தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்

Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன்.

Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி?

Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு விட்டமின் மாத்திரையையும் கொஞ்சம் செறிவூட்டப்பட்ட கோதுமைக் குருத்துகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Woody Allen, Husbands and Wives.

தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம்சில முன்குறிப்புகள்:

ல பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசித்துக்கொண்டிருந்த ஐஐடி ஹாஸ்டலுக்கு நடந்து போய்க் கொண்டிருக்கையில், என் ஜூனியர் ஷெனாய் நம்பவே முடியாத ஒரு தகவலைத் தெரிவித்தான். குற்றமும் தண்டனையும் நாவலை அவன் வியப்பிற்கும் அப்பாற்பட்ட 18 முறை படித்திருந்தானாம். ஆங்கிலத்தில் conspicuous consumption என்று அழைக்கப்படும் இந்த அதீத நுகர்வை அசைபோட்டுக் கொண்டு என் மனம் அதன் வாடிக்கையான கேலித்தடத்தில் செல்லத் தொடங்கியது: ஆன்மாவின் தாஸ்தயெவ்ஸ்கிய வண்டல் மண்ணில் விளையும் குருத்துகளால் குழப்பத்திலும் சோகாப்பிலும் தள்ளப்பட்டிருக்க வேண்டிய இவனது 20 வயது மூளை எப்படி இன்னமும் குதூகலமாக இருக்கிறது என்று தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டது.

பல வாசிப்புகளுக்குப் பிறகு, தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை வெறும் டெஸ்ஸர்ட் உணவு வகைகளை மட்டும் கொறிப்பதற்கான சாத்தியமே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பலதரப்பட்ட உணவு வகைகள் நிரம்பிய பெருவிருந்தையே நாம் ஒவ்வொரு முறையும் செரித்தாக வேண்டும். இவற்றுள் சில நமக்குச் சுவையற்றதாகவும் இருக்கலாம், மற்றும் சில (சலிப்பூட்டும் வகையில் நீண்டு கொண்டிருப்பதால்) அஜீரணத்தையும் அளிக்கலாம். ஆனால் மொத்தமாய் நோக்குகையில் இவ்விருந்து திருப்தியாக இருந்ததென்றே கூறத் தோன்றுகிறது – ஏனெனில் கடந்த காலத்துக்குரிய எழுத்தாளர்களுள் ஒரு சிலரே இதுபோல் நேரடியான உடனடித்தன்மையோடு நம் சுவையரும்புகளுடன் உரையாடும் வகையில் தம் படைப்புகளை விருந்தாக நம்முன் வைக்கிறார்கள்.

இத்தனைக்கும் தாஸ்தயெவ்ஸ்கியின் வரலாற்று உலகம் நமக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. மெய்யாகவே அவர் நம் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போகிறார், அவரது பாதாள உலகை நோக்கி. நமது அகவுலகின் நிகழ்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் (சில சமயங்களில் நமது அகங்களைக் கண்டு நாமே அச்சுறும் வகையில்) பாதாளவுலகின் இருளார்ந்த நிகழ்வுகளை நாம்  வலுக்கட்டாயமாகப் பார்க்கச் செய்து விடுகிறார். இலக்கியத்தின் உன்னதப் பரவசத்தாலும், மனமுறிவின் வலியாலும் ஏகதேசம் தாக்கப்பட்டு நாம் நமது அகமே எதிரொலிக்க ஒட்டுக் கேட்கிறோம். நம்மை நாமே ஒட்டுக்கேட்கச் செய்வது – இதுவே பொருட்படுத்தத்தக்க படைப்புகளைப் பிறவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியக் கூறாக எனக்குப் படுகிறது.

தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகு முழுமையையும் விவரித்து அது தன் சூழலோடு பொருந்தும் விதம் குறித்து சில முன்தகவல்கள் அளிக்கும்முன், தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவரான ஜோஸஃப் பிராங்க், அவரது “முற்றூழித்துவ கற்பனை’யைப் பேசுவதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம் (eschatological imagination). முடிவுகளைக் கருத்தில் கொள்ளும் அந்தக் கொதிகலனில்தான் அவர் தன் காலத்தின் சர்வமறுப்புச் சித்தாந்தங்களை உருக்கிப் பிரித்து அவற்றின் அதிதீவிர எல்லைகளுக்கு நீட்டித்துச் சென்றார். சிந்தனைகளும் அவை உள அமைப்பைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுவதுவும் அது சார்ந்த அறச்செயல்பாடும் தாஸ்தயெவ்ஸ்கியின் அழகியல் சாதனைகளுக்கு மிக அவசியமாய் இருந்தன. கிறித்தவ அன்பையும் சமூக நீதியையும் முதன்மைத் தளங்களாய்க் கொண்டு தோன்றி 1840-களில் பரவலான அங்கீகாரம் பெற்றிருந்த உடோபிய சோசலிஷச் சித்தாந்தங்களின் தீவிர தாக்கத்துக்குட்பட்டவராய் இருந்தார் தாஸ்தயெவ்ஸ்கி.

பெட்ரஷேவ்ஸ்கி வட்ட உறுப்பினராய் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த தாஸ்தயெவ்ஸ்கி, பொது மன்னிப்பு வழங்கப் பெற்றிருந்தாலும் பல ஆண்டுகள் சைபீரியாவில் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்தச் சைபீரிய காலகட்டத்தில்தான் அவர் சமூக முன்னேற்றம் என்ற தன் ஆதார அக்கறையைத் தன் சிந்தனை அமைப்பின் மையக்கூறாய் விளங்கப்போகும் கருத்துருவாக்கங்களைக் கொண்டு வலுப்படுத்திக் கொள்வார்: சுதந்திரம் பற்றிய சிந்தனைகள், அறம் சார்ந்த இருப்பு, தன்னிச்சை, ஆளுமை, அகங்காரம் – இவற்றையும், இவை அகத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற மானுடத்திற்குத் தேவையாக இருக்கும் வடிகால்களையும்தான் தாஸ்தயெவ்ஸ்கி பின்னர் எழுதிய மாபெரும் நாவல்களில் மீண்டும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினார். இந்தக் கடும்பணி முகாமிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பும்போது தாஸ்தயெவ்ஸ்கி தேசிய, அரச ஆதரவு நிலைப்பாடுகள் கொண்ட அமைப்பொழுங்காளராய் வெளிப்படுவார்.

இதனினும் முக்கியமாய், சைபீரிய கடும்பணி முகாமின் இரக்கமற்ற யதார்த்தத்தில் அவர் ரஷ்ய மக்களின் கிறித்தவ வேர்களைக் கண்டுணர்வார்- இதுவே பின்னர் அவரது கலையின் மையமாய் விளங்கும் அச்சுமாகும், தனக்குப் பிரியமான கருப்பொருட்களின் ஒட்டுறவு வட்டங்கள் இந்த மையத்தைச் சுற்றிச் சுழலுமாறு தாஸ்தயெவ்ஸ்கி அமைத்துக் கொள்வார். சிந்தனைகள் தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பூக்கக் கற்பனைக்குத் தேவைப்பட்டதெனினும் அவர் எப்போதும் கோட்பாட்டியலாளராய் இருந்தது கிடையாது என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். தாஸ்தயெவ்ஸ்கியைக் குறித்து தனக்கேயுரிய அறிவுத்தெறிப்புடன் அக்டாவியோ பாஸ், “கருத்தொன்றை மற்றொன்று கொண்டு எதிர்ப்பவரல்ல, மானுட எதார்த்தமொன்றைப் பிறிதொரு மானுட எதார்த்தத்தைக் கொண்டு எதிர்ப்பவர்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ருஷ்யாவுக்குத் திரும்பும்போது அவர் செர்னஷெவ்ஸ்கியின் பகுத்தறிவு அகங்காரவாதத்தின் இதயமாய் விளங்கிய நாத்திகம், பகுத்தறிவு, பயன் தகவுடைமை எனும் மூன்றின் வினோதக் கலவையை எதிர்கொள்வார். உணர்வற்ற, அன்னியப்படுத்தும் இயற்கை முடிபுக் கொள்கையைத் தன் ஆதாரமாய்க் கொண்டதாய், மெய்யான ரஷ்ய மையத்துடன் தொடர்பற்றிருந்த இந்தக் கோட்பாட்டின் மீதான அவரது திட்டமிட்ட முதல் தாக்குதல்தான் ‘Notes from the Underground’ என்ற புத்தகம். உயர்ந்த நன்மையின் பெயரில் எதையும் செய்வதற்கான நிபந்தனையற்ற உரிமை கொண்ட நீட்ஷேயிய அதிமானுடர்களின் எலைட்டிய கும்பலை நியாயப்படுத்தும் கருத்துருவாக்கத்தைத் தாக்கி இதே போக்கில் அவர் எடுத்த அடுத்த முன்னெடுப்பு நடவடிக்கைதான் ‘Crime and Punishment’ என்ற அடுத்த நாவல். கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிட்ட இந்த நாவலை மேலும் ஆழக் காணலாம்.

ஸெர்கேய் நீசயேவின் ரகசிய அமைப்பின் நாசகாரச் செயல்களும் அதில் முன்னர் உறுப்பினராக இருந்த இவனாவை அவர்கள் கொலை செய்வதும் ‘The Demons’ என்ற அவரது அடுத்த நாவலின் மையமாக இருந்தது (‘Possessed and The Devils’ என்ற பெயரிலும் இது வெளியிடப்பட்டது). மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் பொருள் கொள்வதெனில், மேலைத் தேயத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளே பேய்த்தனங்கள், அல்லது அவற்றின் மானுட வடிவங்கள். ஷாடோவின் ஸ்லாவினக்கொள்கை, வெர்கோவென்ஸ்கியின் சூனியவாதம், கிரிலோவின் மானுட-இறைப்பாடு போன்ற வெவ்வேறு திரிகளை தமக்குள் சமரிடச் செய்து பலகுரலில் ஒலிக்கும் இந்த நாவல் ‘சிந்தனைப் பேய்கள்‘ அத்தனைக்கும் பிதாவான அதன் துயர நாயகன் நிகோலாய் ஸ்டாவ்ரோகினின் பிரதானக் குரலையும் எதிர்த்து அக்குரல்களை ஒலிக்கச் செய்கிறது.

தன் வலிமையைச் சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் இயல்பை அறிய முனையும் ஸ்டாவ்ரோகின் தனக்கு எல்லையற்ற ஆற்றல் உள்ளதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தன் வலிமையின் பயன்பாட்டுச் சாத்தியங்களைக் குறித்து அக்கறையற்று இருக்கும் அவன், நன்றோ தீதோ தான் செய்வது எதுவாயினும் அது குறித்து சம அளவிலேயே களிப்படைகிறான். ஆன்ம அக்கறையின்மையோ, அல்லது இன்னும் சொல்லப் போனால், ஆன்ம இன்மையோ, எதுவாயினும், இறை நம்பிக்கையை இழப்பினும் சாத்தானின் இருப்பை நம்பக்கூடும் என்ற இந்தத் தீவிர வேதனை (“என்னிலிருந்து பெருக்கெடுத்தது எதுவெனில் இன்மை, எந்த மனவிரிவுமற்ற, எந்த விசையுமற்ற இன்மை அல்லது அது இன்மையுமன்று”) என்பதுவே அவனை இறுதியில் தற்கொலையை நோக்கிச் செலுத்துகிறது. இக்காட்சியின் துல்லிய உளநிலைச் சாயல்கள் அனைத்தையும் ஒரு அருமையான சிறு நுண்தகவலைக் கொண்டே தாஸ்தயெவ்ஸ்கி நமக்கும் காட்டிவிடுகிறார்!- (“பட்டாலான கயிறு… மிகையளவு சோப்பு குழைத்திருந்தது”). இப்போதும், இந்த நூல் பதிக்கப்பட்டு 150 ஆண்டுகளாகியும், புரட்சிகரமான ஆதர்சங்கள் அனைத்துக்கும் அப்பால், அற லட்சியங்களின் துரோகத்தில் விளையும் சீரழிவின் கூர்பார்வை விவரிப்பாய் அதன் சாத்தான்கள் காலாவதியாகாமல் உயிர்த்திருக்கின்றன.

