ஒரு நேர்காணல் -ச.இராகவன்


ங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம் கொஞ்சங்கூட இல்லை. இன்னும் பதினைந்து தினங்களுக்குள் ஓர் உளச்சிகிச்சை நிபுணரை நேர்காணல்செய்து நீர் எனக்குச் சமர்ப்பிக்கவேண்டும். தவறினால் இறுதியாண்டுப் பரீட்சையெழுத உம்மை அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

எனது இந்தக் கற்கைநெறி நிறைவடைய இன்னும் ஆறு மாதங்களிருக்கின்றன. அதுவரைக்கும் துறைத்தலைவரே கடவுள். அவர் வாக்கே வேதவாக்கு என்பதால் ஓர் உளச்சிகிச்சை நிபுணரைத் தேடிக்கொண்டிருந்தபோது, நண்பன் ரவிதான் பெரியகோவில் பாதரைப் பற்றிச் சொன்னான். பல்லேகல தடுப்புமுகாமிலிருந்த முன்னாள் போராளிகளுக்கெல்லாம் அவர்தான் உளச்சிகிச்சையளித்தவர் என்றும் இலங்கையிலுள்ள தலைசிறந்த உளச்சிகிச்சை நிபுணர்களில் அவரொருவரென்றும் அவர் எனக்கு நிச்சயமாக உதவுவாரென்றும் நம்பிக்கையூட்டினான். அவனையும் என்னுடன் வருமாறு கேட்டேன். அவன் அவசர அலுவலாகக் கொழும்புக்குச் செல்வதால் வரச் சாத்தியப்படாதென்றான். அதனால் நேற்று முன்தினம் பெரியகோவில் பாதரைச் சந்திக்க இங்கே தனியாக வந்திருந்தேன். அப்போது நீங்கள் இங்கிருக்கவில்லை. அழைப்புமணியை அழுத்திவிட்டு யாரேனும் பணியாள் வரக்கூடுமெனச் சிலநொடிகள் காத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாகப் பாதரே வந்து கதவைத் திறந்து என்னை வரவேற்றார். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படத்தில் வரும் பாதரைப்போல இருந்தார்.

நான் அவரைச் சந்திக்க வந்திருப்பதற்கான காரணத்தை என்னைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் முன்வைத்தேன். “உனக்குச் சிரிக்கத் தெரியுமா?” என்று கேட்டார். ‘இதென்ன கேள்வி? சிரிக்கத் தெரியாதவன் எவனாவது இருப்பானா?’ சற்றுத் தயங்கியபின்னர், “தெரியும்” என்றேன்.

“எங்கே கொஞ்சம் சிரித்துக்காட்டு பார்க்கலாம்” என்றார். நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. எனது துறைத்தலைவரையும் நண்பன் ரவியையும் முழந்தாழிடவைத்து மானசீகமாகச் சுட்டுத்தள்ளினேன்.

என்ன தயக்கம்? சிரிக்கத் தெரிந்தால் சிரிக்கவேண்டியதுதானே!” அவர் கொஞ்சம் கடுந்தொனியில் கேட்டார். “நாய்வேடம் போட்டுவிட்டாய். குரைத்துவிடு” எனத் தூண்டியது மனம். மதன்பொப்பை அந்தக்கணமே மானசீகக்குருவாக ஏற்றுச் சிரித்துக் காட்டினேன். “ம்… உமக்குச் சிரிக்கத்தெரிகிறது. அழத்தெரியுமோ?” எனக்கேட்டார். எனக்கு அங்கிருந்து எழுந்தோடிவிடத் தோன்றியது.

“சரி! பதட்டமடையாதே. உன்னை நான் அழச்சொல்லிக் கேட்கப்போவதில்லை” என்று அவர் சொன்ன பின்புதான் நான் இயல்புநிலைக்கு வந்தேன். 

“நீ என்னை நேர்காணல் செய்வதற்குத் தேர்ந்தெடுத்த காரணமென்ன?”

இந்தக்கேள்வி நான் எதிர்பார்த்ததுதான். அதனால் தயக்கமின்றிப் பதிலளித்தேன். “நீங்கள் இலங்கையிலுள்ள தலைசிறந்த உளச்சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். பல்லேகல தடுப்பு முகாமிலிருந்த 53 முன்னாள் போராளிகளுக்கு உளச்சிகிச்சையளித்திருக்கிறீர்கள்”

“ம்…இந்த இரண்டு தகவல்களும் என்னை நேர்காணல் செய்யப் போதுமானவையெனக் கருதுகிறாயா?” எனக் கேட்டார். என் உடன்பாடான பதிலால் அவர் என்னால் விடை யளிக்கமுடியாத வேறு கேள்விகளைக் கேட்பதற்கு இடமளிக்காமல் நேர்மையுடன் “இல்லை” எனப் பதிலளித்தேன். அவர் எழுந்து உள்ளேபோய் சில நிமிடங்கள் கழித்து கையிலொரு பச்சைநிறக் கோவையுடன் வந்து அதை என்னிடம் தந்துவிட்டு, “இந்தக் கோவைக்குள்ளிருக்கும் ஒவ்வொரு ஆவணத்தையும் உன்னிப்பாகப் பகுப்பாய்வுசெய்து, என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தயார்செய்துகொண்டு இருதினங்கள் கழித்து வா. உனது கேள்விகளுக்கு வாய்மொழிமூலமாகப் பதிலளிக்கப்படும். அதை நீ எழுதிக் கொள்ளலாம் அல்லது குறிப்பெடுத்துக்கொள்ளலாம். கேள்வியொன்றுக்கு ஒருதடவைக்கு மேல் பதிலளிக்கமாட்டேன். ஒலிப்பதிவுக்கருவி பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன். ஓர் உளப்பகுப்பாய்வு மாணவனென்ற வகையில் உனது கிரகிக்கும் ஆற்றலையும் ஆளுமைத் திறனையும் மேம்படுத்துவதற்காகவே இந்நிபந்தனைகளை விதித்துள்ளேன். நான் உனக்குக் குறிப்பிட்டுள்ள தினத்தில் சரியாகக் காலை ஒன்பதுமணிக்கு மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம்” என விடைகொடுத்தார்.

