கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!
மகளிர் தினத்தை முன்னிட்டு கனலி கலை-இலக்கிய இணையதளத்தின் சார்பாக தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் அனைத்து பெண் படைப்பாளிகளிடமும் கருத்துப் பகிர்வுகளை பெற்று தொகுப்பாக ஒரு சிறப்புப் பதிவை வெளியிட விரும்பினோம். எங்களால் தொடர்புகள் பெற முடிந்த படைப்பாளிகளிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம்.
அந்த கேள்வி
”நவீன இலக்கியத்தில் ஆண் உயிரி, பெண் உயிரி என்கிற பாகுபாடுகள் இல்லையென்றாலும்., இன்னும் முழுமையான பெண் விடுதலை என்கிற எட்டாக்கனியை தன் வசம் வைத்திருக்கும் தமிழிலக்கியச் சூழலில் பெண் உயிரி தனித்து உள்ளது போல ஒரு தோற்றம் இருக்கிறது.
நவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் பங்கு இன்றியமையாதது. அதே நேரத்தில் பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவது என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது? பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
இதற்கு பெறப்பட்ட பதில்களை கொண்டு இத்தொகுப்பை வெளியிடுகிறோம். இந்த கேள்வி-பதில் பதிவின் உண்மையான நோக்கம் என்பது தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் இன்றைய நிலை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் என பல்வேறு கருத்துகளை அவர்களிடம் பெற்று அதன் வழியே மேலும் சில இலக்கியம் சார்ந்த அறிதல்களை அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும். இவ்விதமான முன்னெடுப்புகளை மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறோம். கனலியின் கேள்விகளுக்குப் பதில்கள் அளித்த படைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.!
எழுத்தாளர் ச.விசயலட்சுமி:
பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு நீங்கள் சொல்வது போல சவால் நிறைந்ததுதான்.
சமூகத்தில் குடும்பத்தில் பெண்களின் இடம் எப்படி இருக்கிறது என்பதை இலக்கியத்தில் வெளிப்படும் பெண்களின் பங்களிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொருளாதாரப் பங்களிப்பில் இணைத்துக் கொண்ட பெண்களுக்கு இரட்டைச் சுமையாக குடும்பமும் பணியிடமும் இருக்கிறது.இதனிடையில் இலக்கியம் இளைப்பாற, ஆறுதல் அடைய உதவுகிறது. அதே நேரம் பெண்கள் காத்திரமாக எழுத, சிந்திக்க, செயல்பட போதுமான இடத்தை இச்சமூகக் கட்டமைப்பு அளிக்கவில்லை. இதைப் புரிந்துகொள்ளாதவர்களே பெண்கள் மீண்டும் மீண்டும் சுய புலம்பல்களை எழுதுவதாகவும் அவர்கள் எழுத்தில் என்ன இருக்கிறது என்கிற விமர்சனத்தையும் வைக்கிறார்கள்.
எழுத வருகிற பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் முதலில் குடும்பம், தனிப்பட்ட அனுபவம் சார்ந்தவை வெளிப்படுகிறது. அவர்கள் தன் அனுபவத்தை சமூகப்பிரச்சினையாக , சமூகம் சார்ந்து சிந்தித்து எழுதும்போது அப்படைப்பு இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. சமூகத்திற்கான படைப்பாக வெளிப்படுபவையே இலக்கிய உலகில் கவனிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.
எழுத்தின் உச்சமான வடிவம் கவிதை. பெண் படைப்பாளர்கள் கவிதைகள் அதிகம் எழுதி நூல்கள் வெளிவருகின்றன. சிறுகதைகளும் எழுதிவருகின்றனர். ஆனால் அதிக உழைப்பை வேண்டி நிற்கும் குறுநாவல் மற்றும் புதினங்கள் எழுதுவோர் விரல் விட்டு எண்ணும் நிலையே இருக்கிறது. இனிவரும் காலங்களில் புதினங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். பெண்கள் மீது கவியும் பல்வேறு அழுத்தங்களை உடைத்துக் கொண்டு எழுத ஆங்காங்கே பெண் படைப்பாளர்கள் களத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் பெண்கள் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப்போல இந்த நூற்றாண்டில் சிறுகதை, புதினத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். பெண்ணியம் என்பதை இங்கே தவறாகப் புரிந்துகொள்ளும் போக்கு இருக்கிறது. மேற்குலக நாடுகளில் பெண்ணியத்தில் பல வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுவதை வைத்து இங்கும் இப்படி எனப் பொருத்திப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆணுக்கு எதிரான செயல்பாடு பெண்ணியம் அல்ல. ஆணாதிக்கம் என்கிற கருத்தியலை மாற்றி, ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் என்ற பால் சமநிலைக்காக இயங்குவதாகும். பெண்கள் மீது காலங்காலமாகச் சுமத்தப்பட்டவை வேகமான வாழ்வியல் மாற்றங்களுக்கு முன் பொருளற்றவையாக நிற்கும்போது அதைக் கேள்விக்கு உள்ளாக்குவது ; மாற்ற முயற்சிப்பது.
பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காத்திரமாக எழுதினால் அது இங்குப் பெண்ணியம் எனப்படுவதையும் பார்க்கிறேன். இங்குப் பெண்கள் நினைத்ததை எழுத முடியாத சூழலைத் தகர்த்து எதையும் எழுதலாம் என்ற நிலையை நோக்கிய இயங்குதல் நடந்ததைத் தமிழிலக்கியத்தில் இலக்கியத்தின் பெண்ணிய செயல்பாடு என்பேன். வை.மு.கோதை நாயகி தன் எழுத்து பிரசுரிக்க மறுக்கப்பட்டபோது தனித்து இதழ் ஒன்றைத் தொடங்கியது பெண்ணிய செயல்பாடு. ஆனால் பெண் எழுத்தாளர்கள் எழுதுவது எல்லாம் பெண்ணியம் இல்லை.
அவ்வப்போது காத்திரமான பெண்ணியப் படைப்புகள் வருகின்றன. அவர்கள் பெண்ணிய வட்டத்துக்குள் இல்லை.
எழுத்தாளர் கலைச்செல்வி:
தமிழிலக்கியச்சூழல் ஆண் பெண் இருபாலருக்குமே சவால்கள் நிறைந்ததுதான். சமுதாயம் என்ற பெரும் மக்கள் திரளுக்கு கிட்டத்தட்ட அதிகம் அறிமுகமில்லாத துறை இலக்கியம். இலக்கியம், எழுத்து என்பதெல்லாம் மொழியோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும் போக்கே இங்கு நிலவுகிறது. எழுத்தாளர் என்று யாரிடம் கூறிக் கொள்வது? உறவினர்களிடமா..? சமுதாயத்திடமா..? அட.. அதைச் சொல்வதில்தான் என்ன லாபம்? இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். உலகிலேயே, யார் வேண்டுமானாலும் அணுகலாம், அணுகி கருத்துக்களை வாரி இறைக்கலாம், அறிவுரைகள் வழங்கலாம், அதற்கென தகுதியேதும் தேவையில்லை என்று ஏதேனும் ஒரு துறையை கருதுவோமாயின், அது இலக்கியத்துறை ஒன்றாக தானிருக்க முடியும்.
தமிழில் எழுதும் ஒருவரை, ‘அவுகளுக்கு தமிழ் நல்லா வரும்.. ’(அப்பாடி.. ஒருபடி எறக்கியாச்சு)
‘ஓஒ.. நீங்கத் தமிழ் டீச்சர்ன்னுல்ல நெனச்சேன்..’ (அப்டீன்னா காலேஜ்ல வொர்க் பண்றீங்களா..?)
(நம்மைப் புத்தகமும் கையுமாகப் பார்க்கும்போது) ‘பரவால்ல.. புக் படிக்கல்லாம் ஒங்களுக்கு இன்ரெஸ்ட் இருக்கே.. ’ (நாம் ஒரு எழுத்தாளர் என்பதை ஏடாகூடமாகத் தெரிந்து வைத்திருந்தும்) இப்படியாக சமூகம் சிலாகிக்கும்போது, அதிலிருந்து விலகி ஓடவே தோன்றுகிறது. ஒரு சிலரைத் தவிர்த்துப் பொருளீட்டலுக்கோ வேறு எவ்வித ஆதாயத்திற்கோ லாயக்கற்ற இத்துறைக்கென தேவைப்படும் நேரமோ அதிகம். வாழ்வாதார தேவைக்கு ஒதுக்கப்பட வேண்டிய காலமும் சமயங்களில் செலவாகி விடுவதுண்டு (இதிலும் விலக்குண்டு). தனிமனித அகத்தின் நிலைப்பாடுகளுக்கு, புறத்தின் சூழல்களைப் பலியாக்கிவிடுவதில் இலக்கியத்திற்க்கென்னவோ இலாபம்தான். ஆயின், இலக்கியம் எனில் யாது? இத்தனை சிடுக்குகளையும் மீறி இதை வளர்க்க வேண்டிய தேவையென்ன? அல்லது இருக்க வேண்டிய தேவை தானென்ன..? எனில், இது யாருக்கானது?
இலக்கியம் தனி மனிதனுக்கானது தான். ஓருருவில், பல வாழ்வை இலக்கியத்தின் வழிவாழ்ந்து விட முடியும் என்ற போதையிலிருந்து அத்தனை எளிதாக இலக்கியவாதியால் விலகி விட முடியாது. சுயதேடல்களின் புறவெளிப்பாடாக மொழியின் துணையைக் கொண்டு சமைக்கப்படுவது இலக்கியமெனில், தேடல் கொண்ட அம்மனம், அதற்கென சிறு கூட்டம் ஒன்று ஏங்கி நிற்பதையும் உணர்ந்து கொள்ளும். (எதிலும் விலக்குகளும் போலிகளும் உண்டு என்பதையும் கருத்திற்கொள்வது நன்று).
அச்சிறுக்கூட்டத்தை நம்பியே எழுதவும், பதிப்பிக்கவும், படிக்கவும் என வாசகர்களே தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டிய அவலம் இலக்கியத்தில் மட்டுமே உண்டு. எழுத்தாளர் ஒருவர் எழுதிக் கொண்டே இருந்து விட முடியாது. சக எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்கவும், கருத்துச் சொல்லவும் வேண்டியிருக்கும். கூடவே, சந்தையாக்கம் தெரிந்திருக்கும் பட்சத்தில், விருதுகளின் வழியாக லேசாகத் தெரிய வரும் பெயரைக் கொண்டு, பதிப்பாளரும் ஆகி விடலாம். இதன்வழி கூட்டங்கள் நடத்தப்படும். தொழிற்நுட்பம் உயர்ந்திருப்பது உண்மையில் எழுத்தை, எழுத்தாளர்களை ஒன்றிணைக்கிறது எனலாம். சிறுசிறு வாட்ஸ்ஆப் குழுக்களின் மூலமும், முகநூல் போன்ற தொழிற்நுட்பங்களின் மூலமும், (சிலநேரம் முக்கியமான பத்திரிக்கைகளின் முக்கிய ஆளுமைகளை அறிந்து வைத்திருப்பதன் மூலமும்) தங்களின் படைப்புகளை முன் வைப்பதோடு, அடுத்தடுத்து நுழையும் புதிய படைப்புகளுக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ அல்லது எவையெல்லாம் சொல்ல வேண்டும் என்று முன் முனைப்போடோ விமர்சனங்களை எழுத அமரும்போது அச்சிறுசிறு குழுமங்கள் சார்ந்த பெருந்தலைகள் அடுத்தடுத்த (இலக்கியக் குண்டுசட்டிக்குள்தான்) நிலையை எய்த முடியும்.
இங்குதான் ஆண், பெண் என்ற பேதமை வருகிறது எனத் தோன்றுகிறது. ஆண் உடலால் பயணிக்குமளவுக்கும், இலக்கியம் நோக்கி இயங்குமளவுக்கும் பெண்ணால் இயங்க முடிவதில்லை. சமுதாய அமைப்பிலிருந்து விலகி விடாமல், குடும்பத்தளைகளிருந்து அறுந்து விடாமல், அலுவலகப் பணியிலிருந்து நகர்ந்து விடாமல், கூடவே நச்சரிக்கும் ஆழ்மன சிடுக்கை விடுவிக்க வேண்டிய நிலைக்கு (பெரும்பாலும்) பெண் எழுத்தாளர்கள் தள்ளப்படுவது சமூக யதார்த்தம். ஆனால், இவற்றைச் சாதகமாக்கியோ, அல்லது தர்க்கமாக்கியோ பெண்கள் சலுகைகள் கோரல் என்பது அருவருக்கத்தக்கது. பெண் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் (விலக்குகள் இல்லாமலா..?) என்றொரு பழி, பேரிரைச்சலாகக் கேட்கிறது. ஆனால் ஆண்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளச் செய்யும் லாபி, அவர்கள் படைப்புக்கு ஒதுக்கும் நேரத்தை விட அதிகமானதாக உள்ளது என்ற உண்மையை மறைத்துக் கொள்ளவே, திட்டமிட்டு அப்பேரிரைச்சலை தாங்கள் உருவாக்குகிறோம், என்பதை அவர்களும் அறிந்தேயிருப்பர். (இதிலும் விலக்குகள் உண்டு). நீங்கள் கூறும் சவால் இதுவாகதானிருக்கலாம். சவால்கள் என்பதே சமாளிப்பதற்கு தானே.
பெண்கள் பெண்ணிய சிந்தையிலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாகப் பெண்ணிடம் தொடர்ந்து வைக்கப்படும் கேள்விதான். இதற்கு நானே நிறைய முறை பதிலளித்திருக்கிறேன்.
- பெண்கள் அதைத்தாண்டி வேறேதும் எழுதியதில்லை என்று கூறுகிறீர்களா? கூறுவீர்களெனில், அதை வன்மையாக நான் மறுக்கிறேன்.
- கூறுபொருள் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்வோமெனில், பெண்ணிய சிந்தை என்ற நிலைப்பாடு என்னைத் தொந்தரவு செய்வதை விட, வேறு பலவையே என்னை எழுதத் தூண்டுகிறது. பெண்ணியம் பேசக்கூடாது என்ற நோக்கமின்றியே, பெண்ணியக்கதைகளை நான் எழுதுவதில்லை.
- பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்து விட்டதா..? அல்லது அவரவர் பிரச்சனை சார்ந்து அவரவர் பேசுவதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா..? சரி.. பெரும்பாலான பிரச்சனைகள் என்பது யாரிடமிருந்து? விலங்குகளின் தாக்குதலினாலா? பறவைகளின் மோதலினாலா? சக உயிரான ஆணிடமிருந்துதானே. அதை எழுதியெல்லாம் அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது.
- பெண்கள் எதை எழுத வேண்டும், எதை எழுதுகிறார்கள் என்று ஆண்கள் ஏன் கருத்துக் கூற வேண்டும்..? ஆண் எழுத்துகளைக் குறித்து எங்களிடம் கருத்து ஏதுமில்லை. எங்கள் வேலை அதுவுமன்று.
