அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.

 ஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். 

ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை மூன்று கட்டுரைத் தொகுதிகளும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன.இது மட்டுமல்லாமல்  சமூக ஊடகங்களில் காத்திரமான அரசியல் பார்வைகளோடு முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளும் எழுதுகிறார்.  

  எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ்  உடன் நண்பர் க.விக்னேஷ்வரன் கனலி கலை- இலக்கிய இணையதளத்திற்காக கண்ட நேர்காணல் இது.  


கார்ல் மார்க்ஸ் கணபதி என்கிற உங்கள் பெயர் அதிக வசீகரிப்பை தருகிறது. உண்மையில், இந்த பெயரை வைத்துக் கொண்டு இருப்பது நவீன முதலாளித்துவ சமூகத்தில் எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக அல்லது சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கிறது?

 • என்னுடைய பெயர் கார்ல் மார்க்ஸ். அப்பாவின் பெயர்தான் கணபதி. அப்பா திராவிட இயக்க அரசியலால் ஈர்க்கப்பட்டவர். தாத்தா காங்கிரஸ்காரராக இருந்தார். புதிதாக உருவாகி வந்த திராவிட அரசியல் சூழலே பெயர்களில் புதுமையைப் புகுத்தும் உத்வேகத்தை அளித்திருக்கவேண்டும். நான் மட்டுமல்ல, கிட்டத்தட்ட பத்து பேர் இத்தகைய பெயர்களுடன் எங்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள். அக்காவின் பெயர் ஜான்சிராணி. தம்பி ஆப்ரஹாம் லிங்கன்.  பல நேரங்களில் சுவாரஸ்யமாகவும், பெருமிதமாகவும், நகைப்புக்குரியதாகவும் கூட இது இருக்கிறது. இதில் இருக்கும் சவால் என்று பார்த்தால், சில நேர்காணல்களில் தோற்றுத் திரும்பியிருக்கிறேன். மற்றபடி என் பெயரை மட்டும் கேள்விப்பட்டு நேரில் வருகையில் என்னைப் பார்த்து சில ஐரோப்பியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

நீங்கள் தீவிர வாசிப்பாளர். அடிப்படையில் வாசிப்பு பழக்கம் எப்படி வந்தது? இன்று திரும்பிப் பார்க்கும் போது வாசிப்பு என்கிற புள்ளி உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய நன்மைகள் மற்றும் குறைகள் (ஏதாவது இருந்தால் மட்டும்)

 • எனக்கு முந்தைய தலைமுறையிலேயே வீட்டில் வாசிப்பு அறிமுகமாகியிருந்தது. புத்தகங்கள் மீது மரியாதை கொண்டிருந்த வர்களாகவே இருந்தார்கள். விவசாயக் குடும்பம்தான் என்றபோதும் முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் சென்றவர்களுக்கு புத்தகங்கள் மீது அதீத மதிப்பிருந்தது. மேலும் கம்யூனிசம், பெரியாரிசம் போன்ற சித்தாந்தப் பின்புலத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். அதே சமயம் அவர்களுக்கு குறிப்பாக வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கும் சூழல் இருந்தது. அதனால் எனது பள்ளிப் பருவத்திலேயே எனக்கு சீரியஸான புத்தகங்கள் அறிமுகமாகியிருந்தன. எதற்கும் தடை இல்லாத சூழலே வீட்டில் இருந்தது. சிறுவயதிலேயே புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் படுகிறபோது, நாம் வளர வளர அதன் மீதான ஈடுபாடு வளர்ந்துகொண்டே போகிறது. மேலும் இப்போது இருப்பதைப் போன்ற கவனத்தை சிதறடிக்கும் காரணிகள் அப்போது இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம். தொலைக்காட்சிகள் கூட தாமதமாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது. எனது கல்லூரிக்காலத்தில்தான் எனக்கு நவீன இலக்கியத்தின் அறிமுகம். அது மிகப்பெரிய ஜன்னலைத் திறந்துவிட்டது. மிக முக்கியமாக என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டிக்கிடந்த நேரத்தை செலவழிப்பதற்கு அது உதவியது. ஒரு நாளைக்கு முன்னூறு பக்கங்கள் ஐநூறு பக்கங்கள் என்று படித்த அந்த நாட்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இந்த இலக்கியப் பரிச்சயம் அதன் உபவிளைவாக மனதிற்குள் ஒருவித பிளவை உண்டு பண்ணிவிட்டது. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதில், சமரசங்களைப் பேணுவதில் நிறைய சச்சரவுகளை அது உருவாக்கியது. அதை எதிர்கொள்ள நான் தடுமாறினேன். இப்போதும் கையாள்வதற்கு சிரமமான ஒன்றாகவே அது இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் நேர்மை என்பது குறித்த காத்திரமான ஒரு சித்திரத்தை இலக்கியமே வரைந்து காண்பித்தது.      