அவர் சொன்னபடியே அந்தக் கோவைக்குள்ளிருந்த ஒவ்வொரு ஆவணத்தையும் கடந்த இரு தினங்களாக உன்னிப்பாகப் பகுப்பாய்வுசெய்து, அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தயார்செய்துகொண்டு இன்று காலை சரியாக 8.45 மணிக்கு இங்கே வந்து காத்திருக்கிறேன். இங்கே உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான். என்னோடு சற்றே நெருக்கமாகப் பழகியவர் என்றவகையில் எனது கிரகிக்கும் ஆற்றல் எத்தகையதென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் பாதருடனான நேர்காணலின் ஒலிப்பதிவையே முற்றுமுழுதாக நம்பியிருந்தேன். அதற்குத் தடைவிதிப்பார் என நான் எதிர்பார்க்கவேயில்லை. கேள்வியொன்றுக்கு ஒரு தடவைக்குமேல் பதிலளிக்கமாட்டேன் என்றும் சொல்லிவிட்டார். சுருக்கெழுத்துத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்நேர்காணலை முழுமையாக எழுத்துவடிவில் கொண்டுவரமுடியும். எனக்கோ அதுவும் தெரியாது. இப்போது குறிப்பெடுத்துக்கொள் வதே சாத்தியமானது. இன்னும் சிலநிமிடங்களில் பாதர் வந்துவிடுவார். நீங்கள் எங்களுடன்தானே இருக்கப் போகிறீர்கள்? இந்நேர்காணல் முடிந்ததும் மறுபடியும் பேசிக் கொள்ளலாம். அதோ பாதர் வந்துகொண்டிருக்கிறார். 

“நான் சொன்னபடியே சரியாக ஒன்பதுமணிக்கு வருகை தந்தமைக்கு உன்னைப் பாராட்டத்தான்வேண்டும்…” என்று கூறிக்கொண்டே எனக்கருகிலிருந்த சாய்வுநாற்காலியில் பாதர் உட்கார்ந்துகொண்டார். நான் எழுந்துநின்று தலைசாய்த்து “குட்மோர்னிங் பாதர்” என்றதும், “குட்மோர்னிங்! குட்மோர்னிங்! இதையெல்லாம் நான் எதிர்பார்ப்ப தில்லை. உட்கார்ந்துகொள்” என்று கையமர்த்தினார். நான் உட்கார்ந்ததும், “எங்கே நான் உன்னிடம் தந்த கோவை?” எனக்கேட்க, பத்திரமாக எடுத்துக்கொடுத்தேன்.

“சரி! இப்போது நேர்காணலைத் தொடங்கலாம். உனது முதலாவது கேள்வியைக் கூறு” என்று அவர் சொன்னவுடன் நான் ஆரம்பித்தேன்.

“சுஜாதா – நத்தை புது பிளேட் என்பது என்ன?”

“அட! இப்படியும் ஒரு கேள்வியா? பரவாயில்லை. கேள்வி எவ்வாறிருந்தாலும் பதிலளிப் பது எனது கடமை. இது தனிநபருக்கு உளச்சிகிச்சையளிக்கும்போது தேவைப்படாது. ஆனால், ஒரேநேரத்தில் பலருக்கு உளச்சிகிச்சையளிக்கும்போது இந்த அணுகுமுறை பின்பற்றப்படும். உளச்சிகிச்சையளித்தல் என்பது பாடசாலை வகுப்பறையில் கற்பிப் பதோ, பல்கலைக்கழகத்தில் விரிவரையாற்றுவதோ அல்ல. அங்கெல்லாம் சிக்மன் புரொய்ட்டை எடுத்துக் காட்டிவிட்டுப் போய்விடலாம். ஆனால், உளச்சிகிச்சையளித்தலில் அது சாத்தியமாவதில்லை. ஏனெனில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒவ்வொருவருக் கும் சிக்மன் புரொய்ட்டைத் தெரிந்திருக்குமென எதிர்பார்க்கமுடியாது. இந்நிலையில் சிக்மன் புரொய்ட்டை எடுத்துக்காட்டினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கும். உளச்சிகிச்சையின்போது இது விரும்பத்தக்க தொன்றல்ல. எனக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கும் நெருக்கம் இருக்க வேண்டுமே தவிர, இடைவெளியென்பது இருக்கவே கூடாது. அதற்காகத்தான் எழுத்தாளர் சுஜாதாவை எடுத்துக்காட்ட முன்வந்தேன். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மிக அநேகருக்கு சிக்மன் புரொய்ட்டைவிட சுஜாதா நன்கு பரிச்சயமானவர் அல்லது நெருக்கமானவராக இருப்பார் என்பதால் இந்த ஏற்பாடு கவனத்தை ஈர்க்கும். சரி, இனி விடயத்திற்கு வருவோம். எழுத்தாளர் சுஜாதா உளச்சிகிச்சையளிப்பது தொடர்பாக என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? ‘ஒரு புது பிளேட்டின் கூர்ந்த விளிம்பில் ஊர்ந்துசெல்லும் நத்தை எவ்விதத்திலும் காயமுறுவதில்லை. அந்தளவுக்கு மெதுவாகவும் மென்மையாகவும் ஊர்ந்துசெல்லும். உளச்சிகிச்சையளிப்பதும் புது பிளேட்டின் கூர்ந்த விளிம்பில் நத்தை ஊர்ந்துசெல்வதுபோல மெதுவாகவும் மென்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று’ இதைத்தான் சுஜாதா – நத்தை புது பிளேட் எனக் குறித்துவைத்துள்ளேன்”

‘கடவுளே! முதற்கேள்விக்கே இப்படிச் சுற்றிவளைத்துவிட்டாரே. அடுத்தடுத்த கேள்வி களுக்கு…’ எனப் பதகளிக்கத் தொடங்கும்போதே, “…ம்! அடுத்த கேள்வியைக் கேள்” என்றார். என் குலதெய்வமான நரசிங்கவைரவரை வேண்டிக்கொண்டு எனது அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

“விளிம்புநிலை (Borderline) என்றால் என்ன?”

