Tuesday, Jan 25, 2022
Homeபடைப்புகள்சிறுகதைகள்ஆசை முகமறந்து – பா. கண்மணி

ஆசை முகமறந்து – பா. கண்மணி


ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே…. அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம் பூசிக்கொண்ட வீதி சோபையாகத் தெரிந்தது. இந்த வழியே அவன் கடந்து போகலாம். அடுத்த தெருவில்தான்  அவனது வீடு. இருசக்கர வாகனங்களை ஓட்டும் ஸ்லாக் அணிந்தவர்களை உற்று உற்று நோக்கினாள். அவனுக்கு முழுக்கை பிடிக்காது. வாகனங்கள் கண்ணெதிரே நழுவி நழுவி மறைந்தன. 

அப்படியே அவன் சென்றாலும் இவ்வளவு உயரத்திலிருந்து இனங்காண்பது கடினமே. ஜமீன்தார் என்ன வாகனம் வைத்திருக்கின்றானோ, ஊரில்தான் இருக்கின்றானோ அல்லது வழக்கம்போல கலியாணம், காதுகுத்து, பஞ்சாயத்து என்று பக்கத்து கிராமங்களுக்குப் போயிருக்கிறானோ? அவள் இதுபோன்ற விழாக்களையெல்லாம் தவிர்த்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வானைக் கவ்விய இருளானது, அவள் மனதையும் கொஞ்சம் கொஞ்சமாக கவ்விக் கடித்துக் குதறித் தின்ன ஆரம்பித்தது. வாதைக்கு மருந்தை இங்கு வேண்டாமென்று கொண்டு வரவில்லை. 

அவனாகட்டும், அவளாகட்டும் ஒருவரும் தங்கள் நேசத்தை சொற்களால் செதுக்கி காயப்படுத்தியதில்லை. அது ஒரு சுகந்தமாக அவர்களைச் சுற்றிச் சுற்றிப் பிணைத்தபடியே இருந்தது. அரிதாய் வாய்த்த சில நெருக்கங்களில் அதன் செறிவைத் தாளாது கிறங்கிப் போயிருக்கிறாள். சுற்றியிருந்தவர்கள் அதனை நுகராமலிருப்பது அசாத்தியம். ஆனால் இருவீட்டாருமே நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். இந்த நிமிடத்திலும் ஒரு வாடிய செண்பகப் பூவின் மணமாக அவளதை உணர்ந்தாள்.

பொறியியல் படிப்பு முடித்த சுருக்கில் ராதிகாவுக்கு வளாகத் தேர்வில் பன்னாட்டு நிறுவன வேலை கிடைத்தது. வடநாட்டில் வேலைக்குச் சென்றவள், இழப்பின் வலி மரத்துப் போகவேண்டி வெறிபிடித்தவளாக உழைத்தாள். ஒரு பிணவறையைப் போலத் தண்மையும் அமைதியும் கூடிய நாட்களவை. அங்கீகாரம் பதவி உயர்வுகளாகக் கிடைத்தது. வருடத்தில் பாதி நாட்கள் பணி நிமித்தமாக வெளிநாடுகளிலேயே கழிந்தன. உலக அதிசயங்களையெல்லாம் கண்டு களித்தாயிற்று. 

மங்கிய ஓவியமாக நேசமுகம் விரிகையில் கைபேசி அவலக்குரல் எழுப்பியது. ராதிகாவுக்கு அடுத்த கீழதிகாரி உப்புப் பொறாத சந்தேகத்தைக் கேட்டார். வந்த ஆத்திரத்தில் ‘அறிவில்லையா’ எனக் கத்திவிட்டாள். திருமணம் ஆகாதவளுக்குப் பொறுமையேதென்று முதுகுக்குப்பின் காய்ச்சுவார்கள். எருமை பொறுமையாக இருந்து அவர்களை சவாரியேற்றி முதுகைக் கொத்த அனுமதிக்கவில்லையே என்கிற ஆதங்கம். அவள் பொறுமையாக இருந்த காரணத்தினாலேயே, அவனைச் சார்ந்தவர்கள் அவளைக் குறைத்து மதிப்பிட்டனர்.  

