(1)
அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய சம்பவத்தைக் கலைத்துவிட்டு எழுந்து உட்கார்ந்திருந்தேன். அந்த நேரத்தின் அத்தனை அசதியிலும் நான் ஐந்து நிமிடங்களைக் கடந்தும் உட்கார்ந்தேதான் இருந்தேன். காரணம், என்னை பலவீனப்படுத்திவிட்ட அந்தக் கனவு மறுபடியும் என்னால் தாக்குப்பிடித்து ஓட முடியாத தூரத்திற்கு விரட்டுமோ என்கிற அச்சம்தான். அப்போது நேரமானது இரண்டிலிருந்து மூன்றுக்குள்ளாக இருக்கலாம். கைகளை தரையில் ஊன்றியபடி மண்டையைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்த நான், எதேச்சையாக சன்னல் பக்கமாகத் திரும்பினேன். அங்கே கொழுத்த உருவமொன்று என் வலது பக்கமிருந்த சன்னலை வேவுபார்த்துக் கொண்டிருந்தது. சுருள் முடியுடன் இருந்த அவனது நிழலை வீதியில் எரியும் சோடியம் விளக்கு எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. மெல்ல அவன்தன் கையை சன்னலுக்குள் நுழைத்துத் துழாவத் தொடங்கினான். அச்சமயத்தில் நான் நினைத்தது என்னவென்றால்… கட்டையைச் சாய்த்து கண்ணை மூடியிருக்கலாமே என்றுதான். ஆனால் என் வீரத்தை சந்தேகத் திற்குட்படுத்திவிட்ட இந்த நேரத்தில் அதைப்பற்றி நான் சிந்திப்பதற்கில்லை. மெல்ல அவனது கையைப்பற்றி குசலமாகக் குலுக்கத் தொடங்கிவிட்டேன். அன்றைய படுக்கைக்கு முன்னதாக நான் கொழுப்பும் புரதமும் மிகுந்த ஒரு விநோதப் பச்சினியை ஒரு மொக்கு மொக்கியிருந்ததால் பலமான என் பிடியிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்கொள்ள படாதபாடுபட்டான். அவனது மொத்த சக்தியையும் என்னுடைய கைக்குள் அடக்கிவிட்ட இறுமாப்பு எனக்கு. அவனது தேவை எதுவென விசாரிக்காமல் அனுப்புவதற்கு எனக்கு மனமில்லை. ஆகவே, அவனுடைய முழங்கையை உள்ளே இழுத்து சன்னல் கம்பியோடு மடக்கிப் பிடித்துக்கொண்டேன். எங்களிருவருக்கும் கத்திக் கூச்சல்போட்டு ஊரையே கூட்டிவிடக்கூடாதென்கிற ஒப்பந்தம் இருந்ததுபோல. அவன் கூச்சல் போடாததற்கான காரணத்தை அவனறிவான். ஆனால் அவன் தன்னை விடுவித்துக்கொள்வதற்காக தன்னுடைய இன்னொரு கையை பயன்படுத்தாததன் காரணத்தை நான் அறிந்தபோது, அவனை நான் விடுவிக்கக்கூடிய ஆலோசனையிலிருந்தேன். நான் எதிர்பாராத அந்த நேரத்திற்கு அலாரம் அடித்ததும் எழுந்து உட்கார்ந்தேன்.
இப்போது என்னுடைய ரேடியம் கடிகாரத்தில் மூன்று மணி ஒருநிமிடம். அலாரம் நின்றுவிட்டது. என்னை பலவீனப்படுத்திய சம்பவத்தை உதறித்தள்ளிவிட்டு எழுந்த எனக்கு, அதை அசைபோட நேரமில்லை. நான் என்னுடைய வேலைக்குத் தயாராக வேண்டும். இன்னும் ஒருமணி நேரத்திற்கு எனக்கும் நொடி முள்ளுக்கும் ஏக போட்டியாகிவிடும். என் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரயில் நிலையத்திற்குச்சென்று நாலரைக்குக் கிளம்பக்கூடிய ரயிலைப் பிடிக்கவேண்டும். அங்கிருந்து அறுபத்து நான்கு கிலோமீட்டரில் என்னுடைய பணிமனை இருக்கிறது. ஆறு மணி ஷிஃப்டிற்கு நான் தயாராகிக்கொண்டிருந்தேன். என்னுடைய காலை வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டே என்னுடைய டூ வீலர் சாவியைத் தேடினேன். வழக்கமாக நான் வைக்கக்கூடிய இடத்திலில்லாமல் நாட்காட்டியின் தலையில் தொங்கியது. அதை எடுத்துக்கொண்டு நேற்றைய தாளைக் கிழித்துக் கசக்கி வீசியபடி இன்றைய தாளை நிதானமாக உற்று நோக்கியபோதுதான் என் மடத்தனம் வெளிப்பட்டது. நான் எதை நொந்துகொள்வதெனத் தெரியவில்லை. என்னுடைய மறதி குறித்தா? அல்லது ஆர்வக்கோளாறு குறித்தா?
ஆமாம். இப்போது என்னால் கிழித்தெறியப்பட்ட கிழமைக்குப் பிந்தைய நாள் எனக்கு வார ஒய்வு. அதாவது இன்றைக்கு.
எப்போதுமே நான் ஓய்வு நாளைக்கு முந்தைய இரவில் மதுவிடுதிக்குள் நுழைந்துவிடுவேன். அங்கே என்னைக் கண்டதும் எனக்குப் பழக்கப்பட்ட பரிசாரகன் என் மேசைக்குக் குளுமை இல்லாத ‘ஹெய்னெகன்’ பீர் கொண்டுவந்து வைப்பான். அதை நான் மிடறுமிடறாக நிதானமாக உள்ளே இறக்கத் துவங்கியதும் ஒரு பாக்கெட் வில்ஸ் சிகரெட்டும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பழங்களை கண்ணாடி கிண்ணத்தில் கொண்டுவருவான். அறுநூற்று ஐம்பது மில்லிலிட்டர் அளவு கொண்ட அந்த பீர் பாட்டிலை நான் காலிசெய்வதற்கு ஒருமணி நேரத்திற்கும் மேலான நேரமெடுக்கும். அதன் பிறகுதான் நான் என் அறைக்குத் திரும்புவேன்.
நான் தாராளமான சம்பளக்காரன் இல்லையென்பதால் மாதக் கடைசியில் மது விடுதியின் பக்கம் திரும்புவதில்லை. நேற்றைய மாலையில் அப்படித்தான் நான் என் அறைக்கு நேரத்திலேயே திரும்பியிருந்தேன். என்னைச் சுற்றிலும் மதுவாடை இல்லாத பலமுறை நான் இப்படித்தான் என்னுடைய ஓய்வு நாட்களிலும் அலாரம் வைத்து வேலைக்குக் கிளம்பியிருக்கிறேன். பிறகு, வெளியில் சொல்வதற்கில்லாத என் மடத்தனத்திற்காக தலையிலடித்துக்கொண்டு போர்த்திப் படுத்துக்கொள்வேன். ஆனால் இன்றைக்கு எனக்குத் தூக்கம் வருவதாக இல்லாததால் டி.வி.யைத் தட்டி விட்டுக்கொண்டு ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டிருந்தேன். எனக்கு எதிலும் நிலைக்கவில்லை. அத்தனையும் அலுப்பூட்டியது. அதை அனைத்துப்போட்டு விட்டு, முகநூல் தளத்திற்கு லா-கின் செய்து அங்கே பதினைந்து நிமிடங்களைக் கடந்தும் மேய்ந்துகொண்டிருந்தேன். அதிலே இனிய நண்பரொருவர் எனக்குத் தனிச் செய்தியாக கேள்வியையோ கோரிக்கையையோ வைத்திருந்தார். ‘அன்பின் இனிய நண்பருக்கு வணக்கம். என்னுடைய புத்தகத்தை வாசித்தீர்களா?’ நான் அவருக்குப் பதிலளித்தேன். ‘விரைவில் நண்பரே’ பிறகு, லாக்-அவுட் செய்தேன்.
அத்தனைப் பரிச்சயமில்லாத அவர் தன்னுடைய புத்தகம் குறித்து அவருடைய பக்கத்தில் விளம்பரப்படுத்தியிருந்ததை வைத்து நான் கேட்டிருந்தேன். ‘உங்கள் புத்தகத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசம். அதன் அர்த்தம் என்ன?’ அவர் எனக்குத் தகுந்த விளக்கமளித்ததோடு, என்னுடைய விலாசத்தைக் கேட்டார். அப்போது நான் பதிலளிக்கவில்லை. இரண்டொரு நாட்களில் மறுபடியும் விலாசம் கேட்டிருந்தார். நான் எதற்கு என்றேன். அவர் தன்னை அறிமுக எழுத்தாளர் என்று பதிலனுப்பினார். பிறகு, என்னுடைய சில பதிவுகள் குறித்து நுட்பமாகப் பேசினார். அதன்பிறகு எனக்கு விலாசம் கொடுப்பதில் தயக்கமில்லை. நான் விலாசம் அனுப்பிய இரண்டாவது நாளில் அவருடைய புத்தகம் என் வீடுதேடிவந்திருந்தது.
அவர் மறுமுறை கேட்பதற்குள் நான் படித்துமுடித்துவிடுவதுதான் என்மீதான அவர் அன்பிற்கு நான் செய்யும் நேர்மை அல்லது மரியாதை. நான் மேசையிலிருந்த அந்தப் புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். முதல் பக்கத்தில் இப்படி எழுதிக் கையெழுத்துப் போட்டிருந்தார். ‘அன்பின் இனிய நண்பருக்கு…’ முன்னுரையை உழுதுவிட்டு உள்ளே நுழைந்தேன்.
(2)
‘வெறும் பத்துப் பதினைந்து நாள் குட்டியை அவள் என் கையில் வைத்த போது நான் முகம் சுழிப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லாத நாள் அன்று. அந்த செப்டம்பர்-19-ல் அவள் தன்னுடைய பிறந்தநாள் என்று சொல்லியிருந்தாள். இதற்கு முந்தையவருட அவளுடைய கொண்டாட்டமுறை பற்றி எனக்குத் தெரியாது. குறிப்பிட்ட இந்த நாளில் அவள் மரக் கன்றுகளை நட்டிருக்கக்கூடும். அல்லது இது இருபத்து நான்காவது பரிசளிப்பாகவும் இருக்கலாம். அப்போது என் கையில் பூர்வீகம் உறுதிசெய்யப்படாத தெருநாய் என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த முசுமுசுத்தக் குட்டியொன்று உருண்டு புரண்டுகொண்டிருந்தது.
நீங்கள் நினைப்பது சரிதான். அவள் எனக்கு நாய்க்குட்டியை பரிசளித்தாள்! எனக்கேன் இதைப் பரிசளிக்கிறாய் என்று நான் கேட்பதற்கில்லை. காய்ந்துபோன நுங்கு மட்டைக்குள் மொய்க்கும் எறும்புக் கூட்டங்களை என் கையில் அள்ளிக் கொட்டினால்கூட நான் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். முறைப்படி நான்தான் இந்த நாளில் அவளுக்கு எதையாவது கொடுத்திருக்க வேண்டுமில்லையா?
ஆனால் அன்றைக்குவரையிலும் நான் இரண்டுவேளை பசிக்கான ஓட்டக் காரனாக இருந்தேன். என் குடும்பத்திலுள்ள ஏனைய நான்குபேரும் என்னுடைய ஓட்டத்தை நம்பித்தான் அதே இரண்டு வேளைக்காகக் காத்திருந்தனர். போகவும், பூக்களைப் பரிசளிக்கும் எண்ணமில்லாத என்னிடம் நாய்க்குட்டியோ பூனைக் குட்டியோ கிடையாது. பணச் செலவுகள் ஏதுமில்லாமல் அவைகளில் ஏதோ வொன்றை யாருடைய அனுமதியுமில்லாமல் எங்கிருந்தாவது தூக்கிக்கொண்டு வந்திருக்கமுடியும். ஆனால் நான் அந்நியமான மனிதர்கள் உள்ளிட்ட எந்தப் பிராணிகளையும் தொட்டுப்பழகியதில்லை. இந்த ஒவ்வாமை குணம் என்னுடைய பள்ளி நாட்களிலிருந்து எனக்குத் தொற்றிக் கொண்டதாக நினைவு.
இப்போது இந்த தேன் நிறக்குட்டி தன் மழலையான குலைப் பொலியுடன் என் உள்ளங்கையைப் பிராண்டியபடி என் கையின் மேற்புறங்களை உமிழ்நீர் ஒழுக நக்கிக்கொண்டிருக்கிறது. அதன்மீது நாயினுடைய பிரத்தியேக நாற்றமில்லை. நான் அதை என் மூக்கினருகே கொண்டுசென்றபோது எனக்கு ஒருமுறை பழக்கப்பட்ட வாடைவீசியது. என்னால் சரியாக அந்த வாடையை நினைவில் கொண்டுவர முடியவில்லை. பிறகு நான், மறுபடி மறுபடி என்னுடைய மூக்கை உறிஞ்சிக் கண்டு பிடித்தேன். என் ஒவ்வாமையைக் கருத்தில்கொண்டு அவள் அந்தத் திரவத்தை ஊற்றிக் குளிப்பாட்டியிருக்கவேண்டும். என்னதான் அந்தக் குட்டியின் மேற்பூச்சுகள் பலமாக இருந்தாலும் என் தோலிலுள்ள மயிர்க்கால்களெல்லாம் நட்டுக்கொண்டு நின்றன.
என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். காற்றில் பறக்கும் தற்போதைய ஈரப்புழுதியின் குளுமைக்கும் என் உடலின் இந்த ஒவ்வாமை உணர்வுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. இப்போது என்னுடைய எத்தனைப் பெரிய சௌகர்யச் சிக்கலையும் நான் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். எதன் பொருட்டும், நான் என்னுடைய அவசர வேலைகளை முன்னிட்டும்கூட இந்தக் குட்டியை இப்போது கீழே இறக்கி விடமுடியாது. காரணம், அவள் கோவிக்கக்கூடும் என்பது மட்டும்தான்.
ஆனால் இதை இறக்கிவிடாமல் அவளுக்கென நான் கொண்டு வந்திருக்கும் செலவில்லாத, அதே நேரத்தில் விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசை என்னால் கொடுப்பதற்கில்லை. மறுபடியும் நீங்கள் சரியாகத்தான் கணிக்கிறீர்கள். இன்றைய நாளில் அவள் என்னிடமிருந்து எதிர்பார்த்த அன்பானதொரு முத்தத்தைத்தான் நான் கொண்டு வந்திருக்கிறேன்.
