வெதும்பல்

அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம். எங்காவது கல்யாணம் காட்சி என்று போய்விட்டு வந்தால் வீட்டில் அந்தப் பேச்சுத்தான் அதிகமாயிருக்கும். ‘சாம்பாரக் கொதிவிட்டுத் தாளிச்சா தானே வாசம். அத அவன் செய்ய மாட்டங்கறான். அப்புறம் எங்கயிருந்து வாசம் வரும். சொன்னா என்ன எதுக்கிறான். உன் வேலையப் பாருங்கிறான். எங்கிட்ட கரண்டி புடிக்கக் கத்துக்கிட்டவ. காலம் எப்படியாயிடுச்சு’ கோமுவிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டுவார். கோமு உம், உம் எனத் தலையாட்டி கணவருக்கு சப்போர்ட்டாயிருப்பது போல் காட்டிக் கொள்வாள். ஏற்கனவே இயலாமையிலிருப்பவரிடம் இது வேறு என்று மனம் சலிப்புறும்.

முன்பெல்லாம் சபேசம் குரூப்ஸ் சமையல் என்றால் ரொம்ப விசேஷம். அண்ணனும், தம்பியும் சேர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் அவர்களுக்கு அடுத்து முக்கியமான இடத்தில் பரமேசன் இருந்தார். சமையல்காரர்களை புக் பண்ணி விட்டு கல்யாணத் தேதி வைக்கிற காலமாக அது இருந்தது. அவர்களின் புகழ் பாடுகிற விஷயமாயிருந்தது. சாப்பாடு அப்படி ஒரு கை நேர்த்தியாயிருக்கும். கல்யாணம் முடிந்தவுடன் பந்திக்கு முண்டுகிற கூட்டத்தை உட்கார வைக்கிறதே பெரும் வேலை. இலை போடுகிறதிலிருந்து காய் வைத்து ஊறுகாய் வைப்பது வரை ஒரு அழகு இருக்கும். ‘வேலை செய்யறவங்க அத்தன பேர்கிட்டயும் ஒத்துமையிருக்கிறதுதான்யா உன்னைய அடிச்சுக்க முடியல’ என மற்றோர் கூற்றெல்லாம் நடேசன் குரூப்ஸ் மனதில் இருத்திக் கொண்டதில்லை. தொழில்னு வந்துட்டா கை சுத்தம் மனசு சுத்தம் முக்கியம்னு வேலை பார்க்கணும். குடுக்கிற காசு செரிமானம் ஆகனுமில்லய்யா? என எதிர் வினையாற்றுவார். அத்தோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விடுவார்.

சிறு வயதில் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு கல்யாண வீட்டுக்கு வருகிற சொந்தக்காரர்கள் மாதிரி சுபத்ரா அப்பாவோடு வந்து விடுவாள். பெரும்பாலும் உள்ளூர் கல்யாணம்னா மட்டும்தான் அப்படி. வெளியூர் போனால் அழைத்துக் கொண்டு போக மாட்டார். சாப்பாடு போடுகிற இடத்தில் அப்பாவை வேடிக்கை பார்க்கும் சாக்கில் இலையில் போடப்படும் உணவைப் பார்த்தவாறு நிற்பாள். சுடச்சுட வெண்சோற்றில் உருகின நெய் ஊற்றப்பட்டு கெட்டிச் சாம்பார் விடுகிற காட்சி நாக்கில் நீர் ஊற வைக்கும். நடேசன் குரூப்ஸ் சாம்பார் ரொம்ப பிரசித்தமானதொன்று. அதில் பெரிய விசேஷம் என்னவெனில் முதல் பந்தியிலிருந்து கடைசிப் பந்தி வரை ருசி மாறாததுதான். அப்பொழுதெல்லாம் பரமேசுவுக்கு நல்ல வருமானம். முதல் இரண்டும் பெண்ணான போது கவலைப்படவில்லை. மூன்றாவது தரித்தபோதுதான் வேண்டவே வேண்டாம் என்றாள் கோமு. ‘விடு கோமு! அது நடக்கிறபடிதான் நடக்கும். நீயும் நானும் சொல்லி வச்சா பொறந்தோம்’ என வாயை அடைத்து விட்டார்.

