அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு ‘மோகமுள்’ என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள அனைத்து விஷயங்களைப்பற்றி விவேகம் மிக்க தனது எண்ணங்களை- அவர் பதிவு செய்திருப்பதுதான் மோக முள்ளின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.
யமுனாவுடன் உள்ள பக்தி சார்ந்த உறவு (Platonic Relationship), பக்கத்து வீட்டு தங்கம்மாவுடனான உடல் சார்ந்த உறவு( Physical Relationship) இவைகளுக்கிடையில் ஞானம் மிக்கவனாக சங்கீதத்தில் உயரத்துடிக்கும் ஒரு இளைஞனின் கதை என்று மட்டும் மோகமுள்ளை வரையறுத்து விடமுடியாது. பல அடுக்குகள் கொண்ட கோபுரமாக மோகமுள் இருப்பதால்தான் அதை வாசிக்கும்போது காப்பியம் போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. பல கிளைக்கதைகள் மோகமுள் முழுக்க விரவி இருப்பதை பார்க்கலாம்.
உதாரணத்துக்கு சில: பாபுவின் தந்தை வைத்திக்கும் சித்த புருஷர் ராஜுவுக்கும் இடையிலான அற்புதங்கள் பற்றிய கதை – பெரியப்பா மகன் சங்குவின் கதையும், சாவி தேடின பட்டப்பா கதைகளும் – ரங்காச்சாரியுடன் பாபுவின் நண்பன் ராஜம் விபச்சாரியிடம் செல்வதும் அங்கிருந்து தப்பித்து வருவதும், அதன் பின்னர் மழைக்கு ஒதுங்குகிற புல்லுக் கட்டுக்காரியிடமிருந்து ‘பெண்களை தெய்வமாகக் கருதுகிற எண்ணத்தை பெறுதலும் – இப்படி மோகமுள் முழுக்க பல்வேறு கிளைக்கதைகள்.
கல்லூரி படிக்கும் பாபுவை மையப்பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலில் 1940 களின் ஆச்சாரமான பின்னணியில் வந்த முனைப்பான இளைஞன் ஒருவனின் மனப் போராட்டங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பக்தி, பக்தியின் அத்துமீறல்கள் – தெய்வீக சித்து வேலைகள், அவற்றை நம்புவதா கூடாதா போன்ற சிந்தனைகள் – பெண்பார்த்தல் போன்ற சடங்குகள் – கிழவனுக்கு இளம் பெண்ணை மணம் செய்தல் – வைப்பாட்டி, இளம் விதவைகளை சமூகம் நடத்துகிற விதத்தின் மேலுள்ள கோபம் – காமம் அல்லது காதல் அதனை நிர்வாகம் செய்யத் திணறும் வயதானவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் – வாழ்க்கையில் ஒரு இளைஞனின் வெற்றியும் தோல்வியும் காமத்துடனான அவனது போராட்டத்தின் முடிவில் தான் இருக்கிறது என்கிற உண்மை – ‘பெண்களை தெய்வமாக வழிபடுவது’ அதை எதிர்கொள்ளும் ஒரு வழி என்கிற தெளிவு. இதையெல்லாம் எல்லோரையும் ஈர்க்கிற வகையில் சொல்வதுதான் மோகமுள்ளின் தனித்தன்மை. இதற்கும் மேலாக தி.ஜானகிராமனின் சிறப்பு, இளம்பருவத்தின் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொன்னது மட்டுமில்லை. மனமுதிர்ச்சியோடும் விவேகத்தோடும் சொன்னது தான்.
அவற்றில் சில:
‘ மனுஷன் சுகமாயிருக்கிறதை யாரும் தடுத்ததில்லை.’
‘ பொண்டாட்டி இருக்கிறபோது வேறு ஸ்திரீயை மோகிக்கிறது.. ஒருவருடைய சுயமரியாதைக் குறைவு. கௌரவக்குறைவு’
‘பக்தி என்பது பேரமில்லை.நான் உன்னை நினைக்கிறேன், நீ என்ன கொடுக்கிறே? பணம் கொடுக்கிறயா? அறிவு கொடுக்கிறியா? பேர் கொடுக்கிறயா? சக்தி கொடுக்கிறயா? ஆபத்திலேர்ந்து காப்பாத்தறியா?”
‘எதுவும் எப்போதும் இந்த பிரபஞ்சத்தில் புதிது இல்லை’
‘பெற்றவர்களை இந்த சின்ன விஷயங்களால் கலக்கிவிட முடியாது’
மோகமுள்ளின் மற்றொரு இன்றியமையாத சிறப்பு, சாஸ்திரிய இசை மணம் நாவல் முழுவதும் நிறைந்திருப்பது தான்.
