ஜப்பானியக் கவிதைகள்


ப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை இலகுவாக விளங்க முடியவில்லை. சில மீள் வாசிப்புகளைத் தொடங்கியபோதுதான், படைப்புகளின் புரிதலுக்கு இவைகள் படைக்கப்படும் தேசங்களின் கலாசாரம் அவசியம் என்பது எனக்குத் தெரிய வந்தது. ஆனால் இந்தத் தேசங்களின் கலாசாரங்களை அறிவது சுலபமானதா? இல்லை எனச் சொன்னாலும், இப்போதைய மொழிபெயர்ப்புக் கலாசாரத்தின் பின் குறிப்புகள் இவைகளைக் கொஞ்சமாவது விளங்க வைக்கின்றது எனலாம்.

ஜப்பானியக்  கவிதைகள் இந்த தேசத்தின் மண்ணின்  நுண்ணிய போக்குகளை நிறையைக் கொண்டுள்ளன. சில கவிதைகளை விளங்க நிச்சயமாக மலர்களின் நுகர்வு தேவை. இந்த நுகர்வு இல்லாமல் கவிதைகளைப் புரிய முடியாது. நான்கு காலங்களும் இந்தக் கவிதைகளுள் மந்திரங்கள் போலச் சொல்லப்படுகின்றன. உலகின் கவிதை வாசிப்பில் முதலாவது நாடாக இருப்பது ஜப்பான்.  இந்த மந்திரங்களின் சூட்சுமங்கள் ஜப்பானியர்களுக்குத்தான்  அதிகம் தெரியும் எனக் கருதுகின்றேன்.

தொடக்கத்தில் பிரெஞ்சு வெளியீடுகள் ஹைக்கூ எனும் பதத்தைத் தமது வெளியீடுகளில் பயன்படுத்தின. இப்போது ஹைக்கூ கவிதைகளைக்  குறுங் கவிதைகள் எனவே வெளியிடுவதுண்டு. சில குறுங்கவிதைகளும், சில நீள் கவிதைகளும் பிரெஞ்சு மொழியில் இருந்து இங்கு தமிழ் வாசிப்புக்குத் தரப்படுகின்றன.)


1

கீழ் வரும் கவிதைகள் HAIKU: Anthologie du poème court japonais, ஹைக்கூ : ஜப்பானிய குறுங்கவிதைகளின் தொகுப்பு, 2002, Gallimard வெளியீட்டில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் இருந்து மொழிபெயர்த்தவர்கள்:  Corrine Arlan, Zéno Bianu.

[ads_hr hr_style=”hr-fade”]

 

நிலாவின் வயது?

கிட்டத்தட்ட

13 என நான் சொல்கின்றேன்.

~ கோபயாஷி இசா (Kobayashi Issa, 1763-1827)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

நிலாவினது முக்காட்டின் கீழ்

மலரின் நிழல்

பெண்ணின் நிழல்.

~ நாட்சுமே சோசெக்கி (Natsume Sôseki, 1865-1915)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

புத்தருக்கு

நான் எனது தொடைகளைக் காட்டுகின்றேன்

நிலா இளைமையாக இருக்கின்றது.

~ மசோகா ஷிகி (Masaoko Shiki, 1867-1902)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

இந்தப் புத்துணர்ச்சியில்

என்னை நான் நிலை நிறுத்துகின்றேன்

பின் தூங்குகின்றேன்.

~ மாட்சுவோ பாஷோ (Matsuo Bashô, 1644-1694)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

இதயத்தின் சுதந்திரத்தையும்

காற்றின் புத்துணர்வையும் தவிர

எனக்குச் சொந்தமானது எதுவும் இல்லை.

~ கோபயாஷி இசா (Kobayashi Issa 1763-1827)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

குறுகிய இரவு

எவ்வளவு நாள்கள்தான்

வாழ்வதற்கு உள்ளதாம்?

~ மசோகா ஷிகி (Masaoka Shiki , 1867-1902)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

குழந்தையின் விரல்களினுள்

வானவில் ஒன்று

தொங்குகின்றது

~ ஹினோ சோஜோ (Hino Sôjô, 1901-1956)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

உடைந்த உடல்

எப்போதும் உயிரோடு

நான் கோடையைக் கடக்கின்றேன்

~ சுமிதாகு கென்ஷின் (Sumitaku Kenshin, 1961-1987)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

குண்டின் பிறந்த தினம்

காயமில்லாத காலையில்

நான் எனது நிர்வாண

உடலைத் துடைக்கின்றேன்.

