ஜான் ச்சீவெர் உடனான முதல் சந்திப்பு 1969 ஆம் ஆண்டு `புல்லட் பார்க்’ என்கிற அவரது நாவல் வெளியான பிறகான வசந்த காலத்தில் நடைபெற்றது. வழக்கமாக புத்தகம் வெளியானவுடன் நாட்டை விட்டு வெளியே சென்றுவிடும் ச்சீவெர் அந்த முறை அப்படிச் செய்யவில்லை என்பதால் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சார்ந்த நேர்காணல் செய்யும் பலரும் நியூயார்க்கிலிருக்கும் ஆசினிங்கை (Ossining) நோக்கிச் சென்றனர். அவர்களை அவர் நன்றாக விருந்தோம்பினாலும் அவருடைய நூலைப் பற்றியும் அல்லது எழுதும் கலை பற்றியும் மிகவும் சுருக்கமான உரையாடலே நடைபெற்றது.
நேர்காணல் கொடுப்பவர்களில் சிக்கலானவர் என்கிற `நற்பெயரை’க் கொண்டவர் ச்சீவெர். அவர் மதிப்புரைகளின் மீது கவனம் செலுத்துவதில்லை, நூல் வெளியான பிறகு ஒருபோதும் அவருடையப் புத்தகங்களை மறுவாசிப்பு செய்வதில்லை, அவை பற்றிய தெளிவான தகவல்களையும் கொண்டிருப்பதில்லை. அவருடைய படைப்பு குறித்து பேசுவதை அவர் விரும்புவதில்லை (குறிப்பாக “one of those machines”) ஏனென்றால் எங்கேயிருந்தோம் என்பதை விட எங்கே போக வேண்டுமென்பதை அவர் பார்க்க விரும்பினார்.
இந்த நேர்காணலுக்காக ச்சீவெர் நிறம் மங்கிப் போன நீல நிற சட்டையும் காக்கியும் அணிந்திருந்தார். நான் அவருக்கு ஏற்கனவே நண்பராக இருந்தாலும் கூட அவர் மிகவும் சாதாரணமானவரும் எளிமையானவரும் ஆவார். 1799 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டில் அவர் வசித்து வந்ததால் அந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்ப்பதென்பது கட்டாயமான ஒரு செயலாகும். நாங்கள் இரண்டாவது மாடியிலிருக்கும் வரவேற்பறைக்குச் சென்றோம். அப்போது அவர் ஏன் ஜன்னல் திரைகளை விரும்புவதில்லை, ஆசினிங் பகுதிக்கு அருகில் கட்டப்பட்டு வரும் நெடுஞ்சாலை வேலையை ஏன் தடுக்க முயல்கிறார், இத்தாலியப் பயணம், அவர் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் நிர்வாண நாடக நிகழ்ச்சியொன்றில் தனது கார் சாவியை இழந்த மனிதனைப் பற்றி, ஹாலிவுட், தோட்டக்காரர்களும் சமையற்காரர்களும், காக்டெயில் விருந்துகள், முப்பதுகளில் இருந்த க்ரீன்வீச் வில்லேஜ், தொலைக்காட்சிக்கான ஏற்புத்திறன் (television reception), ஜான் என்ற பெயர் கொண்ட மற்ற எழுத்தாளர்கள் (குறிப்பாக நண்பரான ஜான் அப்டைக்) என பல விஷயங்கள் குறித்து உரையாடினோம்.
ச்சீவெர் அவரைப் பற்றி மிக இயல்பாகப் பேசினாலும் கூட அவருடைய படைப்பாற்றல் பற்றிய பேச்சு வரும்போது. இந்த பேச்செல்லாம் உங்களுக்குச் சலிப்பூட்டவில்லையா? உங்களுக்கு மது வேண்டுமா? அநேகமாக, மதிய உணவு தயாராகியிருக்கும், நான் கீழே போய் பார்த்துவிட்டு வருகிறேன். மரங்களுக்கிடையே சிறிய நடை அதன்பின் நீச்சல்? அல்லது நகரத்துக்குச் சென்று என்னுடைய அலுவலகத்தைப் பார்க்க விருப்பமா? நீங்கள் backgammon (இது ஒரு board game) விளையாடுவீர்களா? நீங்கள் அதிகமாகத் தொலைக்காட்சிப் பார்ப்பீர்களா? என வேறு விஷயங்களுக்குத் தாவினார்.
பல முறை அவரைச் சந்தித்தபோது நாங்கள் பெரும்பாலும் சாப்பிட்டோம், குடித்தோம், நடந்தோம், நீச்சலடித்தோம், blackgammon விளையாடினோம் அல்லது தொலைக்காட்சிப் பார்தோம். அவர் ரம்பம் கொண்டு எந்த மரத்தையும் வெட்டுவதற்காக என்னை அழைக்கவில்லை ஆனால் அவர் அந்த செயலுக்கு அடிமையாகிவிட்டதாக வதந்தி நிலவியது. நேர்காணல் பதிவின் இறுதி நாளன்று `பால்ட்டிமோர் ஒரியெல்ஸி’டமிருந்து `நியூயார்க் மெட்ஸ்’ `வோர்ல்ட் சீரிஸை’ கைப்பற்றியதைப் பார்த்தோம், இறுதியில் ஷியா அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் நினைவுப் பொருளுக்காக மைதானத்தைச் சேதப்படுத்தினார்கள். அவர் திரும்பத்திரும்ப மெட்ஸையும் அதனுடைய ரசிகர்களையும் மேற்கோள்காட்டி, `இது ஆச்சரியமில்லையா?” எனக் கூறினார்.
