ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

 

1.

நன்கறீவீர் நீங்கள்

இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை

ஓர் ஒற்றை ஆடையைத் தவிர

அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்

காதலும் அப்படியே!

 

2.

என்னுள் எரியும் எது

உள்ளத்தின்

பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?

 

உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது

என் அனைத்துப் புலன்களும்

 

சாம்பல் முடிவுற்று

உள்ளத்தின் அகம்புறமும் தீவிரமாய் எரிகிறது

 

உன்னுடைய காதலின் பேச்சுப்படிவம்

மெதுவான வேகத்தில் என்னை எரிக்கக்கூடும்

 

3.

உறுதியாக எனக்குத் தெரியும்

குருதிப் பெருங்கடலில்

அன்பு ஒரு தீவு!

என் உவமைகளை வீணாக்கமாட்டேன்

அன்பு அமைதியின் சின்னம்!

 

4.

அவரின் மடியில்

கலக்கத்துடன் அமர்ந்திருந்த மங்கிய இரவு 

ஒரு மழலையைப் போல

சற்று நேரத்திற்குமுன் இறந்துவிட்டது

 

தோல்வியே!

உன்னுடைய பிற பெயர்களை அறிந்திருக்கவில்லை நான்

நீயோ இருண்ட வானின் குவியலாகவும் இருக்கலாம்

 

யாரறிவார் ?

வானத்தின் எப்பகுதியில்

வெளிறிய, மங்கலான பெருந்தீ

ஆழ்ந்து உறங்குகின்றதென ?

 

5.

வியப்பான, எதிர்கால அறிவிப்பினைக் கையில் பிடித்து

நான் இப்பாடலை முடிந்தவரை முடித்துவிடுகிறேன்

 

ஓர் அமைதியில்லா சாவாக

குருதியின் செய்தி இறக்கின்றது

நேர்த்தியும், உடையுமற்ற உடம்பில்

 

பழக்கமான சொற்களின் அலட்சியத்தைச்

சுத்தியால் அடிக்க எனக்கு இசைவு தாருங்கள்

அல்லது

குருதிச்சோகையில், சாகும் நிலையுள்ள, 

கடினமான வாழ்வின் மெய்ம்மையைத் துண்டிக்க

வெல்ல முடியா வாளினுடைய

அறிவுக்கூர்மையைக் கொண்டு வருக!


அசாமி மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு : ஹிரென் பட்டாச்சார்யா

தமிழில்: கு.அ.தமிழ்மொழி


மூல ஆசிரியர் குறிப்பு:

ஹிரென் பட்டாச்சார்யா 1932 ஆம் ஆண்டில் அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் பிறந்தார். அசாமி மொழியில் அறியப்பட்ட மிகவும் விரும்பப்பட்ட மற்றும் அசாமி கவிஞர்களில் ஒருவராக இருந்தார்.  அவர் அசாமியில் எண்ணற்ற படைப்புகளை எழுதியதோடு அவரின் கவிதைக்குப் பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றார்.  

பிரேம் அரு ரோடலிர் கோபிஎன்பது அசாமி இலக்கியத்தில் அவரது மற்றொரு பெயர்.  ஹிரென், பல அசாமி இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களின் ஆசிரியராக இருந்துள்ளார்.  அவற்றில் சில சித்ராபன், மோனன் மற்றும் அன்டோரிக்.  அவரின் பணி, அசாமிய கவிதைகளுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது.  

ஹிருடா மிகச்சிறிய அகவையிலேயே எழுதத் தொடங்கினார், அவரின் முதல் கவிதை 1957 இல் வெளியிடப்பட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பான மோர் தேஷ் மோர் ப்ரீமோர் கபிதா 1972 இல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6 கவிதைத் தொகுப்புகளையும், “கோரா தெமாலி”, “அகான் தெமாலி” என்ற தலைப்பில் இரண்டு குழந்தைப் பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

நேர்மறை வாழ்க்கை, அன்பு, உயிர்நேயம் இவற்றின் மீது அரிய பார்வை, நுண்ணறிவு கொண்டவர். எழுத்துகள் மூலம் சிக்கலான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன்   மற்றும் குறிப்பிடத்தக்க தெளிவான மற்றும் எளிமையான பாணியின் மூலம் வாசகர்களுடன்  நேரடித் தொடர்பு ஆகியவை வழியாக அவரை சமகால அசாமி இலக்கிய உலகின்  சிறந்த சில கவிஞர்களில் ஒருவராக ஆகிறார். அவருடைய அனைத்துக் கவிதைகளும் அதே கவிதையின் பகுதி என்று கூறி, அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மனின் படைப்புகளை நினைவுபடுத்துகிறார்.  

பாரதிய பாஷா பரிஷத் விருது  ( 1993 ), பிஷ்ணு ரபா விருது  (1985 )

இராஜாஜி புரோஸ்கர்  ( 1984 85 ) சோவியத் தேஷ் நேரு விருது  (1987 )

சைச்சோர் பதர் மனுஎன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பிற்காக 1992 இல் சாகித்ய அகாடமி விருதுஅசாம் உபோதிகா சாகித்யா போடா ( 2000 ) விருது  ஆகியவற்றைப் பெற்ற சிறப்புக்குரியவர். இவர் ஜூலை 4, 2012 இல் மறைந்தார்


மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு: 

கு.அ.தமிழ்மொழி  கவிஞர், பண்பலை தொகுப்பாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தன்னுடைய 9 ஆம் அகவையில் எழுதத் தொடங்கியவர். இவரின்

“புத்தனைத் தேடும் போதிமரங்கள்” ஐக்கூ நூல் திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்ப்பட்டத்திற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சாத்தூர், ஶ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குரிய “இக்காலக் கவிதையும், சிறுகதையும் மற்றும் சமய இலக்கியமும் புதினமும்” என்ற பாடநூலில் கு.அ.தமிழ்மொழியின் படைப்பு, துளிப்பா (ஐக்கூ) பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவர் 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசின் “தேசியக் குழந்தை விருதை” எழுத்தாற்றலுக்காகப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

  1. மனம் தொடும் கவி வரிகள். கவிதை மூன்றும் நான்கும் மடிவிட்டு இறங்கா குழந்தையென மனம் விட்டு இறங்க மறுக்கின்றன. தேர்ந்த மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.