கடவுளைப் போல யார்?

எழுதியவர்: அக்வைக்கே எமெஸி

தமிழில்: லதா அருணாச்சலம்


அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல,  ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர் போல… அம்மாவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு அவரைத் தன் தூதுவராக்கிக் கொண்டிருக்கலாம் அல்லது வானத்தைக் கிழித்து இறங்கி வந்த போது அம்மாவைத் தவிர கேட்பார் எவருமற்று ஏமாற்றமடைந்தவராக இருக்கக் கூடும்.  சலித்து வைத்திருக்கும் சர்க்கரைப் பொடியை, அடித்து வைத்திருக்கும் முட்டை வெண்கருவில் அம்மா  மிகக் கவனமாகக் கலப்பது போன்று கடவுள் அம்மாவின் உடலில் இரண்டறக் கலந்திருக்கிறார் என்று எண்ணியபடியேதான் வளர்ந்தேன். நான் ஆண்பிள்ளையாக இருப்பதால், அடுக்களையில் நின்றுகொண்டு இதுபோன்ற  மென்மையான வேலைகளைப் பார்க்கவேக்கூடாது, என் சகோதரி உரே தான் இந்தக் கலப்பதும், கிண்டுவதும், ஊற்றுவதுமான வேலைகளில் அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால் அடுக்களை வேலைகளை உரே  ஒரு குழந்தை அடம் பிடிப்பது போலத்  தீவிரமாக வெறுத்தாள். அதனால் அவளை உதவிக்கு அழைத்து வருமாறு அம்மா என்னை அனுப்பும் போதெல்லாம், அலமாரிக்குள், தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு, என்னைப் பார்த்து நாக்கை நீட்டிப் பரிகாசம் செய்வாள்.

 ‘அங்கே சூடாக இருக்கிறது, அந்த வேலை சலிப்பாயியிருக்கிறது என்று குறை சொல்வாள். ’ எனக்கு வர விருப்பமில்லை.., அன்பான பார்வையுடன் என்னைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்பாள். ’ நீ போய் அம்மாவுக்கு உதவி செய்யேன் கச்சி’ என்பாள்.

பெருமூச்சு விட்டுக்கொண்டே அவளைப் புத்தகத்தோடும் டார்ச் விளக்கோடும் விட்டு விட்டுச் சென்றுவிடுவேன். உரே எங்கே என்று அம்மா கேட்கும்போது அவர் கண்களைத் தவிர்த்துவிட்டேன்.  ஒருவேளை  அந்தக் கண்களால் கடவுள், என்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் .

“நான் அவளைப் பார்க்கவில்லை” பொய் சொன்னேன். தலையை ஆட்டிக் கொண்டே இடுப்பில் கட்டியிருந்த சுற்றாடையை இறுக்கிக் கட்டிக்கொண்டார் அம்மா.

‘இந்தப் பெண் ஏற்கெனவே பிடிவாதக்காரி. பெரியவளானதும் எப்படித்தான் கணவனைத்  தேடிக் கொள்ளப் போகிறாளோ தெரியவில்லை. கடவுள் அவளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.’ யோசனையுடன் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு கையில் ஒரு பாத்திரத்தையும், மரக்கரண்டியையும் கொடுத்தார். 

“அடேய் பையா,  இதை எனக்குக் கலக்கிக் கொடு ”

பாத்திரத்தில் இருக்கும் வெண்ணெயையும், அதைச் சுற்றிலும் சிறுநதி போலவும் ஓடைபோலவும் கரைந்து ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கரையையும் பார்த்தேன்.

“இதை எடுத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போகட்டுமா?” என்று கேட்டேன். அம்மா சரியென்று சொன்னதும்  உடனே பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி உணவு மேசைமீது வைத்துவிட்டு, அருகிலிருந்த நாற்காலியில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டேன். அப்போதுதான் இருகைகளையும் உபயோகித்துக் கிளறி, மசித்து அந்தக் கலவையைத் தயார் செய்யமுடியும். அது சிறு குருணைகள் நிறைந்த வெளிர் மஞ்சள் கலவையாக மாறியபின் அதிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயிலிட்டு மெதுவாக விரல்களை நக்கிச் சுவைத்தேன். எண்ணெய் கலந்த வழவழப்பான  இனிப்பு எனது நாக்கை நிறைத்தது. ஈக்போ மொழி தோத்திரப் பாடலொன்றை அம்மா பாடிக் கொண்டிருப்பது சமையலறையிலிருந்து இங்கு கேட்டது. உணர்வு மிகுந்த குரலில் ஏற்ற இறக்கங்களுடன்  ஏதோ ஒரு காதற்பாடலைப் பாடிக்கொண்டிருப்பது போலத்தோன்றியது. நான் அப்போது சிறுவனானதால், எங்கள் அனைவரையும்விட அம்மா அதிகம் நேசிக்கும் ஒரே ஜீவனை நோக்கிப் பாடப்பட்ட உண்மையான காதல் கீதம்தான் அது என்பதை நான் அறியவில்லை. வாய்ப்புக் கிடைத்தால் என்னை விடவும்  கடவுளையே அவர் தேர்ந்தெடுப்பார்  என்றும், அப்படியான தேர்வு எப்படி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் ஆப்ரஹாம், ஐசக் கதை பற்றியும், மலை மீது அழைத்துச் சென்று பெற்றோர்கள் செய்யக்கூடிய பயங்கரமான செயல்களைப் பற்றிய கதைகளை யாரும் என்னிடம் சொன்னதில்லை. அம்மா என்னை அவரோடு இந்த அடுமனை வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில் நான் மிக மகிழ்ந்து போவேன். இது எனக்கும் அம்மாவுக்கும் மட்டுமே தெரிந்த சிறிய ரகசியம், அப்பா வந்து இந்த கேக்கை உண்ணும் போது, அதன் சுவையில் அமிழ்ந்து ஆனந்தமாக முணுமுணுக்கையில் அதன் தயாரிப்பில் எந்த அளவு என் பங்கு இருக்கிறதென்பதை இருவருமே அவரிடம் சொல்ல மாட்டோம். அவருக்குத் தெரிந்தால், நான் உரே இருவருமே சிக்கலில் மாட்டிக் கொள்வோம்.