“பரவாயில்லை. இது நான் எதிர்பார்த்த கேள்விதான். விளிம்புநிலை (Borderline) என்ற சொல் 1938 காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து உளநோய் மருத்துவத்திற்கு அறிமுகமானது. இதுவோர் உணர்ச்சிமேலிட்ட நிலையாகவும் கையாளக் கடினமான ஒரு நிலையாகவும் எளிதில் தற்கொலைசெய்யக்கூடிய அபாயத்தினைக் கொண்ட நிலையாகவும் காணக்கூடிய ஒருவகை மனநோயாக அமைகின்றது (Borderline Personality Disorder). ஒரு நோயாளி என்றவகையில் நோய் அடையாளம் காணப்படாத நிலைக்கும் நோய் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை மாற்றி விடலாம் என்பதற்குமிடையிலான ஒரு விளிம்புநிலை அது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலொரு விளிம்புநிலை. ஒருவகையில் இரண்டும்கெட்டான்நிலை. கதியற்றுக் கலங்கி நிற்கும் நிலை (Borderline Patient) இதைத் தெளிவாக விளங்கிக்கொள்வதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தடுப்புமுகாமிலிருந்த போராளிகள்தான். இங்கே விளிம்புநிலை குறித்துக் கூறியிருந்த ஒவ்வொரு விடயத்தையும் நான் பல்லேகல தடுப்புமுகாமிற்கு உளச்சிகிச்சையளிப்பதற் காகச் சென்றபோது அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்த 53 முன்னாள்போராளிகளும் ஏதோவொருவகையில் விளிம்புநிலையில்தானிருந்தனர். சிலருக்கு அவர்களின் கண் முன்னே குண்டுவீச்சிலோ எறிகணைவீச்சிலோ நிகழ்ந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது இரத்த உறவினர்களினது மரணங்களினால் ஏற்பட்ட துயரம். சிலருக்குத் தங்களது குடும்பத்தைப் பிரிந்த வேதனை மற்றும் அவர்கள் இப்போது எங்கே உயிரோடிருக்கிறார்களா? அல்லது இறந்துவிட்டார்களா? என்பதைத் தெரிந்துகொள்ளமுடியாத தவிப்பும் ஏக்கமும். தமது போராட்டம் தோல்விடைந்துவிட்டதால் ஏற்பட்ட விரக்தி என இவையனைத்தும் அவர்களைத் தன்னியல்பாகவே இந்த விளிம்புநிலைக்குத் தள்ளியிருந்தன. புது பிளேட்டின் கூர்மையான விளிம்பு என எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது இந்த விளிம்பு நிலையைத்தான். நீ கேட்ட கேள்விக்கு இந்த விளக்கம் போதுமானது. அடுத்த கேள்வியைக் கேள் பார்க்கலாம்”

எக்சோடஸ் மகா இடப்பெயர்வைப் பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கடத்தலாம்?”

“இந்தக் கேள்விக்காக நானுன்னைப் பாராட்டப்போவதில்லை. இது வேறுவிதமாகக் கேட்கப்பட்டிருக்கவேண்டும். எனினும், உனது கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளிக்கப் போகிறேன்”

எக்சோடஸ் மகாஇடப்பெயர்வு பைபிளில் கூறப்பட்டதொன்றாகும். எகிப்தில் அடிமை களாக வாழ்ந்த யூதர்கள் அங்கிருந்து வெளியேறியதே எக்சோடஸ் மகாஇடப்பெயர்வு என்று சொல்லப்படுகிறது. அவ்விடப்பெயர்வின் முதல்நாளில் அந்த யூதர்கள் புளிக்க வைக்கப்படாத அப்பத்தையும் இறைச்சியையும் கசப்புக்கீரையையும் உண்ணவேண்டியிருந்தது. இந்த மரபைப் பின்பற்றி ஒவ்வொரு பாஸ்காப் பண்டிகையின்போதும் யூதக் குடும்பங்கள் அதே உணவை அருந்துவார்கள். அப்போது குடும்பத்தில் மூத்தவரொருவர் குடும்பத்தின் மிக இளைய உறுப்பினர்களுக்கு ஏன் இந்த உணவை அருந்துகிறோம் என்பதற்கான காரணத்தைக் கூறுவாராம். இந்நிலையில் தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்த ஞாபகங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன. இதேபோன்று, முள்ளிவாய்க்கால் நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் விதங்காண்போம்.

கடைசிக்கட்டப்போரின் கடைசி மூன்றுமாதங்களில் உணவிற்குப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உலக உணவுத்திட்டம் மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப்பொதிகளே உணவாகப் பயன்படுத்தப்பட்டன. அந்நாள்களில் கஞ்சிக்கொட்டில்கள் உருவாக்கப்பட்டன. ஆனந்தபுரம் சண்டைக்குப்பிறகு தேங்காய் என்பது கிடையாப்பொருளாகியது. அதனால் கஞ்சிகாய்ச்சும் போது தேங்காய்க்குப் பதிலாக இரண்டு அங்கர்ப் பால்மாப் பைக்கற்றுகளை உடைத்துக் கொட்டவேண்டியிருந்தது. அவ்விதம் காய்ச்சப்பட்ட அந்தக் கஞ்சி சுவையற்றதாயிருந்தது. அதை எவ்விதம் தயாரிப்பார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். ஒரு பெரிய அண்டாவில் நீரை நிறைத்து அரிசியைப்போட்டு முதலில் அவியவிடுவார்கள். அரிசி அவிந்ததும் அங்கர்ப் பால்மாப் பைக்கற்றுகள் இரண்டினைப் பிரித்து ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கரைப்பார்கள். பிறகு அதை அண்டாவினுள் ஊற்றிக் கஞ்சி தயாரிக்கப்படும். கஞ்சிக் கொட்டில்களுக்கு முன்பாகக் காலையிலிருந்தே மக்கள் வரிசையாக நிற்பார்கள். அந்த வரிசைக்குள்ளும் எறிகணைகள் வந்துவிழும். மக்கள் சிதறி ஓடுவார்கள். எறிகணையின் புகை அடங்கியதும் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் விலத்திக்கொண்டு கஞ்சிக்கான வரிசை நகரும் காலமொன்றிருந்தது.

இக்கஞ்சியினைப் போலவே வலைஞர்மடத்தில் ஒரு வடை தயாரிக்கப்பட்டது. இந்திய நிவாரணப் பொதிக்குள்ளிருந்து பெறப்பட்ட துவரம்பருப்பைச் செத்தல்மிளகாயுடன் சேர்த்து அரைத்து அந்த வடை தயாரிக்கப்பட்டது. அக்காலத்தில் வெங்காயத்திற்குப் பெரும்தட்டுப்பாடு நிலவியதால் செத்தல்மிளகாய் சேர்க்கப்பட்டது. இதைப்போலவே முள்ளிவாய்க்காலில் ஒரு வாய்ப்பன் தயாரிக்கப்பட்டது. உலக உணவின் நிவாரணப் பொதிக்குள் வந்த வெள்ளைமாவையும் சீனியையும் கலந்து சுடப்பட்ட அந்த வாய்ப்பன் நூறுரூபாவிற்குப் பூவரசமிலையில் வைத்து விற்கப்பட்டது. இவையெல்லாம் ஓர் ஊழிக் காலத்தின் உணவுகள். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த எக்சோடஸ் மாபெரும் இடப் பெயர்வின் முதலாவது நாளில் யூதர்களால் உண்ணப் பட்டிருந்த புளிக்க வைக்கப்படாத அப்பத்திற்கும் இறைச்சிக்கும் கசப்புக்கீரைக்கும் நிகரானவைதான் இந்தக் கஞ்சியும் வடையும் வாய்ப்பனும். எனவே, இந்த உணவுகளில் ஏதாவதொன்றை முள்ளிவாய்க்கால் நினைவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முதலில் கஞ்சிக்கொட்டில்களைக் குறியீடாக உருவாக்கிக்கொண்டு அந்தச் சுவையற்ற கஞ்சியைத் தயாரித்துப் பருகலாம் அல்லது ஒவ்வொரு வீட்டிலும் ஒருநாட்சமையலில் அக்கஞ்சியை அல்லது வாய்ப்பனை அல்லது வடையை இணைத்துக்கொள்ளலாம். தமிழ்ப்பரப்பில் இனப் படுகொலையை நினைவுகூர விரும்பும் எவரும் ஒரு குறியீடாக ஒரு குறித்த நாளில் அந்த உணவை அருந்திக் கொண்டே உடனிருப்பவர்களுக்கு அந்தநாள் ஞாபகங் களைக் கடத்தலாம். இதுவரை நான் சொன்னதெல்லாம் உனக்கு முழுமையாக விளங்கியிருக்குமென நம்புகின்றேன். இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கலாம். ஆனால் நீ கேட்டிருந்த கேள்விக்கு அது பொருத்தமாக இருக்காது. அதனால் இத்துடன் நிறைவுசெய்து உனது அடுத்த கேள்வியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”

