எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்த பெண்


ரு பெண் அவளுடைய பிறப்பில் ஏதோ கோளாறு என்று ஊரார் நினைக்கும்படி எதைப் பார்த்தலும் சிரித்துக்கொண்டேயிருந்தாள். யாரைப் பார்த்தாலும், எதைப் பேசினாலும் (பேசாமல் சும்மா எதிரில் நின்றுகொண்டிருந்தாலும்), எந்தச் செய்தியைக் கேட்டாலும் சிரித்துக்கொண்டிருந்தாள். பிறப்பு, இறப்பு, துக்கம், மகிழ்ச்சி, திருமணம், விவாகரத்து, நல்லது, கெட்டது, சண்டை, சமாதானம் என்று எந்த இரட்டையும் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. சாமி கும்பிட்டாலும் சிரித்தாள், பேயோட்டினாலும் சிரித்தாள். தன்னை யாராவது புகழ்ந்தால் உடனே சிரிக்கத் துவங்கிவிடுவாள். வசவினாலும் வசவி வாயை மூடுவதற்கு முன்னால் ஏண்டா திட்டினோம் என்று நினைத்துத் தலையிலடித்துக் கொள்ளும்படி பேய்ச் சிரிப்பாகச் சிரித்துத் தீர்த்துவிடுவாள். யாராலும் என்ன செய்தும் அவள் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. சூரியன் உதிப்பதைப் பார்த்தால் சிரிப்பு. நிலவு எழுவதைக் கண்டாலும் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பு. வயற்பயிர்களில் நெல்மணிகளைக் கண்டால் அருகே உட்கார்ந்து அவற்றைத் தடவிக் கொடுத்தபடி மணிக்கணக்கில் சிரிப்பான சிரிப்பு. இவ்வளவு ஏன், தூங்கும்போதுகூட கனவில் தோன்றும் காட்சிகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும் பெண்ணாக இருந்தாள் அவள்.

