Wednesday, Aug 10, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்

தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்


முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன்.  அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, “ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது.  சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You will hear about him in the course of the coming years” என்று அறிமுகம் செய்து வைத்தார்.

நேரம் இருந்து பேசிவிட்டு அவர் போன பிறகு, “அவர் ராமாயணக் கதை சொல்லுகிற பாகவதரின் மகன்” என்று தெரிவித்தார்.

 அந்தச் சூழ்நிலையில் ஒரு சௌகரியமும்  இருக்கிறது -அசௌகரியமும் இருக்கிறது ” என்றேன் நான். ஆமோதிப்பது  போலப் பேசாதிருந்துவிட்டார் கு.ப.ரா.

இந்த சௌகரிய – அசௌகரியங்களிலிருந்து   தி.ஜானகிராமன் தன் ஆயுட்காலம்  பூராவுமே விடுபடவில்லை  என்றுதான் இன்று சிந்திக்கும் போது தோன்றுகிறது.

மரபுக்கு ஒத்த வழிகளில் கு.ப.ரா. ஆண்-பெண் உறவுப் பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவு கட்ட முயன்றார். முடிவு முக்கியமல்ல. பிரச்சினைகளைத் தெளிந்து கொள்வது முக்கியம் என்பது அவர் கதைகளில் தொக்கி நிற்கும் ஒரு பாவம். அவரை விடவும் ஒரு பரவலான அளவின் ஒரு ஆண் – பெண் உறவுகளைத் தன் கதைகளிலும் நாவல்களிலும் ஆராய்ந்து புகுந்து தி.ஜானகிராமன், பிரச்சினைகளைச் சொல்வதுடன் திருப்தியடைந்து விடாமல் முடிவுகள் காணவும் முயன்றார் என்பது அவருடைய வெற்றி – தோல்விகளுக்குக் காரணமாக அமைந்தது.

சிதம்பரத்தில் எனக்குப் புஸ்தகக் கடை இருந்த காலத்தில் அநேகமாக மாதம் ஒரு தடவை (சில மாதங்களில் இரண்டு தடவைகள் கூட) வருவார். ஒரு நாள் இரண்டு நாள் தங்கி இலக்கியம் பற்றி விவாதம் செய்வது, பேசுவது, படித்த புஸ்தகங்களைப் பற்றி அலசுவது, புதுசாக எழுதத் தொடங்கியுள்ளவர்களின் எழுத்துக்களைக் கணிப்பது என்பது ஒரு பழக்கமாக ஆறேழு ஆண்டுகள் நடந்து வந்தன.

சில சமயம் என்னோடு இலக்கியம் பேசுவது அலுத்துப் போய்விட்டால் என் தகப்பனாருடன் மணிக்கணக்காக உட்கார்ந்து பொதுவாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். நல்ல பையன், விஷயம் தெரிகிறது” என்று என் தகப்பனார் அவர் போனபின் அவருக்கு சர்டிபிகேட் கொடுப்பார்.

சந்திரதோயம் பத்திரிகை நடந்து கொண்டிருந்த இரண்டு ஆண்டுகளில் அநேகமாக ஒன்றுவிட்ட ஒரு இதழில் தி.ஜானகிராமனின் கதையை நாங்கள் விரும்பி வெளியிட்டோம். (இடையில் உள்ள இதழில் லா.ச.ராமாமிருதம் கதை வெளிவரும்)  மற்றவர்கள் பிரசுரிக்க விரும்பாத கதைகளையும் வெளியிட்டது பற்றி மிகவும் நன்றியுணர்ச்சியுடன் பேசுவார்.

பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலையை விட்டு விட்டு அகில இந்திய ரேடியோவில் வேலைக்குச் சேர்ந்தது தவறு என்று அவர் நண்பர்களில் நான் ஒருவன்தான் அவருக்குச் சொன்னேன். பொருளாதார வசதிகள், மற்றும் வாத்தியாராக இருப்பதின் சமுதாயக் கீழ்நிலை என்று அதுபற்றி நான் சொன்னது பிடிக்கவில்லை என்று தெரிந்தும் கூடப் பல தடவை, நான் சொல்லியிருக்கிறேன். படிக்க வசதி, பொழுது நேரம் எல்லாம் வாத்தியார் வேலையில் நிறைய இருப்பதாக எனக்கு நினைப்பு.

ரேடியோவிலிருந்து ரிடையராகி  டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்புவதற்கு முன் என்னை வீடு வந்து பார்த்தபோதும் கேட்டேன். “இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட வாத்தியார் வேலையை விட்டுவிட்ட ரேடியோவில் வேலைக்குச் சேர்ந்தது பற்றி வருத்தப்பட நேர்ந்ததுண்டா இல்லையா?” என்று. நேரடியாகப் பதில் சொல்லாமல் “சில சமயம் தவறு என்று தோன்றுகிறது” என்று சொன்னது நினைவிருக்கிறது.

அவர் கல்கி, ஆனந்தவிகடன் என்று தொடர்கதைகள் எழுதத் தொடங்கியபோதும் “இது சரியல்ல” என்று அவருக்கு நான் சொல்வது பிடிக்கவில்லை என்று தெரிந்திருந்தும் சொன்னேன். அவர் அதற்குச் சொன்ன பதிலும், அதற்கு நான் சொன்ன பதிலும் நன்றாக நினைவிருக்கிறது.