அதற்குப் பிறகு நாங்கள் மரங்களுக்கிடையே நடந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது அவர், `நீங்கள் சென்று உங்கள் சாமான்களையெல்லாம் தயார் செய்யுங்கள், நான் நிமிடத்தில் வந்து உங்களை ஸ்டேஷனில் விடுகிறேன்”….. அதன்பின் அவர் உடைகளைக் கழற்றிவிட்டு குளத்தில் குதித்தார், இதிலிருந்து அவர் இன்னொரு நேர்காணலிலிருந்து அவர் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
பேட்டியாளர்: நாவல் எழுதுவது பற்றி ஒரு நாவலாசிரியர் “நீங்கள் யதார்த்தத்துக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில், அது பற்றி பொய் சொல்ல ஆரம்பியுங்கள்” என்று கூறியிருந்த்தைப் படித்தேன். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ச்சீவெர்: முட்டாள்தனமானது. புரிந்துக் கொள்ளக்கூடிய ஒரு சட்டகத்துக்குள் உறுதிப்படுத்தப்படும் வரை `உண்மை’, `யதார்த்தம்’ ஆகிய சொற்களுக்கு அர்த்தம் எதுவுமில்லை. திடமான உண்மைகள் என எதுவுமில்லை. பொய்யைப் பொருத்தவரையில், பொய்மை என்பது புனைவுக்கான ஒரு முக்கியமான கூறாகும். கதை சொல்வதில் இருக்கும் சிலிர்ப்பின் ஒரு பகுதி ஏமாற்றுவது அல்லது வஞ்சிப்பதாகும். நபோகொவ் இதில் சிறந்தவர் ஆவார். வாழ்க்கை குறித்த பொய்களைச் சொல்வது என்பது வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு செப்படி வித்தையாகும்.
பேட்டியாளர்: வாழ்க்கையைப் பற்றி அதிகம் சொல்லும் அபத்தமான/ நம்பமுடியாத பொய்க்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?
ச்சீவெர்: கண்டிப்பாக. புனிதமான திருமணத்தின் போதான உறுதிமொழி.
பேட்டியாளர்: உண்மை போல தோன்றுவது (verisimilitude), யதார்த்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ச்சீவெர்: என்னைப் பொருத்தவரையில், உண்மை போல தோன்றுவதென்பது வாசகருக்குச் சொல்லப்படுவது உண்மையானது என்பதை உறுதி செய்வதற்காக ஒருவர் பயன்படுத்தும் நுட்பமாகும். அவர் உண்மையிலேயே ஒரு விரிப்பின் மேல் நிற்பதாக நம்பினால் அதை நீங்கள் கீழிலிருந்து இழுத்து விடலாம். கண்டிப்பாக, உண்மை போல தோன்றுவது என்பது கூட பொய் தான். உண்மை போல தோன்றுவதிலிருந்து எப்போதும் எனக்குத் தேவையானது நிகழ்தகவாகும், அப்படித்தான் நான் வாழ்கிறேன். இந்த மேசை உண்மை போல தெரிகிறது, இந்தப் பழக்கூடை என்னுடைய பாட்டியுடையது, ஆனால் அந்தப் பைத்தியக்காரப் பெண் எந்த நேரத்திலும் கதவருகில் வரலாம்.
பேட்டியாளர்: நூல்களை முடித்தபின் அதிலிருந்து விடுபடும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
ச்சீவெர்: பொதுவாக நூலொன்றை முடித்தவுடன் எனக்கு சோர்வான ஓர் உணர்வு ஏற்படும். என்னுடைய முதலாவது நாவலான `The Wapshot Chronicle’ ஐ முடித்தபோது அதுபற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கேயே இருந்ததால் நான் மதிப்புரை எதையும் பார்க்கவில்லை என்பதோடு மேக்ஸ்வெல் கெய்ஸ்மரின் (Maxwell Geismar) மறுப்பு பற்றி சுமார் பத்து வருடங்களாக எனக்குத் தெரியாது. The Wapshot Scandal’ முற்றிலும் வேறானது. நான் ஒருபோதும் அந்த நூலை விரும்பவில்லை, நான் மோசமான நிலையில் இருந்தேன். அந்த நூலை எரிக்க விரும்பினேன். ஒரு நாள் இரவு எழுந்தபோது ஹெமிங்வேயின் குரல் கேட்டது – ஒருபோதும் அவரது குரலை நான் கேட்டதில்லை, ஆனால் வெளிப்படையாக அவருடையதுதான். அவர், `இது மிகவும் சிறிய வேதனைதான், பெரும் வேதனை பின்னால் வரும்” என்றார். நான் குளியல் தொட்டியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரை தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே இருக்கும் தீயசக்திகளிடம் நான் ஒரு போதும் இர்விங் வேலஸை விட சிறந்தவன் ஆக முயல மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தேன். Bullet Park க்குப் பிறகு அவ்வளவு மோசமாக இல்லை, நான் செய்ய விரும்பியதை அதில் துல்லியமாக செய்திருக்கிறேன்: மூன்று கதாபாத்திரங்கள், எளிய எதிரொலிக்கிற உரைநடை பாணி, தீயிலிருந்து தனது அன்பு மகனை
ஒருவர் காப்பாற்றும் காட்சி ஆகியவையாகும். எல்லா இடங்களிலும் இது ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது, ஆனால் பெஞ்சமின் டிமாட் `டைம்ஸி’ல் எழுதிய பிறகு ஒவ்வொருவரும் விட்டால் போதுமென அதிலிருந்து விலகிவிட்டார்கள். பனிச்சறுக்கின் போது ஏற்பட்ட விபத்தில் எனது இடது கால் அடிபட்டது. இது வெறுமனே பத்திரிகைத் துறையின் துரதிர்ஷ்டமும் என்னுடைய அதிகாரத்தின் மீதான அதீத கணிப்புமாகும். இருப்பினும் நீங்கள் ஒரு நூலை முடிக்கும் போது அதற்கு வரவேற்பு எப்படியிருந்தாலும் கற்பனையினுடைய சில சிதறல்கள் இருக்கத்தான் செய்யும். நான் அதை பிறழ்ச்சி என சொல்லமாட்டேன். நீங்கள் ஒன்றை செய்ய விரும்புகிறீர்கள் என்பதோடு அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு நாவலை முடிப்பது நிலையான ஓர் உளவியல் அதிர்ச்சியாகும்.
