்பரிக்கும் அடைமழையென நம்மை உள்ளீர்த்துக்கொள்கிறது. மற்றுமொரு விலங்கு என்ற அளவிலேயே ஒநாயைப் பற்றி அறிந்துவைத்திருக்கும் நம்மைப் போன்று வெப்ப மண்டலங்களில் வாழ்பவர்களுக்கு இந்நாவல் ஓநாய்களைப் பற்றியும் அவற்றின் வழியே மனிதர்களைப் பற்றியுமான மகத்தான சித்திரத்தைக் கையளிக்கிறது. சீனாவின் அரசியல் பின்புலத்தினை கருத்தில் கொண்டு வாசிக்கும் ஒருவனுக்கு இந்நாவல் முற்றிலும் புதியதோர் தரிசனத்தைத் தரும்.

இயற்கையை, அதன் வழியே தம்மோடு சேர்த்துப் பல கோடி உயிரிகளின் சமநிலையைப் போகிற போக்கில் கலைத்துப்போகும் இன்றைய நாளில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் என்று இதைச் சொல்லுவேன்.

எழுத்தாளர் விநாயக முருகன்:

ஏழு நதிகளின் நாடு

இது மிக பெரிய உழைப்பை கொட்டி எழுதப்பட்ட புத்தகமாக தோன்றுகிறது. சஞ்சீவ் சன்யால் இந்தியாவின் நிலவியல் அமைப்பை வைத்து இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். தான் பார்த்த வேலையை கூட விட்டுவிட்டு இதற்காக இந்தியா முழுக்க பயணம் செய்துள்ளார். ஆங்கிலத்தில் மிக பெரிய வரவேற்பை பெற்ற புத்தகம். தமிழுக்கு சிவ.முருகேசன் மொழிப் பெயர்த்துள்ளார்.

 எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்.

How Fascism Works..இந்நூலைப் பரிசளிப்பேன் அதன் காலப் பொருத்தம் கருதி.

எழுத்தாளர் சயந்தன்:

ஒருவிதமான மனக் கிளர்ச்சியுடன் பகிர விரும்புவதும், வாசிக்கச் சொல்வதுவும் – சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு நுாலையே. கிளர்ச்சியென்று சொன்னேன் அல்லவா. அது உண்மையில் ஒரு பதற்றமே. இதனை வாசிக்கின்ற எவரையும், அவர் மதப்பற்றாளராயிருக்கலாம், மார்க்கஸியராயிருக்கலாம், தேசியவாதியாக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம், அவர்களை இந்தப்புத்தகம் சலனத்திற்குள்ளாக்கும். தாய்மை என்ற உணர்விற்குப் பின்னாலிருந்த நடைமுறைக்காரணி என்ன என்பதை “அட இவ்வளவுதானா” என்று உணர்த்துவது தொடங்கி கார்ல்மார்க்ஸை கேள்வி கேட்பதுவரை நகைச்சுவையும் சுவாரசியமும் கலந்த மொழியில் யுவால் எழுதுகிறார். – உங்கள் நண்பர்களைச் சீண்டிப்பார்க்கவேனும் இப்புத்தகத்தைப் பரிசளியுங்கள்.

எழுத்தாளர் எம்.கே.மணி:

மதில்கள்.

மொத்த உலகினுடைய மனதை அடைந்து அலட்சியமாக இருக்கும் இருக்கும் ஒருவன் வெகுளித்தனத்தின்ன் எளிமையின் மெய்மையின் அகம் தொட விரும்பும் போது குறுக்கே இருக்கிற மதில் பிடிபடுகிறது. பஷீர் மதிலுகள் என்கிறார். நமக்குள் இருக்கிற அவைகள் தான் பரிணாமமோ, அதன் காரணமோ என்னமோ? எப்போதும் தீராமல் நமது மூச்சுக்காற்றில் சுமையாகி இழுக்கிற அந்த ஆற்றாமைகள் தான் உயிர் வேட்கையின் காரணமோ என்னமோ? மண்ணில் இருந்து கொஞ்சமாவது நம்மை எழும்ப வைக்கக் கூடியது, யாருக்குமே இந்நூலை பரிசளிக்க விரும்புவேன்.

விஞர் ஜி.கனிமொழி:

Paulo coelho ‘s Alchemist பாவ்லோ கொய்லோ வின் ரசவாதி ..

வாழ்க்கையில் தேடலைத் தெரிவு செய்தலும், அதை நோக்கிய பயணமும்,
அதைக் கண்டடையும்போது நேரும் நிறைவுமாய் அதியற்புதமான படைப்பு. எளிய கதையாயினும், உள்ளிழையில் வேறொரு வெளியில் கிட்டும் ஆன்ம தரிசனம்..

கனவைப் பின்தொடர்தலின் எளிய சூத்திரம்.. இருத்தலின்மை குறித்த இருட்டைக் கலைக்கும் சிறு ஜ்வாலை இப்புத்தகம்..

எழுத்தாளர் ராம் தங்கம் :

அழகிய நாயகி அம்மாள் எழுதிய ‘கவலை‘ நாவல்.

