இந்த சிறுநகரத்தில்
தன் பத்தொன்பதாவது வயதில்
தந்தையின் செல்ல இளவரசி
புல்லட் ஓட்டத் தொடங்கினாள்
தொப்பி ஹெல்மெட் அணிந்து
கருங்கூந்தல் காற்றில் பறக்க
அவள் அனாயசமாக ஓட்டுவதில்
அதிர்ச்சியடைந்த சிறுநகரம் கேட்டது
ஸ்கூட்டி ஓட்டும் பெண்களுக்கு புல்லட் எதற்கு?
ஏற்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
தவித்த நகரத்தின் நெஞ்சத்தில்
அனுதினமும் புல்லட்டின் சத்தம்
கடுமைகூடி ஒலித்தது.
அவளையும் புல்லட்டையும்
அடக்க ஒருவன் வாய்ப்பான்
என்றும்
புடவை அணியும் காலத்தில்
புல்லட் ஓட்டமுடியாதென்றும்
பேசிக்கொண்டார்கள்-வந்தவனோ
அவளையும் புல்லட்டையும்
ஒருங்கே காதலித்தவன்
அவளுடைய இதயத்திலும்
புல்லட்டின் பில்லியனிலும்
அவனுக்கு இடம் கிடைத்தது.
பிள்ளைப்பேறுக்குப் பின்
எப்படியும் புல்லட்டை விட்டாகவேண்டுமென்று
அவள் காதுபடவே
நகரம் முணுமுணுத்தது
அதற்கெல்லாம் அசராதவள்
ஒரு புல்லட்குட்டியைப் பெற்று
முன்னால் அமரவைத்து ஓட்டினாள்
மறுக்க முடியாத ஒன்றை
ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்
பெண்ணின் தீர்க்கத்துக்கு முன்னால்
உலகம் பணிந்துதான் ஆகவேண்டும்
இப்போதெல்லாம்
புல்லட்டின் சத்தம் கேட்கும்போதே
நகரம் மொத்தமும்
புல்லட்டின் பில்லியனில்
தொற்ற முயன்று விழுவதும்
அதனைக் கண்டு
அவள் மார்புகள் சுரப்பதுமான
விந்தை விளையாட்டு
அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
-குணா கந்தசாமி
அருமை குணா
செம்மை