நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

1.

சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன். எனக்குப் பிடித்தமான அவரது நாவல்களென ‘Post Office’, ‘Women’, ‘Factotum’, ‘Hollywood’  என்பவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நாவலாசிரியராக ப்யூகோவ்ஸ்கியை அடையாளப் படுத்துவதை விட, அவரைக் கவிஞராகப் பார்ப்பதே பலருக்குப் பிடித்தமானது. ஆனால், நான் அவரது கவிதைத் தொகுப்புக்களைத் தேடித்தேடி வாசித்தபோது அவை என்னை அவ்வளவு கவரவில்லை. அவை மிக நேரடியான கவிதைகளாக, எவ்வித உள்ளடுக்குகளும் இல்லாது, எளிய சொற்களால் ஆன கவிதைகளாக இருந்ததுபோல எனக்குத் தோன்றியது. முக்கியமாக மெளன வாசிப்புக்கு அவை உரியவை அல்ல என்று அவற்றைத் தொடக்க காலத்தில் தவிர்த்திருக்கின்றேன்.

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நின்றபோது நண்பர் ஒருவருடைய கவிதைப் புத்தக அறிமுக நிகழ்வுக்குப் போயிருந்தேன். வந்திருந்த எல்லோரும் அவரின் கவிதைகளை உரத்த குரலில் வாசித்தபோது, நான் மட்டும் வழிதவறிய ஆட்டுக்குட்டியாக   கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, நான் இவ்வாறு வாசிக்கமாட்டேன் என மறுத்திருந்தேன். இதையேன் இங்கே சொல்கின்றேன் என்றால், கவிதைகள் என்றாலே உரத்து வாசிக்கக்கூடாது என்று தீவிரமாய் நம்புகின்ற எனக்கு, விதிவிலக்காக இருந்த ஒருவர் ப்யூகோவ்ஸ்கி. அவர் நிகழ்வுகளில் வாசிக்கும் கவிதைகளை, அவரின் குரலில் எப்போதும் கேட்டாலும் எனக்குத் திகட்டுவதேயில்லை. ப்யூகோவ்ஸ்கியின் ஒருவகையான கரகரப்புடனும், அதிகம் அதிர்ந்து போகாத அதிர்வு எண்ணிலும் அவர் கவிதைகளை வாசிக்கும்போது இதைவிட வேறொருவராலும் கவிதைகளை அற்புதமாக வாசித்துவிட முடியாது போலத் தோன்றும்.

ஒருகாலத்தில் ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களைத் தேடித்தேடி வாசித்தபோல, அண்மைக்காலமாக அவரைப் பற்றிய எல்லா காணொளிப் பதிவுகளையும் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அதில் குறிப்பிட வேண்டுமென்றால் அவரைப் பற்றிய ஆவணப்படமான ‘Bukowski: Born into this’ -ஐச் சொல்வேன். ஆனால் என்னைப் போன்று ப்யூகோவ்ஸ்கியின் தீவிர வாசகராக யாரேனும் இருந்தால், அவர்களை, கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் நீளும் ‘Bukowski Tapes’ -ஐப் பார்க்கச் சொல்வேன். 


2.

ப்யூகோவ்ஸ்கி எனக்கு மனிதர்களைப் பிடிப்பதேயில்லை, தனிமையில் இருப்பதே பிடிக்கிறதெனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றார். எனக்குப் பெண்களைப் பிடிக்கும் ஆனால் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருப்பது கூட மிகவும் கஷ்டமாயிருக்கிறது என்கின்றார். கிட்டத்தட்ட ‘ஒரு பொல்லாப்புமில்லை, சும்மா இரு’ தத்துவத்தை கடைப்பிடிப்பவர் போல ப்யூகோவ்ஸ்கி நமக்குத் தெரிகின்றார். 

