Thursday, Aug 18, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு பார்வை

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு பார்வை

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக் கொள்ளும் ஆயிரமாயிரம் நுண் துகள்களைக் கூட அந்த குடுவையின் நினைவின் முக்கியத்துவமற்ற பகுதி என்று முடிவுசெய்தல் மேலோட்டமானது. மறுபுறம் கனவுகள்; கனவுகள் எத்தனை வலிமையானது, எத்தனை பீதியூட்டக் கூடியது. இன்கனவுகளே எனினும் அது எந்த கணமும் தன்வடிவிழந்து உருகி வீழும்படி அகத்தில் தற்காலிகமாய் நிலைப்பது என்பதே எத்தனை பேரச்சத்தை உருவாக்குவது. மத்தாப்பு எரிவதைப் போல் எத்தனை அற்பகாலமுடைத்தது மானுட நினைவுகளும் கனவுகளும்!

கனவுகளை வனவிலங்காகக் கொண்டால், வனத்திற்குள் நுழைந்து அதை வென்று அதற்கே நலம் பயத்து வெளியேற வேண்டிய கடமை உளவியலாளருக்கு இருக்கிறது. வரலாறு கண்ட அத்தகைய வீரர்களுள் முதல்வர் சிக்மண்ட் ஃப்ராய் சொல்கிறார் “ நான் எங்கெல்லாம் சென்று நிற்கிறேனோ, அங்கேல்லாம் எனக்கு முன்பே ஒரு கவிஞன் தடம் பதித்திருக்கிறான்” என! கனவுகளை எதிர்கொள்ளும், அவற்றை வெறும் விளையாட்டு பந்தென சுவற்றிலடித்து, தரையிலடித்து, எழுப்பிப் பிடித்து பார்க்கும் தைரியம் கவிஞர்களுக்கு மட்டுமே உரியது. அல்லது கவிஞன் மட்டுமே அவ்வன்விலங்கைத் தடவி நீவி இன்விலங்காக்கி படிமங்களின் கயிற்றால் சொற்கம்பத்தில் கட்டிவைக்கிறான்.

கனவுகள் நினைவுகளைத் தொகுத்துக் கொள்கையில் அவ்வப்போதே, நினைவுகளின் காயங்களின் மீது களிம்பிடவோ, கீறல்களிடவோ செய்கிறது. கனவினை இயக்கும் மாயக்கரம், கனவுகள் புலன்களிலிருந்து தொடர்ந்து நழுவிச் செல்வதை மட்டுமின்றி வார்த்தைகளின் ஆதிமுலத்தை மறக்க வைப்பதிலும் கூட தேர்ந்தது. தொட்டுணரக் கூடிய மண்டையோட்டு கால்சியப் பெட்டகத்தின் உள்ளே மின்சாரமாய் ஓடிக்கொண்டிருக்கும், தொட்டுணரவியலாத அம்மாயத்தை சக மானுடனுடன் பகிர்ந்து கொள்பவன் ஆத்ம தேகத்தின் சிலிர்ப்பையும் சமூக பைத்தியக்காரத்தனத்தையும் பிரதிபலிக்கவுமான ஒரு படைப்பினை தவம் செய்கிறான். புறத்தின் பிம்பங்கள் பட்டுப்பட்டு புடம் போடப்பட்டிருக்கும் மண்வெளியிலிருந்து பாத்திரங்களையும் கனவுகளையும் உருவாக்கும் திராணியுடன் எழுகிறான்.

