இடிந்த வானம்


வானம் ஒரு நீலக்குடை. நம் கூடவே வரும். ஆனால் மாறும். என்ன, அதன் பிடி தான் நம்மிடம் இல்லை. நாம் எந்த பக்கமும் நகர்ந்து பாக்கலாம். அப்படி நகர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால் அதனுடைய உச்சி நமக்கு நேராகத் தானே தெரியும்?” என்றாள் அம்பரி, இருகைகளைக் கொண்டு கோப்பையை பிடித்து சரண் போட்டு கொடுத்த காப்பியை பருகிய படி.  பால்கனியின் இடைவெளி வழியாக காற்று கூடத்திற்குள் உட்புகுந்தது. ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலை மடிப்புகள் காற்றில் நெளிந்து சரசரத்தன.

அவள் கூடத்தைவிட்டு பால்கனியை நோக்கி நகர்ந்தாள். சரணும் காப்பிக் கோப்பையை எடுத்துக்கொண்டு அவளை தொடர்ந்தான்.

“பிறகு” என்றான் சரண்.

“நான் சொன்னேன் அவர்களிடம். எந்த ஒரு கட்டிட கட்டுமானத்தையும் வடிவமைக்க நான் தலையாயதாகக் கொள்வது அங்கு வந்திருந்து செல்லும் மக்களைத் தான். என் வடிவமைப்பு அலுவலகங்களுக்கோ மருத்துவமனைக்கோ ஏற்புடையதல்ல. ஆனால் கேளிக்கை அரங்குகள், நட்சத்திர விடுதிகள், உணவுக் கூடங்கள் இப்படி வேண்டுபவர்களுக்கு ஏற்புடையது. அங்குள்ள மக்களை எப்படியாவது அந்த இடத்திற்குள் அதிக நேரம் இருத்தி வைப்பதற்குண்டான ஒன்றாக அந்த வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த மனிதர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு மேடைகள் வேண்டாம். தன்மேல் பிறர் கவனம் பட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் கூட்டத்தில் தன் இருப்பை மொத்தமாகவும் தொலைத்து விடக்கூடாது. அவரவர்கள் தங்களையே மையமாக உணர வேண்டும். இது ஒரு உளவியல் முடிச்சு. அவர்களைச் சுற்றி ஒரு வட்டம் இருப்பது போன்ற ஒரு பாவனையை அங்குள்ள அனைவரிடமும் உணரச் செய்யவேண்டும். கூட்டத்தில் அவர்கள் எவரொருவரும் இயல்பாக செய்யக்கூடுவது அண்ணாந்து உச்சியை நோக்குவது ஒன்றே. அப்படிப் பார்த்து அந்த கூரையின் உச்சிக்கு நேர் கீழ் தான் இருக்கிறேன் என்ற பிரமையை ஒருவனுக்கு ஏற்படுத்திவிட்டால் அவன் தன்னை வட்டத்தின் மையமாக உணர நேரிடலாம் தானே. அப்படி மையமாக உணர்பவன் ஒரு வகை அதிகாரத்தை உணர்வான். அந்த இடத்தை விட்டுப்போகத் தயங்குவான்.  அங்கேயே அதிக நேரம் செலவழிப்பான்.”

“ஹ்ம்ம்.” என்றான் சரண்.

“உடனேயே என் பிரதியை அங்கீகரித்துவிட்டனர். அங்கேயே கையெழுத்திட்டு எனக்கான தொகையை கொடுத்துவிட்டனர்”

“நன்று” என்றான் சரண்.

“வானத்தைக் குடை என்று சொன்னேன் அல்லவா? வெட்டவெளியில் நின்று நீ வானத்தைப் பார்க்கவேண்டும். அதன் வளைவை நோக்க வேண்டும். ஒருமுறை வட்டமிட்டு அதன் விளிம்புகளை அதாவது அடிவானத்தைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது நாம் வந்தடைவது ஒரு அரைக்கோள வடிவு. அதாவது வானம் கவிழ்த்து வைக்கப்பட்ட கிண்ணம் போன்று நம்மை மூடி இருக்கும். நாம் அதன் மையத்தில் நின்றிருப்போம். அப்படி ஒரு கட்டமைப்பைத் தான் நான் வலியுறுத்தினேன். முழு வீச்சுடன் அதற்காக நேரம் செலவழித்தேன். அவர்களிடம் முன்மொழிந்து என் வரைவை சமர்ப்பித்தேன்” என்று தொடர்ந்தாள். கையில் இருந்த காப்பியை ஒரு மிடறு அருந்திவிட்டு “உன்னால் ஊகிக்கமுடிகிறது அல்லவா?” என்றாள்.

“ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வானத்தை ஏற்படுத்தி தரும் ஒரு வடிவமைப்பு. அதானே?”