எழுத்தாளர் உமா மோகன் :
படைப்பாளிகளில் பாலின பேதம் வேண்டாம் என்பது எனது பொதுவான நிலைப்பாடு.ஆனால் இதற்கான அடிப்படையை நாம் இன்னும் எட்டவில்லை. ஆகவேதான் பெண் என்ற அடையாளத்தோடு ஒவ்வொன்றையும் அணுக வேண்டி வருகிறது.
பொதுவான சமூகச் சிக்கல்களை மனிதர் என்று நின்று எழுதலாம். பேசலாம். ஆனால், பெண் வாழ்வு, குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இன்னும் கூரிய அணுகுமுறையும், தெளிவான வெளிப்பாடும் தேவைப்படுகிறது. சட்டென எல்லாவற்றையும் நகைப்புக்கு உள்ளாக்குவதோ, பொருட்படுத்தாது போவதோ, தாழ்வாகச்சுட்டுவதோ நடக்கிறது. ஆண்மைச் சிந்தனையில் இன்றும் வாழும் சமுதாயத்தில், சமயத்தில் பண்பட்ட சிந்தனை கொண்டவர்களாக அறியப்பட்டவர்களும் இதில் வீழ்கிறார்கள்.
சிலசமயம் பெண்களும் கூட. பெண்ணியச் சிந்தனையில் நின்று பேசுவது குற்றமல்ல. அது ஒரு தார்மீகப் பொறுப்பு. வலியின் வெளிப்பாடு எழுத்துக்காக எந்தப் பொறுப்பையும் விட்டுவிடாது, இல்லம், அலுவல் என இயங்குவோர் இன்றைய பெரும்பான்மை. கூட்டங்கள், குழு உரையாடல்கள், எழுத்தோடு தொடரும் சமுதாயப் பொறுப்பு எனவும் பலரும் முற்படுகிறார்கள். இணையம் நிச்சயமாக நல்வாய்ப்பு நேரந்தின்னி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளாது, வறட்டு தர்க்கங்களில் கவனம் சிதறாது இயங்கும் பட்சத்தில்.!
எழுத்தாளர் வெண்பா கீதாயன்:
பெண்களுக்கு அடிப்படையில் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று அகவயமானது; மற்றொன்று புறவயமானது; அகவயமானது எனும்போது பெண்களின் ஹார்மோன்கள் நிகழ்த்தும் உளவியல் ரீதியான எண்ணஅலை மாறுபாடுகளுக்கு படைப்பூக்கத்தில் முக்கியப் பங்குண்டு. பொதுவாக பாலினம் சாராமல் ஒரு படைப்பாளியின் உளஊசல்கள் கலைகளிலும் இலக்கியத்திலும் உச்சதருணங்களை நிகழ்த்தக்கூடியதாக அமையும். அதே உளஊசல்கள் படைப்பாளிக்கு எதிர்நிலையாக மாறவும் வாய்ப்புண்டு. பெண்களைப் பொறுத்தவரை உடல் மற்றும் உளம்சார்ந்த நிலைப்பின்மை விளைவுகள் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் உளஊசல்கள் அதீத ஆர்வத்தையும் தீவிரத்தன்மையையும் அளிக்கும். மற்றொரு சமயம் உளச்சோர்வையும் துயரையும் உருவாக்கும். எனவே மனதளவில் அகவயமாக ஒரு பெண் படைப்பாளி துயர் மற்றும் உளச்சோர்விலிருந்து தன் படைப்பூக்கத்தை மீட்க வேண்டும்.
புறவயமான சிக்கல்கள் குடும்பம், சூழல், எதிர்கொள்ளும் விமர்சனங்கள் முதலியன. இவற்றில் குடும்பம் மற்றும் பொருளாதார சூழல் படைப்பூக்கத்துக்கு ஒத்திசைவாக இல்லாத பட்சத்திலும் இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அன்றி இருந்தால் படைப்பாளிக்கு எளிதாக இருக்கும். இதிலும் பாலின பேதமின்றி ஆண் பெண் இருவருக்குமே சிக்கல்கள் உண்டு. பெண்ணை விடவும் ஆண் எதிர்கொள்கிற பொருளாதாரச் சிக்கல் என்பது மிகக் கொடியது.
பாலியல் ரீதியிலான சவால்கள் இன்றைக்கு எல்லா துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளக்கூடியது. அதுவும் கலை இலக்கிய ஆர்வம் கொண்டவள் என்றால் பாலியல் ரீதியாக எளிதாக அணுகலாம் என்கிற சமூக வழக்கு நிலவுகிறது. ஆனால் பெண் படைப்பாளிகள் தங்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்காக ஒருபோதும் பாலியல் ரீதியான அணுகுதல்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது. ஏனெனில் ஆண்களுக்கு அதுவொரு தொடர் பழக்கமாகிவிடுகிறது. “அவள் வந்தாள், உனக்கென்ன?” என்கிற ரீதியிலான கட்டாய உடன்படிக்கைகள் இங்கே பேசுபொருளாக இருக்கின்றன. தனிப்பட்ட பாலியல் விழைவு கட்டற்றதாக இருக்கலாம்; ஆனால் தொழில் அல்லது கலை இலக்கியம் பொருட்டு செயல்படும்போது பெண்கள் பாலியல்சார் அழைப்புகளுக்கு முற்றிலும் எதிராக நிற்கவேண்டும். ஏனெனில் தொழில்சார் இசைவுகள் நமக்குப் பின் இப்பாதையைத் தொடரவிரும்பும் பெண்களையும் வீணாக்கக் கூடியது.
அடுத்து பெண்ணியம் என்ற வட்டத்திற்குள்ளிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதை முற்றிலும் ஆதரிக்கிறேன். ஏனெனில் தி.ஜாவாலும் லா.ச.ராவாலும் ஜெயமோகனாலும் பெண்ணின் அமைப்பு நலன்களையும் உளநலன்களையும் வெற்றிகரமாக எழுதமுடியும்போது ஏன் சமகாலத்தில் பெண்களால் வெற்றிகரமாக ஆண் உள்நிலைகளைப் பிரதிபலிக்க முடியவில்லை? ஏனெனில் தன்னைப் பற்றி தன் பாலினத்தைப் பற்றிய விழிப்பில் மட்டுமே எழுத வருகிறார்கள். ஒரு விஷயம் கலையாகும் தருணம் என்பது தான் கொண்ட அடையாளங்களை விடுத்து புனிதங்களை விடுத்து எழுகின்ற நிலையாகும். உதாரணமாகக் கோவில் சிற்பங்களையும் தேவாலய ஓவியங்களையும் இன்னபிற மதச்சின்னங்களின் கலை வேலைப்பாடுகளையும் நாம் அழகியல் நோக்கோடும் கலையம்சத்தோடும் காண்பதற்குக் காரணம் தன் புனிதங்களையும் அடையாளங்களையும் கடந்து வேறொன்றாக அங்கே மிளிர்கிறது. பெண்களின் எழுத்தில் அத்தகைய தன்மை கைகூட வேண்டும். கலையை அணுகுபவர் தன் பாலினத்தைக் களைந்து தொட்டால் மட்டுமே அதன் அத்தனை கோணங்களையும் முழுமையாகக் காணவியலும். ஆஷா பூர்ணா தேவியும் குல் அதுல்ஐன் ஹைதரும் அவ்வாறு தங்கள் மொத்த அடையாளங்களையும் புனிதங்களையும் துறந்து கலையின் உச்சமென எழுந்து நின்றவர்கள். எனவே நான் உட்பட மற்ற பெண் படைப்பாளிகள் அனைவரும் அகவயமான மற்றும் புறவயமான தளைகளைக் கடந்து அப்பாதையை நோக்கிப் பயணித்தால் மட்டுமே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஆணுக்கு நிகர் பெண் எனும் நிலையை அடையவியலும்.
எழுத்தாளர் நவீனா:
கனலி வாசகர்களுக்கு என் வணக்கங்களும், இனிய மகளிர் தின வாழ்த்துகளும்!
எழுத்தாளர் லதா அருணாச்சலம்:
இன்றைய இலக்கியச் சூழலில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்களும், அவர்கள் எழுத்தைக் குறைத்து மதிப்பிட்டு பகடிகளாகவும் பலர் கருத்திடுவதைக் காண முடிகிறது. பெண் எழுத்தாளர்களுக்கு ஆழ்ந்த வாசிப்பு இல்லை, அவர்கள் எழுத்து அடர்த்தியற்ற ரொமாண்டிக் குப்பை என்னும் கருத்தும் உலவுகிறது. அதுவும் சமூக வலைத் தளங்களை அனைவரும் பரவலாகப் புழங்கும் இந்த காலகட்டத்தில் அது போன்ற வேறுபாடும், சார்பு மனநிலையும் அதிகரித்திருக்கிறதென்றே சொல்ல முடியும், முதலில் ஒரு பெண் எழுத வருகிறார் என்பதையே ஏற்று வரவேற்க வேண்டும். ஏனென்றால், இன்றும் கூட ஒப்பீட்டளவில் அதிகமான பெண் எழுத்தாளர்கள் இல்லையென்றே சொல்லலாம். பெண்கள் எழுத வருவதற்கு அவர்கள் குடும்பச் சூழல் மட்டுமன்றி, புறச் சூழலும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் மேலும் சிறந்த பல படைப்புகளை அளிக்க இயலும். எந்தப் பெண்ணுக்கும் , வாசிப்பின்றியும், வெளி உலகத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்னும் ஆசையும் இருப்பதில்லை.ஆனால், ஆண்டாண்டு காலமாக அவள் மீது திணிக்கப் பட்ட கட்டுப் பாடுகள், மற்றும் தெய்வீகத்தன்மை ஆகிய இரு முனைகளுமே பெண்களின் சமூக இருப்பையும், எழுத்து சார்ந்த அரசியலையும் நிர்ணயிக்கின்றன.
அதிலிருந்து மீண்டு எழுத வருகையில் முதலில் ஒரு பெண் தன் படைப்பில் வெளிப்படுத்த நினைப்பது தன் இனம் சார்ந்த அவலங்களையும், அதன் பொருட்டு அவள் சக உயிரிகள் படும் இன்னல்களையும் தான். எழுதக் கூடிய சுதந்திரமான, வசதியான இடத்தில் இருக்கிறோம் என்று நினைத்து எந்தப் பெண் படைப்பாளிகளும் மற்ற பெண்களைப் பற்றி எழுதாமல் இருப்பதில்லை. வீட்டுச் சூழலில் இருக்கும் பெண், குடும்ப அமைப்புகள் பற்றியும், பணிச்சூழலில் இருக்கும் பெண் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும், சமூகச் சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகள் பொதுவாக இன்றுள்ள பெண்களின் நிலையைப் பற்றியும் எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மனம், உடல் சார்ந்த வன்முறைகளிலிருந்து இன்னும் முற்றிலும் மீண்டு வராத, சம உரிமைக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கும், பெண் இனத்தைப் பற்றி பெண்கள் எழுதாமல் இருந்தால் தான் வியப்படைய வேண்டும். பெண்ணியம் என்பது அவர்கள் எழுத்தில் இயல்பாகப் பொருந்திப் போவதன் காரணமும் இதுதான். பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கும் பெண் வலி, சமூகத்தை நோக்கி அவர்கள் வைக்கும் கேள்வி, அவர்களின் ஆழ்மன உணர்வுகள்,காதல், பாலியல் தேடுதல் பற்றிய அக வெளிப்பாடு , ஆகியவற்றை அவர்கள் படைப்பில் காண்கையில் இவற்றையே அதிகம் எழுதுகிறார்களே என்று ஆய்வுக்குட்படுத்தாமல், இன்றும் இவற்றை எழுதி வெளிப்படுத்தும் சூழல்தான் இருக்கிறதா என்று ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் கீதா மதிவாணன்:
நவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் பங்கு இன்றியமையாதது அதே நேரத்தில் பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவது என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது? பெண் எழுத்தாளர் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்கிற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெண்கள் தமிழிலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்குவது நிச்சயம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. எழுத்தை வைத்து பெண்ணை எடைபோடும் பொதுப்புத்தி இன்றும் தொடர்கிறது. படைப்பைத் தாண்டி ஒரு பெண் படைப்பாளியின் மீது வைக்கப்படும் பாலியல் ரீதியிலான விமர்சனங்கள் இலக்கிய உலகில் அவர்களுக்கான இடத்தை அடையவிடாமல் போடப்படும் முட்டுக்கட்டைகள். பெண்கள் இதைத்தான் எழுதவேண்டும், இப்படிதான் எழுதவேண்டும் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்துப் பல பெண்கள் தற்போது எழுத்து வெளியில் ஓரளவு சுதந்திரமாய் இயங்க ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. காதல், குடும்பம், சமையல், பக்தி, அழகுக்கலை எனக் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த பெண்கள் இன்று அரசியல், சமூகம், திரை இலக்கியம், பொருளாதாரம், பயணம், அறிவியல், ஆராய்ச்சி, காமம், கலவியல், உலக இலக்கியம், மொழிபெயர்ப்பு என அனைத்துத் தடங்களிலும் எழுத்தால் தங்கள் முத்திரைகளைப் பதித்துவருவது பெரிதும் வரவேற்கத்தக்க விஷயம்.
பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பது ஏற்கவியலாதது. பெண் வாழ்வை ஆண் எழுதுதலென்பது, பார்வையற்றவர்கள் யானையைத் தடவி உணர்தல் போன்றது. பெண் வாழ்வை, பெண் மனத்தை, பெண்ணின் நுண்ணுணர்வை, பெண் சிந்தனைகளை, பெண் உடலை, பெண்ணின் வலியை, அவளது வேட்கைகளை, அவளது அந்தரங்கத்தை, பெண்ணுக்குரிய பிரச்சனைகளை, பெண்ணின் போராட்டத்தை வடிகட்டப்படாத பெண்ணெழுத்தில் வாசித்துப் பாருங்கள். இதுவரை புலப்படாத மாற்றுக்கோணங்கள் புலப்படும். புரியாத, தமக்குப் பிடிபடாத பெண்ணியலை பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் அடக்க முற்படுவது அபத்தம்.
எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் :
தற்போதைய சூழலில் தமிழ் இலக்கிய உலகில் அதிகமான பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் அது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும் எழுத வரும் பெண்கள் எத்தனை காலத்திற்கு நீடிக்கிறார்கள் என்கின்ற கேள்வி சிறிது கவலையைக் கொடுக்கிறது. குறிப்பாக நிறையப் பெண்கள் ஒரு தொகுப்பு கவிதைத் தொகுப்பு ஒரு நாவலோ எழுதியபின் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அதன் காரணங்கள் என்னவென்று தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அறிய ஆராய வேண்டிய கடமை இருக்கிறது. முக்கியமாக இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் எந்த ஒரு விஷயமும் மேலே சொன்ன பெண்கள் தொடராமல் போவதற்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு படைப்பை விமர்சனம் செய்யலாம் அந்த படைப்பில் உள்ள நிறை குறைகளைப் பேசலாம் அதற்கு முழு தகுதியும் வாசகர்களுக்கு உள்ளது அதற்கு மேலே சக எழுத்தாளர்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கலாம் வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் மட்டும் மூத்த படைப்பாளிகள் என்று சொல்லப்படுகிற சில படைப்பாளிகள் இங்கே நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஊர் பெருமை பேசும் படைப்பாளிகள் தமிழ்நாட்டின் பேசப்படாத பகுதிகளிலிருந்து எழுத எத்தனிக்கும் பொழுது அவர்கள்மேல் தனிமனித தாக்குதல் நடத்துகிறார்கள் கும்பலாக ஆல் சேர்த்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட பெண் எழுத்தாளர்களை ட்ரால் செய்கிறார்கள். இதெல்லாம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த விஷயங்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பெண்கள் தங்களின் தோற்றத்தை வைத்துத் தான் புகழ் பெறுகிறார்கள் இல்லை தாங்கள் பெண் என்கின்ற காரணத்தினால் அவர்கள் புத்தகங்கள் விற்கின்றன என்று பினாத்த கூடிய எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள். ஏற்கனவே பெண்கள் எழுதுவது என்பது குடும்பங்களின் கூடாத ஒரு விஷயம் அதையும் தாண்டி பெண்கள் பொதுவெளியில் எழுத்தாளர்களாக உருவெடுக்கும் பொழுது இங்கே பெண்களை நக்கல் நையாண்டி செய்வது அவர்களை Bully செய்வது என்று ஆரம்பத்திலேயே அவர்களை ஒடுக்கி விடுகின்றனர். மனதைரியம் உற்ற சில பெண்கள் இதையெல்லாம் கடந்து விட்டாலும் பல பெண்கள் இதற்குப் பயப்படத் தான் செய்கின்றனர். இதிலும் பாருங்கள் மூத்த பெண் எழுத்தாளர்கள் இளம் ஆண் எழுத்தாளர்களை இதுபோல் ராகிங் bully செய்வது கிடையாது. இதுபோன்ற மனரீதியான டார்ச்சர் கொடுப்பது ஆண் எழுத்தாளர்கள் மட்டுமே.
என் விஷயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. என்னுடைய புத்தகம் வெளியான பொழுது அந்த புத்தகம் டாப் செல்லர் ஆக இருந்தது அந்த புத்தகம் பலருடைய பாராட்டையும் பல நல்ல விமர்சனங்களையும் பெற்றது ஆனால் மூத்த எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய முகநூல் விமர்சனத்தில் அந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லை எனக்கு எழுதவே வரவில்லை என்று முடித்துவிட்டார். ஒரு நிமிடம் எனக்கு ஏதோ போலாகி விட்டது அதை மறுக்க முடியாது உடனே நான் எனது பதிப்பாளருக்குத் தொடர்பு கொண்டு அந்த எழுத்தாளரின் பெயரைச் சொல்லி இதைத் தெரிவித்ததும் என்னுடைய பதிப்பாளர் சொன்னார்” அந்த ஆளு புக் கொஞ்சம் வருஷமா விக்கல,உன் புக்கு வித்திருக்கு. அந்த விமர்சனத்திற்குக் காரணமும் இதுதான்’. அவர் சொன்ன காரணம் உண்மை என்று நான் பிற்பாடு உணர்ந்து கொண்டேன். ஆனால் இதுபோன்ற சலசலப்புக்கள் அதெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் ஆனால் என்னைப்போன்ற எல்லோரும் இருப்பார்கள் என்று எண்ண முடியாது அல்லவா? இலக்கிய உலகத்தில் அறம் என்கின்ற எழுத்தை எழுதுவது சுலபம் ஆனால் அறம் கொண்டு வாழ்வது கடினம். இங்கே பாதிப்பேருக்கு அறம் என்கின்ற சொல்லின் அர்த்தம் கூட தெரியாது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பெண் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாகப் பெண்ணியம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு விமர்சனமும் எழுகிறது. அதை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆமாம் நாங்கள் அதிகமாகப் பெண்ணியம் பற்றி எழுதுகிறோம் ஏனென்றால் இன்னும் இலக்கிய உலகத்தில் பெண்களுக்கான இடத்திற்காகக் கூட போராட வேண்டியிருக்கிறது மேலே சொன்னது முக்கியக்காரணம் எல்லா இடத்திலும் பெண்கள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள் ஆகவே பெண்கள் பெண்ணியம் எழுதத்தான் வேண்டும் பெண்கள் பெண்ணியம் எழுதினால் வாசகர்கள் படிக்கத்தான் செய்கிறார்கள் சக எழுத்தாளர்களும் தான் அலர்ஜி. ஒருவேளை பெண்ணியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ.
பெண்களுக்கு எது வருகிறதோ எழுத விடுங்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் சார்ந்த விஷயங்களை எழுதட்டும். ஒரு எழுத்தாளராக எனக்கு இது பற்றி விமர்சனம் இல்லை ஆனால் ஒரு வாசகியாகப் பெண்கள் என்னவெல்லாம் அதிகம் எழுத வேண்டும் என்று எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பெண்கள் புற உலகைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. சினிமா பற்றி எழுத்துக்கள் பெண்களிடம் குறைவு, அரசியல் சார்ந்த புனைவுகள் பெண்களிடம் குறைவாக இருக்கின்றன, அதுதவிர வாழ்வியல் உணவு உலகம் என்று பரிந்து விரிந்த இந்த உலகத்தில் எழுத அனேகமான விஷயங்கள் இருந்தாலும் பெண்கள் தொடர்ச்சியாக கவிதையைத் தேர்ந்தெடுப்பதும் அதில் அதிகமாகப் பெண் பூ புஷ்பம் ஆப்பிள் என்று எழுதுவது சிறிது வருத்தத்தைக் கொடுக்கிறது. எதையெல்லாம் பெண்களுக்கு எழுத வராது என்று ஆண்கள் சிரித்துக் கொக்கரிக்கிறார்களோ அதையெல்லாம் எழுதி அவர்களின் செவிலில் ஒன்று விட வேண்டாமா?
எழுத்தாளர் ஜா.தீபா:
மிகத் தாமதமாக கல்வி கற்றபின் எழுத்துத் துறையில் பெண்கள் முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆரம்ப செய்தி. என்றபோதிலும் எண்ணிக்கை அளவில் குறைவாகவே இயங்குகிறார்கள். தமிழில் மட்டுமல்ல உலகளவில் இது தான் யதார்த்தம். உயரிய இலக்கிய விருது பெற்ற சர்வதேச பெண் எழுத்தாளர்களுமே தனிப்பட்ட வாழ்வில் பல அசௌகரியங்களுக்கு இடையில் தான் எழுதுகிறார்கள். தமிழ்ச் சூழல் பொறுத்தவரைக் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரு பெண் தன்னுடைய சுயத்தை மறைத்து எழுதியதெல்லாம் நடந்திருக்கிறது. புனைபெயரில் எழுதி தன் வீட்டாரிடமே தான் எழுத்தாளர் என்பதை மறைத்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது சூழல் மாறியிருக்கிறது.
சமகாலத்தில் பெண் எழுத்தாளர்கள் சொற்பம் என்று சொல்லிவிடவும் இயலவில்லை. குடும்ப நாவல்கள் சார்ந்து ஒரு பெரிய வட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எண்ணிக்கையில் அதிகளவு இயங்குகிறார்கள். குடும்ப நாவல்கள் நன்றாகவும் விற்பனையாகின்றன. ஆனால் அவர்கள் பேசும்பொருள் குறுகிய வட்டத்தைச் சார்ந்தது. பெண்கள் அதிகம் வாசிப்பதாலேயே இவர்கள் அதிகம் எழுதுகிறார்கள். ஆக பெண் எழுத்தாளர்களும், பெண் வாசகிகளும் கணிசமாக இருக்கத் தான் செய்கிறார்கள். எதை எழுதுகிறார்கள் எது வாசிக்கப்படுகிறது என்பது தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், பெண் எழுத்தாளர்கள் அனைவருமே வாசிப்பு பழக்கத்தை ஒரு பயிற்சியென வளர்த்துக் கொண்டவர்கள். பெண்கள் சமகால இலக்கியம் வாசிப்பதை ஊக்குவிக்காத குடும்ப அமைப்பு தான் நமக்கு வாய்த்திருக்கிறது. இதிலிருந்து கட்டுடைத்து வந்திருக்கிற பெண்கள் தான் இன்று இயங்குபவர்கள். இரண்டாவது எழுத்து இங்குத் திரும்ப என்ன தருகிறது என்பதும் முக்கியம். ஒரு புத்தகம் எழுதினால் வருமானம் வரும் என்றால் இங்கே பல பெண்கள் எழுத அனுமதிக்கப்படுவார்கள். இல்லை என்றால் ‘எழுதி என்ன கிழிக்கப்போற!” என்கிற கேள்வி தான் தாக்கும். ஒரு ஆண் எழுத வரும்போது அந்த ஆண் மட்டுமே முடிவெடுத்தால் போதுமானது. ஒரு பெண் எழுத வருகிறபோது மொத்த குடும்பத்தையும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. கேள்விகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
மிக யதார்த்தமான ஒன்றைச் சொல்ல வேண்டும். பெண் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும்போது ஒரு ஆண் கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் எழுத முடியும். ஒரு பெண்ணை நம்மால் இந்த சூழலில் கற்பனை கூடச் செய்ய முடியாது. பொருளாதார சுதந்திரம், படைப்பின் மீதான பற்று, தொடர் உழைப்பு, அதற்கான சூழல் இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற பெண்கள் தொடர்ந்து இயங்குவார்கள். அதற்கான வாய்ப்பு தரப்படுகிறதா என்பது பெண்கள் சார்பாக நான் வைக்கிற எதிர்க்கேள்வி.
இந்த இரண்டு பத்திகளுக்கு குழந்தைகளை உறங்க வைத்து நடு இரவில் தான் எழுத முடிகிறது என்பதும் ஒரு யதார்த்தம்.
கவிஞர் கு.அ.தமிழ்மொழி:
இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட பெண்கள் தன்மரியாதையோடு தற்சிந்தனையோடு இருப்பதைப் பெரிதும் யாரும் விரும்புவதில்லை. மறைமுகமாகவாவது தாக்கத்தை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். அவர்களின் இலக்குகளை அடைய நிறையச் சிரமப்படவேண்டியிருக்கிறது. அப்படிச் சிரமப்பட்டுப் பெறுகிற அந்த இடத்தையும்கூட தவறுதலான சித்தரிப்பை அதாவது நடத்தைகளைக் குறைகூறிக் கொச்சைப்படுத்தி கொள்வதில் பேரின்பம் அடைகிற சமூகம்தான் இது.
அவர்களுக்கென்று இருக்கிற தனிப்பட்ட உணர்வு மதிப்பென்பது குறைவுதான். இதற்கு யாராவது மறுப்பு தெரிவித்தால் அங்கிருந்து எழுகிற ஒட்டுமொத்த குரலும் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவேதான் இருக்கும். அதன் ஆழம்தான் காலகாலமாக பெண் அடக்குமுறைக்கு ஏதுவானதாக அமைகிறது. அப்படியான இன்னல்களை எதிர்த்து வென்ற பெண்கள் போற்றப்படுபவர்கள்.
பெண்ணியவாதி என்கிற சொல்லுக்குப் பின்னே வைக்கப்படுகிற குறு நகைப்பு எத்தனை ஆபத்தானது என்பதை நகைப்பவர்கள் உணரவேண்டும். அந்த நகைப்பு அவர்களை எத்தனை ஆண்டுக்கால பின்னோக்கிய மனநிலையில் இன்னும் வைத்திருக்கிறது என்றும் காண வேண்டும். அவள் ஒரு போராளி என்றாலே “பஜாரி” என்பதை மறைமுகச் சொல்லாக வைக்கிறார்கள். அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இந்த இலக்கியச் சூழலில் பெண் எத்தகைய மனவலிமையைத் தன்னோடு வைத்திருக்கிறாள் என்பதைப் பெண்ணாக நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களின் வழிகாட்டலில் பல ஆண் எழுத்தாளர்களுமே கூட முன்னோடியாக இருக்கிறார்கள். ஆனால் ஓர் ஆண்கூட ஒரு பெண் எழுத்தாளரை மன இசைவுடன் முன்னோடியாகக் கொண்டு இங்கே பின் நடந்த காலம் இப்போதும் வெகு குறைவுதான்.
அதே வேளையில் பெண்ணியம் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறி. “ஆண் அதைச் செய்வதால் நானும் அதைச் செய்வேன் என்னை யாரும் தடுக்க முடியாது, பெண்ணியம் பேசுபவர்கள் எல்லாவற்றிற்கும் அணியமாய் இருப்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமற்றவர்கள்” (பாலியல் சார்ந்து உட்பட) – இப்படிச் சில போலிப் பெண்ணியப் புரிதல்கள் தவறான வழிகாட்டுதலுக்குத்தான் அழைத்துச் செல்லும். இதிலிருந்து தெளிய வேண்டிய தேவையிருக்கிறது.
ஒரு பெண் எழுதவருகிற போது அவள் மீண்டும் பிறக்கத்தொடங்குகிறாள். அவள் மீண்டும் மாற்றி வளர்க்கப்படுகிறாள். அவள் மீண்டும் தனது உடலைப் பார்க்கத் தொடங்குகிறாள். அவள் மீண்டும் மீண்டும் தன்னிடம் பெண் என்பது வெறும் பாலின வேறுபாட்டுக்கான சொல்தான் எனச் சொல்லிக் கொள்கிறாள். அந்தச் சொல்லை வெறுமனே அவள் அவளுக்கானதாக மட்டும் வைக்கவில்லை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வைக்கிறாள். ஆனால் அதைக் கேட்கிற காதுகள் அத்தனையும் தூய்மையானவையல்ல.
ஒரு பெண் எழுதுவதென்பதற்கு இந்தச் சூழல் அவளுக்கென்று கொடுத்திருக்கிற பணியிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செயல்பட வேண்டுமென்று. அவள் அவளுக்காக எழுதுகிறாள் அவளது சுமைக்கும் இன்னலுக்கும் இடையே எழுதுகிறாள். அவள் மீது வைக்கப்படுகிற பாசாங்குத்தனமான, வெற்றுப் பாராட்டெல்லாம் உடல் மீதான ,கவர்தலுக்கான முயல்வாகத்தான் இருக்கிறது.
பெண்ணியம் பேச வேண்டிய தேவையை இந்தச் சூழல் மீண்டும் மீண்டும் உருவாக்கித் தந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் பெண்ணியக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் வேண்டும். அதனோடு கூட தங்களின் வட்டம் இன்னும் பெரிது என்பதைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கருப்பொருள்களும், சிந்தனை ஓட்டமும் காலத்திற்கு ஏற்ப விரிவாகிக்கொண்டு இருக்கிறது.
கவிஞர் தென்றல் சிவக்குமார்:
முதலில் இந்த நல்ல கேள்விக்கு நன்றி!
பெண்கள் இயங்குதளம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சவால் இருக்கத்தான் செய்கிறது. அதனதன் சவால் அது அதற்கு.