ஆனால், அப்பொழுதெல்லாம் எந்தக் கவலையுமில்லை. அழகழகான பெண் பிள்ளைகள், குடும்பம் வேலை என சதா ஓடிக் கொண்டேயிருப்பார் பரமேசு. சுபத்ரா பெரிய பெண்ணாகிறவரை ஒரு பிரச்சினையுமில்லை. நடேசன் குரூப்ஸினுள் சண்டை வந்து அண்ணன், தம்பி பிரிந்த போதுதான் பிரச்சினை பெரிதானது. சமையலில் உதவி செய்ய வந்த பெண்ணைக் கல்யாணம் செய்ய தம்பி ஆசைப்பட அண்ணன் நிராகரித்ததால், முப்பத்திரண்டு வருட அண்ணன் தம்பி உறவு அற்றுப் போனட்து. வேலையாட்களும் இஷ்டப் பட்டவரோடு பிரிந்து போக அண்ணனோடு பரமேசு வந்தது தனிக்கதை. ஆனால், அந்த வேலை தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். திடீரென்று அண்ணன்காரர் மரணமடைய அத்துவானக் காட்டில் அடர் இருட்டில் சிக்கிக் கொண்டது போல் தவிப்படைந்து தம்பியிடம் அடைக்கலமானார். தம்பியும் எகத்தாளமாகப் பேசினான். ‘மீன் தண்ணியத் தேடிதான் வரணும்’ என வசனம் மொழிந்தான்.

‘அடப் போடா! ஒன்னையத் தெரியாதா எனக்கு! அண்ணன் வேட்டியில மூக்குத் தொடச்சிக்கிட்டு நின்ன மூக்கொழுகி பயதானடா நீ!’ என மனது கூறுவதற்கு மறுமொழி பேசாது பார்வையைச் சுழல விட்டவாறு நின்றது அவமானமாகப் பட்டது. மனுசனுக்குப் பதவியும், நாலு காசும் சேர்ந்தா இருப்புக் கொள்ளாது என்பது போல் அவன் ஆடும் ஆட்டம் அதகளமாயிருந்தது. இது என்ன பெரிய கொம்பன் வேலை என தூக்கிப் போட்டு விட்டு வேறு வேலைக்குப் போகவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால், வருமானம் குறைந்தது. பெண் பிள்ளைகள் நல்ல மண்ணில் வளரும் செடிபோல் வளர ஆரம்பித்தனர். பெரியவள் படிப்பைத் தொடர முடியாமல் போயிற்று. அவளும் அம்மாவிடம் ‘ஏம்மா! எப்பப் பார்த்தாலும் பெரிய பொண்ணு படிப்பு மட்டும் இல்லாதவங்க வீட்டுல தடைபடுது’ என கேட்பதற்குப் பதிலிருக்காது கோமுவுக்கு. முரணான பதில் வந்து விடுமோ என அங்கிருந்து அகன்றும் விடுவாள்.

தங்கைகள் இருவரும் அம்மா அப்பாவோடு ஒத்திருக்க தான் மட்டும் தனியளாக இருப்பது போல் தோன்றும் சுபத்ராவுக்கு. இதோடு நான்கு இடம் வந்து பார்த்து விட்டுப் போய் விட்டார்கள். அழகைவிடப் பணம் பிரதானமாகப் பட்டது பார்த்தவர்களுக்கு. ‘கல்யாணப் பொண்ணு வீட்டுல கொடுத்தது இதெல்லாம்!’ என புனைவு பேசும் ஜனக்கூட்டம் இருக்கிற வரைக்கும் இந்த நிலம் இப்படித்தான். ‘மனுசனோட மனசுல அன்பு, இரக்கமிருந்தா பொண்ணு குணம் பண்பு பார்த்து கட்டிப்பாங்க. இல்லாதவங்ககிட்ட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன? கற்பாறையை உளி வச்சு உடைக்கிற மாதிரி’ என சுபத்ரா மனம் எண்ணும். அதுவாவது எப்படியோ சிறுசிறுகல்லா உருமாறி பயன்படும். இம்மாதிரி மனிதர்கள் எதற்குமே பயனற்றவர்கள்.