இங்கு வருவதற்காகப் புறப்படும்போதே தன்னைத் தொல்லை செய்ய வேண்டாமென்று அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் வந்தாள். சர்க்கரைப் பாகில் எறும்புபோல வேதனையில் ஊறிக் கனத்து தன்னை மூழ்கடித்துக் கொள்ளவே அவள் விழைந்தாள்.

தம்பி, பூர்வீக வீட்டை விலை பேசிவிட்டான். அதற்காகப் பதிவலுவலகத்தில் கையொப்பமிட வந்திருக்கிறாள். நாளை காலை சகோதரன் அம்மாவோடு ஊரிலிருந்து வந்து வேலையை முடித்தவுடன் ராதிகா கிளம்பி விடுவாள். விற்ற தொகையெல்லாம் அவள் கேட்கக் கூடாது. அவளுக்குப் பிள்ளையா, குட்டியா?

இப்போது எப்படி இருப்பான் அவன்? அதே அடர்மீசை தான் வைத்திருக்கிறானோ இல்லையோ? மேலுதட்டை உள்ளிழுத்து அவ்வப்போது மீசையைக் கடித்துக் கொள்வது அவன் பழக்கம். இந்த நொடியே அவனைப் பார்க்கவேண்டும்; எழுந்தாள். இதற்காகவே அவனுக்குப் பிடித்த அடர்நீல வண்ணத்தில் புடவையொன்றை எடுத்து வந்திருந்தாள்.

மெத்து மெத்தென்ற மைசூர் பட்டு ராதிகாவுடைய பூசிய உடலை இறுக்கத் தழுவி இயன்றளவு எடை குறைத்துக் காண்பித்தது. கண் கருவளையத்தின் மேல் மறைப்பானைப் பூசி மறைத்தாள். மன அழுத்தத்தில் கூந்தல் சற்று வெலவெலத்து விட்டது. மற்றபடி அதிகம் உபயோகிக்கப்படாத அவள் இளமையை, சொகுசு வாழ்க்கை தக்க வைத்தே இருந்தது. மஸ்காரா போட்டு,மென்னிறத்தில் உதட்டுச் சாயம் பூசிக்கொண்டாள். கூந்தலில் சீரம் பூசி ப்ரெஷ் செய்தாள். ஷெனல் பெர்ஃப்யூமை விஷ்க், விஷ்க் என அடித்துக் கொண்டாள். 

ரோலக்ஸ் கடிகாரத்தைக் கட்டும்போது மணி பார்த்தால்…. எட்டாகப் போகிறது! இந்த இருட்டு நேரத்தில், அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வீடு தேடிப் போனால் விசித்திரமாகத் தெரியலாம். நள்ளிரவு வரை நண்பர்களோடு கழித்துவிட்டு வீதியுலா வந்தவன் தான். அதுபோன்ற ஓரிரவில் ராதிகா, கடைசி செமஸ்டருக்காக முன்னறையில் படித்துக் கொண்டிருந்தாள். மூன்று வீடுகள் தள்ளி அவன் நடந்து வருவது ஜன்னலில் தெரிந்தது. கமுக்கமாகக் கதவைத் திறந்து வந்து அழிக்கதவைப் பிடித்தபடி வாசலில் நின்றாள். அவளது வீட்டை நெருங்குகையில் நடையைத் தளர்த்திக் கண்ணோட்டியவன், கண்ணைக் கசக்கி அவளைப் பார்த்தான். அவள்தான் என்று ருசுவானதும் நாலெட்டில் நெருங்கினான். அவனது மூச்சிளைப்பை, அவளது நடுங்கும் மெல்லிதயம் கேட்டது. முதல்முறையாக யாருடைய குறுக்கீடுமின்றி அவர்கள் தன்னந்தனியாக. இதோ, இந்த நொடியில், அவையங்களில் துடிப்பதை சொற்களில் வடிக்கப் போகிறான்…..  தாழ்த்திய முகத்தில் அவனது மூக்குநுனி பனிச்சில்லாய் சில்லிட்டது! சில்லிப்பு முதுகுத்தண்டைத் தாக்க, ஆணின் ஒடிக்கலோன் வாசத்தில் உறைந்து நின்றாள். அவ்வளவுதான்; அடுத்த நிமிடமே விலகிப் போய்விட்டான். இன்றுவரை வேறெந்த பெர்ஃப்யூமும் அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. ஆங்கிலத்திலிருக்கும் தடித்த கல்லூரிப் புத்தகங்களை அவளது மேசையில் கண்டு அவன் மிரண்டான். அதுகுறித்து அவளது பெற்றோரின் ஏளனம்…… ஆனால் அவனுக்கு முன்னால் தனக்கு எல்லா பந்தங்களுமே துச்சம்தான் என்பதை உணர்த்தும் வழி தனக்கு அப்போது தெரியவில்லை.   