பேட்டியாளர்: உளவியல் அதிர்ச்சி நீங்குவதற்கு எவ்வளவு காலமாகும்? இதற்கென்று ஏதேனும் செயல்முறை/நடத்துமுறை இருக்கிறதா?
ச்சீவெர்: நீங்கள் செயல்முறை/நடத்துமுறை என சொல்வதின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அதிர்ச்சியைக் குறைப்பதற்கான நான் ரிஸ்க் எடுக்கலாம், குடிக்கலாம், எகிப்துக்குப் போகலாம், புணரலாம். குளிர்ச்சியான குளத்துக்குள் தாவலாம்.
பேட்டியாளர்: கதாபாத்திரங்களே அதற்கான அடையாளங்களைப் பெறுகின்றனவா? அவை எப்போதாவது கையாள முடியாதபடி ஆனதால் உங்கள் படைப்பிலிருந்து அதை கைவிடும்படி ஆகியிருக்கிறதா?
ச்சீவெர்: கதாபாத்திரங்கள் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து தப்பி ஓடி போதைப்பொருட்களை எடுத்துக்கொள்கின்றன, பாலியல் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன மற்றும் ஜனாதிபதியாக மாறுகின்றன என்கிற கதையெல்லாம் வினோதமாக இருப்பதோடு எழுத்தாளர் அவரது கலையில் அறிவோ, தேர்ச்சியோ இல்லாத முட்டாள் என்பதையும் குறிக்கிறது. இது அபத்தமானது. நிச்சயமாக, எந்தவொரு உயிரினத்தின் வளரும் ஆற்றலையும் – ஆச்சரியமான திருப்பங்கள், ஒளிக்கும் இருளுக்குமான மறுமொழி – உண்மையிலேயே அனுபவிக்கக்கூடிய நினைவின் சிக்கலான செறிவை கற்பனையின் எந்தவொரு மதிப்பிடக்கூடிய பயிற்சியும் ஈர்க்கும். ஆனால் ஆசிரியர்கள் அவர்களது குறைபாடான கண்டுபிடிப்புக்குப் பின்னால் உதவியற்று ஓடுவது என்கிற சிந்தனை கண்டனத்துக்குரியது.
பேட்டியாளர்: நாவலாசிரியர் விமர்சகராகவும் இருக்க வேண்டுமென்பது அவசியமா?
ச்சீவெர்: விமர்சனத்துக்கான சொற்கள் எதுவும் இல்லை என்பதோடு மிகக் குறைவான விமர்சன அறிவும் கொண்டவன். நான் நேர்காணல் காண்பவர்களிடம் எப்போதும் மழுப்பலாக இருப்பதற்கானக் காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இலக்கியத்தின் மீதான எனது விமர்சனப் பிடிப்பு பெரும்பாலும் நடைமுறை அளவிலேயே உள்ளது. நான் விரும்புவதை நான் பயன்படுத்துகிறேன், அது எதுவாகவும் இருக்க முடியும். காவல்காண்டி, டான்டே, ஃப்ராஸ்ட், என யாராவது. என் நூலகம் மிகவும் சீர்குலைந்து ஒழுங்கற்று இருக்கிறது; எனக்குத் தேவையானதை கிழித்து விடுகிறேன். இலக்கியத்தை தொடர்ச்சியான செயல்முறையாக பார்க்கும் பொறுப்பு எழுத்தாளருக்கு இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. இலக்கியத்தில் மிகச் சிறிய பகுதியே அழியாதது என்று நான் நம்புகிறேன். என் வாழ்நாளில் குறைந்த காலமே நூல்கள் நன்கு சேவை செய்யுமென்பதை அறிந்திருக்கிறேன் அதன் பின்னர் அது அவற்றின் பயனை இழந்து விடுகிறது.
பேட்டியாளர்: .இந்த நூல்களை நீங்கள் எப்படி `உபயோகிப்பீர்கள்”….. எது அவற்றின் `உபயோகத்தை’ இழக்கச் செய்கிறது?
ச்சீவெர்: நமக்கு மிக நெருக்கமாகவும், தீவிரமான தகவல்தொடர்வு வழிமுறைகளினாலும் உற்சாகத்தைப் பெறக்கூடிய இடத்தில் இருக்கும் போது நூலை `உபயோகிப்பது’ என்கிற உணர்வைப் பெறுகிறேன். அந்த மோகமானது கடந்து சென்று விடுகிறது.
பேட்டியாளர்: விமர்சனத்துக்கான சொற்கள் குறைவாக இருப்பதாக அனுமானம் செய்து கொண்டாலும் நீண்ட கால முறையான கல்வியில்லாத நீங்கள் உங்களுடைய கணிசமான கற்றலை எப்படி விளக்குவீர்கள்?
ச்சீவெர்: நான் ஆழ்ந்த படிப்புள்ளவன் இல்லை. இந்த ஒழுக்கமின்மைக்கு நான் வருத்தப்படவில்லை, ஆனால் என் சக நண்பர்களிடம் இருக்கும் அறிவுத்திறனைப் பாராட்டுகிறேன். நிச்சயமாக, நான் அறியாதவன் அல்ல. கலாச்சார `நியூ இங்கிலாந்தின் (New England)’ முடிவில் நான் வளர்க்கப்பட்டேன் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் வரைவதிலும், எழுதுவதிலும், பாடுவதிலும், குறிப்பாக வாசிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள், இது நியூ இங்கிலாந்தில் தசாப்தத்தின் தொடக்கத்தில் மிகவும் பொதுவான, ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல்தொடர்பு வழிமுறையாக இருந்தது. ”மிடில்மார்ச்’சை (Middlemarch) பதிமூன்று முறை படித்ததாக என்னுடைய அம்மா கூறியிருந்தாலும் அப்படியிருக்காது என நான் தைரியமாக சொல்கிறேன். அதற்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும்.
பேட்டியாளர்: The Wapshot Chronicle ல் யாரோ ஒருவர் இதைச் செய்திருக்கவில்லையா?