ஆனால், இதெல்லாம் அவள் வெளியே கூற இயலாமல் பேசா மொழியைப் பெற்றிருந்ததுதான் வருத்தம். பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும். கடமை முடியனும். இங்கிருந்து தள்ளி விட்டுட்டு ஒரு பொண்ணுக்குக் கல்யாணமாயிடுச்சுன்னு சமையல் தர்பார்ல பேச்சைப் பதிய வைக்கணும். அதுக்கு நமக்கு வர்ற மாப்பிள்ளை எப்படியிருந்தாலும் சரிங்கனும். என்ன ஒத்தில்லாத முரண். ‘எங்க சுபி ரொம்ப வளர்ந்துட்டா’ என்ற பேச்சைக் கேட்கும்போது நெடுநெடுவென வளர்ந்த தன்னுடைய உடலைக் குறுக்கிக் கொள்ளவா முடியும் என்ற கேள்வி எழும். தனக்கே வழியில்லாத போது   அடுத்துப் பெரியவளான தங்கையைப் பார்க்கும் பொழுது அவலம் எட்டிப் பார்க்கும். தன் தந்தையின் முன்பான காலத்து வாழ்வின் எச்ச நிலை தினந்தோறும் செவியில் அறைவது கேட்டு சலித்துப் போனாலும் ‘இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கிறார்?’ என்ற கேள்வியே எஞ்சியது. சில நேரங்களில் பகீரென்றிருக்கும். தான் செடிகள் எரியூட்டப்பட்ட நிலத்தின் வெப்பத்தில் அடைகாத்து நிற்பது போல் தோன்றும். பொதுவாக, அவள் இந்தச் சமையலில் கொதிக்கும் வெப்பத்தை அவள் விரும்பவில்லை. அந்த வெப்பம் அவளைப் புரட்டித் தள்ளும். உடல் தவித்தலைந்து நிற்பது அவளுக்குப் புதிதல்ல. அப்பொழுதெல்லாம் கொல்லைப் புற கோணல் மாணலான மரங்களும், புதுவிதமான பறவையொலிகளும் தான் சமாதானம் செய்து கொள்ளும். திடீரென ஒரு சந்தேகம் முளைவிடும். பறவைக்கு வெப்பம் வருமா என்று?இது எல்லோருக்கும் ஒன்றுதானெனவும் உணர்ந்து கொள்வாள்.

அம்மா வந்து கத்துவாள் ‘ஏண்டி சுபி! பொழுதனைக்கும் கொல்லைப்புறத்த வெறிச்சுக்கிட்டிருக்க’ என அலுத்துக் கொள்வாள்.

அம்மாவிடம் சொல்ல முடியுமா? எண்ணெய் கொதிக்கும் வெப்பம் தன் உடலில் பரவுவதை. தினமும் இது நடக்கும்தான். கொல்லைப் புறம், அவள் கனவுகள், அம்மா, அப்பா, தங்கச்சிகள் மனதில் அமிழ்ந்து தென்படுவார்கள். தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி ஒரு ஆத்ம சுகத்தைத் தரக் கூடிய உறவு அமைந்து விடுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

வீட்டில் திருமணம் பற்றி நடக்கும் விவாதங்கள், கருத்து மோதல்கள் அவளுள் ஒரு பெரிய எதிர்வினையை ஆற்றத் தயாராயின. இந்த மழை, காற்று, நட்சத்திரம், ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள உதவும் கதகதப்பான தலையணை, பறவைகளின் சத்தம், ஜன்னல் வழி கை நீட்டும் பூக்களின் நறுமணம் இவை போது. வெப்பத்திலிருந்து தப்பித்து விடலாமென்றிருந்தவளுக்கு முடியாது போலிருந்தது.