நாங்கள் பழக ஆரம்பித்திருந்த இந்த ஒரு வருடத்திற்குட்பட்ட நாட்களில் நான் அவளுக்கொன்றை கொடுத்துவிட பல சந்தர்ப்பங்களை உண்டாக்கியிருக்கிறேன். அவையெல்லாம் முறியடித்த அவள், நேற்றைய பொழுதுதான் அதற்கான நாள் இன்றெனச் சொன்னாள். அதன் பிறகு தான் நான் இந்தப் பரிசு ‘விலைமதிப்பற்றது’ என்கிற முடிவிற்கு வந்தேன்.
அன்றைக்கு என் பரிசை வாங்கிக்கொள்ள அவளே தகுந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தாள். ஆமாம். அது விலைமதிப்பற்ற ஒன்றுதான். ஆனாலும் அவள் ஒன்றுக்குமேல் என்னை அனுமதிக்கவில்லை. அப்போது நான் மென்மையானதொரு மூர்க்கத் தனத்திற்கு முயன்று பார்த்தேன். என்னை அவள் தள்ளிவிட்டதன் மூலம் மறுபடியும் அது விலை மதிப்பற்றது என்பதை எனக்கு உணர்த்தினாள்.
எங்களுக்குள்ளான இந்தக் கூத்து அரங்கேறியது என் வீட்டிலோ அவள் வீட்டிலோ அல்ல. நாங்கள் வேலை பார்க்கக்கூடிய எங்களது மருத்துவமனையின் மருந்து கிட்டங்கியின் பின்புறமுள்ள மரங்களடர்ந்த திறந்தவெளியில்தான் நடந்தது. மதிய உணவு இடைவேளையின்போது ஒதுங்கிய நாங்கள் அந்த ஒருமணி நேரத்தின் ஒருநொடியைக்கூட விட்டுவைக்காமல் கொண்டாடித் தீர்த்தோம்.
நாங்கள் மறுபடியும் வேலைக்குத் திரும்பக்கூடிய கடைசிநொடியில் என்னிடம் அவளொரு உண்மையை உடைத்தாள். அவளுக்கு நான் இரண்டாவது காதலனாம். எனக்குச் சட்டெனத் தூக்கி வாரிப்போட்டது. மூன்று… நான்கெனத் தொடர்வாளோ என்கிற பயம் ஒருபக்கம். எனக்கும் அவள் இரண்டாவது காதலிதான் என்பதை நான் புதைத்துவிட்டபோது அவள் போட்டுடைத்ததும் அவளுடைய அந்த நேர்மையும் வீரமும் எனக்குப் பிடித்துவிட்டது. அந்த ஈர்ப்பில் அல்லது அதன் தொடர்ச்சியில்தான் அவள் என்னை இப்போது வரையில் திட்டித்தீர்ப்பதற்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. அவள் காரணமின்றி எதையும் பேசக்கூடியவள் அல்ல.
இப்போது முதலாமவளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
நீங்கள் நினைக்கலாம். சம்பந்தமில்லாமல் இப்போது எதற்கு அவளைப் பற்றிச் சொல்லப்போகிறானென்று.
அந்த முடிச்சை நீங்கள் பின்னால் அவிழ்த்து விடுவீர்கள்.
அப்போது நாங்கள் பள்ளியின் இறுதியாண்டில் இருந்தோம். எங்கள் விசயம் பள்ளிக்கூடம், ஊர், வீதியென காற்றைப் போலப் பரவிவிட்டன. மிகச் சமீபமாக பேசத்தொடங்கியிருந்த எங்களைப் பற்றிய செய்தி, இத்தனை வேகமாகப் பரவுமென நாங்கள் நினைக்கவில்லை. இத்தனைக்கும், எங்களுக்குள் ஏற்பட்டுவிட்ட இந்த நட்பானது, அத்தனை ஆழத்திற்கெல்லாம் ஊடுருவியிருக்கவில்லை.
ஒருநாள் இந்தச் செய்தி அவளுடைய வீட்டிற்குள் நுழைந்ததற்குப் பிற்பாடு அவள் வெளியே வரவில்லை. பள்ளிக்கூடம் வருவதோடு நிறுத்திக்கொண்டாள். அந்தஸ்தில் நாங்கள் இரண்டு குடும்பமும் சம அளவில்தான் இருந்தோம் என்றாலும், சில உள்ளூர் ஏற்றத் தாழ்வுக்கு அவளது குடும்பம் பலியாக இருந்தது.
பின்னொரு நாளில் நாங்கள் பள்ளிக் கூடத்தில் இதுகுறித்துப் பேசிப் பிரிந்து விட்டோம். எங்கள் நட்பில் ஆழமில்லை என்றாலும் அந்த நாளில் நாங்கள் இருவரும் அழுதபடியேதான் பிரிந்தோம். ஆனால் அப்போதுகூட அவள் கேட்டாள். வேறு எங்காவது கண்காணாமல் போய்விடலாமா என்று. நான்தான் மறுத்துவிட்டேன். நான் சரி என்றிருந்தால்கூட அவள் மறுத்திருக்கக்கூடும். அவள் கேட்டிருந்த அந்தக் கேள்வியானது இயலாமையைத் தோற்கடித்துப் பார்த்துவிடக்கூடிய முனைப்புதான்.
பிறகு, அந்த ஆண்டின் படிப்பு முடிந்ததும் அவளை, உள்ளூரிலுள்ள உறவுக்காரப் பையனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர். இவளைவிட ஐந்தாறு வயது மூத்தவன். அழகிலோ உடற்கட்டிலோ சோடையானவன் கிடையாது. மிகப் பொருத்தமான இணை. கூடவும், அவன் என்னைக் காட்டிலும் மிக நல்ல மனிதன்.
அந்த நல்ல மனிதன் எங்களுடைய மாநகரத்தின் தொழிற்பேட்டையிலுள்ள ரொட்டி தயாரிக்கும் நிறுவனமொன்றில் போதுமான சம்பளத்தில் இருந்தான். அவர்களுக்கு ஒரேயொரு மகள். அவளது பெயர், என் பெயரின் முதலெழுத்தில் தொடங்கக்கூடியது. அப்போது அவளுக்கு ஏழு வயதுதான். மிகவும் பிடிவாதக் காரியான அவள், ஒருநாள் தன்னுடைய அம்மாவை நச்சரித்து தனக்குப் பிடித்த எதையோ வாங்கித்தரச் சொல்லிக் கடைக்கு அழைத்திருக்கிறாள். அம்மாக்காரியான இவள், உன் அப்பா வந்ததும் உனக்கு வேண்டுமானதைக் கேட்டுவாங்கிக்கொள் என்றுவிட்டாள்.
அன்றைக்கு மாலையில் அவர் ஆறு மணி சுமாருக்கு வேலையிலிருந்து திரும்பியதும் தன் மகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டாள். அதன்பிறகு அவர் தன் மகளை சமாதானப்படுத்தி உடனடியாக அவளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடைக்குக் கிளம்பிவிட்டார்.
நேரமானது, ஏழு, ஏழரையென நகர்ந்துகொண்டே இருந்தும் அவர்களிருவரும் வீடு திரும்பியபாடில்லை. இவள் வழக்கம்போல ‘ஒரெடத்துக்கு போனமா… வந்தமான்னு இல்ல…’ அவர்களை அலுத்துக்கொண்டாள்.
எட்டு மணி சுமாருக்கு அந்தத் தெருவிலுள்ள ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து இவளிடம் அந்தத் தகவலைச் சொன்னான்.
‘உன் கணவன் உங்கள் குழந்தையைத் தொலைத்துவிட்டான். மொத்தமாகத் தொலைத்துவிட்டான். திரும்பக்கிடைக்காத இடத்தில் தொலைத்துவிட்டான். ஆமாம் அவள் இல்லாமலாகிவிட்டாள்’
நான் புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன்.
(3)
ஒரு குழந்தையின் மரணச்செய்தியைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லவே இல்லை. அதிலும் இந்த அதிகாலைப் பொழுதில் யாரால் இப்படியொரு செய்தியைத் தாங்கிக்கொள்ளமுடியும்? எனக்கு இந்தக் கதையை எழுதியவன் யாரென்ற ஆத்திரம் தான் வந்தது. இன்னொருபுறம், ஒரு கதையின் சம்பவம் நம்மை ஏன் இத்தனை வதைப்புக்குள் தள்ளுகிறது…? ஆத்திரப் படுத்துகிறது…? எழுத்தில் உணர்வுகளைக் கிளர்த்தக்கூடியவன் கில்லாடிதான்.
இப்படியாக நான் கண்டதையும் முணுமுணுத்துக்கொண்டே மேசையிலிருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையின் குறியீட்டிய ஓவிய நேர்த்தி என்னை வேறுவிதமான யோசனைக்குள் இழுத்தது. இந்தத் துயரத்திலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதற்காக நான் அதன் போக்கிற்கு ஒத்துழைத்தேன்.
என்னுடைய தற்போதைய வேலைக்கு முன்னதாக நானொரு சொல்லிக் கொள்ளும்படியான தகுதியுடன், அல்லது நல்ல பெயருடன் விளங்கும் அச்சக மொன்றில் பணியாற்றியிருக்கிறேன். அங்கே நான் கணினியில் வடிவமைப்பு வேலை செய்துகொடுக்கக்கூடியவனாக இருந்தேன். அந்த வேலையில் நான் மிகவும் கெட்டிக்காரனெனச் சொன்னார்கள். அதில் எனக்கு மூன்றுவருட அனுபவமுண்டு. அந்தவகையில் நான் இந்தப் புத்தகத்தை மறுபடியும் கையிலெடுத்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயத் தொடங்கினேன். வடிவ நேர்த்தியைப் பொறுத்த வரையில் நான் குறைசொல்ல ஒன்றுமில்லை. வெறும் நூற்றைம்பது பக்கத்திற்குள்ளான இந்தப் புத்தகத்தின் முதுகுப் புறத்தைத் தேய்த்துக்கொடுத்தேன். பிசிருகளற்ற ஒட்டல். பப்புல்ஸ் இல்லை. மேட் பினிஷிங் அட்டை. உள்ளே தரமான மேப்லித்தோ தாள். ஓர ஒழுங்குகளையும் பிசிருகளின்றி அளவெடுத்து பிரம்மாதமாக வெட்டியிருந்தனர். அத்தனைக்கும் இயந்திரமென்றாலும் சொதப்பலில்லாமல் வருவதிலும் சிக்கலுண்டு. உள்ளே ஃபூட்-டரில் ஆசிரியர் பெயர் மற்றும் புத்தகத்தின் பெயரில் மட்டும் இன்னும் டார்க் ஏற்றியிருக்கலாம். பக்கத்திற்குப் பக்கம் பெருவாரியான புத்தகங்களிலும் காணப்படும் பிரதான குறையான ஜஸ்டிஃபை-யின் சிக்கல் இதிலேயும் இருந்தன.
ஒருவழியாக, நான் என்னுடைய இரண்டு வருடத்திற்கும் முந்தைய நாட்களுக்குள் நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தேன். அப்போது நான் முற்றிலும் வெளியேறியிருக்கவில்லை. என் கையிலிருந்த புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து முன் அட்டைக்கும். முன் அட்டையிலிருந்து பின் அட்டைக்குமாக அதன் பக்கங்களை சீட்டுக்கட்டுகளைப்போல கலைத்துக்கொண்டிருந்தேன்.
நான் என் முந்தைய காலக்கோட்டுப் பாதையிலிருந்து முற்றிலும் வெளியேறிக் கொண்டு இருந்த போது என் யோசனை மறுபடியும் திசைமாறியது. அதாவது சற்றுமுன்னர் நான் படித்த அந்தக் கதையில் அறிமுகமான, நான் ஒருபோதும் பார்த்தேயிராத அந்தக் குழந்தையையே சுற்றிக்கொண்டிருந்தது. ‘எழுத்தில் உணர்வுகளைக் கிளர்த்தக்கூடியவன் பெரும் கில்லாடி’ மறுபடியும் முணுமுணுத்துக்கொண்டேன். பிறகு, நான், நிவாரணம் தேடி என் பார்வையை சன்னலோரமாகத் திருப்பினேன்.
புத்தகத்தை ஆரம்பித்தபோது இருந்த கருநிற வானம், தற்போது சாம்பல் நிறத்திற்கு மாறியிருந்தது. மேலும், சூரியன் மேலேறுவதற்கான வாய்ப்புகளற்ற வானத்திலிருந்து மிதமான ஈரப்புழுதி முடிவின்றி காற்றில் பறந்தபடியே இருந்தன. என் கணிப்பிற்கு உட்பட்டவகையில் இன்றைய காலநிலையில் இதற்குமேல் மாற்றமிருக்க வாய்ப்பில்லை. ஆக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் இந்தக் காலநிலை மாற்றமானது, தற்போதைய மார்ச் மாதத்தை செப்டம்பர் மாதமாகக் கணக்கிலெடுத்துக் கொண்டுவிட்டது?
இந்த மிதமான பொழுதில் நான் ஒரு தேநீரை நாடுவதென்பது இயல்பானது தான். சட்டென நான் நாற்காலியைப் பின்னால் தள்ளிவிட்டு எழுந்து லைட்டை அணைத்துவிட்டு சமையல்கட்டை நோக்கி நடந்தேன். அங்கே ஏலக்காய் கலந்த சூடான தேநீர் தயார் செய்தேன். எப்போதுமே எனக்கு இருநூறு மில்லிதான் கணக்கு. இந்த அளவானது நாளொன்றுக்கு எத்தனைமுறை என்பது கணக்கில் வராது. நான் தயாரித்த இந்தத் திராவகத்தை வழக்கமாக உறிஞ்சக்கூடிய கோப்பையில் நிறைத்துக் கொண்டேன். எஞ்சியதை ஃபிளாஸ்கில் ஊற்றி மூடிவைத்துவிட்டு, சன்னலருகே கிடந்த நாற்காலிக்கு வந்த நான், தேநீர் கோப்பையை என் இரண்டு கையாலும் ஏந்திப் பிடித்துக்கொண்டு முழங்கையை மேசையின்மீது முட்டுக்கொடுத்தவாறு உறிஞ்சத் தொடங்கினேன். என் முதல் உறிஞ்சலில் கிடைத்த அந்த வாடையானது என்னை எனது கல்லூரி நினைவிற்கு இழுத்துச் சென்றது. அடுத்தடுத்த உறிஞ்சலில் அங்கிருந்து வெளியேறிய நான், மேசையிலிருந்த ரிமோட்டை எடுத்து மறுபடியும் டி.வி.யை இயக்கினேன்.