  “பல்லேகல தடுப்புமுகாமில் உங்களால் மேற்கொள்ளப்பட்ட உளச்சிகிச்சை நடவடிக்கைகளைக் குறிப்பிடமுடியுமா?”

அடப்பாவி! இந்தக்கேள்வியை நீ முதலில் கேட்டிருந்தால் இதற்குமுன் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் அவசியமிருந்திருக்காதே! என்றாலும் பரவாயில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. அதனால் விடயத்துக்கு வருவோம்”

  நான் ஏற்கனவே உனக்கு விளிம்புநிலை (Borderline) தொடர்பாக விளக்கமளிக்கும்போது தடுப்புமுகாமிலிருந்த போராளிகள்தான் அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறி யிருந்தது நினைவுக்கு வரலாம். அதை நீ மறந்திருந்தாலும் பரவாயில்லை. இப்போது கவனமாகக் கேள். தடுப்புமுகாமிலிருந்த போராளிகள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இவ்விதம் விளிம்பு நிலையிலுள்ளவர்களை ஓரிரு நாள்களில் அந்நிலையிலிருந்து விடுவித்து இயல்புநிலைக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை. படிப்படியாகவும் வெகு நிதானமாகவும் அதனை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தொடக்கநிலை வாக்கியம் (Keywords) முக்கியமானது. தொடக்க நிலை வாக்கியம் என்பது உளச்சிகிச்சையை ஆரம்பிக்கும் முதல்நாளில் உளச்சிகிச்சை யாளரால் கூறப்படும் முதல் வாக்கியமாகும். அந்த வாக்கியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டோரை சிகிச்சையளிப்பவருடன் நெருங்கவைப்பதாக அமைந்திருக்கவேண்டும். தனியொருவருக்குச் சிகிச்சையளிக்கும்போது இந்தத் தொடக்கநிலை வாக்கியம் முக்கியத் துவம் பெறுவதில்லை. ஆனால் பலருக்கு ஒரேநேரத்தில் சிகிச்சையளிக்கவேண்டி ஏற்படும் போது இந்தத் தொடக்கநிலை வாக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கும். அது சரி, இப்போது நான் அங்கே சொன்ன தொடக்கநிலை வாக்கியம் என்ன என்ற கேள்வி உன் மனதில் தோன்றியிருக்குமே?”

நான் ஆமோதித்துத் தலையாட்டினேன். 

“Good Boy! நீ முன்னேற இடமுண்டு. சரி, நான் விடயத்துக்கு வருகிறேன். நான் அங்கே சொன்ன தொடக்கநிலை வாக்கியம் இதுதான். ‘இதுவொரு தடுப்புமுகாம் என்பதையும் நீங்கள் முன்னாள் போராளிகள் என்பதையும் நான் உங்களுக்கு உளச்சிகிச்சையளிக்க வந்தவன் என்பதையும் முற்றாக மறந்துவிடுங்கள்’. இதற்கு முன் இப்படியொரு வார்த்தையை அந்தத் தடுப்பு முகாமில் யாருமே அவர்களிடம் கூறியிருக்க மாட்டார்கள் என்பதை அவர்களில் அநேகரது மலர்ந்த முகமாறுதலிலிருந்து என்னால் உய்த்துணர முடிந்தது. இந்த உளச்சிகிச்சையை நிறைவுசெய்து நான் விடைபெறும் நாளில் அவர்களிலொருவர் இத்தொடக்கநிலை வார்த்தையைக் கேட்டதும் ‘காதிலே தேன்வந்து பாய்ந்தது’ என்று குறிப் பிட்டிருந்தார். இதை நான் வெறும் அலங்கார வாக்குமூலமாகக் கருதவில்லை. உண்மையில் தொடக்கநிலை வாக்கியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்குக் காதிலே தேன் பாயச் செய்யவேண்டும். அப்போதுதான் உளச்சிகிச்சை வெற்றிகரமாக அமையும். இந்தக் காதிலே தேன்பாய்ந்த கதையை உனக்கு நான் சுருக்கமாகவேனும் சொல்வதற்கு அடுத்து நீ கேட்கப் போகும் கேள்விகள் இடமளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்”

 அடுத்ததாக நான் அவர்களிடம், ‘உங்களுக்கு விருப்பமான அல்லது நன்கு பரிச்சயமான ஒரு எழுத்தாளரின் பெயரைக் கூறுங்கள் எனக் கேட்டேன். நான் எதிர்பார்த்திருந்ததைப் போலவே மிகப் பெரும்பாலானோர் ‘சுஜாதா’ என்று சொன்னதைக் கேட்டேன். தொடர்ந்து உளச்சிகிச்சை தொடர்பான சுஜாதாவின் மேற்கோளைக் குறிப்பிட்டேன். இதற்கான முழு விளக்கத்தையும் உனது முதற்கேள்விக்கான பதிலில் கூறிவிட்டேன் என்பதால் இதைப் பற்றி நான் திரும்பவும் குறிப்பிடப் போவதில்லை”

