கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.

அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும் தங்க வேட்டையர்கள், மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், அவர்களின் ஆதிகால பழக்க வழக்கங்கள், தலைவிரித்தாடும் நிறவெறி, நியாயம் என்றால் கிலோவிற்கு எத்தனை டாலர்கள் என கேட்கும் முரடர்கள் மற்றும் போக்கிரிகள், அதே முரட்டு கரங்களை கொண்டு இவர்களை அடக்கும் ஷெரீப்புகள், மார்ஷல்கள், ரேஞ்சர்கள், என்ற கலவையான சூழலைக் கொண்டது!

ஒன்றரை  நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த கெளபாய் உலகை ஆவலோடு அள்ளிக்கொண்டு விட்டனர் ஐரோப்பிய கதாசிரியர்கள்! வன்மேற்கு என பெயரிட்டு எண்ணிலடங்கா கெளபாய் காமிக்ஸ் கதைத்தொடர்களை படைத்தனர். 150நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியே நமக்கு மறந்து விடுகிறது. சுமார் 150வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை தத்ரூபமாக நம்முன் விவரிக்கும் கெளபாய் கதைகள் மனதை மயக்கும் தங்க சுரங்களாக மிளிர்கின்றன! அந்த நாயகர்களோடு மற்றொரு குதிரையில் நாமும் பயணிப்பது போன்ற பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன அந்த கதைகள்.

புற்றீசல் போலப் புறப்பட்டு பலநூறு கெளபாய் தொடர்கள் இந்த வன்மேற்கின் வஞ்சக ஆடுகளங்களில் அனல் பறந்தன.  அசாதாரண வில்லன்கள், அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் சமயோசித யுக்திகள் என வளைய வரும் கெளபாய்கள் அழகு தமிழ் பேசினர்; 1980களில் தொடங்கி இன்று வரை பல கெளபாய் தொடர்களை வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறது லயன் காமிக்ஸ்!

டெக்ஸ் வில்லர், லக்கிலூக், ப்ளூபெர்ரி, டியூராங்கோ, கமான்சே, பெளன்சர் போன்ற பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் வெளியாகி வரும் பல கெளபாய் தொடர்களை தமிழ் மொழியில் உரிமம் வாங்கி தன்னுடைய நேர்த்தியான மொழிபெயர்ப்பில் வெளியிட்டு வருகிறார் லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு S.விஜயன். இரும்புக்கை மாயாவியை தமிழில் கொண்டுவந்த முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு M.செளந்திரபாண்டியன் அவர்களின் புதல்வர் இவர்.

இத்தனை தொடர்கள் தமிழில் வெளியானாலும் தனக்கென தனி முத்திரை பதித்து தமிழ் காமிக்ஸின் நெ.1 இடத்தில் தற்போது கோலோச்சிவருபவர் சாட்சாத் டெக்ஸ் வில்லரே! தைரியம், வீரம், துணிச்சல், நேர்மை, நடுநிலையான நீதிதன்மை, நட்புக்காக தன் உயிரையும் பணயம் வைக்கும் அசாத்திய குணநலன்கள் என ஐடியல் மனிதராக இருப்பதே டெக்ஸ் வில்லரை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் தம் நெஞ்சுக்கு மிக அருகே வைத்து ரசிப்பதற்கு தலையாய காரணங்கள்.

செவ்விந்தியர் நலனைக் காக்கும் இனவாதம் சற்றும் இல்லாதவர்தான், பிறப்பால் வெள்ளையரான ரேஞ்சர் அதிகாரி டெக்ஸ் வில்லர். செவ்விந்திய பழங்குடிகளில் ஒன்றான நவஹோ இன தலைவரின் பெண் லிலித்தை காதலித்து கைப்பிடிக்கும் டெக்ஸ், பின்னாளில் அவர்களுடைய ஒப்பற்ற தலைவராக மாறுகிறார். இரவுக்கழுகு என நவஹோ மக்கள் அவரை அழைக்கின்றனர். வெள்ளையர்களின் மேற்கே பரவலால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நவஹோக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் உரிமையை நிலைநாட்டும் நாயகராக இருக்கிறார் டெக்ஸ் வில்லர்.

நமக்கு பரிட்சயம் இல்லாத புதிய உலகம் தான் கெளபாய் பிரதேசம். அங்கே செவ்விந்தியர் வாழ்வின் போராட்டங்கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தூண்டும்.

எத்தனை பிரச்சினைகள் இருக்கும் போதும் ஒரு டெக்ஸ் வில்லர் கதை படிச்சம்னா மனசு இலகுவாகிடும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஹூரோயிசத்துக்கு தீனி போடுது இந்த டெக்ஸ் வில்லர் கதைகள்! அவர் ஆநீதியை தட்டி கேட்பது நாமே அதை செய்வது போன்ற ஆத்ம திருப்தியை தரும். சோர்ந்து போன உள்மனம் குதூகலிக்கும். இந்த குதூகலமே திரும்ப திரும்ப டெக்ஸ் வில்லர் கதைகளைப் படிக்கத் தூண்டுகோள்.

எளியவர்களைக் காக்கும் குணநலனை டெக்ஸ் வில்லரது பலகதைகள் கற்றுத்தருகின்றன.

