லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில் இழைந்து புல்வெளியை ஒட்டித் தவழ்ந்து கொண்டிருந்தது. முழங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.முகத்தில் மிக மெல்லிதான புன்னகை படர்ந்திருந்தது.சமயங்களில் அவள் உண்மையிலேயே புன்னகைக்கின்றாளா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு இருந்தது அந்தப் புன்னகை.அவளது தலை அலங்காரமும் கன்னக்கதுப்பின் செம்மையும் பாரிசில் முன்பு வசித்த மேல்தட்டுப் பெண்களின் நவநாகரிகத்தை ஒத்திருந்தது.
லூயிக் இதற்கு முன்பும் ஒரு சிலமுறை அவளை இதே இடத்தில் பார்த்திருக்கிறான். நீண்ட பூங்காவின் இறுதிப் பகுதியை நோக்கிச் செல்லும் பகுதி அது. பூங்காவின் சந்தடியிலிருந்து விலகி அமைதியை விரும்பும் சிலர் மட்டும் அங்கு சென்று அமர்வதுண்டு.
லூயிக்கும் வழக்கம்போல அவளுக்குப் பின்புறமிருக்கும் நடைபாதையின் வழியே சென்று விடுவதால், அவளது முகத்தை இதுவரை அவன் கவனித்திருக்கவில்லை.இந்தப் பூங்காவிற்கு அடிக்கடி வருபவனாக இருந்தும் இவ்வளவு அழகான ஒருத்தியை இதுவரை கண்டு கொள்ளாமல் விட்டதற்காகத் தன்மீதே அவனுக்குக் கழிவிரக்கமும் கோபமும் உண்டானது.
இத்தனை காலத்திற்குள் அவளுக்கு எத்தனை காதலர்கள் வாய்த்திருக்கிறார்களோ!
லூயிக் தோனாடியூ பாரிஸ் நகரத்தின் மியூசி கர்னேவாலே அருங்காட்சியகத்தில் காப்பாளனாக இருந்தான்.புராதனமானதும் மதிப்புமிக்கதுமான பொருட்களுடன் தனது நேரத்தை செலவிடுவதில் எப்பொழுதும் தோய்ந்து போயிருந்தான்.காலையில் எல்லோரும் வருவதற்கு முன்பாகவும் மாலையில் எல்லோரும் சென்று விட்ட பிறகும் வெகுநேரம் அவற்றுடன் தனிமையில் இருப்பது அவனுக்கு மிகப் பிடித்தமான விஷயம்.அவனது நாளின் பெரும் பகுதியை அவன் மியூசியத்திலேயே செலவிட்டான்.
அன்றைய தினம் பணியில் இருந்தபோது பூங்காவில் பார்த்த பெண் அடிக்கடி நினைவில் வந்து போனாள்.மாலைப்பொழுதானதும் பரபரப்படைந்தான் லூயிக்.வேலை அதிகமாகி விட்டது.நேற்றைக்கே மீண்டும் வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்தபொழுது இருட்டத் தொடங்கியிருந்தது.
பூங்காவில் மாலை முடிந்து இரவின் களை நிரம்பியிருந்தது. புற்களின் மீது தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் அவற்றின் கிளைகளில் முத்துக்கள் போல உருண்டு கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன.பூங்கா மூடப்பட இன்னும் நேரமிருந்தது.பூங்கா முழுக்க விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன.குழந்தைகள் பெரும்பாலும் வீடுகளுக்குத் திரும்பி இருந்தனர்.சில முதியவர்களையும் காதலர்களையும் அங்கங்கே காணமுடிந்தது.
வழக்கமாக அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விரைந்தான் லூயிக். அவளுக்கு அருகில் உயரமான அரண்மனை விளக்குகள் ஒளியை விசிறிக் கொண்டிருந்தன. கருப்பு நிற வண்ணம் பூசப்பட்ட பூப்பின்னல் வேலைப்பாடுகள் நிரம்பிய சாய்வுப் பலகையில் அவள் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு நேர்முகமாகச் சென்று அவளைப் பார்க்க வேண்டும். முடிந்தால் அவளின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
அவன் ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் போய் நின்றான்.