வீட்டில் அசாதாரண சூழல் நிலவியது. அப்பா கையைப் பிசைந்து கண்விழி தெறிக்குமளவிற்குக் கோபமுற்றிருந்தார். அறையில் லைட் போட்டுக் கொண்டு உட்காருமளவிற்கு மனம் வரவில்லை. வாழ்வின் இருண்ட பகுதிகள் நீண்டு கொண்டே போகுமெனத் தோன்றியது. அந்த இருட்டிலிருந்தால் தான் தனிமையாகயிருப்பது மனதில் எழவில்லை. இந்த இருட்டும், தனிமையும் அவளுக்குப் புதிதல்ல. இது ஏன் ஒரு பார்வையாகப் பார்க்கப்படுகிறது? தேவையென்ன? திருமணம்தான் பெண்ணை நிர்மாணிக்கிறதா? தீர்வென்ன? வீட்டிலெழும் கூப்பாடுகளுக்கெல்லாம் பதிலென்ன?

உடம்பு வெப்பத்தில் தள்ளாடியது. அவளும், அவள் எண்ண ஓட்டங்களுமாய் அந்த இருட்டு பேசிக் கொண்டிருந்தது. தன் செயல்களைத் தன்னுடைய பிம்பமாகவே மேலே போர்த்திக் கொண்டாள். அங்கே ரத்தமும், சதையுமானதொரு கற்பனை உருவம் தென்பட ஆரம்பித்தது. நான் உனக்குத்தான் என்றதில் சொல்ல முடியாத உற்சாகத்தில் திளைத்து நீந்தினாள். நீந்துதல் அழகு. உடலும், மனசும், கையும், காலும் பரபரத்து நின்றால்தான் நீந்த முடியும். உடல் பந்தாய்ப் பறக்கும். இன்னும் ஆழத்துக்குப் போ எனக் கட்டளையிடும். உள்ளே புகுந்து புகுந்து முங்கி வெளிவந்து கட்டற்ற நிலைதான் அதில் கிடைக்கும். இதில் தண்ணீரில் மூழ்கினால்தான் ஆயிற்றா? மழையை ரசிப்பதும் அவளுக்கு நீந்துதல்தான். இவ்வாழ்வை எப்படிக் கடப்பது என்ற தருணங்களில் சிற்சில நேரங்களில் எட்டிப் பார்க்கும் மழை அவளின் ஆதர்ச நாயகனாகியது.

மழை அவளது தனித்த உலகத்தின் சொப்பனத்தை நிரப்பும் உலகமாக இருந்தது. மென் தூறலாய்த் தொடங்கி சட்டென வலுப்பெறும் மழைமேல் விருப்பம் கொள்வாள். ஜன்னலிடம் உட்கார்ந்து எத்தனை நேரமானாலும் அதை ரசித்துப் பார்க்கும் உவகை அவளுடைய உடலெங்கும் வியாபிக்கும். உள்ளம் பூரித்துப் பொங்கும் இனம் புரியா உணர்வு ஆக்கிரமிக்கும். மழை அவளைப் பெருமளவு தன் வசப்படுத்தியிருந்தது. அதன் வலிமையான கைகளுக்குள் அவள் அடைப்பட்டுக் கிடந்தாள். மழை நீர் அவளை ஆழ்ந்த அமைதிக்குக் கடத்திச் சென்றது. அது தன் வாழ்க்கையைப் பிரதிபலித்து உள்வாங்கிக் கொண்டது போலுணர்ந்தாள். நிறம் காண முடியா நீர்மை தன் உலகை வண்ணமயமாக்கி அவளைச் செம்பொன் பூசிய சித்திரப் பாவையாக மாற்றுவதை, கண்கூடாகக் கண்டாள். வானிலிருந்து பெய்யும் ஒவ்வொரு துளியும் ஒரு கனவுக் கோப்பையை அவளிடம் நிரப்பியது. அதில் நிரம்பி நிரம்பி வழிந்தாள். மழையின் குளிர்ச்சியில், வாடையில் முங்கி எழுந்தாள். அது அவளே அவளுக்கான லோகத்தைக் காட்டியது. அதில் அவளே இளவரசி ராணி இன்னும் எல்லாமுமாக ஆனாள். மழை வேகமாக வலுப்பெறும்போது அதன் தீவிரத்தில் உடல் சிலிர்த்துக் கொள்ள தன்னை அதனோடு ஒப்புக் காண முயன்றாள். உருவகித்துப் பூரித்தாள். திரும்ப எப்பொழுது என்னிடம் நீ வருவாயென அதனோடு உரையாடத் தொடங்கினாள்.  வினாவும் விடையும் அவளேயானாள். மழைப்பொழுதிற்கு அவள் அடிமையாளாள். கீழ்ப்படிந்து அதனோடு உத்தரவாதம் தந்தாள். என்றும் நீ என்னோடு என்று இசைவும் தந்தாள். மழை இல்லையென்றாலும் கற்பனை உலகம் அவளை வழி நடத்திச் சென்றது.