ஒருவர் வாசிப்பதற்கு கண்டிப்பாக குடும்ப உறவு முறையில் ஒருவர் காரணமாக இருப்பார். இது அனைவரும் அறிந்தது. என்னுடைய கேள்வி, ஒருவர் பிறந்து வளர்ந்த இடத்தின் அடிப்படையில் ஒருவருக்கு இந்த கலைத்தன்மை வருவதற்கு எந்த வகையில் வாய்ப்புள்ளது.? காவேரிக் கரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இந்த கேள்வி கட்டாயமாகிறது!

 • ஒருவரது வாசிப்புக்கும் அவருக்கு சாத்தியப்பட வாய்ப்புள்ள கலைத்தன்மைக்குமான உறவு புகை மூட்டமானது. படைப்புகளில் சில திருத்தங்களைச் செய்துகொள்வதற்கு வாசிப்பு பயன்படுமே தவிர படைப்பதில் வாசிப்பின் பங்களிப்பு எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் நாம் பிறந்து வளர்ந்த சூழலுக்கும், நாம் எத்தகைய படைப்புகளை எழுதுகிறோம் என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறேன். குறிப்பாக நமது பால்யம். இப்படிச் சொல்வதை வாசிப்புக்கும் எழுத்துக்கும் தொடர்பே இல்லை, அது எந்த வகையிலும் எழுத்தை பாதிப்பதில்லை என்பதாகவும் புரிந்துகொள்ளக் கூடாது. எழுத நாம் அடையும் உந்துதலுக்கும், எழுத்தின் மீது வந்து சேர்கிற பாதிப்புகளுக்கும் வேறுபாடு உண்டு.  எனது குடும்பத்தின் பொதுவான சூழலே வாசிப்புக்கு உகந்ததாக இருந்ததால் தனிப்பட்ட ஒருவரைச் சொல்ல இயலவில்லை.

வாசிப்பில் உங்களை அதிகம் பாதித்த எழுத்தாளர் மற்றும் படைப்புகள் எவையெவை? உலக இலக்கியங்களில் சேர்த்து? உண்மையில் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் தொடர்பு இருக்கிறதா? 

 • ஒரு குறிப்பிட்ட வகைமையை மாத்திரம் தொடர்ந்து படித்தவனல்ல நான். கைக்குக் கிடைத்ததை எல்லாம் படிப்பது என்பதாகவே என் வாசிப்பு இருந்தது. அப்படி வாசிப்பதற்கும் நேரம் இருந்தது. இப்போது அதில் நிறைய மாறியிருக்கிறேன். நேரம் குறைவாக இருப்பதால் படிப்பதில் நிறைய தேர்வு வந்துவிட்டது. மேலும் ஒரு பிரதி என்னை வாசிக்கத் தூண்டும் காரணிகள் குறுகிவிட்டன. வாசிப்பு என்று வருகையில் நான் மிகவும் சொகுசானவனாக மாறிவிட்டேனோ என்கிற அச்சம் கூட எனக்கு உண்டு. சொல்லியே ஆகவேண்டும் என்றால், வாசிப்பில் என்னை அதிகம் பாதித்த எழுத்தாளர்கள் தி. ஜானகிராமனும் அசோகமித்திரனும். உலக இலக்கியம் என்றால், நம் தமிழ்ச் சூழலில் எல்லோருக்கும் வாய்ப்பது போல ரஷ்ய இலக்கியங்களே முதலில் அறிமுகமாயின. எனக்குப் பிடித்த ஒரு டஜன் எழுத்தாளர்கள் அதில் இருக்கிறார்கள். அதற்கு வெளியே எனக்குப் பிடித்த நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹன்ட்கேவின் எழுத்துகள் எதையும் இதுவரைப் படித்ததில்லை. இப்போதுதான் அவரது The Goalie’s Anxiety at the Penalty Kick எனும் நாவலைக் கையில் எடுத்திருக்கிறேன். சைக்கிள் ரிக்ஷாவில் போவது போல இருக்கிறது அதன் வாசிப்பு.