அந்தச் சிறு அறிமுகப்படுத்தலைத் தொடர்ந்து அங்கே உளச்சிகிச்சை தொடர்பாக எந்தவொரு கோட்பாட்டுரீதியான அணுகுமுறையினையும் பின்பற்றுவதில்லையெனத் தீர்மானித்தேன். முழுமையாகச் செயற்பாட்டுரீதியான நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தேன். முதற்கட்டமாக எல்லோருக்கும் காகிதாதிகள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கினேன். அவர்கள் ஒவ்வொருவருக்குமிருந்த அதீத மனஅழுத்தத்தைத் தணிப்பதற்கு நான் இந்த மாற்றுவழியைத் தேர்ந்தெடுத்தேன். ‘உங்களுக்குத் தரப்பட்டுள்ள காகிதாதி மற்றும் எழுதுபொருட்களைப் பயன்படுத்தி ஏதாவது வரையலாம். வரைவதில் பரிச்சயமில்லாதவர்கள் ஏதாவது எழுதலாம். இதற்கு மேலதிகமாக வர்ணம் தீட்ட விரும்புபவர்களுக்கு வர்ணங்களும் வழங்கப்படும்’ என்று சொன்னேன். ஒருசிலர் வர்ணங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இங்கே இன்னுமொன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். அவர்களது வரைபு, எழுத்து, வர்ணந்தீட்டல் என்பவை தொடர்பில் அதைச் செய்தவரின் பெயர் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருந்தேன். பெரும்பாலானோர் வரைபுகளை மேற்கொண்டிருந்தனர். மிகச்சிலர் எழுத்து வேலைகளைச் செய்திருந்தனர். வர்ணந்தீட்டியவர்கள் அதை விடக் குறைவாகவேயிருந்தனர். இதனூடாக விளிம்பு நிலையிலிருந்தவர்களைத் திசைதிருப்பி பொறுமையோடும் முழு ஈடுபாட்டோடும் ஒரு விடயத்தை மேற்கொள்ள வைத்ததில் நான் வெற்றி பெற்றிருந்தேன். உண்மையில் அது அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஒரு நல்ல அனுபவமாக அமைந்திருந்தது. இன்றளவும் என்மனதை விட்டகலாத சில விடயங்களை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.

ஓர் இலங்கைவடிவ நிலைக் கண்ணாடி. அதன் முன்பாக காவியுடை தரித்த புத்தர் நின்று முகம் பார்க்கிறார். நிலைக் கண்ணாடியில் இராணுவச் சிப்பாயின் உருவம் தெரிகிறது. எனது நாற்பது வருடகால உளச்சிகிச்சையளிப்பு அனுபவத்தில் என்னைத் திகைப்புக்குள்ளாக்கிய ஓவியமது.

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பெண்கள் சுளகை முன்னால் வைத்து மறைத்துக் கொண்டு மலசலங்கழித்ததை நீயறிந்திருப்பாய். அதை நினைவு கூர்ந்து ஓவியமொன்று வரையப் பட்டிருந்தது.

முன்பக்கத்தைச் சுளகால் மறைத்துக்கொண்டு ஒரு பெண் குந்தியிருக் கிறாள். கீழே ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. ‘சுளகால் புலியை அடித்துத் துரத்தினாள் சங்ககாலப்பெண். இறுதிச்சமரில் சுளகால் மறைத்து மலங்கழித்தாள் ஈழப்பெண்’. இதையெல்லாம் அவர்களின் மனஅழுத்தத்தைத் தணிக்கும் செயற்பாடுகளாகக் கருதி நான் மகிழ்வுற்றேன் என்றாலும் நான் இன்னொன்றையும் எதிர்பார்த்தேன். நிறங்களால் மனஅழுத்தத்தைத் தணித்தல் பெருமளவில் இடம்பெறவேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பு. அதுவும் ஓரளவு நிகழ்ந்தது. நானதை முதலில் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் நானதை முதலில் விளங்கிக் கொண்டிருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

சரிகைவேலைப்பாடுபோன்று படைபடையாக மஞ்சளும் செம்மஞ்சளும் கலந்து உருவாக் கப்பட்ட வர்ணத்தீட்டலொன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. அதை நான் விளங்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளனைத்தும் தோல்வியடைந்தன. இறுதியில் வர்ணந் தீட்டிய வரைச் சந்திப்பதென முடிவெடுத்தேன். பொதுவாக உளச்சிகிச்சையளிக்கும்போது இத்தகைய நடைமுறை பின்பற்றப் படுவதில்லை. ஆனால் தவிர்க்கமுடியாமல் நானதைப் பின்பற்ற வேண்டிருந்தது. ஓரிரு தினங்கள் கழிந்தபின்னர் அவ்வர்ணந் தீட்டியவரைத் தனியே சந்தித்தேன். ‘மன்னிக்கவும். நீங்கள் தீட்டிய வர்ணங் குறிப்பதென்ன? சற்றுத் தெளிவாக விளக்கமுடியுமா?’ எனத் தயக்கத்துடன் கேட்டேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சொல்லத்தொடங்கினார். ‘உங்களுக்கு மட்டுமல்ல, அந்தக் களத்தில் நேரடியாக முகங்கொடுக்காதவர்களுக்கு இதை விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை. அந்த நரகத்தில் கழிப்பறைகள் இருக்கவில்லை. மலங்கழிக்க வசதியில்லாததால் பெண்கள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டார்கள் அல்லது இரவில் கடற்கரைக்குப் போனார்கள். தவிர்க்கமுடியாமல் பகலில் மலங்கழிக்க வேண்டியேற்பட்டால் சுளகால் மறைத்துக் கொண்டோ அல்லது வேட்டியின் இருகரைகளையும் மடித்துத் தைத்து அதற்குள் தடிகளை நுழைத்து அதையொரு பதாகை போலாக்கி, அதைக் கடற்கரையில் நட்டுவைத்து அந்த மறைவில் மலங்கழித்தார்கள். சில பெண்கள் பொலித்தீன் பைகளில் மலங்கழித்து அப்பைகளை உறவுக்கார ஆண்களிடம் (கணவன், தந்தை, சகோதரன்) கொடுத்துக் கடலில் வீசுவித்தார்கள். இவ்வாறாகத்தான் அது மலக்கடலாக மாறியது. கடலில் மலம் கரைந்து கரைந்து கடற்கரையெங்கும் மஞ்சள்நிறத்தில் சரிகை வேலைப்பாடு போலப் படைபடையாகப் படிந்து கிடக்கும். (அதன்மீது மொய்க்கும் ஈக்கள்தான் அங்கே வைத்து விற்கப்படும் மீன்களின்மீதும் மொய்க்கும். எனினும் அந்த மீன்களின் விலை ஒரு கிலோ 2000 அல்லது 3000 ரூபாயாக இருந்தது). இந்த நினைவிலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அதைத் தான் நான் வர்ணந்தீட்டியிருந்தேன். நீங்கள் இதற்கு விளக்கங்கேட்டதும் ஒருவகைக்கு நல்லதுதான். எனது மனப்பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்கிறேன். நன்றி’

அடுத்ததாக, என்னைக் கவனிக்க வைத்தது ஒரு விலைப்பட்டியல். முள்ளிவாய்க்கால் விலைப்பட்டியல் – 2009 என்ற தலைப்பில் அது தயாரிக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக இப்போது என் நினைவிலில்லாவிட்டாலும் அதன் சாரத்தை எடுத்துக்காட்ட முயல்கிறேன்.