சிலவேளைகளில் தான் மூன்று நாட்களுக்கு மேலாய் தூங்கிக் கொண்டே இருந்ததாகவும், ஆனால் அப்படிச் செய்து எழும்போது தனக்கு அது தொடர்ந்து இயங்குவதற்கான உயிர்ப்பைத்  தருவதாகவும் சொல்கிறார். “உங்கள் எவராலும் இதை விளங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் நீங்கள் எல்லோரும் ஓய்வு எடுப்பது என்பதை கொஞ்சம் தூங்குவது, பிறகு எழுந்தவுடன் எதையாவது செய்யவேண்டும், அதன்பின் ஓய்வு எடுப்பது என்று நினைக்கின்றீர்கள். ஆனால் நான் அதைக் குறிப்பிடவில்லை, ஒன்றுமே செய்யாது நாட்கணக்கில் சும்மா தூங்கி எழுவதைப் பற்றிச் சொல்கின்றேன்”, என்கின்றார். இதை எல்லோராலும் செய்யமுடியும் என்றாலும், நாமெல்லோரும் வாழ்வதற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

ப்யூகோவ்ஸ்கி சிறுவயதில் (6-11 வரை) இராணுவத்தில் இருந்த தந்தையாரின் மிகப்பெரும் வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றார். அவரின் தாயார், தகப்பனால் அடிக்கடி தாக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டிருக்கின்றார். அம்மாவைப் பற்றிய ஒரு கவிதையில், ‘ஹென்றி, நீ எப்போது சிரித்துக் கொண்டே இரு என்று கூறுவார், ஆனால் வாரத்தில் மூன்று தடவைகளாவது அடிவாங்கும் அம்மா, அடி வாங்கிய பின்னும் என்னைச் சிரித்தபடி இருக்கச் சொல்வார்’, என்று துயரத்தின் சாயலில் ஒரு கவிதை எழுதியிருப்பார். இவ்வாறு வன்முறையைப் பார்த்த ப்யூகோவ்ஸ்கியிக்கு அரிதாகச் சிலருக்கு வரும் தீவிரமான முகப்பருப் பிரச்சினையும் அவரது பதின்மத்தில் தாக்க முகம் கோரமான ஒரு வடிவத்தைப் பெறுகின்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அவரின் 25 வயதுவரை எந்தப் பெண்ணின் உறவும் இல்லாது இருந்தவர். அவர் முதலில் நேசித்து வாழ்வைப் பகிர்ந்த பெண், அவரை விட பத்து வயது மூத்தவராக இருந்திருக்கின்றார்.

ப்யூகோவ்ஸ்கி, பிறகான காலங்களில் ஒரு homeless ஆனவர். பூங்காக்களின் பெஞ்சுகளில் படுத்திருந்து, வீடற்ற பலரோடு வாழ்வைப் பகிர்ந்துகொண்டவர். அதனால்தான் ஓரிடத்தில், எந்தத் திரைப்படமானாலும் எவருமே இப்படியான வீடற்றவர்களைப் பற்றி சரியாக விவரித்ததே இல்லை என்கின்றார். ‘நான் ஒரு தப்பித்தலுக்காய் இப்படி வீடற்றவன் ஆனேன், ஆனால் இவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள், அவர்களுக்கு எந்தத் தெரிவும் இருக்கவில்லை’ என்று உண்மையான அக்கறையோடு விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