“அதேதான். அப்படித்தானே இந்த வானம் நமக்கு தென்படுகிறது. இந்த இடத்தில் இருந்து நான் பார்க்கும் வானமும் இதோ நீ நிற்கும் இடத்தில் இருந்து நீ பார்க்கும் வானமும் ஒன்று தான். ஆனால் வேறானவை. ஏனென்றால் அதன் மையம் முறையே நானும் நீயும் அல்லவா. ஒரே வானத்திற்கு இரு மையங்கள். நீ பார்ப்பது உன் வானம். நான் பார்ப்பது என் வானம். அவரவர் வானம். மையம் மாறி மாயம் காட்டுகிறது. அந்த மாயையைத் தான் என் தொழில்நுட்பம் கட்டமைக்கிறது. அதை கணக்கில் கொண்டு தான் நான் வடிவமைத்தேன். நான் செய்ததெல்லாம் எல்லையற்ற இந்த வானத்தை நகல் செய்து எல்லைக்குட்படுத்திய மாதிரி வானங்களை எழுப்புவது. என் கட்டிட வடிவமைப்பு தொழில்நுட்பம் மொத்தமும் அதில் தான் அடங்கியிருக்கிறது. ‘அவரவர் வானம்’ என்று இந்த கட்டிட தொழில் நுட்பத்திற்கு பெயரிட்டிருக்கிறேன். பதிவு செய்யவேண்டும். அப்படி எழுப்பப்பட்ட கட்டிடத்தில் உள்ளிருந்து பார்க்கும் எவருக்கும் அக்கட்டிடத்தின் கூரை வானம் போலவே தெரியும். அதற்குள் இருப்பவர்கள் எந்த இடத்திலிருந்து உச்சியை நோக்கும்போதும் அதன் மையத்தில் இருப்பதைப் போல் உணர்வார்கள்.” என்றாள் தன் கடைசி மிடறையும் அருந்திவிட்டு.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? எனக்கான வாழ்த்துக்கள் ஏதும் இல்லையா உன்னிடத்தில்?”

“விரைவிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த ஆர்க்கிடெக்ட்கள் தர வரிசையில் இடம்பெறப் போகும் என் மனைவியின் முன் பேச்சிழந்து மூச்சறைந்து நிற்கிறேன். வேறொன்றுமில்லை” என்றான்.

“குறைந்தபட்சம் கையில் ஒரு முத்தம்.  அதற்காகவாவது இந்த கணிணிவியலாளன் கனியக்கூடாதா என்ன?”

“வானத்தை உள்ளங்கையில் அடக்கப் போகும் அந்த கரங்களுக்குத் தானே நிச்சயமாக” என்று அவளிடம் கோப்பையை வாங்கிவைத்துவிட்டு, அவள் இருகரங்களையும் பற்றி முத்தமிட்டான்.

“இந்த கரங்களின் ஸ்பரிசம் என்னை நம் காதல் தருணங்களுக்கு கொண்டு செல்கின்றது”

“ஆஹா”

“ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்கு பின்னே”

அவள் புன்னகைத்தாள்.

“நாம் எத்தனை ஆண்டுகள் காதலித்தோம் என்று நினைவிருக்கிறது அல்லவா?”

“இருக்கிறதே. மணம் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அதற்கு முன் நான்கு ஆண்டுகளாக காதலித்தோம். நீ என்னை எப்படியெல்லாம் துரத்தி வந்தாய்! என்னைக் கைப்பற்ற என்னவெல்லாம் சொன்னாய்! பெற்றோரின் முன்பான என் மன்றாடல்கள். எல்லாமே நினைவிருக்கிறது.”

“நினைக்க நினைக்க ஒரு பசுந்தளிரின் சுவை அல்லது ஏதோ ஒரு இலைநுனிக் கொழுந்தின் வாசம்”

“ஆஹா. அப்படியா?” என்று சொல்லிவிட்டு கூடத்தின் வழியாக அவளது அறைக்குள் நுழைந்தாள்.

“இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. அவரவர் பாடு என்று இருக்கிறோம். இல்லையா?” என்றான் சற்று உரத்த குரலில்.

“நம் தெரிவு தானே அதுவும்” என்று அவளது அறையில் இருந்து பதில் வந்தது.


வள் கைகளில் வண்ணக்கலவைகளோடும் தூரிகையோடும் நின்றுகொண்டிருந்தாள். பின்னிருந்தவனாய் இவன் பேசினான்.

“இன்றைக்கும் வானம் தானா?“

“என்றைக்கும்”

அவள் வானத்தை வரைந்து முடித்திருந்தாள். அன்றைக்கு பின் அந்தி வானம். இதோ கதிரவன் சற்று முன் சரியாக ஐந்து நிமிடத்திற்கு முன் மறைந்தது என்று அதனைக் கண்டால் சொல்லிவிடலாம். வரைந்த சட்டகத்தின் முக்கால் வாசி அடர்நீலம். அடியில் போக போக வெளிறியிருந்தது. அதற்கு கீழ் முகிழ்ந்த சூரியனின் அகன்று விரிந்த ஒளி அரை வட்டம். அதிலிருந்து வெளிர் நிற ஆரங்கள் எழுந்து மேல் இருந்த நீலவானை பகுத்தன. அடிவானின் அடுக்குகளில் மேல் அடுக்கில் ஒளிர்மஞ்சள். இடையில் அடர்சிவப்பு. அடியில் கருமை. வானம் முடிந்துவிட்டது.

அவள் சொல்வாள். “வானம் ஒவ்வொரு கணமும் மாறுகிறது. அதன் நிறம் வேறுபடுகிறது. வானத்தின் மொத்த நீலத்தையும் என் தூரிகையால் உறிஞ்சிவிடவேண்டும். அதான் இப்படி வரைகிறேன். நீலம் என்பது ஒரு நிறம் தான். ஆனால் அதற்குள் எத்தனை வகைமைகள்? எத்தனை வேறுபாடுகள் கொண்டு வானத்தில் திகழ்கிறது? அத்தனையையும் நான் என் கைகளைக் கொண்டு புனைய வேண்டும். நான் வரையாத நீலம் என ஒன்று வானில் இருக்கக் கூடாது”.