லட்சம் லாந்தர்களை ஏற்றி வைத்தது போல விளக்குகள் அவள் மீது மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.பொன்னிற ஒளியில் அத்தனை அருகாமையில் அவளது முகத்தைப் பார்த்தான்.அவளது உதடுகளில் அதே புன்னகை.நேற்று மாலையில் பார்த்தது போல் இல்லாமல் இப்போது அந்தப் புன்னகை மிகவும் வசீகரமாக இருந்தது.அந்தக் கண்கள்… ஒட்டுமொத்த உயிரையும் அவள் கண்களில் நிறுத்தியிருந்தாள்.அழகும் அதிகாரமும் நிரம்பிய கண்கள்.
அரசனின் அந்தப்புரத்திலிருந்து அவனை ஆளும் பேரரசியைப் போல அவள் இருந்தாள். இத்தனை அழகாக எந்தப் பெண்ணையும் இதுவரை அவன் பார்த்ததில்லை.
மூர்ச்சையாகி விடும் பயத்தில் விளக்குக்கம்பத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.கண்களை ஒருமுறை மூடித்திறந்தபோது, கன்னங்களின் ரோஜா நிறமும் விளக்கின் மஞ்சள் ஒளியும் கலந்து இதுவரை பார்த்திராத ஒரு புது வண்ணத்தில் அவள் முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அப்போது அவள் மீது அவன் ஒரு விசித்திரமான உணர்வுக்கு ஆட்பட்டான்.
பாரிஸ் நகரத்தின் சீமான்கள் மாதம் ஒருமுறை நடைபெறும் ஏலத்தில் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து அருங்காட்சியகத்தின் கலைப் பொக்கிஷங்களை வாங்கிச் சென்றனர். உண்மையில் அவர்கள் யாரும் அவற்றின் மதிப்பை உணர்ந்தவர்களாக அங்கு வரவில்லை.அப்பொருட்களை சொந்தமாக்கிக் கொள்வதும் அவற்றைப் பற்றி உயர்தட்டு மக்களின் தேநீர் விருந்தில் பெருமிதத்துடன் உரையாடுவதும் அவர்களுக்கு மதிப்பானதொரு விஷயமாக இருந்தது.
கலைப் பொக்கிஷத்தை வாங்குவதற்காக அவர்கள் செலவிட்ட பெரிய தொகையையும் கலைப் பொக்கிஷத்துடன் இருக்கும் மிடுக்கான புகைப்படத்தையும் லா கெஸட் இதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டது.
சீமான்கள் தாங்கள் வாங்கிய அரும்பொருட்களை விட இதழில் வெளியாகும் தமது புகைப்படத்தை அதிகம் ரசித்தனர்.
லூயிக்கிற்கு உயிருள்ள இவர்களை விட உயிரற்ற பொருட்களின் மீதுதான் காதல் அதிகம் ஏற்பட்டது.அவனைப் பொறுத்தவரையில் நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களைப் போலவே இறந்த காலத்தின் வரலாறுகளும் மனிதர்களும் இருந்தனர். உறைந்திருக்கும் அவர்களின் மௌனத்தை நெருங்கியபோது அவர்கள் தங்கள் கதைகளைக் கூறத் தொடங்கினார்கள்.வாள்களும் கேடயங்களும் சாவின் வாய் திறந்து எப்போதும் அவனிடம் பேசின.