Woman at the Window 1952 Pablo Picasso 1881-1973 Presented by Gustav and Elly Kahnweiler 1974, accessioned 1994 http://www.tate.org.uk/art/work/P11362

புடவையை உருவியெறிந்து படுக்கையில் சாய்ந்தவள், பிரயாண அசதியில் சாப்பிடாமல் அப்படியே உறங்கியும் போனாள். ஆனால் இரவு முழுவதும் வழமைபோலக் கனவுகளும் நினைவுகளும் ஆழ்மனதில் பௌர்ணமி அலைகளாக உயர்ந்தெழுந்து முட்டிமோதி அறைந்தவண்ணம். ராதிகா ஆழ்ந்து தூங்குவதே இல்லையென்றாலும் இன்று அவன் அருகாமையால் அலைக்கழிப்பு அதிகம்தான்.

பின்னிரவில் விழிப்பு வந்துவிட்டது. கையெட்டும் தூரத்தில் கட்டில் சைட்போர்டில் வைத்திருந்த ஜெலூசில் மாத்திரையை எடுத்துச் சப்பாமல் வயிற்றின் வலியை அனுபவித்தபடி மல்லாந்திருந்தவள், மின்விசிறி சமைந்து தொங்கிய விதானத்தை வெறித்தாள். சாம்பல் காடாய்ப் பரந்திருந்த கிங் சைஸ் மெத்தையின்  மூலையில்  அவளுடல், குவில்ட்டிற்குள் வெடவெடத்துக் கொண்டிருந்தது. குளிர்சாதன ரிமோட்டைக் காணவில்லை. போர்வைக்கு வெளியே வந்து இருளில் தேட இன்று ஏனோ அச்சமாக இருந்தது. அவளது உள்ளும் புறமும் அடைக்கலம் தேடித் தவித்தன. 

ஒருக்களித்துப் படுத்து உடலைக் குறுக்கித் தலையணையை இறுக்கக் கட்டிக்கொண்டாள். அந்தப் பெரிய நுரைத் தலையணையில் தன்னை, தன்னிருப்பைப் புதைத்துவிடவே ராதிகா விழைந்தாள். சற்றைக்கெல்லாம் தலையணை ஈரம் முகத்தில் சில்லிட்டது. இந்த நீர்ப்பிம்பத் தவிப்பில் இன்னும் எத்தனை கருணையற்ற நீண்ட இரவுகளோ …..ஆயாசம் அழுத்தியது. இப்போது தூக்க மாத்திரை போட்டால் காலையில் எழ இயலாது.

ஒருவழியாக இருள் நீர்க்கத் துவங்கியது யன்னல்வழி தெரிந்தது. அரை மைல் தொலைவில் அவன்! எப்படித் தன்னால் இன்னும் காணாமல் இருக்க இயன்றது? இந்த கார்ப்பரேட் உலகம் தன்னைக் கல்நெஞ்சக் காரியாக்கி விட்டது. 