 

உங்களின் சென்னை வாழ்வை பற்றிய கட்டுரைகள் வாசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இன்னும் சென்னை பற்றி நினைவுகள் மனதில் இருக்கிறதா! உண்மையில் கார்ல் மார்க்ஸை தீவிரமான எழுத்தாளராக மாற்றிய கணங்கள் அவை என்று சொல்லலாமா?

 • சொந்த ஊரான கும்பகோணத்தைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரத்தை உணர்வர்தற்கு சென்னை எனக்கு உதவியது என்பதைத் தவிர சென்னையை நான் சிலாகிக்க பிரத்யேக காரணங்கள் ஒன்றும் இல்லை. அங்கு நான் நீண்ட வருடங்கள் வேலையில் இருந்திருக்கிறேன். பணம் சம்பாதித்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி இருந்தது. வீட்டின் சூழல், அதன் முந்தைய சொகுசிலிருந்து வெகுவாக மாறிப்போயிருந்த காலத்தில்தான் நான் சென்னைக்கு வந்தேன். வாழ்க்கை பற்றிய எனது பார்வைகளை மாற்றியதில் சென்னைக்குப் பங்குண்டு. நான் அந்த வாழ்க்கைக்கு என்னை முழுக்கவும் ஒப்புக்கொடுத்தேன். இப்போதும் அந்த நகரம் மீது எனக்கு வசீகரம் உண்டு. சென்னையில் இருந்த காலம் வரை எனக்கு எழுதுவது பற்றிய எந்த எண்ணமும் ஏற்பட்டதில்லை. அதற்கு முன்பு இருந்த ஹோசூராவது எழுத்து மீதான ஆர்வத்தைத் தூண்டிய ஊராக இருந்தது. சென்னை அந்த ஆர்வத்தை இல்லாமலாக்கிய ஊர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கையில், எழுதுவதற்கான சில காரணிகளை சென்னை வாழ்க்கையிலிருந்து பெற்றிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது.
ஜி.கார்ல் மார்க்ஸ் கட்டுரைத் தொகுப்புகள்

அடிப்படையில் மிகத் தீவிரமாக கட்டுரைகள் எழுதுவது உங்களுக்கு இயல்பிலேயே வருகிறது. இதன் பின்னனி என்ன? இந்த தீவிர அரசியல் பார்வைகளை எப்படி உருவாக்கி கொண்டீர்கள்? 

 • என் அரசியல் பார்வைகளை எனது இலக்கியப் பிரக்ஞையில் இருந்துதான் உருவாக்கிக் கொள்கிறேன். ரோலர் கோஸ்டர் போன்ற என் வாழ்க்கைச் சூழல் ஒருவித மூர்க்கத்தை எழுத்துக்கு வழங்குகிறது. மேலும் அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. அது நம்முடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருக்கிறது. செய்தித் தாள்களிலிருந்தோ அல்லது நிபுணர்களின் கட்டுரைகளிலிருந்தோ நான் எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்வதில்லை. நேரடியாக எனது சுற்றுப்புறத்துடன், நண்பர்களுடன் எப்போதும் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களிடமிருந்துதான் எனது பார்வைகளை உருவாக்கிக்கொள்கிறேன். சில கூடுதல் தகவல்களை வேண்டுமானால் பத்திரிகைகள் எனக்குத் தரமுடியும். அதனால்தான் எனது கருத்து பல நேரங்களில், சமூக ஊடகம் சார்ந்த பொது மனநிலைக்கு எதிரானதாக இருக்கிறது. எனக்கு சரி என்று தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்லும் அச்சமின்மையை எனக்கு இலக்கியமே வழங்கியது

உங்கள் கட்டுரைகள் அ. மார்க்ஸ் சொல்வது போல எந்த தீர்வையும் தருவதில்லை. உண்மையில் அவை எந்த பக்கமும் சாய்ந்து விடாமல் குறிபிட்ட கட்டுரையின் மையத்திலிருந்து பேசுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் எழுதும் போது வரும் விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? 

