சின்னா லட்டுத் திண்ண ஆசையா?


வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.

 அந்த மிகப் பெரிய வனத்தில்  ஒவ்வொரு விலங்கினத்திற்கும்  ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.  அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

 அவர்தான் அவர்கள் இனத்தின் ராஜா. மொத்த வனத்தின் ராஜாவை இந்த ஒவ்வொரு இனத்தின் ராஜாக்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இதுவே வீராவனத்தின் ராஜா தேர்வு முறை.

 அது எலிகள் வாழும் பகுதி. அங்கு கபி எலி குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் கடந்த நான்கு வருடமாக ராஜாவாக இருந்து வருகிறார்கள்.

 இதை மற்ற எலிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஏனென்றால் கபி எலி திமிர் பிடித்தது. மூத்த எலிகளைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. யாரையும் மதிப்பதும் இல்லை. அந்த வருடம்  நடக்கும் போட்டிக்காக சின்ன எலி காத்திருந்தது. ஆம் போட்டியின் மூலமே ராஜா தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு எலிகளுக்கு இடையே மல்யுத்தப் போட்டி நடைபெறும். அதில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் தான் அந்தக் காட்டுக்கு ராஜா. முன்னால் ராஜாவும் தற்போது எலிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபரும் போட்டியில் பங்கு பெறுவார்கள். தோற்றுப்போன எலி குடும்பம் அடுத்த வருடம் போட்டி வரும் வரை லட்டுக்களை கையில் தொடவே கூடாது. கடந்த முறை தோற்ற சின்னா எலி வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தது. சும்மாவா ஒரு வருடம் லட்டு சாப்பிடவே இல்லை அல்லவா?. அதுமட்டுமில்லாமல் பார்க்கும் இடங்களில் எல்லாம் கபி குடும்பத்தினர் ‘ சின்னா லட்டு தின்ன ஆசையா? சின்னா லட்டு தின்ன ஆசையா?’  என்று கிண்டல் அடித்துக் கொண்டே இருந்தார்கள்.

 சின்னவால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 இந்த முறையும் நானே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் கபி  குடும்பத்தை அழித்தே தீருவேன் என்று சபதம் எடுத்து கொண்டது.

 பல விதங்களில் உடற்பயிற்சி செய்தும் சத்தான உணவுகளை சாப்பிடும் தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.

Art Courtesy : Beatrix Potter

சின்னா பக்கத்து காட்டு ராஜாவான மூச்சி முயலிடம்  யோசனை கேட்கச் சென்றது.

சின்னாவும் மூச்சி முயலும்  நீண்டநாட்களாக நண்பர்கள். மூச்சி  முயலுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, “மூச்சி , எனக்கு என்னமோ கபி குடும்பத்தார் மேல் சந்தேகமாக இருக்கிறது.  இவர்கள் ஏதோ கோல்மால் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால், தொடர்ந்து எப்படி இவர்களால் ஜெயிக்க முடியும் ?” என்றது சின்னா. 

“எனக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த சந்தேகம் இருந்தது. சரி அதற்கு என்ன செய்யலாம்” என்று கேட்டது மூச்சி  முயல்.

”பார்க்கிற இடத்திலெல்லாம் சின்னா லட்டு திண்ண ஆசையா என்று கேலி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் லட்டு திண்ணாமல் எங்கள் குடுமபமே வருத்தத்தில் உள்ளது.” என்றது சின்னா.

  ”ஒரு லட்டு தானே அதற்காக ஒரு வருடம் போராடிக் கொண்டிருக்கிறாய்?  நீ வீட்டில் செய்து சாப்பிட்டு விட்டால் யாருக்காவது தெரியவா போகிறது?” என்றது மூச்சி.

”அப்படி எல்லாம் சொல்லாத தோழா.  நாங்கள் ஒரு முறை முடிவு செய்துவிட்டால்  அதை நாங்களே  மாற்ற மாட்டோம். எங்களுக்குள் நாங்கள் நேர்மையாக இருப்போம்.  எங்கள் இனமே அப்படித்தான்” என்றது சின்னா.

 இதைக்கேட்ட மூச்சி  ”மிகவும் பெருமையாக இருக்கிறது நண்பா.  உன்னை  நண்பனாக  அடைந்ததற்கு” என்று கூறியது  மூச்சி. 

“நண்பா நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” 

”சொல் நண்பா கண்டிப்பாக செய்கிறேன்.”

”ஒன்றுமில்லை கபியின் தங்கை ஷனா உன் தோழி தானே?  நீ அந்த இரகசியத்தை எப்படியாவது அவளிடமிருந்து கேட்டறிந்து சொல்கிறாயா?” என்றது சின்னா . 

”நண்பா!  இது நட்புக்குச் செய்யும் துரோகமாயிற்றே?” என்றது மூச்சி.

”நண்பா. ஷனாவைப் பார்த்தால் நல்ல எலியாகத் தோன்றுகிறது. அவள் கூற விருப்பம் இருந்தால் மட்டும் கேட்டறிந்து சொல்” என்றது சின்னா .

”சரி உதவுகிறேன் என்றது” மூச்சி.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில், மூச்சியைப் பார்க்க வந்தது சின்னா.” என்ன நண்பா சவுக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே ”என்னுடைய விஷயம் என்னவாயிற்று ?” எனக் கேட்டது சின்னா.

”நீ சொன்னது சரிதான். அவர்கள் கோல்மால் தான் செய்கிறார்கள். ஷனாவிற்கே அது பிடிக்கவில்லை. இந்த முறை  நீ தான் வெற்றி பெற வேண்டுமென்று ஷனா கூட விரும்புகிறாள். அவளும் இனத்திற்கு என் அண்ணா நேர்மையாக இல்லாதிருப்பது பிடிக்கவில்லை” என்றே கூறினாள். 

“சரி ரகசியம்  என்ன?” என கேட்டது சின்னா.

இரகசியத்தைக் கூறியது மூச்சு. நன்றி கூறி விடைபெற்றது சின்னா.

போட்டிக்கு எலிகளால் இந்த முறையும் சின்னாவே தேர்ந்தெடுக்கப்பட்டது.

போட்டி நாள் வந்தது. சின்னாவும் கபியும் போட்டிக்கான கையுறை , அதற்கான பிரத்யேக உடையோடு மேடையேறின. கபியைவிட சின்னாவிற்கே கைதட்டுகள் விசில்கள் பறந்தன. முடிவில் சின்னா வெற்றி பெற்றது.  ‘ஆஹா! எப்படி வெற்றி பெற்றிருக்கும்’ என்று கபிக்கு இப்பவும் புரியவில்லை.  

இந்த வருடம் போட்டிக்கு முன்பு கொடுக்கப்படும்  பிலிபாலி மூலிகை நீரை சின்னா குடிக்கவில்லையே.. அதில் தானே மயக்க மூலிகையை கலந்து கொடுத்தார்கள் கபி குடும்பத்தினர். கபி குடும்பத்தினர் இப்படி நேர்மை தவறியதால் அவர்கள் வீட்டிற்கு இரண்டு எலிகள் காவல்காத்தன.  வேறு எதற்கு திருட்டுத்தனமாக லட்டு சாப்பிடுகிறார்களா என்பதைக் கவனிக்கத்தான்.

மூச்சுவிடம் நன்றி தெரிவிக்கச் சென்றது சின்னா. வழியில் கபியைப் பார்த்த சின்னா  கேட்டது  ”என்ன  கபியாரே !லட்டுத் திண்ண ஆசையா?”


  • சரிதாஜோ

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.