“வானத்தின் நீலத்தை பிழிந்து எடுத்தல் ஒருவகையில் வானையே கைகளுக்குள் போட்டுக்கொள்ளுதல் தானே? கடைசி நீலமும் சொட்டி உதிரும் வரை நான் விடப்போவதில்லை” என்றாள் அப்போது கண்ணைச் சிமிட்டி நகைத்தபடி.

“வானத்தை தொட்டுத்தொட்டு எடுத்து அதனை வரம்புக்குள் வைக்கப் பார்க்கிறாயா?”

“ஹஹா..அப்படியும் சொல்லலாம் தான்”

“உனக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் ஏற்கனவே அதனை எங்களுக்கு தெரிந்த வரம்புக்குள் நிறுத்திவைத்திருக்கிறோம்” என்றான் சரண்.

அவள் ஆவலுடன் “எப்படி?”

“கணிணிவியலில் இந்த உலகமே 0-க்களும் 1-களும் தானே!”

“ஆம்”

“நிறத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறோம்”

“முதன்மை வண்ணங்கள் என்று அறியப்படுவன எவை?

“ஹ்ம்ம்.. சிவப்பு, பச்சை, நீலம்”

“ஆம் உலகில் இருக்கும் அத்தனை நிறமும் இந்த மூன்றின் கலவை தான். ஆகவே இந்த மூன்றைக் கொண்டு ஒரு நிறமுறையை கையாள்கிறோம்.  RGB நிறமுறை. அதன்படி சிவப்பிற்குள்ளாகவே தனியே 256 வகை வண்ணங்கள் உண்டு. பச்சைக்கு தனியே 256. நீலத்திற்கு 256. இவை மூன்றும் கலந்து கலவையாக எழும் நிறங்களையும் இம்முறைப்படி வரையறுக்கலாம். அப்படி மொத்தம் 256* 256 * 256 வண்ணங்கள். ஆகவே உன் வானத்தை 256 வகை நீல வண்ணங்களாக சுருக்கிவிடலாம்” என்று அவனும் சிரித்தான்.

பின்னர் அவன் அவள் அலமாரியில் வரையப்பட்டு அடுக்கி வைத்திருந்த கேன்வாஸ்களைப் பார்த்தான்.

எவ்வளவு விதமான வானங்களை அவள்  வரைந்திருக்கிறாள். வைகறை வானம். புலர் வானம். உச்சிப் பொழுதின் வான். அந்தி வானம். அதிலும் முன் அந்தி. பின் அந்தி. மேலும் நிலவு எழும் வான். நிலவு வீழும் வான். வெவ்வேறு நோக்கு கோணங்களில். இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை தான். ஆனால் ஒவ்வொன்றும் வேறானவை. அனைத்தும் அவள் பார்த்துப் பார்த்து வரைந்தவை அல்ல. அவளுக்குள்ளே அவள் காணக்கண்டது தேங்கிக் கிடந்தது எல்லாம் இப்படி எழுந்திருக்கிறது.

ஒரு கணத்தில் தன்னிச்சையாய் ஏதோ அவளிடம் கேட்கவேண்டும் என்று தோன்றி கேட்டான்.

“ஏன் உன் அத்தனை வானத்திலும் மேகங்களே இல்லை?”

அவள் அதற்குள் துணுக்குற்றாள். புரியாதவள் போல விழித்தாள். அதை எண்ணி அதிர்ந்தாள். பின்னர் எப்படி விட்டுப் போனது என்று எண்ணத் தொடங்கினாள். ஆனால் புலப்படவில்லை.

அவன் மேலும் தொடர்ந்தான். “என்ன அப்படி நிற்கிறாய்? உன் வானத்தில் ஏன் மேகங்களே இல்லை? ஒரு மூட்டம் இல்லை. திரட்சி இல்லை. மென்புகை இல்லை. அடிகறுத்து அடுத்த கணமே பொத்தென்று விழுகின்ற சூல்மேகங்களே இல்லையே ஏன்?”

அவள் அந்த அதிர்விலேயே இருந்தாள். அப்படி ஒரு வானைப் பார்த்து தான் நினைவில் வைத்துக்கொண்டது இல்லையா? மேகம் கொண்ட வான் என்ற ஒன்று தன் ப்ரக்ஞையில் பதியவே இல்லையா? என்று எண்ணியபடி நின்றுகொண்டிருந்தாள்.

அவன் சொல்ல ஆரம்பித்தான். “உன் ஓவியங்களில் நிலமே இல்லை. நீர்வெளியே இல்லை. வெற்றுவெளி தான் இருக்கிறது. வானும் நிலமும் ஒருசேர ஆசைப்பட்டால் தான் அங்கே மேகம் இருக்கும். மேக நடமாட்டம் இருக்கும். நீ வரைந்திருப்பது எல்லாம் வெறும் வெறுமையை. பாலை வானத்தை அல்லது வானத்துப் பொட்டலை” என்றான்.

அவள் மிகுதியாகவே சீண்டப்பட்டாள். அவனை எதிர்கொள்ளமுடியாமல் தவித்தாள். “அதற்கு என்ன என்கிறாய்?” என்று உரக்க கத்திவிட்டாள்.

“ஒன்றுமில்லை. நீ உன் வானத்தில் முட்டிக் கொள்ளாமல் இருக்க வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு அவன் அந்த அறையில் இருந்து நீங்கினான்.


ரு நாட்களுக்கு அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. பின்பு அவளே அவனிடம் வந்தாள் குழைந்த மனத்தில் குமிழ் உடைந்தது போல.