ஆனால் சிரிப்பைத் தவிர வேறு குறைகள் இல்லை அவளிடம் (சிரிப்பதை ஒரு குறை என்றுகூட மற்றவர்கள்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்). அழகான, வடிவான, புத்திசாலியான பெண்தான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த புதிதில் வாத்தியார் கேள்வி கேட்டார். அவளுக்குப் பதில் தெரியும் (அவளுக்குப் பதில் தெரியும் என்பதைப் பிறகு ரொம்பச் சிரமப்பட்டு அவள் அப்பா கண்டுபிடித்தார்). ஆனால் சொல்லாமல் வழக்கம்போலச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். வாத்தியார் கோபப்பட்டு தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்லி அவளைக் கண்டித்த பிறகும் அவள் சிரிப்பதை நிறுத்தாமல் போகவே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். பிறகு அவளுடைய அப்பா அவர்கள் காலில் கையில் விழுந்து அவளுடைய சிரிக்கும் பழக்கத்தைச் சொல்லி மீண்டும் வகுப்பில் உட்கார்த்திவைத்துவிட்டு அவள் சிரிப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்றும் அதற்கு எந்தப் பொருளும் இல்லையென்றும் அது ஒரு வெற்றுச் சிரிப்பு என்றும் அவள் எல்லாவற்றிற்கும் சிரிப்பாள் என்றும் வெட்கத்துடன் பலவற்றைச் சொல்லிவிட்டுத் திரும்பினார். பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒரு வழியாக ஒத்துக்கொண்டார்கள். பிறகு காலம் செல்லச் செல்ல அவளுடைய சிரிப்பு ஊராருக்கும் பழகிவிட்டது. சிரிப்பு ஒரு தொற்று வியாதி என்கிற சொலவடைக்கேற்ப அவர்களும் அவள் முன் உட்கார்ந்திருக்கையில் என்ன கஷ்டத்திலிருந்தாலும் அதை மறந்து சிரித்துவிட்டு நகர்வதை வாடிக்கையாகக் கொண்டுவிட்டார்கள். சிரிப்பினூடேயே அவள் ஏன் எல்லாவற்றுக்கும் சிரிக்கிறாளென்றும் தாய் தகப்பனில் துவங்கிப் பலபேர் பல சமயங்களில் கேட்டுக்கொண்டுமிருந்தார்கள். தெரியவில்லை, என்னவோ எல்லாவற்றுக்குள்ளுமே சிரிப்பை வரவழைக்கும் வேடிக்கைத் தன்மை இருப்பதாக எனக்குப் படுகிறது என்று அவளும் எப்போதும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. முதலிரவு அறைக்குள் அந்த ஆண்பிள்ளை அவள் முன் உடைகளை அவிழ்த்துவிட்டு அம்மணமாக நின்றான். அதைப் பார்த்ததும் அவள் வழக்கம்போல விடாமல் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். ஆனால் மற்றவர்களைப்போல அவனால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை ( அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லிப் பரிந்துரைத்தவர்களே முதலிரவிற்குப் பிறகு அவள் சிரிப்பதை நிறுத்திவிடுவாள் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ). காரணம் கேட்டபோது அவள் அவனுடையது தன் அழகைப் பார்த்ததும் வளரத் தொடங்குவதையும் சிரிப்பைக் கண்டதும் என்னவோ அதற்கே கண் இருப்பதைப்போலச் சுருங்கத் தொடங்குவதையும் பார்த்தால் படு வேடிக்கையாக இருக்கிறது என்று பதில் சொன்னாள். அவன் அவமானம் தாங்க முடியாமல் அவளை அவள் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்தப் பெண் அதற்கும் பெரிதாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். மட்டுமல்லாமல் தனக்கு ஆறுதல் கூற வந்த தோழிகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, நீங்களெல்லாம் எப்படி அம்மாதிரி சமயங்களில் சிரிக்காமலிருக்கிறீர்கள் என்றும் கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ சிரமப்பட்டுக் கல்யாணம்வரை அவளைத் தள்ளிக்கொண்டுவந்துவிட்ட அவளுடைய தாய் தகப்பனுக்கு அது பாழாய்ப் போனதும் மீதிக் காலத்தில் இந்த மாதிரி ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு எப்படிக் காலம் தள்ளப் போகிறோம் என்று பெருத்த துக்கம் வந்துவிட்டது. பொருளற்ற சிரிப்பு எப்படியான துயரார்ந்த விளைவுகளைக் கொண்டுவந்து விடுகிறது என்பதை நீ தெரிந்து கொள்ளவேயில்லையா என்று மூக்கைச் சிந்திக்கொண்டே எவ்வளவோ இடித்துரைத்தும் அவளிடம் மாற்றம் எதையும் அவர்களால் ஏற்படுத்தவும் முடியவில்லை. கடைசிவரை அவள் சிரித்துக்கொண்டேதானிருந்தாள்.

அதிசயமாக ஒரேயொரு முறை மட்டும் நிலவும் மேகங்களுமற்ற ஒரு இரவு நேரத்தில் மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரின்மேல் உட்கார்ந்துகொண்டு வெகு தொலைவில் களங்கமற்ற வானத்தில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை அந்தப் பெண் வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்ததையும் அப்போது அவள் தன் வழக்கமான சிரிப்பைச் சிரித்துக்கொண்டிருக்கவில்லையென்பதையும் (உதடுகள் கிட்டத்தட்ட அவள் அவற்றைத் தன் பற்களால் கடித்து நிறுத்தியிருக்கிறாள் என்று சொல்லும் அளவிற்கு இறுக மூடிக்கொண்டிருந்தன) ஊரார்கள் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. காரணம் அவள் சிரிக்காமலிருந்தாள் என்பது மட்டுமல்ல, நட்சத்திரங்களைப் பார்த்தும்கூட முன்னெப்போதும் அவள் சிரிக்காமலிருந்தவளில்லை என்பதும்தான். உனக்கு இப்போது சிரிப்பு வரவில்லையா என்று அவர்கள் அவளிடம் கேட்டார்கள். அவள் இல்லை என்றாள். பிறகு வேறெதுவும் சொல்லாமல் கீழே இறங்கிப் போய்விட்டாள். ஊர்க்காரர்கள் அவள் சிரிக்காமலிருந்ததைக் கண்ட வியப்பில் அன்று அந்த வானத்தில் நட்சத்திரங்களின் எந்தவிதமான ராசி சேர்க்கை அவளைச் சிரிக்காமலிருக்கப் பண்ணியது என்பதைக்கூடக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால் அவள் விண்மீன்களைப் பார்த்தால் இனி சிரிக்க மாட்டாள் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் அந்த இரவிற்குப் பிறகு பழையபடி தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாள். வழக்கம்போல நட்சத்திரங்களும் அவளுக்குச் சிரிப்பூட்டும் வஸ்துக்களாகவே தொடர்ந்து இரவுகளில் மின்னிக்கொண்டிருந்தன.