ச்சீவெர்: ஆமாம், பதிமூன்று தடவை படித்ததாகக் கூறியது ஹனோராவா (Honora)….. அல்லது யாரென்று எனக்கு நினைவில்லை. என்னுடைய அம்மா `மிடில்மார்ச்’சை அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டு வர அது மழையில் நனைந்தது. அதில் பெரும்பகுதி நாவலில் இருக்கிறது; அது உண்மை.
பேட்டியாளர்: உங்களுடைய குடும்பத்தை அந்த நூலின் வாயிலாக ஒட்டுக் கேட்பது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது.
ச்சீவெர்: என்னுடைய அம்மா இறக்கும் வரை Chronicle வெளியிடப்படவில்லை. இந்த நூலில் இடம் பெறாத அத்தை ஒருவர், `அவர் ஒரு பிளவுபட்ட ஆளுமை எனத் தெரியாதபட்சத்தில் நான் அவருடன் ஒருபோதும் மீண்டும் பேசமாட்டேன்’ என்றார்.
பேட்டியாளர்: உங்கள் நூல்களில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இடம்பெறுவதாக அடிக்கடி நினைப்பதுண்டா?
ச்சீவெர்: எல்லோரும் இப்படி ஒரு மதிக்கத்தகாத அர்த்தத்தை மட்டுமே உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் யாருக்காவது காது கேட்கும் கருவியை பொருத்தியிருந்தால் நீங்கள் அவர்களைத்தான் விவரிப்பதாக அவர்கள் கருதுவார்கள்… கதாபாத்திரம் வேறொரு நாட்டைச் சேர்ந்தவராகவோ முற்றிலும் மாறுபட்ட பங்கோ வகிக்கலாம். நீங்கள் மக்களை பலவீனமாக அல்லது நயமற்ற அல்லது ஏதேனும் ஒரு வகையில் பூரணத்துவம் இல்லாமல் வைத்தால், அவர்கள் உடனடியாக இணைந்து கொள்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களை அழகானவர்களாக வைத்தால், அவர்கள் ஒருபோதும் இணைவதில்லை. மக்கள், குறிப்பாக புனைவுகளை வாசிக்கும் மக்கள், தங்களை கொண்டாடுவதை விட குற்றம் சாட்டத் தயாராக இருக்கிறார்கள். கருத்துத் தொடர்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. சமூகத் தளத்தைத் தாண்டி ஒரு பெண்மணி, `என்னைப் பற்றி நீங்கள் ஏன் அந்தக் கதையை எழுதினீர்கள்?” எனக் கேட்டார். நான் அப்படி என்ன கதை எழுதியிருக்கிறேன் என கண்டுபிடிக்க முயன்றேன். பத்துக் கதைகளுக்கு முன்பு சிவந்த கண்களைக் கொண்ட ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்; அவருக்கு அன்றைக்கு கண்கள் சிவப்பாக இருந்ததால் நான் அவரைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன் எனக் கருதியிருக்கிறார்.
பேட்டியாளர்: அவர்களின் வாழ்க்கையில் உங்களுக்கு உரிமை இல்லை என்று அவர்கள் கோபப்படுகிறார்களா?
ச்சீவெர்: அவர்கள் எழுத்திலிருக்கும் படைப்பாற்றல் அம்சத்தை நினைத்தால் நன்றாக இருக்கும். அவர்களைத் தவறாக நடத்தவேண்டுமென்பது யாருடைய நோக்குமுமாக இல்லாதபோது அப்படி உணரும் மக்களை நான் விரும்பவில்லை. சில இளம் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் பழைய எழுத்தாளார்களும் கூட எழுத்து மூலம் தாக்க முயல்கிறார்கள். இந்த தாக்கம் நிச்சயமாக ஒரு பெரிய சக்திக்கான மூலமாகும். ஆனால் இவை புனைவுக்கு மட்டுமேயான ஆற்றல்கள் அல்ல, மாறாக ஒரு குழந்தைத்தனமானது. பொய்யான வசைத் தாக்குதல் என்பது என் ஆற்றல்களில் ஒன்றல்ல.
பேட்டியாளர்: தன்னைத்தானே வியந்து கொள்வது என்பது புனைவின் ஒரு அம்சமா?
ச்சீவெர்: இது மிகவும் சுவராசியமான கேள்வி. நார்சிஸம் (narcissism) என்பது சுய அன்பு, வெறுப்புக்குட்பட்ட பெண், நெமிசிசின் கோபம், நித்தியமாக இருக்கப் போகும் சீரற்ற செடி என நாம் அர்த்தம் கொள்ளலாம். யார் அதை விரும்புவார்கள்? நாம் அவ்வப்போது நம்மை நேசித்துக் கொள்கிறோம்; இனிமேல் இருக்காது என பெரும்பாலான ஆண்களை விட நான் நினைக்கிறேன்.
பேட்டியாளர்: தற்பெருமை கொள்பவர்கள் பற்றி?
ச்சீவெர்: எழுத்தாளர்கள் தீவிர அகங்காரத்துடன் (தன்முனைப்புடன்) இருக்க விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். நல்ல எழுத்தாளர்கள் மற்ற நூறு விஷயங்களில் சிறந்து இருக்கக்கூடும் ஆனால் எழுத்து தன்முனைப்புக்கு அதிகமான நெகிழ்வுத்தன்மைக்கு உறுதியளிக்கிறது. என இனிய நண்பர் யெவ்துஷென்கோ (Yevtushenko) வின் தன்முனைப்பானது 20 அடி தூரத்தில் இருக்கும் படிகத்தில் கூட உடைப்பை உண்டாக்கிவிடக்கூடியது என என்னால் கூறமுடியும்; ஆனால் எனக்குத் தெரிந்த நேர்மையற்ற முதலீட்டு வங்கியாளர் இதைவிடச் சிறப்பாகச் செய்வார்.