“சரி. நீ என்னை குத்திக் காண்பிப்பதை பொறுக்க இயலவில்லை. அதனால் தான் அன்று உரக்கப் பேசிவிட்டேன். நீ என் மருத்துவ நிலையை நன்றாக உணர்ந்தவன் தானே. பின்பு ஏன் அந்த இடத்திற்கே வந்து நிற்கிறாய்? திருமணம் முடிந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் நாம் பார்ப்பதையெல்லாம் பார்த்தாயிற்று.

“இன்னும் எத்தனை நாள் இதையே சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறாய்? வந்தனா தான் மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு முயற்சி செய்து பாருங்கள் என்று வலியுறுத்தினாளே. பின் ஏன் இந்த தயக்கம்?”

“சரி. அவளிடம் கலந்தாலோசிக்கலாம்”

இருவரும் அமைதி காத்தனர். பின் அவனே அவளிடத்தில் “உனக்கு குழந்தை வேண்டும் என்றே ஆசை இல்லையா?” என்றான்.

அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த கணத்தை விட்டு நழுவ வேண்டும் என்று நினைத்தாள்.

“சொல். அந்த ஆசையை நீ வெளிப்படுத்தி நான் கண்டதே இல்லை. ஏன்? என்னைப் புழுவாக பார்க்கிறாய் அல்லவா? இப்போது கூட நான் வற்புறுத்துவதால் தானே சரி என்று சொல்கிறாய். ஏன் உன் கண்களில் நான் அதை உணர்ந்ததில்லை?”

அவள் சலனமில்லாமல் அமைதி காத்தாள். அவன் உரத்த குரலில், “சொல் சொல்” அவள் இருகைகளையும் பற்றிக்கொண்டு விழிகளை விரித்துப் பெரிதாக்கி அவளிடம் மன்றாடினான். பின்னர் ஒரு வேகத்தில் அவளை பிடித்து தள்ளி, “உனக்கு வேண்டாம் என்று கூட இருக்கலாம். ஆனால் எனக்கு வேண்டும். நீ பாரமாகக் கூட கருதலாம். அதை ஒதுக்கலாம். ஆனால் என்னால் முடியாது. அய்யோ! கடவுளே! என்னால் பிரசவிக்க முடிந்தால், இந்த பாவியின் முன் மன்றாடிக்கொண்டிருக்க மாட்டேனே. என்னை ஆணாய் படைத்துவிட்டாயே” என்று உடைந்து அழுதுவிட்டான்.

அவள் “நான் தான் சரி பார்க்கலாம் என்றுவிட்டேனே! இன்னும் என்ன?” என்று அவனை அப்படியே விட்டுச் சென்றுவிட்டாள்.


ம்பரி மற்றும் சரண். உங்கள் இருவரையும் காக்கவைத்ததற்கு மன்னிக்கவும். இன்றைக்கே ஐந்தாறு பிரசவம் பார்த்தாகிவிட்டது. விஷயம் கேள்விபட்டேன் அம்பரி. நீ கட்டமைத்த கட்டுமான வடிவமைப்புக்கு நல்ல வரவேற்பாமே. என் தோழிடீ நீ” என்று கையுறைகளை அவிழ்த்துவைத்து விட்டும் நிதானமாக வந்து இருக்கையில் அமர்ந்தாள் வந்தனா.

சரண் வாய் திறந்து சொன்னான். “நாங்கள் பிள்ளை பெற்றுகொள்ள முயற்சிக்கலாம் என்று இருக்கிறோம்.”

வந்தனா, “நல்ல விஷயம் சரண் மற்றும் அம்பரி. அம்பரியினுடைய ரிப்போர்ட்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. அவளும் என் மாதாந்திர ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு வந்திருக்கிறாள். இந்த சமயத்தில் நன்று என்றுதான் படுகிறது. வாழ்த்துக்கள்” என்றாள்.

சரண் சொன்னான். “அவளிடம் சற்று எடுத்துச் சொல் வந்தனா?”

“அம்பரி, இன்னுமா நீ நான்கு வருடங்களுக்கு முன் நடந்ததை எண்ணி துயருற்று இருக்கிறாய்? என்னிடம் எதுவும் கூறியதே இல்லையே?”

அம்பரி எதுவும் பேசவில்லை.

“இங்கே பார் அம்பரி, ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட கருச்சிதைவு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நீ நன்றாக ஆகிவிட்டாய். அதையே நினைத்துக்கொண்டு குழப்பிக் கொள்கிறாயா? மீண்டும் தாயாவதற்கான தடை உன் உடம்பில் இல்லை. உடம்பு ஒத்துழைக்கும் பட்சத்தில் மனதில் மட்டும் அந்த தடையை வைத்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல”

சரணிடம், “இவனை நன்றாகத் தானே கவனித்துக்கொண்டு வருகிறீர்கள்?” என்றாள்.

“ஆம்” என்றான் சரண். “ஒன்று சொல்ல வேண்டும் வந்தனா. அவள் இயல்பு நிலை மீண்டுவிட்டாள்.  முன்பு நிகழ்ந்ததையே போட்டு குழப்பிக்கொண்டு பீடித்து காணப்படவில்லை. அவளுக்கு பயமோ நடுக்கமோ முன்பு நடந்ததைப் பற்றிய பிந்தைய அதிர்ச்சியோ இல்லை. ஆனால்.”

“ஆனால் என்ன?”