ஒரு பெண் படைப்பாளியாகும் முன் வாசகக் கட்டத்திலேயே இந்தச் சவால்கள் தொடங்கிவிடுகின்றன. புத்தகங்களின் தலைப்பு வெளித்தெரியாமல் பாடப்புத்தகங்களைப் போல அட்டை அணிவித்து வாசிக்கும் பெண்களை நானறிவேன். இது அவசியமா?, இதெல்லாம் தேவையா?, இதற்கு இவ்வளவு நேரம்/பணம் செலவிடுவதா? இதிலிருந்து என்ன கிடைத்துவிடும்?, என்பதெல்லாம் எழுத்துக்கு மட்டுமல்ல, வாசிப்புக்குமே கேட்கப்படும் கேள்விகளாகத்தான் இன்னும் நம் சமூகத்தில் இருக்கின்றன. குடும்ப அமைப்பு சார்ந்து எழும் இந்தச் சிக்கல்கள் இருபாலருக்கும் பொதுதான், என்றாலும் அடர்த்தி வேறுபடும்.
நவீன தமிழிலக்கியச் சூழலில் பெண் படைப்பாளிகளுக்கும் சமமான வரவேற்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன, வாழ்த்துகளும் விமர்சனங்களும் சமூக ஊடகப் பரப்பில் தாராளமாகப் பகிரப்படுகின்றன.
பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதான விமர்சனங்களை, இதை மட்டுமே விமர்சிப்பது என்கிற விமர்சன வட்டத்துக்குள் இருப்பவையாக மட்டுமே நான் பார்க்கிறேன். அடிப்படையில் பெண்ணியம் என்பதே வட்டத்துக்குள் இருக்க மறுப்பதுதானே! “முந்தைய தலைமுறைப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. அவர்களுக்கு வெளியுலகம் தெரியும். அப்படிப் பார்த்தால் இந்தத் தலைமுறை மேலும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ள நிலையில் இன்னமும் பெண்ணியம் பேசுவதா?” என்பதாகச் சில கேள்விகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
முந்தைய தலைமுறைப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. ஆனால், வெளியில் சென்றாலும் அது வீட்டுக்காகத்தான் இருந்தது. வேலைக்குப் போகவும், வங்கிக்கும், வரி கட்டவும், வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிவரவுமே பயணப்பட்டார்கள். எனில், எழுதுகையில் தான் பார்த்த, பங்குபெற்ற அனுபவங்களை எழுதத் தலைப்பட்டார்கள், அல்லது எழுதத் தலைப்படுகிறோம். இதைத்தான் எழுதவேண்டுமா என்ற கேள்விக்கு இதை எழுதி முடித்தாயிற்றா என்றொரு எதிர்வினாதான் தட்டுப்படுகிறது.
நிற்க. சமீபத்தில் “இதையெல்லாம் எழுத ஆண்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஆயிரம் ஆண்டுகாலமாக அடக்கப்பட்டுள்ளீர்கள். அதைப் பற்றி எழுதலாமே” என்ற ஒரு விமர்சனத்தைக் கேட்க நேர்ந்தது. எதை யார் எழுதுவது என்று பிரித்தளிக்கும் துலாத்தட்டு எங்கிருக்கிறது என்று தெரிந்தால் சௌகரியமாக இருக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உள்ளடக்கத்தைத் தவிர்த்து, வடிவத்திலும், மொழியிலும், நடையிலும் எப்படியெல்லாம் பெண்ணெழுத்தை நவீனப்படுத்திக்கொள்ள, பாதிப்பை ஏற்படுத்துவதாக்கிக்கொள்ள, சுவாரசியமானதாக்கிக்கொள்ள இயலுமோ, அதற்கு உதவும் விமர்சனங்களை, ஆலோசனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்கவே ஒவ்வொரு படைப்பாளியும் தயாராயிருக்கிறார். ஆக்கப்பூர்வமான இத்தகைய பரிமாற்றங்கள் இலக்கியச் சூழலையும் மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை.
உண்மையில் பெண்ணியம் எழுதவேண்டிய அவசியமற்றுப் போகும் ஒரு சமூகத்தை நோக்கித்தான் இலக்கியமும் பயணப்படுகிறது, இல்லையா? ஒருநாள் அங்கிருப்போம் தோழர்களே. ஆனால், அதுவரை எல்லாவற்றையும் எழுதிவைப்போம். இந்தப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் இன்றியமையாததுதான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களையும், வாசிப்பையும் மதிக்கும் இலக்கிய உலக சகபயணிகள் அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து வரவிருப்போருக்கு நல்வரவு. வாசித்து, எழுதி மேற்செல்வோம். வாழ்தல் இனிது.
எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி:
இலக்கியம் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். நவீன தமிழிலக்கியத்தில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பது ஆறுதலானது. ஆனால், அதைப் புரிய வைப்பதற்குத்தான் பெருமளவில் போராட வேண்டியிருக்கிறது. எழுத்து கண்ணாடி போன்றது உங்கள் மனதை அப்படியே வெளிக்காட்டிவிடும். சமூகம் அதை எப்படி தனக்கேற்ற பிம்பமாக்கிக் கொள்கிறது என்பது முக்கியம். இங்குதான் எங்களுக்குச் சிக்கல் உருவாகிறது. கதையோ, கவிதையோ ஒரு பெண் எழுதுகிறபோது தன்னியல்பாக விட்டுச்செல்கிற வெற்றிடம் கவனிக்கப்படுகிறது. உண்மைத்தன்மையோடு கூடிய புனைவை தங்களின் அனுபவத்தோடும் வாழ்க்கையோடும் வாசகர்கள் பொருத்திப் பார்ப்பதில்லை. மாறாக, வெற்றிடம் நிரப்புவதற்கான கூழாங்கற்களாகக் கண்ணீரையும் ஆறுதல் சொற்களையும் நிரப்புவதோடு ஒரு பெண்ணை அங்கே தேடத்தொடங்குகிறார்கள். இலக்கியச்சூழலில் இது மிக மிக ஆபத்தான இடம்.
ஆணோ, பெண்ணோ எழுத்தாளர்கள் அழக்கூடாதென்று விதிமுறை உள்ளதா என்ன? அழுகை வந்தால் அழவேண்டியதுதான். குடும்பத்திலிருந்து எழுதுவது, சில வரையறைகளுக்குள் எழுதுவது இதெல்லாம் பழைமை என்கிற வகைமைக்குள் கொண்டு போகிறார்கள். முற்போக்கு என்பதே பெண்களுக்கானது என்று தமிழ்ச் சூழலில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என் வாசிப்பிலும் வாழ்க்கை அனுபவத்திலும் பெண்ணியம் என்பதற்குத் திட்டமான வரையறை கொடுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வியல் கூறுகளுக்கேற்ப மாறுபடக்கூடியது. என்னைப்பொருத்தவரை பெண் விடுதலை என்பது மனவிடுதலையும் கூட. அதற்கான போராட்டத்தைப் பெண்ணியம் என்றால் எழுத்தில் அது தவிர்க்க முடியாதுதான்.
கதைக்கான கரு முழுமையடைந்து வெளிவருவதற்குள் நம்மை நச்சரித்து ஒருவழி ஆக்கிவிடும். அது ஒரு அழகான தருணம். எந்த நேரத்திலும் கிளர்ந்து எழும். எழுதுகிற ஆண் அந்த தருணத்தை எந்தக் கீறலும் இல்லாமல் லாவகமாகப் பிடித்துவிடுவார். பெண்ணுக்கு அதற்கான சாத்தியம் கிடையாது. அலுவலகப் பணி, வீட்டுப்பணி, உபசரிப்புகள் முடித்து எழுத உட்கார்ந்தால் அதன் விளைவு வேறு. இதில் எப்படி இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கமுடியும்? இலக்கியக் கூட்டங்கள், விமர்சனங்களை அணுகும் முறை, தொடர் வாசிப்பு, பல்வேறு மனிதர்களின் வேறு வேறான நிலவியல் உணர்தல், இதெல்லாம் எழுத்தாளர்களுக்குத் தேவையான அம்சங்கள். இன்றைக்கும் பெண்களால் தொலைதூர இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் பயணிக்க முடியாது. ஆண்களும் பெண்களுமாக சமத்துவத்தோடு செயல்படவேண்டிய இலக்கிய வெளியில் எங்கேனும் ஒன்றிரண்டு பெண்கள் கலந்து கொள்கிறார்கள். முழுவதும் ஆண்கள் நிறைந்த அரங்கத்தில் நான் மட்டும் நூல் குறித்து விமர்சனம் செய்கிற சூழல் இருந்திருக்கிறது. புகைப்படங்கள் எடுப்பதில்கூட கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இலக்கியம் சார்ந்து பெண்களுக்கு என்ன தெரியும் என்கிற அழிக்க முடியாத அலட்சிய பொதுப்புத்தியும் உண்டு. இவைகளைத் தகர்த்து நாங்கள் இயங்க வேண்டும். இயங்கவும் செய்கிறோம்.
எழுத்தாளர் பாலைவன லாந்தர்:
தேர்ந்த எதிரி இல்லையென்றால் போட்டிகளில் சுவாரசியம் இல்லை. கிட்டத்தட்ட இந்த நிலையை இங்கே பார்க்கிறேன். பெண்கள் தொடர்ந்து தமிழிலக்கியச் சூழலில் இயங்குவதென்பது கத்தி மீது நடக்கும் வித்தை போன்றது தான். களைத்துப் போய் ஓய்ந்தவர்களுக்கு மத்தியில் காயப்படாமல் நின்று நிலைத்திருப்பது பெருஞ்செயல். இதில் துரோகிகளுக்கு நண்பர்களின் முகம் வேறு. எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தைப் படைப்புகளில் செலுத்தத் தவறி விடுகின்றனர். குறுகிய காலத்தில் இல்லாமல் பொறுமையுடன் காத்திருந்து கிடைக்கும் வெற்றி சற்று அலாதியானது. தொகுப்பு வெளியான உடனேயே அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற போக்கு மாறிட வேண்டும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடுத்திட உளவியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதெல்லாம் இப்போது பலிக்காது. அவள் அவர்களுக்கு அப்பனாகி விட்டாள். மற்றபடி எனக்குத் தனிப்பட்ட பால்பேதத்தில் நம்பிக்கை இல்லை. கவிதை கவிதையாகவே பார்க்கப்படும்.
உங்கள் இரண்டாவது கேள்வி,
நான் பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் எழுதுவதில்லை. பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் எழுதியவர்கள் செய்த தாக்கம் இவ்வாறு கேட்க வைக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் தொடக்கத்திலிருந்தே எனது இலக்கு சமூகமாகவே இருக்கிறது. அதனால் இந்த விமர்சனங்களை வைப்பவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் தாண்டி எழுதக்கூடிய பெண் எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் முழுமையாக அடையாளப்படுத்தப் படவில்லை. பழைய கூற்றுகள் மாறிவிட்டன. சிலரின் எழுத்துக்கள் அவற்றைத் தெளிவுபடுத்தும்.
கனலி அமைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
எழுத்தாளர் ஞா.கலையரசி:
இன்றைய இலக்கியச் சூழலில், பெண் எழுத்தாளர்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கடுமையானவை.
முதலாவது, எழுதுவதற்குக் குடும்பத்தினரின், முக்கியமாகக் கணவரின் சம்மதமும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். மீறி எழுதிய காரணத்தினால், மணிக்கட்டு முறிக்கப்பட்ட சம்பவம், விரல்கள் முறிக்கப்பட்ட கொடுஞ்செயல், நாம் வாழும்காலத்திலேயே நடந்தேறியிருக்கிறது.
பெண் எழுதுவது தேவையில்லாத வீண் வேலை என்கிற அளவிலேயே குடும்பத்தினரால் பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என எல்லாவற்றையும் முடித்த பிறகு, தான் தூங்கும் நேரத்தைத் தியாகம் செய்து தான், பெண் எழுத முடியும். “குழந்தையை நான் தூங்க வைக்கிறேன் அல்லது சமையலை நான் கவனிக்கிறேன், நீ போய் எழுது,” என்று, எந்தக் கணவனாவது சொல்வானா?
அடுத்தது எழுத்தை மதிப்பீடு செய்யும் போது, எழுதுபவர் பெண், என்பதே பிரதானமாகிறது. அவர் எழுத்தின் வீச்சும், அந்த வட்டத்துக்குள்ளே புழங்குவது எனக் கொள்ளப்படுகின்றது. ஆண் எழுத்தாளர், ஆணைப் பற்றி எழுதும் போது, அது உலகளாவியதாகக் கொண்டாடப்படுகின்றது; அதுவே ஒரு பெண் எழுத்தாளர், பெண்ணைப் பற்றி எழுதும் போது, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் குறுக்கப்படுகின்றது.
பெண்ணின் உடல்மொழி, காமம், திருமணத்துக்கு வெளியேயான கள்ள உறவு போன்றவற்றைப் பற்றியெழுதும் பெண்கள், எதிர்கொள்ளும் விமர்சனங்கள் கடுமையானவை. அவர்கள் எழுதுவதைப் புனைவென்று கருதாமல், அவர்களுடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி, நடத்தையைக் கேவலமாக விமர்சிக்கும் போக்கும், தமிழ் இலக்கியச் சூழலில் காணப்படுகின்றது.
பெண்ணின் உடல் மொழி குறித்துத் தைரியமாக எழுதிய கவிஞர்கள் குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றோர் எதிர்கொண்ட கண்டனங்கள், மிகக் கடுமையானவை என்றும் அவர்களை அண்ணாசாலையில் நிற்க வைத்து, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் என்று ஆண் கவிஞர் ஒருவர், வெளிப்படையாகக் கூறினார் என்றும், அம்பை ‘உடலெனும் வெளி,’ எனும் நூலில் கூறியிருக்கிறார்.
போட்டிகளில் ஏதாவது பரிசோ, விருதோ பெற்றால், பெண் என்பதால் கிடைத்துவிட்டது என்று இகழ்ச்சியுடன் பேசும், சில சைக்கோ இலக்கியவாதிகளும் நம்மிடையே உண்டு.
“ஓர் ஆணைப் பெண்ணும், ஒரு பெண்ணை ஆணும் சமமாக நடத்த எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதையெல்லாம் நீக்கிவிட்டால் போதும்; இருவருமே சேர்ந்து பயணிக்கலாம்,” என்று முகநூலில் பெண் ஒருவர், இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
இதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி போட்டுக் கொண்ட சில கழிசடைகள், இந்த வாசகத்தைப் பெண்ணுடலுடன் சம்பந்தப்படுத்தி, எதையெல்லாம் நீக்க வேண்டும் எனக் கேட்டு, மிகவும் கீழ்த்தரமாகப் பின்னூட்டம் இட்டிருந்தனர், அவருக்கு அது எப்படிப்பட்ட மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என்பதை ஒரு பெண்ணாக என்னால் உணரமுடிகின்றது.
பெண்கள் எதை எழுதினாலும், அதைப் பெண்ணுடலுடன் சம்பந்தப்படுத்தி அவர்களைக் கேவலமாக விமர்சிப்பது, காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதுவும் சமூக ஊடகங்களில் இயங்கும் பெண்கள் என்றால், அத்தனை கேவலம்! பொழுது போகாமல், வெற்று அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் என்ற எண்ணம்! எவள் மாட்டுவாள் என்று பித்துப் பிடித்து அலையும் கூட்டம்! பெண்களின் உள்டப்பிக்கு வந்து , தனிப்பட்ட முறையில் நலம் விசாரிப்பது, ஆபாசப் படங்கள் அனுப்புவது எனத் தொடர்ந்து இம்சைகள்! இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில், பெண்கள் தொடர்ந்து எழுதுவதே, மகத்தான ஒரு சாதனை தான்.