சார்பற்ற செய்திகளைக் கேட்பது இங்கே அரிதாகிவிட்டதுதான் என்றாலும் தினசரி செய்திகளைக் கேட்காமல் இருக்கமுடியாது. ஆகவே நான், என் விருப்பத்திற்கு அல்லது நான் வழக்கமாகப் பார்க்கக்கூடிய அலைவரிசையில் செய்தியைக்கேட்க முடிவெடுத்தேன். என்னுடைய மாநிலத்திற்கும் அண்டை மாநிலத்திற்கும் முடிவுறாத நீர்ப் பங்கீட்டு விவகாரம் தற்போதைய தலைப்புச் செய்தியாகியிருந்தது. அதாவது, நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னரும்கூட!
அதுகுறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டலில் அமையவேண்டிய வாரியம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை ஒருவர் ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவிற்கு மத்திய அரசின் தலையீடு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்கிற குற்றச்சாட்டை பல கட்சியிலிருந்தும் வந்திருந்தவர்கள் ஒற்றைக் கருத்தாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இந்தச் செய்தி முடிவதற்குள் என் கோப்பையிலுள்ளதை நான் முடித்திருந்தேன்.
செய்திகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சிரியாவில் நடந்துமுடிந்த உள்நாட்டுப்போர் குறித்த செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தார் செய்தியாளர். சன்னல் பக்கமாகத் திரும்பியிருந்த நான் என்னையும் அறியாமல் சட்டென டி.வி. க்குத் திரும்பினேன். காணொணாத் துயரம் அது. கொல்லப்பட்டது பெரும்பாலும் குழந்தைகள். அந்தக் காணொளியைப் பார்ப்பதற்கு என்னால் முடியாது. இந்தநாள் எனக்கு சூனியமாகிவிடக் கூடிய அச்சத்தை இரண்டாவது முறையாக வெளிப்படுத்தி விட்டது. நான் என்னுடைய ஓய்வு நாளை நிம்மதியான பொழுதாகக் கழிக்கவே விரும்புவேன். ஆனால் இன்றைக்கு நேரெதிரான பாதையில் போனது. நான் விடப்போவதில்லை. இந்த நாளை நிம்மதியாகக் கழிக்காவிட்டால் நாளைக்கு எனக்குச் சிரமமாகிவிடும். சட்டென டி.வி.யை அணைத்துப் போட்டுவிட்டு எழுந்து அறையின் நான்கு மூலைக்குமாக உலாத்தினேன். பிறகு, என் யோசனைக்குட்பட்ட ஒரு முடிவிற்கு வந்தேன். அதாவது, இன்றைக்கு முழுக்க வீட்டில் தங்குவதில்லை. வேலைக்குக் கிளம்பியிருந்ததின் பொருட்டு எனக்கு நிர்வாகத்தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருந்த சீருடைக்குமேலேயே மழைக்கோட்டை உடுத்திக்கொண்டு மாடியிலிருந்து இறங்கினேன். பிறகு ஏதோ யோசனையில் மறுபடியும் மேலே ஏறிய நான், கதவைத் திறந்து மேசையிலிருந்த புத்தகத்தை எடுத்து மழைக்கோட்டின் உள்பக்கமாக செருகிக்கொண்டு கதவைப் பூட்டினேன். அப்போது என் காலைச் சுற்றிவந்த என் சமீபகால வளர்ப்பை அந்நியமற்ற உரிமையுடன் அதன்மேல் படாதவாறு எத்தினேன். அது மழையில் நனையாதபடிக்கு சன்னல் மேடையில் ஏறிக்கொண்டு நாக்கைச் சுழற்றி தன் மீசையை நக்கிகொண்டே என்னை முறைத்தது.
இன்றைக்கு முழுக்க வீட்டில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்த எனக்கு, எங்கே போவதென்கிற எந்த முன்முடிவுகளுமில்லை. நான் உள்ளூர் நடப்புகளுக்கு மிகவும் அந்நியப்பட்டவன் என்கிற குறையுள்ளவன். இப்படியான ஓய்வு நாட்களில் எங்கேயாவது தேநீர் கடையில் ஒதுங்கும்போதெல்லாம் அந்தக் குறையிலிருந்து நான் முற்றிலும் விடுதலையாகியிருக்கிறேன். ஆகையால் நான் அப்படி ஏதாவதொரு இடத்தில் ஒதுங்கலாமென்ற யோசனையுடன் மாடிப் படியிலிருந்து கீழ் வீட்டின் திண்ணைப் படியையும் வெளிக்கேட்டையும் இணைக்கக் கூடிய செந்நிற ஓடு பதிக்கப்பட்ட தரையில் நடந்தேன். ‘T’ வடிவத்திலிருந்த அந்த ஓட்டுத் தடத்தில் எண் ‘7’ஐப் போல இடது பக்கமாகத் திரும்பினால் தெருக்கேட்டைத் திறந்துகொண்டு வெளியில் போய்விடுவேன். அனால் கீழ் வீட்டின் உள்ளேயிருந்து கனைப்பொலியுடன் கூடிய என் பெயர் உச்சரிக்கக் கேட்டதற்குப் பிற்பாடு நான் வலது பக்கமாகத் திரும்ப வேண்டியிருந்தது.
அந்த வீட்டில் கணவனை இழந்த பெண்ணொருத்தி தன்னுடைய ஒரே மகனுடன் தன் கணவனுடைய அம்மாவின் பாதுகாப்பில் வசித்து வருகிறாள். அந்தப் பெண், பிரபலமான மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், ஏறத்தாழ தலைமைப் பொறுப்பில் இருக்கிறாள். விசேசம் என்னவென்றால்… என் அம்மாவும் அந்தப் பெண்ணின் மாமியாரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரே வகுப்பறையில் படித்தவர்கள். அந்தச் சலுகையிலோ அல்லது சிபாரிசிலோதான் எனக்கு இந்த வீடு கிடைத்திருந்தது.
நான் அந்த வீட்டின் வாசற்படியின் முன்னதாக என்னுடைய தோல் செருப்பை விட்டுவிட்டு சலவைக்கல் பாவியிருந்த மூன்று படிகளின் மீதுமிருந்த ரப்பர் மிதியடியில் நடந்து திண்ணையில் விரிக்கப்பட்டிருந்த கயறு மிதியடியை காலால் தடவிக்கொண்டே நின்றேன். அந்தப் பெரிய திண்ணையுடன் சம்பந்தப்பட்டிருந்த மாடிப்படியின் சாய்வான மேற்சுவருக்குக் கீழே ஒரு பிரம்பு ஊஞ்சலில் ஆடியபடி மறுபடியும் என் பெயரை உரிமையான தொனியில் அழைத்தார் அந்தப் பெண்ணின் மாமியார். நான் அவருக்கு முன்னதாக என் உடலை மரியாதை நிமித்தமாக வளைந்து கொடுத்துக்கொண்டேன்.
சாம்பல் அல்லது வெளிர் நீல நிறத்திற்கு மிக நெருக்கமான காட்டன் புடவையில் இருந்தார் அவர். ஊடுருவிப்பார்க்கக்கூடிய கண்கள். மேலோட்டப் பார்வைக்கு இரண்டு புருவமேடும் சமநிலையற்றிருப்பது கவனத்திற்கு வராது. அடர்த்திக் குறைவான மண்டையில் வகிடெடுக்கப்பட்டிருந்த மயிர்க்கால்களின் வெள்ளையை ஒதுக்கிவிட்டும், இன்னும் முப்பது நாற்பது வயதை குறைத்துவிட்டும் பார்த்தால், சமயத்தில் என் மனைவியை நினைவுபடுத்தக்கூடிய முகவெட்டுடையவர்.
நான் உள்வாங்கிக்கொண்ட வகையில் அதட்டலாகப் பேசக்கூடியது அவரது இயல்பு. என்றாலும்கூட தன் கருத்தைத் திணிக்கவோ கட்டாயப்படுத்தவோ மாட்டார். ஆழமாகப் புரிந்துகொண்டால் அவருடன் சிக்கலின்றிப் பயணிக்கலாம். அவருடைய மருமகளுக்கு அந்தப் பக்குவம் இருந்துதான் அவர்களது வண்டி ஓடுகிறதென நினைத்துக்கொள்வேன். அவர் அங்கிருந்த நாற்காலியில் என்னை உட்காரச்சொன்னார். நான் உட்கார்ந்தேன். அவர் என்னிடம், இந்த நேரத்திற்கு உன்னைப் பார்க்கமுடியாதே என்றார். நான் வாயைக் கோணியபடி சிரித்தும் சிரிக்காததுமாய் இன்னதென புரிந்துகொள்ளமுடியாத வகையில் மண்டையை ஆட்டிக்கொண்டேன். மறுபடியும் அவர், உனக்கு இன்றைக்கு வார ஓய்வு நாள்தானே என்றார். நான் ஆமாம் என்றேன். வழக்கமாக நீ இந்த நாளில் பத்துப் பதினொன்றையும் தாண்டி தூங்குவாயே… எங்கே கிளம்பிவிட்டாய் இந்த நேரத்திற்கு என்றார். நான் தூக்கம் வரவில்லை என்றேன். நான் சீருடை அணிந்திருப்பது குறித்துக்கேட்டார். ஒருவார மாற்று உடைகளைத் துவைக்காமல் போட்டு வைத்திருக்கிறேன் என்று பொய் சொல்லித் தப்பித்தேன். பிறகு, என்னுடைய துணையைப்பற்றி, அதாவது என் வளர்ப்பைப் பற்றிக்கேட்டார். நான் கதவைப் பூட்டும்போது அந்தக் கரிய நிறம் என் காலையே சுற்றிக்கொண்டு வந்ததைச் சொன்னேன். அவர் அலுத்துக்கொண்டபடி, அது தன் வீட்டு சன்னலுக்குள் புகுந்து நேற்றைய மீன் குழம்பை வேட்டையாடிவிட்டதாகச் சொன்னார். நான் சொல்வதற்கு ஏதுமில்லாமல் நின்றேன். அதை எங்கேயாவது கொண்டுபோய் விட்டால் என்ன…? முழுமையான அதன் கருப்பு நிறம் என்னை அச்சுறுத்துகிறது என்றார். என்னை நம்பியிருக்கும் அந்த உயிரை நான் எங்கே கொண்டுபோய் விடுவது? ஏறத்தாழ என் மனைவி எனக்குச் செய்துவிட்டுப் போன இன்னொரு வடிவத்தை என் வளர்ப்பிற்கு செய்யச்சொல்கிறார். தினமும் நான் அதற்கு ஒரு ரொட்டிப் பாக்கெட்டும் முன்னூறு மிலி பாலும் வாங்கிக்கொடுப்பதில் மன அமைதிப்படுகிறேன். என்னால் அவர் சொல்லக்கூடிய காரியத்தைச் செய்ய எப்படி முடியும்? மறுபடியும் நான் சொல்வதற்கு ஏதுமின்றி தலையைச் சொரிந்தேன்.
இவ்வாறு நாங்கள் பத்து நிமிடங்களைத் தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உள்ளேயிருந்து அவருடைய மருமகள் காபி கொண்டுவந்தாள். நான் சரியான தேநீர் பித்தன். அன்றைய காலநிலைக்கு அவள் கையிலிருந்த காபியின் மனம் என் பிரியத்தை மாற்றியது. நான் நாகரீகம் கருதியோ மெப்புக்காகவோ வேண்டாமென மறுத்தேன். தரையைக் காலால் உந்தியபடி நான் பதில் சொல்லிக் கொண்டிருந்த என் அம்மாவின் சினேகிதி, “அட… வாங்கிக் குடிடா… என்னமோ…” என்று இழுத்தார். அதற்குமேல் நான் தட்டுவதற்கில்லை. அவருடைய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தபடி காபியை காலி செய்துவிட்டு கோப்பையை வைப்பதற்குத் தடுமாறினேன். பிறகு, என் முதுகுப் பக்கமிருந்த சன்னல் மேடையில் வைத்துவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.
என் அம்மாவின் தோழி, போகலாம். இந்த மழையில் எங்கே போகப் போகிறாய். உட்கார். என்றார். நான் தட்டுவதற்கில்லை. எதற்காக நம்மை இன்றைக்கு உட்காரவைத்திருக்கிறார் என்று யோசிக்கத் தொடங்கினேன். அவர் ஊஞ்சலை உந்திக்கொண்டிருந்தார். மேலே கொண்டியில் எந்த வகையிலும் கவனத்தை திசைதிருப்பாத வகையிலான உராய்தல். அவர் அமைதியாகவே இருந்தார். உள்ளேயிருந்து ஏழு மணி அடித்தது. அவரது மருமகள் தன் குழந்தையை ஏதோ செல்லமான வார்த்தையைச்சொல்லி எழுப்பினாள்.
என் அம்மாவின் தோழி, என் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் சன்னமாக இறங்க ஆரம்பித்தார். இந்த மைதானத்திற்குள் இதுவரையில் இறங்கியதில்லாத அவரை நானும் அனுமதிக்கவேண்டியதாயிற்று. அவரது கேள்விகளுக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன். என் அம்மாவிடம் இதுகுறித்த விசாரணையை நடத்தியிருப்பார் என்று எனக்குத் தெரியும். என்றாலும்கூட, என்னை ஆழம் பார்ப்பதற்காகத்தான் இப்படி நான் சொல்வதற்கு இல்லாததையெல்லாம் கேட்டுத்தொலைக்கிறார் என்று மூடி மறைத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
பிறகு, இப்படிக் கேட்டார். “மூன்று மாதத்திற்குள்ளேயே உங்களுக்குள் அப்படி என்னதான் நடந்தது? அல்லது எதுவும் நடக்காததாலா?” நான் இந்தக் கேள்வியை அவர் கேட்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை! எல்லை மீறமாட்டார் என்கிற என் எண்ணத்தை எரித்துவிட்டார். அவரிடம் என்னால் ஆத்திரப்பட முடியாது. என் கவலைகளையெல்லாம் இறக்கி வைக்கக் காரணமானவர். நான் இன்றைக்கு வேறு பாதையில் ஓடிக்கொண்டிருக்க வழிவகுத்துக்கொடுத்தவர். என் மனைவி என்னை விட்டுப்போயிருந்த இந்தப் பத்தொன்பது மாதங்களில் முதல் மூன்று மாதங்கள் என்னைப் பைத்தியமாக அலையவிட்டக் கேள்வியைக் கேட்டுவிட்டார். நான் நிரூபிக்க வழியில்லாத கேள்வியைக் கேட்டுவிட்டார். ஏறத்தாழ இந்த நாளையே நிம்மதியற்றதாக்கக்கூடிய கேள்வியைக் கேட்டுவிட்டார். விடப்போவதில்லை. நான் இந்த நாளை நிம்மதியாகத்தான் கழிப்பேன். நாளைக்கு என்னால் சிரமத்தை தூக்கிச் சுமக்க முடியாது. கப கபவெனச் சிரித்தேன். முப்பது விநாடிகள் விடாமல் சிரித்தேன். ஊஞ்சல் சட்டென நின்றுவிட்டது. உள்ளே எதையோ உருட்டிக்கொண்டிருந்த அவரது மருமகள் திண்ணைக்கு வந்தாள். இருவரும் என்னை விநோதமாகப் பார்த்தனர். தரையைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன். “என் மனைவி தனக்கு நான் விருப்பமில்லை என்கிற விருப்பத்தைச் சொன்னாள். நான் அப்போதே அனுமதித்துவிட்டேன். அதாவது, மறுநாளே உன் விருப்பம்போல போகலாம்” என்று.