“அவளிடம் மகப்பேறடைய ஆசையே இல்லை.  தன் உடலை இயந்திரமாக்கிக் கொண்டு செயல்படுகிறாள்.”

“என்ன இது அம்பரி. உன்னையே நீ ஏன் கடினப்படுத்தி வைத்திருக்கிறாய்? ஆசையில்லாமல் மண்ணில் பிறப்பென்பது நிகழாது அம்பரி. பிறப்பென்றால் அது ஆசையே. ஆசை அருவமானது அது உருவமாக திரண்டு வந்து பிறப்பில் நிகழ்கிறது. ஒவ்வொரு விதைக்குள்ளும் ஆசை ஒளிந்திருக்கிறது. உனக்கு ஒன்று தெரியுமா அம்பரி? பெண்களாகிய நாம் பிறக்கும் போதே நாம் பிரசவிக்கப் போகும் அணுக்களையும் உடன் கொண்டு பிறக்கிறோம். அதாவது நம் பிள்ளைகளை அணுக்களாய்க் கொண்டே நாம் பிறக்கிறோம். எத்தனை பேராசைக்காரர்கள் பார் நாம்? அந்த அணுக்கள் பின்னாட்களில் சினைமுட்டைகளாக முதிர்ச்சி அடைகின்றன. பிறகெப்போதும் அந்த அணுக்கள் நம்மிடம் தோன்றுவதில்லை. ஆண்களுக்கு அப்படி இல்லை.

நாம் பிறப்பெடுப்பதே நம்மிடம் இருக்கின்ற அந்த அணுக்களைத் தீர்க்கத்தான். நாம் பிறக்கும் போது அவை லட்சக் கணக்கில் இருக்கின்றன சரியாக சொல்லப் போனால் 10 20 லட்சம் எண்ணிக்கை. பூப்பெய்தும் போது மூன்று லட்சம் தான் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் ஐந்நூறு மட்டும் தான் முற்றி சினை முட்டையாய் மாதாமாதம் வெளிவருகிறது. கருக்கட்டல் நிகழ்ந்தால் அந்த எண்ணிக்கை தடைபடுகிறது. மாதவிடாய் ஓயும் போது நாம் முற்றிலும் ஒழிந்து கிடப்போம். அதனால் ஆசைப்படு. வேறெதுவும் கைகொடுக்காது. உடலுக்கு மருந்துண்டு. ஆசைக்கு மருந்தேது? ஆதலால் ஆசைப்படு ” என்றாள் வந்தனா.

சரணிடம் திரும்பி, “சரண், வந்ததற்கு எதற்கும் அம்பரியை ஒரு பரிசோதனை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். என்ன?”

வந்தனாவும் அம்பரியும் பரிசோதனை முடிந்து திரும்பி வந்தனர். “கவலைப்பட ஒன்றும் இல்லை. அம்பரி நல்லபடியாக இருக்கிறாள். நீங்கள் கொஞ்சம் அவளிடம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் சரண். இருவருக்கும் என் வாழ்த்துக்கள்”


லங்கிய சுனையின் மேல்பரப்பில் நீர் கலக்கம் ஓய்ந்து தெளிந்து வருவது போல அம்பரி உள்ளம் தேறினாள்.  முன்பைப் போல அவள் அறையிலே இல்லாமல் வீட்டில் முழுவதுமாக இருக்க ஆரம்பித்தாள். காலை வேளை முழுதும் அலுவலகப் பணிகளை மடிக்கணிணியை வைத்துக்கொண்டு முடித்துவிடுவாள். தேவையென்றால் அவள் அறை பக்கம் போவாள்.

மாலை நேரத்தில் பால்கனியில் வந்து நின்று கொள்வாள். வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள். மேகங்களை நோட்டமிடுவாள். மேகங்களை நோக்கும் கண்களை வரவழைத்துக் கொண்டாள்.  மேகங்களுக்கு பழகி கொண்டாள். வெவ்வேறு வகை மேகங்கள் அவளை நிறைத்தன. வானின் வெவ்வேறு உயரங்களில் நிலைக்கொண்டுள்ள மேகங்களை அவள் பட்டியலிடத்தொடங்கினாள். அருவ மேகங்களை உற்று நோக்கி நோக்கி அவற்றிலிருந்து உருவங்களும் வடிவங்களும் எழுந்து வந்தன. மேலும் மேலுமென மேகங்கள் திரண்டு வந்து அவள் கண்டுகொண்ட உருவை செழுமைப்படுத்தின.

முதலில் அவள் மேகத்தில், ஒரு அணில் பிள்ளை ஏதோ பழத்தினைக் கொறிப்பதைக் கண்டாள். பின்னர் ஏதோ ஒரு நீர் நிலையில் இருந்து ஒரு அன்னப்பறவை நிற்பதற்கும், பறப்பதற்கும் இடைப்பட்ட வெளியில் நிலைத்திருந்ததைக் கண்டாள். தொடர்ந்து கங்காரு தன் குட்டியை சுமந்து கொண்டு சிங்கத்தினை துரத்தி துள்ளுகிறது. சிங்கம் அதன் பாய்ச்சலுடன் தெரிந்தது. பின்னர் ஒரு மயில்புறா தன் சிறகுகளைக் கொண்டு சடசடக்கிறது. அந்த சப்தம் அவள் காதில் வந்து விழுந்தது. சடசடத்ததில் சிறகில் நின்ற நீர்துளிகள் அவள் மேல் தெளித்தன.  இப்பழக்கம் அவளை நன்றாகவே ஆசுவாசப்படுத்தியது. சரணும் அவளது மாற்றங்களை கவனித்துக் கொண்டு வந்தான். அவளை நன்றாக பார்த்துக்கொண்டான். பின்வரும் நாட்களில் அவள் அத்தனை விடாப்பிடியாய் இல்லை. சரணின் ஆசைக்கு இணங்கி வாழை மட்டையில் நீர் என ஒழுகினாள். அவர்கள் அவ்வப்போது உறவு கொள்ளலாயினர்.