அழகிய நாயகி அம்மாள், எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் தாயார். அம்மா அவர்கள் அடிக்கடி பொன்னீலன் அவர்களுக்கு கதைகள் சொல்வாராம். தன்னுடைய குடும்ப கதைகள், வழிபாட்டு கதைகள், அனுபவ கதைகள் என்று தினமும் கதை பொன்னீலன் வளர்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம். ஒருநாள் உங்களுடைய கதைகளை கேட்க எனக்கு இப்போது நேரமில்லை என்று பொன்னீலன் சொல்லி இருக்கிறார். உடனே அழகிய நாயகி அம்மாள் எனக்கு கொஞ்சம் பேப்பரும் பென்ணும் தா என்று கேட்டு வாங்கியிருக்கிறார். சரியாக ஒரு வருடம் கழித்து வாங்கிய பேப்பர்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து விட்டு தனது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் பொன்னீலன். அதன்பின் தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி பகிர்ந்து கொண்டிருக்கும்போது, ஒருவர் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் காலேஜில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் பிரிவில் பத்திரப்படுத்தி வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அங்கு கொண்டு சென்றபோது அங்குள்ள பேராசிரியர்கள் இந்த பதிவு நன்றாக இருக்கிறது இதை நாவலாக கொண்டுவருவோம் என்று கவலை என்கிற பெயரில் புத்தகமாக அவர்களை வெளியிட்டுள்ளார்கள். அந்த புத்தகம் இனவரைவியல் சார்ந்த ஒரு முக்கியமான ஆவண பதிவு. சாகித்ய அகாடமி விருது பரிந்துரை வரைக்கும் போய் திரும்பியிருக்கிறது. பொன்னீலன் அவர்கள் இந்தியாவில் தமிழகத்தில் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு கிடைக்காத ஒரு சிறப்பு அவருடைய அம்மாவுக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி கவலை நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இதனால் நான் கவலை நாவலை நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

எழுத்தாளர் கணேஷ்ராம் :

இந்தப் புத்தாண்டில் நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் கோணங்கியின் பிதிரா.
பிதிராவில் ஐவகை நிலங்களும் ஐவகை நிலங்களின் தொன்மங்களும் ஊடிழை பிரதிகளாக தோற்றமளிக்கின்றன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே விவசாயிகளின் தற்கொலைகளை வேதனையுடன் விவரித்த நாவல் பிதிரா. ஓர் இசைக் கோர்வையை போல அரூப ஓவியங்களைப் போல சுழலும் பிரதிகளின் தொகுப்பே பிதிரா.
விவசாயிகள் நாடோடிகள் நாடகக் கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் அடித்தள மக்களின் வாழ்வியலை surreal பரிமாணங்களுடன் விவரித்துக் கொண்டே போகும் முடிவற்ற பிரதிகளின் தொகுப்பே கோணங்கியின் பிதிரா எனலாம். கோணங்கி தன் அபூர்வமான பயணங்களின் ஊடே நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலைடாஸ்கோப் வர்ணங்களின் நீட்சியாக கிளை விடுகிறது பிதிரா.

யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் :

உலகின் அனைத்துக் கோட்பா டுகளும், சித்தாந்தங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், மாஸ்டர்களைத் தவிர சமகாலத்தில் வாசிப்பதற்கு எனத் தேர்வு செய்ய என் மனம் நம்பும் நூல் ஒன்றை தான் யாருக்கும் பரிசளிக்க முடியும்.

எல்லாவிதத்திலும் இந்த யுகத்தின் தேர்வுகளைக் கதைகளாகப் பேசிய துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஒரு சிறந்தத் தேர்வு. சிறுகதைகள் என்பதும் கூட தேர்வுக்கு ஒரு காரணம். சிந்தனையைத் தூண்டும் இத்தனை அடர்த்தியான பிரதி புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும். “நாளை இறந்து போன நாய்” எனும் கதை அதில் உச்சம்.

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2 வாசிக்க  Click Here

6 COMMENTS

  1. அற்புதமான பட்டியல். பல்வேறு ரசனைகளின் கலவை. ஆளுமைகளின் இனிய புத்தாண்டு பரிசு. தனியே தொகுத்துக்கொண்டே வந்தேன். இங்கே முழுமையாக கிடைத்தது. நன்றி கனலி டீம்.

  2. எழுத்தாளர்களின் பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை முன்வைத்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, பலதரப்பட்ட நூல்களின் ஆவணத்தொகுப்பு அட்டகாசம். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    • மிகவும் பயனுள்ள நூல் அறிமுகம். சேப்பியன்ஸ் நூலைப் பற்றி இருவர் எழுதியிருப்பதில் மகிழ்ச்சி. சென்ற ஆண்டுதான் நான் படித்தேன். அதன்பின் ஆறு புத்தகங்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளித்தேன்.
      Tony Joseph எழுதிய Early Indians, 2018-19ன் சிறந்த ஒரு நூல். விரைவில் தமிழாக்கம் வந்து பிரபலமாகும்.

      அறிவியல் சார்ந்த ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்ய விருப்பம், யாருக்கேனும் தேவையானால்.
      நன்றி.

  3. அருமையான பட்டியல். புதிய வாசகர்களுக்கும், கை தேர்ந்த வாசிப்பாளர்களுக்கும் உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.