’நீ சமையலறைக்குள் வருவது உன் அப்பாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது.அவர் வரும் போது நீ உன் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பது நல்லது’  என்று விளக்கிச் சொல்லியிருக்கிறாள் அம்மா. எங்கள் இருவருக்கும் பைபிளின் சில செய்யுள்களை மனனம் செய்யச்  சொல்லியிருந்தாள். கடவுள், ஆவி ரூபத்திலோ அல்லது மகன் வடிவிலோ என்னுள்ளும் உறைகிறார் என்பதுதான் அதிலிருப்பதிலேயே எனக்கு  பிடித்த வரிகள். அது மிக அர்த்தமுள்ளதாக இருந்தது. நான் அம்மாவின் மகனாகவும், கடவுளின் மகனாகவும் இருக்கிறேன், அவர் அம்மாவினுள் இருப்பது உண்மையென்றால் நிச்சயமாக எனக்குள் இருப்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். சில சமயங்களில் படுத்துக் கொண்டே கடவுள் என்னுள் இருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன். அப்போது என் உடலில் ஏதாவது  கனமாக இருப்பதாக நான் உணர வேண்டுமா என நினைப்பேன். ஏனென்றால் அப்படி எதுவுமே இல்லை, கொஞ்சம்கூட நான் உணரவில்லை. நான் மிகவும் கவனமாக இருக்கத் துவங்கினேன், உரே யுடன் முரட்டுத்தனமாக விளையாடுவதைத் தவிர்த்தேன். எங்காவது அடிபட்டு ரத்தம் சிந்த நேர்ந்தால், அதில் சிறிதளவு கடவுள் வெளியேறி விடுவாரோ என்று அச்சமாக இருக்கும். மேலும், என்னுள் தங்கியிருக்கும் அவருடைய எந்தப் பாகத்தையும் கவனமின்மையால்  இழந்துவிட நான் தயாரில்லை.  எனது பனிரெண்டாவது வயதில், அப்படி ரத்தத்திலெல்லாம் கடவுள் சேகரமாகி இருக்கவில்லை என்ற புரிதல் வந்துவிட்ட போதும்,  நான்  என்னுடலை மிக நயமாகவும், நேர்த்தியாகவும்  பராமரிக்கப் பழகிவிட்டேன். அழுக்காக, ஒழுங்கில்லாமல் இருப்பதையோ, காயம் படுவதையோ நான் அடியோடு வெறுத்தேன். அம்மாவிற்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்போதும் ஆடையைக் கிழித்துக் கொள்வதும், கால் முட்டியிலோ, முழங்கையிலோ சிராய்ப்பு ஏற்படுத்திக் கொள்வதுமாயிருந்த அக்காவைப் பார்த்து, “கச்சியைப் பார்த்துப் பழகிக் கொள், தோற்றத்தை பற்றிக் கொஞ்சமாவது பெருமைப் படும்படியாக இரு” என்று அறிவுரை சொல்வார்.

உரே ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள். அதற்குப்பின் ஒருநாள், தெருவில் நானும் அவளும் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. பொறுமையிழந்த உரே , தன் சைக்கிளின் முன்சக்கரத்தால் மோதி என்னை மண்ணில் தள்ளியதில் என் உதடு கிழிந்து போனது. தாடையெல்லாம் ரத்தம் வழிய அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். கோபத்தில் உரேயின் காதைத் திருகிய அம்மா, என்புறமாக அவள் முகத்தைத் திருப்பிப் பார்க்க வைத்தார், “பார், உன்னுடைய தம்பிக்கு என்ன செய்திருக்கிறாய் என்று பார்” என்று அவளை நோக்கிக் கத்தினார். உரே தரையை, தன் செருப்பைப் பார்த்தபடி நின்றாள்,  என் முகத்தைத் தவிர்த்துவிட்டு வேறு எங்கெல்லாமோ பார்த்துக் கொண்டிருந்தாள்.அன்றிரவு, தன் படுக்கையிலிருந்து இறங்கி வந்து, என் தலையணைக்கடியில் ஒரு பெப்பர்மிண்ட் பாக்கெட்டை வைத்து விட்டு”என்னை மன்னித்து விடு கச்சி” என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னாள். நான் தூங்குவது போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். மறுநாள் காலை, குளியலறையில் அவள் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்து அவளுக்கு ஒரு மிட்டாயை நீட்டினேன். நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்குக் கோபமில்லை என்று மட்டுமே அவளுக்கு உணர்த்த விரும்பினேன். உரே, சுற்று முற்றும் பார்த்தவள், அம்மாவும் அப்பாவும் அங்கில்லை என்று உறுதி செய்து கொண்ட பின், முதல் முறையாக  எனக்கு முத்தமிட்டாள். அந்த முத்தம்,மிக மென்மையாக..மிக மிருதுவாக, கத கதப்பாக, சூடான அக்காரா பருப்பு வடையின் மெதுமெதுப்பான உட்புறம் போல இருந்தது. என் உதட்டுக் காயத்திலிருந்து சுரீரென்று மிளகாய்த் தீற்றல் போல வலி கிளம்பியது. அவள் என்னிடமிருந்து விலகிக் கொண்டபோதும், வீங்கிய உதடுகளோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் பல் துலக்கிக் கொண்டிருந்தாள். இதயம் தடதடக்க அங்கிருந்து நகர்ந்தேன். அடுத்த முறை, அவளைப் பார்த்து வரச்சொல்லி அம்மா அனுப்பியபோது, அலமாரிக்குள் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள், நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது செய்வாளே, அதே போல..அலமாரியின் கதவைச் சாத்தி விட்டு, நானும் அவளை முத்தமிட்டேன். மிருதுவான ஆடைகள்  இருட்டோடு சேர்ந்து எங்கள் உடலின்மீது அழுந்திக் கொண்டிருந்தன.அப்போது என் உதடுகள் ஆறத் தொடங்கி விட்டிருந்தன.

