உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து
பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின்
வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது
பொக்லைன் இயந்திரம்

அரைகுறை ஆடைகளோடு
தாதியின் தடிக்குப்பின்னிருந்து
அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய்
ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது

ஒவ்வொருமுறையும்
இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து
சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள்
அகப்படும்படியானது

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு
தனக்கு சுன்னத் நிகழ்ந்த போது
அணிந்திருந்த ஆடையை
எவருக்கும் தெரியாமல் போட்டதாய்
உம்மாவிடம் முஷரஃப் அழுதுகொண்டே சொன்னது
அவள் நினைவில் சிதறியது

அகால பொழுதுகளில் கிணற்றைச்சுற்றி
அலைவதாய் நம்பப்பட்ட வெள்ளை உருவத்திற்கு
ஆதரமாய் வெளிப்பட்டது
இஸ்மாயிலின் உடமைகள்

கோழி எனும்புகள்,
உடைசல் நெகிழிகள்,
ஒட்டுண்ணி செடிகள்,
விரோதியை பலிவாங்கிட
வீசப்பட்ட விலையான பொருட்களென
மூன்று லாரிகளில் அள்ளப்பட்டது.

கழிவுகளை அகற்றியப்பின்
அச் சேற்றினில் இறங்கி
தன்னில் அப்பிக்கொண்டு வந்த ஈஸாக்கின் வாப்பா
தன்னை கொஞ்சம் முகர்ந்து திளைக்கும்படி
சுற்றத்தாருக்கு சமிக்ஞை செய்தார்

அதுவரை தொற்றிக்கொண்டிருந்த
பதற்றத்தை விலக்கிவிட்டு அனைவரும் இணைந்து கொண்டனர்

காலத்தின் நிகழ்வுகளுக்கு
பின்னிருக்கும் நினைவுகள் கசியத்துவங்கியது.
தொன்னூறு ஆண்டுகளாய்
புழக்கத்திருந்த உயிர் ஆதாரத்தின் மனம்.

ரா.த.ஜீவிதா

Previous articleகெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.
Next article“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு பார்வை
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.