Monday, Aug 8, 2022

ற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம்.

எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல.

அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான் பொழுதுபோக்கு. மெரினாவுக்குப் போனால், ஆகும் சுண்டல் செலவு கூட ஆகாது. ஏனென்றால், கடற்கரையோரம் தள்ளுவண்டிக் கடைகள் கிடையாது. சற்றுத் தள்ளி இருக்கும் மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர உணவகங்களுக்குள் நுழையவும் மாட்டோமே! நம்மூர் கடற்கரையில் இருந்து சலித்து எடுத்துக் கொட்டப்பட்டது போல இருக்கும் மெல்லிய மணலில் கால் புதைத்து நின்றுகொண்டிருப்போம். மணலை அள்ளி விளையாடவும், வீடு கட்டவும் விற்கப்படும் நெகிழியால் செய்யப்பட்ட வண்ண வண்ண தோண்டிகளையும், அழகிய வாளிகளையும் வைத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். இன்னொரு பக்கம் வயது வித்தியாசம் இல்லாமல் பந்து விளையாடுவார்கள். கட்டுக்கோப்பான உடலுக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இடத்துக்குப் பொருந்தாத உடையுடன், நீச்சலும் தெரியாமல் கரையோரம் நானும் கணவர் கார்த்திக்கும் பேக்கு மாதிரி நின்றுகொண்டிருப்போம்.

ஊரடங்கு பிறப்பித்தவுடன் அங்கு போவதும் நின்றுபோனது. ஜூலையில் போயிருந்தோம் மீண்டும்.

சென்னையில் மெரினா கடற்கரை மட்டுமில்லை, பெசன்ட் நகர், திருவான்மியூர் என்று நிறைய கடற்கரைகள் இருக்கின்றன. ஹைஃபாவிலும் அப்படித்தான். இங்கிருக்கும் பல கடற்கரைகளில், டாடோவுக்குப் (Dado beach) போனோம். சரி, டாடோவுக்குப் போகும் வழியிலேயே கும்பல் கூடும்போல தெரிந்தது. வினோதமாய்ப்பட்டது. அந்தக் கூட்டம் எதற்கென்று, திரும்பும்போது தெரிந்தது. கடைசியில் சொல்கிறேன்.

சாயுங்காலம் ஐந்தரை மணிக்குப் போனோம். இன்னும் நிறைய நேரம் இருந்தது. வெயில்காலத்தில் இரவு ஏழரை, எட்டுக்குத்தான் சூரியன் மறையும்.

கால் மட்டும் நனைத்துக் கொண்டு எத்தனை மணி நேரம் செலவழிப்பது? கடந்த முறை சென்றிருந்தபோது, சிப்பிகளை வைத்து, ஒரு கட்டம் கட்டி, பெயர் எழுதிக் கொண்டிருந்தோம். இந்த முறை என்ன செய்வது? வூடு கட்டலாமா என்று யோசித்தபடி போய்க் கொண்டிருந்தோம்.

கால் நனைக்க நிற்கும்போது, ஜெல்லி மீன் ஒன்று கரையோரம் ஒதுங்கியிருந்தது தெரிந்தது. அலை வந்து மோதி, அதை உள்ளே இழுத்தும், வெளியே துப்பிக்கொண்டும் இருந்தது. ஒருவேளை நீர் இல்லாததுதான் பிரச்சனையோ! போன இடத்தில் மக்கள் கூடத் தொடங்கியிருந்தனர், கால் நனைக்க ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டு கரையொட்டியே நடந்து கொண்டிருந்தோம்.

கரை நெடுக ஜெல்லி மீன்கள்.

கடல்வாழ் உயிரினம் குறித்துத் தொடர்ந்து எழுதி வரும் சு. நாராயணி, செப்டம்பர் 2020 துளிர் இதழில், ஜெல்லி மீன் என்று நாம் குறிப்பிட்டாலும், அவை மீன் இனத்தைச் சார்ந்தவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், ஜெல்லி என்றே இங்கே குறிப்பிடப் போகிறேன். தமிழில் சொறி மீன் என்று பெயர்.

காணொளிகளில் பார்க்கும்போது, அரைக் கோளம் போல தலையும், அதன்கீழே மொய்க்கும் கால்களுமாக நீரில் மிதந்து கொண்டிருக்கும். ஒரு கை அகலம்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன் – ஆனால், உணவுத்தட்டு அகலத்துக்கு பெரிசான தலையுடன், கால்கள் வெள்ளைநிறத் துணி போல கும்மலாகக் கிடந்தன. பாவமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

மார்ச் மாதம் ஊரடங்குக்கு முன்பு ஆறு மாதம் அவ்வப்போது வந்துகொண்டிருப்போம், ஒருநாளும் இப்படிப் பார்த்ததே இல்லை. இத்தனை நாட்கள் ஊரடங்கினால், உணவு கிடைக்காமல் செத்துப் போய்விட்டனவா? இதென்ன கோயில் குளமா? நாம் போடும் பொரியைத் தின்று வளரும் மீன்களா என்ன!