2

பல வருடங்களாகச் சேகரித்த செய்தித்தாள்களிலிருந்து கத்தரிக்கப்பட்ட துணுக்கு)ள் மேசையில் கொட்டிக் கிடப்பதைப் போல தொடர்ச்சியற்ற காரணங்களற்ற காட்சிகள் முன் வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. லூ ஹோங்வு தன் நினைவுகளின் இடுக்குகளில் ஈரப்பதம் குன்றாமல் பிசுபிசுத்துக் கொண்டிருக்கும் அவளைத் தேடி ஒரு தசாப்தம் கடந்து தன் சொந்த ஊரான கய்லியை அடைந்து அலைந்து திரிகிறான். அவளுடனான அவனது உறவு, அவனது நண்பனின் கொலை, அவனது பயங்கரத்துடனான ஈடுபாடு என பல நினைவுகள் முன்வைக்கப்படுகின்றன. அவை எந்த ஒரு காலக்கோட்டின் வடிவத்திலும் இல்லாமல் முன்னும் பின்னுமாய் அலைவுறுகின்றன. நினைவுகள் அப்படியானவைதானே. அவனது தேடல் மெல்ல செய்திகளையும், துப்புகளையும் சேகரித்துக் கொண்டே இருந்தாலும் அணுக அணுக பெருகும் மயக்கத்தையும் ஜாடையாய் முன்வைத்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு நிறத்தினை அணுகி கிரகித்து அடையாளப் படுத்திக் கொள்ளும் முன் அடுத்த சகுனம் வேறொரு நிறத்தினைச் சிந்தி விழியின் நேர்மையைச் சந்தேகிக்க வாய்ப்பளித்த வண்ணம் இருக்கிறது. அதன் புற வடிவமைப்பாக நிறங்களின் படையெடுப்பினை பெரும்பான்மையான சட்டகங்களில் காணமுடிகிறது. பச்சையின் பித்தம் தரும் நிறம் அவளுடையது. அவளில்லாமல் தனித்தலையும் நாட்களின் தெருக்கள் சிகப்பில் அமிழ்ந்து கிடக்கிறது.

சிதறடிக்கப்பட்ட காட்சிகள் இதுவரை வந்த பல சினிமாத்தனங்களின் கூக்குரலாகவும் அதை மீறத்துடிக்கும் ஏக்கமாகவும் ஒலிக்கவும் செய்கிறது. தன்னைத் தனியே வானில் பறக்கவிடாத மூர்க்கனைக் கொலை செய்ய திட்டம் வகுத்துத் தருவதும், சிறைக்கைதியின் சொற்களில் தோற்றமளிக்கும் திருடியிலிருக்கும் குழந்தைமையும், மந்திரங்களை தீர்க்கமாய் நம்பும் துணிச்சலும், சினிமாவைப் பார்த்து அழுதுகொண்டே ஆப்பிளைக் கொறிக்கும் பழக்கமும் என இருபது முகங்களில் வெவ்வேறு சிறந்த முன்மாதிரிகளின் சாயலுடன் இருந்து கொண்டே தனித்த பண்புகளையும் கொண்ட பெண்ணாகிறாள் நாயகி.

3

கனவுகளுக்கு காட்சியென விரியும் தன்மை இருப்பதை முழுமையான அகப்படுத்திக் கொண்டு திரைக்கு முன்னெடுத்திருக்கிறார் இயக்குநர். காட்சிகளாக விரியும் கனவிற்கு தர்க்கரீதியான ஒழுங்குடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் அதைப் படமாக்கிய விதமும் மாயம்தான். கனவுகள் வேற்றுப் பிரபஞ்சத்திலிருக்கும் மேம்பட்ட உயிரிகள் மனிதனுக்கென சமைக்கும் நவீன ஓவியங்கள். அவை இவ்விதமான பொருள்தான் தரவேண்டுமென எக்காளமிடும் ஒற்றைப் பார்வைக்குச் சிக்கப்போவதோ, அடங்கப்போவதோ இல்லை.

தரையில் கிடக்கும் ஆப்பிள், வணிகரது விரிப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள், பசிக்கையில் கையில் விழும் ஆப்பிள், சிந்தனையில் சமரிட்டுக் கொண்டிருப்பவரின் தலையில் விழும் ஆப்பிள் எல்லாம் வெவ்வேறு ஆப்பிள்கள், வெவ்வேறு புலன் ருசியைத் தருபவை. ஆனால், கனவில் கிடைக்கும் ஆப்பிள், கனவில் அது தரும் ருசி அத்தியாவசியமாக நிஜத்தினைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை. இக்கனவிலேயே என்னைக் காலத்திற்கும் சிறைபிடி என்று கூவத் தூண்டும் சுவை அதிலிருக்கலாம். என்னை விட்டுவிடுங்கள் என்று நாம் அலறுகையில் குரல்நாணிலிருந்து ஒலியெழாமல் செய்துவிடும் மாயமும் அந்த ஆப்பிளின் சாறில் இருக்கலாம்.