ஒவ்வொரு முறை எளியவர் மீது அடக்குமுறை கட்டவிழும் போதும் டெக்ஸ், “ஆட்டு மந்தையில் புகுந்து இரத்தவெறி பிடித்து அலையும் ஓநாயை விட்டு விட முடியுமா?” என கர்ஜித்து எழுந்து அநீதையைக் களைவார். ராணுவமே என்றாலும் அத்துமீறும்போது தட்டிக்கேட்பது டெக்ஸ் வில்லரின் இயல்பு! பலமுறை இராணுவத்துடன் மோதி, தன்னுடைய சமயோசித யுக்திகள் மூலம் சின்னஞ்சிறு நவஹோ படையைக் கொண்டே அவர்களை முறியடித்து உள்ளார். அத்தகைய கதைகளைப் படிக்கும்போது தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்!

கோழையையும் வீரனாக்கும் கிளர்ச்சி ஊட்டும் இவரது கதைகள். அடாவடிக்கு அதே ஸ்டைல்ல பதில் தருவது இவரது ஸ்பெசாலிட்டி! வீணாக ஒரு உயிரையும் கொல்வதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒற்றைக்கு ஒற்றை சவாலில் எதிராளியைக் கொல்வது 19ம் நூற்றாண்டு அமெரிக்க சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இதைப்போன்ற பல நுணுக்கமான விசயங்களை இந்த கதைகளில் இருந்து அறியலாம். செவ்விந்தியர் உரிமைகளை காக்கும் அதேசமயத்தில், வெள்ளையர் உயிர்-உடமை காக்கும் நடுநிலையோடு நடப்பது டெக்ஸ் வில்லரின் தனிச்சிறப்பு.

      கருப்பு குதிரையில் ஆரோகணித்து வரும் வாலில்லா குரங்கு(?) இரவில் தனியாக பயணம் செய்பவர்களின் தலையை வெட்டி கையில் கொடுத்து விடுகிறது. அது பேய் என்பதான மர்மத்தை டெக்ஸ் வில்லர் விடுவித்து, அந்தப் பகுதியில் நிலவும் மூடநம்பிக்கைகளை தகர்ப்பார். பல கதைகளில் இதுபோன்ற அமானுஷ்ய மர்மங்களின் புதிரை விடுவிப்பார். அந்நாளைய அமெரிக்க சட்டப்படி செவ்விந்தியர்களுக்கு துப்பாக்கி விற்பது கடும் குற்றம். அங்கே நிலவும் கொஞ்ச நஞ்ச சமாதானத்தை இந்த கள்ளவியாபாரிகள் தம் சுயநலத்திற்காக சீர்குலைப்பர். அவர்களை டெக்ஸ் வில்லர் இராணுவத்துடன் இணைந்து கூண்டோடு அழித்து சட்டத்தைநிலைநிறுத்தவார். அரசாங்க விருது டெக்ஸுக்கு கிடைக்கும் என சொல்லும் இராணுவ அதிகாரிகளிடம், “பாராட்டுக்காகவோ-மெடலுக்காகவோ நான் இங்கே வரவில்லை இரத்த வியாபாரிகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது அவ்வளவுதான்”- என உயிர்ப்பாக சொல்லி செல்வார்.

நிறவெறியில் ஊறிப்போன சமுதாயத்தில் அதை எதிர்த்து குரல் கொடுப்பது டெக்ஸ் வில்லரின் தனிப்பண்பு. நிறவெறியை அறவே வெறுக்கும் டெக்ஸ் வில்லர் பல கதைகளில் கறுப்பின மக்களை காப்பார். எல்லோரும் சமம் என்பது இவரது கதைகள் போதிக்கும் சமூக நீதி. டெக்ஸ் வில்லர் கதைகள் படிப்பது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே அல்ல! இலகுவானதும் கூட. ஆத்ம திருப்தி. மனசுக்கு நிம்மதியும் புத்துணர்வும் தரும்.

என்னுடய வாசிப்பில் அறிவியல் கட்டுரைகள், வரலாற்று நூல்கள், சரித்திர நாவல்கள், சித்திரக்கதை என பரவலாக இருந்து வருகின்றன. சித்திரக்கதை சற்றே அதிகமாக இப்போதெல்லாம் படிக்கிறேன். அது எனக்கான உலகம். அங்கே நான் நுழைந்துவிட்டால் ஒரு சிறுகுழந்தையாக மாறிவிடுகிறேன். கார்டூன் படிக்கும் போது நான் ஒரு சிறுவன். கெளபாய் படிக்கையில் நானும் ஒரு வன்மேற்கு வீரன். துப்பறியும் கதைகள் படிக்கும் போது நான் ஒரு தேர்ந்த டிடெக்டிவ். பேன்டசி கதைகள் படிக்கும் போது நானும் வேறுவித வெளியில் பறப்பேன். மொத்தத்தில் எல்லா கவலையும் மறக்கச் செய்யும் கனவுலகம் அது.

தமிழில் சரிவர எழுத படிக்க இந்த சித்திரக்கதை எனும் காமிக்ஸ் பழக்கம் வெகுவாக உதவுகிறது. மழலைகள் தாய்மொழியில் சரளமாக தேர்ச்சி பெற வேண்டுமானால் சித்திரக்கதை படிக்க வைப்பது சிறந்த வழி.

-சேலம் TeX விஜயராகவன்.

 

 

6 COMMENTS

  1. காமிக்ஸ் உலகின் தலைமகன் டெக்ஸ் வில்லர் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகில் டாப் ஹீரோவாக டெக்ஸ் வில்லரும், அவரது கதைகளும் திகழ்கிறது.

    எனக்கு பிடித்த டெக்ஸ் வில்லர் கதைகளை பற்றி எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெறும் பேறு. பெரு உவகை அடைகிறது உள்ளம்.

    வாய்ப்பு வழங்கிய கனலி இதழுக்கும் அன்பர்களுக்கும் உள்ளார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.