 • தீர்வு என்பது ஒற்றைப்படையானது என்றே நான் நினைக்கிறேன். மேலும் எழுதப்படும் ஒன்றில் தீர்வை நோக்கியே நகரும் பழக்கத்தை வாசகர்கள் பழக்கதோஷத்தில் கைகொள்கிறார்கள் போல.  எப்போதும் தீர்வு குறித்து முன்முடிவோடு எழுதப்படும் கட்டுரைகள் ஒரு தரப்பை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவே இருக்கின்றன. எடப்பாடியின் தவறான செயல்பாடுகளுக்கான தீர்வு குறித்து ஸ்டாலின்தான் எழுதமுடியும். இதுவேதான் மோடி விவகாரத்திலும். ஆனால் ஒரு கட்டுரையாளனின் கரிசனம் அதுவல்ல. பரந்து பட்ட அளவில் இந்த விவகாரம் குறித்து நான் என்ன கருதுகிறேன் என்று சொல்வது மட்டுமே எழுதுபவனின் நோக்கம். அதனால்தான் பல நேரங்களில் அது இரண்டு தரப்பாலும் தூற்றப்படுகிறது. இங்கு திட்டவட்டமான நிலைபாட்டுடன் இருப்பவர்களுடன் நீங்கள் எதைத்தான் விவாதிக்கமுடியும்? மேலும் ஒரு தரப்புடன் ஆழமாக பிணைத்துக்கொண்டு நிற்பதே அரசியல் புரிதல் என்று ஆகிவிட்டிருக்கும் அபத்தச் சூழலில் தீர்வை முன்வைக்காமல் எழுதுவதே சவால். அதைத்தான் தொடர்ந்து செய்யவேண்டும்.

புனைவு எழுத்தாளர் அல்லது கட்டுரையாளர் என்று இருநிலைகளில் கார்ல் எதை அதிகம் விரும்புகிறார். அப்படி எதையாவது ஒன்றை அவர் விரும்பும் போது அது எதனால்? 

 • இரண்டுக்குமான கோட்டை அழிப்பதையே நான் விரும்புகிறேன். என் கட்டுரைகளில் தென்படும் புனைவின் கூறுகளை நீங்கள் ரசிக்க மாட்டீர்களா என்ன? அதே அளவுகோல்தான் புனைவுக்கும். ஆனால் புனைவு என்று வருகிறபோது நான் கொஞ்சம் கூடுதலாக களிப்படைவது போல உணர்கிறேன்.  

‘வருவதற்கு முன்பிருந்த வெய்யில்’ இன்னும் எனக்கு பிடித்த சிறுகதை தொகுப்பு கிட்டத்தட்ட அது ஒரு ரசனையான கலவை தி.ஜானகிராமன், சாரு, அழகிரிசாமி, இப்படி… ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த சிறுகதைகள் இரண்டு செப்பு ஓணான் மற்றும் காட்டாமணக்கு (காரணம் தெரியவில்லை ஆனால் பிடிக்கும்) இப்போது அந்த தொகுப்பை மீள் வாசிப்பு செய்யும் போது மனதில் வரும் எண்ணத்தை சொல்ல முடியுமா? 

உங்களுக்கு செவப்பு ஓணானும் காட்டாமணக்கும் பிடித்திருக்கிறது என்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது. இரண்டும் வேறு வேறு களம். காட்டாமணக்குதான் நான் எழுதிய முதல் சிறுகதை. நான் அதிகநேரம் எடுத்துக்கொண்டு எழுதிய கதையும் அதுதான். நான் கதைகளைப் பெரும்பாலும் திரும்ப வாசிப்பதில்லை. ஆனால் அந்தத் தொகுப்பு குறித்து யோசிக்கையில் நிறைவாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் எழுதப்பட்ட சிறுகதைகள் அவை. முதல் கதையை எழுதும் வரை, புனைவெழுதுவது குறித்த  எந்தத் திட்டமும் எனக்கில்லை. ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றும் புரியவில்லை. ஆனாலும் கூட அத்தொகுப்பு நிறைய பேரால் வாசிக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது என்பது நம் சூழலில் மகிழத்தக்க ஒன்றுதான். 