சில வருடங்களுக்குப் பிறகு, எனக்குப் பதினாறு வயதான போது, உதட்டில்  கோணலான சிறிய தழும்பொன்றும், உரேயை நினைக்கையில் மார்பில் உறைந்த இனம் புரியாத கதகதப்புமே ஞாபகங்களில் எஞ்சி நின்றது. பள்ளியில், எனது தோழர்களும் நானும் பெண்களுடனான எங்கள் சந்திப்புகளையும் நிகழ்வுகளையும் பரிமாறிக் கொள்கையில், என்னுடைய முதல் முத்த அனுபவம் சகோதரியிடம் கிட்டியது என்பதை எப்படிச் சொல்வதென்று புரியாமல் குழப்பமடைவேன். சிலர் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது தங்கள்  உறவுப் பெண்களிடமோ அல்லது சாத்திய சமையலறையில் வீட்டுப் பணிப்பெண்ணிடமோ உண்டான அனுபவத்தைச் சொல்வார்கள். அதிலும்  ஒருவன், தன் உடன்படிக்கும் மாணவர்கள் அனைவரும் சென்றபின் வகுப்பறையில் ஆசிரியையிடமே ஏற்பட்டதென்று சொன்னான். ஆனால் என்னுடைய அனுபவம் அனைத்திலிருந்தும் மாறுபட்டதென்று எனக்குத் தெரியும். அதைச் சொன்னால், வினோதமாகப் பார்ப்பார்கள். ஆகவே, அது ஒரு ரகசியமாகவே தங்கி விட்டது. வீட்டில் அவளைக் கவனிப்பேன். இப்போது இறுக்கமான ஜீன்ஸும், நைலான் கயிறு போன்ற தோள் பட்டிகள் உடைய பனியனுமே அணிகிறாள். அந்த உடையை மாற்றச் சொல்லி அம்மா சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார். அவளுடைய உதட்டுச் சாயம் மினு மினுவென்று இருந்தது,  கண்களின் மஸ்காரா கண்களை அகலமாகத் தெரியப் படுத்தின.. இமை மடல்களில் தீட்டும் வண்ணப்பூச்சு திருவிழாக்கோலம். உரே  பிரகாசமான அழகுடன், மிகவும் எனக்கானவளாகவும், அதே வேளை  முற்றிலும் எனக்கற்றவளாகவும் இருந்தாள்.

இப்போதும்கூட உரே சமையலறையில் அம்மாவுக்கு உதவ மறுத்து விடுவாள். ஆனால் அம்மாவும் அப்பாவும் வீட்டிலில்லாதபோது நான் கேக் செய்வதையும் , மாவை அச்சுக் குழிகளில் நிரப்புவதையும், கேக்கின் மீது சர்க்கரைக் க்ரீமை சீராகத் தடவ முடியாமல் தடுமாறுவதையும் பார்த்துச் சிரிப்பாள். வேலை முடிந்தவுடன் சுத்தம் செய்ய உதவி செய்வாள். எனக்கு நன்றாகக் கேக் செய்ய வருகிறதென்று அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம், அது எங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான திறமை. ஆனால், அதைப் பற்றி உற்சாகப் படுத்தும் வார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் நேரிடையாக ஒருபோதும்  கூறியதில்லை. என்ன இருந்தாலும் நான் ஒரு ஆண் பிள்ளை அல்லவா? வீட்டிற்கு வந்ததும், நான் செய்ததில் ஒரு விள்ளல் எடுத்து ருசி பார்த்துக் கொண்டே, யாரிடமும் குறிப்பாகச் சொல்லாத  பாவனையில், ’ யார் செய்திருந்தாலும் நல்ல முயற்சிதான்,  பரவாயில்லை, ருசியாகத்தான் இருக்கிறது, அடுத்த முறை சோடா பவுடர் கொஞ்சம் கூடுதலாக போடலாம் ’என்பார்.  கண்கள் சுழல, மின்னும் செவ்விதழ்களினுள்ளிருக்கும் பற்கள் பளிச்சிட உரே சிரிப்பாள். அப்போது மீண்டும் ஒருமுறை அவளை முத்தமிடத் தோன்றியது.

தனிமையில், எனது அறையில், இரு தொடைகளுக்கிடையில், ஒரு கைக் கண்ணாடியை இடுக்கிக் கொண்டேன். அணிந்திருக்கும் காக்கி காற்சட்டையின் பின்னணியில்  நீலவண்ண பிளாஸ்டிக் சட்டகம் கொண்ட அந்தக் கண்ணாடியில் என்னுடைய வாயை உற்று நோக்கினேன். அது அப்பாவினுடையதைப் போலவே இருந்தது. என்னுடைய கண்களும், தலைக்குப் பின்னாலிருந்த பழுப்பு வண்ணச் சுவரும் தெரியும்படி கண்ணாடியைச் சாய்த்துப் பிடித்துப் பார்த்தேன். இந்த அறை இதற்கு முன்பு அப்பாவின் அலுவலக அறையாக இருந்தது. கடல் நீல வண்ணச் சுவர்கள் கொண்ட எங்கள் முந்தைய அறையில் இப்போது உரே மட்டும் தங்கியிருக்க நான் இங்கே  மாறிவிட்டேன். ஏனென்றால் ஒரே படுக்கையறையைப் பகிர்ந்து கொள்ளும் வயதை நாங்கள் கடந்து விட்டோம் என்று அம்மா சொல்லி விட்டார்.  அம்மாவின் கண் மை தீற்றிக் கொள்ளும் திருகுப் பென்சிலைக் கையில் பிடித்திருந்தேன். சிறிய பச்சைக் கண்ணாடி உருளையில் இருந்த பென்சிலைப் பார்க்கையில் அது பச்சை நாகமெனத் தெரிந்தது. அதன் திரி போன்ற மென்மையான நுனி தெரியும் வரை உருளையைத் திருகியபின் எப்படி அதை கண்களில் தீட்டுவதென்று புரியவில்லை. அம்மா, உரே இருவருமே மை தீட்டிக் கொண்டாலும், வெவ்வேறு முறையில் அதைப் பயன்படுத்துவார்கள். அம்மா இமை மடலின் கீழ்ப்பகுதியை ஒட்டி அடர்த்தியாகத் தீட்டிக்கொள்வார்.  அப்போது, பென்சில் இமை மயிர்களின்மீது மேலும்கீழும் மெல்ல ஒட,  அவை வளைந்து நீண்ட புல்லின் கூரிய தண்டுகள் போலத் தோற்றமளிக்கும். கண்களின் மைப்பூச்சு அடர்த்தியான வேலி போலத் தெரிகையில் அதன் உட்புறம் என்ன இருக்கிறதென்று பார்க்கத் தூண்டும். உரே, விழியோரங்களை அதன் மெல்லிய செவ்வரியோடும் நரம்புகள்  தெரியுமளவு கீழ்நோக்கிப் பிதுக்கி, பின் அங்குள்ள ,பளபளக்கும் சிறிய சதை அடுக்கில்  மையைத் தீட்டுவாள்,. உரே பயன்படுத்தும் முறையே எனக்குப் பிடிக்கும். மை பென்சிலின் கருமை, விழிகளின் வெண்ணிற உள்வளைவுகளை  உடனடியாக அரவணைத்துக் கொள்ளும். ஏதோ, எப்போதுமே அப்படி இணைந்திருப்பதுபோலத் தோற்றமளிக்கும்.

