மதுரை குடைவரைகளில் பசுமைநடை

சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அழகாய் இணைந்து குடைவரை போலிருப்பதை பார்க்கலாம். இதில் குடைவரை என்ற சொல்லை குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சங்க காலத்தில் கோயில்கள் கோட்டம் என்ற அழைக்கப்பட்டன. இந்த கோட்டங்கள் மண், மரம், சுதையாக அமைக்கப்பட்டவை. அவை காலப்போக்கில் அழிந்துபோயின. சங்க காலத்திற்கு பின்னர் பாண்டியர்களும், பல்லவர்களும் நிறைய குடைவரைக் கோயில்களை எடுத்துள்ளனர். இந்தக் குடைவரைக் கோயில்களை எடுக்க அவர்கள் பெரிய கற்குன்றுகளின் அடிவாரத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்து அதில் ஒரு முன்மண்டபத்துடன் கூடிய கருவறையை அமைத்துள்ளனர். ஒவ்வொரு குடைவரையும் குறிப்பிடத்தக்க கலையம்சத்தோடு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலைகளைக் குடைந்தெடுத்த குடைவரைக்கோயில்கள் பாண்டியர் காலத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில் அதிகம் உள்ளன. திருப்பரங்குன்றம், தென்பரங்குன்றம், யானைமலை யோக நரசிங்கப்பெருமாள், லாடன்கோயில், வரிச்சியூர் குன்னத்தூர் உதயகீரிஸ்வரர் மற்றும் அஸ்தகீரிஸ்வரர் சிவன்குடைவரை, அரிட்டாபட்டி சிவன்கோயில் இவற்றோடு பிள்ளையார்பட்டி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், திருமலாபுரம், வீரசிகாமணி இங்கெல்லாம் பாண்டியர் காலக் குடைவரைகளைப் பார்த்திருக்கிறேன். இப்பதிவில் மதுரையில் உள்ள குடைவரைகளை நோக்கி பசுமைநடையாகச் சென்ற போது பார்த்த அனுபவங்களையும், வரலாற்றுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்குமுன் பசுமைநடை குறித்து சிறிய அறிமுகம்.

பசுமைநடை

சமூகச் செயல்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களால் பசுமைநடை 2010ல் தொடங்கப்பட்டது. மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதுரையிலுள்ள தொன்மையான இடத்தை நோக்கி பசுமைநடை பயணம் நடைபெறுகிறது. பயணத்திற்கு நாலு நாட்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாக சந்திக்கும் இடமும், வருபவர்கள் உறுதி செய்யவேண்டிய தேதியும் குறுந்தகவலாக அனுப்பப்படும். பசுமைநடை செல்ல வேண்டிய இடத்திற்கு வழியிலுள்ள சந்திப்பில் கூடி அங்கிருந்து எல்லோரும் ஒன்றாக அவரவர் வாகனங்களில் அந்த இடத்திற்கு செல்வோம். அந்த இடத்தைப் பார்த்ததும் அந்த இடத்தின் வரலாறு, சிறப்பு குறித்து துறை சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் எடுத்துரைப்பார்கள். எங்கள் குழுவில் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், பேராசிரியர் சுந்தர்காளி, கண்ணன், ஓவியர்கள் ரவி, பாபு ஆகியோர் உள்ளனர். அந்த இடத்தின் வரலாறு குறித்த கைப்பிரதி வழங்கப்படும். பொதுவாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக அல்லாமல் குடும்பம், குடும்பமாக மக்களை வரவைத்தது பசுமைநடை. அதிலும் எல்லா வகையான மக்களும் ஒன்றாக சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என எல்லோரும் ஒற்றுமையாக வரலாற்றை அறிய, அதைக்காக்க வரவைத்தது பசுமைநடை. மேலும், பசுமை நடை வெளியீடான ‘மதுர வரலாறு’ நூல் 5 பதிப்புகள் விற்று 6 பதிப்பு கண்டுள்ளது. நூறாவது பசுமை நடை தொல்லியல் திருவிழாவாக வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை குடைவரைகளை நோக்கி…

மதுரையில் குடைவரைக் கோயில்கள் நான்கு இடங்களில் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம், யானைமலை, அரிட்டாபட்டி, வரிச்சூர்-குன்னத்தூர். இந்த நான்கு குடைவரைகள் உள்ள மலையில் சமணப்படுகைகளும், பழமையான தமிழிக் கல்வெட்டுக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் தொடங்கி வரிச்சூர் வரையிலான குடைவரைகளின் சிறப்பை வரிசையாக காணலாம்.