பெண் தன் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில், மிக முக்கியப் பங்கு வகிப்பது உடல். உடலை மீள் வாசிப்பு செய்ய, உடலை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இது சாதாரண வேலையில்லை. ஏனென்றால் முட்படுக்கையில் கிடத்தி, முட்களால் போர்த்தப்பட்ட உடல். பண்பாட்டு முட்கள், மொழி முட்கள், இலக்கண முட்கள், சம்பிரதாய முட்கள், சடங்கு முட்கள், அரசியல் முட்கள், வேலி என்று நினைத்துத் துளைக்க விட்ட முட்கள், அரண் என்று நினைத்து, அரவணைக்க விட்ட முட்கள்.
–அம்பையின் ‘உடலெனும் வெளி’ யிலிருந்து.
எழுத்தாளர் சுசித்ரா :
இலக்கியம் என்பது ஒரு சூழலுக்குள் நிகழும் பணி. ஒரு காலகட்டத்தில், தேடல் கொண்ட, படைப்பு மனநிலை கொண்ட, அக்காலத்திய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய எத்தனிக்கும் சிலர், தங்களுக்குள் பேசி, உரையாடி, சண்டைபோட்டு, சிலவற்றை ஏற்று, சிலவற்றை மறுத்து, தங்களுக்கான அழகியலை வடிவமைத்துக்கொள்கிறார்கள். படைப்புகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறு தான் எங்கும் இலக்கியம் நிகழ்கிறது, வளர்கிறது.
இலக்கிய அரட்டையும் சச்சரவும் இல்லாமல் இலக்கிய இயக்கம் என்பது சாத்தியம் இல்லை. இதற்கு மிகக்குறைவானவர்களே விதிவிலக்குகள். ஒரு சூழலுக்குள்ளே தான் ஒருவருக்கு இலக்கிய அறிமுகம் அமைகிறது. ரசனை கூர்தீட்டப்படுகிறது. புதிய படைப்பு சாத்தியங்கள் சோதனை செய்யப்படுகிறது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வழியாக அடுத்தக்காட்ட எழுத்து உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் இப்படித்தான் படைப்பாளிகள் உருவாகின்றார்கள். காப்ரியல் கார்சியா மார்குவெஸ் இளைஞனாக இருந்தபோது காபிக்கடைகளில் மூத்த எழுத்தாளர்களின் அரட்டைகளை ஒட்டுக்கேட்டபடி எழுத்தாளர் ஆனார். ஹெமிங்வே 1920-களில் பாரிஸ் நகரின் இலக்கியச்சூழலுக்குள் மூழ்கியபின் தான் தன் எழுத்தைக் கண்டடைந்தார். இந்திய மொழிகள் அனைத்திலும் இலக்கிய இயக்கங்கள் வழியாகவே படைப்பாளிகள் உருவாகி வந்துள்ளனர்.
இங்கு நூறாண்டுக்கால தமிழ் இலக்கியச்சூழலில், பெண்களைப் பொறுத்தவரை, இலக்கியம் என்ற இயக்கத்துக்குள் பெரிய அளவில் நுழையாமல் இருந்ததே அவர்கள் இயங்குவதில் முக்கியமான பிரச்சனையாக நான் நினைக்கிறேன். ஒரு உரையாடலுக்குள் வராதவர்களுக்கு அந்த மொழி பேசத்தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. படைப்பிலக்கியத்தில் ஆர்வம் உள்ள பெண்களின் எண்ணிக்கை இன்றும் ஒப்புநோக்கக் குறைவாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளே நுழையவோ இயங்கவோ தடைகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அப்படி இருக்குமென்றால் அதுவே இன்றைய சூழலில் பேசித்தீர்த்தாகவேண்டிய முக்கிய சவாலாகக் கருதுகிறேன். அமைப்புரீதியாகவோ, கலாச்சாரரீதியாகவோ, யாரொருவரும் இலக்கியச் சூழலில் இயங்க வாசல் பூதங்கள் இருக்கலாகாது.
முன்பைவிட இன்று அதிக எண்ணிக்கையில் பெண்கள் வாசிக்கிறார்கள், எழுதுகிறார்கள், இலக்கியப்பேச்சுக்குள் வருகிறார்கள். இலக்கியச்சூழலும் அமைப்புகளும் அதற்குத் தகுந்தாற்போல் மாறியுள்ளன. பொதுவாக இன்று எல்லா இலக்கிய அமைப்புகளிலும் வாசகிகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கான அத்தியாவசியங்கள் ஒருங்கித்தரப்படுகின்றன. இலக்கிய சஞ்சிகைகளில் பெண்களின் பெயர்களில் எழுத்துகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அவை அசல் பெண்களாலேயே எழுதப்படுகின்றன என்பது மேலதிகமான மகிழ்ச்சி.
அதே நேரம் இலக்கியம் அமைப்புரீதியாக நடைபெறும் செயல்பாடு அல்ல. ஒரு படைப்பாளி தன்னை கண்டடைவதற்கு முறைசாராத, தன்னியல்பாக நிகழக்கூடிய, சில நேரங்களில் கட்டுமீறிச்செல்லக்கூடிய, இலக்கிய அரட்டைகள் இன்றியமையாதவை. தொடர்ந்து ஒரு சூழலில் தங்குதடையின்றி தன்னை வெளிப்படுத்தக்கூடிய ஒருவராலேயே தன் தேடலைத் தெளிவுபடுத்தி தரமான படைப்பை உருவாக்க முடியும். இந்த விவாதங்களின் முறைசாரா தன்மையினாலேயே அவற்றுக்குள் பெண்கள் இயல்பாக நுழைவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கலாச்சார ரீதியாக நம் சமூகத்தில் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வட்டங்களில் இயங்குவதே வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி இயல்பாகப் புழங்குவதில் நமக்கு, இருபாலருக்கும், மனத்தடைகள் உள்ளன. இன்றைய தலைமுறையில் அவை சற்று நெகிழத்தொடங்கியுள்ளது என்றாலும், ஒரு வாசகியோ எழுத்தாளரோ பல நேரங்களில் பெண்ணாகவே வரவேற்கப்படும் சங்கடத்தை உணர்கிறாள். ஒரு வாசகன் தான் ஆண் என்பதினாலேயே தன் பேச்சை இவள் தவறாகப் புரிந்துகொள்வாளோ என்று ஒதுங்குகிறான் அல்லது குறைத்துப் பேசுகிறான்.
இவை நுண்மையான சவால்கள். ஆனால் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் புழங்கும் எந்தவொரு அறிவுச் செயல்பாட்டிலும் பெண்கள் நுழைகையில் இந்த ‘boys club’ தன்மையை எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. அவர்களின் நுழைவுக்கு ஒரு சவாலாக அமைகிறது, ஆகவே இதை வெறும் gender politics என்று ஒதுக்கிவிட முடியாது. இவை பேசப்படவேண்டும், மெல்ல மெல்லத் தீர்க்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது, கலை குடும்பப் பெண்களின் இடமல்ல என்ற எண்ணம் நம் கூட்டு மனநிலையில் உள்ளது. கண்ணகியும் மாதவியும் நமக்கு வெவ்வேறானவர்கள். அதே நேரம் கற்பு என்ற விழுமியமும் அது சார்ந்த பதற்றமும் நம் கூட்டு மனநிலையில், குறிப்பாகப் பெண்களின் மனக்கணக்குகளில், உள்ளது. இவ்விரு மனப்பதிவுகளில் ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரைப் பெண்கள் இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்குவதற்கு இவ்வகை மனப்பதிவுகளும் பெரிய சவால்களே. 70-80-களில் எழுதிக்குவித்த நட்சத்திர பெண் படைப்பாளிகளுக்கு தங்களுடைய குடும்ப அடையாளத்தைப் பேணி முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததை அம்பை பதிவுசெய்துள்ளார். இவ்வகை பிம்பங்களை எதிர்க்கும் ரீதியாகவே பெண்ணிய சிந்தனைகள் இங்கு உருவாகி வந்தன. கண்ணகியுமில்லாமல் மாதவியுமில்லாமல் ஒரு மூன்றாம் வகை மாதிரிக்கான டெம்பிளேட்டை பெண்ணியத்தின் சொற்களஞ்சியம் அளித்தது. அவற்றில் நின்றபடி முந்தைய தலைமுறை கவிஞர்களும் எழுத்தாளர்களும் எழுதினார்கள்.
இவை இரண்டுமே எழுத்தாளராக இயங்கும் பெண் தன் பெண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகத்தின் கண் முன்னால் தன்னை நிறுவிக்கொள்ளச் செய்யும் செயல்பாடுகளாக எனக்குத் தோன்றுகின்றன. சமூக பிம்பமும் சுயபிம்பமும் சேர்ந்து ஊதிப்பெருகி தன் முன் எழுந்துள்ள மிகப்பெரிய வாசல் பூதத்தைச் சாந்தப்படுத்தவே தன் ஆற்றலையெல்லாம் செலவழிக்கிறாள். இப்பிம்பங்கள் எவற்றையும் தரிக்காமல், எதிர்க்காமல், தன் பால் அடையாளத்தின் நிர்ப்பந்தங்களைப் பற்றி யோசிக்காமல், இயல்பாக, தளையில்லாமல், கட்டில்லாத கற்பனைத்திறம்கொண்டு ஒரு எழுத்துக்காரி எழுதமுடியுமா என்பதுதான் அவளுக்கு முன் இன்றுள்ள பெரிய சவால் என்று தோன்றுகிறது.
இலக்கியம் என்பது எப்போதுமே சற்று கலக மனநிலை கொண்டவர்களுக்கான வெளி தான். கலை ரசனையும், புத்திக் கூர்மையும், சொல் வல்லமையும், தொடர்ச்சியின் விழிப்பும் ஒருவரில் கூடுகையில் இயல்பாக வெளிப்படும் ஞானச்செறுக்கின் முன்னால் இச்சவால்கள் பெரிய விஷயங்களல்ல. இருந்தாலும், முன்பு சொன்னது தான். அந்த இடத்தை அடைவதற்குத் தடையாகத் தோன்றும் வாசல் பூதங்கள் இருக்கலாகாது. பெண்களின் இலக்கிய செயல்பாடுகளைப் பற்றிய அக்கரை கொண்டவர்கள் இவற்றைப் பரிசீலிக்கலாம், விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.
எழுத்தாளர் ச.கனியமுது:
பெண் என்பதற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தைப் புறந்தள்ளுவது போலவே பெண் எழுத்தாளர்கள் என்ற அடையாளத்தை மறுக்கிறேன். ஆணியம் பெண்ணியம் என்பது இலக்கியத்தில் இல்லை என்பதே இந்த விமர்சனங்களுக்கு நான் முன் மொழியும் பதில்.
தரமான இலக்கியம் இந்த விமர்சனங்களைக் கடந்து நிற்பவை. அப்படியான படைப்புகளை நோக்கிப் பயணிப்பதே ஒரு எழுத்தாளராக என் விருப்பம்.
சமகாலத்தின் அரசியல் சமூக வாழ்க்கை ஆண் பெண் இருபாலரும் சந்திக்கும் அக வாழ்வின் நெருக்கடிகள் நெகிழ்வுகள் கொண்டாட்டங்கள் இவைகளைப் பற்றிய வெளிப்பாடாக இலக்கியம் மிளிர வேண்டும் என்பதை மட்டுமே ஒரு படைப்பாளியாக எனது இலக்காகக் கொண்டு பயணிப்பேன்.
விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றுவதால் விளைவது ஏதுமில்லை. தேவையற்ற மன உளைச்சல் தவிர, கால விரயம். படைப்பூக்கம் சிதைவுறுதல் இவைத் தவிர இந்த விமர்சனங்கள் சாதிப்பது எதுவும் இல்லை. நிறைய இளம் எழுத்தாளர்கள் புதிதாக வருகிறார்கள். அவர்கள் இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு முனைப்புடன் முன்னேற வேண்டும். உலகத்தரமான எக்காலத்திலும் பேசப் படுகின்ற இலக்கியத்தைப் படைக்க முயன்ற வண்ணம் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நானும் இதையே பின்பற்றுகிறேன்.
எழுத்தாளர் அனிதா பொன்னீலன்:
தனித்து இயங்குவது சவாலான விஷயம் தான் அதை அவர்கள் சமாளித்துத் தான் ஆகவேண்டும். அவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதனால் பெண்ணியம் என்ற வட்டத்திலிருந்து வெளிவர மறுக்கலாம். அதற்கான போராட்டம் அது.
என் வீட்டில் பெண் என்பதால் எந்த பாதிப்பும் பிரச்சினை இல்லை. சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்ததில்லை. என்னைச் சுற்றி உள்ள ஆண்கள் பெண் என்பதால் என்னை எந்த இடத்திலும் மரியாதைக் குறைவாகவோ வேறு மாதிரி பிரச்சனைகளோ கொடுக்கவில்லை.
எழுத்தாளர் ஹேமா:
என்னைப் பொறுத்தவரைப் பெண்ணியம் என்பது, ஒரு பெண் தான் விரும்பும் செயலை மேற்கொள்ளத் தடையாக இருப்பவற்றை உடைத்தெறிவது! எதைச் செய்ய விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து இந்தப் பெண்ணியத்தின் அளவுகோல் மாறுபடுகிறது.
நினைத்தால் காலையில் இரண்டு மணிநேரமோ அல்லது பணிமுடித்து வந்து இரண்டு மணிநேரமோ ஒதுக்கி எழுத ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பு பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை. எழுதுவதென்றால், இலக்கியக் கூட்டங்களுக்கு வருவதென்றால் உடனிருப்பவர்களின் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் அனைத்து முன்தயாரிப்புகளையும் செய்து விட்டே வரும் சூழலில் இன்றும் அவர்கள்.
இருக்கும் சூழல் எழுத்தைப் பாதிக்கிறது. பெண்களுக்கு, சிறுமிகளுக்கு எதிராக சமூகத்தில் நிகழ்ந்து வரும் வன்முறைகளும் மனதை வருத்துகின்றன.
தன் மனதைச் சலனப்படுத்தும் எதைப் பற்றியும் எழுதும் உரிமை எழுத்தாளருக்கு உண்டு. அது மற்றவர்களுக்குள் பலகாலமாய் ஊறியிருக்கும் கருத்துகளைத் தொந்தரவு செய்யும் போது அவ்வெழுத்தைச் சுற்றி பெண்ணியம் என்ற வட்டம் வரையப்படுகிறது. இது சமூகம் வரையறுக்கும் பெண்ணியம்.
தான் விரும்பும் எதையும் எழுதும் உரிமை ஆண் பெண் என்று யாருக்கும் உண்டு! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைப் புறக்கணித்துச் செல்லுங்கள். அவ்வெழுத்து உங்களுக்கானது அல்ல!