13 வயதில் இருந்தே எழுத்தின் மீது ஆர்வமிருந்த ப்யூகோவ்ஸ்கி,  எழுதுவதற்கு ஒழுங்கான தாள்கள் இல்லாதபோதுகூட, கதைகளை கிடைக்கும் பத்திரிகைகளின் விளிம்புகளில் பென்சில் கொண்டு எழுதியிருக்கின்றார். இவ்வாறான காலத்தில், அவரின் முதலாவது கதையொன்று பத்திரிகையொன்றில் பிரசுரமாக, ஒரு பத்திரிகை ஏஜெண்ட் பெண், இவருக்கு போஸ்ட்கார்டில் எங்கேயோ கஷ்டப்பட்டு விலாசம் கண்டுபிடித்து கடிதம் எழுதுகிறார்.  ‘உங்கள் கதை நன்றாக இருக்கிறது, நான் உங்களின் ஏஜெண்டாக இருக்க விரும்புகின்றேன். நல்ல உணவோடும், மதுவோடும் ஓரிடத்தில் இது பற்றி சந்தித்துப் பேசுவோமா’, என்கின்றார். ஆனால் இந்த இடத்தில்தான் நாம் ப்யூகோவ்ஸ்கியைக் கவனமாகப் பார்க்கவேண்டும். அவருக்கு ஒழுங்கான இடமில்லை, நேரகாலத்துக்குச் சாப்பாடும் கிடைப்பதுமில்லை, ஆனால் அவர் ஏஜெண்டுக்கு திருப்பி எழுதுகிறார்: ‘நான் இன்னும் எழுத்தாளனாக ஆவதற்குத் தயாராக இல்லை’, என்று. மற்றவர்களாய் இருந்திருப்பின் உடனேயே இந்த offerஐ ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் ப்யூகோவ்ஸ்கி ஒரு கிறுக்கர் மட்டுமில்லை, தனது எழுத்தின் நிலவரமும் கூடவே அறிந்தவர். ஆகவே இப்படிச் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குள் அலைந்து திரியத் தொடங்குகின்றார். தனது காலத்தைய Jack Kerouac-ற்கு பயணம் செய்து செய்து எழுதும் விருப்பு இருந்தது, தனக்கு அது கூட இருக்கவில்லை. பயணிப்பது, குடிப்பது, நன்கு தூங்குவது இதுவே தனது விருப்பங்களாக இருந்தது என்கிறார். பின்னர் வாரத்துக்கு மூன்று/நான்கு கதைகள் என்றெழுதி அவை எல்லாம் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டு திரும்பி வந்தபோது, அவற்றைக் கூட சேமிக்காது குப்பைக்குள் எறிந்துமிருக்கின்றார்.

இவ்வாறு சொல்லும் ப்யூகோவ்ஸ்கி பின்னர் எழுதி வசதியாக வாழத் தொடங்கும்போது, ஒழுங்கான உணவில்லாது வாழ்ந்த காலங்களையும் நினைவுகொள்கிறார். அந்தக் காலத்தில் எதையுமே சாப்பிடாது இருபத்தைந்து சதத்துக்கு இனிப்புக்களை வாங்கி இரவில் சாப்பிட்டபடி கழித்த நாட்களைச் சொல்கிறார். ஒவ்வொரு சிறுதுண்டும் அப்படி சுவையாக இருந்தது என அதை விவரிக்கும்போது, நம்மாலும் அதன் பேரின்பத்தை உணரமுடிகிறது.


3.

ப்யூகோவ்ஸ்கியின் பத்தி எழுத்துக்களினாலும், கவிதைகளாலும் ஈர்க்கப்பட்ட ஓர் அச்சுப்பதிப்பாளர், ப்யூகோவ்ஸ்கியிடம் முழுநேர எழுத்தாளராக மாறும்படி கேட்கின்றார். ப்யூகோவ்ஸ்கியிற்கோ பயம்!. பிடிக்காத வேலை என்றாலும், வேலை போனால் மீண்டும் தெருவுக்குள் வாழப் போக வேண்டியிருக்குமே என்று யோசிக்கின்றார். அவரும்,  அந்தச் சிறு பதிப்பாளரும் ஒருநாள் இருந்து அவரின் மாதச் செலவை (1970) எழுதிப் பார்க்கின்றனர். வாடகைக்கு 80 டொலர்கள், குடி/சிகரெட்/சாப்பாடுக்கு 20 டொலர்கள், ஒரு மாதச் செலவு 100 டொலர்கள் என்கிறார் ப்யூகோவ்ஸ்கி. ‘சரி  நீங்கள் எழுதுகின்றீர்களோ இல்லையோ உங்களுக்கு 100 டொலர்களை வாழ்நாள் முழுதும் மாதம் மாதம் தருகின்றேன்’, என்கின்றார் அந்தப் பதிப்பாளர். இதுவரை சிறுபத்திரிகைகளில் எழுதி வந்த ப்யூகோவ்ஸ்கியிடம் இப்போது நாவல்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது அதையும் விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள் எனப் பதிப்பாளரால் சொல்லப்படுகின்றது.