சில நாட்களாகத் தனிமை அவள் வசமானது. அது அற்புதமான உலகமாயிற்று. அங்கு நிறைய மனிதர்கள் அவளோடு உரையாடினர். உரையாடலின் முடிவில் மெல்ல வெப்பம் அவளைப் பற்றிக் கொள்ள வரும்.

‘ஓ! நீ வந்து விட்டாயா!’ எனக் கேட்டுத் தள்ளி விடுவாள். அது நகராது அழுத்தமாய் நிற்கும். நானே பேரண்டம். அதில் நீ ஒரு சிறு துகள். தள்ளி விடறயா? எனக் கேட்பது போலிருக்கும்.

அதனின் கடும் காங்கை உடல் வருட வரும். தகித்து தகித்து உடம்பும், உணர்வும் வெப்பத்தில் சுழற்றியடிக்கும். திரும்பும் பக்கமெல்லாம் அதன் தீக்கங்குகள் வருடுகின்றன. மிகப்பெரும் ஒளிப் பிழம்பாய்க் கொதித்து இன்னும் தீயை அள்ளி உடம்பில் வீசும்.

உடம்பு என்ன கருங்கல்லுலயா செஞ்சிருக்கு? சுபத்ராவுக்கு மனசில் திடீரென்று அச்சம் பரவும். ஆசுவாசப்படுத்திக் கொள்வாள். தன்னைத் தவிர பல ஆண்டு கண்ட மரமும், கட்டிடங்களும் மகிழ்ந்திருந்தன.

இத்தகைய பொழுதுகளில்  வீட்டில் உள்ளாரோடு சம்பாஷனை செய்ய இஷ்டமில்லாமல் போனது. தன் திருமணப்பேச்சு எடுபடும் போதெல்லாம் ஒரு எகத்தாளப் பார்வை பதிக்க ஆரம்பித்தது கண்டு உள்ளூர பரமேசுக்குக் கவலையாயிற்று. தன்னுடைய கையாலாகத்தனம் எடுபட்டுப் போய்விடுமோ? என்ற அச்சமும் எட்டிப் பார்த்தது. சில நாட்களுக்குப் பிறகு மகளின் விட்டேத்தியான நிலை கண்டு.

‘சுபி! உன் மனசுல எதுனாச்சும் கோபமா? எதுன்னாலும் வெள்யே கொட்டி விடு. மூடி வச்சா பாரம் தாங்காது. அதுலேர்ந்து வெளிய வந்துடனும்’ என்ற கட்டுப்பாடு விதித்தது எரிச்சலைத் தூண்டியது.

அவ்வப்பொழுது அம்மாவும் ‘இந்த இடம் தகைஞ்சிடுமா? கொஞ்சம் கூட குறைச்சன்னாலும் சுபிய தள்ளி விட்டுடனும். இப்பல்லாம் அவ ரொம்ப சாந்தமாயிடறா. தங்கச்சிங்க கிட்டக்கூட தள்ளி நிக்கிரா, ரொம்பக் கவலையா இருக்கு’ என்று விசனப்படும் அம்மாவைப் பார்த்து, ‘அப்படியா கோமு! நான் இன்னைக்கு அவன் கிட்டப் பேசிப் பார்க்குறேன். கடனா எதுனாச்சும் கிடைக்காதுன்னு பார்ப்போம் என்று வெளியே கிளம்பத் தயாரானார்.