 

முள்ளிவாய்க்கால் விலைப்பட்டியல் – 2009

 

  பொருள்  அளவு  விலை (ரூபா)
1 பால்மாப்பெட்டி 01  6000
2 தேங்காய் 01  3000
3 பச்சை மிளகாய் 01  100
4 சிறுமீன் 01 கிலோ  2000
5 கணினி 01  1000
6 தங்கம் 01 பவுண்  1000
7 மனித உயிர்    0

 

அந்த விலைப்பட்டியலில் இருபது பொருட்கள் உள்ளடங்கப்பட்டிருந்ததாக நினைவிருக்கிறது. எனக்கு உடனடியாக ஞாபகங்கொள்ள முடிந்தவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறேன். இதில் மிக முக்கியமானது மனிதவுயிர் ‘0’ என்பதுதான். இந்த விலைப்பட்டியலைத் தயாரித்தவரையும் நான் தனியாகச் சந்தித்துக் கதைத்தேன். அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் கதைத்தார். அவர் கதைப்பது விளிம்பு நிலையிலிருந்து அவரை மீள வைத்து மனஅழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டேன்.

‘ஆயுதமே ஏந்தியிராத சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் போர்புரிந்த இரண்டு தரப்புகளுக்குமிடையே மத்தளம் போலாக்கப்பட்டார்கள். ஆசியாவின் மிகப்பெரிய மரணச்சேரியாக முள்ளிவாய்க்கால் மாறியது. குறிப்பாக மேமாதம், அது ஆசியாவின் மிகப்பெரிய இறைச்சிக்கடையாகவும் மிகப்பெரிய பிரேத அறையாகவும் மாறியது. அந்நாள்களில் அப்பகுதிக்கு வந்திருந்த அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தென்னாசியப் பொறுப்பதிகாரி, தனது சேவைக்காலத்தில் தான்கண்ட மிகமோசமான நரகம் இதுவெனக் குறிப்பிட்டிருந்ததை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த நரகத்தில் உண்பதற்கு அரிசியும் பருப்பும் மாவும் உப்பும்தான் இருந்தன. மிளகாய், வெங்காயம், தேங்காய், புளி போன்றன கிடைக்கவில்லை. தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகச் சோறு வடித்த கஞ்சியைக் கறிக்குள் விட்டதுண்டு. பழப்புளிக்குப் பதிலாகப் புளியமிலையை அவித்து அரைத்துக் கறிக்குள் சேர்த்ததுமுண்டு.

அகதிகளுக்கு உணவு வழங்குவதற்காகக் கஞ்சிக்கொட்டில்கள் உருவாக்கப்பட்டன. அக்கஞ்சிக்கொட்டில்களின் முன் அதிகாலையிலிருந்து மக்கள் வரிசையாக நிற்பார்கள். அங்கேயும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும். இரத்தம் தெறித்துக் கஞ்சிக்குள் கலக்கும். ஆனால், எறிகணைகளின் புகை அடங்கியதும் இறந்தவர்களையும் காயப்பட்டவர்களை யும் விலக்கிக்கொண்டு கஞ்சிக்காக வரிசை மறுபடியும் நகரும். அந்த நகரத்தில் எல்லாப் பொருட்களினதும் விலைகள் உச்சத்தில் இருந்தன. மனித உயிர்மட்டும் மிக மலிவாக இருந்தது’

அவர் சொல்லிமுடித்து வியர்வை வடிந்த தனது முகத்தைத் துடைத்துக்கொண்டார். இப்போது தன் மனப்பாரங்குறைந்தது போல் உணர்வதாகவும் நெட்டுயிர்த்தார். அவர் வெளிப்படுத்திய விடயங்களை இங்கே நான் முழுமையாகக் குறிப்பிடவில்லை. சுருக்கித் தந்திருக்கிறேன். ஏனெனில், இதற்குமுன் நீ எக்சோடஸ் இடப்பெயர்வை அடிப்படையாக வைத்துக் கேட்டிருந்த கேள்விக்கான விடையளிப்பில் நான் குறிப்பிட்டிருந்த யுத்தகால உணவுகள் தொடர்பான விடயங்களனைத்தும் இந்நபரினால் முன்வைக்கப்பட்டவைதான். அதையெல்லாம் நானிங்கே திரும்பவும் எடுத்துக் காட்டுவது, கூறியது கூறலாக அமைவதுடன் பொருத்தமற்றதாகவும் அமைந்துவிடும்.

சிகிச்சையளிப்புப் படிமுறையில் அடுத்ததாக உணவு சமைத்துண்ணலை அறிமுகப்படுத்தினேன். வழமையாக இம்முறையில் பாரம்பரிய உணவுகளே முக்கியத்துவம்பெறும். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களிடம் என்னென்ன உணவுவகைகளைத் தயாரிப்பதெனக் கேட்டுப் பட்டியல்படுத்தப்படும். அடுத்து, பட்டியல் படுத்தப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கைக்கேற்ப சமைத்துண்ணலுக்கான காலப்பகுதி தீர்மானிக்கப்படும். எடுத்துக்காட்டாகப் பத்து உணவுவகைகள் பட்டியற்படுத்தப்பட்டிருந்தால் பத்து நாள்கள் சமைத்துண்ணலுக்காக ஒதுக்கப்படும். இதுதான் பொதுவான நடைமுறை. ஆனால், அந்தத் தடுப்புமுகாமில் எனது நோக்கமும் எதிர்பார்ப்பும் வேறுவிதமாக இருந்தது. வழமையாகச் சமைத்துண்ணலுக்காகப் பட்டியல் தயாரிக்கும்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் ஒடியற்கூழ், ஆடிக்கூழ், புளிக்கஞ்சி, நீர்ப்பாளையம், கோழிப் புக்கை, சர்க்கரைப்புக்கை, புளிச்சாதம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆகக்குறைந்தது சமைத்துண்ணலுக்காகப் பத்துநாள் ஒதுக்கவேண்டியிருக்கும். சமைப்பதிலும் உண்பதிலும் அவர்கள் கூட்டிணைந்து செயற்படும்போது மனஇறுக்கம் தளர்ந்து மனஅழுத்தம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடியதாகவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குமேலாக நான் அந்தக் களத்தில் அவர்களது அனுபவப் பகிர்வை அல்லது நினைவுப்பகிர்வைப் பிரதானமானதெனக் கருதினேன். அங்கே சமைத்துண்ண லுக்கான உணவுப்பட்டியல் தயாரிப்பின்போது அவர்களிடம் சமைத்துண்ண வேண்டிய உணவுவகைகளைக் கூறும்படி கேட்டபோது என் காதில் தேன்வந்து பாய்ந்தது. அதற்கான காரணம் உனக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன். நான் தயக்கத்தோடு ஆமோதித்துத் தலையாட்டினேன்.