“பிறகெப்படி மூன்று மாதங்கள் வரையிலும் உன்னுடன்?” அம்மாவின் தோழி கேட்டார். நான் சொன்னேன். “அந்த முதல் நாளிலேயே நான் அவளைப் புரிந்து கொண்டதும், அவள் விருப்பத்திற்கு அனுமதியளித்ததும் அவள் தனக்குப் பிடித்து விட்டதாகச் சொன்னாள். ஆகையால்…”
“ஆகையால்…?”
“மூன்று மாதங்கள் கழித்துப் போகிறேன் என்றாள்” என்றுவிட்டு நான் ஊஞ்சலைப் பார்த்தேன். பிறகு, கூடத்து நிலையைப் பார்த்தேன். அவர்கள் இருவரும் புருவமேட்டை உயர்த்தி உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.
நான் என் பார்வையை வாசல் பக்கமாக மேயவிட்டுக்கொண்டிருந்தேன். என் அம்மாவின் தோழி, தன் மருமகளைப் பார்த்து தலையாட்டிக்கொண்டே கண்ணால் எதையோ கேட்டார். அவளும் ஏதோ சம்மதமான தொனியில் தலையை ஆட்டினாள். என் கவனம் ஓரத்தில் நடந்த ரகசிய உரையாடலைப் பற்றி யோசிக்கத் தொடங்கியது. முதலில் நான், அவர்களுடைய வேலையைக் கெடுத்துக்கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்கிற முடிவிற்குத்தான் வந்தேன். சட்டென கையைப் புரட்டி நேரத்தைப் பார்த்தேன். எட்டைத் தாண்டியிருந்தது. நான் கிளம்புவதாகச் சொல்லிக்கொண்டு எழுந்தேன்.
ஊஞ்சலிலிருந்து எழுந்த என் அம்மாவின் தோழி, என் கையைப் பிடித்து “சரி… வா… சாப்பிட்டுப் போகலாம்” என்று உள்ளே இழுத்தார். உண்மையில் நான் தயங்கினாலும் மறுப்பதற்கில்லை.
(4)
காலையில் நான் கணித்திருந்தது போலவே இப்போதைய மார்ச் மாத மேகம் செப்டம்பர் மாதக் கணக்கிலேயே தொடர்ந்தது. மிக லேசான, ஒரே அளவிலான தூரலில் சிறிதுகூட மாற்றமில்லை. ஏறத்தாழ இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு இந்த நிலை நீடிப்பதை நான் அபூர்வமாக நினைத்தேன். எனக்கு தலையை மூடிக் கொள்ளத் தேவைப்படவில்லை. என்றாலும்கூட மழைக்கோட்டின் கழுத்துடன் தொங்கக்கூடிய தொப்பியை மூடிக்கொண்டு வெளிக்கேட்டை ஒட்டிய அசோகா மரத்தின் கீழேயே பத்து நிமிடங்களுக்கும் மேலாக நின்றுகொண்டிருந்தேன்.
பிறகு, இரு புறத்திலும் ஒழுங்கற்ற இந்த கே.வி.ஆர். தெருவின் ஆள் நடமாட்டத்தை ஆராய்ந்தபடி நடையைக் கட்டினேன். என் வீதியின் ஒடிப்பைத் தாண்டி போனபிறகும் திக்கற்ற விதமாகத்தான் நடந்தேன். என் நினைவெல்லாம் கடந்த பதினைந்து நிமிடங்களையே வட்டமடித்தது. மறுபடி மறுபடி வேறுவேறு சம்பவங்களுடன் அந்தச் சுழற்சி நிற்கவில்லை. குறிப்பாக என் அம்மாவின் தோழியினுடைய மருமகள் என்னை சாப்பாட்டு மேசையில் கவனித்துக்கொண்ட விதம்.
என் வயிற்றுக்குத் தேவையில்லாத நெருக்கடியைக் கொடுப்பதாக நான் உணர்ந்தபோது, என் தட்டுக்கு முன்னதாக இரண்டு கைகளையும் மறைத்ததை அவள் பொருட்படுத்தாமல் எனக்குப் பரிமாறியதை நான் சாதாரணமாகக் கருதுவதற்கில்லை. அதை அன்பின்பாற்பட்ட அக்கறையின் வெளிப்பாடாக நான் நினைத்தேன். நான் இந்த வீட்டிற்கு வந்திருந்த ஏழுமாத சொச்சத்தில் நான்காவது முறையோ ஐந்தாவது முறையோ தான் இந்த மேசையில் அமர்ந்திருக்கிறேன். அந்த அத்தனை முறையும் இவள் பரிமாரியதைக் காட்டிலும் இந்த முறை அவள் உற்சாகமாக இருந்ததை நான் கவனித்தேன். வழக்கத்திற்கு மாறான உதட்டோரமும், கண்களும் என்னை வேறு ஆளாக மாற்ற முயற்சித்ததை என்னால் அப்போது உணரமுடிந்தது.
நான் திண்ணையில் உட்கார்ந்திருக்கையில் எனக்கு இரு பக்கவாட்டிலும் இருந்த மருமகளும் மாமியாரும் கண்களால் பேசிக்கொண்டபடி மௌன உரையாடல் நிகழ்த்தியது குறித்து அப்போது நான், அவர்களுக்குச் சுமையாக இருப்பதாக நினைத்திருந்தாலும், பிறகு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருக்கையில் என்னை சாப்பிட வைப்பதற்கான சமையலறை வேலையின் தயார்நிலை குறித்து உரையாடி யிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது இப்படி நினைக்கிறேன். என்னை அவளுக்குச் சம்மதமா என்று கேட்டிருப்பாரோ என் அம்மாவின் தோழி?
இல்லையென்று நான் கருதுவதற்கில்லை… காரணம், என் சொந்த வாழ்க்கைக்குச் சம்பந்தப்பட்ட எதையும், அந்த மேசைக்குப் போனதற்குப் பிற்பாடு நாங்கள் பேசியிருக்கவில்லை. ஒன்றைத்தவிர! அது, “உன் திருமண முறிவு சட்டப்படி முடிந்துவிட்டதா?” அம்மாவின் தோழி கேட்டார். நான் அதற்கு சென்ற வருடத்தின் இறுதியில், ஈவு மீதியின்றி சட்டப்படியும் சமரசமாகவும் முடித்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தேன். அப்போது அவரது மருமகள் இப்படிச் சொன்னாள். “நீங்கள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியில்லாத காரணங்களால் வதைபடுவதை யாரும் விரும்பமாட்டார்கள்” நான் அவள் சொன்னதை மறுபடி மறுபடி முணுமுணுத்துக்கொண்டே நடந்தேன்.
நான் என் மனைவி குறித்த செய்தியை இறுமாப்புடன் தான் இவர்களுக்குச் சொல்லவேண்டியிருந்தது. ஏனென்றால் அன்றைக்கு நடந்தது உண்மை. இவர்களிருவருக்குமே நான் தாராள மனசுக்காரன் என்கிற பிம்பம் உண்டாகியிருக்கும். அதன்பிறகுதான் அவள் இந்த வார்த்தையைச்சொல்ல முடிவெடுத்திருக்கவேண்டும். என்னுடைய குற்ற உணர்வை அகற்றக்கூடிய வகையில் அவள் முடித்திருந்த இந்தத் தத்துவ வார்த்தைக்கு அர்த்தம்? அதாவது, ‘யாரும் விரும்பமாட்டார்கள்’ என்பது தனக்கு விருப்பமில்லை என்பதா?
என்னைவிட அவளுக்கு இரண்டுமூன்று வயது கம்மியாகவோ, அல்லது ஒரே வயதாகவோகூட இருக்கலாம். எந்த வகையிலும் அழகைக் குறைத்துச் சொல்வதற் கில்லை.
போகவும், மிகவும் கன்றிப்போயிருந்த என் மனதிற்கு ஒரு பெண்ணின் காதலென்பது இப்போது அவசியமாகப்படுகிறது. இன்றைக்குப் பேசியதுபோல இதற்குமுன்னர் நாங்கள் பேசிக்கொண்டது கிடையாது. இனிமேல் நாங்கள் ஏதேனும் காரணங்களை உருவாக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தால் ‘யாரும் விரும்ப மாட்டார்கள்’ என்று அவள் சொன்ன வார்த்தைக்குள் அவள் இருக்கிறாளா என்பது தெரிந்துவிடும். இல்லையென்றால், அவளது மாமியாருக்கு என்னுடன் அவளை சேர்த்துவைக்கக்கூடிய நோக்கமிருந்து பெரியவர்களுக்குள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானால் பின்னரொரு நாளில் அவளிடம் என்னால் கேட்டுக் கொள்ளமுடியும்.
எது எப்படியோ… இந்தச் சம்பவத்தை நான் எங்களுடைய மண ஒப்பந்தத்திற்கான ஒத்திகையாகத்தான் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கிறது. நான் என் எதிர்காலம் குறித்து சிந்தித்துக்கொண்டே நடந்தேன்.
அப்போது என் பெயரைச்சொல்லி ஒரு குரல் அழைத்தது. மிகவும் பழக்கப்பட்டு அந்நியமாகிப்போயிருந்த அதே குரலில் எனக்கு இரண்டு மூன்று பேர் பரிச்சயமுண்டு. அவனா…? இவனா…? அல்லது இவர்களைப்போன்ற குரலுடைய இன்னொருத்தியா…? இப்போது அழைத்தது யாரென என்னால் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. நான் குழம்பினேன். ஏறத்தாழ முழுவட்டமாக தலையைச் சுற்றி மேய்ந்துவிட்டு மறுபடியும் என் போக்குக்கு நடையைக் கட்டினேன்.
அந்த மலைப்பாம்பு போன்ற நீண்ட வீதியின் மத்தியில் பிரியக்கூடிய ‘+’ வடிவத்தின் இடது புறமாகத் திரும்புவதென சற்றுநேரத்திற்கு முன்னதாக நான் முடிவெடுத்திருந்தேன். மக்கள் நெருக்கடிமிகுந்த அந்தச் சாலையில் மறுபடியும் அந்தக் குரல் என்னை அழைத்தது. என்னுடைய பெயரைக்கொண்ட வேறு யாரையுமோ யாரோ அழைத்திருக்கலாமென நான் நினைக்கவில்லை. எனக்குப் பரிச்சயப்பட்ட இந்தக் குரலுக்குச் சொந்தமான அந்த இரண்டு மூன்று பெயர்களில் ஒருவரது பெயரைச் சொல்லிக்கொண்டே என் கையை மேலே உயர்த்தியவாறு அங்கிருந்த பழைமையான வாகை மரத்தின் கீழே இயங்கிக்கொண்டிருந்த தேநீர் கடையில் ஒதுங்கினேன். என்னைத் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டவரும் தன் கையை உயர்த்தியபடி என்னைநோக்கி வந்தபிறகு, நான் குத்துமதிப்பாக அழைத்திருந்த பெயரைத் திருத்திக்கொண்டேன். ஆமாம். அது நான் முன்னர் அழைத்த பெயருக்கு உண்டானவரல்ல. அவருடைய இடது கையின் நடுவிரலில் முதல் அங்குலம் இருக்காது.
அவர் என்று அழைக்கப்பட்டவர் இனி அவன் என்று மாறுகிறான். காரணம், நாங்கள் பழைய பயல்கள். எங்களுடைய இந்த நாற்பத்து இரண்டு வயதில் முதல் பத்து வருடங்களில் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். பிறகு, அவனது குடும்பத்தின் இடப்பெயர்வால் நாங்கள் இருவேறு துருவங்களாகிவிட்டோம். நாங்கள் சந்திக்க வாய்ப்பற்றுவிட்டது. என்றாலும்கூட நாங்கள் கல்லூரியில் ஒன்றாகத்தான் படித்தோம். அப்பொழுதெல்லாம் எங்களுக்குள் சிறுவயதிலிருந்த ஒட்டுதல் இல்லை. இயல்பிலேயே எங்களிருவருக்கும் நண்பர்கள் வட்டம் வேறுவேறாக மாறியிருக்குமல்லவா?
எங்களுடைய இந்த எதேச்சையான சந்திப்பானது ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்குப் பிறகானதாக இருக்கிறது. இறுதியாக நான் அவனுடைய திருமணத்திற்குப் போயிருந்தேன். அவ்வளவுதான். அவனுடைய சொந்த ஊரில் என்னைப் பார்த்திருப்பது அவனுக்கு வியப்பென்றான். நான் சிரித்துக்கொண்டபடி என் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட பூகம்பம் உன்னைப் பற்றிச் சிந்திக்க இடமளிக்கவில்லை என்றேன். அவன் எனக்குத் திருமணம் முடிந்து விட்டதுதானே…? என்று உறுதியாகக் கேட்டான். நான் இந்த நடுரோட்டில் நின்றுகொண்டு அத்தனையையும் அவிழ்க்க முடியாது என்று அவனுக்குப் புரியும்படி சாடை காட்டினேன். அவன் புரிந்துகொண்டு கம்மென்று இருந்தான். நான் அவனுடைய அம்மா, அப்பா பற்றிக் கேட்டேன். மிகவும் வருத்தத்துடன் சொன்னான். “முதலில் அம்மா… பிறகு அப்பா…” நான் புரிந்துகொண்டேன்.