அம்மா ஏதேதோ பேசிக் கொண்டே இரவு உணவைக் கிளறிக் கொண்டிருந்த வாசம் நெடியில் ஏறியது. எப்போதும் போல் கோலம் போடும் இடத்தில் மெர்சி லேசான மூச்சிரைப்போடு தன் உணவிற்காகக் காத்திருந்தது. தெருவிளக்கு மிக மெலிதான வெளிச்சத்தை விட்டு விட்டு வெளிப்படுத்தியது. பல்ப் மாற்ற வேண்டி மின் கம்பம் காத்திருத்தல் போல ஆக இவ்வுலக்க ஜீவன்கள் உயிருல்லவை, உயிரற்றவை என எல்லாமும் காத்திருத்தலில் அந்த அடர்ந்த இரவுப் பொழுது தன்னை உள்வாங்கியிருந்தது. அதனுள் சுபத்ராவும் அடக்கம் ஜன்னலில் முகம் புதைத்திரு ந்தாள். இகண்களில் நிர்ச்சலனமான பார்வை புருவம் தூக்கி யோசிக்க மனசு ஒன்றவில்லை. நீண்ட சடையில் சூடியிருந்த கொத்து முல்லையின் மணம் ஏகாந்தத்தில் இழுத்து விட முடிந்தது. தலையை நுனியில் பிரிப்பதும் பின்னுவதுமாகயிருந்தவளை ‘சுபி, சித்த சாப்பிட வர்றியா? தட்டு வைக்கட்டுமா?’ என்ற குரல் எழுப்பியது. எது எப்படியிருந்தாலும் ஒரு குழம்பு தொட்டுக்கத்தான். ஆனாலும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம பார்த்துக்கனும்ங்கறது அம்மாவைப் பார்த்து பச்சாதாபம் எழுந்தது.

வாசல் ரேழியில் அப்பா கால்ச் செருப்பை சரட்டென்று கழற்றும் ஓசை கேட்டு மெர்சி அவரின் பையைப் பார்த்து ஓடி வந்தது. தள்ளிப்  போ என்று அதை விரட்டினார். அதற்குக் கட்டுப்பட்டு ஒரு ஓரமாகத் தன் தலையைச் சாய்த்துத் தன் காத்திருப்புப் பணியைத் தொடங்கியது. அம்மா அதற்குள் கூடத்திற்கு வேக நடை போட்டு வந்து விட்டாள். இவருக்காகத்தானே காத்திருந்தாள்.

‘போன காரியம் என்ன ஆச்சு?’

ஊஞ்சல் அவர் உடம்பைத் தாங்கிக் கிறீச்சிட்டது. சன்னமாக அசைத்துக் காலை உந்தி உந்தி உதைத்தது அம்மாவுக்குக் கவலையளித்திருக்குமோ? என சுபத்ராவின் மனம் எண்ணியது. ஓரக்கண்ணால் இக்காட்சியெல்லாம் நிஜக்காட்சியாகக் கோர்வையாயிற்று?

அறுபத்தாறு வருட சோகம் அப்பா முன் கவிந்திருப்பதை உணர முடிந்தது. ஒவ்வொரு உறக்கத்திலும் சுபத்ராவின் திருமணம் நீண்ட நகமுள்ள விரல்களோடு அவர்மேல் பிறாண்டுவதாய்ப் பயந்தது போலக் காணப்பட்டார். ரத்தம் முழுவதும் முகத்தில் வந்ததைப் போல் ஜிவ்வென்றிருந்தார். தன் முன் மிகப்பெரும் கொடும் விலங்கு கழுத்தை நெறிப்பது போன்ற உணர்ச்சி அவருக்கேற்பட்டது. இந்த மண்ணோடு மக்கிப் போவது போன்றதொரு நினைப்பிலிருந்தார். எல்லாவற்றிற்கும் இறப்புதான் தீர்வென்றால் இந்நிலத்தில் மனிதத் திரள் இருக்காது. எழுதாத சட்டமாகத் திருமணம் உள்ளது. அதை மீறினாலென்ன ஆகும். சகித்துக் கொண்டாள் சுபத்ரா.