‘வருவதற்கு முன்பிருந்த வெய்யில்’ தொகுப்பிற்கு முன்னுரை தந்திருக்கும் சாரு உங்களை பற்றி நிறைய எழுதியுள்ளார். திரும்பி பார்க்கும் போது சாருவுடன் இருந்த உறவின் ஏற்றத்தாழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

 • என்னுடைய இரண்டு கதைகள் மட்டுமே அப்போது இதழ்களில் பிரசுரமாகியிருந்தன. மற்ற கதைகளையும், கட்டுரைகளையும் தொகுத்துப் புத்தகங்களாகக் கொண்டு வரலாம் என்று சொன்னது சாருதான். அப்படித்தான் வருவதற்கு முன்பிருந்த வெயிலும், சாத்தானை முத்தமிடும் கடவுள் நூலும் வந்தன. சாருவுக்கு எனக்குமான உறவு எப்போதுமே கேலியும், நெகிழ்ச்சியும், முரண்களும் கொண்டதுதான். சமீபத்திய பிணக்கை, அது சற்றே அதிகம் என்று வாசித்தவர்கள் நினைத்திருக்கக்கூடும். மற்றபடி திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நீண்ட தூரம் அங்கிருந்து போய்விட்டதாக நான் கருதவில்லை. 

‘வார்த்தைகள் மீது படரும் பனி’ மற்றும் ‘டிராகன் டாட்டூ’ இந்த இரண்டு கதைகளும் காமத்தையும், உடலையும் தாண்டி ஒரு வாழ்க்கையை பேசுகிறது. அடிப்படையில் இந்த நவீன வாழ்வில் காமம் மிகப்பெரிய பிரச்சனையாக தான் இருக்கிறது ஆனால் தொடர்ந்து அதை மட்டும் சிறுகதைகளின் மையமாக சில சமயம் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்று தோன்றுகிறது. ஒரு விமர்சனத்துக்கு மட்டும் இதை கேட்கிறேன்?

 • நான் அப்படி நினைக்கவில்லை. நம் சூழலில் காமம் அது பேசப்பட்டிருக்கவேண்டிய அளவுக்கு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் காமம் என்பது பொதுவான சொல்லாக இருப்பதால், ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த விதத்தில் பொருள்கொண்டுவிடுகிறார்கள். காமத்திற்கு எதிரான மனத்தடை நமக்கு இருக்கிறது. இது நமது மதங்களால், இதிகாசங்களால், கதைகளால் பராமரிக்கப்படுகிறது. அதனால் அதைப் புரிந்துகொள்வது மேலும் சிக்கலாகிவிடுகிறது. காமத்தை ஒரு முக்கிய வாழ்வியல் அலகாக நாம் அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கு நடக்கும் வன்முறை, சுரண்டல், ஊழல் எது குறித்தும் நாம் காத்திரமாக விவாதிக்க முடியாது. வெறும் துய்ப்பை மட்டுமே மேலோட்டமாக முன்வைக்கும் பாலியல் எழுத்தை நிராகரிக்கிறேன் என்று புறப்பட்டுப் போய் நம் ஒழுக்கவாதிகள் பாலியல் உறுப்புகளைக் கொய்து கொண்டு வந்து பெட்டியில் போட்டு மூடுவதே  நம் சூழலில் நடக்கிறது. நான் எனது எழுத்தில் கொண்டுவந்திருப்பதை விட அப்பட்டமான பாலியல் சமூகம் நம்முடையது. நாகரிகம் என்ற பெயரில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அதற்கு எதிராக சிந்திக்கவும் வாழவும் முன்வந்த சமூகமாக நாம் இருக்கிறோம். இந்த துயரத்தைப் பற்றி தொடர்ந்து பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. அது பாலியல் எழுத்து என்று வசைபாடப்பட்டாலும். 

இரண்டாவது தொகுப்பு ‘ராக்கெட் தாதா’ நல்ல கதைகள் நிறைய இருக்கிறது. ஆனால், முதல் தொகுப்புடன் ஒப்பிடும் போது சிறுகதைகள் அழுத்தம் சற்று குறைவாக இருப்பதாக தோன்றுகிறது ஏன் ? (இவை என் கருத்துகள் மட்டும்) 

 • படிப்பவர்களுக்கு அப்படித் தோன்றுவதும் இயல்புதான். ஆனால் இரண்டாவது தொகுப்பு அதன் கருவிலும் கூறுமுறையிலும் நிறைய முன்னகர்ந்திருப்பதாகத்தான் எனக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் சொல்கின்றன. எடுத்துக்கொண்ட கருவிற்குப் பயன்படுத்தும் மொழி இந்த அழுத்தம் பற்றிய பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது  என்று நினைக்கிறேன். ஒரு தீவிரமான விஷயத்தை எளிதாக சொல்கையில் வாசிப்பவர்கள் மொழியில் கரைந்து போய் கதையின் தீவிரத்தன்மையை தவறவிடக் கூடும். “சுமை” கதையில் கழுத்தறுபட்டுக் கிடக்கும் குழந்தை பற்றிய சித்திரம் உங்களுக்கு எவ்வளவு சொகுசாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மொழியின் இலகுத்தன்மை அப்படியான ஒரு தோற்றத்தை உருவாக்கலாம்.