கடைப் பையன் எங்களுக்காகக் கொதித்த தேநீரைக் கொண்டுவந்தான். அதை உறிஞ்சி முடிக்கும் வரையிலும் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு மாதக் கடைசியாதலால் டீக்கடையில் அவன் கணக்குத் தீர்க்கும்வரை நான் கம்மென்று இருந்தேன். பிறகு, தன் பையிலிருந்த சிகரெட் பெட்டியைத் திறந்து எனக்கொன்றை எடுத்து நீட்டியவாறு “இப்போதும் உண்டுதானே…?” என்றான். நான் சிரித்துக்கொண்டபடி வாங்கிக்கொண்டேன். அவன் தீக்குச்சியை செதுக்கி எனக்கு வைத்துவிட்டுத் தனக்கும் வைத்துக்கொண்டான். எங்களைக் கொளுத்தப் போகும் சிகரெட்டைப் பழிவாங்கிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினோம். அந்த நடையின்போது நாங்கள் கடந்த சில வருடங்களின் முக்கியச் சம்பவங்கள் பற்றி சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டோம். என்னுடைய துரதிஷ்டமான வாழ்க்கையைப் பற்றி அவன் வேதனையடைந்தான். ஆரம்பத்திலிருந்தே என்னைவிட அத்தனை வகையிலும் ஒருபடி மேலானவனாக விளங்கியவனுக்கு இப்போது வரையிலும் இக்கட்டான சூழல் இல்லையென்பதை நினைக்கையில் எனக்குப் பொறாமையான உணர்வைக் கொடுத்தது. நான் அதை என் முகத்தில் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சட்டென நான் பேச்சை மாற்றினேன்.
அவனுடைய அப்பா மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டிற்குச் செல்வார். அங்கிருந்து அவர் திரும்பி வருவதற்கும் மூன்று மாதங்கள் ஆகும். அவர் ஏதோ கடலுக்குள் வேலை செய்கிறார் என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்தச் சிறுவயதில் அவர் கடலுக்குப் போனதற்குப் பின்னதான நாட்களை மாதாந்திர நாட்காட்டியில் தினமும் எண்ணுவோம். அவர் எங்களுக்கு விதவிதமான சாக்லெட்டுகளைக் கொண்டுவருவார். ஒரு போது அவரது சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய் நாங்கள் திருட்டுத் தனமாக புகைத்ததைப் பற்றி குதூகலமாகப் பேசினேன்.
அவன் என்னைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தான். முதலில் நான் வேலையிருப்பதாகச் சொல்லி மறுத்தேன். சற்றுநேரம் கழித்து இன்னொருமுறை வருவதாகச் சொன்னேன். பிறகு, அவன் கட்டாயப்படுத்தியதும் நான் மறுப்பதற்கில்லாமல் நடந்தேன். எத்தனை குழந்தைகள் என்றேன். மூன்று பயல்கள் என்றுவிட்டு மனைவியின் பெருமைகளை அளந்தான். எனக்கு இன்றைய நாள் என் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, தாறுமாறாக எந்தெந்த வழியிலேயோ போய்க்கொண்டிருப்பதைப் பற்றிய நினைவாக இருந்தது. என்றாலும்கூட சம்மதித்தோ இல்லாமலோ நான் அதன் போக்கிற்கு ஒத்துழைக்க வேண்டியிருந்தது. அவன் தன் வீட்டிற்குப் போகும் வழியை எனக்குக் காற்றில் வரைந்துகாட்டியபடி நடந்தான். அந்த அடையாளத்தை வைத்துப்பார்த்தால் என் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறையாத தொலைவுதான். நாங்கள் சந்தித்துக்கொண்ட இடத்திலிருந்து கணக்கிட்டால் மிகக் குறைவான தூரமே.
இப்பொழுதுதான் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகக் கட்டிமுடித்ததாகச் சொன்னான். ஆடம்பரமில்லாமல் நடத்திய குடிபுகும் விழாவிற்கு என்னை அழைக்காததற்கு மன்னிப்புக் கோரினான். நான் பரவாயில்லை என்றேன்.
என்.என்.கே.சி. தெருவிற்குள் நாங்கள் நுழைந்தபோது தெருக்கோடியில் இருந்த ஒரு இரட்டைமாடி வெள்ளைக்கட்டிடத்தைக் காண்பித்து இதுதான் நான் வெளிநாட்டு வேலையில் சம்பாதித்ததற்கான அடையாளம் என்றான். எனக்குப் பொறாமை உணர்வு மேலோங்கி நின்றது. நான் மெப்புக்கு சிரித்துக்கொண்டேன். என் சிரிப்பை அவன் ஆழமாக ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவனது பாக்கெட்டிலிருந்து யாரோ கிடார் இசைப்பது கேட்டது. சட்டென அவன் கவனத்தை மாற்றிக்கொண்டபடி தன்னுடைய பாக்கெட்டிலுள்ள மொபைலை எடுத்துப்பேசினான். அந்த முனையிலிருந்து ஏதோ பதர்ஷ்டமான செய்தியை யாரோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. அடுத்த சில வினாடியில் வழியில் வந்த ஆட்டோவை மறித்து நிறுத்தினான். நான் அவனிடம், எங்கே… என்ன… என்றேன். சொல்கிறேன். ஆட்டோவில் ஏறு என்றான்.
(5)
காலையில் நான் புத்தகத்தில் படித்திருந்த குழந்தையின் இறப்பைக் கடந்து விட்டேன். டி.வி.யில் பார்த்த சிரிய-க் குழந்தைகளின் உயிரற்ற காட்சிகள் என் பார்வைக்கு வெகுதொலைவாகிவிட்டன. அதன் பின்னரான என் வாழ்க்கைக் குறித்த துயரமான சம்பவங்களைக்கூட நான் இன்னொரு பெண்ணிடம் அடமானம் வைக்கப் போகிறேனென நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், மேற்குக் காவல் நிலையத்தில் என் காதில் விழுந்த அந்த வார்த்தை என்னை ஏன் இன்னமும் விரட்டுகிறது? தெளிவான மனநிலைகொண்ட யாராவது அந்த வார்த்தையைத் தன் நெருங்கிய உறவினரின் மீது பிரயோகிப்பார்களா? உடல் மெலிந்து கந்தலான புடவையுடன் கூடிய அந்த முதியவளுக்கு இத்தனை வேகமான நடையும் ஆக்ரோஷமான குரலுடன் கூடிய மூர்க்கத்தனமும் எப்படி சாத்தியம்? மேசையை ஓங்கித் தட்டி வழக்கை எடுக்கிறாயா…? இல்லையா…? என்று காவலதிகாரியையே மிரட்டுகிற தைரியம் அந்த உடலில் எங்கே இருந்தது?
அறுபது வயது தீர்மானிக்கக்கூடிய வறுமையான முகத்துடனிருந்த அந்த முதியவளைத் தன் பெரியம்மா என்பதோடு நிறுத்திக்கொண்டானே எதனால்? மேற்கொண்டு அங்கே நடந்த சம்பவம் குறித்து சிறிதுகூட என்னிடம் வாய் திறக்காமல் ரகசியம் காத்தவன், எதற்காக என்னை ஆட்டோவில் ஏறச்சொல்லி காவல் நிலையம் வரை அழைத்துப் போக வேண்டும்? தன் பெரியம்மாவை அவனுடன் ஆட்டோவில் ஏற்றிவிடுவதற்காகவா? தன் வீட்டிற்கு கட்டாயமாக அழைத்தவன் என்னைக் காவல் நிலையத்திலேயே கழற்றிவிட்டுப் போக வேண்டிய நெருக்கடி என்ன?
நான் என் கால் போன போக்கில் நடந்தேன். அரை கிலோமீட்டருக்கும் மேலாக நடந்தேன். எனக்குக் கடவுளிடம் ஒரு கோரிக்கையும் கிடையாது. என்றாலும்கூட அங்கிருந்த செபாஸ்டியன் தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தேன். கோபுரத்தைச் சுற்றிலும் நிறைய மரங்கள். பூச்செடிகள். நான் ஒரு தென்னை மரத்தின் கீழ் அமைதியாகிவிட்டேன். எப்போதும் இல்லாமல் நான் மொபைலைப் பார்த்த படியே இருந்தேன். ஒருமணி நேரத்திற்கும்மேல் ஆகிவிட்டது. என்னைக் கட்டாயமாக வீட்டிற்கு அழைத்தவனிடமிருந்து ஒரு அழைப்புக்கூட இல்லை. ஏதோ தவறாக இருக்கிறதென நினைத்துக்கொண்டேன். எது எப்படியோ… நான் செய்ய என்ன இருக்கிறது? காலத்தைவிடத் தேர்ந்தக் கொள்ளையன் யாருமில்லை என்கிறார்கள். அந்தக் காலமானது எனக்குள் உறுதியாக ஒட்டிக்கொண்டுவிட்ட அந்த முதியவளின் நினைவையும் அவள் உச்சரித்த அந்த வார்த்தையையும் என்னிடமிருந்து வழித்துச் சுரண்டிக்கொண்டு போய்விட்டால் மிச்சமிருக்கும் இந்த நாளை நான் நிம்மதியாகக் கழிப்பேன்.
ஆனால் இப்போது அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென்று நான் உணர்ந்தபோது வேறொரு முடிவெடுத்தேன். அதாவது, ஏதாவதொரு மதுக்கூடம் தான் என் தேர்வு. எனது வங்கி அட்டையை நான் முற்றிலுமாகச் சுரண்டத் தீர்மானித்து எழுந்தபோது அந்த அமைதியான சூழலை ஒரு கலைஞன் இன்னும் அழகூட்ட ஆரம்பித்தான். ஆமாம். அவன் ஒரு குட்டையான பூச்செடிக்கும் கீழ் அமர்ந்தவாறு வாயில் எதையோ வைத்து இசைக்கத் தொடங்கினான். காலம் ஒரு தேர்ந்த கொள்ளைக்காரனை அனுப்பியிருக்கிறதென நினைத்துக்கொண்டவாறு அவனது இசைப்பிற்கு மயங்க ஆரம்பித்தேன். பொதுவாக இசை குறித்து எனக்கு அடிப்படைப் புரிதல்கள்கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவன் வாசிக்கக்கூடிய கருவியின் பெயர்கூட எனக்குத் தெரியாது. என்றாலும் நான் ரசிக்கத் தக்கவன். முறையான அல்லது தொழில்நுட்ப ரீதியில் விமர்சனம் சொல்லத்தெரியாத தேர்ந்த ரசிகன் என்றுகூடச் சொல்வேன்.
அந்த இசைஞன் ஒரு அரைமணி நேரத்திற்கும் மேலாக வாசித்துவிட்டு நிறுத்தினான். என் துயரத்திலிருந்து முற்றிலுமாக என்னை விடுவித்தவனுக்கு நான் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் தகும். ஆனால், கலையை நேசிக்கக்கூடிய ஒருவனுக்கு என்னைப் போன்ற வசதியற்றவன் பாராட்டைத்தவிர வேறு எந்த புதையலைக் கொடுத்துவிடமுடியும்? அதன் பொருட்டு நான் அவன் அமர்ந்திருந்த பூச்செடியை நோக்கி நடந்தேன். நான், அவன் முன்னால் நிற்பதைக்கண்டு அன்பாக எனக்குச் சிரித்தான். மெல்ல அவனருகில் அமர்ந்தவாறு உங்கள் வாசிப்பு அருமை என்றேன். எதையோ சத்தமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டவன் மறுபடியும் அன்பாகச் சிரித்தான். எனக்கு வேறுவிஷயங்கள் பேசுவதற்கில்லாததால் அவனது வார்த்தையை எதிர்நோக்கியிருந்தேன். ஆனால், அவன் தன் வாத்தியக்கருவியை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான். ஏறத்தாழ அவன் அங்கிருந்து கிளம்பப் போகிறானெனப் புரிந்தது. நான் அவனது தயார்நிலையை ஆராய்ந்தவாறு அவனிடம் பேச்சுக்கொடுக்க நினைத்தேன். அவன், நான் எதிர்பாராத நேரத்தில் இறுதியாக எனக்குச் சிரித்து விட்டு எழுந்து போய்விட்டான்.
அவன் தேவாலய வளாகத்தின் பிரதான வாயிலைக் கடந்து போகும் வரை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். பிறகு, நானும் வெளிக்கேட்டை நோக்கி நடந்தேன். அங்கிருந்த காவலாளி நான் உள்ளே நுழைந்தபோது பார்த்தது போலவே இப்போதும் என்னைப் புதுவிதமாகப் பார்த்தார். அதைப் பொருட்படுத்தாத நான், அவரிடம், பூச் செடியின்கீழ் அமர்ந்து வாசித்தவன் குறித்துக் கேட்டேன். முதலில் முழுவிவரமும் தெரியாதெனச் சொன்னார். பிறகு, எதையோ யோசித்துவிட்டு அவனுக்கு வாய்பேச வராது. என்றார். நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் அந்தக் காவலாளி, நேரக் கணக்குகளின்றி தன் விருப்பம்போல் அந்த ஆள் தினமும் இரண்டுமுறை இங்கே வந்து வாசித்துவிட்டுத்தான் போவான் என்றார். என்னால் அவனுக்கு பேசவராது என்பதை நம்பமுடியவில்லை என்றேன். ஆமாம். எனக்கும் அப்படித்தான். என்றாலும்கூட அவன் பேசவேண்டியதையெல்லாம் அந்த வாத்தியக் கருவியோடு அல்லது அதன் மூலமாக பேசிக்கொண்டுதானே இருக்கிறான்? என்றார். நான் ஆமாம் என்றேன். அதற்குமேல் அவன் குறித்துக் கேட்பது அநாவசியமென நினைத்தேன். காரணம், எனக்கு வயிறு பசிக்கத் தொடங்கியது. அந்தக் காவலாளிக்குத் தலையாட்டிக்கொண்டு நடையைக் கட்டினேன்.
என் ஓய்வு நாளில் நான் ஒரு சாலையோரக் கடையில்தான் மூக்கு முட்டத் தின்பேன். இரண்டு வேளை அல்லது மூன்று வேளையும் அங்கேதான் எனக்கு வாடிக்கை. ஒரு மூதாட்டியின் கடை அது. என்னைப் போன்ற சிலரது வாடிக்கைதான் அவரது பேத்தியின் படிப்புச் செலவிற்கு காண்கிறது என்பார். நான் அங்கே ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினேன்.