பேட்டியாளர்: உங்களின் உள்ளார்ந்த கற்பனை, கதாபாத்திரங்களை முன்னிறுத்தும் விதம் ஆகியவற்றில் எந்த வகையிலாவது திரைப்படத்தின் பாதிப்பு இருக்கிறது என நினைக்கிறீர்களா?
ச்சீவெர்: என்னுடைய தலைமுறையின் எழுத்தாளர்களும் திரைப்படங்களால் வளர்க்கப்பட்டவர்களும் இந்த வித்தியாசமான ஊடகங்களைப் பற்றி உலகியல் தெரிந்தவர்கள் என்பதோடு கேமராவுக்கு எது சிறந்தது, எழுத்தாளருக்கு எது சிறந்தது எனவும் தெரிந்தவர்கள். கூட்டம் நிறைந்த காட்சி, துர்பாக்கியமான கதவு, அழகியின் சுருக்கத்தை பெரிதாக்கிக் காண்பிக்கும் முரண்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க ஒருவர் கற்றுக் கொள்கிறார். இந்தக் கலைகளில் உள்ள வேறுபாடு தெளிவாக புரிந்துவிட்டதன் விளைவாக எந்த ஒரு நல்ல நாவலைத் தழுவியும் நல்ல திரைப்படம் வரவில்லை என நான் நினைக்கிறேன். ஒத்துணர்வு கொண்ட இயக்குநரை நான் காணும்பட்சத்தில் தற்சிந்தனை (original) வாய்ந்த திரைக்கதை வசனம் எழுத விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன்பு ரெனெ கிளேர் (Rene Clair) என்னுடைய கதைகளை படமாக்கப் போனார், ஆனால் அதைப் பற்றி அலுவலகத்துக்குத் தெரியவர அவர்கள் எல்லாப் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்.
பேட்டியாளர்: ஹாலிவுட்டில் வேலை செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ச்சீவெர்: தெற்கு கலிஃபோர்னியா எப்போதும் கோடைகால இரவுக்கான மணத்தைக் கொண்டிருக்கும்….என்னைப் பொருத்தவரையில் அது படகு செலுத்துவதற்கான முடிவு, விளையாட்டுகளுக்கான முடிவு, ஆனால் இவை மட்டுமல்ல. இது என் அனுபவத்துடன் ஒத்துப் போகவில்லை. நான் மரங்களின் மீதும் அதன் பிறப்பிடத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவன்… எல்லா மரங்களும் இடமாற்றம் செய்யப்பட்டு எந்தவொரு வரலாறும் இல்லாத இடத்தில் இருப்பதாக உணரும்போது ஏற்படக்கூடிய அதே மன உளைச்சல் எனக்கும் இருப்பதாக உணர்கிறேன்.
நான் பணம் சம்பாதிப்பதற்காக ஹாலிவுட்டுக்குச் சென்றேன்.
அவ்வளவுதான். அங்கிருப்பவர்கள் நட்புடன் இருக்கிறார்கள், உணவு நன்றாக இருக்கிறது, ஆனால் நான் ஒருபோதும் அங்கே சந்தோஷமாக இருந்தது இல்லை. ஏனென்றால் நான் அங்கே சம்பாதிக்க மட்டும் சென்றதால் இருக்கலாம். அங்கிருக்கும் பனிரெண்டுக்கும் மேலான இயக்குநர்கள் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை இருக்கிறது, படங்களுக்கான நிதி சம்பந்தமாக பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தாலும் நல்ல திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹாலிவுட் பற்றிய என்னுடைய பிரதானமான உணர்வு தற்கொலையாகும். நான் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குச் சென்றால் நான் நன்றாக இருக்கிறேன். நான் பில் எதுவும் செலுத்தாததால் போன் மூலம் பிரமாதமான காலை உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு தூக்குப் போட்டுக் கொள்வதற்குள் குளிக்க முயன்றேன். இது ஹாலிவுட்டின் பிரதிபலிப்பு இல்லை, ஆனால் எனக்குள் இருந்த தற்கொலை மனப்பான்மை எனத் தோன்றியது. நான் பெருவழிச்சாலையை விரும்புவதில்லை. குளங்களும் மிகவும் உஷ்ணமாக இருந்தன… 85 டிகிரி, நான் ஜனவரிமாத இறுதியில் சென்ற போது அங்கிருந்த கடைகள் நாய்களுக்கென்று தொப்பியை விற்றுக் கொண்டிருந்தன – ஓ கடவுளே! நான் இரவு உணவுக்குச் சென்றபோது எதிர் அறையில் இருந்த பெண்மணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருடைய கணவர் மனைவியைப் பார்த்து, `உன்னுடைய ஊன்றுகோலை கொண்டுவா என்றபோது என் பேச்சை நீ கேட்கவில்லை” எனக் கத்தினார். அந்த வரி இதற்கு மேல் சிறப்பாக இருக்க முடியாது!
பேட்டியாளர்: உங்களுடைய கற்பனையில் அல்லது நம்பிக்கையில் யார் உங்களுடைய நூல்களை வாசிப்பதாக நினைக்கிறீர்கள்?
ச்சீவெர்: இனிமையான, புத்திசாலியான அனைத்து விதமான மக்களும் நூல்களை வாசிப்பதோடு அவை பற்றி சிந்தனைக்குரியக் கடிதங்களையும் எழுதுகிறார்கள். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது ஆனால் அவர்கள் அற்புதமானவர்கள் என்பதோடு விளம்பரம், பத்திரிகை, ஏடாகூடமான கல்வி உலகம் ஆகியவற்றின் தவறான அபிப்பிராயங்களிலிருந்து விலகி முற்றிலும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். Let Us Now Praise Famous Men, Under the Volcano, Henderson the Rain King போன்ற
சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்த புத்தகங்களைப் பற்றி சிந்தியுங்கள் Humboldt’s Gift என்கிற அற்புதமான புத்தகம் குழப்பம் மற்றும் ஏமாற்றத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டது, ஆனால் நூறாயிரக்கணக்கான (லட்சக்கணக்கான) மக்கள் வெளியே சென்று கனத்த அட்டை போட்ட பிரதிகளை வாங்கினார்கள். நான் வேலை செய்யும் அறையில் இருக்கும் ஒரு ஜன்னல் மரங்களைப் (வனத்தைப்) பார்த்திருக்கிறது, இந்த ஆர்வமுள்ள, அன்பான மற்றும் மர்மமான வாசகர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று நான் நினைக்க விரும்புகிறேன்.