அவளைப் பார்த்து விட்டு வந்த இரவு முழுவதும் லூயிக் உறங்கி இருக்கவில்லை.இரவுகளிலும் அவற்றின் கனவுகளிலும் அவள் நிரம்பி வழிந்தாள்.அடுத்தநாள் முதல் தினமும் இரவு தொடங்குவதற்காக அவன் காத்திருந்தான்.மாலையில் பூங்காவை நோக்கிய அவனது நடையில் விரைவு இருந்தது.பூங்காவில் அவளை நெருங்கியதும் அவனுக்கு ஒருவித படபடப்பு ஏற்பட்டது.சற்றுநேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் விரைவில் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
பூங்காவில் இருந்த ஒருவரும் அவர்களைக் கவனிக்கவில்லை.
இப்போதெல்லாம் லூயிக் தினமும் அந்திப்பொழுதில் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தான். காதல் கனியும் அந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டே அவளுடன் உரையாடுவதும் வெண்மை ரோஜா வண்ணத்திலான கைகளைப் பற்றிக்கொள்வதும் அவனுக்குப் பரவசமூட்டுவதாக இருந்தது.அவன் அந்தப் புதுவிதமான உணர்ச்சியை மிகவும் விரும்பினான்.அவன் மெல்ல மெல்லவும் முழுமையாகவும் அவளால் ஈர்க்கப்பட்டிருந்தான்.
மாத இறுதியில் ஏலம் அறிவிக்கப்பட்டது.மியூசி கர்னேவாலேவில் ஏலம் விடப்படும் பொருட்கள் ஒரு வார காலம் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.மியூசியத்திற்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. அப்பொருட்களைப் பார்ப்பதற்காக வரக்கூடிய மக்கள் மீது லூயிக்கிற்கு எப்போதும் அருவருப்பும் கோபமும் இருந்தது.ஒய்யார நடை போட்டபடி மிக எளிதாக அவற்றைக் கடந்து செல்லும் சிலரைக் கழுத்தைப் பிடித்து மியூசியத்திற்கு வெளியே தள்ளிவிட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்.
அன்றைய தினம் மேயரின் மணவாட்டி ஏலத்திற்கு வைக்கப்பட்டிருந்த கலைப் பொக்கிஷங்களைப் பார்வையிட வந்திருந்தாள். லூயிக் அமைதியாக அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.அவளுக்கு எந்தப் பொருளின் வரலாறும் தேவைப்படவில்லை.அங்கே வைக்கப்பட்டிருந்த பழங்கால வைர நெக்லஸைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.அதனைப் பற்றி அவனிடம் கேட்டாள்.லூயிக் மிகவும் மகிழ்ச்சியோடு அதனை உரிமை கொண்டிருந்தவர்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்கினான்.
மேயரின் மணவாட்டி அசுவாரசியமாக அவனைப் பார்த்தாள். அங்கிருந்து கடந்து செல்ல முயன்றாள்.லூயிக் அவளது கவனத்தைப் பெறுவதற்காக உரத்த குரலில் பேசலானான்.அவள் மேலும் முன் நகர்ந்தாள்.அவன் கோபத்தின் உச்சத்தில் அவளின் தோள்களைப் பற்றி உலுக்கி நிறுத்த முயன்றான்.அவள் வீறிட்டு அலறினாள்.
மேயரின் மணவாட்டியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக மியூசி தி லா வி ரொமாந்திக்கிற்குப் பணிமாற்றம் செய்திருப்பதாக அருங்காட்சியகத்தின் தலைவரிடம் இருந்து லூயிக் தோனாடியூவிற்குக் கடிதம் வந்தது.அவன் அதனைப் படித்துவிட்டு அதன் பின்னாகக் கிறுக்கினான்.
“அவள் பீர் போத்தலின் மூடியைத் திறந்திராவிடில் அது பொங்கியிராது “
தனது காதலியைப் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற நிலையை லூயிக் விரைவில் அடைந்தான்.அமைதியும் அழுத்தமும் நிரம்பியவையாக அவளைப் பிரித்து வைக்கும் இரவு இருந்தது. காலையிலும் சந்தித்துக் கொள்வதற்கு அவளிடம் வேண்டினான்.அவன் சந்தித்த எந்தப் பெண்ணும் அவனை நிராகரித்தனர்.இவள் அவனுக்கு எப்போதும் மறுப்பு சொல்லாதவளாக இருந்தாள்.