“தொடர்கதைகளாக எழுதாவிட்டால் சின்னசின்ன நாவல்களாக இக்குணியுண்டு இக்குணியுண்டு நாவல்கள் தான் எழுத முடியும் என்று தோன்றுகிறது” என்றார்

நான் சிறு சிறு (அளவில்) நாவல்கள் எழுதியிருப்பதை அவர் சுட்டிக்காட்டிய மாதிரித் தோன்றியது. நான் பதில் சொன்னது இதுதான். “ஒரு நல்ல இலக்கியாசிரியனால் நூறு பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாத விஷயம் எதையும் ஆயிரம் பக்கங்களிலும் சொல்லி முடிக்க முடியாது” என்று இந்த விஷயத்தை நான் சொன்னதையும் அந்தத் தைரியத்தில் தன் சிறு நாவல் சம்ஸ்காராவைத் தான் எழுதியதாகவும் யு.ஆர்.ஆனந்தமூர்த்தி ஒரு தரம் டெல்லி இலக்கியக்கூட்டம் ஒன்றில் சொன்னபோது, தி.ஜானகிராமனும் உடன் இருந்தார். . விதத்தில் அது சரி” என்று கூட்டம் முடிந்தபின் அவர் ஏற்றுக் கொண்டார்.

மோகமுள் என்கிற நாவலைப் பிரமாதமாகப் புகழ்ந்த நான் தன்னுடைய மிகமிக வெற்றி பெற்ற அம்மா வந்தாளை அவ்வளவாகப் பாராட்டவில்லை என்பது பற்றி மிகவும் வருத்தம் தி.ஜானகிராமனுக்கு.  “அந்த நாவலில் வருகிற அம்மாவுக்கு மனோதத்துவ ரீதியில் ஒரு யதார்த்தமும் உண்மையும் அமையவில்லை. கடைசிப் பக்கங்களிலோ வேறு எங்குமோ உருவாகாத தாயாரைக் கொண்டு வராதிருந்தால் சரியாக இருக்கும்” என்று நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை . “மனோதத்துவ ரீதியில் எப்படியோ கும்பகோணத்தில்  ஒருத்தி இருப்பதை நான் உங்களுக்கு நேரிடையாக காட்ட முடியும்” என்றார். “அது மட்டும் போதாது. வாழ்க்கை நாவல் கலையாக உருவாகும்போது வெறும் இருப்பு மட்டும் போதாது. காரண இருப்பும் இருக்க வேண்டும்” என்று நான் சொன்னேன்.

சிந்தனைகளைத் தொடர்ந்து, பயன் என்னவனாலும் சரி என்று தொடர்பாக விவாதம் செய்வது என்பது அவருக்கு அவ்வளவாகக் கைவராத கலை. ஒரு அளவு வரையில் அறிவுப் பூர்வமாக பேசிக்கொண்டே வருபவர், பின்னால் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். ஓரளவுக்கு ரமண மகரிஷி, ஜே.கிருஷ்ணமூர்த்தி, மஹேஷ் யோகி மற்றும் பலரை அந்தந்த சமயத்துக்கேற்ப குருவாக வரிக்கும் மனப்பான்மையும் அவருக்கு இப்படி ஏற்பட்டதுதான்.

தத்துவ விஷயங்களில் போலவே இலக்கிய விஷயங்களிலும் ஓரளவுக்கு, விமரிசன  அபிப்பிராயங்களில், ஒரு தடுமாற்றம் உண்டு அவருக்கு. ஒரு சமயம் தாமஸ்வுல்ஃப் பற்றி பிரமாதமான ஈடுபாடு (மோகமுள் எழுதிய பருவத்தில்) பின்னர் தாமஸ் மன், ஹெமிங்க்வே , டி.எச்.லாரன்ஸ் முதலியவர்கள் பற்றி உற்சாகமாக அவர் பேசி நான் கேட்டதுண்டு.

பல தடவைகள் நாங்கள் இலக்கியத்தில் உருவம் என்பது பற்றி விவாதித்தது உண்டு. அடிப்படையில் எங்களுக்குள் உருவத்தின் அவசியம் பற்றியோ அல்லது உருவம் உள்ளடக்கத்தினால் ஏற்படுகிற ஒன்றுதான் என்பது பற்றியோ மாறுபட்ட அபிப்பிராயம் கிடையாது. ஆனால், வெற்றிகரமான உருவம் அமைந்திருப்பது எங்கே, எந்த, யார் எழுத்தில் என்பது பற்றி படிவில்லாத விவாதங்கள் நடத்தியிருக்கிறோம்.

ஜானகிராமனுக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தபோது அவர் பெண்களை இழிவுபடுத்தும் கதைகள் எழுதுகிறார் என்று ஒரு பெண் எழுத்தாளர் ஆர்ப்பாட்டம் செய்தது ஜானகிராமனின் கதைகளிலுள்ள ironyக்கு ஈடான ஒரு irony என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி, நினைத்தவர் அவர்.

ஜானகிராமனை நாவலாசிரியராக மதிப்பதை விடச் சிறு கதாசிரியராகக் கருதுவதுதான் விமரிசகனான எனக்குச் சரியென்று தோன்றுகிறது. எந்த நாவலை எடுத்துப் படித்தாலும், எந்தப் பகுதியையும் சுவாரசியம் தட்ட எழுதுபவர் அவர். ஆனால், நாவல்களில் காணக்கிடைக்காத ஒரு முழுமை அவருடைய சிலிர்ப்பு, கொட்டு மேளம், சண்பகப்பூ, வேண்டாம் பூசணி, துணை போன்ற கதைகளில் காணக்கிடக்கிறது. மிக நல்ல சிறுகதைகள் ஒரு முப்பது எழுதியிருப்பார் தி.ஜானகிராமன் என்று சொல்லுவது அவரைப் பெருமைப்படுத்துகிற விஷயமேயாகும்.


 – க.நா.சுப்ரமண்யம்

  • குறிப்பு இலக்கியச் சாதனையாளர்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் கட்டுரை கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!