எழுத்தாளர் சுஜா:
தொடர்ந்து தமிழிலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் ஒருவரிடம் அம்பையின் ’உடலெனும் வெளி’ வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ‘பெண் எழுத்தாளர்கள் மேல் எனக்குப் பொதுவாகப் பெரிய அபிப்ராயம் இல்லை. பெண்கள் எழுத ஆரம்பித்தே கொஞ்ச காலம்தான் ஆகிறது. அது ஒரு காரணம், மேலும் என்ன எழுதிவிடப் போகிறார்கள் என்ற எண்ணமும் ஒரு காரணம்’ என்று குறிப்பிட்டார். இதுபோன்ற ‘சமூகக் கற்பிதக் கூட்டுப் புத்தி’ மனப்பான்மையுடனோ அல்லது பெண்கள் என்பதாலேயே ‘பெரிய மனிதத்தனமான’ அங்கீகாரம் அளிப்பது போன்றோ இல்லாமல் படைப்புகளைப் படைப்புகளாக மட்டுமே அணுகும் நிலை இன்னமும் வரவில்லை. பெண் எழுத்து என்று ஒதுக்கி வைக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதுமான சூழலே நிலவுகிறது. இதைப் பெண்களுக்கான சவாலாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெண்களின் பார்வையிலான படைப்பிலக்கியம் உருவாகிக் கவனம் பெற முடியாத நிலையில் ஒரு சாராரின் வாழ்வியல் நிலைப்பாடுகளை, உணர்வுகளை, கலைத்திறனை, மெய் வெளிப்பாட்டைத் தமிழிலக்கியம் இழந்துவிடும்.
பெண்ணியம் பற்றிய புரிதலின் போதாமையில் எழும் விமர்சனமாகவே இதைப் பார்க்கிறேன். பெண்ணியம் என்பது ஏதோ பெண்களுக்கான பிரச்சனை என்பது போலவும் அதற்கு அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பது போலவும் பார்க்கப்படுகிறது. பெண்ணியம் என்பது ஒரு வாழ்வியல் முறை, கோட்பாடு. எதிர் பாலினங்கள் இரண்டும் அவற்றின் தனித்தன்மைகளையும் இயல்புகளையும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு சுமுகமாக வாழ்வதற்கான ஒரு வழி. சில சமூகக் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அதை நோக்கி நகர முடியும். ஆணோ பெண்ணோ யார் எழுதினாலும் இந்தப் புரிதலுடன் எழுதப்படும் அனைத்துமே பெண்ணியப் படைப்புகள்தான். மேலும் ஒரு படைப்பாளி எதை எழுத வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அசோகமித்திரனின் படைப்புகளை ‘நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியல் என்னும் வட்டத்திலிருந்து வெளியேறவில்லை’ என்று விமர்சிப்பது எப்படியோ, அதைப் போலத்தான் இதுவும் புரிதலற்ற விமர்சனம். படைப்புகளை அதன் இலக்கியத் தரத்தை வைத்து மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் லாவண்ய சுந்தர்ராஜன்:
பெண்களின் உலகம் வீட்டுக்குள் வித்தாரமானது. அவர்கள் உலகம் அது தான். அதற்குள்ளான அனுபவங்களே கடலினும் பெரிது. அதை எழுதும் போது நீங்கள் அதை ஏன் எழுதவில்லை அப்படி எழுதியிருக்கலாமே என்று சொல்லப்படுவதே பெண் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் சவாலாக நினைக்கிறேன். இந்த உலகம் பெண்களால் இயக்கப்படுவது. பெண்களே மாபெரும் சக்தி இதை பெரும்பாலான பெண்கள் நம்ப மறுப்பதே பெண் படைப்பாளிகளான இன்னொரு சவால். பெண்களில் படைப்புகள் சக படைப்பாளிகளால் பேசப்படாது அடுத்த சிக்கல்.
கவிஞர் ம.கண்ணம்மாள்:
இங்கு, எல்லாமே மனமும் அறிவும் சார்ந்தது. சவால்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாத்தையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை. எது நமக்குப் பிடிக்கின்றதோ அதை மனம் ஏற்றுக்கொண்டு அறிவின் வழி செய்ய முனைகின்ற போது சவால்கள் சாத்தியப்பட்டுக் கைக்குள் அடங்கிப்போகும். சுலபமாக, தூரங்களை அளவிடத் தெரிந்தவள் பெண். அனுமானிப்பதில் தனித்தவள். இடர்ப்பாடுகள் எதிலும் இருக்கும். நமக்கானது எது என்ற அளவுத் தெரிந்து செயலாற்றினால், உள்ளார்ந்த உந்து சக்தி கிடைக்கும். சதா பிரச்சினையில் சிக்குண்டு கிடந்தாலும் வாசிப்பும், தேடலும் இயங்குதலை வெற்றியாக்கும். நவீனத் தமிழிலக்கியத்தில் பல கற்பிதங்களுக்கு நடுவே,துணிச்சலாக ஒரு கருத்தை முன் வைப்பதே சவால் தான். அந்தச் சவாலைக் காலத்திற்கேற்ற வகையில் நவீனத் தமிழிலக்கியத்தில் பெண்கள் எதிர் கொண்டே வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
மனிதக்குல வரலாறு என்பதே பெண்ணுடன் தான் தொடங்குகின்றது. பரவெளியில் பெண்களின் வரலாற்றிற்கானத் திறவுகோல் சமூகத்திற்கானது. கற்காலச் சூழலிலிருந்து தற்காலச்சூழல் வரை பெண்கள் அடைப்புக்குறிக்குள் அடைபட்டு விடாமல் வீரியமாகவே இருக்க விரும்பியுள்ளனர். நாளையும் அதையே விரும்புவர். அனைத்து உயிரிகளிலும் பெண் உயிரினம் தான் கூர்மையானது. மனிதர்களுக்கான இனப்பகுப்பில் பெண் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட போது பெண்ணியம் பேசத் தேவையானது. பெண்ணியம் பேசியே தான் பெண் என்ற அடையாளத்தை யாரும் சுட்ட விரும்பவில்லை. இங்கு,முகமூடி போடவும் வேலையில்லை. தனக்கான விரும்புதலை, அவசியத்தை நிர்ணயம் செய்துகொண்டால் போதும். பெண், பெண் தான். அங்கு,அவள் மட்டுமே ஆதியானவள். பெண்ணியம் பேசாமலே, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து தான் நம் புரிதலை வெளிக்காட்ட எவ்வித நிர்ப்பந்தமுமில்லை. “பெண்ணியம் ” என்பது அவரவர் பார்வையிலுள்ளது. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்காமல் போகும். சுமைகளும்,புறக்கணிப்பும், அடக்குதலும் அதிகமாகத் தோள்களில் ஏறும் போது பெண்ணியத்தைக் கையிலெடுக்க வேண்டியுள்ளது. அவரவர் நினைப்பதை, விரும்புவதை அதைச் சுதந்திரமாகச் செயலாற்றுவதே போதுமானது. அதற்கு “பெண்ணியம் ” என்ற விமர்சன இருப்பு அடையாளப்படுத்தப்படும் சூழலிருப்பதைப் பார்க்கத் தேவையில்லை.
எழுத்தாளர் ரமா சுரேஷ்:
ஒரு ஆணின் வீரத்தைவிட ஒரு பெண்ணின் கர்வத்திற்கு அதிக மதிப்புண்டு என்று நினைப்பவள் நான்.
தமிழிலக்கியத்தில் மட்டும் அல்ல உலகளவில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு என்பது இன்று மிக முக்கியமாக உள்ளது. அதிலும் இலக்கியத்தில் ஏன் பெண்கள் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்றால் இச்சமூகத்தினர் முன் தங்களுடைய சுய சிந்தனை, கருத்து, அனுபவத்தை முன் வைப்பதால் தான். அவர்கள் சொல்லவரும் கருத்தை ஒட்டி விவாதிக்காமல் அல்லது கண்டுகொள்ளலாமல் ஒதுக்குவதில் கூட சவால்கள் நிறைந்து உள்ளது. அவர்களுக்கே உரிய மிகப்பெரிய சவால் முழு நேர இலக்கிய வாதியாக வாழ்வது என்பதும் இயலாத ஒன்றாகவே உள்ளது. சுயமரியாதை/ சிந்தனை முன் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை .
ஆனால், அனுபவம் என்கிற போது கண்டிப்பாக வேறுபாடு வரும் . அதை முன் வைத்துத்தான் அவள் படைப்புகள் அதிகளவில் படைக்கப்படும் . அதற்குப் பெண்ணியம் என்று பெயர் சொல்லுவது அவரவர் பார்வையைப் பொறுத்து. நாம் பகுத்தறிவில் உயர்ந்துவிட்டோம் , நாகரீகத்தில் வளர்ந்து விட்டோம் என்று எவ்வளவு சத்தமாகச் சொன்னாலும் பெண் உழைப்பும், உடலும் சுரண்டப்படுவதை இல்லை என்று மறுக்க முடியவில்லையே.
பெண்களைப் போற்ற வேண்டாம் மரியாதை கொடுங்கள். அது போதும்..!
ஊடகவியலாளர்/ எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த்:
பெண் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் பல தடைகளையும் இடையூறுகளையும் தாண்டித்தான் எழுதப்படுகின்றது. எழுத்தால் ஏதேனும் பொருளாதார வருவாய் கிடைக்கிறது என்கின்ற பட்சத்தில் அவர்கள் எழுத அனுமதிக்கப்படுகின்றார்கள். எழுத்தின் மீதான வேட்கையை, சமூகத்தின் மீதான தன் உள்ளக் குமுறல்களை எழுத்து அல்லது காட்சி ஊடகங்களில் பணியாற்றுவதன் வழியாகத் தான் தணித்துக்கொள்ளும் சூழல் இருக்கின்றது. அப்படியே ஒரு பெண் எழுத அனுமதிக்கப்பட்டாலும், அவள் எதை எழுத வேண்டும் என்பதை அவள் பணிபுரியும் சூழலும், அவள் சுற்றமும் தீர்மானிக்கின்றது . உளவியல் சார்ந்தோ , அரசியல் சார்ந்தோ எழுதினால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள அவள் தன்னை தயார்ப் படுத்த வேண்டியுள்ளது. பெண்ணால் பகடிகளை எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குப் பெண்களின் நகைச்சுவைகளையும் கிண்டல்களையும் ஏனோ இரசிக்க மனம் வருவதில்லை.
எழுத்தை அவள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்து அவளது ஒழுக்கம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றது. வாசிப்பும், எழுத்தும் ஒன்றோடொன்று இயைந்தவை என்பதால் அதிக நேரத்தையும், உழைப்பையும், கோருபவை. பெண்ணின் பரந்துபட்ட வாசிப்பு சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. அடிப்படையில் சிறப்பான மொழிவளம் இருப்பதனால் தேர்ந்த சொற்களின் வழி தன் அகத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த பெரும்பாலும் கவிதை என்னும் வகைமையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். குறியீடு, படிமங்களின் வழியேனும் பூடகமாக தங்களின் ஆற்றாமையைப் பிரசவித்து விடுகின்றார்கள். எதிர்வினைகள் உடனுக்குடன் கிடைக்கப்படுவதால் சிறுகதைகளில் அலசப்படும் நுட்பமான களங்களையும் அவள் சிரத்தையுடன் தேர்வு செய்ய வேண்டியதாய் உள்ளது. கட்டுரைகள் எனில் தரவுகளைத் திரட்டுதல் சவாலானது. நாவலுக்கான களங்கள் எனில் கதை மாந்தர்களுடனும் அவர்களது தீவிர உணர்வுகளுடனான அவளது பயணம் பலவருடம் நீடிக்கக்கூடியவை. மொழிபெயர்ப்பு படைப்புகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்குவதுடன் மொழி ஆற்றலை நுட்பமாய் வெளிப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது. படைப்பு மனநிலையில் பயணிக்கையில் குடும்பம், சமூகம், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் மீதும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவையே.
குடும்பத்திற்கான பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்துவிடுவதனால் மட்டும் அவளது கடமைகள் நிறைவு பெறுவதில்லை. அவளின் நடவடிக்கைகளின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும், சுமத்தப்படும் பொறுப்புகளுக்கும் என்றுமே அளவுகள் இருந்ததில்லை. எழுத்திற்காக அவள் ஒதுக்கும் நேரங்கள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. அவள் படைப்புகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்கள் விமர்சிக்கப்படுவதற்கு அவள் பெண் என்பதே போதுமானதாக இருக்கின்றது. படைப்புகளை விடப் படைப்பாளர்களை விமர்சிக்கும் போக்கு பெண்களுக்கான முக்கியமான அச்சுறுத்தல். தனக்கான அடிப்படை உரிமைகளே கேள்விக்குறியாகிப் போகும் பொழுது பெண்ணியம் பேசப்படத்தான் வேண்டும். ஆனால் அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்ணின் முன்னேற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட அனைத்துத் தரப்பினருக்குமானது. அதில் அவளைச் சுற்றியுள்ள ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள் என அனைவருமே அடங்குவர்.
பெண் எழுத்துக்கள் பெரும்பாலும் கண்ணீர் புலம்பல்களாக வெளிப்படுகின்றன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவள் புழங்கும் சூழலில் அவள் சந்திக்கும் பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அவள் தானே வெளிப்படுத்தியாக வேண்டும். கொண்டாடப்படும் இலக்கியங்களும் , எழுத்துக்களும் ஆணின் பார்வையில் படைக்கப்படுவதுடன் அவனின் புரிதலிலேயே வாசிக்கவும் படுகின்றது. பெண்ணின் எழுத்துக்களே பிரச்சினைகளின் தீர்வுக்கான பாதையைச் செப்பனிட்டுச் செல்லும்.
கவிஞர் க.சி.அம்பிகாவர்ஷினி:
முதலில் நவீன தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறார்களா ( அ) இயங்க முடிகிறதா என்ற கேள்வியையும் உங்கள் கேள்வியோடு தொடர்ந்து முன்வைக்கின்றேன். பெண் கவிஞர்கள் தாங்கள் தேர்வு செய்யும் பாடுபொருள்களில் பெரும்பாலும் அவர்களது நான்கு சுவர்களுக்குள் வந்து போவதைத் தடுக்க முழுமையாக உத்வேகப்படமுடியவில்லை..வீடு என்கிற அவர்களது தனியுலகத்தைக் கடந்து சில நேரங்களில் படி தாண்டுகிறது நவீன கவிதைகள்.. என்றாலும் கூட அதற்கும் தனிப்பட்ட முரணியலில் அவர்களின் மீதான விசாரணைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன.. இத்தகைய அரிய வேளைகளில் பெண்கள் உளவியல் சார்ந்து அவர்களின் வாழ்வாதாரச் சூழ்நிலைகளிலிருந்து தாங்கள் கண்டும் கேட்டும் வந்த வீடல்லாத கவிதைகளை எழுத முடிகின்றது… கவிதைகளின் மீது எந்த நிர்ப்பந்தமுமில்லாமல் இந்த நவீன இலக்கியச் சூழலிலும் பெண்களால் இயங்க முடிகிறதென்றாலும் திரும்பத் திரும்ப பொதுச் சமூகம் ,பெண்கள் மீது வைக்கின்ற சித்தரிப்புகளைக் கட்டுப்பாடுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது…குறிப்பாக கவிதையெழுதும் பெண்கள் பெரும்பாலும் முழுச் சுதந்திரமாக இயங்க முடிகிறதா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்….ஒரு பெண் கவிஞருக்கும் கவிஞரல்லாத பெண்ணிற்குமான மெல்லிய இடைவெளியென்பது கட்டுடைத்தலின் சாத்தியமே தவிர வேறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை… தொடர்ந்து பெண் கவிஞர்களும் தங்களுக்கான நவீன இலக்கியச் சூழலியலில் இயங்க நகர்வுகளுக்கு மட்டுமே உள்ளாக முடிகின்றது.