என்னதான் ஆச்சு இந்த ஜெல்லிகளுக்கு!!!

கூட்டமில்லாத ஒரு இடத்துக்கு வந்தோம். ஜெல்லி பற்றி எதுவும் தெரியாத பாமர மனசு. ஒதுங்கிக் கிடந்த ஒரு ஜெல்லியைப் பார்த்தபோது, இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு குச்சியை எடுத்துத் தண்ணீரில் தள்ளிவிடலாம் என்றெண்ணினோம். பஞ்சுத் துணி போல இருக்கும், எளிதாகத் தள்ளிவிடலாம் என்று தொட்டால், தூக்கவே முடியவில்லை. குச்சியால் கிழித்துவிடுவோமோ என்ற பயம் வந்தது. அத்தனை கனம். மீண்டும் லேசாகத் தூக்கும்போது, தலைப் பகுதி மட்டும் மடிந்துகொண்டது. ஏற்கனவே இறந்துதான் போயிருக்கிறது. இப்போது, இரண்டு பெரிய கொம்புகளை எடுத்து வந்து, நாங்கள் இருவரும் முட்டுக்கொடுத்து உள்ளே தூக்கிப் போட்டோம். தண்ணீர் அடித்துக்கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்றது.

ஊரடங்குதான் ஏதோ ஒரு வகையில் இத்தனை ஜெல்லிகளின் இறப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று நாங்களாக முன்முடிவு செய்தோம். சுற்றுச் சூழலில் ஏதாவது சிறு மாறுதல் நடந்தால் கூட, இந்த மனுஷப் பயதான் சார் காரணம் என்று அடிமனது சொல்கிறது. ஆராயாமல் ஆமாம் ஆமாம் என்றும் ஒத்துக் கொள்கிறோம். தொழிற்போட்டியில் பெருநிறுவனங்களும் உடன்நிற்கும்  அரசாங்கங்களும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அடிநாதமாக இருக்கின்றன என்றாலும், சராசரி மனிதன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியான எண்ணத்தை செய்திகளும் ஊடகங்களும் நம்மில் விதைத்திருக்கின்றன.

ஜெல்லிகள் குறித்துத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.

இஸ்ரேலின் ஹைஃபா மாகாணம் மத்தியத்தரைக்கடலோரம் அமைந்திருக்கிறது. இங்கே கோடைகாலமான மே முதல் ஆகஸ்ட் மாதம் குறிப்பாக ஜூலை மாதத்தில் ஜெல்லிகள் அதிகளவில் இனப்பெருக்கம் அடைகின்றன. இதை jellyfish bloom என்கிறார்கள். இப்படி அதிகளவில் இனப்பெருக்கம் அடைபவை Rhopilema nomadica என்னும் நாடோடி ஜெல்லிகள் (nomad jellyfish). இவை 10 கிலோ எடையுடன் சராசரியாக அரை மீட்டர் அளவுக்கு அகலம் உடையவை. இவைகளுக்கும் மத்தியத்தரைக்கடலுக்கும் சம்மந்தமே இல்லை. இவற்றின் தாய்வீடு, 1500 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் இந்தியப் பெருங்கடல்!