காலையில் லூயிக் வந்தபொழுது பூங்கா வேறு முகமாக இருந்தது.பணியாளர்கள் புற்களை செதுக்கிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பலர் தனிமையில் அமர்ந்து இருந்தனர்.சில காதலர்களும் இருந்தனர்.பறவைகளின் சத்தமும் புல் வெட்டும் கத்தரிக்கோல்களின் சத்தமுமாக அந்த இடம் அன்னியப்பட்டு இருந்தது.அவன் அவளைப் பார்த்துவிட்டான்.
ஆனால் அவள் தனியாக இல்லை. அவளின் அருகில் வேறு ஒருவன் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு அந்த இடமும் சூழ்நிலையும் பிடிக்கவில்லை.உடனடியாக அங்கிருந்து திரும்பி விட்டான்.அவனது மனம் மிகுந்த கலக்கத்தில் ஆழ்ந்தது.
மீண்டும் மாலையில் பூங்காவிற்கு வந்தான்.அவனால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.ரோஜாவுக்குள் உறைந்திருக்கும் இரவுப் பனியைப் போல வெகுநேரம் அவர்களிடையே அமைதி நிலவியது. இனி இரவுகளில் மட்டுமே அவளை சந்திப்பதாகக் கூறிவிட்டு எழுந்து சென்றான்.
அந்த இரவு அவனுக்கு மிக நீண்டதாக இருந்தது.
லூயிக் தனது புதிய பணியை ஏற்றுக் கொண்டிருந்தான்.பிரெஞ்சு அரச குடும்பத்தினரின் பொக்கிஷங்களுக்கான அருங்காட்சியகமாக இருந்தது மியூசி தி லா வி ரொமாந்திக். அவன் பொறுமையாக அவர்களின் வரலாறுகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.அவர்களின் ஓவியங்கள் மிகுந்த உயிர்ப்புடன் இருந்தன.வெகு விரைவிலேயே அரச குடும்பத்தினர் நடுவில் தானும் வாழ்வதைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.நிகழ்கால வாழ்வின் துயரம் அழுத்தும் வேளைகளில் அவன் இறந்த காலத்திற்குள் சென்று தன்னைப் புதைத்துக் கொண்டான்.
லூயிக்கின் நண்பன் ஆந்த்ரே வந்திருந்தான்.லூயிக்கின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருப்பதாக உடனிருப்பவர்கள் பேசிக்கொண்டனர். லூயிக் பழைய பாணியிலான பிரெஞ்சு இளவரசனைப் போல இருப்பதை விரும்பினான்.அவளுக்குப் பிடிக்குமென பழங்கால உடைகளையும் விக்குகளையும் கூட அணிந்து கொள்ளத் தொடங்கியிருந்தான்.
மியூசியத்தில் பணிபுரிவதற்காக நீ இப்படியெல்லாம் இருந்தாக வேண்டுமா?வோட்காவை நிரப்பிக் கொண்டே ஆந்த்ரே கேட்டான்.
லூயிக் அதனை ஒதுக்கி விட்டு காக்டெயிலைக் கையில் எடுத்துக் கொண்டான்.
அவள் ஒரு ரஷ்யன்-பிரெஞ்சு காக்டெயில்.அவன் உதடுகள் முணுமுணுத்தன.
ஆந்த்ரேவுக்கு எதுவும் புரியவில்லை.
காக்டெயிலை அருந்தி முடித்த சற்றுநேரத்தில் லூயிக் இனி அவள் இல்லாமல் உயிர் வாழ்வது கடினம் என்று நினைத்துக்கொண்டான்.மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவன் அங்கிருந்து வெளியேறினான்.
ஆந்த்ரேவால் அவனைத் தடுக்க முடியவில்லை.