பேட்டியாளர்: சமகால எழுத்துகள் மிகவும் தனித்தன்மை உடையதாகவும், அதிக சுயசரிதையாகவும் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?
ச்சீவெர்: இருக்கலாம். சுயசரிதையும் கடிதங்களும் புனைவுகளை விட சுவாரஸ்யமாக இருக்கலாம், ஆனால் நான் இன்னும் நாவலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். கடிதங்கள் அல்லது பத்திரிகைகளிலிருந்து நீங்கள் பெற முடியாத மறுமொழிகளை அனைத்து வகையான மக்களும் பெறும் ஒரு தீவிரமான தகவல் தொடர்பு வழிமுறை நாவல் ஆகும்.
பேட்டியாளர்: நீங்கள் குழந்தையாக இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டீர்களா?
ச்சீவெர்: நான் கதைகள் சொல்வது வழக்கம். நான் தயர்லாண்ட் (Thayerland) என அழைக்கப்பட்ட மாணவர்களின் விருப்பப்படி ஆசிரியரின் உதவியோடு நடைபெறும் பள்ளிக்கு (permissive school) நான் சென்றேன். நான் கதை சொல்வதை விரும்பினேன், எல்லோரும் கணிதம் படித்தால் – அது 18 அல்லது 19 மாணவர்களைக் கொண்ட சிறிய பள்ளி – என்னை கதை சொல்ல அனுமதிப்பதாக ஆசிரியர் உறுதியளித்தார். நான் தொடர்கதை சொல்ல ஆரம்பித்தேன். அது என் புத்திசாலித்தனமாகும். ஏனெனில் நான் அந்த பாடவேளைக்குள், அதாவது ஒரு மணி நேரத்துக்குள், கதையைச் சொல்லி முடிக்கவில்லையெனில் அதன் முடிவை அடுத்த பாடவேளையின் போது கேட்பார்கள் என எனக்குத் தெரிந்திருந்த்து.
பேட்டியாளர்: அப்போது உங்களுக்கு எத்தனை வயது?
ச்சீவெர்: என்னுடைய வயது குறித்து பொய் சொல்ல விரும்புகிறேன், ஆனால் அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாக இருக்கும் என நினைக்கிறேன்.
பேட்டியாளர்: அந்த வயதில் ஒரு மணி நேரத்துக்கான கதையை உங்களால் சிந்திக்க முடிந்ததா?
ச்சீவெர்: ஓ, ஆமாம்! அப்போது முடிந்தது. நான் இன்னும் செய்கிறேன்.
பேட்டியாளர்: முதலில் எது வரும், கதையின் கருவா?
ச்சீவெர்: நான் கதையின் கருவோடு வேலை செய்வதில்லை. உள்ளுணர்வு, கருத்தைப் புரிந்து கொள்ளுதல், கனவுகள், கருத்தியல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேலை செய்கிறேன். கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் எனக்கு ஒரே நேரத்தில் வரும். கதைக்கரு என்பது கதைச்சுருக்கம் மற்றும் நிறைய முட்டாள்தனத்தைக் குறிக்கிறது. வாசகரின் ஆர்வத்தை தார்மீக நம்பிக்கையின் தியாகத்தில் வைத்திருப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும். நிச்சயமாக, சலிப்படைவதை ஒருவர் விரும்பமாட்டார்…. அவருக்கு மர்மம் என்கிற கூறு தேவையானதாகும். ஆனால் நல்ல கதைக் கூறு என்பது கிட்னி போல இல்லாத வளர்ச்சியடையாத உறுவமைப்பாகும்.
பேட்டியாளர்: நீங்கள் எப்போதுமே எழுத்தாளர்தானா, இல்லை வேறு ஏதாவது வேலை பார்த்தீர்களா?
ச்சீவெர்: நான் பத்திரிகை கொண்டு செல்லும் லாரி ஓட்டியிருக்கிறேன். நான் அதை மிகவும் விரும்பினேன், குறிப்பாக உலகத் தொடரின் போது Quincy பத்திரிகை பேஸ்பால் பற்றி விபரமாக முழுச் செய்திகளையும் வெளியிட்டு வந்த சமயத்தில். யாரிடமும் வானொலிகளோ, தொலைக்காட்சியோ இல்லை – அதற்காக அந்த நகரம் மெழுகுவர்த்திகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது என சொல்லவில்லை ஆனால் அவர்கள் செய்திக்காகக் காத்திருந்தார்கள்; நல்ல செய்திகளைக் கொண்டுபோய் அவர்களிடம் சேர்க்கிறேன் என்கிற ஓர் நல்லுணர்வு எனக்குள் ஏற்பட்டது. அதோடு நான்கு வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறேன். `நீக்கப்பட்டேன்(Expelled)’ என்கிற என் முதல் கதையை நான் The New Republic பத்திரிகைக்கு விற்றபோது எனக்கு வயது பதினேழு. நான் இருபத்திரண்டு வயதில் இருந்தபோது The New Yorker எனது படைப்புகளைப் பெற ஆரம்பித்தது. ஆண்டாண்டு காலமாக எனக்கு The New Yorker ஆதரவு அளித்தது. அது ஓர் இனிமையான தொடர்பாக இருந்தது. வருடத்துக்கு 12 அல்லது 14 கதைகளை அனுப்பியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஹட்சன் தெருவில் இருக்கும் உடைந்த ஜன்னல் கொண்ட ஓர் அறையில் வசித்து வந்தேன். நான் எம்ஜிஎம்-ல் பால் குட்மேனுடனும் ஜிம் ஃபாரெலுடனும் வேலை செய்து கொண்டிருந்தேன். மூன்று, ஐந்து அல்லது பனிரெண்டு பக்கங்கள் கொண்ட ஓவ்வொரு நூலுக்கும் ஐந்து டாலர்கள் கிடைத்தன. நீங்களே உங்களுடையதை கார்பன் வைத்துத் தட்டச்சு செய்ய வேண்டும்.