இந்த மார்ச் மாத மதியத்தின் இரண்டு மணியானது, எனக்கு மறுபடியும் செப்டம்பர் மாதத்தைத்தான் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. நான் எந்தத் தீர்மானமும் இல்லாமல் இன்றைக்கு வெளியே கிளம்பியிருந்தாலும் என் மழைக் கோட்டுக்குள் பதுக்கிக்கொண்டு வந்த புத்தகத்தை எங்கேயாவது அமைதியான இடமாக உட்கார்ந்து முடித்துவிடவேண்டுமென நினைத்திருந்தேன். அது நிமித்தம் நான் எங்கள் மாநகராட்சியின் பராமரிப்புக்குட்பட்ட பூங்காவிற்குள் நுழைந்தேன். பொதுவிடுமுறை அல்லாத இன்றைய நாளில் இங்கே அத்தனைக் கூட்டம் இருக்காது என்பதாலும், மதிய நேரமென்பதால் கூடுதல் அமைதி நிலவும் என்பதாலும்தான் நான் இந்தப் பூங்காவிற்குள் நுழைந்தேன். என் எதிர்பார்ப்பு கச்சிதமாக இருந்தாலும் சில வெளியூர்க்காரர்களின் கும்மாளம் கட்டுக்கடங்காமல் இருந்தது. என்றாலும், நான் ஒரு ஒதுக்குப் புறமிருந்த குழந்தைகள் சறுக்கி விளையாடக்கூடிய சிமெண்ட் கட்டுமானத்தின் கீழ்ப்புறமுள்ள பொந்தில் அடங்கிக்கொண்டு புத்தகத்தை எடுத்தேன். அதிகாலையில் நான் பாதியில் நிறுத்திய அந்தப் புத்தகத்தின் இரண்டாவது கதையான பதினான்காவது பக்கத்தின் கடைசி பத்தியை மறுபடியும் வாசித்தேன். இறுதி வரி என்னை மறுபடியும் அலைக்கழித்தது.
‘ஆமாம் அவள் இல்லாமலாகிவிட்டாள்’
புத்தகத்தை மூடிவைத்து விடலாமா? என்கிற யோசனைவேறு. ஆனால் மேற்கொண்டு கதை என்னதான் சொல்லவருகிறதென்று தெரிந்துகொள்ளக்கூடிய ஆர்வம் வேறு. என் திருமண முறிவிற்குப் பின்னரான நிம்மதியற்ற நாட்களைக் கடத்தியதில் இந்தப் புத்தகங்களுக்குப் பெரும் பங்குண்டு. காலத்தைவிட தேர்ந்த கொள்ளையன் யாருமில்லை. அது வேறுவேறு ரூபத்தில் நம்மிடம் கொள்ளையனை அனுப்பிக் கொண்டே தான் இருக்கும்.
மீண்டும் நான் வாசிப்பைத் தொடங்கினேன்.
(6)
சமீப நாட்களாகவே என்னால் வேலையில் ஈடுபாடு காட்டமுடியவில்லை. குறிப்பாக இந்த முப்பது நாற்பது நாட்களாக நான் என் உயரதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஏறத்தாழ நான் நடைபிணமாகவும் ஜடமாகவும் இருந்தேன். அன்றைக்கு எனக்கு அலுவலகம் கிளம்புவது குறித்த யோசனையே கிடையாது. காரணம், நான் முதல்நாளே விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டிருந்தேன். ஆனால் அதை நான் என் மனைவிக்கு தெரியப்படுத்தவில்லை. அவள் வழக்கம்போல நான் கிளம்புவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தாள்.
அன்றைக்கு நான் அலுவலகம் செல்லக்கூடிய வழக்கமான நேரத்தைக் கடந்தும் வீட்டின் தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தேன். என் மனைவி நான் வேலைக்குச் செல்லாதது குறித்துக் கேட்டாள். அவளுக்கு நான் பதில் சொல்லாமல் மஞ்சள் அரளி மரத்தின் கிளையை உலுக்கிக்கொண்டு நின்றேன். முதலில் என் செயலுக்கு எரிச்சலுற்றாலும் பின்னர் என் கவலையான முகத்தைக் கண்டு, உடம்புக்கு எதுவும் முடியவில்லையா என்றாள். நான் இல்லை என்றேன். பிறகு, அவள் இன்னும் என்னை ஆழமாகக் கிளறுவாளென்று லேசான தலைவலி என்றேன். இதுமாதிரியான சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் நான் விடுப்பு எடுப்பவன் தான் என்பதால் மேற்கொண்டு அவள் என்னைக் குடையவில்லை. வெயிலில் நிற்காமல் உள்ளே வந்து சாப்பிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னாள். நான் வருவதாகச் சொன்னேன். சரி… என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அதன் பிறகு நான் அங்கே சில செடிகளை அழகூட்டும் விதமாக கத்தரிப்பு வேலையில் ஈடுபட்டேன். சமீப நாட்களாக நான் செய்யக்கூடிய அத்தனை வேலைகளிலும் கச்சிதம் தவறிப்போய்விடுகிறது. அப்படியொன்று இப்போதும் ஆகிவிட்டது. என்னுடைய மகள் ஆசையுடன் வளர்த்துவந்த ஒரு கிரேந்திப் பூச்செடியின் தண்டுப் பகுதியைக் கத்தரித்துவிட்டேன். அங்கே நான் என் அரைகுறைத் தனத்திற்காக எரிச்சலுற்றாலும் மேற்கொண்டு நான் அங்கே நிற்கவில்லை. வெட்டுவானை தரையில் கொத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
உணவு மேசையில் தயாராக இருந்த காலை சிற்றுண்டியை முடிந்தமட்டும் கட்டினேன். ஒரு அரைமணி நேரம் டி.வி.யை ஓடவிட்டேன். பிறகு, சட்டையைப் போட்டுக்கொண்டு மணிக்கூண்டுவரை சென்று வருவதாக என் மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நான் பைக் எடுக்காததை வைத்து “பஸ்-சிலயா போறீங்க…?” என்றாள். நான் ஆமாம் என்றேன். ஆனால் நான் கைலியில் இருந்தது குறித்து அவள் எதுவும் கேட்கவில்லை.
நான் என் மனைவியிடம் சொன்னதைப்போல எனக்கு மணிக்கூண்டிற்குச் செல்லக்கூடிய எண்ணமெல்லாம் கிடையாது. மாறாக, என் வீட்டிலிருந்து கால் பர்லாங்கு தூரத்திலிருக்கக்கூடிய மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை நோக்கி நடந்தேன். அந்த வீதியில்தான் என் முதல் காதலியின் வீடு. அவளுடைய குழந்தை இல்லாமலான இந்த ஒரு மாதத்தைத் தாண்டிய அநேக நாட்களிலும் நான் அங்கே போய்வரவேண்டிய அவசியமிருந்தது. ஏறத்தாழ அத்தனை நாட்களிலும் அங்கே நான் ஒருமணி நேரமாவது செலவழிக்காமல் இருந்ததில்லை.
நான் அந்த வீட்டுவாசலை நெருங்கிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை முந்திக்கொண்டு ஒரு சிகப்பு நிற விலையுயர்ந்த கார் போனது. முதலில் நான் அதை பத்திரப் பதிவுக்கென வந்திருக்கக்கூடிய யாருடையதோ என்றுதான் நினைத்தேன். பிறகு, அந்தக் காரிலிருந்து இறங்கிய இரண்டுபேர் நான் நுழையவிருந்த அவளுடைய வீட்டிற்கு முன் நின்றதும், நான் தற்போது உள்ளே போவதா வேண்டாமா என்கிற தயக்கத்துடன் நடந்தேன். சற்றுநேரத்திற்கெல்லாம் அவர்களை உள்ளே கூட்டிச் செல்ல வந்த என் முன்னாள் காதிலியினுடைய கணவர் என் வருகையையும் கவனித்து விட்டார். மிக நல்ல மனிதர் அவர். என்னை விடவும் நல்ல மனிதரென்று நான் நினைப்பேன். காரில் வந்திருந்தவர்களுடன் என் கைகளையும் பற்றிக்கொண்டு உள்ளே இழுத்தார்.
அவர் மனைவி தன் குழந்தையின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு சுவரோரமாக சாய்ந்திருந்தாள். காரில் வந்த இருவரும் அந்த நல்ல மனிதனிடம் கம்மியான குரலில் கவலையாகவும், ஆதரவாகவும் பேசினர். அவர்கள் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அங்கே இருந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து, இவர் வேலை பார்க்கக்கூடிய ரொட்டிக் கம்பெனியின் முதலாளிகள் என்பது எனக்குப் புரிந்தது.
அன்றைக்கு நான் என்னுடைய வழக்கமான நேரக் கணக்குகளைக் கடந்தும் அந்த நல்ல மனிதருடன் இருக்கவேண்டியிருந்தது. “என் மகளை நானே கொன்று விட்டேன்” அன்றைக்கும் சொல்லி அழுதார். தினமும் போலவே என்னால் அவருக்கு ஆறுதல் சொல்லமுடியவில்லை. சத்தமில்லாமல் உச்சுக் கொட்டிக்கொண்டு கம்மென்று இருந்தேன். என்னால் அவருடைய கைகளையும் தோள் பட்டையையும் அழுத்திப் பிடித்துக்கொள்ள முடிந்தது. பிறகு, அவரிடம் இந்தச் சூழலை நீங்கள் கடந்தாகவேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்… உங்கள் முதலாளி வேலைக்கு அழைத்ததை நீங்கள் ஆலோசனை செய்யுங்கள் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிகளிடம் கேட்ட கேள்வியையே என்னிடமும் கேட்டார். “இனி நான் யாருக்காக சம்பாதிக்கப் போகிறேன்?” எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை.
நாங்கள் அமைதியின் அடியாழத்திலிருந்தோம். பின்னர் நான் அந்த நல்ல மனிதரிடம் மதியத்திற்கான சாப்பாடு வாங்கித் தந்துவிட்டுக் கிளம்புவதாகச் சொன்னேன். அவர் தன் மனைவிக்கென காலையில் வாங்கியது இருக்கிறதென மறுத்துவிட்டார். எனக்கு அவருடைய மனைவி சாப்பிடாதது குறித்த கேள்வியோ சங்கடமோ கிடையாது. காரணம், நான் சென்றமுறை இங்கே வந்திருந்தபோதெல்லாம் அவளுக்கென வாங்கியிருந்த உணவுப் பொட்டலம் பிரிக்கப்படாமலும் சில நேரம் பிரித்துக் குதறப்பட்டும் குப்பையில் கிடந்ததைப் பார்த்திருந்தேன். யாரால் என்ன செய்யமுடியும்?
நான் நேரத்தைப் பார்த்துக்கொண்டே அவரிடம் சொல்லிக்கொண்டு எழுந்த போது எங்கிருந்தோ அவருடைய மகள் வளர்த்த நாய்க்குட்டி மூச்சிரைக்க ஓடி வந்தது. அதன் மண்டையிலிருந்து, பிடரி, முதுகுவரை தடவிக் கொடுத்துக்கொண்டே என்னிடம், “எங்கள் கவலையை ஒருபக்கம் வையுங்கள். இதோ இதன் நிலைமையை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. தினமும் மயானத்திற்கும் வீட்டிற்குமாக அலைந்தபடியே இருக்கிறது. எப்பொழுதெல்லாம் எங்கள் மகளின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் வாலாட்டிக்கொண்டு ஓடுகிறது. எத்தனை முறை சென்றுவருகிறதென கணக்கிட முடியாத அளவில் தவிக்கிறது. சில இரவுகளில் அங்கேயே படுத்துக்கொள்ளவும் செய்கிறது” என்றார். எனக்கு அந்த நாயின் அன்பு குறித்தும் நன்றியுணர்ச்சி குறித்தும் நினைக்கையில் அதை என்னோடு அணைத்துக் கொள்ளத் தோன்றியது. ஆனாலும் எனக்கு பிராணிகளைத் தொட்டுப் பழகுவது குறித்த ஒவ்வாமை உண்டென்பதால் அதன் கண்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். பிறகு, அங்கிருந்து கிளம்பிய நான், வரும் வழியில் எங்களது வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்துக்கொடுக்கும் நர்சரி தோட்டத்திற்குச் சென்று நான் கத்தரித்துவிட்ட கிரேந்திப் பூச்செடி ஒன்றைக் கொண்டுவந்து வைக்கச் சொன்னேன்.
அன்றைய இரவில் நான், நாட் குறிப்பேடு எழுதிக்கொண்டிருந்தேன். முதலில், எழுதத்தகுந்த அன்றைய அதிகாலையின் கனவினை எனக்குப் புரியும் வகையில் குறிப்பாக எழுதியிருந்தேன். அந்தப் பெரிய பத்தியைப் படித்த என் மனைவி இது என்ன என்றாள். அதுகுறித்து அவளிடம் விளக்கியதும், என்னைச் செல்லமாகவும் அலட்சியமாகவும் அலுத்துக்கொண்டாள். தொடர்ந்து நான், ‘காரணமில்லாமல் விடுப்பு எடுக்கப்பட்ட தினம் இன்று’ என்று எழுதினேன். நான் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்று என் மனைவிக்குத் தெரியும். அந்த வகையில் காலையிலிருந்தே ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது எழுதப்பட்ட இந்தக் குறிப்பையும் நம்பாதவள், அதுகுறித்து என்னைக் குடையத் தொடங்கினாள். என் கடந்த காலங்கள் குறித்து அவளுக்கு சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக என் முதல் காதலியைப் பற்றிச் சொல்லும்போது தற்போதைய எங்களுடைய அமைதியான வாழ்க்கையில் எந்த வகையிலும் சிக்கல் வராதவிதமாகச் சொல்லியிருக்கிறேன். அவளுடைய குழந்தை இல்லாமலாகிவிட்ட அன்றைக்கு என் மனைவியையும் அழைத்துப் போயிருந்தேன் தான். என்றாலும், அதுகுறித்து பெரிய அனுதாபத்தை என்னிடம் அவள் காட்டியதில்லை. அவளைப் பொறுத்தவரையில் அதொரு அன்றாடச்செய்தி. அந்த விதமாகத்தான் அணுகியிருக்க முடியும். இதுவே எனக்குச் சம்பந்தமில்லாத ஒருவருடைய இழப்பாக இருந்திருந்தால் அவள் தன் அனுதாபத்தை என்னிடம் காட்டிக் கொண்டிருந்திருக்கக்கூடும்.