‘லட்டு’ சிறுகதை வந்தவுடன் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருங்கே பெற்றது. இப்படி சிறுகதைகள் வெளிவரும் போது வரும் விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 • சிறுகதைகள் மீதான உடனடி விமர்சனங்கள் மற்றும் விவாதங்களை நான் மிகவும் நேர்மறையாகத்தான் பார்க்கிறேன். லட்டு கதையில், பயன்படுத்தப்பட்ட யுக்திக்காகவே அது அதிகமும் விமர்சிக்கப்பட்டது. நான் வழக்கமாக எழுதும் தொனியில் இருந்து வேறுபட்டு எழுதியதால், நான் தொலைந்து விட்டதாக நினைத்து சிலர் பதறிவிட்டார்கள். அந்தக் கதைக்கு அடுத்து “சுமித்ரா” என்று ஒரு நயம் யதார்த்தவாதக் கதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். துரதிஷ்டவசமாக லட்டு கதைக்கு முன்பே அது பிரசுரம் ஆகிவிட்டது. லட்டுவில் கொஞ்சம் பாலியல் சித்தரிப்பு தூக்கலாக இருக்கிறது என்று வேறு ஆதங்கப்பட்டார்கள். எனக்கு அதுவே கம்மி என்றுதான் தோன்றியது.
ஜி.கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுப்புகள்

 

‘ராக்கெட் தாதா’ தொகுப்பில் கடைசி சிறுகதை ‘பிராத்தனை’நிச்சயமாக அது வழக்கமான கார்ல் மார்க்ஸ் பாணி அல்ல கொஞ்சம் வித்தியாசமான நல்ல முயற்சி அதை மாதிரி தொடர்ந்து எழுத எண்ணங்கள் உண்டா?

 • எனக்கு மிகவும் பிடித்த கதை அது. ஒரே மாதிரியாக அல்லாமல் வேறு மாதிரி எழுதிப் பார்க்கும் ஆர்வம் உண்டுதான். இதை இப்படித்தான் எழுதப்போகிறேன் என்று திட்டமிட்டுக்கொண்டும் எழுதமுடியாது அல்லவா. மேலும், இப்படியான கதைகள் எழுதுகையில் புதிய முயற்சி என்று பெயர் வாங்க அலைவதாகவும் குற்றச்சாட்டு வரும். அந்தக் கதை பாப்புலராகிவிட்டால், அடடே என்று ஆச்சர்யப்பட்டு என்று என்னை கலாச்சார மந்திரியாக்கிவிடுவார்கள் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் வழியாக வளர்ந்து வந்த குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளிகள் நீங்களும் ஒருவர். சமூக ஊடகங்களின் வழியே வாசிப்பும் இலக்கிய தீவிரமும் குறைந்துவிட்டதாக குரல்கள் ஒருபுறம், இதைப்பற்றி கார்ல மார்க்ஸிடம் இருக்கும் கருத்துக்கள் என்ன?