அப்படி வேலையைத் துறந்து, உடனேயே மூன்று வாரங்களுக்குள் எழுதிக்கொடுத்த நாவல்தான் அஞ்சல் அலுவலகம் (Post Office). ப்யூகோவ்ஸ்கியிற்கு நிகழ்ந்த இச்சம்பவத்தோடு தொடர்புபடுத்தக் கூடிய இன்னொரு எழுத்தாளர் 2666 எழுதிய ரொபர்தோ பொலானோ. அவரும் கவிதைகள், கதைகள் நீண்டகாலம் எழுதியபோதும் குறிப்பிட்ட வருமானம் வராததைக் கண்டு, தனது பிள்ளைகளின் வறுமையை நீக்கும்பொருட்டு அவரின் 40-களின் பிற்பகுதியில் நாவல்களை எழுதத் தொடங்கியவர். ஆனால் பொலானோ, ப்யூகோவ்ஸ்கியைப் போலவன்றி, தனது நாவல்கள் பெரும் புகழடைய முன்னரே, அவரின் 50-வது வயதில் மரணத்தைச் சந்தித்தவர்.

மேலும், ப்யூகோவ்ஸ்கி தன் வாழ்நாள் முழுதும் தனது படைப்புக்களை இந்தச் சிறு பதிப்பாளருக்கு வழங்கியதோடல்லாது, தனது மரணம் வரை – அவர் புகழடைவதற்கு முன் எழுதிய சிறுபத்திரிகைகளுக்கும்- தொடர்ந்து ஆக்கங்களைக் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சிறுபத்திரிகைகளின் அரசன் என்கின்ற ஒரு செல்லப்பெயரும் ப்யூகோவ்ஸ்கியுக்கு இருந்திருக்கின்றது.

பெஞ்சில் படுத்திருப்பதும், பிறகு உடுப்பின் மீதிருக்கும் புழுதியைத் தட்டியபடி நூலகத்திற்குள் நுழையும்போது மற்றவர்கள் அருவெறுப்பான பார்வை பார்க்க, தாஸ்தவோஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புக்கள்’ வாசித்தை ப்யூகோவ்ஸ்கி நினைவுகொள்கிறார். அவருக்கு டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’ பிடிக்கும் என்றாலும், தான் எளிய வார்த்தைகளில் கதை சொல்லும் போக்கை ஹெமிங்வேயிலிருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.  

ஒரு படைப்பை எப்போது எழுத வேண்டுமென அவரது பிரசித்தி பெற்ற கவிதையான so you want to be a writer”இல் சொன்னமாதிரி, எழுதும்போது ஒரு juiciness இருக்கவேண்டும், வாசகரை அலுப்படையச் செய்யக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். மேலும் அந்த எழுத்தை, தான் நகைச்சுவைக்குள்ளால் எடுத்துச் செல்ல விரும்புகின்றேன் என்கிறார். ஆகவேதான் ‘அஞ்சல் அலுவலக’ நாவலின் முதல் வசனம் இவ்வாறான எளிய வசனத்துடன் தொடங்கின்றது: “It began as a mistake”.

ப்யூகோவ்ஸ்கி ஒரு உள்ளொடுங்கிய மனிதரென எளிதாகவே அறிந்துகொள்ளலாம். அவருக்கு எழுத்தும், விரும்பிய நேரத்துக்கு எல்லாம் குடிப்பதும்/புகைப்பதும், வேலை என்று செய்வது எதுவுமே பிடிக்காது என்றாலும், அவர் வறுமையின் எல்லைவரை எட்டிப் பார்த்ததால், அவருக்குக் கிடைத்த தபால் அலுவலக வேலையை விடமுடியாதவராகவும் இருக்கின்றார். ஒருமுறை இராஜினாமாச் செய்தபோதும் பிறகு அதில் தன்னைச் சேர்ந்துக் கொள்ளும்படி கடிதம் எழுதி திரும்பச் சேர்கிறார். அவருக்கு வேலை பறிபோய்விடும் என்ற பயம் தொடர்ந்து இருந்ததால், அஞ்சல்களை எப்படித் தரம் பிரிப்பது  என்று வீட்டில் இருந்து கூட பதற்றத்துடன் பயிற்சி பெற்றிருக்கின்றார்.


4.