‘முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் வாய்ப்பன், வலைஞர்மடம் வடை என அடுத்தடுத்து உணவுவகைளின் பெயர்கள் அவர்களிடமிருந்து வந்தன. இவற்றுடன் ஒடியற் கூழ், ஆடிக்கூழ், புளிக்கஞ்சி, பாற்கஞ்சி, இலைக்கஞ்சி, புளிச்சாதம், கோழிப்புக்கை, சர்க்கரைப் புக்கை என்பவற்றையும் உள்ளடக்கிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதினொரு நாள்கள் சமைத்துண்ணலுக்காக ஒதுக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் வாய்ப்பன், வலைஞர்மடம் வடை இம்மூன்றும் அவர்களால் தயாரிக்கப்பட்ட நாள்களில் நானொரு சிறுவனின் விடுப்புப் பார்க்கும் ஆர்வத்துடன் அங்கே நின்றுகொண்டிருந்தேன். அவர்கள் அவ்வுணவுவகைகளைத் தயாரிக்கும்போது நான் எவ்வித நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கியிருக்கவுமில்லையென்பதை இங்கே முக்கியமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். எனினும், எனது நோக்கமும் எதிர்பார்ப்பும் சிறப்பாக நிறைவேறின. அவர்கள் தங்களது போர்க்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேதான் அவ்வுணவுவகைகளைச் சமைத்துண்டனர். அதையவர்களால் தவிர்க்க முடியவில்லை. இவ்வாறானதொரு ஏற்பாட்டை இந்தச் சமைத்துண்ணல்மூலம் ஒழுங்கு செய்தமைக்காக அவர்களில் பலரும் எனக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண் டனர்.

இதனையடுத்து நான் எந்தவொரு உளச்சிகிச்சையாளரும் மேற்கொண்டிராதவொரு சிகிச்சைமுறையினை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டேன். அதைப்பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பாக உன்காதில் தேன்வந்து பாயுமொரு நற்செய்தி! தொடர்ந்து நீ என்னிடம் இன்னும் ஒரேயொரு கேள்வியை மட்டுமே கேட்கலாம். அந்தக்கேள்வி என் காதில் தேன்வந்து பாயக்கூடியதாக அமைந்தால் நான் உனக்கு என்றும் நன்றியும் விசுவாசமுள்ளவனாயிருப்பேன். மகனே! எங்கே உனது இறுதிக்கேள்வியால் என்னைச் சுகப்படுத்து பார்க்கலாம்.’

“அஞ்சலிக்குறிப்பு எழுதுதல் ஓர் உளச்சிகிச்சை முறையாக அமையுமா?”