 • இந்த விஷயத்தில் நான் போன தலைமுறை ஆள். சமூக ஊடகப் பரிச்சயம் என்று பார்த்தால் எனக்கு பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் நான் இருபதாண்டுகளுக்கு மேலாக வாசிக்கிறேன். எனது முதல் கவிதை பிரசுரமாகியது 1996 ல். சமூக ஊடகங்கள் வெளிப்பாட்டிற்கான பாதைகளை பிரம்மாண்டமான அளவில் திறந்துவிட்டன என்று சொல்லலாம். அதைத் தீவிரமாகப் பயன்படுத்தும் ஆட்களில் நானும் ஒருவன். இந்த சமூக ஊடகங்கள் இல்லை என்றாலும் கூட நான் இப்போது எழுதியிருக்கும் கதைகளை எழுதியிருப்பேன். ஆனால் இவ்வளவு கட்டுரைகள் எழுதியிருக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். அந்த விஷயத்தில் சமூக ஊடகங்களின் வீச்சும் சுதந்திரமும் அபாரமானது. அதே சமயம் எல்லாவற்றிற்கும் உபவிளைவு இருப்பது போல சமூக ஊடகங்களிலும் குறையுண்டுதான். ஆனால் அது தவிர்க்கமுடியாதது. இத்தகைய ஊடகங்களால் வாசிப்பு கூடியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் எப்படி வாசிக்கிறார்கள், எத்தகையவற்றை வாசிக்கிறார்கள் என்பதன் அடிப்படைகள் மாறியிருக்கின்றன. எதுவொன்றும் வெகுமக்கள் பங்கேற்பாக மாறும்போது அவற்றில் போலிகள் கலப்பதும் வழக்கம்தான். குறிப்பாக எல்லா ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டே, தங்களுக்கு எழுத்து மறுக்கப்பட்டது போலவும் அதைப் போராடி பெற்றது போலவும் சிலர் முன்வைக்கும் ஊளை பிரகடனங்கள். இன்றைய நவீன இலக்கியத்தில் உயர்சாதியினரின் இடம் உள்ளங்கையில் அடக்கும் அளவுக்கு சிறியதாக சுருங்கியிருக்கிறது. எழுதுபவர்கள், படிப்பவர்கள் இரண்டு தரப்புமே குறிப்பிட்ட அளவுக்கு மொழியை இழந்துவிட்டிருக்கிறார்கள். நமது கல்வியமைப்பே அதற்கு காரணம். சமூக ஊடகங்களுக்கு இரண்டாம் இடம் தரலாம். 

சமூக ஊடகங்களில் வழியே மனிதர்களின் குணாதிசயங்களை எடைபோடும் காலத்தில் வாழ்கிறோம் நாம். சமூக ஊடகங்கள் வழியே எல்லாமே இலக்கியம் என்கிற ஒரு புதுவித கோட்பாடு உருவாகியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள். உண்மையில் எல்லாமே இலக்கியமாகுமா? 

 • சமூக ஊடகங்கள் வந்த பிறகு என்றில்லை, கலை தோன்றிய காலத்திலிருந்தே இது இருக்கிறது. அவற்றை விமர்சித்தும், விவாதித்தும்தான் நாம் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறோம். என்ன ஒன்று, சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இந்த நீர்த்துப்போகும் செயல்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது. உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. கலையில் போலிகள், அசலை பதிலீடு செய்யும் அளவுக்கு மூர்க்கமடைந்திருக்கிறார்கள். கலை, அரசியல், கலையின் அரசியல் போன்ற சொற்களின் அர்த்தம் குழம்பிக் கிடக்கும் காலத்தில் இத்தகைய சந்தேகம் வருவது இயல்புதான். அதற்காக நீங்கள் ரொம்பவும் அதைரியப்பட வேண்டியதில்லை. கொள்கை மற்றும் சித்தாந்த பின்புலத்துடன் இருபதாண்டுகளுக்கு முன்பு உயர்த்தி பிடிக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளின் இன்றைய இடம் என்ன என்று பாருங்கள். உங்களுக்கே நகைப்பாக இருக்கும். அதனால் வெறும் பெயர்களை  மட்டும் சொல்லிக்கொண்டு கூத்தாடும் சிறுவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. இப்படியான entertainers இல்லையென்றால் சுவாரஸ்யம் இருக்காது. இலக்கியம் என்பது அளவில் சிறிய வஸ்து. அதுவொரு ஓரமாக வளர்ந்துகொள்ளும்.

கவிதைகள் வழியே உருவாகி வந்த கார்ல் மார்க்ஸ் கணபதி கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று வந்து விட்டார் மீண்டும் கவிதைகளுக்கு திரும்பும் எண்ணம் எதாவது இருக்கிறதா?

 • உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். நான் கவிதைகள் வழியாகவெல்லாம் உருவாகி வந்தவனல்ல. சும்மா பத்து பதினைந்து கவிதைகள் எழுதிவிட்டால் ஆச்சா. நான் அங்கு இருந்தவனே அல்ல  என்பதால் திரும்புவது என்கிற பேச்சுக்கும் இடம் இல்லை. நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. 
ஜி. கார்ல் மார்க்ஸின் நாவல்

முதல் நாவல் வரப்போகிறது. கனலி இணையதளம் சார்பாக வாழ்த்துகள்!. உங்களின் முதல் நாவல் குறித்து வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?