‘தி இடியட்’ நாவலில் தாஸ்தயெவ்ஸ்கி தன் கிறித்தவ லட்சியவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் அவற்றின் நேர்மறைப் பொருளில் மிஷ்கின் என்ற துயர உருவத்தைக் கொண்டு உருவகிக்க முயல்கிறார். தன் வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அவர் எழுதியவற்றில் மிக அதிக அளவில் சுயசரிதத் தன்மை கொண்ட நாவல் இது – தனக்கு உயிர் வாழ இன்னும் மூன்று நிமிடங்களே உள்ளன என்ற அறிதலுடன் தூக்குமேடையில் நிற்கும் அந்த மூலாதார நிகழ்வு உட்பட பலவும் அவர் தன் வாழ்வில் எதிர்கொண்டவை. அசாதாரண புரிந்துணர்வு அமையப்பெற்ற இளவரசன் மிஷ்கின், வாழ்வின் ஆனந்தத்தை இழக்காமலே மரணத்தை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் கற்பனைத்திறன் கொண்டவனாய் இருக்கிறான். ஆளுமைச் சிதைவுக்குட்படாமல் சஹிருதய உணர்வாழம் அனிச்சைத்தன்மை கொண்டு விரிவடைதலின் விவரிப்பு என்று முதற்பகுதியையும், இந்தப் புரிந்துணர்வின் அதிதீவிர செறிவாக்கம் காரணமாக அகவுணர்வு மெல்லச் சிதிலமடைவதன் விவரிப்பு என்று இதன் இரண்டாம் பகுதியையும் வாசிக்க முடியும்.

தாஸ்தயெவ்ஸ்கியின் முரணியக் கற்பனை எதிர் துருவங்களுக்கிடையே ஒரு இறுக்கமான இணைப்பைத் தோற்றுவித்து இயங்கியது. அந்த முரணியக்கத்தின் உடைதளம் மற்றும் நெகிழ்தளங்களைக் கொண்டு இவை கூடும் ஒரு தரிசனத்தால் ருஷ்ய சிக்கலுக்கான தீர்வை அடைய அவர் முயன்றார். ’தி இடியட்’ நாவலில் நாம் இந்த முரண்கள்/ இருமைகளைக் காண்கிறோம், ஆதர்ச கிறித்தவ அன்பு, சாமானிய மானுட வாழ்வின் கோரிக்கைகளோடு போராடுகிறது, நஸ்டாஸியாவும் அக்லாயா(வும்) சர்வவியாபக காதலுக்கும் சமய உணர்வற்ற காதலுக்கும் உரிய பிரதிமைகளாக இருக்கின்றனர். மிஷ்கினின் தன்னடக்கமும் இப்போலிட்டின் கிளர்ச்சியும், தன்னைக் கடந்து செல்வதற்கான மானுட விழைவும் அதற்கெதிரான புலனாதார அனுமானத்தை அவசியப்படுத்தும் பகுத்தறிவும்…

ஆனால் தாஸ்தயெவ்ஸ்கி இது சாத்தியமற்ற முயற்சி என்று அறிந்திருந்தார். இவ்வுலகில் ஆதார நியதியின்படி ஆளுமையை எப்போதும் “… அகங்காரம் இடைமறித்து” நின்று கொண்டிருப்பதால் “இயேசு சொன்னவாறு தன்னைப் போல் பிறரை நேசிப்பது” என்பது அசாத்தியமாகவே இருக்கிறது. இதனால் தான் மிஷ்கின் என்ற “தன்னிரு காதல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாத” அசடன் முழுதோல்வியைச் சந்திக்க வேண்டியதாகிறது. அறிவுக்கும் கிறித்தவ நம்பிக்கைக்கும் இடைப்பட்ட வெகுகால முரண்பாட்டைத் தன் அனைத்து நாவல்களிலும் விவாதித்த தாஸ்தயெவ்ஸ்கியின் கருப்பொருளின் மகோன்னதமான விவரிப்பாய் உள்ள, தாஸ்தயெவ்ஸ்கி மரணமடைவதற்கு இரு மாதங்கள் முன்னர் நிறைவு செய்யப்பட்ட ‘கரமஸோவ் சகோதரர்கள்’ நாவலே அவரது மிகச் சிறந்த மாஸ்டர்பீஸ் என்று விவாதிக்க முடியும்.

மிகவும் இறுக்கமான, சிந்தனைவயப்பட்ட நாவல் இதுவென்று உங்களை எண்ணச் செய்தால், இதையும் சொல்கிறேன் – ‘கரமஸோவ் சகோதரர்கள்’  ஒரு கொலைக் கதைதான், அந்தக் கொலையின் துப்புத் துலக்கமும் விசாரணையும் விவரிக்கப்படும் நாவல்தான் அது. புலன் நாட்டம் கொண்ட திமித்ரி (அவனது ஒன்றுவிட்ட சகோதரர்கள்தான் நாத்திக இவானும், சிவந்த கன்னங்கள் கொண்ட இளம் நோவிஸ் அலோஷாவும்), இரு பெண்களுடன் சிக்கலான உறவு வைத்திருக்கிறான், இதனால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக அவன் தன் தந்தை கரமஸோவையே கொன்று விடுகிறான். இந்த நாவலுக்கு ஒரு ஃபால்ஸ்டாஃப்பிய உற்சாகம் உண்டு – அசாதாரண அளவில் குடியும் கூத்தியாளுமாக கொண்டாட்டம் போடும் கிழட்டு கரமஸோவ்தான் இதன் ஃபால்ஸ்டாஃப், ஒரு ராட்சதன் மாதிரியானவர் இவர். இந்தப் பாத்திரம் ஒரு அற்புதப் படைப்பு, இதன் உயிர்ப்பு காரணமாக இவர் மகன் கையால் கொல்லப்படுவதை நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. இது பற்றி விமரிசகர் ஜான் ஜோன்ஸ் மிக அழகாகச் சொன்னார்: “தன் கொலைக்கு கிழவனும் உடந்தையாயிருப்பதை இந்த நூலின் பிரதான படிமம் சுமந்து செல்கிறது. அவனது வீடு நாறுகிறது. அவனது வாழ்க்கை நாறுகிறது. ஆனால் ஒரு மிஸ்டிக்தன்மையுடன் அவன் இவற்றுக்குத் தன்னை ஒப்புவித்துக் கொள்வது அவன் செத்தாக வேண்டும் என்ற தீர்ப்பாக ஒருபோதும் கெட்டிப்பதில்லை. அதற்கு அனுமதியாத அளவு விரிந்த இயல்பு அவனுக்குண்டு.”

பரந்து விரியும் இந்த நாவலின் செழுமைகளை முக்கியமான ஒரு எதிர் இணையின் முரணியக்கமாக சித்தரிக்க முடியும் – இவானும் திமித்ரியும். தன் உலகப்பார்வையைப் பட்டை தீட்டிக்கொள்ளப் பயன்படும் சாணையாக எதிர்த்து நிற்பதற்கென்றே தாஸ்தயெவ்ஸ்கியால் உருவாக்கப்பட்ட பிரதிவாதிதான் இவான். சிந்தனை வயப்பட்ட அவனது அறிவு, கவித்துவம் நிறைந்த உணர்ச்சி மிகுந்த திமித்ரியின் அறிவாற்றலுக்கு எதிராய் இருக்கிறது. சுதந்திரம் போன்ற ஒரு கனமான வஸ்துவைக் கையாள முடியாத அளவு வலுவற்றது மனித இனம் என்ற எண்ணத்தின் காரணமாகவே இவானின் பைத்தியக்கார, பிரதான விசாரகர் மானுட சுதந்திரத்தை வேரறுக்க முனைகிறார். கருணை நிறைந்த இறைவன் எல்லாவற்றையும் மன்னிப்பான் என்ற எதிர்பார்ப்பில் விதியின் கூற்றை ஆன்மீக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வதாலேயே ஃபாதர் ஜோஸிமா பல வகைகளில், பிரதான விசாரகரின் முழக்கங்களை எதிர்கொள்ள முடியாத, ஒரு எளிய அட்டைக்கத்தியாக ஆகிவிடுகிறார். பிரதான விசாரகரே திமித்ரியால் படைக்கப்பட்டு, அவனது குரலிலேயே நமக்கு அளிக்கப்பட்டிருந்தால் கரமஸோவ் சகோதரர்கள் இன்னும் வலுவான, மாறுபட்ட நாவலாக இருந்திருக்கும் என்று விமரிசகர் ஹரோல்ட் ப்ளூம் கூறுகிறார். ஆனால் இது விவாதத்துக்கு உரியது.

அப்படியானால் நாவலாசிரியர் கூற்றுப்படி இதன் நாயகனாய் விவரிக்கப்படும் அலோஷா பற்றி என்ன சொல்ல? பிற பாத்திரங்களின் மாபெரும் இருப்பின் முன் இவன் மறைந்து போகிறான். பிறரின் கருத்துகளின் கொள்கலம் இவன், இந்தக் கருத்துகளை இதர உலகினருக்குத் தெரியப்படுத்துவதுதான் இவனது முக்கியமான வேலை. ஊதிப்பெருத்த அகந்தைகள் நிறைந்த, எல்லோரும் அளவுக்கு அதிகம் பேசும் இந்தநாவலில், இவன் எளிய செவியன். இந்த நாவலை மொழிபெயர்த்த ரிச்சர்ட் பெவியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார், “இதுதான் இவனது உண்மையான வரம், இவனைக் கொண்டு சொல் உயிர் பெற முடியும்”.

  1. ஒரு கொலைகாரன் துப்பு துலக்குகிறான்

    ரஸ்கோல்னிகோவ்

‘முரண்பட்டுப் பிரிந்து நிற்பவன்’ எனப் பொருள்படும் ரஷ்யச் சொல்லை உணர்த்தும் பெயர் கொண்ட மாணவன் ரஸ்கோல்னிகோவ் (roskol- dissent, schism, split) வட்டிக்குக் கடன் கொடுக்கும் மூதாட்டி ஒருவரை “உயர்நன்மையின்” பொருட்டு கொலை செய்வதென்று திருகலான தர்க்க விசாரணையொன்றின் முடிவில் தீர்மானிக்கிறான்.