உதறியெழுந்தவள் இரவின் கசடுகள் போகக் குளித்து வந்தாள். சோபாவில் தாறுமாறாகக் கிடந்த  நீலச்சேலையை எடுத்து சுற்றிக் கொண்டாள். தன்னை லேசாக திருத்திக் கொண்டவளுக்குத் திருப்தி வரவில்லை. ஆனால் அதிகாலையில் இதற்குமேல் எதுவும் செய்துகொண்டால் அதீதமாகத் தெரியும். பாப் செய்திருந்த சிகையைச் சேர்த்துக் கட்டினாள். பழைய சாயலோடு சாலிடேர் கடுக்கனும் தெரிந்தது.  மிளகளவு கருப்புப் பொட்டை ஒட்டிக்கொண்டாள். அவனில்லத்தில் சகோதரியும் அவளும் துப்பட்டாவில் ஆளுக்கொரு முனையாக மணி தைத்துக் கொண்டிருந்தபோது பாழ் நெற்றியாக இருந்தமைக்காக சகோதரியை அவன் கடிந்து கேட்டிருக்கிறாள். அந்த சமயம், அவனில்லத்தில் சகோதரியும் அவளும் ஆளுக்கொரு முனையைப் பிடித்தபடி துப்பட்டாவில் மணி தைத்துக் கொண்டிருந்தனர். எனர்ஜி பாரை மெல்ல மெல்ல ஒவ்வொரு இணுக்காக மென்று தின்றாள். அப்படியும் நேரமாகவில்லை. குப்பியிலிருந்த நீரை மிடறு மிடறாக அருந்தினாள்.

அவனது மகனுக்காகக் கொண்டு வந்திருந்த மேல்நாட்டு சாக்லேட் பெட்டியை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டாள். அதன் பிரம்மாண்டம் கைப்பையை மூட விடவில்லை. மகன் அவனது தாடைக் குழியைப் பெற்றிருப்பானா? தலை வலிப்பது போலிருக்கவே, எப்போதும் கைப்பையில் வைத்திருக்கும் சின்ன ஒடிக்கொலன் குப்பியைத் திறந்து நெற்றிப் பொட்டில் சில்லென ஒற்றிக் கிளர்ச்சியுற்றாள். வாயில் டிட்பிட்ஸைப் போட்டுக் கடிக்கவும், பதற்றம் மட்டானது. 

ராதிகா, அறையைப் பூட்டித் தெருவில் நடந்தாள். வெள்ளிச் சூரியன் மரங்களின் அடர்வுகளில் ஒளிந்துப் பிடித்து விளையாடியபடியே கூட வந்தது. மிதமான குளிரும் சேர, அவள் உள்ளம் துள்ளிய துள்ளலில் நடை வேகத்தைக் கட்டுப்படுத்த ஏலவில்லை .  ஆனால் அவன் வசிக்கும் தெருவில் திரும்பியதும் கால்கள் சிக்கின. காலங்கார்த்தாலே…..ஆனால் பயணித்துக் கொண்டிருக்கும் தம்பியும் அம்மாவும் இங்கு வந்து சேர்வதற்குள்ளாகப் போய் வருவதையே அவள் விரும்பினாள். தனியே போய் நின்றால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? சேச்சே! ஒருபோதும் அவன், அவளை வரவேற்காமல் இருக்கமாட்டான். இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?

அவன் மனைவி எப்படிப்பட்டவளோ? அந்தப் புண்ணியவதி கதவைத் திறந்தால் தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொள்வாள்? தோழி என்று சொன்னால் பிரச்சினை வரலாம். தவிர, அவனிடம் வெறும் ஒரு தோழியைப்போலக் கண்பார்த்து மடைதிறந்து பேசத் தன்னால் இப்போதும் இயலாதென்றே தோன்றியது. பழைய அண்டை வீட்டார் என சொல்லலாம். பேசுகையில் தன் பார்வையில் அந்நியத்தை வரவழைத்துக் கொள்வது பாதுகாப்பு. ராதிகா அவ்வப்போது அவனோடு மனதிற்குள் பேசிக்கொண்டே இருந்தாலும் நேரில் என்ன பேசுவதென்று தயக்கமாக இருந்தது. தூர தேசத்திலிருக்கும் அவனுடைய சகோதரியைப் பற்றி விசாரிக்கலாம்.