 • உங்களது வாழ்த்துக்கு நன்றி!. கும்பகோணம் பகுதி வேளாண் சமூகப் பின்னணியில், மூன்று தலைமுறை ஆட்களின் வழியாக நவீன வாழ்க்கையைப் பற்றி அதன் தத்தளிப்புகளைப் பற்றி பேசுகிறது “தீம்புனல்” நாவல். தனி மனித உணர்வுகள், சமூகம், அரசியல், சாதி என்று எல்லாவற்றைக் குறித்தும் அச்சமின்றி உரையாடுகிற சுவாரஸ்யமான நாவல். 

எழுதுவதை எப்போதாவது மன அழுத்தம் தரும் விடயமாக இருப்பதாக நினைத்து இருக்கிறீர்களா.?

 • ஆமாம், பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். நாம் உணராமலேயே அதுவொரு அழுத்தத்தை நம் மீது தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது என்று அஞ்சுகிறேன். எளிதான, பார்வைக்குப் புலப்படாத சில விஷயங்களை நமக்கு மட்டும் திறந்து காட்டி நம்மை மேலும் அதனுள் பிணைக்கும் வேலையையும் அது செய்கிறது. பாராட்டோ விமர்சனமோ அதை ஒரே மாதிரி எடுத்துக்கொள்வதற்கு முயல்கிறேன். அது சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. ஏதோ ஒன்றை புதிதாகச் செய்கிறோம் எனும் எண்ணமே  இதில் தொடர்ந்து செயல்படவைக்கிறது. இதில் இருக்கும் செலிப்ரிட்டி ஸ்டேடஸ் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். குபீரென்று சிரித்துவிட்டேன். தமிழில் எழுதுபவனைப் பார்த்து கேட்கக் கூடாத கேள்வி அது. எனக்கு தமிழ் அளவுக்கு ஆங்கிலமும் எழுத வந்தால் நான் ஆங்கிலத்தில்தான் எழுதியிருப்பேன். அதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக அரசியல் கட்டுரைகள். 

தொடர்ந்து இலக்கியம் ஏன் வாசிக்கப்பட வேண்டும் அல்லது ஏன் இலக்கியம் எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் ,இன்னும் இலக்கியத்தின் தேவை இங்கு இருக்கிறதா? 

 • இந்த நீண்ட வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டக் கூடியதாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் இதை எவ்வளவு காலம் செய்துகொண்டே இருப்பது எனும் அன்றாடங்களின் சலிப்பிலிருந்து வெளியேறும் முயற்சியே கலையாக வெளிப்படுகிறது. இந்த எத்தனமே கலை மற்றும் கலைக்கு எதிரான பூசலாகவும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நமக்கு வேறு கதியில்லை என்பதே வாசிப்பதற்கான அடிப்படை. எழுதுவதற்கும் அதுதான்.

நேர்கண்டவர்: க.விக்னேஷ்வரன்

4 COMMENTS

 1. நேர்காணல் சுவாரசியமாக இருக்கிறது. ராக்கெட் தாதா தொகுப்பை வாசித்திருக்கிறேன்.
  கட்டுரையாளர், புனைவு எழுத்தாளர் குறித்தக் கேள்விக்கு எழுத்தாளர் கூறியிருப்பதில் எனக்கொரு சந்தேகம். புனைவெழுத்தில் கட்டுரையின் கூறு வரலாம். ஆனால் கட்டுரையில் புனைவின் கூறுகள் வருமா?

  • வாசிப்பின்பின்பம் மற்றும் சுவாரஸ்யம் என்று வருகையில் கட்டுரை என்பது வெறும் தகவல்களின் தொகுப்பாக மட்டும் இல்லாமல் புனைவின் சில கூறுகளையும் கொண்டிருக்க முடியும். சொல்லும் முறையில், அடுத்து என்ன நடக்கும் என்று அனுமானம் செய்கையில் ஒரு புனைவெழுத்தாளன் கட்டுரையின் போக்கை சற்றே மாற்றிக் காட்ட முடியும். அதையே நான் சொல்ல வருவது. நன்றி!

 2. ஜி.கார்ல் மார்க்ஸின் கனலி இணையத்திற்கான நேர்காணல் புதிய எழுத்தாளர்களுக்கு ஆக்கங்களையும் ஊக்கங்களையும் தருவதாக அருமையான நேர்காணல்.
  -தஞ்சிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.