ப்யூகோவ்ஸ்கியின் ‘பெண்கள்’ (Women) நாவலை வாசித்தபோது, ஒருவரின் வாழ்வில் இவ்வளவு பெண்கள் வருவார்களா எனத் திகைத்து அரைவாசி பொய்யாக இருக்குமெனவே நினைத்திருந்தேன். ஆனால் அவரது ஆவணப் படங்களைப் பார்க்கும்போது ப்யூகோவ்ஸ்கி தன் வாழ்வில் சந்தித்த பெண்களைப் பற்றித்தான்  அதிகம் எழுதியிருக்கின்றார் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.. ஓரிடத்தில்  இந்தப் பெண்களைத் தான் சந்தித்த வீட்டுக்குக்  கூட்டிக்கொண்டு போய்  நமக்கு ஒரு ஆவணப்படத்தில் காட்டுகிறார். அங்கேயிருந்தே ‘பெண்கள்’ என்ற நாவலை எப்படி எழுதினேன் என்பதையும் நினைவு படுத்துகிறார். 

அந்த இடம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் சனங்களின் ஆரவாரமுள்ள இடம். அங்கே நிறையக் குற்றங்களும், போதைமருந்துக் கடத்தல்களும் நடைபெறுவதால், தலைக்கு மேலே அடிக்கடி கண்காணித்தபடி பறக்கும் ஹெலிகொப்டர்கள் பற்றியும் ப்யூகோவ்ஸ்கி நமக்குச் சொல்கிறார். இந்தச் சூழலுக்குள் இருந்தா மிகவும் நெகிழ்வான, எள்ளல் நிறைந்த நாவலை அவர் எழுதினார் என்பது நமக்கு சற்று வியப்பைத் தரக்கூடியது.

அதேபோல ப்யூகோவ்ஸ்கி தன் சுயசரிதையின் சாயலில் அவர் திரைக்கதை எழுதிய Barfly, ஒரு பிரெஞ்சு நெறியாளரால் படமாக்கப் பட்டது. அதில்  ப்யூகோவ்ஸ்கியின் பாத்திரத்தில் நடித்த Mickey Rourke பின்னாளில் பிரபல்யம் வாய்ந்த நடிகராய் இருக்கின்றார்.  ப்யூகோவ்ஸ்கி இந்த திரைப்பட நாட்களில் நடந்த சம்பவங்களையே ‘ஹாலிவூட்’ (Hollywood) நாவலாகப் பின்னர் எழுதுகின்றார்.  ‘ஹாலிவூட்’ நாவலை வாசிக்கும்  நமக்கு திரையுலகின் உள்ளே நடக்கும் எல்லா போலித்தனங்களும் விளங்குவதோடு, Mickey Rourke பற்றிக் கூட அவ்வளவு நல்லதொரு பிம்பம்  கிடைப்பதில்லை. ஆக எவரையும்/எதையும் பற்றிக் கவலைப்படாது ப்யூகோவ்ஸ்கி தனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டே இருந்திருக்கின்றார் என்பது நமக்கு இதிலிருந்து தெரிகிறது.

இன்னொரு இடத்தில், ப்யூகோவ்ஸ்கி தான் எழுதிய எல்லாவற்றையும் குடித்தபடியே எழுதியிருக்கின்றேன் என்கிறார். அதைவிட அதிகமாக வாசிக்கும்போது குடித்திருக்கின்றேன் என்று சிரித்தபடி சொல்கிறார். இவை எல்லாவற்றுக்கும் பயமே காரணம் என்கிறார். அப்படியெனில் எப்படி அவரது கவிதைகளை பார்களுக்குச் சென்று வாசித்திருக்கின்றார் என்கின்றபோது, அங்கே  நன்கு குடித்து, பார்களில் இருப்பவர்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொஞ்சம் கோமாளி வேடம் போட்டபடி பயமில்லாது வாசித்திருக்கின்றேன் என்கிறார். இப்படிச் செய்யும்போது ‘உங்கள் integrity இல்லாது போய்விடுமே’ என்கின்றபோது, ஆம் அதனால் தான் வருடம் ஒன்றோ அல்லது இரண்டு முறைதான் இப்படி நிகழ்வுகளைச் செய்கின்றேன் என்கிறார். ஆக அது ஒரு நுளம்புக்கடி போல இருக்கின்றதென்கிறார்.