இங்கேதான் சூயஸ் கால்வாய் உள்ளே வருகிறது. 1869ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. மனித முயற்சியின் உச்சமாக இது கருதப்படுகிறது. இக்கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன்னால் மேற்கு பசிபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலோரம் இருக்கும் நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கப்பல் மூலம் வர்த்தகம் நடைபெற வேண்டுமானால், ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. பொருளாதார ரீதியில் பெரிய இழப்பு உண்டானது. எனவே செங்கடலையும், மத்தியத்தரைக்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. நடுவே அரசியல் காரணங்களால் பல முறை மூடவும் செய்தார்கள். சூயஸ் கால்வாய் மூலம் 7000 கி. மீ கப்பல் பயணம் குறைகிறது. ஆசிய கண்டத்தையும், ஆப்பிரிக்கக் கண்டத்தையும் இக்கால்வாய் பிரிக்கிறது. உலகம்  முழுக்க நடைபெறும் கப்பல் வர்த்தகத்தில், இக்கால்வாய் மூலம் நடைபெறும் வர்த்தகம் மட்டுமே 10 சதவீதம். கால்வாய் அமைக்கப்பட்டபோது நீளம் 164 கி.மீ, ஆழம் 8 மீ என்றிருந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல கப்பல் வர்த்தகமும் அதிகரிக்க, விரிந்து கொண்டு செல்கிறது. தற்போது 193.3 கி.மீ நீளம், 24 மீ ஆழம், 205 மீ அகலமாக இருக்கிறது. எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கால்வாய் தேவையின் காரணமாக இன்னும் விரிவாக்கப்பட உள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருந்து கப்பல்கள் மட்டும் மத்தியத்தரைக்கடலுக்கு வருவதில்லை. கடல்வாழ் உயிரினங்களும் வருகின்றன. கிட்டத்தட்ட 450 வகை உயிரினங்கள் இப்படி வந்துள்ளன. இவற்றை அயல் ஊடுருவி உயிரினங்கள் (invasive species) என்கிறார்கள். கடல் நீரோட்டத்தின் காரணமாக இவை ஒரே திசையில் மட்டும் பயணிக்கின்றன. அதாவது, மத்தியத்தரைக்கடலில் இருந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்குச் செல்வதில்லை. இப்படி வருவனவற்றில் ஒன்றுதான் இஸ்ரேல் கடற்கரையை மட்டுமல்ல மத்தியத் தரைக்கடலோரம் இருக்கும் ஸ்பெயின், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் கடற்கரையை அலங்கரிக்கும் நாடோடி ஜெல்லிகள். செங்கடலையும் மத்தியத்தரைக்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாயின் நடுவே ‘மாபெரும் உப்பு ஏரி (the great bitter lake)’ உள்ளது. ஆரம்பத்தில் இந்த ஏரியின் உப்புத் தன்மையால் இவ்வகை உயிரினங்கள் வருவது குறைவாகத்தான் இருந்துள்ளது. தற்போது, போக்குவரத்தின் காரணமாகவும், கால்வாய் ஆழமாக்கப்படுவதன் காரணமாகவும் இவ்வகை உயிரினப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. எல்லா விஷயத்தையும் போலவே இதிலும் நன்றும் தீதும் கலந்திருக்கிறது.

நாங்கள் ஆய்வாளராக இருக்கும் டெக்னையான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில், பல்கலைக்கழகம் குறித்த ஒரு கையேடு இருந்தது. அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தபோது, அதன் முதல் வரி, “இஸ்ரேல் அதிகம் வளமில்லாத நாடு. இருப்பினும் நாம் பல உழைப்பால், மதிநுட்பததால் முன்னேறி இருக்கிறோம்”. இருக்கும் வளங்களை வைத்து அதற்கேற்றவாறு தொழில்நுட்பங்களை வைத்து எப்படி முன்னேறுவது என்பதை ஒரு அனுபவப் பாடமாக இங்கே நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஜெல்லிகள் இப்போது சும்மா கிடைக்கின்றன. இதை வைத்தும் அவசியமான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இஸ்ரேலில் கடல்வாழ் உயிரினம் சார்ந்த ஆய்வுகளும் அதிகம். ஹைஃபா பல்கலைக்கழகத்தில், ஜெல்லி மீன்கள் உண்டுசெய்யும் சீதத்தைப் (mucus) பயன்படுத்தி, நுண் நெகிழித் துகள்களை (micro plastics) வடிகால் செய்யும் வழியைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு மீட்டர் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மில்லிமீட்டர். ஒரு மில்லிமீட்டர் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மைக்ரோமீட்டர் (அ) மைக்ரான். அத்தகைய நுண்நெகிழித் துகள்கள்  ஜெல்லிகளின் சீதத்தில் ஒட்டிக் கொள்கின்றன என்பதால், அதை ஒட்டிய ஆய்வுகள் நடக்கின்றன. உளுந்தும், கடுகும் ஒன்றாய்க் கலந்துவிட்டன என்றால், கடுகு மட்டும் போகமுடிந்த அளவு ஒரு சல்லடையைப் பயன்படுத்தி சலித்துவிடலாம். ஆனால், நுண் துகள்களைச் சலிக்கத் தோதான சல்லடை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. குறிப்பாக, நீரில் கலந்திருக்கும் நுண் நெகிழித் துகள்களைச் சலிக்க என்ன செய்யலாம் என்பதற்கான கண்டுபிடிப்புகள் ஆய்வக அளவில்தான் இன்னும் இருக்கின்றன. சரியான வடிகட்டி இல்லாததால் கழிவுநீரை வடிகட்டிய பின்னரும், இவை அப்படியே இருக்கின்றன. அதனால் கடலில் அப்படியே கலந்துவிடுகிறது. எல்லா இடத்திலும் பரவிக்கிடக்கும் நுண் நெகிழித் துகள்கள், இன்றைய சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய பிரச்சனை. நீங்கள் நம்பாவிட்டாலும், நமக்கே தெரியாமல் நுண் நெகிழித் துகள்களைச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதான் நெசம்.