ஒரு சமயம், சென்னை விமான நிலையத்தில், விமானம் வர தாமதமானதால் அமரர் லால்குடி ஜெயராமன் அவர்களோடு நீண்ட நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தி. ஜானகிராமனை பற்றித்தான் எங்கள் பேச்சு முழுவதும்.
அவர் தி.ஜாவைப் பற்றி சொன்ன முக்கியமான இரண்டு விஷயங்கள்:
1) கர்னாடக இசையைப் பற்றி தமிழில் தி.ஜாவைப்போன்று யாருமே எழுதியதில்லை. எழுதவும் முடியாது.
2) கச்சேரி செய்யும் அளவுக்கு மிகவும் தகுதி வாய்ந்த இசைக்கலைஞர் அவர். அதனால்தான், இசையைப் பற்றி நுட்பமாக அவரால் எழுத முடிந்தது.
உண்மைதான். மோகமுள் நாவல் காந்தி பார்க்கில் ரேடியோவிலிருந்து வரும் வீணை இசையுடன் துவங்குகிறது.
‘பைரவி ராக வர்ணத்தில் உள்ளம் மபகாரீஸநீதபமா என்று வீணை கீழிறங்குவது கேட்டது. என்னடா இப்படி செய்துவிட்டாயே என்று பொறுமையாகவும் இடித்தும் கேட்பதுபோல் விழுந்த அந்த ஸ்வர வரிசை நெஞ்சில் பாய்ந்து வயிற்றை கலக்கிற்று. மறுபடியும் தாரை தாரையாக அவன் கண்ணில் நீர் பெருகிற்று……. ‘இசையின் தாக்கத்தை இதைவிட உயிர்ப்புடன் யாராவது எழுத முடியுமா ,என்ன?
சொற்களில் இசையை விவரிப்பதில் மட்டுமில்லை. கர்னாடக இசையின் தற்போதைய நிலை, இசை உலகின் பிரச்சனைகள், கர்னாடக இசையில் ஈடுபட்டிருப்போர் செய்ய வேண்டியது என்ன, ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் சிறப்பு என்ன, உன்னத சங்கீதம் என்றால் என்ன- இதைப்பற்றி எல்லாம் தெளிவான கருத்துக்களை அவர் வைத்திருப்பதை நாம் அறியலாம். இக்கருத்துக்களை வெளிப்படுத்த பொருத்தமான கதாபாத்திரங்களையும் அவர் மோகமுள்ளில் உருவாக்கியுள்ளார்.
பாலூர் ராமு: ரங்கண்ணாவிடம் சிறிதளவு கற்றுக்கொண்டு அதை வைத்து பிரபல வித்வானாக வலம் வருபவர்.
வைத்தி: பஜனைப் பாடகர். சங்கீதத்தில் மிகுந்த பக்தியுள்ளவர். தன் மகன் பாபு சங்கீத வித்வானாக வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆசை.
மராத்திய பாடகர்கள்: ஹிந்துஸ்தானி சங்கீதத்துக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். கடுமையாக சாதகம் செய்து அற்புதமான குரல் வளத்தைப் பெற்றவர்கள்.
நிகழ்கால சங்கீத உலகத்தைப்பற்றி திஜா அவர்களின் கருத்துக்கள்:
“வெறும் தடியன் எல்லாம் பிராந்தியை குடிச்சிப்பிட்டு கத்திண்டு கிடக்கான். என்ன பாடறோம் எந்த பாஷையில் பாடறோம்னுகூட தெரியாம கத்தறான்கள்…’
‘வீணை வாசிக்கறவாளுக்கு அப்படி ஒண்ணும் பிரமாத கிராக்கி வந்து விடாது.’
‘வாத்யத்திலே ஒரு பாட்டையோ ராகத்தையோ கேட்டு ரசிக்கிறதுன்னா கேட்கிறவன் தரமும் உசந்திருக்கணும்’
‘ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக்கடுக்கன் வேணும் போல இருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி ,மல்லுச்சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போலிருக்கும்.
அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்பறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒண்ணொண்ணா கரையும்’
பாபு, ரங்கண்ணாவிடம் சங்கீதம் கற்க வருகிறான். ரங்கண்ணாவின் அறிமுகமே அவர் எப்படிப்பட்ட சங்கீத ஞானி என்பதை நமக்கு சொல்கிறது.
‘ரங்கண்ணா நடையில் இருந்த ஒட்டுத் திண்ணையில் சப்பணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண் மூடியிருந்தது. வலது கை முழங்கைக்கு மேல் அசைந்து கொண்டிருந்தது. மேலும் கீழும் முன் கையை உயர்த்தித் தாழ்த்திக் கொண்டிருந்தார்… சப்தம் ஏதும் வாயினின்றும் எழவில்லை… சித்த சுவாதீனமில்லாத நிலையென்று ஐயம் எழுப்பும் சேட்டை இது… தன்னை மறந்த அந்த லயிப்பில் அவர் உடல், உள்ளம், உயிர் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலிருந்தது.’