எது எப்படியோ… இன்றைக்கு நான் விடுப்பு எடுத்ததன் நோக்கத்தை எப்படித் தொடங்குவதென்ற தயக்கத்தை என் மனைவியே உடைத்துக் கொண்டிருக்கையில் இந்தச் சந்தர்ப்பத்தை நான் நழுவவிடக் கூடாதென நேக்காக ஆரம்பித்தேன்.
“அந்தக் குடும்பம் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது” என்றேன்.
“எந்தக் குடும்பம்…?” என்றாள்.
நான் என் முதல் காதலியின் குடும்பம் குறித்த தற்போதைய உண்மை நிலையைச் சொன்னதும் என்னை அவள் மூக்கை விடைத்துக்கொண்டு சந்தேகமாகப் பார்த்தாள். நான் அவளைக் கண்டுகொள்ளாதது போல அமைதியாக இருந்தேன். சிறிதுநேரம் கழித்து, “என்னாச்சு” என்றாள். நான் முதலில் அவளுடைய பராமரிப்பிலிருந்த மூன்று மாடுகளையும் கன்றுகளையும் வந்த விலைக்குத் தள்ளி விட்டார்கள் என்றேன். தொடர்ச்சியாக, அந்தக் குடும்பம் பற்றிய கடந்த சில நாட்களை ஒப்பித்தேன். குறிப்பாக இன்றைக்கு அங்குச் சென்றதையும் அங்கே நடந்ததையும் வருத்தமாகச் சொன்னேன். நிதானமாகக் கேட்டுக்கொண்டவள், “அந்தக் குடும்பத்திற்கென உறவினர்கள் உண்டுதானே…” என்றாள். நான், அவளுக்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டு போய்விட்ட அவளுடைய ஒரு தங்கையின் தொடர்பறுந்த நிலையை எடுத்துச் சொன்னேன். “ஒரு குடும்பத்தின் உறுதிக்கும் வளமைக்கும் குழந்தைகளின் இருப்புதான் அடித்தளம்” என்றாள். நான் ஆமோதித்த தொனியில் மண்டையை உலுக்கினேன். பின்னர் எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அன்றைக்கு நாங்கள் பாதி இரவைக் கடந்தும் பலவாறாக பேசிக்கொண்டிருந்தோம். உறங்கப்போவதற்கு முன்னதாக என் மனைவி எனக்கு ஆறுதலாக ஒன்றைச் சொன்னாள். “அந்தக் குடும்பத்தை நாம் மேலே கொண்டுவரலாம்”
(7)
மறுநாள் காலையில் எழுந்ததும் என் மனைவி என்னை அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து விடுமாறு சொல்லிவிட்டாள். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுப்பெடுப்பதனால் என் மேலதிகாரியிடம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்றாலும், “எதற்கு…?” என்று என் மனைவியிடம் நான் மெப்புக்காகக் கேட்டதோடு சரி.
அவளது நோக்கம் என் கணிப்பிற்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்பதால் மேற்கொண்டு நான் அவளைக் குடையவில்லை. அன்றைக்கு நாங்கள் எங்கள் இரு குழந்தைகளையும் பள்ளிக்கூடம் அனுப்பியதற்குப் பின்னர் அவர்களது வீட்டிற்குச் சென்றோம். அந்த வீடு சுகாதாரமற்ற துர்நாற்றம் பிடித்ததாக இருந்தது. அதைச் சுத்தம் செய்யும் வேலையை நானும் அவளுடைய கணவரும் செய்தோம். என் மனைவி அவரது மனைவியை குளிக்கவைத்து புதிய மனுஷியாக்கியிருந்தாள்.
நான் அந்த நல்ல மனிதரிடம் உங்களது மனைவிக்கு இப்போதைய தேவை மருத்துவ ஆலோசனை என்றேன். அவர் ஆமாம் என்றார். அதை நாம் இப்போது செய்வோம் என்றேன். அவர் சம்மதித்தார். உங்கள் மனைவி மனதளவில் சீரடைந்ததும் நீங்கள் வேலைக்குச் செல்வது குறித்து யோசியுங்கள் என்றேன். அவர் அதற்கும் சம்மதித்தார்.
எங்கள் கருத்தை அவர் மறுத்துப் பேசவோ தயங்கவோ செய்யாமல் உடனடியான சம்மதித்ததை வைத்துப் பார்த்தால் முந்தைய இரவில் அவர் பல தீர்வுகளுக்காக யோசித்திருக்கக்கூடுமென நினைத்தேன். அதன்பின் நாங்கள் தாமதிக்கவில்லை. உடனடியாக வீதியை நோக்கி நடந்த நான், ஒரு ஆட்டோவிற்குச் சொன்னேன்.
நாங்கள் நால்வரும் ஒரு மனநல மருத்துவரிடம் சென்றோம். அங்கே இவளைப் பரிசோதித்த மருத்துவர், இவளுடைய நிவாரணத்திற்கான மருந்து இனி நம்மிடம் இல்லை என்றார். நாங்கள் புரிந்தும் புரியாததுமாய் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த மருத்துவர் இவளை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்துப் பார்க்கலாம் என்றார். அவரது ஆலோசனையை நாங்கள் ஏற்றோம்.
இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிற்பாடு வீட்டிற்கு வந்ததும் சன்னமான சுயநினைவிற்கு வந்துகொண்டிருந்தாள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த மறுநாள் அந்த மனிதர், என்னிடம் வழக்கம் போலவே தன் மகள் குறித்து அழுதார். “என் மகளை நானே கொன்று விட்டேன்” இப்போது அவர் சொன்னதைக் காதில் வாங்கிய அவரது மனைவி சட்டென எழுந்து அவரது சட்டையைப் பிடித்துவிட்டாள். அவளை விலக்கிவிட்ட நான் மருத்துவர் அறிவுறுத்தியிருந்த மாத்திரையைக் கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அலுவலகத்திற்குச் சென்றேன்.
என்றாலும்கூட அவளது கணவர் சொன்ன அந்த வார்த்தை அவளுக்குள் ஆழமாகத் தங்கிவிட்டது போல.
அந்த சம்பவத்திற்குப் பிற்பாடு அவள் தினமும் தன்னுடைய சட்டையைப் பிடிப்பதும் வாயில் வந்ததைச் சொல்லித் திட்டுவதுமாக இருக்கிறாளென என்னிடம் அந்த நல்ல மனிதர் கவலையாகச் சொல்லத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மிகவும் கோபமுற்றிருந்த அவள், ஒரு நாள், நாங்கள் அதிர்ச்சியடையக்கூடிய காரியம் ஒன்றைச் செய்துவிட்டாள். ஆமாம். அன்றைக்குக் காலையில் எங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று தன் கணவர் மீது புகாரளித்து விட்டாள். அதாவது, தன் மகளின் இறப்பிற்குத் தன் கணவர்தான் முக்கியக் காரணமென்று புகாரளித்து விட்டாள். அன்றைக்கு அவளது புகாரை ஏற்றுக் கொண்ட காவலதிகாரிகள், என்னை விட அந்த நல்ல மனிதரை விசாரணைக்கென கைது செய்து விட்டனர். பிறகு நாங்கள், காவல்நிலையம் சென்று புகாரளித்த அவரது மனைவியின் மனநிலை குறித்தத் தகவலைச் சொல்லி வெளியிலெடுத்தோம்.
அன்றைய இரவிலேயே அந்த நல்ல மனிதருக்கு வேலைக்குச் செல்வது குறித்துச் சிந்தியுங்கள் என்று மறுபடியும் நாங்கள் ஆலோசனை வழங்கினோம். இது தீர்வுக்கான ஒரு வழி என்பதை அவருக்குப் பேசி உணர்த்தினோம். இதுகுறித்து அவர் ரொட்டிக்கம்பெனி முதலாளியிடம் கேட்கவேண்டும் என்றார். சீக்கிரம் கேளுங்கள் என்றேன். நாளைக்கே என்னை நீங்கள் அழைத்துக்கொண்டு போனால் கேட்டு விடலாம் என்றார். அவர் முடிவு மாறுவதற்குள் நான் சரி என்றேன்.
மறுநாள் நானும் அவரும் ரொட்டிக்கம்பெனி முதலாளியை அணுகினோம். அவர், சரி வாருங்கள். எட்டுமணி நேரத்திற்குமேல் நீங்கள் இங்கே வேலைசெய்ய வேண்டியதில்லை என்கிற சலுகையைக் கொடுத்தார். இவர், மறுநாளிலிருந்து வருவதாகச் சொன்னார். அந்த முதலாளி சம்மதித்ததும் நாங்கள் வீட்டிற்கு வந்தோம்.
மருத்துவரின் பரிந்துரைப்படி அவரது மனைவிக்கு மாத்திரையைக் கொடுத்தால் தூங்கிவிடுவாள் என்பதும் இவருக்கு வேலைக்குச் செல்வதற்கு வசதியாக இருந்தது. மறுநாள் காலையில் தன் மனைவிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மாத்திரையையும் கையோடு கொடுத்து வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். வீட்டிற்குள்ளிருந்த அவரது மனைவியோ அந்த வீதியின் அத்தனை வீடுகளுக்கும் கேட்கும் விதமாகக் கத்திக் கூச்சல் போட்டு ரகளை செய்துவிட்டாள். சன்னல் கதவுகளை டம் டம்மென வெளிப் பக்கமாக அறிந்தே உடைத்துவிட்டாள்.
அடுத்த நாளில் இவர் வேலைக்குக் கிளம்பிய போது பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு முதியவள் வீட்டைப் பூட்டவேண்டாமென்றும், பகலில் நான் திண்ணையில் தானே உட்கார்ந்திருக்கிறேன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பொறுப்பை வாங்கிக் கொண்டாள். அதன் பிறகு இவர் ஓரளவு நிம்மதியாக வேலைக்குப் போய்வந்தார்.
நாளடைவில் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள் இவளுக்கு சாதாரணமாகி விட்டது. அது அத்தனை மூர்க்கமாகத் தன் வேலையைச் செய்யவில்லை. இவள் தூக்கத்தை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டாள்.
மனநிலை சரியில்லையென்றாலும்கூட அன்றாடம் வெளியில் செல்லக் கூடியவளாக இவள் தன்னை தகவமைத்துக் கொண்டது எங்களுக்கு வியப்பளித்தது. அவளைப் பொறுத்தவரையில் தன்னுடைய மகளின் இறப்பிற்கான நீதியைத் தேடுகிறாளென்று நாங்கள் அவளை அவளுடைய போக்கிற்கு விட்டுவிட்டோம். முகத்திலும், பேச்சிலும் அத்தனை தெளிவு இருப்பதால் ஒருவராலும் மனநிலை சரியில்லாதவள் என்று உறுதியாகக் கணிக்கமுடியாது. இந்தச் சந்தேகமின்மையினால்தான் தன் கணவரைப் பற்றி இவள் புகாரளித்த போது தயக்கமின்றி வழக்கைப் பதிவு செய்ததாக அந்தக் காவலதிகாரி பிற்பாடு எங்களிடம் சொன்னார்.
இந்த ஒன்பது பத்து மாதங்களில் தினமும் அவள் காவல் நிலையத்திற்குச் செல்வதைக் கைவிடவில்லை. அந்த விசித்திரமான காரியத்தைச் செய்தபடியேதான் இருந்தாள். அதாவது, அங்கே தன் கணவன்மீது வழக்கு பதிய சொல்லி சண்டையிடுகிறாள். இவள் வரவை அந்த அதிகாரிகளும் தங்களுக்குத் தொந்தரவென்று கருதுவதில்லை. எதையாவது சொல்லி பொறுப்பாக இவளை மறுபடியும் வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். எங்களுக்கும் இந்த வாழ்க்கை முறைகள் முற்றிலுமாகப் பழக்கத்திற்கு வந்துவிட்டிருந்தது. நாங்கள் அவளது இந்தச் செயலைக் கட்டுப்படுத்துவதற்கில்லாமல் ஏற்றுக்கொண்டோம்.
ஒருநாள் மதியம் மூன்று மணிக்கு நான் அலுவலகத்திலிருந்தபோது என்னை விட அந்த நல்ல மனிதர், என்னுடைய எண்ணிற்கு அழைத்தார். நான் எதற்கும் தயாரான மனநிலையில் தான் அவரிடமிருந்து வரக்கூடிய அழைப்புகளை ஏற்பேன். அதுநிமித்தம் என்னை நான் நிதானப்படுத்திக்கொண்டு அலுவலகக் கூடத்திலிருந்து பால்கனியை நோக்கி நடந்தேன். எப்போதும் போல அவருடன் பேசக்கூடிய முதல் வார்த்தையைச் சொன்னேன். அவர் தன்னிடம் வழக்கறிஞர் ஃபோனில் பேசியதாகச் சொன்னார். மேற்கொண்டு நான் எதற்கென்று கேட்டேன். அவர் சொல்லத் தயங்கினார். பிறகு, தன் மகளுடைய விபத்து வழக்கில் நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டதையும், ஈடுகட்டுவதற்கு முடியாத தொகையாயினும் நியாயமான இந்த இழப்பீட்டுத் தொகையைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்திருப்பதாகவும் வழக்கறிஞர் சொன்னதைச் சொல்லிவிட்டு, “உயிருக்குப் பணமா இழப்பீடு? யாருக்காக இந்தப் பணம்?” குரல் உடைந்தபடி புலம்பினார். நான் அவருக்குப் பதில்சொல்லமுடியாது. வேலை முடிந்ததும் வீட்டிற்கு வருகிறேன் என்றேன்.
பணம், எத்தனைப் பெரிய இழப்பையும் மத்திசம் செய்யக்கூடியது. அந்தத் தாள் இரக்கமின்றி எதையும் செய்யும். ‘உயிருக்குப் பணமா இழப்பீடு?’ என்று கேட்ட அவருக்கு வாழ்வதற்கான அத்தனை தைரியத்தையும் தரத்தக்கது. பிற்காலத்தில் அவர் செலவழிக்கக்கூடிய இந்தப் பணத்தில் தன்னுடைய மகளின் உருவத்தையோ உயிரையோ கண்டாலும், சிறிய துயரத்துடனும், குற்ற உணர்வுடனும் அதை எளிதில் கடக்கவேண்டிய கட்டாயத்திலிருப்பார். ஆகையால் நான், அந்த என்னைவிட நல்ல மனிதரை யோசிக்கவிடும் பொருட்டு, இரண்டு நாட்கள் அவருடைய வீட்டிற்குச் செல்லவில்லை.