இந்த சினிமாவில் பெருமிதத்துடன் வீற்றிருக்கும் உளமயக்கினை உருவாக்குவதில் ஒரு தேர்ச்சி கை கூடியிருக்கிறது. அது தவறியிருந்தால் ஒரு களேபர நாடகமாகி தொய்வேற்பட்டிருக்கும். இலைகளில் ஒரு சமச்சீரமைவு இருந்தாலும் அதில் புரிந்து கொள்ளும் தர்க்கம் என ஏதுமில்லை. அதைச் செய்பவன் படைப்பாளி. அங்கு அவனது நினைவுள்ளம் மட்டுமே பணிபுரிந்து அதைச் செய்துவிட முடியாது, அகக்குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். படைப்பாளி தன் படைப்பில் ஒரு பகுதியை இன்னும் முழுமையாக அறிந்து கொண்டவனாகிவிட முடியாது.

[/vc_column][/vc_row]

4

படத்தின் நடைவேகமும் கேமரா இயக்கங்களும் பெரிதும் தார்கோவ்ஸ்கி, பெலா தார், ஆஞ்சியோபோலஸ் ஆகிய மேதைகளின் கைகளிலிருந்து பற்றிக் கொண்டதாக தொடர்ச்சியாக இருக்கிறது. செயற்கை ஒளியூட்டலும், பொருட்தொகுப்பின் வடிவமைப்பும் வாங் கர்-வாயின் தொனியில் மிளிர்கிறது. இத்தகைய புள்ளி இணையுமிடம் ஒரு புதுமையான அறிதுயிலுணர்வைப் படம் முழுக்கச் சேர்த்திருக்கிறது. படத்தின் முதல் பாதி முழுக்கவே உடைந்த துண்டுகள் வழியே இன்னும் பன்மடங்காய் உடைந்த முகங்களின் பிம்பங்களினையும் அவற்றின் தொடர்ச்சியற்ற வாழ்க்கைத் துணுக்குகளையும் முன் வைக்கிறது. காட்சிகள் நகரும் தோறும் துலக்க மேற்படுவதற்கு மாறாய் மயக்கம் செறிவடைகிறது. பாதி வரை நிகழ்ந்தது படத்திற்கான முன்னோட்டம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளும் போது துவங்கும் திரைப்படம் கனவுகளை மென் நடையில் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டிற்குள் நுழைந்து விடுகிறது.

படத்தில் இருக்கும் மிகப் பெரிய அசாத்தியம் ஒரு மணிநேரமாக நிகழும் சிங்கிள் ஷாட் கனவுக்காட்சி. அது துவங்கும் போது காட்டப்படும் ஒரு குறுகலான இடத்தில் தொடங்கி, மோட்டார் வாகனம் வழியே வானில் பறத்தல் என மாயங்களைக் கேமராவாலும் கதை மாந்தர்களாலும் நிகழ்தப்பட்டுள்ளது. இதை திருப்திகரமாக எடுக்கும் முன்னர் இயக்குநர் ஏழுமுறை கட் செய்தார் என்று அறிந்தேன். பகீரதப் பிரயத்தனம்! இந்த காட்சியினை மட்டும் முப்பரிமாணத்தில் திரைப்படுத்தியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

சில வணிக காரணங்களுக்காக Long Day’s Journey into the Night என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஏற்கனவே யூஜின் ஒ நீலின் புகழ்பெற்ற நாடகத்தலைப்பு இது. அந்த நாடகத்திற்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனினும், அமேரிக்காவில் புழங்கப்பட்ட தலைப்பில் உருவாகும் பரீட்சயம்(பரிச்சயம்) ஏற்படுத்தும் நேர்முக விளைவினைக் குழுவினர் எதிர்நோக்கி இருந்திருக்கலாம். ஆனால் சீனத்தலைப்பான ‘பூமியின் கடைசி மாலைப் பொழுதுகள்’ என்ற தலைப்பு இந்த திரைப்படத்திற்கு இன்னும் பொருத்தமானதாகவும் கவித்துவமானதாகவும் தோன்றியது.