~ இஷிதா டோய்யி (Ishida Tôei, 1920- )

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

வறியவன்

நிலத்தையும் வானத்தையும்

கோடையின் உடையாகக் கொண்டுள்ளான்.

~தகாரை ஹிக்காகு (Takarai Kikaku, 1661-1707)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

பெரிய அறையில்

ஓர் மனிதனும்

ஓர் இலையானும்.

~ கோபயாஷி இசா (Kobayashi Issa, 1763-1827)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

உலகம் நன்றாக உள்ளது

இன்னொரு இலையான்

சோற்றில் வந்து இருக்கின்றது

~ கோபயாஷி இசா (Kobayashi Issa, 1763-1827)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

ஓர் இலையானைக் கொல்கையில்

நான் ஓர் மலரைக்

காயப்படுத்தினேன்.

~ கோபயாஷி இசா (Kobayashi Issa, 1763-1827)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

இரவு முடிவற்றது

பத்தாயிரம் வருடங்களின் பின் வருபவர் குறித்து

நான் இன்று சிந்திக்கின்றேன்.

~ மசோகா ஷிகி (Masaoka Shiki, 1867-1902)

 

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

நிலாவைத் தியானித்ததின் பின்

என் நிழல்

என்னை மீளவும் கொண்டு  வருகின்றது.

~ யமகுசி சோடோ (Yamaguchi Sodô, 1642-1716)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

வாழும்  நிலவின் கீழ்

ஓரு மரணிப்பவனுடன்

நான் தூங்குகின்றேன்

 

~டகாகோ ஹாஷிமோடோ (Hashimoto Takako, 1899-1963)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

டிசம்பர் மாத இரவில்

கடும் குளிரான கட்டிலில் நான்-

இதுதான் எனக்குக் கிடைத்துள்ளது.

~ ஓசாகி ஹசாய் (Ozaki Hôsai, 1885-1926)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

ஆண்டு வருகின்றது ஆண்டு போகின்றது

கழுதைகள்

அதே கம்பியையே கடக்கின்றன.

~ தகயாமா கியோஷி (Takahama Kyoshi, 1874-1959)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

இந்தக் குளிர்கால நிலவின் கீழ்

ஓர் கல்லையும் காணவில்லை

இந்த நாயை அடிப்பதற்கு;

~ டன் தைகி  (Tan Taigi, 1709-1771)

 


2

(கீழ் வரும் கவிதைகள் Anthologie de la poésie japonaise classique, 1971, Gallimard வெளியீட்டில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் இருந்து மொழிபெயர்த்தவர் G.Renondeau)

 

1.அரிவாரா நோ நரிஹிரா (Ariwara no Narihira ,825-879)

(1)

(ஓர் கள்ளக் காதலன் ஓர் வருடத்தின் பின் தான் விரும்பிய பெண்ணின் இடத்துக்கு வருகின்றான். அனைத்தும் மாறி விட்டது போல அவனது விழிகளுக்குத் தெரிகின்றது.)

 

நிலவு, இது அது போல இல்லை

வசந்தகாலம்? பழைய காலத்தின்

வசந்த காலம் போலும் இல்லை

நான் மட்டும்

மாறாமல் உள்ளேன்.

 

(2)

புஜி மலையின் உச்சம்

பருவகாலங்களின் கவலையை அற்றது

எப்போது தன் முன் பனி வந்து

குந்தும் என நினைக்கின்றதோ

அப்போதுதான் மானின் கூந்தல்

அதனைத் தழுவுமோ?

 

(3)

(நகரை விட்டுத் தொலைவில் வந்த கவிஞன் “நகரின் பறவை” என அழைக்கப்படும் பறவையைக் கண்டு அதனிடம் கேள்வி கேட்கின்றான்.)