(8)
அன்றைக்கு வரலாற்றை நினைவுகூறக்கூடிய கொண்டாட்டத்தின் பொருட்டு வருடா வருடம் விடக்கூடிய உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு பதினொரு மணி சுமாருக்கு அவருடைய வீட்டை நோக்கிச் சென்றேன். அவர்களுடைய வீதியின் இறுதியில் அந்த நல்ல மனிதரின் மனைவி மிகவேகமான நடையுடன் எதையோ புலம்பிக்கொண்டே நடந்தார். என் மனைவியிடம் அவள் காவல் நிலையம் நோக்கிப் போகக்கூடுமெனச் சொன்னேன். அவள் பரிதாபமாக உச்சுக் கொட்டினாள்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழையும்போதே இன்னொரு அந்நியமான குரல் கேட்டது. சுமார் நாற்பது வயது நிர்ணயம் செய்யக்கூடிய அந்த ஆளை, இந்த நல்ல மனிதர் எனக்குத் தன் மனைவியினுடைய தங்கையின் கணவர் என்று அறிமுகப் படுத்தினார். நல்ல பணக்காரத் தோற்றம். நாங்கள் கை குலுக்கிக் கொண்டோம். அவர் என் வேலை குறித்துக்கேட்டார். நான் சொன்னேன். நான் அவருடைய வேலை குறித்துக் கேட்டேன். “வெளி நாட்டில் இருக்கிறேன். ஆஃப் ஷோரில்” என்றார். தொடர்ந்து அவர், “எங்களுக்கு மூன்று மாதம் முழுக்க வேலை இருக்கும். பிறகு, மூன்று மாதம் விடுப்பில் சொந்த நாட்டில் இருப்போம்” என்றார். மிக நல்ல ஊதியம் வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் கேட்டுக்கொண்டேன். சற்றுநேரம் கழித்துத் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் தான்மட்டும் வந்ததாகச் சொன்னார். அப்போது என் மனைவி எங்கள் அத்தனைப் பேருக்கும் காபி தயார் செய்து வந்து தந்தார். அதை நாங்கள் அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது அந்த விருந்தாளி, நீதிமன்றத் தீர்ப்பை தினசரியில் பார்த்ததாகவும், மிக ஞாயமான தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் சொன்னார். நானும் என் மனைவியும் அவரை ஒரே நேரத்தில் திரும்பிப்பார்த்தோம்.
தன் கணவரின் மீது புகாரளிக்கச் சென்ற இவள், பன்னிரெண்டு மணியைக் கடந்து யாரையோ திட்டிக்கொண்டே வந்தாள். நாங்கள் அவளை சமாதானப்படுத்தினோம். அதற்கெல்லாம் அவள் சாந்தமடையவில்லை. தன்மகள் இல்லாமலானதற்குத் தன் கணவர்தான் காரணமென, வந்திருந்த தன் தங்கையின் கணவரிடம் ஆவேசமாகச் சொன்னாள். நாங்கள் அமைதியாக இருந்தோம். பிறகு, அந்த விருந்தாளி, இவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கிளம்பிவிட்டார்.
(9)
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதத்திற்குப் பிற்பாடு ஓர் முன்னிரவில் அந்த நல்ல மனிதரின் பக்கத்து வீட்டிலிருக்கும் முதியவளின் மகன், என்னுடைய எண்ணிற்கு அழைத்தார். நான் அந்த அழைப்பை நிதானமாக எதிர்கொண்டேன். அவர், அந்த நல்ல மனிதர் ரொட்டிக் கம்பெனியிலிருந்து இன்னும் வீடு திரும்ப வில்லை என்றார். அப்போது நேரம் பதினொன்றுக்கும்மேல் ஆனது. நான் என்னவென்று விசாரிக்கிறேன் என்றேன். அவர், ரொட்டிக் கம்பெனிக்கு அழைத்துக் கேளுங்கள் என்றார். நான் சரி என்றேன். அந்த இரவிலும் நான் அந்த முதலாளியை அழைத்துக்கேட்டேன். அவர் வழக்கம்போல தங்களது கம்பெனியை மூடிவிட்டதாகச் சொன்னார். இவர் இன்னும் வராதது குறித்து நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன். இவர் தன்னுடைய வேலை முடிந்ததும் வழக்கம்போலக் கிளம்பிவிட்டார் என்றார். நான் உடனடியாக அந்த வீட்டிற்குச் செல்வதற்குக் கிளம்பினேன். “இந்த நேரத்திலா…?” என்று என் மனைவி சலித்துக்கொண்டாள்.
எனக்குத் தகவலைச் சொன்னவருடன் இன்னும் இரண்டு மூன்று ஆட்களைச் சேர்த்துக்கொண்டு நாங்கள் அன்றைய இரவில் முடிந்த மட்டும் பல்வேறு இடங்களில் தேடினோம். குறிப்பாக அத்தனை மதுக்கூடங்களையும் அலசினோம். பிறகு, மறுநாள் வரை பார்க்கலாமென நாங்கள் முடிவெடுத்து அன்றைய இரவின் பாதியைத் தாண்டி நாங்கள் அவரவர் வீட்டிற்குச் சென்றோம்.
மறுநாள் நான் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு அன்றைக்கு மதியம் வரையிலும் தேடினேன். அவரைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. இறுதியாக நான் காவல்நிலையத்தில் புகாரளிக்க முடிவெடுத்து என் மனைவியை அழைத்தேன். “நான் எதற்கு?” என்றாள். இந்தப் புகாரை நாம் அளிப்பதற்கு முடியாது. மனநிலை சரியில்லாதவள் என்றாலும் அவரது மனைவியும் கூட வரவேண்டும். அதற்கு உன் உதவி எனக்குத் தேவை என்றேன். சற்று சலித்துக் கொண்டாலும் வருவதற்குச் சம்மதித்தாள். நாங்கள் நேராக அந்த சார் பதிவாளர் அலுவலகம் உள்ள தெருவிற்குச் சென்றோம். அவரது மனைவியை நாங்கள் கிளப்பியதற்கு வரமுடியாதென வம்பு பண்ணினாள். பிறகு, காவல்நிலையம் போகலாம் என்றதும் சட்டெனக் கிளம்பிவிட்டாள்.
காவலதிகாரியிடம் நான், அவரைக் காணவில்லை என்று புகாரளித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியோ தன் மகள் இல்லாமலானதற்கு தன் கணவர் தான் காரணமென அவள் பங்குக்குத் தனியாக புகாரெடுக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். காவலர்களுக்கு அவளுடைய புகாரானது பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக இல்லையென்பதால் எங்களை பல்வேறு விதத்தில் ஆழமாக விசாரித்தார். பிறகு, காணாமல் போனவர் குறித்தத் தகவல் கிடைத்தால் எங்களுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.
காவல் நிலைய வளாகத்தைவிட்டு நாங்கள் வெளியே வந்ததும் என் மனைவி, இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை. என்றார். அவள் மிகவும் எரிச்சலான முகத்துடனிருந்தாள். காவலர்கள் விசாரித்த தொனி அவளுக்குப் பிடித்திருக்காது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. என்றாலும்கூட என்னால் அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது.
(10)
இந்த ஒன்பது நாட்களாக நான் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒருமுறை காவல் நிலையத்திற்குள் நுழைந்து விட்டுத்தான் போகிறேன். எனக்கு காவலதிகாரி ஒரே பதிலைத்தான் சொல்கிறார். ‘நாங்கள் விசாரித்துக் கொண்டும், தேடிக்கொண்டும் இருக்கிறோம். விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அவரை யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் எங்களது புலன்விசாரணைக் குழுவிற்கு இதுவரையில் ஒரு துப்பும் கிடைத்தபாடில்லை…’ குறிப்பிட்ட இந்த நாட்களில் நானும் என் மனைவியும் அந்த மனநிலை பாதித்தவளை குறைகளின்றி பராமரித்துத்தான் வந்தோம். ஆனால் என் மனைவி அடுத்தசில நாட்களில் இந்த வேலை நமக்குத் தேவையற்றது. என்று சலித்துக்கொள்ள ஆரம்பித்தாள். நான் அவளை நிர்பந்திக்க முடியாதது ஒருபக்கம் என்றாலும் அவள் சொல்வதும் சரிதான் என்று நினைத்தேன். காரணம் எனக்கும் அந்தச் சலிப்பு வந்து விட்டிருந்தது. என்றாலும்கூட அந்தப் பெரிய குழந்தையைக் கைவிடக்கூடிய சூழலில் நான் இல்லை.
இந்த விசயத்தில் என் மனைவியை நிர்பந்திக்கவோ, சிரமப்படுத்தவோ விரும்பாத நான், அவளது உதவியின்றி பகல் நேரத்தில் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, இதுநாள் வரையில் தன் பங்களிப்பை முடிந்தவரையில் தந்த அந்தப் பாட்டி மற்றும் அந்தத் தெருவாசிகளின் உதவியுடன் அவளை நான் பராமரித்துக் கொண்டிருந்தேன். சில நேரங்களில் என் மனைவியும் இரக்கப்பட்டு எனக்கு உதவினாள்.
என் மனைவியோ, வேறு யாருமோ இல்லாத ஒருநாளில் நான் அவளுக்கு உணவூட்ட முற்பட்டேன். அவள் மிகவும் சோர்வுற்றுக் கிடந்ததால் என்னால் அவளை அப்படியே போட்டுவிட்டு வர முடியவில்லை. நான் மிகவும் தயங்கினேன். கைகள் நடுங்க ஒரு கவளத்தை எடுத்து அவள் வாயருகே கொண்டு போனேன். சட்டென வாங்கிக் கொண்டு விட்டாள். அன்றைக்கு நான் கலங்கியபடி ஒருமுறை கடந்த காலத்திற்குச் சென்று திரும்பினேன். அதுமுதல் இந்த ஒரு மாதங்களைக் கடந்தும் நான் ஊட்டினால் மட்டுமே சாப்பிடுகிறாள்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேனில்லையா…? என் மனைவி காரணமின்றி எதையும் செய்யமாட்டாளென்று…? இன்றைக்கு என்னைத் திட்டியதற்குக்கூட இதுதான் கராணம்.
அவளுக்கு நான் ஊட்டிவிடுவது என் மனைவிக்குத் தெரிந்து எங்களுக்குள் பல சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியது. என்றாலும் கூட நான் அதை எப்படி நிறுத்த முடியும்? நான் என் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் பிரச்சனையை என் மனைவி தன் உறவினர்கள் சிலருக்குச் சொல்லிப் பெரிதாக்கத் தொடங்கினாள். எங்களுக்குள் நிம்மதியற்ற சூழலே நிலவியது.
ஒருநாள் இரவில் நான் அவளுடன் சில கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவள் என் முடிவிற்கு எதிர் நிலையிலேயே நின்றாள். பிறகு, நாங்கள் இருவரும் ஒரு கூட்டு முடிவெடுத்தோம். அதாவது, அவளை ஏதாவது மனநல காப்பகத்தில் சேர்த்து விடுவதென்று தீர்மானித்தோம். இந்த முடிவு எனக்கு மனவேதனை அளிக்கக் கூடியது என்றாலும் எனக்கும் வேறு வழியில்லை. ஆனாலும் இந்த முடிவை நாங்கள் இருவர் மட்டுமே எடுப்பதற்கில்லை. அவளுடைய தங்கையின் கணவரிடம் ஒருவார்த்தைச் சொல்ல வேண்டும். அவர் இவளை அழைத்துக் கொண்டுபோய் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்குக் கிடையாது. சென்ற முறை வந்த போதே அவர் எண்ணை என்னிடம் கொடுத்து ஏதாவது அவசர உதவி தேவை யென்றால் கட்டாயம் கூப்பிடுங்கள் என்றுவிட்டுப் போயிருந்தார். எனக்காக நான் அவரிடம் என்ன கேட்டுவிடப் போகிறேன்? என் குடும்பத்தில் விரிசல் விழும்போது அவரிடம் இரண்டுமுறை பேசிவிட்டேன். அவர் சென்ற முறை சொன்னதையே அப்போதும் சொன்னார். ‘பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ தற்போது நானும் என் மனைவியும் எடுத்திருக்கும் இந்த முடிவை அவரிடம் சொன்னால் நிச்சயமாக சம்மதிப்பார். இது அவருக்கு எந்த விதத்திலும் சுமையாக இருக்காது.
மறுநாள் அவரிடம் இந்த விசயம் குறித்துப் பேசியதும் நான் நினைத்தது போலவே இதுதான் சிறந்த முடிவு என்றார். பிறகு, எந்த விடுதியில் சேர்ப்பதாக முடிவு செய்திருக்கிறீர்கள் என்றார். நான் ஒரு விலாசத்தைச் சொன்னேன். என்றைக்கு சேர்க்கப் போகிறீர்கள் என்று சொன்னீர்களானால் நான் வருகிறேன் என்றார். நான் அது குறித்து நாளைக்கு உங்களுக்குச் சொல்கிறேன் என்றேன். நல்லது. என்றார். எங்கள் உரையாடலை அத்துடன் நிறுத்திக் கொண்டோம்.
அன்றைக்கு மதியமே எனக்குக் காவல் நிலையத்திலிருந்து அழைத்திருந்தனர். நான் என் மேலதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு அவசரமாக ஓடினேன். ஆரம்பத்தில் நான், என்னைவிட அந்த நல்ல மனிதர் பற்றிய தகவலாகத்தான் இருக்குமென நினைத்தேன். ஆனால் அவர்கள் வேறொரு காரணத்திற்காக அழைத்திருந்தனர் என்பது அங்கே போனதும் தான் எனக்குத் தெரியவந்தது.
நான், என்னைவிட அந்த நல்ல மனிதரின் மனைவியைப் பராமரிக்க முடிவெடித்திருந்த ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறை கூட அவள் தன் கணவரைத் திட்டியோ, உக்கிரமான கோபத்துடனோ பார்த்ததில்லை. நான் செல்லக்கூடிய நேரத்தில் அவள் அத்தனை சாந்தமாக இருப்பாள். இன்றைக்குத் தான் முதன் முதலாக நான் அவளுடைய இன்னொரு முகத்தைப் பார்க்க நேரிட்டது.
“போக்கத்த என் புருஷன் என் குழந்தையைக் கொன்றுவிட்டான். நீ வழக்கை எடுக்கிறாயா…? இல்லையா…?”
என் நண்பனின் பெரியம்மா காவல் நிலையத்தில் சொல்லிக் கூச்சலிட்ட அதே வார்த்தைகள்.
நான் புத்தகத்தை மூடிவிட்டேன்.
-லக்ஷ்மி சிவக்குமார்