அவர் பேச்சும் விசேஷம் நிறைந்தது. ‘பாடத்தெரியாது, பேச மட்டும் தான் தெரியும்’ என்று ஒருவரை அறிமுகப்படுத்தியதற்கு ரங்கண்ணா சொல்கிற பதிலில் அவரது அவையடக்கமும் ஞானமும் வெளிப்படுவதை பார்க்கலாம்:
ஞானத்துக்காகத்தான் என்று பாபு சொல்ல, அகமகிழ்கிறார். அவருக்கு இது போன்ற சிஷ்யன் அமையவில்லை. வந்தவர்கள் எல்லாம் ஏதோ சிலவற்றை கற்றுகொண்டுவிட்டு கச்சேரி செய்து பிரபலமடையவும் காசு பண்ணவும் போய்விட்டார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பாலூர் ராமு.
ரங்கண்ணாவின் சங்கீத உலகத்தில் பாபு ஆழ்ந்து போகிறான். ‘இந்த காந்தாரம் கேட்கிறதே, அது மாதிரி இருக்கணும் பாட்டு. பாடற போது சிரமமில்லாம ஜீவன் கேக்கணம்’
‘ஆத்மானந்தத்துக்காக ஏற்பட்ட வித்தை இது’
‘சங்கீதங்கறது கீர்த்தனையோ ராகமோ மட்டுமில்லை. அதை கேக்கறதுக்கு எங்கேயும் போகவேண்டிய அவசியமும் இல்லை. காத்துல எப்பவும் ஒரு ஆதார சுருதி இருந்துண்டே இருக்கு.கேக்கற சப்தமெல்லாம் அந்த ஸ்ருதிக்கு ஸ்தாயியாகவும் ஸ்வரமாகவும் இருக்கு ‘
அப்போது மகாராஷ்டிராவிலிருந்து பாடகர்கள் வருகிறார்கள். அவர்களின் குரல் வளத்தை கேட்டு ரங்கண்ணா, பாபு அனைவரும் அசந்து போகிறார்கள்.அவர்களின் குரல் வளம் சங்கீதம் அறிந்தவர்களை மட்டுமல்ல. சங்கீதம் அறியாத ராஜம், யமுனா போன்றவர்களையும் ஈர்த்து விடுகிறது.மராட்டிய பாடகர்கள் சங்கீதத்தை ஒரு தவமாக கருதுபவர்கள். அதை வைத்து பிழைப்பு நடத்தாதவர்கள். குரல் வளத்துக்காக வாழ்நாள் முழுவதையும் தியாகம் பண்ண தயாராக இருப்பவர்கள்.
ரங்கண்ணா தன்னிடமிருந்த ஞான சம்பத்து அனைத்தையும் பாபுவின் தோள்களுக்கு மாற்றிவிட்டுத்தான் ஓய்கிறார்.
கர்னாடக சங்கீதத்தில் ஞானம் நிறையவே இருக்கிறது. ஆனால் குரல் வளம் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய வித்வான்கள் கூட சுருதி சேராமல் பாடுவது இங்கே வழக்கமாக இருக்கிறது. ஏன் என்றால் குரலை யாரும் லட்சியம் பண்ணுவதில்லை. அதற்காக உழைப்பதில்லை. ஞானம் மட்டும் போதுமென்று நினைக்கிறார்கள்.
குமார் கந்தர்வா, கிஷோரி அமோன்கர், பீம்சென் ஜோஷி முதலானோரின் குரல் வளத்தை நாம் அறியும்போது, தி ஜாவின் ஆதங்கத்தை நம்மால் உணர முடிகிறது. எனவே தான், பாபு தான் ஏங்கி தவித்த காதல் நிறைவேறிவிட்டாலும், சங்கீத லட்சியம் நிறைவேற ரங்கண்ணாவிடம் தனக்கு கிடைத்த ஞானம் மட்டும் போதாது; குரல் வளத்துக்கான பயிற்சியும் வேண்டும் என்று முடிவு செய்து பூனாவுக்கு புறப்படுகிறான்.
அமரர் தி ஜானகிராமன், காட்சிகளின் மூலம் கதை சொல்லும் திறம் படைத்த அபூர்வ எழுத்தாளர். தமிழுக்கு கிடைத்த மாபெரும் கொடை.
அவரது மோகமுள்ளில் ஏராளமான திரைப்படங்கள் சூல் கொண்டுள்ளன. நான் ஒன்றை எடுத்தேன். அவ்வளவு தான்.