 

“நகரின் பறவை”:

நீ உனது பெயரில்

உறுதியாக இருப்பாயானால்

நான் உன்னிடம் ஒன்று கேட்பேன்,

நான் விரும்பும் ஒருவர்

வாழ்கின்றாரா அல்லது வாழாது இருக்கின்றாரா?

 

(4)

 (விஷ்டேரியா மலர்களை ஐயத்துடன் அவதியில் வெட்டச்செல்லும் வேளையில்.)

 

நான் முழுக்க நனைந்துகொண்டு

மிகவும் வேகமாக வெட்டிக்கொண்டிருந்தேன்

ஆம் இந்த ஆண்டும்

எனக்குத் தெரியாது எவ்வளவு நாள்கள்

வசந்தகாலமாக  இருக்குமென்று.

 

(5)

(Ise இன் இளவரசி Ariwara no Narihira ஓர் இரவில் வந்து தங்கியபின் மறுநாள் அவருக்கு  அனுப்பிய கவிதை. Ise இன் கவிதைகள் Ariwara no Narihira கவிதைகள் எனவும் கருதப்படுகின்றது.)

 

என்னை  நோக்கி நீங்கள் வந்தீர்களா?

நான் உங்களை நோக்கிச் சென்றேனா?

எனக்கு நினைவில் இல்லை.

இது ஓர் கனவா? யதார்த்தமா?

நான் தூங்கியிருந்தேனா அல்லது விழித்திருந்தேனா?

 

(6)

(Ariwara no Narihira வின் பதில் இளவரசி  Ise இற்கு.)

 

இந்த இருளில்

எங்களின்இதயங்கள் குருடாகுகின்றன

நாம் அலைந்தோம்

இது கனவா அல்லது யதார்த்தமா…?

இந்த இரவுதான் தீர்மானிக்கும்.

 

(7)

(இறந்து கொண்டிருப்பவன் என நினைக்கும் மனிதன் ஒருவனின் சிந்தனைகள்.)

 

கடைசியாக

ஓர் வழியைத் தொடரவேண்டும்

ஏற்கெனவே இது எனக்குச் சொல்லப்பட்டது

எனக்கு நினைவில் இல்லை

அது இன்றாகவா  அல்லது

நாளையாக இருக்குமா என்று.

 

(8)

நாங்கள் தியானிக்குமுன்

நிலா தன்னை ஒழித்துக் கொள்கின்றதா?

மலைகளின் முகட்டால்

அது மறைக்கப்படலாம்

ஆனால் ஒழிக்கப்படமுடியாது.

[ads_hr hr_style=”hr-dots”]

2.புஜிவாரா நோ குனிபுசா (Fujiwara  no  Kunifusa, 1084 இல் பிறந்தார் எனக் கருதப்படுகின்றது)

 

(1)

 

இந்தத் துயரத்துக்கு எதிராக

நாம் எதைச் செய்துவிட முடியும்?

மலைகளின் மீது

கருவாலி மரங்கள் தமது இலைகளை

விழவைக்கின்றன…

ஆம், மீண்டும் பனி பெய்யும்

[ads_hr hr_style=”hr-dots”]

3.புஜிவாரா நோ சுகேதகா (Fujiwara no Suketaka, 12 ஆம் நூற்றாண்டின்  இடைப்பகுதியில் பிறந்தவர் எனக் கருதப்படுகின்றது.)

 

(1)

 

நான் கேட்பது மழையா?

இலைகள்தான் விழுந்துகொண்டிருக்கின்றன.

மழை பொழிவதுபோல

எனது சட்டைகள் கண்ணீர்களால்

நனைந்து கொண்டுள்ளன.

[ads_hr hr_style=”hr-dots”]

4.பேராயர் ஜீயன் (1155 – 1225)

 

(1)

 

அதிகாலையில்

எனது சட்டையை

எந்தக் கண்ணீர்களால் நனைகின்றேனோ

அவைகளே

வானத்தில் இருந்து விழும்

கடிகாரத்தின் சத்தங்களை

அழைத்து வருகின்றன.

 

(2)

 

மானின் கத்தல்

என்னை எழுப்பியது

எனது நிறைவேறாத கனவை நினைத்து

இலையுதிர்காலச் சிந்தனையின் பின்

பெருமூச்சு விடுகின்றேன்.