கவிஞர் சுபா செந்தில்குமார்:
உங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டும் இத்தகைய கேள்வியை எதிர்கொள்ளும் அளவிற்கு இலக்கியச் சூழல் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது.
ஒரு பாலினத்தின் அகவுணர்வுகளை அந்த பாலினமே எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்தே பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளிவருவதில்லை என்ற விமர்சனமும் வருகிறது. இத்தகையை முன்முடிவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியில் நேர்மையான எழுத்தாளர்கள் சிந்திக்கத் தொடங்கியே பல காலம் ஆகிவிட்டது.
கவிஞர் அம்பிகா குமரன்:
உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தனித்தனியான பிடித்த பிடிக்காத பண்புகளும் பழக்கங்களும் உணர்வுகளும் உண்டு. மனிதக் குலத்திற்கும் அப்படித்தானே இருக்க வேண்டும். ஆண் பெண் என்கிற உடல் கூறுகளில் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் வாழ்வின் மீதான அன்பும் காதலும் ஒன்றுதானே. ஆனால் காலங்காலமாக ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியுமென ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வேறுபடுத்தியே நாம் வைத்திருக்கிறோம். இரு மனங்களும் ஒன்றல்ல.. இருவரின் வாழ்வும் ஒன்றல்ல.. என்பதே இந்த நிமிடம் வரை உலகம் முழுவதும் ஆணுக்கும் பெண்ணுக்குமான போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும். இன்றைய தேதியில் சொல்லவேண்டியதே இல்லை நான் இங்கு எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பாள்… இரண்டில் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கலாம்.. கற்பழித்து ஏதோ ஒரு மறைவிடத்தில் வீசப்பட்டு அவளின் அடையாளங்களை நம்முடைய அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கலாம் இன்னும் பல உங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஏதோ ஒரு ஆணின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கலாம்.
இதே போலத்தான் இன்றைய தேதியில் பொதுவெளியில் கவிதை எழுதுவதும் கட்டுரை எழுதுவதும்… பொது அரங்கங்களில் பேசுவது கூட…. அரங்கம் தாண்டிய பிறகு பல ஆண்களால் அவளைப்பற்றி அந்த நபரைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனங்களைக் கடந்து அவளின் அந்தரங்களைப் பற்றிப் பேசுவதுதான் இயல்பாகவும் இருக்கிறது.ஊரில் நமது பாட்டிமார்கள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் பிள்ளைக்கு வாய் அதிகம்.. வாய் நீளுது… அடக்க ஒடுக்கமா நடந்துக்க தெரியல.. என்று பத்தாம் பசலிதனமாகப் பேசுவதைத் தான்…இன்று பொதுவெளியில் கொஞ்சம் நாகரீகமான சொற்களோடு எழுத வருகிறவர்களைப் பற்றி… போராட்டக்களங்களுக்கு வருகிற பெண்களைப் பற்றியும் புறம் பேசிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம் . இலக்கியத்தைப் பொறுத்தவரை இங்கு இரண்டுவிதமான மனோபாவங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்னதான் ஒரு பெண் தன் எழுத்துகளின் மூலம் தன் பலத்தை நிரூபிக்கும் திறமையானவளாக இருந்தாலும் புறக்கணிப்பின் மூலம் அவளை நிலைகுலையச் செய்வது ஒருவகை. பொதுவெளியில் இயங்கும் பெண்கள்தானே உடல் ரீதியான பாலியல் வேட்கைகளை அவள்மேல் எளிதில் திணிக்கலாம் என்ற பொதுப்புத்தி மற்றொரு வகை. இப்படியானவர்களைப் புறந்தள்ளி தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் பெண்களின் மீது பாயும் இறுதி அம்பு உடலரசியல். இது இலக்கியத்துறையில் இயங்கும் ஆண்களால் மட்டுமல்ல சில பெண்களாலும் பெண்கள் மீது எய்தப்படலாம்.ஒட்டுமொத்த ஆண் உலகத்தையும் இங்கே கூண்டிலேற்றத் தேவையில்லை எல்லா நிலைகளிலும் சில விதிவிலக்குகள் இருப்பார்கள்..இருந்து கொண்டும் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களுக்கும் இதில் பெரும்பான்மையான பங்கிருக்கிறது ஆண் எழுத்தாளர்களை கலைஞர்களை வெகுஜனங்களிடம் கொண்டு செல்வது போல் பெண் எழுத்தாளர்களையும் கொண்டு செல்ல வேண்டும்.இறுதியாகப் பெண்ணியம் என்ற வட்டத்தைப் பெண்களாகப் போட்டுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். ஒரு வட்டத்தை வரைந்து வைத்து அதைச் சுற்றி முள்வேலியை அமைத்து வைத்து எப்போதெல்லாம் பெண்மை சுதந்திர தாகத்தோடு வேலியைத் தாண்ட முற்படுகிறதோ அப்போதெல்லாம் முள்வேலியில் மின்சாரத்தைப் பாய்ச்சி பெண்களை நிலைகுலையச் செய்யும் இந்தச் சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளும்வரை பெண்ணியத்தை நாங்கள் தூக்கிப் பிடித்துத்தான் ஆகவேண்டும்.
கவிஞர் ஜான்ஸி ராணி :
எது பெண்ணியம் என்ற கேள்விக்கு இதுதான் என்ற வரையறுத்துக் கூறத்தக்கப் பதில்கள் இல்லை.சமூகத்திலும் குடும்பத்திலும் ஒரு ஆணுக்கு என்ன உரிமைகள்(rights) இருக்கின்றதோ அவை சக உயிரியான பெண்ணுக்கும் தரப்படவேண்டும் மற்றும் குடும்பத்தின் பொறுப்புகள் (responsibilities) சரிசமமாகப் பகிரப்பட வேண்டும். இதுவே என் எளிய புரிதலாய் இருக்கின்றது.
“இயற்கை”இனப்பெருக்கத்தின் பொருட்டே “ஆண் ” “பெண்” என்ற இரண்டுவிதமான உயிரிகளை உருவாக்கி இருக்க வேண்டும்.இனக்கவர்ச்சியின் பொருட்டே தோற்றத்தில் வேறுபாடுகளும். சமூக பரிணாமத்தில் குடும்ப அமைப்பு தோன்றிய பின்பே ஆண் கோலோச்சுதல் தொடங்கியிருக்கின்றது.தாய்வழி சமூகத்தில் கூட்டமாய் வாழ்ந்த போது பெண்ணியம் என்ற சொல் இருந்திருக்குமா என்ன?!
இலக்கியச் சூழலில் சரிவிகிதமாகப் பெண்களின் படைப்புகள் வெளிவரவில்லை என்பதே என் மனக்குறை. மற்றபடி சவால்கள் எதுவும் சந்தித்ததில்லை. ஆனால் சமூகச் சூழலும் குடும்பச் சூழலும் அவள் “பெண்” என்பதாலேயே பல சவால்களை முன் வைத்தபடியேதான் இருக்கின்றது. உயரம் தாண்டும் விளையாட்டில் அந்த சட்டம் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதைப் போல் அவள் மேலான சவால்கள் கூடிக் கொண்டே தானிருக்கின்றன.
தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்கள் மனதில் உண்டாக்கும் தாக்கத்தின் விளைவே படைப்பு எனச் சொல்லலாம்.
பெண் படைப்பாளர்கள் பெண்ணியம் என்கிற வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள் என்பதை விட தங்களைச் சுற்றிலும் பெண்ணிற்கு எதிராக அரங்கேறும் நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் அவ்விதமாக எழுத வைக்கிறது.
“பெண்ணியம்” , “ஆணாதிக்கம்” போன்றவை எல்லாம் outdated என்று உணரத்தக்கவையாக நம் சமூகச்சூழல் மாறும் காலத்தை எதிர்நோக்குகிறேன்.
எழுத்தாளர் கோ.லீலா. (மறைநீர் நூலாசிரியர்)
பெண்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாது வேறு தளங்களிலும் இயங்குவது என்பது சவாலான ஒன்றே. சவால்கள் என்று பார்த்தால் பெண்கள் எழுதத் தொடங்கும்போதே,ஆண் படைப்பாளிகளிடமிருந்து விமர்சனமும், உன் படைப்பு எதைப் பற்றிப் பேசினால் கவனப்படும் என்றும் வகுப்பெடுக்கத் தொடங்கி விடுகின்றனர். மேலும் எதைப் பாடுபொருளாகப் பாடவேண்டும் கவிதை என்றால் வடிவத்தில் திருத்தம் செய்வது எழுதப்பட்ட கவிதைகளை, கட்டுரைகளை இலக்கிய விமர்சகர்களின் வாசிப்புகள் திணித்து வடிவமைப்பது என்பதாக இருக்கிறது. பாலியல் சுதந்திரம் பேசும் பெண்களுக்கோ தன்னை பெண்களுக்கு ஆதரவாளர்களாகச் சொல்லிக்கொண்டு சுதந்திரத்தில் குளிர் காயலாம் என்று நெருங்கி வருபவர்கள் சில நேரங்களில் ஆகச் சிறந்த படைப்பாளிகள் ஆகவும் விமர்சகர்களாகவும் கூட இருக்கிறார்கள். அதே நேரத்தில் சுதந்திரம் என்பதைப் பெண்கள் உணர்ந்து விடக்கூடாது எனக் கவனமாகவும் செயல்படுகிறார்கள். பெண்களுக்கான இலக்கியத்தில் வாழ்வு சவாலாகிப் போனதிலிருந்து எழுதத் தொடங்கும் எழுத்துக்கள் வாழ்வை விடவும் பெரிய சவாலாக அரசியலை எதிர்கொள்ள வைக்கிறது. பெண் எழுதவேண்டிய தேவை நேரம் அரசியல் என அனைத்தையும் பெண்ணே வெளிப்படுத்த வேண்டிய தேவை பெண்ணின் வாசிப்புத் தளத்திற்கும் அது குறித்தான விமர்சனம் பகுதி இருக்கும் நேரத்தைக் குறைத்து விடுகின்றது என்பது ஒரு சவால். விமர்சனம் என்று வருகின்ற பொழுது எந்த வார்த்தையில் பெண் விமர்சனம் செய்தால் ஒப்புக்கொள்வாரோ அந்த பாணியில் இறங்கி அவர்கள் ஒப்புக் கொள்ள வைப்பது ஒரு விமர்சன உத்தி என்றாலும் என் ரசனை என் விமர்சனம் எதுவென்று உனக்குப் புரிய வைப்பேன் என்பதும் எனக்கான புது அளவுகோல்களை நானே நிர்ணயிப்பேன் என்பதெல்லாம் வெற்றி தான்.ஆனாலும் அந்த வெற்றி புதிய அளவு கோலை நிர்ணயம் செய்யும் சவாலால் அடையப் படுகின்ற வெற்றி.
இரண்டாவது கேள்வி பெண் படைப்பாளர்கள் பெண்ணிய வட்டத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்ல இயலும்.
பெண் படைப்பாளிகளின் படைப்பு அவர்கள் வாழுகின்ற அல்லது வாழ நேர்ந்து விடுகின்ற வாழ்வியலின் வேரிலிருந்து தான் கிளை விடுகிறது. சிலருக்கு கலை,இலக்கியம் பெண்ணியம் என வாழ்க்கை அமைந்து விடுகிறது. பெரும்பாலோனோருக்கு வாழ்க்கை யதார்த்த போராட்டங்களில் தினம் இருந்து கிளம்பி வருகிறது. சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களும், இலக்கியவாதிகளுக்கும் அரசுக்கும்,அமைச்சுக்கும் அறிவுரை வழங்கியதோடு, போராளிகளாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் பல்வேறு கருப் பொருட்களைக் கொண்டு பாடினாலும் எழுதினாலும் கூட, அதிகமான பெண் படைப்பாளிகள் பெண் என்பவள் தன்னையே உடல் மட்டுமானவளாக பார்த்துக்கொள்ள வைக்கின்ற படைப்புகளையே செய்திருக்கிறார்கள். மேலும் ஆண் மையபுனைவு எதிர்ப்பு மட்டுமானதாக நவீன தமிழிலக்கிய பெண் படைப்பாளிகளின் படைப்புகளும் மாறிப் போயிருக்கின்றன. பெண் கல்வி பெண்,உடல் சார்ந்த பிரச்சனைகள், பெண் கொடுமைகள் போன்றவற்றை மட்டுமே வேறு வேறு சொற்களைக் கொண்டு எழுதிக் குவிக்கப்படுகின்றது என்பது உண்மையே…. தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாக இருக்கலாம். எனினும் காமத்தை, காதலை, உடலை மட்டுமே எழுதும் பலருக்கு வயிற்றுப் பசி,வறுமை, பன்னாட்டு அரசியல், நீரும் சோறும் படும்பாடு, ஆண் பெண் அரசியல் போன்றவற்றைப் பற்றிய பார்வை பெரிதாக இல்லை என்பதாக ஆந்திரா எழுத்தாளரான சுபத்ரா சொல்லியிருப்பதை நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். பெண்ணியம் என்பது அக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும்,சமுதாய, அரசியல்,பொருளாதார சூழ் நிலையிலும் அவள் ஆண்களுக்குச் சமமானவள் எனும் உயர் நெறியை நிலைநாட்டும் நோக்கத்தைக் கருவாகக் கொண்டிருந்தாலும்… அதிகமாக அரசியல், சமுதாயம், பொருளாதார சூழ்நிலை, சூழலியல் அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களைப் பெண் படைப்பாளிகள் பெருமளவு பாடவில்லை அல்லது எழுதவில்லை என்றே கூறவேண்டும். பொதுத்தன்மை வாய்ந்த படைப்புகளைப் பெண் படைப்பாளிகள் தன் படைப்புகள் மூலம் உரத்துப் பேசவில்லை என்ற வகையில் தான் இதைப் பார்க்கிறேன். இதற்குக் காரணம்,நினைவில் காடுள்ள விலங்கு என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. பெண் எங்கு சென்றாலும் வீட்டை நினைவில் சுமந்து செல்பவளாக அல்லது சுமந்து செல்ல வேண்டியவளாக இருப்பதால் அவளின் சிந்தனைகள் அதைச் சுற்றியே அமைந்துவிடுவது இயல்பு. இதற்கு சமூகமும் ஒரு காரணமே. பெண்ணின்றி ஏதுமில்லை என்பதால் பொதுத்தன்மை உள்ள படைப்புகளில் கூட ஒரு சிறு பகுதி அந்த பொதுத்தன்மை கருப்பொருளுக்கும், பெண்ணிற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் இருக்க முடியாது. குறிப்பாகப் பெண் படைப்பாளிகளால். இனி வரும் காலங்களில் பெண் புறம் சார்ந்த கருப்பொருளைக் கொண்டு அதிக இலக்கியம் படைக்க பெண் படைப்பாளிகள் முன்வர வாழ்த்துகிறேன்.