தொடைகளில் கண்ணாடி சிக்குண்டு இருக்க, மைப் பென்சில் எடையற்று என் கைகளில் மிதக்க, ஒரு கணம் அப்படியே நின்ற நான், என் பிம்பத்தை நோக்கினேன்.

’ஓன்யேடிகச்சி, ‘  நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் முகத்தைப் பார்த்து நானே கேட்டுக் கொண்டேன்.

என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் அப்பா கொன்றே விடுவார். அம்மா பைத்தியமாகி விடுவாள். அவள் உள்ளே வசிக்கும் கடவுளும்கூடப் பைத்தியமாகி விடலாம். எதுவும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கடவுளும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவர் என் கண்களுக்குள்கூட இருக்கலாம், அதை ஜன்னலாக உபயோகித்து அதன் வழியாக என்னைப் பார்க்கக் கூடும் . கண்ணோரங்களைக் கீழே இழுத்து அதனுள் தெரியும் ஈரமான சதைக்கோடுகளைப் பார்த்தேன். அதன் மீது வரைய முயற்சி செய்கையில் கண்கள் உறுத்த, நீர் திரண்டது. பென்சில் நுனித் திரியை அது ஈரமாக்கிவிட சிறிதுநேரம் நிறுத்தி, கண்களை உலர வைத்து, அவை சரியாகும்வரை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் முயற்சித்தேன், சீராக வரவில்லை, ஆனால் நன்றாக அப்பிக் கொண்டது. வெளிப்புற ஓரத்தில் சிறிதாக வளைத்துவிட்டேன். கண்ணாடியில் பார்த்தேன். என்னுடைய ஒரு கண்.. இப்போது பேரழகுடன் அற்புதமாக இருந்தது. அடுத்த கண்ணிலும் வரைந்து முடித்தேன். எனது முகம் தட்டையாக , சட்டென்று மாறிவிட்ட தோற்றத்துடன் தெரிய, கருவிழிகள் அகன்றிருந்தன. உரேயிடம் காண்பிக்க வேண்டும்போல இருந்தது.

அறையிலிருந்து வெளியேறி காரிடாரைக் கடந்து அவள் அறையை அடைந்தேன். வெளியிலிருந்து கேட்ட ஜெனரேட்டர் சத்தத்தையும் மீறி குளியலறையில் ஷவர் ஓடிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. நான் நுழைந்தபோது, ஷவரின் கெட்டியான  கண்ணாடித் தடுப்புச் சுவரில் படிந்திருந்த நீராவியைத் துடைத்து யார் வந்திருக்கிறார் என்று பார்த்தாள்.

ஓ, நீயா? நீதானா என்று சொன்னவள் புன்னகையுடன் மீண்டும் தலைமுடியை அலசத் துவங்கினாள்.

‘என்ன விஷயம்?’

தோளைக் குலுக்கிக் கொண்டே, அங்கிருந்த டாய்லட் சீட்டின் மூடி மீது அமர்ந்து கொண்டே, கெட்டியான கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் தெரிந்த நிழலுருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய இடுப்பு உள்ளாடையும், மேலாடையும் கீழே கிடந்தன. அவளுடைய இடுப்பு உள்ளாடையைக் கையிலெடுத்தபோது அதில் கறைபடாத ஒரு லைனர் ஒட்டப்பட்டிருந்தது.அதைக் கையில் பிய்த்தபோது அவள் மேனி வெம்மையின் மீதங்கள் அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அந்தப் பட்டியைக் குப்பைக் கூடையில் வீசியெறிந்துவிட்டு, பீங்கான் தொட்டியின் மீது சாய்ந்து அமர்ந்தபடி, வெண்பறவையைப்  போல இருந்த அவளுடைய இடுப்பின் உள்ளாடையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன்.  என்னுடைய இதயம் படபடத்தது. நீராவிப் புகைக்குப் பின்னாலிருந்து உரேயின் குரல் எழுந்தது.

 ’அம்மா வந்து விட்டார்களா?’

‘கார் வீட்டுக்குள் வரும் சத்தம் கேட்டது’,  பதில் சொன்னேன்.. என் தொண்டை உலர்ந்திருந்தது. ஆர்வத்தையும், நிச்சயமின்மையையும் ஒருசேர உணர்ந்தேன். மை தீட்டிக் கொண்டதை உரேயிடம் காண்பிக்க வேண்டும் ஆனால், அம்மா மாடியேறி வருவதற்குள் அதை அழித்துவிட வேண்டுமென்று விரும்பினேன்.

‘நீ சுடுதண்ணீர் எல்லாத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்’

உரே குழாயை நிறுத்திவிட்டு கண்ணாடித் தடுப்பை சிறிது தள்ளினாள். அவளது ஈரமான பழுப்பு நிறச் சருமம் தெரிந்தது. தலையை நீட்டியவள் எங்கள் இருவருக்கும் நடுவில்  கைகளை ஆட்டிக் கொண்டே கேட்டாள்.

’என்னுடைய துண்டை எடுத்துக் கொடு, ப்ளீஸ்’

 என் கையிலிருந்த  உள்ளாடைகள்  அவள் கண்களில் படாதவாறு திரும்பி நின்று கொண்டே, அதை என் கைகளிலிருந்து கீழே நழுவவிட்டேன். ஓசையின்றி அவை கீழே விழுந்தது. அவள் கைகளுக்கு எட்டாத இடத்திலிருந்த கம்பியில் இளஞ்சிவப்பு நிறத்துண்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து அவள் கையில் கொடுத்த போது கேசத்திலிருந்து சொட்டிய நீர் அவள் கழுத்தின் வழியாக இறங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தவள், என் மை தீட்டிய கண்களைப் பார்த்தே விட்டாள்.

‘ஆ ஆஹா,! என்னது இது?’

அவள் குரலின் தொனியை அறிய முற்பட்டேன். அதில் வியப்பு இருந்தது, அருவருப்பு இல்லை. இருந்த போதிலும் சங்கடத்துடன் என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். நெஞ்சில் அந்த வெம்மை மீதமிருந்தது.

’உனக்குப் பொருத்தமாக இருக்கிறது’

அவள் சொன்னபோது, குரலில் கள்ளத்தனமாகச் சுவைக்கும் இனிப்பைப் போல அனுமதி மின்னியதைக்கண்டு  என்னுள் சிறிய விளக்குகள் சுடர்விட்டது போல ஒரு நிம்மதி  பரவியது. புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தேன், என்னைக் கட்டுப் படுத்தவியலாமல், உடனடியாக நான் செய்த செயல் அவளை முத்தமிட்டதுதான். ஷவர் கண்ணாடித் தடுப்பைச்சுற்றி என் கைகளை அழுந்தப் பதித்து., முதன் முதலாக அலமாரியில் முத்தமிட்டது போல, இது   குளியலறையில்.. அல்லது இரண்டாவது முறையாக அலமாரிக்குள்..அதே போன்ற மாசற்ற அன்பின் வெளிப்பாடு மட்டுமே.. ஆனால், எதிர்பாராதவிதமாக என்னிடமிருந்து பின் வாங்கியவள், என் மார்பில் அழுத்தமாக ஈரத் தடம் பதியுமளவு கைவைத்துத் தள்ளி விட்டாள்.

’நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரிகிறதா?’ குரலில் எச்சரிக்கையின் கடுமையான தொனியை அறிந்து கொண்ட நான், ஏதாவது சமாதானமாக நல்ல வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். ஆனால். ஒரு முட்டாளைப் போல நிலைகுலைந்து அமைதியாக நின்று கொண்டிருந்தேன். உரே, அவசர அவசரமாகத் தன் உடலைச் சுற்றித் துண்டைக் கட்டிக்கொண்டே ஷவர் தொட்டியிலிருந்து வெளியேறினாள். ’என்னை மன்னித்து விடு,’ தொண்டை அடைத்தது. இதயத்தை யாரோ  திருகிவிட்டது போலிருந்தது.’நான் என்ன நினைத்தேனென்றால்.. முன்பும் நடந்தது போல…இது பெரிய விஷயமில்லையென்று நினைத்தேன்’

சினத்தில் முகத்தைச் சுருக்கிக்கொண்டே, என்னைத் தள்ளிக் கொண்டு அறையினுள் நுழைந்தாள்.

‘முன்பு நடந்தது போல், அதாவது அந்த சைக்கிள் சண்டைக்குப் பின்? கடவுளே..அப்போது நாம் சிறு பிள்ளைகள் கச்சி!’

மௌனமாக அவளைப் பின்தொடர்ந்து சென்று கார்ப்பெட்டின்மீது நின்று கொண்டேன். அது நடந்து நான்கு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் எல்லாமே இவ்வளவு மாறி விட்டதா? நான் எப்படித் தவறாகப் புரிந்து கொண்டேன்? நாங்கள் மிகவும் நெருக்கமானவர்களாகத்தானே இருந்தோம்? நான் அறிந்த ஆண் நண்பன்,, பெண் தோழி ஆகியோருக்குள் நிலவும் நெருக்கத்தை விடவும் அதிகமானதாக எங்கள் நெருக்கம் இருந்தது. ஆனால் என் செயல்  இப்படி ஒரு மாற்று அர்த்தம் கொடுக்கும் என நான் நினைக்கவேயில்லை. அவள் மீதுள்ள என் அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தானே அந்த சிறிய முத்தம்? என் கண்கள் நிரம்ப. அவமானத்தில் குன்றினேன். அவள் முன் அழுவதென்பது மேலும் மோசம்.

எந்தவித உணர்வுகளுமற்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் உரே. அவளைச் சுற்றிலும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

’என்னுடைய மைப் பென்சிலையா உபயோகித்தாய்?’

‘இல்லை, அம்மாவினுடையது’

‘அவருக்குத் தெரியும் முன்னால் அங்கேயே வைத்து விடுவதுதான் உனக்கு நல்லது’

தலையாட்டிக் கொண்டே அம்மாவின் அறையை நோக்கி நகர்ந்தவனை அவள் குரல் தடுத்து நிறுத்தியது.

‘இதோ பார் கச்சி,’

அவளை நோக்கித் திரும்பினேன். அவள் இன்னும்  கோபத்திலிருந்தாலும், ஏதாவது நல்லதாகச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது.அதனாலெல்லாம் என் மனம் சமாதானமாகவில்லை. அவளது உணர்வற்ற முகம் மாறி, அதில் சிரமத்துடன் அவள் அடக்கிக் கொண்டிருந்த அசூயை காணப்பட்டது.

‘என்மீது கொண்டிருக்கும் உணர்வென்று எதை நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, உண்மையில் அது எனக்கானதல்ல’

அவள் என்ன சொல்ல வருகிறாளென்று எனக்குப் புரியவில்லை. 

‘உனக்கு நான் வேண்டாம், நீ என்னைப் போலவே ஆக வேண்டுமென நினைக்கிறாய்’

சிலகணங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றோம். அவள் நினைப்பது தவறு. ஆனால் அவள் கண்களில் தெரிந்த வெறுப்புக்கு எதிராக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் நானாக இருந்தே அவளை முத்தமிட நினைத்தேன். அதுதான் நிதர்சனம். அவளே அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் வேறு யார் புரிந்து கொள்வார்கள்? என் முகத்தின் முன்னே கதவை அறைந்து சாத்துவதும், பூட்டின் க்ளிக் என்ற ஓசையும் காதில் விழுந்தது. என் மனம் மிகவும் வேதனையடைந்தது. என்னை ஒரு காமவெறி பிடித்தவன் என அவள் எண்ணிக் கொண்டதுபோல அந்தச் செயல் இருந்தது.. ஒரு அசுரனுக்கெதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்பவள் போன்ற எச்சரிக்கை..

என்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் கிடந்த மைப் பென்சிலைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டினுள் எழும் சப்தங்களைக் கவனமாகக் கேட்டபடி மாடியின் முற்றத்திற்குள் மெல்ல அடியெடுத்து வைத்தேன். கீழிருந்து தொலைக்காட்சிப் பெட்டி விதவிதமான ஒலிகளை இறைத்துக் கொண்டிருந்தது. அம்மாதான் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார், அப்படியென்றால் அவர் சோஃபாவில் அமர்ந்து கொண்டிருக்க வேண்டும். பெற்றோரின் அறைக்குள் பதுங்கிச் சென்று, அம்மா தன் ஒப்பனைச் சாதனங்களை வைத்திருக்கும் மேசையை அடைந்தேன். அடர்ந்த கருப்பு வண்ண மெழுகுவர்த்தித் தண்டுகள் போல இருந்த மைப் பென்சில்கள்மீது மினுமினுக்கும் பொன் எழுத்துகள் பொறிக்கப்பட்டு, முனையில் சிறிய பிளாஸ்டிக் தாளால் சுற்றப்பட்டு அவை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. கருப்பும், பழுப்புமல்லாத மாறுபட்ட வண்ணங்கள் தலைகீழாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூடிகளைக் கொண்டு வண்ண வித்தியாசங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வசதியாக இருக்கும். மெல்லிய உலோகம் போன்ற பளிச்சிடும் வெள்ளி வண்ணம், மினு மினுப்பான பச்சை,  ஆழ்ந்த நீல நிறம்…