குற்றமும் தண்டனையும் நாவலின் கதை இந்தக் குற்றச்செயலுக்கு இரண்டரை நாட்கள் முன்னர் துவங்கி, அடுத்த இரு வாரங்களில் ரஸ்கோல்னிகோவ் எதிர்கொள்ளும் பல்வகை அனுபவங்களை விவரிக்கிறது. எது முதலில் நேரடியான துப்பறியும் கதையாகத் துவங்குகிறதோ, அது மெல்ல மெல்ல உளவமைப்பை விசாரிக்கும் நாவலாகிறது, ‘தேடப்படுவது’ குற்றவாளி என்றல்லாமல், தேடல் குற்றச்செயலின் உந்துவிசையை நோக்கித் திரும்புகிறது. துப்பு துலக்கும் போர்ஃபீரி பெட்ரோவிச், குற்றவாளி ரஸ்கோல்னிகோவை வீழ்த்தும் நோக்கத்தில் பொறுமையாய் வலை பின்னுகிறான் என்றாலும் ‘உண்மையான தேடல்’ கொலைகாரனாலேயே மேற்கொள்ளப்படுகிறது – தான் செய்த குற்றத்துக்குக் காரணமாய் அமைந்த தன் உள்நோக்கங்களைக்  கண்டறிவதே இத்தேடலின் லட்சியம். கொலையாளி – துப்பறிவாளன் ரஸ்கோல்னிகோவின் வாதைக்குட்பட்ட பிரக்ஞையின் வலைக்கம்பிகளூடாகச் சலிக்கப்பட்ட திசைதடுமாற்றத்துடன் ஆழப் புதைந்திருப்பவை அனைத்தும் வெளிப்படுகின்றன. அவனைச் சூழ்ந்திருக்கும் பாத்திரங்கள் அவனது அகச் சிக்கல்களின் பிரதிபிம்பங்களாக இருந்து அவனது தனிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின் சாத்தியங்களை உருவகிக்கின்றனர். இரட்டைப் பணியாற்றும் அவர்கள் (எப்படியும் ரஸ்கோல்னிகோவின் இரட்டையர்கள்தானே?), கதையை நகர்த்திச் செல்பவர்களாகவும் அவன் தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் எண்ணற்ற விவாதங்களை வெளிப்படுத்தி, அவற்றுக்கு ஒருவாறான உடனடி விமரிசன எதிர்வினையாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர்- “வேற்றாரை”க் கொண்டு மட்டுமே ரஸ்கோல்னிகோவால் தன்னைப் புரிந்துகொள்ள முடியும் என்பது போல்.

முதல் பக்கத்திலேயே ரஸ்கோல்னிகோவ் மனநிலையின் ‘தடயம்’ நமக்கு அளிக்கப்படுகிறது: “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயல விரும்பினேன், ஆனால் அதேநேரம் அப்படிப்பட்ட சில்லறைத்தனங்கள் எனக்குச் சங்கடமாய் இருந்தன”. “அவன் தன் வீட்டுக்கார அம்மாளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடனில் மூழ்கியிருந்தான்” என்பதும் முதல் பக்கத்தில் சொல்லப்படுகிறது. இங்கு துப்பறியும் கதை வகைமையின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தாஸ்தோயெவ்ஸ்கி நாவலெங்கும் நிஜமானதும் பொய்யானதுமான தடயங்களை ஆங்காங்கே இட்டுச் செல்கிறார் (அவன் தன் லோகாயதத் தேவைகளுக்காகக் கொலை செய்கிறானா அல்லது அவன், “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சி” செய்கிறானா?).

ஆனால் அவன் முயற்சிக்கும் ‘விஷயம்’தான் என்ன? இக்கேள்விக்குப் பதில் காண, காலக்கணக்கில் பின்சென்று, புரட்சிகர சிந்தனைகள் அவனது உளவமைப்பில் தாக்கம் செலுத்தத் துவங்கும் ஆறு மாதங்களுக்கு முற்பட்ட இடத்தைத் தொட வேண்டும். ஏற்கனவே சுட்டப்பட்டது போல், மனித உளவமைப்பைத் தீர்மானிப்பதில் சிந்தனைகள் ஆற்றும் பங்களிப்பை ஆய்வது தாஸ்தோயெவ்ஸ்கியின் நாவல் கலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. செர்னிஷேவ்ஸ்கியின் பகுத்தறியும் அகங்காரத்துவ கோட்பாட்டின் மையத்தில் இடம் பெற்றிருந்த அதீத அகந்தைப் போக்குகளுடன் பொதுநலம் மற்றும் சமூக நீதி சார்ந்த கருத்துகள் கூடியதன் விளைவாக உருவான ஒரு வினோதமான கலவையே அன்றைய ரஷிய அறிவுப்புலத்தாரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பாதிப்பில்தான் ரஸ்கோல்னிகோவ், “குற்றம் குறித்து,” என்ற தன் கட்டுரையை எழுதுகிறான் – அதில் அவன் அளிக்கும் புறவுருவச் சித்திரம் மானுடம் இரு குழுக்களாகப் பிளவுபட்டிருப்பதான அவனது தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது: சாமானியர்கள், அசாதாரணர்கள் என்ற இருவகையினர். அவனது இந்த தரிசனம்தான், “அறத்துக்கும் மனச்சான்றுக்கும்” புதுப்பொருள் அளிக்கவல்ல, (தன்னால் தீர்மானிக்கப்பட்ட) “உயர்நன்மை” விழைவில் கொலையும் செய்யும் தார்மீக நியாயம் கொண்ட, நெப்போலிய ‘மாமனிதன்’ என்ற கருத்துருவை அவன் தகவமைத்துக் கொள்வதற்கும் அடிப்படையாகிறது. சிறுபான்மை எண்ணிக்கையிலுள்ள மேலோராகிய இப்படிப்பட்ட ‘மாமனிதர்’ மட்டுமே எதிர்காலத்தின் நம்பிக்கைகளுக்கு உரித்தானவர்கள்.

ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் அவனது எதிர்கால பலி, “கிழவி வீட்டில் தனியாய் இருப்பாள்,” என்ற தகவலை ஒரு வட்டிக்கடை உரையாடலின்போது அவன் ஒட்டுக் கேட்க நேரிடும். இதையடுத்து, உடனேயே, ஆறாம் அத்தியாயத்தில் உள்ள மதுசாலைக் காட்சியில், “அவனது தலைக்குள் குஞ்சு பொரித்துக் கொண்டிருந்த” “வினோதமான எண்ணம்”, பில்லியர்ட்ஸ் விளையாடிவிட்டு டீ குடித்துக் கொண்டிருக்கும் ஓர் அதிகாரிக்கும் மாணவனுக்குமிடையே நிகழும் உரையாடலை ஒட்டுக்கேட்கும்போது திட்டவட்டமான இறுதி உருவம் பெறத் துவங்கும். “கிழவி மடாலயத்துக்கென ஒளித்து வைத்திருக்கும் பணம்,” “அனைத்து மானுடத்துக்கும் சேவை செய்ய” பயன்படும் என்பதால், தன்னால் எப்படி “கொஞ்சம்கூட வருத்தப்படாமல் அவளைக் கொல்ல முடியும்” என்று அந்த மாணவன் வட்டிக்கடை மூதாட்டியைப் பற்றிப் பேசுகிறான் (அவளையே ரஸ்கோல்னிகோவ் பலி கொள்ளப்போகிறான்), “நூறு உயிர்களுக்காக ஒரு மரணம்,” என்ற கணக்கை அந்த மாணவன் விவாதிக்கிறான், மூதாட்டியின் இரக்கமின்மையை அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறான். “ஆமாம், அவளுக்கு உயிர்வாழும் அருகதையில்லைதான்,” என்று அந்த அதிகாரியும் இறுதியில் ஒப்புக்கொள்கிறார். இந்தக் காட்சிதான் அவன் மனதிலிருந்த எண்ணம் முடிவாகக் குஞ்சு பொறித்து குற்றச் சம்பவம் நிகழும் இடத்துக்கு விரைவதற்கான அடைகாப்பானாக இருக்கிறது.

ரஸ்கோல்னிகோவ்வின் பலியை அசூயையேற்படுத்தும் மூதாட்டியாகப் படைத்ததுமல்லாமல் தாஸ்தாயெவ்ஸ்கி மிகவும் கவனமாக இந்தக் குற்றச்செயலுக்கு இணக்கமான வாசக மனநிலையையும் கட்டமைக்கிறார் – இதற்காகவே, நாவலின் முந்தைய அத்தியாயங்களில் விவாதத்தின் மனிதநேய தரப்பை உறுதியானதாக நிறுவிவிடுகிறார். ரஸ்கோல்னிகோவ் பீட்டர்ஸ்பர்க்கில் சீரழிந்த சுற்றுப்புறத்தில் வாழ்வதை அழுத்தமான வண்ணங்களில் விவரிக்கிறார்- அதன் லாகிரிக்கடைகள், விலைமாதர் இல்லங்கள், குடிகாரர்கள், பாலியல் வக்கிரங்கள் என்று பல. இது தவிர குடிகாரன் மார்மலெடோவ்வுடன் ஒரு சந்திப்பு, விலைமாதாய் வாழும் தன் மகள் சோனியாவின் தியாகத்தை நம்பி அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். துயரைக் காண்கையில் அவனுள் தன்னிச்சையாய்த் தோன்றும் கருணையும், தன் கருணையின் தாத்பர்யங்களை தர்க்கப்பூர்வமான பகுப்பாய்வுக்கு உட்படுத்துகையில் அவனுள் தோன்றும் சுய வெறுப்புமாய் ரஸ்கோல்னிகோவின் உள்ளத்திலுள்ள பிளவை இந்தக் காட்சி சித்தரிக்கிறது. ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மார்மலெடோவ் வேதாகமக் கருத்துகளை வேறு சொற்களில் எதிரொலிக்கிறான், அனைத்தையும் மன்னித்தணையும் கிறிஸ்துவின் அருளோடு படித்தவர்களின் பகுத்தறிவை எதிர்மறை ஒப்பீட்டுக்கு உள்ளாக்குகிறான் (“உன்னைப் பார்த்து நாங்கள் ஏன் பரிதாபப்பட வேண்டும்?”). இறுதியில் ரஸ்கோல்னிகோவ் அவனது ஜன்னலில் சில்லறைப் பணத்தை விட்டுச் செல்லும்படியாகிறது, ஆனால் உடனேயே அவன் தன் செயலை அருவருக்கிறான் (“என்னவொரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்கிறேன்… அவர்களுக்கு சோனியா இருக்கிறாள், எனக்கு இதன் தேவையிருக்கிறது…”).