 


3

 (20 ஆம் நூற்றாண்டின் ஹைக்கூக்கள், இன்றைய ஜப்பானிய குறுங்கவிதை  (Haiku du xx ème siècle, Le poème court japonais d’aujourd’hui)  2007, Gallimard வெளியீட்டில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

இந்தச் சிறுவர்கள்

போர்க் கப்பல்களைப்

படமாக்க விரும்புகின்றனர்

நான் அவர்களைத் திட்டுகின்றேன்.

~சுசுகி ஷினிச்சி (Suzuki Shin’ichi ,1957)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

ஓர் சிறுவன்

புனித முகத்துடன் வருகின்றான்

ஒருவனைக் குத்துவதற்காக.

~அபே கனிச்சி (Abe Kan’ichi ,1928-2009) 

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

மலைகளில் இருந்து இறங்கி

நான் இருளுக்குள்  வருகின்றேன்

எனது உதடுகள் பெரிதாகின்றன.

~கனெகோ டோட்டா (Kaneko Tôta ,1919-2018)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

பெரிய நில நடுக்கத்தின் முன்

எல்லோரும்

கனவு கண்டார்கள்.

~சுகியுரா கெய்சுகே (Sugiura Keisuke ,1968)

 

[ads_hr hr_style=”hr-fade”]

 

எனது மரணத்தின் போது

நீங்கள் அனைவரும் வருக…

பறவைகளாக உடை அணிந்து.

~யசுய் கோஜி (Yasui Kôji ,1936)

 


தமிழில் :  க.கலாமோகன் 

 

[tds_info]

குறிப்பு:  மொழிபெயர்ப்பாளர்

க.கலாமோகன் வட இலங்கையில் 1960 ஆம் பிறந்து 1983 இல் பிரான்ஸ் நாட்டில் அகதியாக இருக்கும் இவர், இலங்கையின் பத்திரிகை நிறுவனமான சுயாதீனப் பத்திரிகா சமாஜத்துள் வெளிவந்த “தினபதி” நாளேட்டிலும், “சிந்தாமணி” வார இதழிலும் சில ஆண்டுகள் தொழில் செய்தபின் 1983 ஆம் நடந்த இனக் கலவரத்தால் தனது தொழிலை ராஜினாமாச் செய்தவர். இவரது சிறுவர் நாடகங்கள் பல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியில் கவிதைகளை எழுதுபவர். இந்தப் பிரெஞ்சுக் கவிதைகளின் நூலான “Et demain?” (நாளை?), டேனிஸ் மொழியில், “Og i morgen?” எனும் தலைப்பில் Christine Marstrand மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது “வீடும் வீதியும்” எனும் நாடகம் விந்தன் வெளியீட்டகத்தினால் 1990 இல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான “நிஷ்டை” பிரான்சின் எக்ஸில் வெளியீடாக 1999 இல் வெளிவந்துள்ளது. கனடா “தாயகம்” வார இதழில் இவர் ஒவ்வொரு வாரமும் ஜெயந்தீசன் எனும் புனைபெயரில் எழுதிய குட்டிக்கதைகள் “ஜெயந்தீசன் குட்டிக்கதைகள்” எனும் தலைப்பில் 2003 இல் மித்ர பதிப்பகத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புகைப்படக் கலைஞர் Jean-Michel Delage 2000 இல் வெளியிட்ட “Vanakam/ வணக்கம்” (Edition Castor & pollux) எனும் புகைப்படப் புத்தகம் இவரது கவிதைகளை உள்ளடக்கியிருக்கின்றன.

புகலிடத்தில் பல இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கவிதைகள், கவிதை மொழிபெயர்ப்புகள் நிறைய வெளிவந்துள்ளன. தமிழ் நாட்டில் இவரது பல கதைகள் “புதிய கோடாங்கி”, காலச்சுவடு, இந்தியா டூடே இன்னும் பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

[/tds_info]

Previous articleமரண வீட்டு சடங்காளன்
Next articleகடைசி புகைப்பிடிப்பாளன்
Avatar
(பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில ஒட்டோவியம் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. "தாயகம்"  சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன

1 COMMENT

  1. ஹைக்கு, குறுகியதும், நீண்டதும், வெள்ளைத்தாள் ,நட்சத்திரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.