தன்னைப் பார்த்து அவன் முகத்தில் தெரியப்போகும் இன்ப அதிர்ச்சியைக் கற்பனை செய்து புன்னகைத்தபடியே முன்னேறிய ராதிகா, பாதம் பள்ளத்தில் நொடிக்க சிரித்துக் கொண்டாள். இப்படி அவள் சிரித்து எவ்வளவு காலமாயிற்று!

அதோ, அவன் வீடு! அவளுக்குப் படபடவென்று வந்தது. அடிக்கொரு தரம் வீணே சேலைத் தலைப்பை இழுத்து இழுத்து மேலேற்றிக் கொண்டாள். ஊக்குப் போட்டும் நழுவி நழுவி விழும் தாவணியை அவள் இப்படித்தான்…. அப்போதெல்லாம் ஒல்லியாக இருப்பாள்.

வீடு நெருங்கியதும் ராதிகாவினது சாமர்த்தியமெல்லாம் அவளைத் தனியே விட்டுவிட்டு ஓடி ஒளிந்தன. தன்னை மீண்டும் அதே பதின்வயதுப் பெண்ணாக உணர்ந்தாள். உள்ளே ஒரு பரபரப்பு இங்குமங்குமாக ஓடியது. மேனியெங்கும் பரவிடும் அந்த விறுவிறுப்பை அவள் அனுபவித்தாள். தெருவில் இன்னும் நடமாட்டம் துவங்கவில்லை. பக்கத்து வீட்டு வாசலில் நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு கவனித்தாள்.

பழைய வீட்டை இடித்து கச்சிதமாகக் கட்டியிருந்தான். மதில் சுவற்றில் அமர்ந்திருந்த அண்டங்காகமொன்று இந்தப் பக்கமாகக் கழுத்தை வளைத்து-யார் நீ? என்பதாய் உருட்டி விழித்தது. இன்னும் வெள்ளைப்பூச்சு மங்கவில்லை. அவன்கூட வெள்ளைமனக் காரன்தான். எதையுமே ஒளித்து மறைத்து சாதிக்கத் தெரியாத அப்பாவி. அவனது வற்றாத விழிகளில் தான் சிக்கப்போவதை எண்ணிப் பார்த்த அவளை, ஈரத் துணியாய் நனைத்துப் போட்டது நாணம். குறுக்கே தாழப் பறந்து சென்ற தவிட்டுக் குருவிகள் அய்யோ, யோ.. யோ.. என கேலி செய்தன. 

பழைய வேப்பமரம் பசபசவென்று கிளைகளை மேலும் விரித்து அந்த வீட்டை அணைத்துக் கொண்டிருந்தது . அதன் பருத்த கிளையில் ஊஞ்சல் பலகையொன்று செல்லமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வாசல் கோலத்தில் அதையிட்ட கைகளின் நேர்த்தி தெரிந்தது. கோலமிடுவதை மறந்து போய்விட்ட அவளது விரல்களின்  ரேகைகளைக் கணிணியின் பித்தான்கள் தேய்த்துவிட்டிருந்தன. அவனாவது நிம்மதியாக இருந்தால் சரி. அற்றை நாட்களிலேயே அவன் ஒரு நடைமுறைவாதியாகத் தான் இருந்தான் என்பதும் கூடவே நினைவுக்கு வந்தது. தன் திருமணத்தைப் பற்றி விசாரிக்கப் பட்டால் தான் உடைந்துவிடக் கூடாது. அதுகுறித்து அறிவுரை எதும் சொன்னால் மௌனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். எப்போதுமே அறிவுரைகள் சொல்வதில் அவனுக்கு ஆர்வமதிகம். இதனாலேயே அவர்களுக்குள் பிணக்கு வந்திருக்கிறது. 