திருகு மூடி கொண்ட மைப் பென்சிலை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டுத் தீட்டிய கருப்பு மையை கண்களிலிருந்து அழித்துக்கொள்ளக் காகிதக் கைக்குட்டைகளைத் தேடினேன். ஆனால் உரேயின் வார்த்தைகள் என்னைக் குத்தி கிழித்து, அனைத்து உணர்வுகளும் வடிந்து விட்டதுபோல உணர்ந்தேன். இதை அழித்து முடித்ததும் வண்ணமற்றவனாகி விடுவேன் என்பதுபோல மனதில் தோன்றியது.  வண்ணப்பென்சில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பெட்டியையே பார்த்தவன் அதிலிருந்து  வெள்ளி வண்ண மையை உருவி, மூடியைத் திறந்து கொண்டு கண்ணாடியை நோக்கிக் குனிந்தேன். இதை முயற்சி செய்வதற்கு இதுதான் கடைசி நாளாக இருக்கும் பட்சத்தில், நான் முழுவதுமாக அதை நிறைவேற்றிக் கொண்டு, விரைவாக ஒரே ஒருநிமிடம் என்னைத் திருப்தியாகப் பார்த்துக் கொண்ட பின்,, அதை முற்றிலுமாக அழித்துவிட்டு கீழ்தளத்திற்குச் சென்று அவர்கள் விருப்பப்பட்டவாறு நடந்து கொள்ளும் மகனாக, சகோதரனாக பாவனை செய்து கொள்கிறேன். மனதில் உறுதியோடு,  இடது கண்ணின் உள் ஓரத்தில் பென்சில் நுனியை அழுத்தினேன், அங்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக பளிச்சிட்டால் போதுமானது. ஓரங்களைத் தீட்டி முடித்தவுடன் பென்சிலை மூடி அதனிடத்தில் வைத்தேன்.   பின்னால் நகர்ந்து சற்றுத்  தொலைவாக நின்றபடி, அந்த வெள்ளி மினுமினுப்பு முதலில் தெரிந்த குறைபாட்டைச் சரிசெய்து விட்டதா என்று பார்த்தேன். அப்போது பின்னால் தரையில் அம்மாவின் கைப்பை கிடந்ததைக் கவனிக்காமல் அதன்மீது காலை வைக்க, அது தட்டிவிட்டதில், அங்கிருந்த நாற்காலியில் மோதிக் கீழே விழுந்தேன். பக்கத்தில் இருந்த  அடுக்கிலிருந்து  காலணிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சறுக்கி விழுந்தன. என் முழங்கை தரையில், ’ணங் ’என்று மோத, மீண்டும் கண்களில் நீர் தளும்பியது.

ஐயோ, .. உடனடியாக எழுந்து, நாற்காலியை அதனிடத்தில் சரியாக வைக்கையில் முழங்கையில் சுரீரென்று எழுந்த வலி கையெங்கும் பரவியது. காலணிகளை அதனதன் பெட்டிகளில் அடுக்கி வைக்க முனைந்த வேளையில் உள்ளே நுழைந்த அம்மா, கைப்பையை படுக்கையில் வீசிக்கொண்டே கத்தினார்.

’யார் இப்படி சத்தம் போடுவது? சரியாக ஓய்வெடுக்கக்கூட விட மாட்டீங்க!’ என்னைப் பார்த்தவுடன் பேச்சைப் பாதியில் நிறுத்தினார்.

‘கச்சி, நீயா இந்த சாமான்களையெல்லாம் உடைப்பது? என்னுடைய அறைக்குள் உன்னை யார் வரச் சொன்னது, ?”

‘மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா, சும்மா ஏதோ பார்க்க வந்தேன்’ காலணிகளை அப்படியே கீழே போட்டுவிட்டு , நான் செய்த  செயலை அம்மா கண்டுபிடித்து விடும் முன் தலையைக் குனிந்தவாறு பக்கவாட்டில் பதுங்கி நகர முயற்சித்தேன். ஆனால், என் கண்களின் ஓரத்தில் மிதமிஞ்சிய வெள்ளித் தீற்றல் தெரிந்தது. நான் மின்னிக் கொண்டிருந்தேன்.

‘ஏய், அங்கேயே நில்! அவர் குரல் பிரம்படி போல் ஒலித்தது. பழக்க தோஷத்தில் நான் கீழ்ப்படிந்தேன், எனது கால்கள் தரைவிரிப்போடு ஒட்டிக்கொண்டன.

‘என்னது உன் முகத்தில்?’

அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அம்மா முன்னே வந்து என் கைகளைக் கீழே தட்டிவிட்டார்.

’நிறுத்து, அதென்னவென்று நான் பார்க்கிறேன்’

என் முகத்தை அவர் பக்கமாகத் திருப்பியவர் கோபத்தில் முகத்தைச் சுளித்தார்.

‘ஆஹ் ஆஹ், கச்சி, என்ன இது?  எப்போதிருந்து கண்மை வரைய ஆரம்பித்திருக்கிறாய்? நான் எதிர்பார்த்தது போலவே வியப்பு, கவலை, வருத்தம், மற்றும் சினத்தில் மூழ்கியது அவர் முகம்.

‘நான் போய் முகம் கழுவிக்கொண்டு வருகிறேன்’ அம்மாவின் பிடியிலிருந்து கைகளைத் திருகிக்கொண்டு, நழுவியபடியே முணு முணுத்தேன். அறையை விட்டுத் தப்பியோடுவதில் உறுதியாக இருந்தேன். ஆனால் அம்மா மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.

‘உன் அப்பாவிடம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறாயா?’

என் முகத்தில் வீசப்பட்ட சம்மட்டி போல இருந்தன அந்த வார்த்தைகள். உடனே நின்று, எச்சரிக்கையுடன் அம்மாவை நோக்கித் திரும்பினேன்.

‘ஏய், உட்கார்ந்து நிதானமாக இந்தக் கிறுக்குத்தனத்தைப் பற்றிச் சொல்’

கட்டிலின் முனையில் அமர்ந்து கொண்டேன். அம்மா அப்படியே கையைக் கட்டியபடிதான்  நின்று கொண்டிருந்தார்.