நீ என்னை விரும்புகிறாயா கேத்தரின்?
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.அவன் மனம் மிகுந்த துயரமடைந்தது.
லூயிக் நடுங்கும் கரங்களால் கோட் பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை எடுத்து மண்டியிட்டு அவள் முன் நீட்டினான்.அவனது தலை கவிழ்ந்திருந்தது. நடுங்கும் வார்த்தைகளில் பேசத் தொடங்கினான்.
நீ ஒரு இளவரசி
நீ என்னை விரும்ப வேண்டும் என்கிற அவசியமில்லை என்றாலும்,
நான் உன்னை என் அந்தராத்மாவிலிருந்து நேசிப்பதை உணர்ந்து கொள்.
கசிந்த கண்களுடன் நிமிர்ந்து பார்த்தான்.
அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
மியூசி தி லா வி ரொமாந்திக்கிலிருந்து விலையுயர்ந்த வைர மோதிரம் பொக்கிஷக் காப்பாளனால் திருடப்பட்டு விட்டதாகக் கர்னலுக்குத் தகவல் வந்தது.
அது கேத்தரின் ஆப் வுட்டன்பர்க்கின் திருமண மோதிரம்.
கேத்தரின் ஆப் வுட்டன்பர்க் ஒரு ரஷ்ய இளவரசி. பிரெஞ்சு மாமன்னர் நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரன் ஜெரோம் போனபார்ட்டின் மனையாட்டி. பேரழகி.
லூயிக் தோனாடியூ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.வீடென்று சொல்ல முடியாத அவனது சிறிய அறை முழுக்க சோதனையிடப்பட்டது.ஆந்த்ரே விசாரணைப்படுத்தப்பட்டான்.லூயிக் தினமும் செல்லக்கூடிய இடங்களில் அவனைத் தேடினர்.
பூங்காவில் அருங்காட்சியகத் தலைவரும், கர்னலும், மேயரும் அவளைச் சுற்றி நின்றிருந்தனர்.
அருங்காட்சியகத் தலைவர் அவளைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தார்.அவள் அருங்காட்சியகத்தில் இருக்கும் கேத்தரின் ஆப் வுட்டன்பர்க்கின் ஓவியத்தை ஒத்திருந்தாள்.
கர்னலுக்கு அவர் கூறும் உருவ ஒற்றுமை ஆச்சரியமான தற்செயல் என்று தோன்றியது.
மியூசியத்திலிருந்து ஓவியப் பிரதி தருவிக்கப்பட்டது.
அதைப் பார்த்த மேயரின் முகம் பிரகாசித்தது.
பெரும் தொகைக்கு விற்பனை செய்வதற்கான கலைப்பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்கிறது
ஏலத்திற்கு அறிவிப்பு செய்யுங்கள்.
நாம் இவளை மியூசியத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.மேயர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதா? மேயர் கர்னலிடம் கேட்டார்.
திருடன் அவனது திருட்டுக்குப் பிறகு மறைந்து போய் விடுவான்.இவன் ஒரு காதல் முற்றிப்போன பித்துக்குளி.
தன் காதலியைத் தேடி நிச்சயம் வருவான் கேத்தரினின் காதலன்.
அவர்கள் சிரித்துக் கொண்டனர்.
அவர்கள் முன்,
பூப்பின்னல் வேலைப்பாடுகள் நிரம்பிய கருப்பு நிற சாய்வுப்பலகையில், வெண்பளிங்கில் இழைக்கப்பட்ட பேரழகான பெண் சிலையொன்று புன்னகையுடன் வீற்றிருந்தது.அதன் கை விரலில் கேத்தரின் ஆப் வுட்டன்பர்க்கின் வைர மோதிரம் மிளிர்ந்தது.
–வாணி ஆனந்த்
கேத்தரின் காதலன் அருமை.
வாழ்த்துக்கள் வாணிஆனந்த்
நன்றியும் மகிழ்வும்
சிறப்பு
நன்றி