ஒரு கொடுங்கனவில் சுற்றித்திரிவதுபோல் கிழ வட்டிக்கடைக்காரியைக் கொன்றபின் ரஸ்கோல்னிகோவ் தன் நினைவழியத் தடுமாறும் பாலங்களும் முகப்புகளும் கால்வாய்க்கரைகளுமாய் காட்சியளிக்கும் பீட்டர்ஸ்பர்க்கின் சுற்றுப்புறம், மருட்சியின் உச்சமாக அவனது பௌதீக மனவெளியாகிறது. “குற்றமும் தண்டனையும் நாவலில் மேலைக் கதைமரபுக்குரிய குற்றவியல் மிகையுணர்ச்சிப் புனைவெனும் வகைமை பீட்டர்ஸ்பர்க்கின் மன, ஆன்மிக நகரமைப்புக்குரிய ஒன்றாகவே மாற்றப்பட்டு விடுகிறது,” என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜான் பெய்லி. ஆம், குற்றமும் தண்டனையும் மனவெளி உருமயக்க நாவல்தான், குறைந்தபட்சம் அதன் நாயகனுக்காவது அப்படிப்பட்ட அனுபவத்தை அளிப்பதாக இருக்கிறது. ஐந்தாம் அத்தியாயத்தில் வரும் கிறுக்குத்தனமான கனவின் வழி நமக்கு இதன் அறிமுகம் ஏற்கனவே அளிக்கப்பட்டு விடுகிறது: குடியானவன் மிகோல்கா குடிபோதையில் ஒரு கழுதையைச் சிறிதும் இரக்கமின்றித் துன்புறுத்துகிறான் (சாட்டையால் அடிக்கிறான், தடியால் தாக்குகிறான், ஒரு தீர்க்கதரிசனம்போல், “அவளைக் கோடரியால் போடும்படி” வலியுறுத்தப்படுகிறான்); சிறுவன் ரஸ்கோல்னிகோவ் அழுதுகொண்டே உணர்ச்சி வேகத்தில், “ரத்தம் வடியும் அதன் செத்துப்போன முகத்தைத் தன் கரங்களால் அணைத்துக் கொள்கிறான், அதற்கு முத்தம் தருகிறான்… ஆவேசத்தில் தன் சின்னஞ்சிறு முஷ்டிகளால் மிகோல்காவை அடிக்கப் பாய்கிறான்”. ‘மோசமான’ இந்த கனவிலிருந்து விழிக்கிறான் ரஸ்கோல்னிகோவ், அவனது உடல் ‘நொறுங்கியது’ போலிருக்கிறது, அவனது ஆன்மா, ‘இருண்டு, கலக்கமுற்றிருந்தது’.

குற்றம் என்னவோ நேர்த்தியாய் செய்யப்பட்டதல்ல – அது குறித்த அப்பட்டமான விவரணைகள் அவரது சமகால வாசகர்களுக்கு அதிர்ச்சியளித்தன. இங்குதான் யதார்த்தம் (அவனது அகங்காரத்தால் இதுகாறும் அது எளிதில் வழிக்குக் கொணரப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது) அவனை எட்டிப் பிடிக்கிறது: கிழவி முன்ஜாக்கிரதையுடன் திறந்து வைத்திருந்த கதவுக்குத் தாழிட ரஸ்கோல்னிகோவ் மறக்கிறான், அவளது ரத்தத்தைக் கொண்டு தன் இரு கரங்களையும் கோடரியையும் கறைப்படுத்திக் கொள்கிறான், பொருட்களைப் புரட்டிப் போடுகிறான், முன்வரை செய்யப்பட முடியாத மெய்ம்மையின் உச்சக்கட்ட எள்ளலாக, தன் சகோதரி கொல்லப்பட்டது தெரியாமல் திறந்த கதவின் வழி நுழையும் கிழவியின் சகோதரி லிஜாவெத்தாவையும் கொலை செய்ய வேண்டியதாகிறது (“அவள் தன் இடது கையை மட்டுமே கொஞ்சமாக உயர்த்தி மெல்ல அவனை நோக்கி நீட்டினாள், அவனைத் தள்ளிவிட முயற்சி செய்வது போல்”). தாஸ்தயெவ்ஸ்கி தேர்ந்த கதைசொல்லியாக அவனது மனவுலகின் இருவேறு துருவங்களையும் அருகே கொணர்கிறார் – அவனது மனசாட்சியின் அருவருப்பு “அவனுள் உயர்ந்து வளர்கிறது”, கோடரியும் கையுமாக அவன் கதவின் மறுபுறத்தில் இருக்கும் அன்னியர்களைச் செவிக்கையில், அவனது அகங்காரம் “வையவும், கேவலப்படுத்தவும்” உரக்கக் கத்தச் சொல்லி அவனைத் தூண்டுகிறது.

முதலாம் பகுதி முழுமையும் வாசகன் ரஸ்கோல்னிகோவ்வின் பிரக்ஞைக்கு மிக நெருக்கமாய்த் தொடர்ந்தாலும், அவனது பார்வை ரஸ்கோல்னிகோவ்வின் பார்வையினின்று இப்போதே விலகத் துவங்கிவிடுகின்றது. நாவலில் ரஸ்கோல்னிகோவ் தனக்குரிய மெய்க்காலத்தில் வாழ்ந்தாலும், அவனை உந்தும் விசைகளின் ஆதார சாத்தியத்தைத் தேடி வாசகன் கடந்த காலத்துள் ஆழ அழைத்துச் செல்லப்படுகிறான். நினைவுகூரலின் வசதி வாய்க்கப்பெற்ற வாசகன், நிகழ்வுகளுக்கும் ரஸ்கோல்னிகோவ் தனக்கென வரிந்து கொண்டுள்ள லட்சியங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் பெரும்பிளவை அதற்குள் அவதானிக்கத் துவங்கிவிடுகிறான். ஒப்புநோக்க ஒழுக்கத்தையும் கொலைசெயலையும் சமதளத்தில் இருத்தும் சாதுர்ய தர்க்கத்தை இட்டுக்கட்டி ரஸ்கோல்னிகோவ் தொடர்ந்து இப்பிளவை நிரப்பும் பாலத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறான். குற்றத்தின் பின்விளைவுகளிலிருந்து தொடங்கி ரஸ்கோல்னிகோவ்வின் குடும்பத்தினர் பீட்டர்ஸ்பர்க்கில் வந்திறங்குவதோடு முடியும் இரண்டாம் பகுதியில்தான் இதுகாறும் விலகும் பார்வைக் கோணங்கள் இணைபுள்ளியை நோக்கித் திரும்பத் துவங்குகின்றன.

இரண்டாம் பகுதியின் துவக்கத்தில் ரஸ்கோல்னிகோவ் “சுரம் கண்டவனாக” குற்றத்தின் தடயங்கள் அனைத்தையும் மறைக்க முயன்று மூர்ச்சையையொத்த முழுமறதி நிலையை எய்துகிறானெனினும், அவன் விழித்துக்கொள்ளும்போது காவல் நிலையம் வருமாறு அவனுக்கு இடப்பட்ட ஆட்கொணர்வு உத்தரவைப் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. பின்னர் இது ஒரு பிழைபிராந்தியாக அறியப்பட்டாலும் அதைவிட முக்கியமாக அவனது அகவிசாரணையைத் துவக்கி வைப்பதாகவும் இருக்கிறது, அவன் தன் உந்துவிசையைத் தேடலாகிறான். பீட்டர்ஸ்பர்க் நகரினூடான அவனது இருப்புகொள்ளா நிலைபெயர்தல்கள் மூன்று நாட்கள் நீடிக்கும் ஜன்னிக்காய்ச்சலுக்கு அவனைக் கொண்டு செல்கின்றன. அவனது தமக்கை துன்யாவின் வருங்காலக் கணவன் பீட்டர் லூஜின் வந்து சேர்கிறான், முன்னேற்றம் மற்றும் “நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” ரக பொருளாதாரக் கோட்பாடு முதலான பீட்டர் லூஜின்னின் ரசக்கேடான பொது விளம்பல்களில் ரஸ்கோல்னிகோவ் காருண்ய மானுடநேயம் மழிக்கப்பட்ட தன் தத்துவத்தின் அதோமுகத்தை தரிசிக்கிறான். கற்றோர் மாட்டு குற்றப்பான்மை அதிகரித்தல் குறித்து இவர்களின் உரையாடல் திரும்புகையில் ரஸ்கோல்னிகோவ் இடையீடு செய்யும் வகையில், “நீ இத்தனை நேரம் செய்த போதனைகளின் உட்பொருள் என்னவென்று யோசித்துப் பார், ஊராரைக் கத்தியால் குத்திக்கொண்டே போகலாம், தப்பில்லை என்று அர்த்தமாகும்”, என்று சொல்கிறான். ஆனால் உள்ளூர இது தன் கோட்பாட்டை அபாயகரமாக நெருங்கி வருகிறது என்பதை அவன் அவதானித்துவிட நேர்கையில், தன் பிரதிபிம்பம் லூஜினில் தென்படுவது குறித்து சுயவெறுப்பு மேலிட்டு ரஸ்கோல்னிகோவ் தன் அறையிலிருந்து எல்லாரையும் உதைத்து விரட்டுமளவு ரகளை செய்யுமிடத்துப் போய் நிற்கிறான்.

தன் மாபெரும் வாதத்தின் ஒரு தரப்பு இவ்வாறு அஸ்திவாரத்திலேயே ஆட்டங்கண்டுவிடுவது அவனை நிலைதடுமாறச் செய்கிறது, ஆதாரமின்மையால் உருவாகும் பாழ்வெளியை அவனது அகங்காரம் எழுந்து முட்டுக்கொடுத்து நிரப்புகிறது. இதனால் அவனது துணிச்சல் எந்த அளவுக்குப் போகிறதென்றால், தன் குற்றம் குறித்து ஜாம்யெட்டோவ்விடமே போட்டுப் பார்க்கிறான்: “கிழவியையும் லிஜாவெத்தாவையும் கொன்றது நானாக இருந்தால் எப்படி?”. தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் தேவைக்கும், தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நாட்டத்துக்கும், இடையில் தாறுமாறாகத் தள்ளாட்டம் போடும் ரஸ்கோல்னிகோவ், மெல்ல மெல்ல தனக்கே அன்னியனாகிறான் – இப்போது, மானுடத் துணையின் ஆறுதல் அவனது அவசரத் தேவையாகிறது. விதி அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது, குடிகார மார்மெலதோவ் குதிரைகளால் மிதித்துத் தள்ளப்படும் விபத்தின் வாயிலாக. சோனியாவின் குடும்பத்தினருக்கு உதவியபின் அவன் தான் “உயிர்த்திருப்பதாய்” உணர்கிறான், “குரூபக் கிழம்” செத்துப் போனதோடு தன் வாழ்வு முடிந்துவிடவில்லை என்று அவன் புரிந்து கொள்கிறான். தனக்குப் போதுமான மனவுறுதி உண்டா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி என்று அவன் தீர்மானிக்கிறான், தான் “ஒரு சதுர கனஅடியில் வாழ” தயாராய் இருப்பதாய் உறுதி பூண்கிறான். இது தன் சகோதர மானுடர்களுடன் இணக்கப்பூர்வமான புரிந்துணர்வை ஒரு குறுகிய காலத்துக்குத் தருவித்துக் கொடுத்தாலும், இரண்டாம் பகுதியின் முடிவில் அவன் மூர்ச்சையாகிறான்- அப்போதுதான் பீட்டர்ஸ்பர்க்குக்கு வந்து சேர்ந்த தன் தாயையும் சகோதரியையும் தழுவியணைத்துக்கொள்ளத் தாளா வேதனையை உணர்கிறான் அவன். “திடீரென்று அவனால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விழிப்புநிலை ஓர் இடி போல் அவனைத் தாக்கிற்று”, தன் குற்றச் செயலின் சுமையை அவன் அதன் அத்தனை உக்கிரத்தோடும் உணர்கிறான் – இப்போது அவன் தான் மிக நெருக்கமாய் நேசிப்பவர்களிடமிருந்தும் துண்டிக்கப்பட்ட தீவாந்தரமாகத் தனித்திருக்கிறான், இனி அவன்தான் தன்னை அழுத்தும் பாரத்தைச் சுமந்தாக வேண்டும், எப்போதும்.