பின்னர் ஒரு மாலை வேளையில் அவளது பால்கனியில் மேகங்கள் திரண்டு நின்று கொண்டிருந்தன. உள்ளிருந்து பார்த்ததில் பெரிய காற்றடைத்த பை போல இருந்தது. வெளியே வந்து பார்த்தாள். அது பனிக்குடம். அதில் ஒரு உருத்திரண்ட மகவு உறங்கிக் கொண்டிருந்தது. பனிக்குடத்தின் இடைவெளியும் மகவின் கால்களும் கைகளும் தலைப்பகுதி வீக்கமும் துல்லியமாய் தென்பட ஆரம்பித்தது. அதைக் கண்டவள் அதிர்ச்சியுற்றாள். பின் வந்த தினங்களில் அவளது நாட்கள் தவறியது. தான் கருவுற்றிருந்ததை கண்டறிந்து கொண்டாள்.


ம்பரியின் ஆறாவது மாதத்து தொடக்கத்தில் ஒருநாள் அவளது அறையில் தனியாக இருந்தாள். வானத்தை திரைக்கொண்டு மூடுவது போல அந்தி எழுந்து இருள் சூழ்ந்தது. தன் அறை ஜன்னலுக்குப் பக்கமாய் இருந்த சுவற்றில் ஒரு நிழலசைவைக் கண்டாள். அந்த நிழலை அவள் எப்போதும் கண்டிருக்கிறாள். ஆனால் அதில் இருந்த அசைவையும் சலசலப்பையும் அதுவரை கண்டதில்லை. அவள் வீட்டில் இருந்து வெளியே வலப்பக்கம் திரும்பியதும் ஒரு மேம்பாலம் இருக்கிறது. அந்த மேம்பாலம் துவங்கும் இடத்தில் 25மீட்டர்  ஐந்தடுக்கு மாடி உயரத்திற்கு சூழ் விளக்குகள் பொருத்தப்பட்ட ஒரு மின்கம்பம் நாட்டப்பட்டு இருந்தது. அதன் உச்சியின் நிழல் தான் அது.  ஆனால் அந்த நிழலில் இன்று ஏதோ புதிதாக இணைந்திருக்கிறது. அதுதான் அந்த சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவள் உற்று நோக்கினாள். ஏதோ ஒரு பறவைக் கூட்டின் நிழல். எத்தனை உயரத்தில் கொண்டு போய் அக்கூட்டைக் கட்டியிருக்கிறது அப்பறவை? அவ்வளவு உச்சிக்கு வந்து வெயிலின் கீழ் ஏன் தன் கூட்டை அமைத்துக்கொண்டது? அவள் அவ்வப்போது அங்கு வந்து போகும் இரு பறவைகளின் நிழலையும் கண்டாள். அவளுக்கு அந்தப் பறவைகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க வேண்டியிருந்தது. அவை என்ன பறவை? அவற்றின் நிறம் எப்படியிருக்கும்? அவற்றின் சிறகுகள் என்ன வண்ணத்தில்? அதன் அலகுகள்?

மேகத்தை மறந்து அந்த பறவைகளின் நிழல்கள் மீது நாட்டம் செலுத்தினாள். இரண்டு மூன்று தினங்களுக்கு அவற்றை கவனித்தாள். ஒரு நாள் காலை எழுந்தபோது உதிரப்போக்குடன் இடையில் தாள முடியாத வலியை உணர்ந்தாள். துடிதுடித்து சரணை அழைத்தாள். சரண் அவசர அவசரமாக அவளை காரில் ஏற்றி  வந்தனாவிடம் கூட்டிச் சென்றான். வந்தனா முறையாக அம்பரியை பரிசோதித்துப் பார்த்தாள்.

சரணிடம் அவள், “எனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை?”

“சொல். சொல். என்ன ஆயிற்று?”

“மீண்டும் ஒரு கருச்சிதைவு”

சரண் கலங்கி நின்றிருந்தான்.

“சிசு கருப்பையிலே இறந்துவிட்டது. போனமாதம் வரை இதய துடிப்பு இருந்திருக்கிறது. போன மாதத்து பரிசோதனை அறிக்கையின் நகல் என்னிடம்  இருக்கிறது. மீயொலி சாதனத்தில் இன்று பார்த்தபோது இதய துடிப்பு நின்றுவிட்டிருக்கிறது. அதன் கைகள் உடலை ஒட்டி குறுக்காக இறுக்கி இருந்தன. அது தன்னையே நெறித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கருப்பையில் சிசு தங்கவில்லை. அதன் எடையைத் தாங்க முடியவில்லை. கருப்பையின் வாய் அகன்று திசுக்கள் கீழிறங்கியதால் குருதிப்போக்கும் வலியும் ஏற்பட்டிருக்கிறது. சிசு எப்போது இறந்திருக்கும் என்று எங்களால் சரிவர சொல்ல இயலாது ”

“அதில் எந்த கருவும் தங்காது. அது அவளது வானம்” என்று வீறிட்டு அழுதான். “எல்லாம் என்னால் தான். அவளை அவள் போக்கிலேயே விட்டிருக்க வேண்டும். என் தவறு. ஆசைப்படு ஆசைப்படு என்று அவளை இப்படி கட்டிலில் சாய்த்திருக்கிறேன்.”