எழுத்தாளர் பிரமிளா பிரதீபன்:
பெண் என எழுதும் போது கூட அந்த எழுத்துக்களில் ஊடுருவியிருக்கும் போதைத் துளிகள் தெறித்து விசிறப்பட்டுவிடுமோ எனத் தோன்றுமளவிற்குப் பெண்ணுடலும் பெண்களின் உணர்வுகளும் விமர்சிக்கப்படுகின்றன. அல்லது அத்தகையதொரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
கால மாற்றங்களுக்கு அமைவாக ஒரு பெண் ஒப்பீடட்டளவில் தன்னை சகல உரிமைகளும் சுதந்திரமும் உடையவளாக எண்ணிக் கொண்டிருந்தாலும் எவருக்கும் தெரியாததொரு நொடியில் தலைதூக்கத் தயாரான நிலையில் அடக்குமுறைகள் தொக்கு நிற்கின்றன என்பதை நிச்சயமாய் மறுப்பதற்கில்லை. அது ஒரு ஆணினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதைத் தாண்டி பெண்களாலும் சமயங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.
நிஜமாகவே என்னளவில் ஒரு பெண்ணிற்குச் சமுதாயத்தினரால் (தமிழ் சமுதாயத்தினரால்) வழங்கப்படும் சுதந்திரமானது கயிற்றால் கட்டி மேய விடப்பட்ட ஒரு பசு மாட்டிற்கு ஒப்பானதென்றே கருத முடிகிறது. என்ன…! கால மாற்றம் அந்த கயிற்றைச் சூழலுக்கு ஏற்றாற் போலச் சற்றே நீளமாக்கியிருக்கிறது அவ்வளவேதான்.
இலக்கிய உலகைப் பொறுத்தவரைப் பெண்ணினது உணர்வுகளை அப்படியே உணர்ந்து எழுதிவிடத் துணியும் எந்த ஒரு ஆணினாலும் முழுமையான அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ வெளிப்படுத்திவிடவோ முடியுமென்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ஒரு பெண்ணினால் மட்டுமே அவளை அல்லது அவளினத்தை முழுமையாய் வெளிப்படுத்துதல் சாத்தியமாகிறது. இந்த புள்ளியில்தான் பெண் படைப்பாளிகளின் இன்றியமையா தன்மையும் அவள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களும் பேசப்பட வேண்டிய ஒரு எண்ணக்கருவாக உருமாறுகிறது.
குறிப்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தம்மை வெளிப்படுத்தும் பெண்களுக்கான சவால்கள் ஏராளமானவை என்பதுவும் பேசப்படவேண்டிய ஒரு விடயமாகவே கருதப்படுகிறது. தான் எதனை எழுத வேண்டுமென்பதைத் தீர்மானிக்க அல்லது அவளைத் தட்டி வீழ்த்திவிடச் சந்தர்ப்பம் பார்த்து ஒரு ஆண்வர்க்கம் எப்பொழுதுமே அருவமாய் உலா வந்தபடியேதான் இருக்கிறது. இதனை வெளிப்படையாக எவரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையெனினும் அவளை… அவள் நடத்தையை… அவள் எழுதும் கருப்பொருளை… அவளது அந்தரங்க வாழ்க்கையை என்று அலசி ஆராய்ந்து விமர்சிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு அந்த ஆதிக்க இனம் காத்துக்கொண்டேயிருக்கிறது.
இது வெறுமனே ஒரு ஊகமென்றோ என் தனிப்பட்ட அனுபவமென்றோ கருதுவதற்கு நிச்சயமாய் இடமில்லை. ஒரு பெண் தன்னை மீறிச் செயற்படும்போதோ தன்னிலும் அதிகமான திறமையைக் கொண்டிருக்கிறாள் என உணரும் போதுதான் அந்த ஆதிக்க இனம் தமக்கே தெரியாமல் தமது செயற்பாடுகளினூடாக தம் சுயத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த அனுபவத்தை ஒவ்வொரு பெண்ணுமே வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் உணரப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமென்பதை அறிய முடிகிறது.
அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டயறி’ எனும் சிறுகதையைப் படிக்கக் கிடைத்தது அந்த கதையின் சம்பவங்கள், கதையை வாசித்து சில நாட்களுக்கு பிறகுமாய் கூட என்னைச் சூழ்ந்து சுழன்றபடியே இருந்ததை என்னால் தவிர்த்துக்கொள்ளவே இயலவில்லை. தனது எண்ணத்தை ஒரு டயறியில் யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துக்கொள்ள முடியாத அந்த தேவகி சித்தியின் நிலை வெறும் கற்பனையாய் மட்டுமே இருந்துவிடுமென்று எனக்குத் தோன்றவில்லை.. எத்தனையோ தேவகிகளின் கைப்பேசி உரையாடல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் ஆராயப்படுகின்றன. அச்செய்திகளின் நன்மை தீமைகள் ஆங்காங்கே விவாதிக்கப்பட்டபடியேதான் இருக்கின்றன.
தன் கணவனால் உளவு கண்காணிப்பில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறிந்த பின் எழுத்தாளர் நரன் அவர்களால் படைக்கப்பட்ட கவிதையொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் தகுமென எண்ணுகிறேன்.
“வாழ்வெங்கிலும் துணையும் பாதுகாப்பாகவுமிருப்பேன்
என்றவன்தானே நீ
வெறுமனே யோனியினருகிலேயே அமர்ந்திருக்கிறாயே”
…………………….
“யோனிக்கொரு பூட்டு
அதன் சாவி
வளைந்த உன் ஆண்குறியில் முடிச்சிட்டு
தொங்குவது தெரியும்
சக ஹிருதயனே…”
……………………………………
“உன்னை நடுநடுங்க வைக்கும் ஒரேயொரு
பொய்யுரையுரைக்கவா…?
தற்போது மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக
இருக்கிறான்.”
இதனை எழுதிவிட உந்தும் இதே இந்த உணர்வினை எழுத்தாளுமையுள்ள எத்தனையோ பெண்கள் கடந்திருக்கக்கூடும். அல்லது கண்டோ கேட்டோ ஆவது இருக்கக்கூடும். எனினும் அப்பெண்ணினால் இலகுவில் அவ்வுணர்விற்கு வடிவம் கொடுத்துவிட முடிவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ பால் ரீதியான வேறுபாடுகள் மட்டுமல்ல அதற்குள் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் ஒரு பெண் தமது படைப்பைத் தீர்மானிக்க முயல்கிறாள். ஏனென்றால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மயமாக்கப்பட்ட சமூகமானது பெண்களின் துணிச்சலான இலக்கிய வெளிப்பாடுகளைப் பண்பாட்டு மீறலாகத்தான் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறது. (எனது படைப்புகளினூடாகவும் இத்தகைய போலி கலாச்சார காவலர்களை எதிர் கொண்டிருக்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.)
இதன்படி பெண் எழுத்தாளர்கள் அனைவருமே பெண்ணிய வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்ற போதிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கு இலக்கியமும் ஒரு பேராயுதமாகவே அமைகிறதென்பதையும் பெண்ணியத்தைப் பெண்கள் தெரிவு செய்தலென்பது ஒரு பெண்ணினது தனிப்பட்ட தெரிவாக மாத்திரம் அமையாமல் அது ஆணாதிக்கத்தின் விளைவாகவோ அல்லது அத்தகைய சமூகத்தின் ஒரு உந்தலாகவேதான் இருக்கின்றதென்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
‘நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை. என் எதிரியே தீர்மானிக்கிறான்’ என சே.குவாரா கூறியதை போலப் பெண்ணியம் என்பது ஆணாதிக்க சமூகம் எமக்குத் தந்த தெரிவு. இதற்கமைவாக எமது சமூக அமைப்பானது எப்போது சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றைச் சகல மட்டத்திலும் நிறுவத் தயாராகிறதோ அப்போதே சமூக மேம்பாட்டை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச்செல்லத் தயாராக முடியுமென்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் காயத்ரி சிவக்குமார்:
நவீன தமிழிலக்கியத்தில் பெண்கள் கொஞ்சம் பாதுகாப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். சவால்கள் எதில் தான் இல்லை? எல்லாத்துறைகளிலும் சவால்கள் உள்ளன. பெண் என்ற காரணத்துக்காக அத்தகைய சவால்களைக் குறித்து சுயகழிவிரக்கம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நவீன இலக்கியம், பழமைவாத இலக்கியம் என்றெல்லாம் வகைப்பிரிக்க வேண்டியதும் இல்லை. பெண்ணின் சிந்தனையில் உதிக்கும் எல்லாமே இலக்கியம் தான். ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் அவர் படைக்கும் ஒரு தரமிக்க படைப்பு என்பது அவரது வாசகருக்கு மிக நெருக்கமாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வளவு தான். அப்போது ஆண் அல்லது பெண் என்கிற பேதமெல்லாம் வாசகருக்குத் தெரியப்போவதில்லை. சவால்கள் பற்றிப் பார்க்கும் போது வெகுஜன மக்களின் நம்பிக்கைகள் அல்லது அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகவோ அல்லது மாற்றுக்கருத்தாகவோ ஒரு எழுத்தாளர் ஏதேனும் ஒன்றைச் சொல்லும் போது எதிர்வினைகள் வருவது இயற்கையான ஒன்றே. அந்த எழுத்தாளர் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதைக் கடக்கவும் தாண்டிவரவும் ஒதுக்கிப்புறந்தள்ளவும் தேவையான தன்னம்பிக்கை இருந்தாலே போதும்.
பெண்ணியம்: பெண்ணியம் குறித்து காந்தி, பெரியார், பாரதியார் போன்ற ஆண்களெல்லாம் பேசாத ஒன்றையா இன்னும் நாம் பேசப்போகிறோம். பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் சிலர் அதாவது வெகு குறைவான பெண்கள் வேண்டுமானால் இன்னுமே இருக்கலாம். ஆண்களின் பார்வை அப்படி இருக்குமேயொழிய பெண் படைப்பாளிகள் எல்லாக் கோணத்திலும் தங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணியத்தைத் தாண்டி எவ்வளவோ படைப்புக்களைப் பெண்கள் அளித்துள்ளனர்.
கவிஞர் சவிதா:
படைப்புகளில் பெண், ஆண் என்ற பாகுபாடு இல்லை. படைப்புகளை ரசித்த வாசகர் ஒருவரின் பார்வையிலேயே பேதம் முதலில் தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாறு வெகுஜன சூழலில் பெண்கள் வேலைக்குப் போவது 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கப்பட்டதோ அதே மனநிலைதான் இன்றும் இலக்கியத்துறையில். ஒருவரின் படைப்பு படைப்பாளியின் ரசனையையோ, அறிவுத்திறனோ, மொழி ஆளுமையோ அதன் செயல் விளைவுகளையோ (impact) பொறுத்தே அமைய வேண்டுமே தவிர அது யார் சொன்னது என்பதைப் பொறுத்ததல்ல.. இந்த இடத்தில்தான் பெண் படைப்பாளிகள் பெண்ணியத்தில் சிக்கிக் கொண்டுவிடுகிறார்கள். பெண்ணியம் பேசாத படைப்பாளிகள் யாருமே இருக்க முடியாது. உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனம் எவ்வாறு ஒரு படைப்பை வழங்கிட முடியும். ஒரு ஆண் சுதந்திரமாய் செய்யும் ஒரு செயலை பெண் செய்ய முடியாத நிர்ப்பந்தங்களில்தானே பெண்ணியம் முன்னெடுக்கப் படுகிறது? அது எதற்கான செயலுக்கான முன்னெடுப்பு என்பதில் வரும் தடுமாற்றம்தான் சில பெண் படைப்பாளிகளை ஒரு கவசம்போல் பெண்ணியத்தை அணியக் கட்டாயப்படுத்துகிறது. சிலபேர் நினைப்பது போலப் பெண்ணியமென்பது முழுக்க பெண்களுக்கான விஷயம் மட்டுமேயன்று. நிஜமான ஒரு நண்பன் பெண்ணடிமைத்தனத்தால் தன் சகமனுஷி தீங்கிழைக்கப்படுகிறானெனில் அங்குக் குரல் எழுப்புகிறவனும் பெண்ணியமே பேசுகிறான். திறமையிருந்தும் பெண் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்கவும் ஓர் ஆணுள்ளம் இருக்கும்தானே? அதற்குப் பிறகு பெண்ணுக்கும் பெண் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே பெண்ணியம் முழங்கக் கடமையும் உரிமையுமுள்ளது என்ற எண்ணம் அநாவசியமானது. சமகால எழுத்தாளர்களில் பலர் தங்கள் படைப்புகளைச் சமரசமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர். அதில் வரும் சில அருவருக்கத்தக்க விமர்சனங்களுக்காகவும் அவளின் ஒழுக்க சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்காகவுமே ஒரு மாயகவசமாய் தன் முரட்டுத்தனத்தை மேலங்கியாய் அணியத் துவங்குகிறாள். ஆனால் அதுவே அவளின் முழுமையான பெண்மையை மறைக்கும் பெண்ணியமென்ற பெயரிலான முகமூடியாக மாறிவிடுவதே அதன் அவலம். அந்த வகையிலான விமர்சனங்களுக்குத் தொடர்ந்து நம் படைப்பை முன்னெடுப்பதே சிறந்த வழியாகும். பெண்ணியம் மட்டுமே பேசுபொருளாக இல்லாமல் மனிதத்துவத்தைக் கொண்டாடுவதே ஒரு படைப்பாளியின் மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்பதே என் கருத்து.
கவிஞர் கனகா பாலன்:
- காதலைப் பற்றிப் பேசினால் அவளுடைய நடத்தையின் மேல் சந்தேகம் கொள்ளும்.
- தைரியமாகத் தனது கருத்தைப் பயமின்றிச் சொல்வாளானால் அங்கு அவள் அடங்காப்பிடாரியாக உருவகப் படுத்தப்படுவாள்.
- அரசியல் பேசினால் எதிர்க்கட்சிக்காரன் சண்டைக்கு வருவான்.
ஆங்கிலேயனிடமிருந்து கிடைக்கப்பெற்ற சுதந்திரம் சக சமூகத்திடமிருந்து கிடைக்கப் பெறவில்லை தான்.. ஆண்களால் மட்டுமல்ல..சிலநேரம் பெண்களால் கூட…! பல பெண்களுக்கு முதல் முட்டுக்கட்டையே வீட்டிலிருந்து தொடங்கும். பின் எங்கிருந்து தொடர்வாள் அவள் தன் இலக்கியப் பணியை..?
தொகுப்பு : கனலி கலை- இலக்கிய இணையதளக்குழு
-*இப்பதிவிலுள்ள கருத்துக்கள் படைப்பாளிகளின் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.
Art Courtesy : viva.media
நரேன் கவிதையினை தக்க தருணத்தில் மேற்கோள் சுட்டியது அருமை…