மதுரையின் தென்பகுதியில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இம்மலையிலுள்ள முருகன் சன்னதி ஒரு குடைவரையாகும். இக்குடைவரை ‘ப’ வடிவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து சிவலிங்கமும் லிங்கத்திற்கு பின் சிவன் சோமாஸ்கந்த மூர்த்தியாக சிலைவடிவிலும் பார்வதியுடன் இருக்கிறார். சிவனுக்கு நேரே பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். அதற்கடுத்து முருகன், துர்க்கை, பிள்ளையார் இருக்கிறார்கள். இந்தக் குடைவரையை பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் அமைச்சரான சாத்தன் கணபதி என்பவர் எடுத்திருக்கிறார். இதனுடைய காலம் கி.பி.7-8ஆம் நூற்றாண்டு. இந்தக் கோயில் பிற்கால பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால்  விரிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்து இம்மலையைச் சுற்றிவரும் வழியில் தென்பரங்குன்றத்தில் கல்வெட்டுக்கோயில் என அழைக்கப்படும் உமையாண்டார் குடைவரை உள்ளது. இந்தக் குடைவரை பெருங்குன்றின் கீழ் மரங்கள் சூழ மிக எழிலாக அமைந்துள்ளது. நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை. இளம்பிராயத்தில்  ஓவியம் வரையும்போது வீடு என்றால் ஒரு சதுரத்தின்மீது முக்கோணம் போடுவோமே. அதைப்போல அழகாக அமைந்த குடைவரையிது.

ஆசியாவிலேயே மிக நீளமான ஒற்றைக்கல் மலைகளில் ஒன்றாகத் திகழும் யானைமலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளது. ஒன்று யோக நரசிம்மர் குடைவரை, மற்றொன்று முருகனுக்காக எடுக்கப்பட்ட லாடன் குடைவரை. நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோயில் ஒரு சிறிய கருவறையும் ஒரு முன் மண்டபமும் மட்டும் கொண்டுள்ளது. பிற்பாண்டியர், விசயநகர காலத்தில் மேலும் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கருவறை வெளிச்சுவற்றில் இக்குடைவரை யாரால் எடுக்கப்பட்டது, காலம் ஆகியவை தமிழிலும், வடமொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுக ஆண்டு 3871 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிகரான கிறிஸ்தவ ஆண்டு கி.பி.770 ஆகும். தமிழகத்தில் ஆண்டு குறிப்புடன் எழுதப்பட்ட முதல் கல்வெட்டென இதைச் சொல்லலாம். யோக நரசிம்மர் குடைவரைக்கு அருகிலேயே இலாடன் குடைவரை அமைந்துள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலமாக இல்லாமல் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முற்பாண்டியர் கலைப்பாணியில் மலையைக் குடைந்து வெட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய கருவறையில் முருகன், தெய்வானையுடன் அமர்ந்திருக்க வெளியே ஒரு முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. முன்மண்டபத்திலுள்ள சேவலும், மயிலும் இடம்பெற்றிருப்பது கருவறையிலிருக்கும் சிலை முருகன் என்பதை பறைசாற்றுகின்றன. இக்குடைவரையின்முன் இரண்டு பக்கமும் உள்ள களிற்றுமுகப்படி மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. யானையின் துதிக்கைப் போன்ற அமைப்பு யானை மலையிலே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டிய விசயம். நம்முடைய வீடுகளில் இதுபோன்ற அமைப்பை இன்றும் காணலாம். மதுரையிலுள்ள மற்ற குடைவரைகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை. முன்சுவற்றில் ‘புல்லாரி வட்டக்குறிச்சி நம்பிரான் பட்ட சோமாஜி பரிவிராஜகர் புதுக்கு’ என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. தெளிவில்லாமல் உள்ள இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது எனலாம். யானைமலையில்தான் பசுமைநடையின் முதல்நடை தொடங்கியது. 101வது பசுமைநடையும் யானைமலையிலிருந்து மீண்டும் ஆரம்பமானது குறிப்பிடத்தக்க விசயம்.

யானைமலையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் அரிட்டாபட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரிலுள்ள கழிஞ்ச மலையில் ஒருபுறம் பாண்டியர்காலக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. ஆணைக்கொண்டான் கண்மாய் கரையோரமாகச் சென்று கி.பி எட்டாம் அரிட்டாபட்டி நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோயிலைப் பார்த்தோம். குடைவரைக் கோயில் கருவறையின் மையப் பகுதியில் சிவலிங்கம் அமைந்துள்ளது. கருவறை வாசலில் வாயிற்காவலர்கள் சிலை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு வெளியே வலதுபுறம் விநாயகர் சிற்பமும், இடதுபுறம் தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத இலகுலீசர் சிற்பமும் மலையோடு செதுக்கப்பட்டுள்ளது. இலகுலீச பாசுபதம் என்னும் சைவ சமயப் பிரிவு அக்காலத்தில் பாண்டிய நாட்டிலிருந்ததை இங்குள்ள சிற்பம் மூலம் அறியலாம். இக்குடைவரை கட்டடக்கலை சிற்ப உருவ அமைப்பை வைத்து கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாமென்று தொல்லியலறிஞர்கள் கருதுகிறார்கள்.

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் வரிச்சூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள மலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயத்தின் போது ஒளிபடும் விதமாகக் குடையப்பட்ட குடைவரைக்கு உதயகிரீஸ்வரர் என்றும் சூரியன் மறையும்போது ஒளிபடும் விதமாக குடையப்பட்ட குடைவரைக்கு அஸ்தகிரீஸ்வரர் என்றும் பெயர். உதயகிரீஸ்வரர் குடைவரையில் இடதுபுறமாக பிள்ளையார் சிற்பமொன்று புடைப்புச் சிற்பமாக உள்ளது. இந்தக் குடைவரைக்கு பின்னாலுள்ள மலையில் சப்தமாதர்கள் உள்ள குடைவரையொன்று உள்ளது. இம்மலையிலுள்ள சமணப்படுகையில் நெல், நூறு போன்ற சொற்கள் தமிழிக் கல்வெட்டில் காணப்படுவது தனிச்சிறப்பாகச் சொல்லலாம்.

பசுமை நடைப் பயணங்களின் வாயிலாகத்தான் பெரும்பாலான குடைவரைக் கோயில்களைக் காணும் வாய்ப்புகிட்டியது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் வரிச்சூர்க்கருகில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்தபோது அங்கு குடைவரைக் கோயில் இருந்தது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. பசுமைநடை வாயிலாகத்தான் அந்த இடத்தை காணும் வாய்ப்பு கிட்டியது. மேலும், ஒவ்வொரு நடையின் போதும் ஒவ்வொரு ஆச்சர்யங்கள் பசுமைநடை வாயிலாக கிட்டியது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் மருது போன்றவர்கள் வரிச்சியூர் பசுமை நடைப் பயணத்தில் கலந்து கொண்டு பேசியது மறக்க முடியாத நிகழ்வு.

கோயில்களுக்குச் சென்று வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அதன் கட்டிடக்கலையையும், வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம். இளைய தலைமுறையிடம் நம் முன்னோர்கள் நமக்களித்த கொடைகளை பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைப்பதும் நமது கடமை. நிறைய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து கொண்டிருப்பது வருத்தமான விசயம். பசுமை நடை ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற நடைகளின் வாயிலாக மக்களிடையே வரலாறு மற்றும் சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

-சித்திரவீதிக்காரன்

உதவிய நூல்கள் –

  1. திருக்கோயில் உலா – சொ.சாந்தலிங்கம்
  2. மதுர வரலாறு – பசுமை நடை வெளியீடு

படங்கள் உதவி – பிரசாத், ரகுநாத், கந்தவேல், ராஜேஸ் மற்றும் கூகுள்

1 COMMENT

  1. அருமையாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் எழுதப்பட்ட கட்டுரை. மதுரையைப்பற்றி, பாண்டியர்களைப்பற்றி, சமணர்களைப்பற்றி, எவ்வுளவு எழுதினாலும் தீராது இன்னும் மிச்சமிருக்கும்!
    கட்டுரையில் கூறப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்க்க தூண்டுவது நிஜம்
    மேலும் இதுபோன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்
    (கட்டுரைக்)சித்திரைவீதிக்காரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.