பொதுவாக மழைக்காலத்தில்தான் ஜெல்லிகள் அதிக இனப்பெருக்கம் அடையும். இஸ்ரேல் அதிகம் மழை இல்லாத ஒரு நாடு. கோடை மழை இருக்கும் அவ்வப்போது. ஆக, கோடைகாலத்தில் இங்கே ஜெல்லிகளின் வரவு எதிர்பார்க்கப்பட்டதுதான். கடந்த குளிர் காலத்தில் எப்போதையும் விட அதிக மழை இருந்ததால், ஜெல்லி மீன்கள் வளர்வதற்கான முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைய கிடைத்திருக்கிறது. அதுவும் நிலத்திலிருந்து அடித்துச் செல்லப்படும் பொருட்களால்தான். பிறகு, பயங்கர இனப்பெருக்கம். இதை jellyfish bloom என்கிறார்கள். நம்மூரில் ஏரிகளில் பாசிகள் அதிகம் வளர்வதும் இக்காரணத்தால்தான். ஆக, இஷ்டத்துக்கு உற்பத்தியாகி, நீரில் மிதந்து இப்படி கரையொதுங்கி உயிர் நீத்திருக்கின்றன. கடந்த வருடங்களை விட, இந்தாண்டு அதிக எடையுடன் இருந்ததற்கும், அதிக ஊட்டச்சத்து கிடைத்ததுதான் காரணம். நம்மை மெக் டொனால்ட்கள் எடை ஏத்துவதுபோல!

இஸ்ரேலில் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அஷ்கெலான் (Ashkelon) என்னும் கடற்கரையோர நகரத்தில் இருக்கிறது. இரண்டாவது பெரிய மின் நிலையமான அங்கே குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுவது கடல்நீர்தான். அதிகளவில் இனப்பெருக்கம் அடையும் இந்த ஜெல்லிகள் அங்கேயும் ஆயிரக்கணக்கில் போய்விடும். இவற்றை வடிகட்டி மீண்டும் கடலுக்குள்ளேயே கொட்டிவிடுவார்கள்.

இஸ்ரேல் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை நிறைய நம்பியுள்ளது. கடந்தாண்டு மட்டும் 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள். இஸ்ரேலின் மக்கள் தொகையே 90 லட்சம்தான். நாடோடி ஜெல்லிகள் கடற்கரையில் உலவுவதால் இஸ்ரேலின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. கடலில் நீந்தும்போது ஜெல்லி கொட்டினால் வலி ஏற்படும், நமைச்சல் உண்டாகும், ஒரு வித விஷம் இருப்பதால் அதிகபட்சம் இறப்பு கூட ஏற்படலாம். அதனால், ஜெல்லிகள் அதிகம் இனப்பெருக்கம் அடையும் ஜூலை மாதத்தில் கடல் சார்ந்த சுற்றலாத் தளங்கள் பயங்கரமாக அடிவாங்குகின்றன. அதனால் ஜெல்லிகள் எங்கே உலவுகின்றன என்பதைச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்லும் கைபேசி செயலிகளும் இங்கே பயன்பாட்டில் இருக்கின்றன.

அன்று சூரிய அஸ்தமனம் வரை காத்திருந்து பேருந்து நிறுத்தத்துக்குத் திரும்பினோம்.

வெளியே கூடியிருந்த கூட்டம் எதற்கென்று இப்போது புரிந்தது. “Prime Minister is Crime Minister” என்ற வாசகம் ஏந்திய பதாகைகள்! மீதமெல்லாம் ஹீப்ரூவில் இருந்தது. பிரதமர் நெதான்யூவுக்கு எதிரான அணித்திரள். கடற்கரை போராட்டம் பார்த்ததும், மெரினா போராட்டம் நினைவுக்கு வந்தது. பேச்சு திசை மாறியது.


  • .ஹேமபிரபா
பகிர்:
Latest comments
  • சுவாரசியமான கட்டுரை. கடற்கரை மணலில் அஸ்தமன சூரியனுக்கு கீழே தன்னந்தனியாக கிடக்கும் ஜெல்லி மீனின் புகைப்படத்தைப் பார்த்ததும் தேவதச்சனின் ஜெல்லி மீனே ஜெல்லி மீனே கவிதை நினைவுக்கு வந்தது. பிறகு ரோமானிய தத்துவ ஞானி எமில் சியோரனின் இந்த வரியை தன்னியல்பாக நினைத்துக்கொண்டேன்: We are the wounds of nature.

    • நன்றி நன்றி 🙂

  • நல்ல சுவாரசியமா கடைசிவரை படிச்சேன்! க்ளைமாக்ஸ் ஏதாவது இருக்குமான்னு!~ 😉

    • ஹாஹா தேவையானது இருந்துச்சுல்ல 😛

leave a comment

error: Content is protected !!