  1. குற்றம் கடிதல்

மூன்றாம் பகுதியின் துவக்கங்களில், ரஸ்கோல்னிகோவ் தன் சகோதரி துன்யா லூஜினை மணக்கவிருப்பதை மிகத்தீவிரமாக எதிர்க்கிறான். அடுத்து வரும் பகுதிகளில் காவல்துறை அதிகாரி போர்பிரி பெட்ரோவிச் குற்றத்தின் காரணிகள் பொருளாசையல்ல, அகச்சிக்கல்கள் என்பதை மிகச் சரியாகவே அவதானித்தவராக, ரஸ்கோல்னிகோவ் ஆறு மாதங்கள் முன்னர் எழுதியிருந்த “குற்றம் குறித்து” என்ற கட்டுரை தொடர்பாக அவனை விசாரிக்கத் துவங்குகிறார்.

இதன்பின், ரஸ்கோல்னிகோவால் அரங்கேற்றப்பட்ட குற்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்ற விசாரணைக்குத் திரும்புகிறது கதை.

பயன்முதற்கொள்கைகளிலும் (utilitarian) தர்க்கப் பயிற்சியிலும் தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் போர்பிரி அற்புதமாக உருவம் பெற்றிருக்கும் ஒரு பாத்திரம். குற்றத்தைத் துப்புதுலக்கும் அவன் இப்போது ரஸ்கோல்னிகோவைக் கைப்பற்றத்தக்க வலையொன்றைப் பொறுமையாகப் பின்னத் துவங்குகிறான். இந்த அறிவுப் போராட்டத்தில் இவ்விருவரும் பயன்படுத்தும் உவமானங்களும் கூட ஒன்றுடனொன்று பொருந்துவனவாக இருக்கின்றன. போர்பிரியைச் சந்திக்கவிருப்பது குறித்த தன் நிலையை ரஸ்கோல்னிகோவ், “மெழுகின் தீபத்தை நோக்கிப் பறக்கும் விட்டில்,” என்று உருவகித்துக் கொண்டால், நான்காம் பகுதியில்,போர்பிரி “அவன் என்னை விட்டு விலகியோட மாட்டான்… மெழுகுவர்த்தியின் அருகிலுள்ள விட்டிலை நீ எப்போதேனும் பார்த்ததுண்டா?” என்று கேட்கிறான்.

இருப்பினும், பின்னொரு சமயம் ஒரு வணிகன் அவனைக் ‘கொலைகாரன்’ என்று குற்றம் சாட்டுவதும், இப்போது போர்பிரி செய்யும் விசாரணையும் கிறுகிறுக்க வைக்கும் மயக்க நிலையை நோக்கி ரஸ்கோல்னிகோவின் எண்ணங்களைச் செலுத்துகின்றன. ஒருவழியாக அவன், இத்தனை காலம் வீண் நினைப்புகளில் எண்ணியிருந்ததற்கு மாறாக, தான் மெய்யாகவே “மாமனிதன்” அல்ல என்ற முடிவுக்கு வருகிறான். இதன் தொடர்ச்சியாகவே நெப்போலியனைக் குறித்து “அனைத்தும் அனுமதிக்கப்பட்ட எஜமானன், அவன் டூலோனை முற்றுகையிடுகிறான், பாரிஸ் நகரைக் கசாப்புக் கடையாக்குகிறான், எகிப்தில் ஒரு படையையே மறந்து போகிறான், மாஸ்கோ படையெடுப்பில் ஐந்து லட்சம் வீரர்களைக் காவு கொடுக்கிறான்… அவன் இறந்ததும் அவனுக்கு நினைவுச்சின்னங்கள் எழுப்பப்படுகின்றன என்னும்போது… எல்லாம் இவ்வாறே அனுமதிக்கப்பட்டதாகிறது. இல்லை, இப்படிப்பட்டவர்கள் ரத்தமும் சதையுமாகச் செய்யப்பட்டவர்களல்ல, வெண்கலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவர்கள்,” என்று சொல்லிக் கொள்கிறான்.

ஆனால் அவனது அகங்காரம் அதன் பொய்த்தர்க்கங்களைத் தொடர்கிறது – மூதாட்டி விவகாரம் ஒருவித தற்காலிக நோய் நிலை…அவளைத் தாண்டிச் செல்லும் அவசரத்தில்… அவன் கொன்றது ஒரு மனித உயிரை அல்ல, ஒரு கொள்கை வெற்றிபெறும் சாத்தியத்தை….”தாண்டிச் செல்வதில்” அவன் தனிப்பட்ட முறையில் அடைந்த தோல்வி, அவனது கொள்கையைப் பொய்ப்பிப்பதில்லை. இவ்வாறு அவன் தனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் உலகளாவிய ஆனந்தம் என்ற, அழகான, மனதுக்கு உகந்த லட்சியத்தை அவனது எண்ணங்களின் கொந்தளிப்பு ஏளனம் செய்து முடிவில் தன்னை இகழ்ந்து கொள்வதில் வந்து நிற்கிறது (“நான் அழகியல் சார்பு கொண்ட உண்ணி”).

சிக்கல்கள் நிறைந்த இந்தப் பகுதி ஒரு கனவின் புதிர்த்தன்மையுடன் நிறைவடைகிறது – கனவில் அவன் மீண்டும் கொலை செய்கிறான், அவன் பலி கொண்டவளது ஆவி, அவனது கோடரியின் ஒவ்வொரு வீச்சுக்கும் கீச்சிட்டுச் சிரித்து கொலை முயற்சியை முறியடிக்கிறது.

இந்தக் கனவின் ஓசைகளற்ற பின்னதிர்வாய், பேயொன்று தோன்றியது போல், ஆர்கடி இவானோவிச் ஸ்விட்ரிகெய்லோவ் அவன்முன் தோன்றி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஸ்விட்ரிகெய்லோவ் பீட்டர்ஸ்பர்க் வந்திருப்பது ரஸ்கோல்னிகோவின் சகோதரி துன்யாவைத் தேடி. ஸ்விட்ரிகெய்லோவ் இளம் பெண்களின்பால் மோகம் கொண்ட பைரனிய உருவம், இரக்க உணர்ச்சிகளற்ற புலனின்ப விழைவாளன்.

அவன் ரஸ்கோல்னிகோவ் என்ற அகங்காரி ஸ்டீராய்டுகளால் கொழுக்கப்பட்ட கடைநிலை உருவம். விமரிசகர் ப்ளூம், ஷேக்ஸ்பியரின் கிங் லியரில் வரும் எட்மண்டுடன் இவனை ஒப்பிடுகிறார். உங்களுக்கு நினைவிருக்கலாம், எட்மண்டுதான், “இவர்களில் யாரை நான் சுகிக்கட்டும், இருவரையுமேவா, ஒருத்தியை மட்டுமா? அல்லது இருவரையுமே சுகிக்காமல் விட்டுவிடவா?” என்று அலட்டிக்கொள்ளாமல் கேட்பவன். இந்த ஒப்பீட்டை இன்னும் ஓரடி எடுத்துச் சென்று, தந்தை பெயர் தெரியாதவனாய்ப் பிறந்த எட்மண்ட் போல், தன் பிறப்புக் கணத்தில் ஸ்விட்ரிகெய்லோவ் உற்ற காயம் என்ன என்று நாம் யோசிக்க முடியும்.

கோர்மாக் மக்கார்த்தியின் கடும் அழகு கொண்ட Blood Meridian நாவலில் வரும் ஜட்ஜ் ஹோல்டனின் நோக்கமற்ற உளத்துணிவின் நிர்வாணத்தை இவனது இருண்மை நமக்கு நினைவூட்டுகிறது. ரஸ்கோல்னிகோவ் இன்னும் இப்புறத்தில்தான் இருக்கின்றான் என்றால், ஸ்விட்ரிகெய்லோவ், “தாண்டிச் சென்றவன்” என்பது தெளிவாகவே தெரிகிறது.. இவர்களிருவரும் நித்தியத்துவத்தை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டாலே போதும், ஒரு ஸ்விட்ரிகெய்லோவ்வாக மாற விரும்புவதற்கும்கூட ரஸ்கோல்னிகோவ் இன்னும் எவ்வளவு தொலைவு சென்றாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.

“கைப்பற்ற முடியாத தத்துவமென்று கால முடிவிலியை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பிரமாண்டமான ஏதோவென்று, பிரமாண்டம்! அதற்கெல்லாம் மாறாக, அதோ அங்கே ஒரு சிறிய அறை திடீரென்று தோன்றுவதாக நினைத்துக்கொள், கிராமத்தில் இருக்கும் பொதுக் குளியலறை போன்ற ஒன்று, அது சாம்பல் பூத்துக் கிடக்கிறது, அதன் மூலைகள் அனைத்திலும் சிலந்திகள், அதுதான் முடிவிலியின் முழுமையும். அப்படிப்பட்ட ஒன்றுக்காக நான் சில சமயம் ஆசைப்படுகிறேன்.”

“ஆனால் நிச்சயம், நிச்சயமாக உன்னால் அதைக் காட்டிலும் நியாயமும் ஆறுதலும் கொண்ட எதையேனும் கற்பனை செய்து கொள்ள முடியும் தானே!” என்று அடிபட்ட உணர்வோடு ரஸ்கோல்னிகோவ் உரக்கக் கேட்கிறான்.

ஸ்விட்ரிகெய்லோவைச் சந்தித்துச் சிறிது காலம் சென்றபின் தன் குடும்பத்தை நண்பன் ரஜூமுகின் வசம் ஒப்படைத்துவிட்டு, சோன்யாவைத் தேடிச் செல்கிறான் ரஸ்கோல்னிகோவ். அவள் ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகளைத் “தாண்டிச் சென்றிருப்பதை” தனது கொலைகார மீறலோடு ஒப்பிட்டு, இரண்டுக்குமிடையே பொய்யான ஒரு சமன்பாட்டை உருவாக்கி, தன் பார்வைக்கு இணக்கமாக அவளை வளைக்கப் பார்க்கும் ஆணவ முயற்சியை அவன் இனித் துவங்குவான்.

இவ்வாறாக எப்போதும் தர்க்கத்தில் மிகை ஈடுபாடு கொண்ட அகங்காரம் அவனது இருட்செயலைத் தொடர்ந்து அலங்கரிக்கவே செய்கிறது என்றாலும், உணர்வு மேலிட்ட அவனது மறுபக்கம், சோன்யாவின் கருணைக்கு அடிபணிகிறது- முடிவில் அவன் அவளது பாதங்களை முத்தமிடுகிறான் (நான் உன்னை வணங்கவில்லை, மானுட துயரனைத்தையும் வணங்கினேன்”). இதுவே, புதிய ஏற்பாட்டின் நான்காம் வேதாகமத்தில் லாசரஸ் பகுதியை, ஒரு மெழுகின் வெளிச்சத்தில் ரஸ்கோல்னிகோவுக்காக சோன்யா வாசித்துக்காட்டும் அந்த புகழ்பெற்றக் காட்சிக்கு இட்டுச் செல்கிறது. நபகோவ் அவ்வளவு வெறுத்த, (“எந்த ஒரு மெய்கலைஞனும், மெய்யான ஒழுக்கவாதியும்… போலிச் சொற்பெருக்கின் பெரும் வளியில் இவ்விருவரையும் அருகருகே வைத்திருக்க முடியாது, ஒரு கொலைகாரனும் யாரும்?- தெருவில் மேயும் பாவப்பட்ட ஒரு பெண், முழுக்கவே வேறுபட்டவர்களின் சிரம் அந்தப் புனித நூலின் மேல் தாழ்ந்திருக்கிறது”) இந்தக் காட்சி தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வை எழுதிய ஜோசப் பிராங்க்குக்கு “ரெம்ப்ராண்ட் எட்சிங்க்கின் ஒளியற்ற பக்தி”க்குரிய எளிமை கொண்டுள்ளதாய் தோற்றம் தருகிறது