“Bravo my dear son! Bravo! நான் கேட்டுக்கொண்டபடியே உனதிந்தக் கடைசிக்கேள்வியால் என்னைச் சுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிதெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இந்த அஞ்சலிக்குறிப்பு எழுதுதல் என்பதுதான் எந்தவொரு சிகிச்சையாளரும் மேற்கொண்டிராத அந்தப் பரிசோதனைச் சிகிச்சைமுறையாகும். அவர்களிடம், ‘கவனியுங்கள்! இன்றையதினம் நான் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டதாகக் கருதி நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கான அஞ்சலிக் குறிப்பொன்றினை எழுதி வாசிக்கவேண்டும். இன்றைய நாள்முழுவதும் அதற்கான கால அவகாசம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. நாளை இதேநேரம் நான் உங்களைச் சந்திக்கும்போது அஞ்சலிக்குறிப்புகள் தயார் நிலையில் இருத்தல்வேண்டும்’ எனக் கூறிவிட்டுப் போயிருந்தேன். அந்தக் கணத்திலிருந்து அவர்கள் ஒரு தற்காலிகக் கையறு நிலைக்குள்ளாகி விடுவார்கள். அதாவது, சாதக விளிம்பு நிலைக்கு வந்திருப்பார்கள். முதலில் ஒரு குழப்பமான மனநிலைக்குள்ளாகிப் பின்னர் படிப்படியாக அதிலிருந்து விடுபட்டுத் தெளிவடைந்து செயற்படத் தொடங்குவதே சாதகமான விளிம்பு நிலையின் இயல்பான தன்மையாகும். நான் அங்கே நின்றிருப்பது அவர்கள் படிப்படியாக விடுபட்டுத் தெளிவடைந்து செயற்படுவதைப் பாதிக்குமென்பதால் அங்கிருந்து வெளியேறினேன். மறுநாள் நான் அங்கே சென்றிருந்தபோது எல்லோருமே அஞ்சலிக் குறிப்புகளை எழுதி வைத்திருந்ததைக் கண்டு நான் மனநிறைவடைந்தேன். முதல் நாள் அஞ்சலிக்குறிப்பை எழுதி வாசிக்கவேண்டும் என நான் சொல்லியிருந்ததில் சிறுமாற்றம் செய்தேன். ‘நீங்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பை வாசிக்கவேண்டியதில்லை. அதை நானே வாசிக்கப்போகிறேன். அஞ்சலிக் குறிப்பை எழுதிய உங்கள் அனைவருக்கும் நன்றி’ என நான் சொன்ன பிற்பாடுதான் அதுவரை அங்கே நிலவிய அசாதாரண நிசப்தம் குலைந்து இயல்பு நிலையேற்பட்டது. நான் ஒவ்வொருவரிடமும் அஞ்சலிக் குறிப்புகளைப் பெற்று 1 தொடக்கம் 53 வரை இலக்கமிட்டேன். அவற்றையெல்லாம் அடுக்கிக் கையில் வைத்திருந்தபோது மகிழ்ச்சியா? துக்கமா? பூரிப்பா? வேதனையா? என்று விபரித்துக் கொள்ள முடியாத உணர்வு தொற்றிக் கொள்வதை உணர்ந்தேன். தனக்காக எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பினை வாசிக்கப்போகும் உலகின் முதலாவது உளச்சிகிச்சையாளன் நான் மட்டுமே என்ற பெருமிதமும் மெதுவாகத் தலைதூக்கியது. ‘நான் அஞ்சலிக் குறிப்புகள் அனைத்தையும் இங்கே வாசிக்கப் போவதில்லை. ஓரைந்தை மட்டும் வாசிக்கவுள்ளேன். 1 தொடக்கம் 53 வரை யான் இலக்கமிடப்பட்டுள்ள அவ்வஞ்சலிக் குறிப்புகளில் வாசிக்க வேண்டிய ஐந்து அஞ்சலிக் குறிப்புகளுக்கான இலக்கங்களை நீங்களே கூறுங்கள்’ என அவர்களிடம் நான் சொன்னதும் தாமதமேதுமின்றி இலக்கங்களைத் தெரிவுசெய்தனர். தெரிவு செய்யப்பட்ட அந்த இலக்கங்கள் எவையென்பது இப்போது எனக்கு நினைவுக்கு வரவில்லை. அது அவசியமுமில்லை. நான் வாசித்த அஞ்சலிக் குறிப்பின் உள்ளடக்கமொன்று இப்போதும் என் நினைவிலுள்ளது. சற்று முன்னர் நானுனக்குத் தொடக்கநிலை வாக்கியம் குறித்து விளக்கும் போது, ஒருவர் காதிலே தேன்வந்து பாய்ந்ததாகச் சொல்லியிருந்தேனல்லவா? அது இந்த அஞ்சலிக் குறிப்பிலேதான் இடம்பெற்றிருந்தது. விடுதலைப் போராட்டத்தின் தோல்வி, இரத்த உறவுகளின் உயிரிழப்புகளால் ஏற்பட்ட துயரம் என்பவற்றினால் நாங்கள் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப் பட்டிருந்தோம். அக்காலப் பகுதியில் எங்களை அணுகியவர்களும் தொடர்பு கொண்டவர்களும் வெந்த புண்ணில் வேல் செருகுவதுபோல முன்னாள் போராளிகள் என்பதைத் திரும்பத் திரும்ப உணர்த்தும் விதமாகவே நடந்து கொண்டார்கள். இந்த நிலையில் எங்களுக்கு உளச்சிகிச்சை வகுப்பில் கலந்து கொள்வதில் ஆர்வமோ, ஈடுபாடோ இருக்கவில்லை. அதுவொரு சடங்காகவே அமையும் எனக் கருதினோம். ஆனால், அருட்தந்தையவர்கள் வகுப்பெடுக்க வந்த முதல்நாளிலேயே எங்களது கருதுகோளைத் தலைகீழாக்கி விட்டார். ‘நீங்கள் முன்னாள் போராளிகள் என்ப தையும் இதுவொரு தடுப்புமுகாம் என்பதையும் மறந்துவிடுங்கள்’ என அவர் சொன்ன முதல் வார்த்தையே காதில் தேன்பாயவைத்தது. அடுத்துவந்த நாள்களில் எமக்கு உளச்சிகிச்சையளிக்கப்படுகிறது என்ற உணர்வே தோன்றாமல், விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சிறுவர்களைப் போல் எங்களை ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஈடுபட வைத்தார். படம்வரைதல், குறிப்பு எழுதுதல், சமைத்து உண்ணுதல் என ஒவ்வொரு செயற்பாடுமே எங்களுக்குப் புதுமையான அனுபவத்தைத் தந்திருந்தன. இறுதியில் தன்னைப் பற்றிய அஞ்சலிக் குறிப்பை எழுதும்படி கேட்டு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அஞ்சலிக்குறிப்பை சஞ்சலப்பட்டு எழுதியிருந்தாலும் அதை எழுதிமுடித்தபின் மனம் சமநிலையடைந்திருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. எங்கள் வாழ்நாள்களில் அருட்தந்தை என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்’ என்றவகையில் அது எழுதப்பட்டிருந்த தாக நினைவுகூரமுடிகிறது. ஒருவரைப் பாராட்டியோ அல்லது விமர்சித்தோ எழுதுபவர் மிகைப்படுத்தியும் பொய்கலந்தும் எழுதச் சாத்தியமுண்டு. ஆனால், ஓர் அஞ்சலிக்குறிப்பை எழுதுபவர் மிகைப்படுத்தியோ பொய்கலந்தோ எழுதுவதற்கு அவரது மனநிலை இடமளிக்காது என்பது அடிப்படையான உளவியல் என்பதால் எனது உளச்சிகிச்சை பற்றிய நடுநிலையான மதிப்பீடாக இவ்வஞ்சலிக்குறிப்பைக் கருதுகிறேன். சாவீட்டிற்குச் செல்லும் பெண்கள் தமது இரத்த உறவுகளின் இழப்பினை நினைந்து ஒப்பாரி வைத்தழுது துக்கந்தணிக்கும் களமாக்கிக் கொள்வதைப் போலவே இந்த அஞ்சலிக் குறிப்பினைத் துக்கத்தைத் தணிப்பதற்கான களமாக்கும் ஏற்பாடாகக் கருதினேன் அவ்வளவுதான். இத்துடன் உனது கேள்விக்கான பதிலையும் இந்நேர்காணலையும் நிறைவுசெய்துகொள்கிறேன்’

My dear son! இதுவரைக்கும் நீ எழுதிவந்திருக்கும் இந்நேர்காணலை உடனடியாக வாசித்துச் செவ்வைபாத்துத் தரவேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். உலக உளவளதின ஏற்பாட்டாளர்கள் இப்போது என்னைச் சந்திக்க வருவதாகத் திடீரென அறிவித்துள்ளதால் இந்நேர்காணலை வாசித்துச் செவ்வைபார்க்கப் போதிய அவகாசமில்லை. அதற்காக நீயென்னை மன்னிக்கவேண்டும். மூன்றுதினங்கள் கழித்துக் காலையில் இந்நேர்காணலின் எழுத்து வடிவத்தைக் கொண்டுவா. வாசித்துச் செவ்வை பார்த்துத் தருகிறேன். சரியாக இருநூற்றுப் பதின்மூன்று நிமிடங்கள் என்னுடன் இருந்து பொறுமையோடு இந்நேர்காணலைப் பதிவு செய்த உனக்கு என் மனமார்ந்த நன்றி!” சொல்லிக்கொண்டே பாதர் எழுந்து போய் விட்டார். 

நேர்காணலை எழுதுவதைவிட எழுதுவதுபோல் பாவனை செய்வது எந்தளவு கொடுமையானது என்பதை இன்றுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். நான் ஏற்கனவே உங்களை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன் என்று சொன்னதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்நேர்காணலை ஆதியோடந்தமாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று பிற்பகலுக்குள் அந்த ஒலிப்பதிவினை எனக்குத் தந்துதவினால் மூன்று தினங்களுக்குள் இந்நேர்காணலின் முழுமையான எழுத்து வடிவத்தை என்னால் தயாரித்துக் கொள்ள முடியும்.


 –  ச. இராகவன் 

1 COMMENT

  1. வாழ்த்துக்கள் எழுத்தாளருக்கு! இந்த கதை நெஞ்சை பிசைந்து விட்டது!!!, சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யுங்கள். இது வேறும் கதையில்லை. ஒரு ஆவணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.