“எனக்கும் குற்றவுணர்வு ஓங்கி நிற்கிறது சரண். அவளை எப்படி எதிர்கொள்வேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால்…”

“நீ உன்னால் முடிந்தவரை செய்துவிட்டாய் வந்தனா”

சரண் தன் கலக்கத்தினை துடைத்துக்கொண்டான். “இனி என்ன செய்ய வேண்டும்?”

“அறுவை சிகிச்சை தான்.  எந்த ஒரு அறுப்பும் கிழிப்பும் இல்லாமல். அதற்கு உங்கள் ஒப்பம் வேண்டும் ஒரு முறைமைக்காக. மேலும் அம்பரியின் நலனுக்காக சொல்கிறேன். சிசு தானே இறுக்கி இறந்த விஷயத்தை அவளிடம் சொல்லவேண்டாம். எந்த தாயாலும் அதனை தாள முடியாது. அது தெரிந்தால் இப்போதிருக்கும் வலி பலமடங்கு கூடிவிடும். அவள் மீள்வது கடினம். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.”

சரண் கையெழுத்திட்டு கொடுத்தான். வந்தனா கூறியதையெல்லாம் மறுமுறை நினைவு கூர்ந்தான். சிசு தன்னைத் தானே நெறித்துகொண்டிருந்திருக்கிறது.  தொடர்ந்து கருப்பை வாய் திறந்திருக்கிறது.  ஒரு சீர்மையை உணரமுடிகிறது அல்லவா? எவருடைய ஆணைகள் இவை? எண்ணமுட்கள் அவன் மூளையைக் கீறின.

அம்பரிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை படுக்கையில் கால்கள் விரிந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவளது யோனியை விரித்துப் பிடித்துக் கட்டி கருப்பை வாயை விரியச் செய்தார்கள். மெல்லிய காற்று உள் நுழையக் கூடிய குழாயை அதற்குள் நுழைத்தார்கள். அதன் வெளிமுனையில் உறிஞ்சும் சாதனத்தை மாட்டி கருப்பையில் இருந்த திசுக்களை அகற்றினார்கள். மீயொலி கருவியின் உதவியுடன் கருப்பையை கண்காணித்து சுத்தம் செய்தார்கள். அம்பரி அகவிழிப்பு கொண்டிருந்தாள். தன்னுள் இருந்து ஏதோ கரைகிறது என்று எண்ணினாள். தான் தூய்மைபடுத்தப்பட்டு புனிதப்படுத்தப்படுவதாக நினைத்துக்கொண்டாள். அரைமணி நேரத்திற்குள்ளாகவே சிகிச்சை முடிந்தது. அன்று இரவு, வானம் பெருமுழக்கத்துடன் தன் எடையை நீர்த்து இறக்கிவைத்தது.

அம்பரி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள். தெளிந்ததும் அவளால் பழையபடி நடமாட முடிந்தது. அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான் சரண். அவனிடம் அம்பரி வாய்கொடுத்து பேசுவதாக இல்லை. சரணும் அவளை எதிர்கொள்ளவே அஞ்சினான். அவனது கண்களை அவள் அவ்வப்போது  சந்தித்தாள். அதில் “ஆசைப்பட்டிருக்கலாமே” என்ற தொனி இன்னும் இருப்பதாய் அவளுக்குப்பட்டது.

உதிரப்போக்கு மிகுதியாகவே இருந்தது அவளுக்கு. கவனிக்கப்படாமல் விட்டுவிட்ட உதிரக்கசிவால் பல சமயங்களில் அவளது பின்னாடையில் கூடுதலாகவே ஈரமும் கறையும் ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையாக மாற்றிக்கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு நாளும் தானே வீட்டைவிட்டு வெளியே வந்து உதிரப்போக்கில் நைந்த தன் ஆடைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றாள். ஒவ்வொரு முறையும் அந்த குப்பைத்தொட்டியைப் பார்த்து “நான் என் கடைசி உதிரத்துளி வரை எஞ்சுவேன்” என்று சொல்லிவிட்டு வருவாள். அது அவளை தேற்றுதுவதாக இருந்தது. பத்து பதினைந்து நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தாள்.

 