ரஸ்கோல்னிகோவ் பக்தியைத் தெளிவின்றி அணுகுகிறான்- தர்க்கமறிந்த அவநம்பிக்கை, பக்தியில் தன்னை ஆழ்த்திக் கொள்ள விரும்பும் அவனது நாட்டத்தை எப்போதும் சாரமற்றதாக்குகிறது (“புனித முட்டாள்கள்” என்று ஏளனம் செய்பவன் அவன்). தனது சகோதரி விதியிலிருந்து இறைவனின் அருளால் மீட்சி பெறுவாள் என்ற சோன்யாவின் நம்பிக்கையை “அவர்களுக்கே உரியது சொர்க்கத்தின் அரசு” என்று ஏளனம் செய்து குரூரமாய் நசிக்கும்போது அவனது நிலையற்ற அகம் நம்பிக்கை வறட்சியை நோக்கிச் சாய்கிறது. “என்னதான் செய்ய வேண்டும்? என்ற சோன்யாவின் உணர்ச்சி மேலிட்ட இறைஞ்சுதலுக்கு அவன், “உடைத்தாக வேண்டியதை உடைத்தாக வேண்டும், துயரை நாமே ஏற்றாக வேண்டும்… விடுதலையும் அதிகாரமும், அனைத்துக்கும் மேல், அதிகாரம்! நடுங்கும் உயிர்கள் அனைத்துக்கும் மேல், கரையான் புற்று முழுமைக்கும் மேல் அதிகாரம்!” என்று சொல்கிறான். லிசாவேதாவைக் கொன்றவன் யாரென்ற உண்மையை அடுத்த நாள் சொல்கிறேன் என்று உறுதிகூறி விடைபெறுகிறான் அவன்.

இந்த அத்தியாயம் முழுமையுமே கிறித்தவத் தத்துவ மரபிலுள்ள, எதிர்பார்ப்புகளற்ற அன்புக்கும் அகங்காரத்தின் காரியார்த்த அறத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமையை நாடகீயக் காட்சியாய் சித்தரிக்கிறது. நான்காம் பகுதியின் முடிவில் எதிர்பாராத ஒரு திருப்பம் நேர்கிறது, போர்பிரி ஏறத்தாழ ரஸ்கோல்னிகோவை வீழ்த்திவிடும் தருணத்தில், எங்கிருந்தோ திடீரென்று வரும் நிகோலாய், தானே இரட்டைக் கொலைகளைச் செய்தவன் என்று ஒப்புக் கொள்கிறான். ஆனால் தனது “கோழைத்தனத்தை” அருவெறுப்புடன் திரும்பிப் பார்க்கும் ரஸ்கோல்னிகோவின் “போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை”.

ஐந்தாம் பகுதியில் சோன்யாவை திருட்டு வழக்கில் சிக்க வைக்கச் செய்யும் லூஜினின் பரிதாபகரமான முயற்சி தோல்வியில் முடிந்தபின், ரஸ்கோல்னிகோவ் இந்த விவகாரத்தை ஒரு தார்மீகக் கேள்வியாய் வடிவமைத்துக் கொள்கிறான்: “லூஜின் தொடர்ந்து வாழ்ந்து அருவருக்கத்தக்க செயல்களைச் செய்ய வேண்டுமா, அல்லது காத்ரீனா இவநோவனா சாக வேண்டுமா? இருவரில் யார் சாக வேண்டும் என்பதை நீ எப்படித் தீர்மானிக்க இயலும்?” சோன்யா தன் நம்பிக்கை உண்மையானது என்பதில் அசைவற்ற உறுதி பூண்டவளாய் இருக்கிறாள் என்பதால் அவள் இவனது பொறியில் சிக்குவதில்லை. “ஆனால் இறைவன் விதித்திருப்பதை நானறிய இயலாது… யார் வாழ வேண்டும், யார் வாழக்கூடாது என்று முடிவெடுக்கும் இடத்தில் யார் என்னை அமர்த்தியது?” என்று கேட்கிறாள்.

இந்த அறச்சிக்கல்கள் அனைத்தும் மேற்பூச்சு என்பதையும் கொலை செய்த நாள் முதல் தவிர்த்துக்கொண்டிருக்கும் அந்த “அத்தியாவசிய” தருணத்தைத் தள்ளிப்போடும் முயற்சிகள் மட்டுமே என்பதையும் ரஸ்கோல்னிகோவ் உணர்ந்திருக்கிறான். அப்படியே இருந்தாலும் கொலையை ஒப்புக்கொள்ளும் கணமும் அவனது சுமையை இறக்கி வைப்பதாய் இல்லை. “கோடரியைக் கட்டவிழ்த்துக் கொண்டவனாய், கிழவியின் பின் நின்றபோது, இனி ஒரு கணமும் இழப்பதற்கில்லை என்று உணர்ந்த” அந்தக் கணம் போலவே அன்று செய்த கொலையை ஒப்புக்கொள்ளும் இந்தக் கணமும் மிகக் கொடூரமானதாய் இருக்கிறது.

குற்றத்தை ஒப்புக்கொள்ளும் இந்த இறுதிக் கணங்களின் தடுமாற்றத்தின் இடையே, சோன்யாவின் இதயத்தை ஒரு பேரச்சம் பீடிக்கிறது, பிணம் போல் வெளிறிய அவனது முகத்தைக் காணும்போது அவள் உண்மையை ஊகித்து விடுகிறாள். நேரடியாக உண்மையைச் சொல்லப் போராடித் தோற்கும் ரஸ்கோல்னிகோவ், ஒருவழியாய் வார்த்தைகளை உதிர்க்கிறான் (“இங்கே பார்”). அப்போது சோன்யாவின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் கோடரியோடு அவன் நெருங்கியபோது லிஜாவெத்தாவின் முகத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகளை அவனுக்கு நினைவூட்டுகின்றன, அப்போது அவளது முகத்தில் ஒரு குழந்தையின் மிரட்சியைப் பார்க்கிறான். அவன் மேல் விழுந்து அவன் கழுத்தைக் கட்டி அவனை அணைத்துக் கொள்கிறாள், “யாருமில்லை, இவ்வுலகெங்கிலும். உன்னைவிட வருத்தமானவர்கள் யாரும் இப்போதில்லை,” என்று சொல்கிறாள். இதற்கு முந்தைய அத்தியாயங்கள் நெடுக கூடிக்கொண்டிருந்த இறுக்கத்தைக் கட்டவிழ்க்கும் இந்த விடுதலைத் தருணம் கிறித்தவ எளிமையாய் வெளிப்படுகிறது. “அவன் நெடுங்காலமாக அறியாதிருந்த உணர்வு அவனது ஆன்மாவை நிறைத்து அக்கணமே அதை மென்மையாக்கிற்று. அவன் அதை எதிர்க்கவில்லை, கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் இரண்டு உருண்டு அவன் இமைகளில் தொக்கி நின்றன”.

கலவியின் உச்சம் போலவே தளைகள் அவிழும் இக்கணமும் தக்கவைத்துக் கொள்ள இயலாத ஒன்றாக அமைகிறது. ரஸ்கோல்னிகோவின் தர்க்கிக்கும் அகங்காரம் இப்போது மேலோங்கத் துவங்குகிறது. தானும் அவனுடன் இணைந்து கடும் தண்டனை அனுபவிக்கத் தயாராக இருப்பதாய் சோன்யா உறுதி கூறும்போது, ரஸ்கோல்னிகோவின் சுற்றிச் சுழலும் விளக்கங்கள் இறுதியாய், இத்தனை நாட்களாய் விசாரணை அதிகாரி தேடிக்கொண்டிருந்த அவனது உந்துவிசையின் மையத்தை ஒரு வழியாய் வந்தடைகின்றன. “நான் துணிந்து ஒரு செயலைச் செய்ய விரும்பினேன்… கொன்றேன்… துணியத்தான் நினைத்தேன், சோன்யா, அதுதான் காரணமெல்லாம்” என்று கூறுகிறான். இப்போது முடிவாய் இதுவரை நடித்ததுபோல், “மானுடநல விரும்பியாய்” அல்லாது, சுயவிழைவில், “சும்மா” “தனக்காக மட்டுமே” “போலித் தருக்கங்களற்று கொல்வதை” விரும்பியவனாகத் தன்னை உணர்ந்து கொள்கிறான்.

உண்மை வெளிப்படும் தருணத்தைச் சிந்தனையைக் கொண்டே அடையும் அதே கணத்தில், சோன்யாவுடனான அவனது உரையாடலின் வாதையைக் கொண்டு உண்மை உள்ளக்கொந்தளிப்புடன் அடையப்படுகிறது என்ற உள்வெளி இயக்கத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் இக்காட்சியை தாஸ்தவெஸ்கியின் புதின மேதைமையின் அளவையாகவே நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

கொலையின் நோக்கத்தை உணர்வது ஒரு விஷயம், ஆனால் அந்த உணர்தலின் தார்மீக பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வது வேறு விஷயம், அது ரஸ்கோல்னிகோவுக்கு சாத்தியப்படுவதில்லை. அவனது அகங்காரம் சோன்யாவின் அறிவுரையை ஏற்க மறுக்கிறது, “நாற்சந்தியில் நில், தலை வணங்கு, நீ களங்கப்படுத்திய மண்ணை முத்தமிடு, அதன்பின் நான்கு திசைகளிலுமுள்ள உலகனைத்தையும் தாழ்ந்து வணங்கு, அனைவரும் கேட்க, “நான் கொலை செய்தேன்,” என்று உரக்கச் சொல்” என்கிறாள் அவள்.

ஐந்தாம் பகுதி ஸ்விட்ரிகெய்லோவின் கள்ளச் சிரிப்புடன் முடிவுக்கு வருகிறது. அண்டை வீட்டுக்காரனாக, ரஸ்கோல்னிகோவின் ஒப்புதல் வாக்குமூலம் அனைத்தையும் தான் ஒட்டுக்கேட்டு விட்டதை ஸ்விட்ரிகெய்லோவ் வெளிப்படுத்துகிறான்.

 

குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து தாஸ்தயெவ்ஸ்கி எழுதி வைத்துக் கொண்ட குறிப்புகளில் பின்வரும் வரையறுத்தல் இருக்கிறது: ஸ்விட்ரிகெய்லோவ் – மிகத் தீவிர நம்பிக்கை வறட்சி, சோன்யா- எட்ட முடியாத நம்பிக்கை, ரஸ்கோல்னிகோவ்- இருவரையும் பேரவாவுடன் பற்றிக் கொள்கிறான்.

இதுவரை கடந்த கால நினைவுகளைப் பின்னோக்கி விவரித்த நாவல் இனி எதிர்காலத்தை நோக்குகிறது. தான் ஒரு கொலைகாரன் என்பதையறிந்த இவ்விரு துருவங்களுக்கிடையேயும் ரஸ்கோல்னிகோவ் ஊசலாடிக் கொண்டிருக்கிறான். சோன்யா அவன் மனம் வருந்தித் திருந்த வேண்டுமென்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள், அவன் தனக்கு அளிக்கப்படும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிறாள். அவன் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி போர்பிரி தன் வலையைத் தொடர்ந்து பின்னுகிறான். இருந்தும் ரஸ்கோல்னிகோவ் நம்பிக்கை வறட்சியைக் கைவிடுவதாயில்லை, அது அவனுக்குத் தப்பிச் செல்லும் வழியளிக்கிறது (“தூ, அதைக் காறித் துப்புகிறேன்,” என்கிறான், குற்றத்தை ஒப்புக்கொள்வதைதான் அது என்று அவன் இங்கு சொல்கிறான்).