மீண்டும் எப்போதாவது ஒரு இரவில் அவள் சிரிக்காமலிருக்கக்கூடும். அந்த இரவில் அதைப் பிறர் பார்க்க வாய்க்க வேண்டும். எந்த ராசி என்பதைத் தெரிந்துகொண்டிருந்தாலாவது அந்த ராசியின்போது அவள் சிரிக்காமலிருப்பதைப் பார்ப்பதற்கு முன்பே தயாராக இருந்து கொள்ளலாமல்லவா. ஆனால் அதுவல்ல பிரச்சினை. மாறாக, எப்போதும் சிரித்துக்கொண்டேயிருப்பவள் என்று தாங்கள் நம்பிக்கொண்டிருந்த பெண் அப்படியொன்றும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கக்கூடிய குறை உடையவளல்ல, அவள் சிரிக்காதிருக்கும் கணங்களும் (அப்படி எத்தனை அபூர்வமான கணங்கள் இதுவரை கடந்து போயினவோ) இருக்கின்றன என்று தெரிந்து போனபின் அதுவரையில் அவளுடைய சிரிப்பிற்குப் பொருளில்லையென்று நினைத்துக்கொண்டிருந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அவள் கேலியாகப் பார்ப்பதற்குரிய ஏதோவொரு விஷயம் தங்களுக்குள் ஒளிந்திருக்கிறது என்று கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். சிரிக்காமலிருக்க ஒரு காரணம் இருக்கிறதென்றால் சிரிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது தர்க்கரீதியாகச் சரியான வாதம்தானே. பிறகு அவளோடு சேர்ந்து சிரிக்கும் வழக்கம் அவர்களிடமிருந்து மறைந்து போயிற்று. அவள் முன்னால் வரவே அவர்கள் அஞ்சவேண்டியதாகிவிட்டது. அந்தப் பெண் அதைப்பற்றியும் ( வழக்கம் போலத்தான் ) கவலைப்படவில்லை. அவள் தான் சிரிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தாள். தோழிகளிடம் பேசும்போது மட்டும் ஊரார்கள் அத்தனை பேருடைய முகங்களும் ஏன் திடீரென்று என்னைக் கண்டால் விரிவதும் என் சிரிப்பைக் கண்டால் சுருங்குவதுமாக வேடிக்கை காட்டுகின்றன, அந்த ஆளுடையதைப்போல, என்று அவ்வப்போது வினவிக்கொள்வாள்.


  • பா.வெங்கடேசன்
Previous articleஜெல்லி
Next articleதவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
6 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
Priya
Priya
2 years ago

இந்த கதை என்னை சிரிக்க செய்தது, பின் ஏன் சரிகிறேன் என சிந்திக்க செய்தது! A beautiful read!

Raam Murali
Raam Murali
2 years ago

சுவாரஸ்யமான கதை. நன்றாக இருக்கிறது.

M.M.Bysel
M.M.Bysel
2 years ago

பா.வெங்கடேஷன் கதைகள் எப்போதும் உயிருடனிருக்கும். இதுவும் அதுபோலக் கணங்களுக்கு கணம் சிந்தையை தூண்டுகிறது.

Rajeshk
Rajeshk
2 years ago

Kathai arumai…..

Uma
Uma
2 years ago

😀😀

மதுசூதன்
மதுசூதன்
2 years ago

வித்யாசமான சிந்தனை. சரளமான நடை