‘ம்ம், பேசு’

படபடப்புடன் கீழே தரை விரிப்பைப் பார்த்துக் கொண்டே, அது ஒன்றுமில்லை,சும்மா எப்படி இருக்குமென்று பார்க்கத்தான்’

’இப்போது  நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரியவில்லை,

அணிந்திருக்கும் காலணிகளுக்குள் அவர் பாதங்கள் அமைதியற்று நெளிந்தன. என்னிடம் கேட்கப்போகும்  விஷயத்தை எண்ணி அவரே அஞ்சியது  போலத் தயங்கிவாறு, உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தார். மிகமென்மையாக, கெஞ்சும் தொனியில் இருந்தது அவரது குரல், கொல்வதற்கு முன்பு ஒருவரின் முன்னால் வைக்கப் பட்டிருக்கும் நஞ்சு போல…

‘ஓன்யேடிகச்சி, மறைக்காமல் உண்மையைச் சொல், நீ ஒரு ஓரினச் சேர்க்கையாளனா?’

‘அம்மா! கோபத்தில் தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்’ நான் தன்பால் ஈர்ப்புடையவன் அல்ல’

கைகளை உயர்த்திக் கொண்டு, நிலையில்லாமல் கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தார்.’கடவுளே, என் மகனைப் பீடித்திருக்கும் சாத்தானைப் பார்’ கைகளை உதறிக்கொண்டே பாதங்களை அழுத்தமாகத் தரையில் உதைத்தார்.

இப்போது எனக்கு வந்த எரிச்சலில் பயம் மறைந்து போனது. ‘அம்மா, இது அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை, நானே அழித்து விடலாமென்றுதான் இருந்தேன். ’

சில கணங்கள் உறைந்து போய் நின்றவர் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

‘என்ன? இது பெரிய விஷயமில்லையென்றால் என்ன அர்த்தம்? ஹோமோசெக்ஷு வல் பூதம் உன்னைக் கண்மை தீட்ட வைத்திருக்கிறது, நீயோ அது ஒரு விஷயமே இல்லையென்று சொல்கிறாயா?’

‘ஏன் எப்போதும் பூதமோ, சாத்தானோ என்று நினைத்துக் கொள்கிறீர்கள்? ஹே, ஒருவேளை அது கடவுள் என்னுடன் பேசுவதாகவோகூட இருக்கலாம் ,உதாரணமாக—’

நான் வார்த்தைகளை முடிக்கவில்லை, அதற்குள் முகத்தில் அழுத்தமான அறை விழுந்தது. அம்மாவின் விரலிலிருந்த மோதிரம் என்  வாயோரத்தைப் பதம் பார்த்ததில் உதடு கிழிந்தது.  திடீரென்று வழிந்த ரத்தத்தைத் தொட்டுப் பார்க்க  விரைந்தது என் கை. என்னை முறைத்துப் பார்த்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார் அம்மா.  

‘உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?’

 படுக்கை மீது அமர்ந்து கொண்டு அழுகை வராமலிருக்க முயற்சி செய்தேன். நான் ஒரு முட்டாள், அம்மா கடவுளை நெருக்கமாக அறிந்தவரானதால் ஒருவேளை என்னைப் புரிந்து கொள்ளலாம் என்று எண்ணினேன். நான் கண்டதைப் போலவே அவரும் என் முகத்தில் கடவுளைக் காண்பார் என்று நம்பினேன். இப்போது எங்கள் இருவரிடையே இருந்த பிளவு மிகவிரைவாக அகண்டு கொண்டிருப்பதைப் போலவும்,  செங்குத்தான பாறையுச்சியின் மீது நான் தனித்து விடப்பட்டது போலவும் உணர்ந்தேன். அம்மா இன்னும் கத்திக்கொண்டிருந்தார், நான் அதைக் கவனிக்கவில்லை. என் முகத்தின் மீது காறி உமிழ்ந்தார். என் இதயமோ  மேலும் மேலும் இறுகிக் கொண்டிருந்தது.மீண்டும் என்னை அறைந்தார்.

‘நான் சொல்வது காதில் விழுகிறதா?’

தலை நிமிர்ந்து பார்த்த அந்த நொடியில் அவரை மிகவும் வெறுத்தேன். என்  இதயத்தில் கனன்று கொண்டிருந்த சினத்தைக் கண்களின் வழியாக இறக்கி அதை அவர் பார்க்க அனுமதித்தேன்.அதைக் கண்டு மூச்சு வாங்கப் பின் வாங்கினார்.

’கடவுளே காப்பாற்று’ முணுமுணுத்தார் அம்மா. எழுந்து, என் அறையை நோக்கித் திரும்பி நடந்தேன். கண்ணீர் பாதையை மறைத்தது. சடாரென, ஒரு குத்தும் வலி என் தலையின் பின் பாகத்தில் வெடித்தெழ, பெரிய கதறலுடன் கால்கள் மடங்கக் கீழே விழுந்தேன். அனிச்சையாகக் கையை உயர்த்திப் பின்னால் என்ன இருக்கிறதென்று பார்க்கத் திரும்பினேன்.  உயரமான குதிகால் செருப்பைக் கையில் பிடித்தபடி, கண்களில் அனல் பறக்க அச்சம் தரும் கோலத்தில் அம்மா நின்றிருந்தார்.

‘எந்த சாத்தானும் என்னிடமிருந்து என் மகனைப் பிரித்துச் செல்ல முடியாது’ ஓடிப் போய் விடு, கடவுளின் பெயரால் ஆணையிடுகிறேன், அவனை விட்டுவிடு’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் என்னை அடிக்க என் முன்னங்கை எங்கும் சிராய்ப்பு ஏற்பட்டது.

‘அம்மா, என்ன செய்கிறீர்கள், தயவு செய்து நிறுத்துங்கள். என்னை அடிக்க வேண்டாம்’

‘உன்னை அவன் கண்களில் பார்க்கிறேன்,  மாற்றுப்பாலின சாத்தானே,, அவனை விட்டு விடு!விட்டு விடு! ஒவ்வொரு வார்த்தைகளையும் வலிமையான அடியால் அடிக்கோடிட்டார். உடலின் அத்தனை சக்தியையும்  கைகளில் தேக்கி அடித்தார். அன்பென்பது இப்படியெல்லாம் செய்யக் கூடும் என்று எனக்குத் தெரியாது.

மொழிபெயர்ப்பு: லதா அருணாச்சலம்

  ‘தயவு செய்து நிறுத்துங்கள் அம்மா!’

அவர் கவனிக்கவேயில்லை. ஒரு பந்து போல சுருண்டு, தலையை மறைத்துக் கொள்ள, குதிகால் செருப்பிலிருந்தும், அவர் கைகளிலிலிருந்தும் மாறிமாறி என் உடல்மீது  கடுமையான தாக்குதல் நிகழ்ந்தது. தொடர்ந்து அலறிக் கொண்டேயிருந்தபோது  உரேயை உதவிக்கு அழைக்கலாம் என்று சட்டென நினைப்பு  வந்தது.