“நான் ஓடிப் போய்விட்டால் என்ன செய்வாய்?” என்ற ரஸ்கோல்னிகோவின் கேள்வி, மிகச் சிறந்த பதிலைத் தருவிக்கிறது. “மாட்டாய்…” என்கிறான் போர்பிரி, “ஓடிப் போனாலும் நீ தானாகவே திரும்பி வருவாய். நாங்களில்லாமல் உன்னால் இருக்க முடியாது.” அதன்பின், நம்ப முடியாத எதையாவது செய்து, “வேறு மாதிரி” விஷயத்தை முடித்துக் கொள்வதாய் ரஸ்கோல்னிகோவ் தீர்மானிப்பதானால், “விளக்கமான, வெளிப்படையான ஒரு குறிப்பை…” விட்டுச்செல்லச் சொல்கிறான் போர்பிரி, “அதில் கல்லையும் குறிப்பிடுங்களய்யா… இதைவிட அது கௌவரமாக இருக்கும்.”

நீ பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் சொல்லிச் செல், என்று கூறும் போர்பிரி, ரஸ்கோல்னிகோவ் நுண்மையாக்கம் செய்யும் அறத்தின் தூல இயல்பை மீட்டுக் கொடுக்கிறான்- பக்கா பயன்முதல்வாதியான (utilitarian) போர்பிரி அரூபக் கருத்துக்களைக் கொண்டு ரஸ்கோல்னிகோவ் தன்னை உன்னதப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை அவன் இழைத்த குற்றத்தின் லாப நட்ட தடயங்களை நினைவுறுத்தித் தரைதட்டச் செய்கிறான்.

சுதந்திரம் எப்போதும் பறிபோகலாம் என்ற அச்சுறுத்தலில் ரஸ்கோல்னிகோவ், தன் இயல்பு நிலையான நம்பிக்கை வறட்சிக்கே திரும்பி ஸ்விர்டிகிலோவிடம் விரைகிறான் (“அவனுக்கு ஏதோ ஒரு ரகசிய சக்தி இருக்கிறது”).. அவனோ, ரஸ்கோல்னிகோவின் சகோதரி துன்யா மீது தான் கொண்டிருக்கும் அளப்பரிய ஒருதலைக்காதலைப் பற்றிப் பேசுகிறான் (“அன்புக்குரிய உன் சகோதரியின் கண்கள் சில சமயம் எப்படி ஜொலிக்கின்றன தெரியுமா… அவளது உடையின் சலசலப்பு என்னால் தாள முடியாததாக இருக்கிறது…”). ஆனால் அவன் பதினாறு வயதுகூட நிறைவடையாத ஒரு பெண்ணைத் தான் மணக்கவிருப்பதையும் அம்பலப்படுத்துகிறான் (“அவளை என் கால்களில் உட்கார வைத்துக் கொள்கிறேன், கீழே இறங்க விடுவதில்லை”). தன்னுணர்வு சற்றுமில்லாத ரஸ்கோல்னிகோவ் (“எங்கள் தீச்செயல்கள் அடிப்படையில் ஒத்த இயல்பு கொண்டவையல்ல”), தார்மீக கோபத்துடன் பேசுகிறான், உடனே ஸ்விர்ட்கிலோவால் மறுக்கப்படுகிறான்: “ஆனால் ஒழுக்கத்தைப் பற்றி இவ்வளவு பேச நீ யார்” போதும் நிறுத்திக்கொள் செல்லம், நான் பாபம் செய்தவன், ஹஹஹா)

இதையடுத்து விரைவில், ஸ்விட்ரிகெய்லோவின் அடுக்ககத்தில் துன்யாவுக்கும் ஸ்விட்ரிகெய்லோவுக்குமிடையே நிகழும் அசாதாரணக் காட்சியின் தரிசனம் நமக்கு அளிக்கப்படுகிறது. ரஸ்கோல்னிகோவ் செய்த கொலை குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் கடிதத்தைத் துன்யா திருப்பித் தருகிறாள். அவன் இந்தக் கடிதத்தைப் பிணையாய்க் கொண்டு அவளை மிரட்டி, தன் மௌனத்தின் பரிசாக அவள் கரம் பற்ற முயற்சி செய்கிறான். தான் இங்குச் சிறைப்படுத்தப்படக்கூடும் என்று உணர்ந்தவளாய், ஸ்விட்ரிகெய்லோவ் அவளைப் பலவந்தப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து அவள் ரிவால்வரை எடுத்துச் சுடுகிறாள்- இரு தோட்டாக்கள் குறிதவறித் தெறிக்கின்றன. ஸ்விட்ரிகெய்லோவ் அடுத்தத் தோட்டாவுக்குக் காத்திருக்கையில், (“உன்னிடம் இன்னொரு தோட்டா இருக்கிறது, அதைச் சரியாகச் சுடு, நான் காத்திருக்கிறேன்”), துன்யா துப்பாக்கியைத் தூக்கி எறிகிறாள். இதையடுத்து நடக்கும் உரையாடல் ஸ்விட்ரிகெய்லோவின் தலைவிதியை இறுதியாகத் தீர்மானித்து விடுகிறது:

“அப்படியானால் நீ என்னை விரும்பவில்லையா?” என்று அவன் மெல்லக் கேட்டான்.

இல்லை என்று தலையசைத்தாள் துன்யா.

“அப்படியானால்… நீ.. இனி எப்போதும்…” என்று அவன் விரக்தியில் கிசுகிசுத்தான்.

“கிடையாது,” என்று கிசுகிசுத்தாள் துன்யா.

ஸ்விட்ரிகெய்லோவின் ஆன்மா பயங்கரமான ஒரு ஊமைப் போராட்டக் கணத்தை எதிர்கொள்கிறது, சொல்லவொண்ணா உணர்வுகளோடு அவளைப் பார்க்கிறான் அவன். திடீரென்று பின்வாங்கி, ஜன்னலுக்குச் செல்கிறான், அதன் முன் நின்றுகொண்டு துன்யாவிடம் சாவியை வீசுகிறான். துன்யா கால்வாயை நோக்கித் தப்பியோடுகிறாள். அவன் ரிவால்வரை எடுத்து தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு, தொப்பியணிந்து வெளியேறுகிறான். பால் போன்ற பனிமூட்டத்தில் அவன் லிட்டில் நேவாவை நோக்கிச் செல்கிறான். அக்கில்லஸ் ஹெல்மெட் அணிந்த ஒரு போர்வீரன் அவனை வழிமறிக்கிறான். தான் அமெரிக்கா செல்வதாகச் சொல்லி, துப்பாக்கியின் குதிரையை அழுத்துகிறான் ஸ்விட்ரிகெய்லோவ்.

எழுத்தாளர் ஜான் பெய்லி, நெருக்கத்தில் கண்டதுபோல் நம்ப வைக்கும் தன்மை கொண்டதாய் இந்நிகழ்ச்சி இருப்பதாகக் கருதுகிறார்- வினோதமான நகைச்சுவைத்தன்மை இதற்கு இருப்பதால் இதிலுள்ள நெகிழ்ச்சி குறைவதில்லை. அவர் பார்வையில், துன்யாவை ஸ்விட்ரிகெய்லோவ் ஒரு தாஸ்தவெஸ்கிய பாத்திரமாகப் புரிந்து கொள்வதில் பிழை செய்கிறான், அவள் அவனைச் சுடத் தவறியதன் பொருள், அவனிருக்கும் உலகின் தர்க்கத்துக்கு அவள் கீழ்ப்படிகிறாள் என்று பொருள்படுத்திக் கொள்கிறான். ஆனால் அவனது துரதிருஷ்டவசம், துன்யா காத்திரமானவள், தால்ஸ்டாயின் நடாஷா போன்ற மெய்ம்மை கொண்டவள். இவ்விருவருக்குமிடையேயுள்ள வேறுபாடு வெளிப்படும் கணம்தான், அவன் இறுதி வெறுமையையும் அபத்தத்தையும் உணரும் கணமாகிறது.

ஒரு வகையில் பார்த்தால், ஆம், ஸ்விட்ரிகெய்லோவ் அதைவிடவும் இருண்மையானவன்தான். அவனது சாத்தானிய இயல்பு மனிதர்களை பலவந்தப்படுத்தியல்ல, அவர்களது ஒழுக்கக் குறைகளைக் கொண்டு அடிமைப்படுத்த விழைகிறது. அதனால்தான் அவன் துன்யாவிடம், மூன்றாம் முறை தவறிவிடாதவாறு தோட்டாவைச் சரியாகப் பொருத்தச் சொல்கிறான். அது துன்யாவுக்கு எளிய விடுதலை அளித்திருக்கும், ஒரே தோட்டாவில் தன்னையும் தன் சகோதரனையும் விரட்டிக் கொண்டிருக்கும் இந்த அரக்கனை நிரந்தரமாக ஒழித்துவிடலாம்.

உண்மையில், குற்றமும் தண்டனையும் நாவலின் கலைப் பந்தயம் இதுதான் – ஹரோல்ட் ப்ளூம் சொன்னதுபோல், நாம் பெண்களையோ தந்தையைப் போன்ற அரசர்களையோ கொலை செய்யாமல் இருக்கலாம், ஆனால் நம்மில் ஒரு பாதி ரஸ்கோல்னிகோவாகவும் மாக்பெத்தாகவும் இருப்பதால், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நாம் அதையும் செய்யலாம். ஸ்விட்ரிகெய்லோவ் மெய்யான எதிர்மறைத்தன்மை கொண்டிருப்பதால், தாஸ்தயெவ்ஸ்கி திட்டமிட்டதைக் காட்டிலும் அவன் தனக்கென்று பெரும் பங்கை எடுத்துக் கொண்டு தாஸ்தயெவ்ஸ்கியின் கருத்தியல் கோட்பாடுகளை மீறிவிடுகிறான். ப்ளூமின் சொற்களில் சொல்வதானால், அவன் “புத்தகத்தைத் தாண்டி வெளியே ஓடுகிறான்”- அவனுக்குரிய பாதாளத்தை நோக்கி.

இதையடுத்து வரும் பகுதி, சோன்யாவின் ஆளுமையின் அளப்பரிய தாக்கத்தில் ரஸ்கோல்னிகோவ் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாய் மண்ணை வணங்கி முத்தமிடுவதில் முடிகிறது. ஆனால், இப்போதும்கூட, அவன் உண்மையை முழுமையாக ஒப்புக்கொள்ளும் நோக்கத்தில் காவல் நிலையம் செல்கையில் அவனது தர்க்கிக்கும் அகங்காரம் மீண்டும் கனன்று எரிகிறது (“இப்போதும் அவர்களிடம் சொல்வது சாத்தியப்படலாம்”). ஸ்விட்ரிகெய்லோவ் தன்னைச் சுட்டுக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டதும், ரஸ்கோல்னிகோவ் ஏதோவொன்று தன் மீது விழுந்து நசுக்கிவிட்டதாக உணர்கிறான். தனக்கு எதிரான ஒரே புற சாட்சியம் இறந்துவிட்டதில் ஒரு விடுவிப்பை உணர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து, வெளியேறுகிறான்- அவனுக்குத் தலை சுற்றுகிறது, “வலிமிகுந்த, வதைபட்ட, விரக்தி நிறைந்த” சோன்யா அவனுக்காக முற்றத்தில் காத்திருப்பதைக் காண்கிறான். அவன் சிறிது நேரம் நிற்கிறான், பின்னர் புன்னகைத்துவிட்டு, மீண்டும் காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறுகிறான் – அதிகாரியின் விதவையாகிய மூதாட்டியையும் அவளது சகோதரி லிஜாவெத்தாவையும் ஒரு கோடரியால் கொன்று திருடியது, தான்தான் என்று வாக்குமூலம் அளிக்கிறான். அங்கிருப்பவர்கள் நாலாதிசையிலிருந்தும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள், அவன் தன் வாக்குமூலத்தைத் திரும்பச் சொல்லி நாவலை முடிவுக்குக் கொண்டு வருகிறான்.