‘அவன் கிட்ட காசுயிருந்தா எனக்குச் சமமாகி விடுவானா? கோமு, என்ன பேச்சு பேசறான். நான் பார்த்து வளர்ந்த பய. ஒரு மரியாதை வேணாம். அண்ணன் கிட்ட நான் கூப்புட கூப்புட போனீங்க மறந்துட்டீங்களா! யாருக்கு வேணும்னாலும் உதவி பண்ணுவேன். ஒரு காசு உங்களுக்கு எடுக்க மாட்டேன். வயசாயிடுச்சு இனிமே போயி புது எடத்துல வேல பார்க்கறதும் கஷ்டம். என் கிட்ட வேலைக்கு மட்டும் தான் பணம். கல்யாணமாவது ஒண்ணாவது அப்படீங்கிறான்’

ஆற்றாமையில் உதடு துடித்து அடங்க உணர்ச்சிக் கலவையாக மாறியவரிடம் ‘விடுங்க பார்த்துப்போம்’ என்று அம்மா ஆசுவாசப்படுத்தினாள். சியாமா தண்ணி எடுத்துட்டு வா என்று கூறினாலும் மனசில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். வாய் என்னென்னவோ கேட்கத் துடித்தது. பெண்களுக்கு மத்தியில அதை எல்லாம் பேச மனம் விரும்பவில்லை. தம்பிக்காரன் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்ய முதலில் அண்ணனோடு சேர்ந்து எதிர்த்தவர் இவர்தானே? அப்பொழுது தெரியுமா நமக்கு இப்படி ஒரு சூழல் ஆட்படுத்தப்படுமென்று?

பகற்பொழுதுக்கு இரவுப் பொழுது காத்திருக்கத் தொடங்கியது. யாரும் சரியாகத் தூங்கியிருக்க மாட்டார்களென்று சுபத்ராவுக்குத் தோன்றியது. வளர்ந்த ஒரு பெண்ணின் திருமணம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஒரு வேளை தான் படித்திருந்து ஏதேனும் வேலை  பார்த்திருந்தால் இப்படி யாரும் கவலை கொள்ள நேராதோ? என எண்ணினான்.

‘என்னோட சமையல்லதான் நடேசன் குரூப்ஸ் ஓடினது. அதுக்கு எவ்வளவு உழைச்சிருப்பேன். ஆட்கள கட்டுக்கோப்பா வச்சிருப்பேன். பந்தி தொடங்கி முடியற வர ஒவ்வொரு விசேஷத்திலும் ஓடின் ஓடி பார்த்துப்பேன். அப்பல்லாம் இந்த சின்னவன் மாமா மாமான்னு என்னைய சுத்திச் சுத்தி வருவான். இப்பக் கையை நீட்டிப் பேசறான். எல்லாச் சாப்பாட்டுக்கும் சாம்பாருல நான் தான் சாமான் சேர்ப்பேன். அரைச்சு முடியறவரைக்கும் நகர மாட்டேன். அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துப் பண்ணின காரியங்கள் எத்தனை. அதென்னால்  நினைச்சுப் பார்த்தானா அவன். வாயிருக்கிறதுன்னு என்ன வேணா பேசிடலாமா கோமு? நீயே சொல்லு நான் எதாச்சும் கெட்டது நினைச்சிருக்கேனா?’

கழிவிரக்கத்தில் ஓங்கியும் தாழ்ந்தும் எழுந்த அப்பாவின் குரல் ஒலியில் தொண்டைக் குழியில் ஏதோ சிக்கிக் கொண்ட தவிப்பு. ஊஞ்சல் ஆட்டத்தோடு மன விசையும் எதிர் எதிர் துருவங்களாகப் பயணிப்பதாக தூக்கம்கில்லா அவ்விரவு அவளுக்கு உணர்த்தியது.