‘உரே, உரே, என்னைக் காப்பாற்று, உரே!’

  ‘நீ கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டிருக்கக் கூடாது கச்சி! என் மகன்  ஓரு பொட்டையாக ஒரு போதும் இருக்கக் கூடாது! என்னைப் பீடித்திருப்பதாக அனுமானித்த அந்த சாத்தானிடமிருந்தைப்போது   கோபத்தை என்மீது மடை மாற்றிக் கொண்டார் அம்மா. என் கண்மை அலங்காரத்துக்கான காரணத்தைப் பற்றி மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாரா? காரணம் எதுவாக இருந்தாலும் இந்த அடிகளால்தான்  அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று முடிவெடுத்து விட்டார்போல இருந்தது. சரமாரியான தாக்குதலால், என் இடது கண்களில் ரத்தம் வழிய, நான் நிமிர்ந்து பார்த்தபோது கதவருகில் அமைதியாக, வெற்றுப் பார்வை பார்த்தபடி உரே நின்று கொண்டிருந்தாள். அவளை  அழைப்பதற்காக வாயைத் திறந்தபோது முகத்தின் குறுக்காக அடித்தார் அம்மா. ஆரம்பத்திலிருந்தே நான் அழுதுகொண்டிருக்கிறேன், மேலும்மேலும் அழுகிறேன், ஆனால் என் சகோதரி ஏதும் செய்யாமல் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்னுள் துக்கம் நிரம்பியது. அவள் முகத்திலிருந்த வெறுமை மறைந்து அதில் தெளிவான செய்தி தெரிந்தது. அவள் உதவி செய்யப்போவதில்லை, அம்மாவைத் தடுக்கப் போவதில்லை..எனக்குள் ஏதோ பிறழ்வு இருக்கிறது என்று சொல்கிறது அவள் மனம். அம்மா என்னைத் தவறான காரணத்துக்காக அடித்துக் கொண்டிருந்த போதும், அவர் அறியாத வேறொன்றுக்கு, குளியலறையில் நிகழ்ந்த மாபெரும் தவறான  செயலுக்கு, முறையற்ற என் அன்புக்கு, தகுந்த தண்டனை  இது என்ற அவள் நினைப்பதை அவள் மௌனம் உணர்த்தியது.

அம்மா உரேயைக் கவனிக்கவில்லை. செருப்பைக் கீழே போட்டுவிட்டு கைகளால் அறைந்து கொண்டிருந்தாள். என்னுடைய கடவுள் நிந்தனை பற்றி, அவர் யாராக என்னைப் படைத்தாரோ அப்படி நான் இல்லாமல் போனதற்கு, யாரென்று நினைத்து என்னிடம் கடவுள் பேசினாரோ அவனாக இல்லாமல் பெண்ணைப் போல நடந்துகொண்டும் பேசியும் அவரை ஏமாற்றியதற்கு, அவருடைய படைப்பை மாற்றி மற்றொன்றாக ஆக்கி அவரை அவமானப் படுத்திவிட்டதற்கு, மற்றும்  சமையலறைக்குள்  பெண்ணைப் போலப் பாவித்து என்னை அனுமதித்து இருக்க கூடாதென்றும்  கத்திக்கொண்டே இருந்தார்.

‘நீ ஒரு ஆண், கேட்டுக் கொள், இது போன்ற அசிங்கத்தை என் வீட்டிற்குள் நான் அனுமதிக்க மாட்டேன்!’

கண்களைத் தாழ்த்தியபடி உரே அங்கிருந்து அகன்றாள். அவள் நின்று கொண்டிருந்த அறை வாயில் வெற்றிடமாக இருந்ததைக் கண்ட அந்தக் கணத்தில்தான்  என் இதயம் முற்றிலும் உடைந்ததெனக் கூறலாம். என் தலையில் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கக் கண்கள் சிவப்பேறிக் கிடந்தன. கடவுள் என்னுள் வாசம் செய்கிறார் என்றால், உள்ளும் புறமும் நான் உணரும் இந்த வலியை, இந்த வேதனையை அவரும் உணர்ந்திருப்பாரா? அவருடைய ரத்தம் என்னுடையதில் கலந்திருக்குமா? கடவுள் அம்மாவுக்குள்ளும் இருக்கிறாரென்றால், அந்தக் கடவுள்தான் என்னை அடித்தாரா? அவரே அவருடைய உடலின் ஒரு பாகத்தை அடிக்கிறார் என்பதுதான் அதன் அர்த்தமா?

முகத்தில் கைகளை வைத்து அழுத்தி,  கண்மை முழுவதும் விரல்கள் அனைத்திலும் பரவும் வரை, என் முகத்திலிருந்த கடவுள் முற்றிலும் நீங்கிச் செல்லும் வரை அழுந்தத் துடைத்துவிட்டு , வெறும் நானாக, நான் மட்டுமே உடலாகத் தரை விரிப்பில் படுத்துக்கிடந்தேன். மூச்சு வாங்க என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா, அவர் கைகள் களைப்படைந்துவிட்டன.. அவரது மோதிரங்களில் என் ரத்தம் பரவியிருந்தது.


[mkdf_highlight background_color=”black” color=”yellow”]அக்வைக்கே எமெஸி[/mkdf_highlight]

  • எழுத்தாளரும், ஒளிப்படக் கலைஞரும் ஆன அக்வைக்வே  எமெஸி,(1987) , நைஜீரிய நாட்டில்  வளர்ந்தவர். இவர் தந்தை நைஜீரியர், தாய் மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர். எமிஸி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.  இவருடைய இந்தச் சிறுகதை 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆப்பிரிக்கச் சிறுகதைக்கான காமன் வெல்த் போட்டியில் பரிசு பெற்றது. அண்மையில் வெளியான எமிஸியின் சுய சரிதை நாவல் Fresh water பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டும், குறும்பட்டியலில் இடம் பெற்றும் உள்ளது,.தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் எமிஸி, பால் துறந்தவர். தன்னை எந்தப் பாலினமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாத Non-binary trans என்னும் அடையாளத்தோடு வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே மிக வலிமையான எழுத்துகளுக்காக அறியப்படும் படைப்பாளியாக உள்ளார்.
Previous articleநல்லதேசம் (மீண்டும் திருவிளையாடல்)
Next articleநேசமித்ரன் கவிதைகள்
Avatar
கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் . 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.