பேட்டியாளர்: நீங்கள் எழுத்தாளர் என்பதற்காக கம்மிங்ஸ் (Cummings) ஏதேனும் அறிவுரை கூறினரா?
ச்சீவெர்: கம்மிங்ஸ் ஒரு போதும் தந்தைமைத் (parental) தன்மையுடன் நடந்து கொண்டது இல்லை. ஆனால் பாசாங்குத்தனமும், மெல்லிய குரலும், மார்பகம் மீது அவருக்கு இருக்கும் மரியாதையும், மரியான் மீது அவருக்கு இருந்த விசாலமான அன்பும்தான் அவரது ஆலோசனையாக இருந்தது.
பேட்டியாளர்: நீங்கள் எப்போதாவது கவிதை எழுதியிருக்கிறீர்களா?
ச்சீவெர்: இல்லை. அந்த வகைமை மிகவும் வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது…. புனைவோடு ஒப்பிடுகையில் அது இன்னொரு மொழி, இன்னொரு கண்டம். நம்மிடம் இருக்கும் நிறையக் கவிதைகளை விட சிறுகதைகள் நன்கு வகைமைபடுத்தப்பட்டதாக இருக்கிறது. `பனிரெண்ட் கேஜ்’ துப்பாக்கியிலிருந்து சுடுவது மற்றும் நீச்சலுக்குள்ள வேறுபாடு இந்த இரண்டு வகைமைகளில் இருக்கிறது.
பேட்டியாளர்: பத்திரிகைகள் உங்களை எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறதா?
ச்சீவெர்: Saturday Evening பத்திரிகை அவர்களுக்காக சோஃபியா லாரனுடன் ஒரு நேர்காணல் செய்யச் சொன்னார்கள். நான் செய்தேன். அவரை முத்தமிடும் வாய்ப்புக் கிட்டியது. வேறு சில அழைப்புகளும் வந்தன ஆனால் இது போல சிறப்பானதாக இல்லை.
பேட்டியாளர்: அமெரிக்க இலக்கியத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் நீங்கள் என உணர்கிறீர்களா?
ச்சீவெர்: இல்லை. சொல்லப் போனால், எந்தவொரு அமெரிக்க எழுத்தாளரையும் எந்தவொரு பாரம்பரியத்திலும் என்னால் வகைப்படுத்த முடியும் என நான் நினைக்கவில்லை. அப்டைக் (Updike), மெய்லர் (Mailer), எலிசன் (Ellison), அல்லது ஸ்டைரான் (Styron) என யாரையும் கண்டிப்பாக ஒரு பாரம்பரியத்துக்குள் அடைக்க முடியாது.
எழுத்தாளரின் தனித்தன்மை அமெரிக்காவில் இருந்தது போல வேறெங்கும் அந்த அளவுக்குத் தீவிரமாக இருந்ததில்லை.
பேட்டியாளர்: The New Yorker பற்றிய மிகவும் பிரபலமான வதந்தி, `கடைசிப் பத்தியை அகற்றினால் அது ஒரு வழக்கமான நியூயார்க்கர் முடிவாக இருக்கும்’ என்பதாகும். நல்ல எடிட்டர் என்பதற்கான உங்களுடைய வரையறை (definition) என்ன?
ச்சீவெர்: `ஓர் இனிமையான, எனக்கு பெரிய தொகைக்கான காசோலை அனுப்புகிற, எனது வேலையை, உடல் அழகை, பாலியல் திறனை புகழக்கூடிய, வெளியீட்டாளர் மீதும் வங்கியின் மீதும் கட்டுப்பாடு வைத்திருக்கக்கூடிய மனிதர்” என்பது எடிட்டருக்கான எனது வரையறை ஆகும்.
பேட்டியாளர்: நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள்? உடனடியாக யோசனைகளை செயல்படுத்துவீர்களா, அல்லது அதோடு சிறிது காலம் அசைபோட்டு கருத்தரிக்கச் செய்வீர்களா?
ச்சீவெர்: நான் இரண்டையும் செய்கிறேன். முற்றிலும் மாறுபட்ட உண்மைகள் ஒன்றாக வருவதை விரும்புவேன். உதாரணமாக, பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு நிர்வாண நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தாள் என்ற செய்தியுடன் வீட்டிலிருந்து வந்த ஒரு கடிதத்தைக் கஃபேயில் உட்கார்ந்திருக்கும்போது வாசித்துக் கொண்டிருந்தேன். நான் அதைப் வாசித்துக் கொண்டிருக்கு போது ஒரு ஆங்கிலப் பெண்மணி தன் குழந்தைகளைத் திட்டுவதை என்னால் கேட்க முடிந்தது. “மம்மி மூன்று எண்ணுவதற்கு முன்பு நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால்” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஓர் இலை காற்றில் பறந்து வந்து விழுந்தது, அது குளிர்காலத்தையும் என் மனைவி என்னை விட்டு விட்டு ரோமில் இருந்ததையும் நினைவூட்டியது. அதில் என்னுடைய கதை இருந்தது. இதற்குச் சமமாக “Goodbye, My Brother” மற்றும் “The Country Husband” ஆகியவற்றின் முடிவை அனுபவித்தேன். ஹெமிங்வேயும் நபோகோவும் இவற்றை விரும்பினார்கள். அவற்றில் நான், ’தொப்பி அணிந்த பூனை, கடலில் இருந்து வெளியே வரும் சில நிர்வாணப் பெண்கள், வாயில் செருப்புடன் இருக்கும் ஒரு நாய்< மலைகளின் மீது யானையில் தங்கக் கவசத்தோடு சவாரி செய்யும் அரசன்’ என அனைத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தேன். .