வெயில்படும் ஓரப் பாத்திகளில் மஞ்சளும் ஆரஞ்சும் ஊதாவும் மஜந்தாவுமாக ஜெனீவா மலர்கள், ஒரே சீராகப் பளிச்சிட்டன. மண்ணில் எங்கும் சருகோ குப்பையோ தென்படவில்லை. ஒரு பொம்மைவீடு போல இருந்த அந்த வீட்டில் நுழைந்து அதன் சுருதியைக் குலைக்க ராதிகா விரும்பவில்லை. அவன் ஒருவேளை இரக்கத்துடன் தன்னைப் பார்த்துவிட்டால்…. அதுவும் அந்த வேற்றுப் பெண்ணெதிரில், தாங்கவியலாது. எல்லாம்வல்ல காலம் அவள் பாகத்தை நீக்கிவிட்டுக் காட்சிகளை லாவகமாக மாற்றிவிட்டது.

ஆனால் ஒருமுறை, ஒரேஒருமுறை அவனைப் பார்த்துவிட்டால் போதும். பிறகெப்போது இந்த சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறதென்று மன்றாடியது மனது. அதுவும் சரிதான். ஆனால் பெரும்பாடு பட்டுப்பெட்டியிலடக்கிய ராஜநாகத்தைத் திறந்து பார்க்கவும் அச்சமாக இருந்தது. 

முல்லை வாசம் அழைத்த திசையைப் பார்த்தாள். பக்கவாட்டு மதிலில் அதே அடுக்கு முல்லை; கொடி நெற்றிப் பசுமை மங்கியிருந்தாலும், தான் படர்ந்திருந்த சுவற்றை மேன்மேலும் ஆக்கிரமித்து சில மலர்களை விரித்தவண்ணம். தாழ்வாரத்தில் பளபளவென்று துடைக்கப்பட்ட பைக் நின்றுகொண்டிருந்தது. இது அவனுடையதாகத்தான் இருக்கவேண்டும்! கலங்கிய கண்களில் முழுமையாக நிறைத்துக் கொண்டாள். ஆறு, ஏழு, மூன்று, மூன்று. அதன் எண் மனப்பாடமாகியது. இந்த சந்திப்பால் மாறப் போவது யாதொன்றுமில்லை. இதயத்தை இறுக்கிக் கொண்டாள்.

தன்னை யாரும் கவனிக்குமுன் சண்டித்தனம் செய்த பாதங்களைத்  திருப்பி வெறும் கூடாக விறுவிறுவென்று நடந்து திருப்பத்தையடைந்தாள் ராதிகா. பையில் சாக்லேட் கனத்தது. ஒருவேளை அவன் நடைப் பயிற்சி சென்றிருக்கலாம். போகும் வழியில் தனியாக எதிர்பட்டால்…. ? வேறு யாரையும் எதிர்கொள்ள வேண்டிய தர்மசங்கடமில்லை. சபலம் நடைவேகத்தை மட்டுப்படுத்தியது.

மீண்டும் சந்திக்கவே கூடாத அளவிற்கு அவர்களுக்குள் கசப்பேதுமில்லையே… அரும்பெரும் ஆசைகளெல்லாம் களவு போயாயிற்று. இந்த சிறிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அருகதை கூட அவளுக்கு இல்லையா என்ன? நாளை ஏதோவொரு தேசத்தில் அவளுயிர் பிரிந்தாலும் கட்டை வேகவேண்டாமா? தன் மரணச்செய்தி தெரியும் வேளையில் அவன் மட்டுமே உண்மையாகக் கண்ணீர் சிந்துவான். வெம்மையான  அந்த சில துளிகளில் ராதிகாவின் கட்டை வேகக்கூடும். அவளுக்குத் தொண்டை வலித்தது. 

நெஞ்சடைத்ததைப் பொருட்படுத்தாது மீள அறுந்த கூட்டைக் கட்டியது சிலந்தி; ராபர்ட் புரூஸின் சிலந்தி. கண்ணாடியணியாத விழிகளை சுருக்கி உற்று நோக்கினாள். அதோ, அங்கு தூரத்தில் வருவது…….             


பா.கண்மணி.

பகிர்:
Latest comment
  • நேர்காணல் . துயரம் வடிந்த பக்கங்கள்.

leave a comment