அகம், புறத்தினின்று துண்டிக்கப்பட்ட, தனித்தன்மை கொண்ட ஒன்றா? புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல், தன்னிச்சையுடன் செயல்படும் சுதந்திரம் அகத்துக்கு உண்டா? ரஸ்கோல்னிகோவின் அகம், புறத்தினின்று விடுபட்ட ஒன்றாகவல்ல, எப்போதும் அதனின்று பிளவுபட்ட ஒன்றாகவே இருக்கிறது- புற நிகழ்வுகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, அவற்றை தன் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்ளும் அளவே அவன் சுதந்திரம் இருக்கிறது. குற்றத்தின் கடைசி சாட்சியமான ஸ்விட்ரிகெய்லோவ் இறந்துவிட்ட செய்தி குற்றத்தைக் கடந்து செல்லும் வாய்ப்பை அவனுக்கு அளிக்கிறது – ஆனால் திரும்பிச் செல்லும்போது முழுமையான அன்பின் வடிவான சோன்யாவின் உருவில் குற்றத்தை அதன் குற்றமற்ற தன்மையில் எதிர்கொண்டு, தன் மீட்சியாய் பற்றிக் கொள்கிறான். அவனுக்கு எதிராய் சாட்சி சொல்லப்போவதில்லை என்றாலும், சோன்யா அவனது குற்றத்தின் சாட்சிதான், அவனது குற்றம் ஸ்விட்ரிகைலோவின் மறைவோடு புதைக்கப்படுவதில்லை. அதனோடு அவன் வாழ்ந்தாக வேண்டும்.

ரஸ்கோல்னிகோவ் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதில் விடுதலையடைகிறான் என்பதாக நாவல் முடிகிறது என்று நாம் நினைக்க விரும்புகிறோம். இனி அவனைக் குற்றவுணர்வு துன்புறுத்தாது என்பதாகப் பரவலான வாசகர்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், தன் கதைக்கு சுபமான முடிவைக் கொடுத்தாலும் ரஸ்கோல்னிகோவ் பிளவுண்டவன், அவனது பிளவுண்ட அகம் புறவுலக நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபட்டு, தன் சுதந்திரத்தை நிறுவிக்கொள்ளத் தவிக்கிறது என்பதுதான் நாவலின் கருப்பொருளே என்பதை தாஸ்தவெஸ்கி மறப்பதில்லை.

இந்தக் கேள்விகள் எதையும் நாம் கேட்டுக் கொள்வதில்லை. வாசகர்களாகவேனும் நாம் தாஸ்தயெவ்ஸ்கி நாவலை இவ்விடத்தில் முடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு மரபுப்படி இணைத்துள்ள பின்குறிப்பில் ஐநூறு பக்கங்களை வாசித்து வாசகன் இதுவரை கண்டடைந்திருப்பதை அவர் சந்தேகத்துக்குட்படுத்துகிறார். பின்னுரை ரஸ்கோல்னிகோவைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச் செல்கிறது, அங்கு அவன் அதன் வாழ்வில் ஆழ்ந்திருக்கிறான், அனைவரிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்டான். சோன்யா அவனைப் பார்க்க வருகையில் அவன் முரட்டுத்தனமாகவும் அவளைக் கேவலப்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்கிறான், இறுக்கமடைந்த அவனது மனசாட்சி, இப்போதும் அவனது கடந்த கால வாழ்வில் எதைக் கண்டும் எந்த ஒரு பயங்கரமான குற்றவுணர்வும் கொள்வதில்லை, என்ன ஒன்று, யாரும் செய்திருக்கக்கூடிய பிழையை அவனும் செய்ய நேர்ந்திருக்கலாம். அர்த்தமற்ற ஆணையின் காரணமாக, பயனற்ற தியாகம் செய்ய வேண்டியிருந்தது குறித்து அவன் வருந்துகிறான், அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

இவ்வாறாக தாஸ்தயெவ்ஸ்கி ஒரு உறைநிலையை அடைகிறார், அவரது கோட்பாட்டுக்கு மாறாகக் கதையின் பிரதான பாத்திரம், நம்பிக்கையின்மையின் தரைதட்டி மாற விரும்பாது நிற்கிறது. எனவேதான் ஒட்டவைத்ததைப் போல் தனித்து நிற்கும்ஆபிரகாமிய காலத்தையும் அதன் மந்தைகளையும் திரும்பக் கொணரும் நாடோடிக் கூடாரங்களின் பசைபூசப்பட்டச் சித்திரம்… எனவேதான் கண்ணீராலும் கம்பலையாலும் பசைபூசப்பட்டு மலரும் புத்துயிர்ப்பு…

ஆமாம், இந்தப் பின்னுரை சிக்கலானது. இப்போது சைபீரியாவில் இருக்கும்போதும் கூட’அசாதாரண’ மனிதர்கள் தம்மை அற விழுமியங்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களாகக் கருதி அதிகாரங்களைக் குவித்துக்கொண்டு, தம் சர்வாதிகார ஆற்றலால் மானுடம் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடியவர்களாக இருக்க முடியும் என்ற சித்தாந்தத்திலிருக்கும் தீய கூறுகளை அவனால் அடையாளம் காண முடிவதில்லை. அவனது சித்தாந்தம் பொய்க்கவில்லை என்றும், அவன் சில நுண்விபரங்களில் தவறிவிட்டதாலேயே சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான் என்றும் சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.

ரஸ்கோல்னிகோவ் நாவலில் அடைந்திருக்கும் முட்டுச்சந்திலிருந்து அவனை மீட்பதற்காகத் தான் தாஸ்தயெவ்ஸ்கி பின்னுரையில் அவனது கனவை ஒரு சிந்தனைச் சோதனையாய் படைக்கிறார்.. இந்த கனவில் உலகம் முழுவதும் கொள்ளை நோயால் தாக்குண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தன் அகந்தை மட்டுமே மெய்மையை அறியக் கூடும் ஆற்றல் பெற்றிருக்கிறது என்ற நம்பிக்கையில் சுயம்புவாக நடந்து கொள்கிறான். இதனால் சமூகக் கட்டுக்கோப்பு முழுமையாய் குலைகிறது.

ரஸ்கோல்னிகோவ் செயல்பட விரும்புவதுபோல் எல்லோரும் தாம் கண்ட உண்மையின் வெளிச்சத்தில் இயங்கும்போது சமூக ஒழுங்கு சிதையுமெனில், அவனது சித்தாந்தத்தின் இடம் என்ன? அடிப்படைச் சித்தாந்தங்கள் தகர்ந்தழிந்த ரஸ்கோல்னிகோவிற்கான வழிதான் என்ன ? இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் தாஸ்தயெவ்ஸ்கி ஆபிரகாமும் மந்தைகளுமாகிய வேறொரு தரிசனத்தை அளிக்கிறார்- ரஸ்கோல்னிகோவின் புத்துயிர்ப்புக்கான வித்தை இந்தக் காட்சி கொண்டுள்ளது போன்ற சுட்டல் இது, அவன் சோன்யாவை நோக்கிச் செல்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்கிறது..

ரஸ்கோல்னிகோவின் தன்வயப்படுத்தக் கூடிய உளவியலமைப்புக்கோ ஸ்விட்ரிகைலோவின் பைசாச வகைமைக்கோ இந்தப் பின்னிணைப்பு பொருத்தமானது அல்ல என்பதை தாஸ்தயெவ்ஸ்கியும் அறிந்திருந்தார் என்ற காரணத்தால்தான், “மனிதனின் புத்துயிர்ப்பும்” “இதுவரை அறியப்படாத யதார்த்தத்தை அவன் பழகிக் கொள்ளுதலும்” பற்றிய விவரணை வேறொரு கலைத்தன்மை’கொண்ட தரிசனத்தையும் வேறொரு நாவலையும் கோருகிறது என்றும் கூறுகிறார். தன் வாழ்வின் மிச்ச நாட்களை அப்படிப்பட்ட ஒரு கலை முயற்சியில் அவர் தீவிரமாகத் தொடர்ந்தார், தோற்றுப் போனார்.

சில சமயம், நான் இப்போது கூறியது ஓர் அழகியல் சார்ந்த எதிர்வினையோ என்று சந்தேகிக்கிறேன். நம்மில் உள்ளார்ந்த ஏதோவொன்று தாஸ்தவெஸ்கியின் எதிர்மறைப் பாத்திரங்கள் நம்பத்தகுந்த உளவமைப்பு கொண்டிருப்பதாகக் காண்கிறது. சோன்யாவைவிட ரஸ்கோல்னிகோவே மெய்த்தன்மை கொண்ட பாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். அனைத்தையும் நிராகரிக்கும் கோட்பாடுகளைத் தன் கிறித்தவ தரிசனத்தைக் கொண்டு எதிர்த்த தாஸ்தயெவ்ஸ்கி இறுதியில் நம் நிராசைகூடிய தரிசனங்களை மெய்ப்பிக்கிறார் என்பதில் ஒரு முரண்நகை உள்ளது.

ஆனால் நான் என் நண்பன் ஷெனாயை நினைத்துப் பார்க்கிறேன், இந்தப் புத்தகத்தை பதினெட்டு முறை வாசிக்கச் செய்த அந்த மகோன்னத தரிசனம் என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சோன்யாவையோ, ஃபாதர் ஜோஸிமாவையோ தழுவும் துணிச்சலுள்ள, அழகியல் சார்பற்ற வாசிப்பு முறைமைகள் இருக்கலாம் என்று நம்புவதாகப் பாவனை செய்வது நன்றாக இருக்கிறது.

தாஸ்தயெவ்ஸ்கியின் இறுதி ஊர்வலம் ஒரு மைல் நீண்ட வரிசையாக இருந்தது, அங்கு குழுமியிருந்த நாற்பதாயிரம் பேரும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் – முறையிடத் தவித்துக் கொண்டிருந்த ரஷ்ய ஆன்மாவின் குரலாய் அவர் இருந்தார் என்று அவர்கள் நம்பினர். அந்த ஒரு உயரிய இடத்திலிருந்துதான், தாஸ்தயெவ்ஸ்கி அழகியல் சார்ந்த நம் நுண்விமரிசனங்களைப் பார்த்து உலர்சிரிப்பு சிரிக்கிறார், மீண்டுமொரு முறை முயன்று பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறார்.

 

[ஆசிரியரின் பாண்டியாட்டம் புத்தகத்திலிருந்து]

 

மூலநூல்கள் / மேலும் படிக்க:

Crime and Punishment, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky

Demons, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky

The Idiot, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky

Brothers Karamazov, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky

Dostoevsky: A Writer in His Time by Joseph Frank

பாண்டியாட்டம், நம்பி கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.