பேட்டியாளார்: புனைவு படிப்பினைகளைப் புகட்ட வேண்டும் என நினைக்கிறீர்களா?
ச்சீவெர்: இல்லை, புனைவு என்பது ஒளியூட்டுவதாகவும், உணர்ச்சியைக் கொட்டுவதாகவும், புதுப்பிப்பதாகவும் இருக்க வேண்டும்.
சிறப்பைத் தாண்டி புனைவில் தொடர்ச்சியான தார்மீக தத்துவம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
உணர்வின் தீவிரமும் வேகமும் எப்போதும் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது. புனைவுக்கும் தத்துவத்துக்கும் இடையே எப்போதும் குழப்பம் இருப்பதால் மக்கள் புனைவுகளில் நன்னெறியைத் தேடுகிறார்கள்.
பேட்டியாளர்: கதை சரியாக இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? முதலிலேயேத் தெரியவருமா, அல்லது எழுதிக் கொண்டிருக்கும்போதே விமர்சித்துக் கொள்வீர்களா?
ச்சீவெர்: புனைவில் ஒரு குறிப்பிட்ட சக்தியிருப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக, எனது சமீபத்திய கதை சரியாக இல்லை. அதானால் நான் முடிவை மீண்டும் எழுதினேன். அதை உள்ளறிவோடு ஒத்திருக்க முயற்சிப்பது என நான் ஊகிக்கிறேன். அதற்கு ஒரு வடிவம், விகிதாச்சாரம் இருப்பதோடு தவறு ஏதாவது நடக்கும்போது தெரியவரும். .
பேட்டியாளர்: நீங்கள் கதைகள் எழுதி முடித்தவுடன் அவை நன்றாக இருக்கும் என உணர்ந்த கதைகள் உள்ளதா?
ச்சீவெர்: ஆமாம், சுமார் பதினைந்து கதைகள் முற்றிலும் சிறப்பாக இருந்தன! நான் அவற்றை நேசித்தேன், நான் எங்கிருந்தாலும் அனைத்தையும் நேசித்தேன் – கட்டிடங்கள், வீடுகள். அது ஒரு பெரிய உணர்வாக இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை மூன்று நாட்கள் இடைவெளியில் எழுதப்பட்ட கதைகள் என்பதோடு அவை சுமார் முப்பத்தைந்து பக்கங்கள் வரை இருந்தன. நான் அதை நேசிக்கிறேன், ஆனால் அதை வாசிப்பதில்லை; நான் அப்படி செய்திருந்தால் பலவற்றை நான் அதை நேசித்திருக்க மாட்டேன்.
பேட்டியாளர்: சமீபத்தில் நீங்கள் ஒரு போதும் உங்களுக்கு Writer’s block ஏற்பட்டதில்லை என்பது பற்றி அப்பட்டமாகப் பேசியிருந்தீர்கள். அதைப் பற்றி நீங்கள் இப்போது எப்படி உணருகிறீர்கள்?
ச்சீவெர்: வலியின் எந்தவொரு நினைவும் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளது, மேலும் எழுத்தாளர் ஒருவருக்கு வேலை செய்ய இயலாமையை விட அதிக வலி எதுவும் இருக்காது.
பேட்டியாளர்: ஒரு நாவலுக்கு நான்கு வருடங்கள் என்பது நீண்ட காலம், இல்லையா?
ச்சீவெர்: இது வழக்கமாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பொறுத்தது. இந்த வாழ்க்கை முறையில் குறிப்பிட்ட விதமான சலிப்பு இருக்கிறது, அதை நான் மிக எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.
பேட்டியாளர்: உங்கள் திருப்திக்கு ஏற்ப உங்கள் பணி முடிந்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
ச்சீவெர்: என் வாழ்க்கையில் எந்தவொன்றையும் எனக்கு முழுமையாக நீடித்த திருப்தி தரும் வகையில் நான் ஒருபோதும் நிறைவு செய்ததில்லை.
பேட்டியாளர்: நீங்கள் எழுதும் போது உங்களை அதிகமாக முன்னிறுத்திக் கொள்வதாக உணர்கிறீர்களா?
ச்சீவெர்: ஆமாம், ஆமாம்! நான் ஒரு எழுத்தாளனாகப் பேசும்போது, என் சொந்தக் கருத்தைப் பேசுகிறேன். என் கைரேகைகளைப் போலவே அதுவும் தனித்துவமானது என்பதோடு அறிவாழமிக்கவனாக அல்லது முட்டாளாகத் தோற்றமளிப்பதற்கு அதிகபட்ச ரிஸ்க் எடுத்துக் கொள்கிறேன்.
பேட்டியாளர்: எந்தவொரு நிகழ்வின் போது அல்லது அதற்குப் பிறகு அது வேலை செய்யுமா அல்லது செய்யாதா என உணருவதுண்டா?
ச்சீவெர்: நான் என் வாழ்க்கையில் சுவராசியமில்லாத வேலையைக் குறைவாகவே செய்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதையை நான் எழுதும்போது ”அது… அற்புதமாக’ இருக்கும். அதைத்தான் என்னால் செய்ய முடியும், அதைச் செய்யும்போது நான் அதை விரும்புகிறேன். அது நன்றாக இருக்கிறது என்று என்னால் உணர முடிகிறது. மேரி மற்றும் குழந்தைகளிடம் நான், “சரி, நான் ஆரம்பிக்கிறேன், என்னை தனியாக விட்டுவிடுங்கள். நான் மூன்று நாட்களில் முடித்துவிடுவேன்.’ என சொல்வேன்.
(மூலம்: தி பாரிஸ் ரெவ்யூ, இதழ்:67, இலையுதிர் காலம், 1976)
புனைவுக் கலை
ஜான் ச்சீவெர் (John Cheever) உடனான நேர்காணல்.
நேர்காணல்: ஆனெட் க்ராண்ட் (Annette Grant)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்