இத்திரைப்படம் வெளியான தினம் டிசம்பர், 31, 2018. முன்னோட்டங்களிலும் நிழற்படங்களிலும் ஒரு இனிய காதல் திரைப்படத்தின் தோற்றத்தை முதன்மையாக உருவாகி வந்திருக்கிறது. இதை ஒரு சிறந்த புத்தாண்டு கொண்டாட்டமாக எண்ணி இணையிணையாகவும் இன்னும் பலரும் முன்பதிவுகள் செய்து வந்திருந்ததால் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூலைச் செய்திருக்கிறது. ஆனால் வேறெதையோ எதிர்பார்த்து வந்தவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டால், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய குமுறலைக் கற்பனை செய்ய முடிகிறது. கொஞ்சம் நெஞ்சம் பரிதாபம் கொள்ளத்தான் செய்கிறது. தலை சுற்றி, வியர்த்து, இந்த ஆண்டு முழுமைக்கும் நான் திரைப்படமே பார்க்கப் போவதில்லை என்று புலம்பி இருப்பார்களோ, பாப்கார்னை வீசி முன்னிருக்கையில் எறிந்திருப்பார்களோ, கோபத்தில் கூர் நகங்கள் இல்லாமல் கிடைத்தவற்றால் சீட்டைக் கிழித்திருப்பார்களோ என்னவோ? வரும் நாட்களிலேயே 96% வீழ்ச்சி வசூலில் ஏற்பட்டது அதைத்தான் காட்டுகிறது. கனவின் வலையில் சிக்காதவர்கள் யார்?

5

குதித்தல் என்பதற்கு கடத்தல் என்ற ஒரு பொருளுண்டு. கூற்றம் குதித்தல் என்கிறான் வள்ளுவன். இறப்பைக் கடத்தல் என்பது அது. கனவு குதித்தல் என்பது கனவிற்குள் வீழுதல் என்றும் கனவினைக் கடத்தல் என்பதுமான இரு திசை நோக்கும் முகங்களையும் ஒருங்கே பார்ப்பது. இத்திரைப்படத்திற்குப் பொருத்தமான சொல்லொருங்கு அதுவாகத்தான் உதிக்கிறது. இத்திரைப்படம் பார்க்கும் அனுபவத்தின் ஏதோ ஒரு புள்ளியில் கனவிற்குள் குதிக்கின்ற நாம் எங்கோ அதைக் கடக்கும் மனவலி(மை)யைப் பெறுகிறோம்.

நிஜம்-கனவு-நினைவு! இந்தப் புள்ளிகளிடையே ஆடும் பெண்டு(டூ)லக் காட்சிகளில் கத்தியின் கூர்மையில் சிந்தும் திவலைகள் திரண்டு வந்திருக்கின்றன. பார்வையாளர்களால் நுண்ணோக்கியில் கவனிக்கப்பட வேண்டிய பனித்துளியாக முன் வைக்கப்பட்டிருக்கும் இப்படைப்பு முடிவற்றதாய், மீண்டும் மீண்டும் இதைச் செய்பவர்களுக்கு மீதமிருக்கும் கேள்விகளுடனேயே திகழும் விளையாட்டாய் உருக்கொள்கிறது. கனவிற்குள் அழைத்தவரும் நுழைந்தவரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கின்றனர் ‘நீ நட்சத்திரங்களை எண்ணி முடித்துவிட்டாயா’ என்று! அங்கு அவர்கள் அமர்ந்திருந்த கொட்டகை சுழலத் துவங்குகிறது. இருவரும் அகப்பிரபஞ்சத்தில் சிறகடிக்கும் பறவைகளாகின்றனர்.

 

– கமல கண்ணன்

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!