மறுநாள் காலைப் பொழுதிலிருந்து சுபத்ராவைக் காணவில்லை. ஏதேதோ எண்ண அலைல் பிரவாகமாகி வழிந்தோடிய முகக் குறிப்போடு பரமேசும், கோமுவும் காணப்பட்டனர். ரொம்ப நேரம் பேசாமல் வெறிக்க வெறிக்க அவர் உட்கார்ந்திருந்த நிலை கண்டு வீட்டில் அசாதாரணச் சூழல் யாரும் யாருடனும் பேச முயற்சிக்கவில்லை. பேசி என்ன ஆகிவிடப் போகிறது என்ற நிர்ச்சலனம்தான் காரணம். மகளைக் காணாத தீவிரம் முழுமையடைந்து உள்ளே அலைமோதி அலைந்து தவிப்புரும் தகப்பனைக் கண்முன்னே கண்ட கோமு சுவற்றுப் பக்கம் திரும்பி வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஆயிரம் இருந்தாலும் பெற்றவள் ஆயிற்றேன். குறை காண முடியா குத்து விளக்காய்ப் பிரகாசிக்கும் சுபத்ராவை அகல்விளக்காய்க் கூட யாரும் பார்க்க வில்லையே. இரண்டு விளக்கும் ஒளி தருவதுதான். இருட்டுக்கு வெளிச்சம் தருவது மாதிரி இருந்தாளே. ‘அவளை ஒரு பொருட்டா மதிக்கல. மனசுல என்ன இருந்ததுன்னு கேட்கல. கல்யாணத்த பண்ணித் தள்ளிடனும்தானே பேசினோம். அவள எதுல தள்ளறது ஆத்துலயா, குளத்திலயா’ கோமுவுக்கு இது போன்ற பல நினைவுகள் கட்டுடைந்து உணர்ச்சியில் நெக்குருகினாள்.

வெளியில் ஏதோவொரு காரின் சத்தம். அனைவரும் கண்களும் ஒரு சேர வெளியை நோக்கின. தங்கச்சிகள் இருவரும் ஓடிப் போய் அவள் கையோடு கையப் பிணைத்தனர்.

‘அப்பா!, அக்கா வந்தாச்சு’ குரல் ஏகோபிதமாக வந்தது. அப்பா வெளியில் வந்தார்.

நீலப் புடவையில் சுபத்ரா இருந்தாள். முகத்தில் இன்னதென்றறிய இயலா உணர்விருந்தது. சிவப்புத் தோல் போர்த்திய பச்சைக் குழந்தையாகத் தெரிந்தாள். அவளது எல்லைகளற்ற சுதந்திரம் ஏதோ ஒரு அடைப்புக்குள் சிக்கிக் கொண்டது போல சுற்றியலைந்தது. அவளால் அதைக் கைக்கொள்ள முடியவில்லை. மிகப்பெரும்  நதியில் ஐக்கியமான சிறு மழைத்துளி தூறிடுவது போலத் தெரிந்தது. கண்களிலே ஜீவனற்ற ஒளி. மென் உதடுகள் துடித்து அடங்கின. நீள விரல்கள் புடவைத் தலைப்பை இழுத்து விட்டன.

‘சுபி!’ அப்பா மிக மெதுவாக அழைத்தார். ‘இது நடேசன் தம்பி காருல்ல? இதுலயா வந்த?’ எனக் கேட்டார்.

‘ஆமா! இந்தக் காருலதான் வந்தேன். எனக்குத்தான் இனிமேல்’

இருவரது கண்கள் மட்டும் பேசின. அவ்விடம் வார்த்தைகளற்றுப் போயிற்று. யாருக்கும் கட்டுப்படாத மௌனம் அங்கு குடிகொண்டது.

இப்பொழுதெல்லாம் சுபத்ராவிற்கு வெப்பம் பிடித்துப் போகிறது. போகத்தான் வேண்டும். அதனுள் சமையலறை வெப்பமும் அடக்கமாகிப் போனது.

-ம.கண்ணம்மாள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.