நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான்.
அன்னைக்கு சண்டே ஸ்கூல் லீவு. அவன் கலர் பண்ணிட்டு, அத எடுத்து வைக்காம விளையாடிட்டு இருந்தான். அப்பா அதை பார்த்துத் திட்டினார். அவன் திரும்பவும் எடுத்து வைக்காம கோபமா வெளியே தோட்டத்துக்கு போயிட்டான்.
அங்க ஒரு பறவை நின்னுட்டு இருந்துச்சு. அவனுக்கு இருந்த கோபத்துல அத ஒரு கல்லால அடிச்சான். அந்த பறவை ‘அம்மா அம்மா’ன்னு கத்துச்சு. அதனாலதான் நாகு அதிர்ச்சி ஆயிட்டான்.
அவன் அந்த பறவைகிட்ட பேச ஆரம்பிச்சான். அதுவும் அவன்கூட பேசியது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியல என்னடா இது பறவை பேசுதுன்னு.
‘ஆமா நீ எப்படி பேசுற’ன்னு கேட்டான்.
‘நான் உலகத்துல உள்ள எல்லா நாடுகளையும் சுத்தி வந்திருக்கேன். ஒவ்வொரு நாட்டுலயும் ஒரு ஆள் பின்னாடி சுத்துவேன். அவங்க பேசுற மொழியே கேட்பேன். ஆனா எனக்கு எல்லா மொழியையும் விட தமிழ் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.’
‘ஆமா உன் பேரு என்ன?’ன்னு கேட்டான்.
‘எனக்குத் தெரியாது.’ன்னு சொல்லுச்சு.
‘நான் வேணா உனக்கு ஒரு பேரு வைக்கிறேன். நாளைக்கு வா’ என்று சொன்னான்.
உடனே பறவை பறந்து போனது.
அவன் உள்ளே ஓடிப் போய் தாத்தா, பாட்டியிடம் ‘தோட்டத்தில ஒரு பறவை பார்த்தேன். அது எங்கூட பேசிச்சு. ஆனா அதுக்கு பேரு இல்லையாம். நான் ஒரு பேரு வைக்கப் போறேன். என்ன பேரு வைக்கலாம்.’ அப்படின்னு தோட்டத்தில நடந்ததை சொன்னான்.
தாத்தாவும் பாட்டியும் ஆச்சரியமாக அவனை பாத்தாங்க.
அவன் யோசிச்சான்.
‘லக்கி, ஃபனி, பிளாக்கி, ப்ரௌனி, பர்பி, மினி’
‘ஆ. பேரு கிடைச்சிருச்சு அதுக்கு பேரு மினி’ என்று சொன்னான்..
பாட்டி சொன்னாங்க ‘அதுக்கு தமிழ் தானே பிடிக்கிது அதனால தமிழ்லயே பேரு வை.’
அவன் யோசிச்சுகிட்டே பக்கத்து அறைக்கு போனான். அங்கே அவனோட அக்கா மைதிலி படிச்சிட்டிருந்தாங்க.
உடனே அவன் பாட்டி கிட்ட ஓடிப்போய் அந்த பறவையின் பேரோட முதல் எழுத்து ‘மை’ அப்படின்னு சொன்னான்.
பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு ‘நான் தானே அதுக்கு பேரு வைக்கிறேன். அதனால ரெண்டாவது எழுத்து ‘நா’’ என்று சொன்னான்.
மறுநாள் தோட்டத்துல காத்திருந்தான். அந்த பறவை வந்ததும் அதுகிட்ட ‘உன்பேர் ‘மைநா‘’ அப்டின்னு சொன்னான்.
அந்த பறவை ‘ஐ என்னோட பேரு மைநா… மைநா… மைநா… மைனா’’ அப்டின்னு சொல்லிட்டே சந்தோசமா அதோட கூட்டத்தை தேடிப் பறந்து போச்சு.
அதோட குடும்பத்தாரை பார்த்து நமக்கு குட்டிப்பையன் ஒரு பேரு வைச்சிருக்கான். இனிமேல் நம்மளோட பேரு ‘மைனா’ அப்படின்னு சொல்லிச்சு.
‘என் பேரு மைனா…
அவன் பேரு மைனா…
அவ பேரு மைனா…
எங்க பேரு மைனா…’
எல்லா பறவைகளும் சந்தோசமாக பாட்டுப் படிச்சாங்க.
உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற மரத்துல மைனா இருந்திச்சின்னா, நீங்களும் மைனான்னு கூப்பிட்டு பாருங்க அது உங்கிட்ட பேசும்.
- ரமணி
(சுட்டி படைப்பாளி)
Nice story. Best wishes to the little writer.