ள்ளம் தூர்ந்திருந்த அம்பரி தன் அயர்ச்சியைப் போக்க எண்ணினாள். வீட்டைவிட்டு எங்காவது வெளியே போக வேண்டும் என்று இருந்தது. காரை எடுத்துக்கொண்டு அவளே ஓட்டிச் சென்றாள். அதிவேகமாக காரைச் செலுத்தினாள். ஒரு கணத்தில் வீடு திரும்ப வேண்டுமென்று தோன்ற காரைத் திருப்பினாள். அவள் வீட்டின் அருகில் உள்ள மேம்பாலத்தில் கீழிறங்கி சற்று நிதானித்து வலது பக்கமாக திரும்ப வேண்டும். மேம்பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்தவள் வேகத்தைக் குறைத்து கீழிறங்கினாள். முன் கண்ணாடி வழியாக அந்தரத்தில் ஏதோ ஒரு சலனத்தை உணர்ந்தாள். காய்ந்த இலைச்சருகுகள் சில அவள் கார் முன்கண்ணாடியை வந்து அறைந்தன. ஏதோ ஒன்று பிய்ந்து கொண்டு வந்து கீழே விழுந்தது. அவள் காரை ஓரங்கட்டி கைப்ரேக்கைக் கொண்டு முதல்கியரில் மேம்பாலத்தின் சரிவில் காரை நிறுத்தினாள். பின்னர் வெளியே வந்து பார்த்தாள். அந்த சருகுகள் மின்விளக்குக் கம்பத்தில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. கீழே பார்த்தாள். பறவையின் கூடு சிதறிக் கிடந்தது. காய்ந்த குச்சிகள், வெங்காயத் தோலிகள், ப்ளாஸ்டிக் சாக்கிலிருந்து பிரிக்கப்பட்ட நார்கள். அவள் கூடவே அதையும் பார்த்தாள். உதிரபோக்கின் போது விட்டெறிந்ததில் இருந்து கத்திரித்துக் கொண்டு வந்த போடப்பட்ட ஒரு சிறிய கந்தல் துணி.  சிறிது நேரத்திற்குப் பின் கவனித்தாள்.  நான்கு முட்டைகள் அங்கு கிடந்தன.  வெளிர் நீல நிறத்தில். அத்தனையையும் கைத்தலத்தில் வைத்துவிடலாம். அவ்வளவு சிறிய முட்டைகள். அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததில் அவற்றின் ஓடுகள் தெறித்திருந்தன.

சிதறிக்கிடந்த  கூட்டினைச் சுற்றி ஜனக்கூட்டம் கூடியது. அவள் அந்த கூட்டத்திற்குள் நுழைந்தாள்.

“நீலநிற முட்டையப் பாத்தா மைனாக்குஞ்சு மாதிரி தெரியுது” என்றார் ஒரு பெரியவர்.

“ஏன் இவ்ளோ உயரத்துல போய் கூடு கட்டிருக்குது?” என்றான் ஒரு சிறுவன்.

அந்த பெரியவர் அந்த உடைந்த ஓடுகளை அணுகினார். ஒவ்வொன்றையும் உற்றுப்பார்த்து அவற்றை ஓட்டுடன் கையில் எடுத்து வைத்துக்கொண்டார்.

“எல்லாம் முட்டைக்குள்ளயே இருந்து செத்துப் போயிருச்சுங்க. அதுங்களால முட்டைய ஒடச்சு வெளிய வர முடில.” என்று கூட்டத்தினரிடம் காண்பித்தார்.

“எல்லாத்தோட தலையும் சிக்கிருக்கு.  மேல தூக்கமுடியாம. அப்ப தானா முட்டைய ஒடச்சு அதுக்குள்ளேந்து வர முடியும். தோ ஒண்ணுத்துல தல அதோட இடது றெக்கக் குள்ள மாட்டிக்கிச்சு. ஒண்ணுத்துக்கு வலது றெக்கக்குள்ள. ஒண்ணுக்கு அதோட காலுக்கு நடுல. ஒண்ணுக்கு கழுத்த சுத்தி ஏதோ கட்டியிருக்கு” என்றார்.

“எப்பவோ செத்துருக்குங்க. தாய்பறவை அது தெரியாம குஞ்சு பொரிக்கும் குஞ்சு பொரிக்கும்னு பாத்துட்டு அடைகாத்துட்டு வந்துருக்கும்”

“பெரிசா காத்தேதும் அடிக்கலயே. இத்தன நாள் அவ்ளோ உயரத்துல ஜாக்ரதயா தான இருந்தது. இன்னிக்கு மட்டும் எப்படி கீழ விழுந்துது?” என்றான் அந்த சிறுவன்.

“தாய்பறவை உருட்டிப் பாத்துருக்கும். எந்த முட்டைலயும் எந்த சலனமும் இல்லாமப் போனதால, பொறுக்க முடியாம மொத்த கூட்டையும் தன் அலகாலயும் காலாலயும் தட்டி விட்ருக்கும்” என்றார்.

கூட்டத்தில் நின்றிருந்த அவளை தற்செயலாக நோக்கிவிட்டு அவர் கண்கள் கடந்தது. ஒருகணம் மேலே அந்த கூடு இருந்த இடத்தை அவள் கூர்ந்து பார்த்தாள். அங்கு அந்த தாய்பறவை அமர்ந்திருப்பதைக் கண்டாள். அது கரிய நிற மைனா. மஞ்சள் நிற அலகு கொண்டிருந்தது. கரிய உடலில் அங்கங்கே வெள்ளை திட்டுகள். ஒருகணம் கீழே அதன் பார்வை பட்டது. அடுத்த கணம் அது விண்ணில் பறந்தது. விரிந்த சிறகுகளுக்கு நடுவே அந்த வெள்ளைத் திட்டுகள் பளிச்சென தெரிந்தது. அவள் அப்பறவையை அது வானில் பொட்டாகி தொலைந்து போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னர், தூரமாய் போய்க்கொண்டிருந்த அந்த பெரியவரின் கைகளைப் பார்த்தாள். ஒருகணத்தில் அந்த நீலநிற உடைந்த ஓடுகளிலிருந்து அந்த நான்கு தலையும் ஒரு சேர எழுந்துகொண்டு கழுத்து நீட்டி வானை நோக்கி வாய்பிளந்து நின்றன. தான் இனி அங்கே நிற்கக் கூடாது என்று எண்ணியவள் போல காரை நோக்கி நடந்தாள்.


  • லோகேஷ் ரகுராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.