இதைச் செய்வதற்கு பணமே காரணம் என்கிறார். ஏனெனில் நான் சாப்பாடு இல்லாது பல நாட்கள் இருந்தவன், எனக்கு பணத்தின் அருமை தெரியும். திரும்பவும் நான் அப்படி ஒரு நிலைமைக்குப் போக விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். பீட்ஸ் (Beats) காலத்தவர்களில் ப்யூகோவ்ஸ்கி அளவுக்கு, பிற்காலத்தில் அவரைப் போல வாழும் காலத்தில் பெரும் புகழடைந்தவர் எவருமே இல்லையெனச் சொல்லலாம். பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட, ஹாலிவூட்டில் திரைக்கதையாளராக நுழைதலென பெரும் பாய்ச்சல்களை அவரின் படைப்புக்களின் மூலம் ப்யூகோவ்ஸ்கி சாத்தியமாக்கியிருக்கின்றார்.

நிறையப் பெண்களை தன் காதலிகளாகச் சந்தித்த ப்யூகோவ்ஸ்கியிடம் காதல் பற்றிக் கேட்கும்போது, நமது ஒவ்வொரு காதலின் பிரிவின் போது நாம் நம்மைக் கண்டடைவதில்லை. நமது காதலிகள் நமக்குள் கட்டிவைத்த நம்மைப் பற்றிய பிம்பங்களையே தேடுகின்றோம். அதையே நாம் நமது அடுத்த காதலிகளிடம் தேடுகின்றோம், ஆனால் அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாத கானல்(நீர்) என்கிறார்.

வள்ளுவர், ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்/ எண்ணுவம் என்பது இழுக்கு’ என்றார். ப்யூகோவ்ஸ்கியோ நீங்கள் ஒன்றை முயற்சிக்கப் போகின்றீர்கள் என்றால், அதன் ஆழம் வரை நீங்கள் செல்லவேண்டும், இல்லாவிட்டால் அதைத் தொடங்கவே வேண்டாம் என்று கூறுகிறார். அது காதலாய் இருந்தால் என்ன, எழுத்தாய் இருந்தால் என்ன, ஏன் மரணமாய் இருந்தால் கூட என்ன? அதனால்தான் குடியின் நிமித்தம் ப்யூகோவ்ஸ்கியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இனி குடித்தாரென்றால் உயிர் வாழவே முடியாது என்று அவரின் முப்பதுகளில்  வைத்தியர் எச்சரித்தபின்னும், மரணத்தோடு தினம் விளையாடியபடி, 70 வயதுகளுக்கு மேலாய்  தினம் மதுவை அருந்திக்கொண்டும், புகைத்துக்கொண்டும் வாழ்ந்தவர் ப்யூகோவ்ஸ்கி. 

எல்லோருக்கும் இப்படி ‘அதிசயங்கள்’ அவர்களின் வாழ்வில் வாய்த்ததில்லை. ப்யூகோவ்ஸ்கியிற்கு அது நிகழ்ந்திருக்கிறது. ஆகவேதான் அவர் அதற்குப் பிறகு எழுதிய ஆக்கங்களை நம்மால் வாசிக்க முடிகிறது. பிரமிள் ஒரு கவிதைக்கு ‘நிகழ மறுத்த அற்புதம்’ எனப் பெயரிட்டிருப்பார்.  இவ்வளவு பெருங்குடியோடு நிறைய எழுதிய ப்யூகோவ்ஸ்கியை ‘நிகழ்ந்து விட்ட அற்புதம்’ எனத்தான் நாம் சொல்லவேண்டும்.


டிசே தமிழன்

 

எழுத்தாளர் குறிப்பு: 

 இளங்கோ:  யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். தன் பதினாறவது வயதில் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள் தவிர ‘டிசே தமிழன்’ எனும் பெயரில் கட்டுரைகளும் விமர்சனங்களும் பத்திகளும் எழுதி வருகிறார்.

நாடற்றவனின் குறிப்புகள் – கவிதைத் தொகுப்பு,  சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் -சிறுகதைத் தொகுப்பு,  பேயாய் உழலும் சிறுமனமே- கட்டுரைத் தொகுப்பு மற்றும்  மெக்ஸிக்கோ எனும் நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

1 COMMENT

  1. காலையில் இந்தக் கட்டுரை படிக்கும் போது குளிர்ச்சியாக மனமிருக்கிறது. உங்களுக்கும். டிசே தமிழனுக்கும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.