நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது வியக்கிறேன். வண்ணநிலவனின் எஸ்தர் கதையை முதன்முதலாக வாசித்தபோது அடைந்த அத்தனை கலவையான உணர்வுகளும் இப்போதும் வாடாமல் கிடக்கும் மனத்துள். எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் அறியேன். பிறகு, வண்ணநிலவனின் பெயர் எங்கிருந்தாலும் தேடி வாசிப்பது பழக்கமானது. அப்படித்தான் மிருகம், பலாப்பழம் எல்லாமும் படித்தேன். மிருகம் சிறுகதை இப்போதும் எனக்குப் பெரும் மிரட்சியைத் தரும், பஞ்சத்தை இப்படிக்கூடச் சொல்ல முடியுமா என்று. ஒரு மனிதன், ஒரு மிருகம் இரண்டே உயிர்கள்; கொஞ்சம் சுள்ளிகள், சிறிய கருப்பட்டித் துண்டு; இவற்றை வைத்து மனத்தில் ஒளிந்திருக்கும் வன்மத்தை, வெறுமையை, பஞ்சத்தைப் பேசியிருப்பார்.
வண்ணநிலவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எதன்மீதும் பற்றற்றுப் பட்டும்படாமலும் வாழும் ஒரு மனிதர்; யார்மீதும் புகார்களேதுமற்று, மனிதரென்றால் அப்படித்தானே என்று கடந்து செல்லும் ஒரு மனிதரைச் சித்திரம் தீட்டும் என் மனம். இதோ இருக்கிறேன், இருக்கிறேன் என்று தம்பட்டமடிக்கும் சொற்களை விடவும் சற்றே ஒளிந்தபடி ஆனால் ஒளிக்க முடியாதபடி விகசிக்கும் சொற்கள் என் ஆதர்சம். கலை மனத்தின் வேலை, சகலத்தையும் விசாலமாய் விரித்து வைப்பது மட்டுமே. உலகின் உன்னதத்தை, கீழ்மையை, அன்பை, ஆவேசத்தை, வெறுப்பை, கையறுநிலையை அப்படியே ரத்தமும் சதையுமாய் விரித்து வைப்பவர்கள் கலைஞர்கள். வண்ணநிலவனின் கதை சொல்லுதலில் இப்படியிப்படி இருக்கிறார்களென்ற விவரணையிருக்கும்; ஆழச் சென்று தைக்கவும் செய்யும்; இப்படித்தான் இருக்கிறார்கள், இருப்பார்களென்ற விட்டேற்றித்தனமும் இருக்கும். எந்தப் பண்பையுமே மிகைப்படுத்திப் புகழ்ந்தோ இகழ்ந்தோ ஒரு சொல் இல்லையென்பதும் ஆச்சரியமே. வண்ணநிலவனின் எழுத்துகளை, எளிய மனிதர்களின் நுட்பமான சித்திரமென்பேன். எழுபது, எண்பதுகளின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவான பசியும் பஞ்சமும் உருவாக்கிய நவீன மனத்தின் திரிபுகளைத் தீட்டியவர். பொறுப்பற்ற ஆண்களின் குணம், பெண்களைக் கண்ணீர் சிந்த வைப்பதை அவருடைய பல கதைகளில் காண முடியும். அவருடைய கதைகள் எந்த அமைப்புமுறையையோ அல்லது தனி மனிதர்களையோ விமர்சிப்பவை அல்ல. நவீன வாழ்வின் நெருக்குதல்களை, புற உலகால் நிர்ப்பந்திக்கப்படும் மனிதர்களைப் பேசுபவை. குடும்ப உறவிற்குள் எழும் முரண்களையும் கசப்புகளையும் வாழ்வின் கண்ணியில் சிக்கித் தடுமாறும் மனிதர்களையும் பரிதவிப்புடன் பேசுகிறார்.
வண்ணநிலவனின் பலமாக அவருடைய கதாபாத்திரங்களின், இயற்கையின் மெய்நிகர் சித்தரிப்பைச் சொல்லலாம். ஏன், வாசனை அவருடைய இந்த இரு நாவல்களிலும் தனிப் பாத்திரம்போலவே சொல்லப்பட்டிருக்கும்; மழையும் அப்படித்தான். கம்பாநதி என்றால் என்னவென்று தேடினேன். அம்மை காந்திமதி தவக்கோலத்தில் எழுந்தருளும் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் சிறிய குளத்தை கம்பா நதி என நெல்லைவாசிகள் அழைக்கின்றனர். எப்போதும் வறண்டு இருக்கும் இந்த நீர்நிலை ஐப்பசி திருக்கல்யாண நேரத்தில் நீர் நிரப்பப்பட்டு நீராடுவது வழக்கம் என்று கூகுள் ஆண்டவர் சொன்னார்.
தேங்கி, மறைந்தே போய்விட்ட நதி என்று நாவலில் ஓர் இடத்தில் வருகிறது. நதிக்கரையில் வசிக்கும் மனிதர்களின் இயல்போட்டமான வாழ்வும் தாழ்வும் அதேநேரத்தில் திடீர்ச் சுழல்களில் சிக்கித் திணறுவதுமான சூழலும் இந்நாவலில் சலனம் கொள்கின்றன. வண்ணநிலவனின் எழுத்துகளில் உருவம் பெறும் எளிய மனிதர்களின் வாழ்வில் பெரும் திருப்பங்களையோ அல்லது அதிர்ச்சிகளையோ அவர் காட்டுவதில்லை. பெரும்பான்மை மனிதர்களின் வாழ்க்கை அப்படித்தானே நகர்கிறது. இரு நாவல்களிலும் நிறைய கதைமாந்தர்களைச் சொல்லியிருப்பார்; நாம் அன்றாடம் சந்திக்கும் எளிமையுடன் தனிப் பண்புகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பர். உதாரணமாக, கோமதியின் வளவு வீட்டில் புதிதாகக் கல்யாணமாகி வரும் பெண்ணின் அக்கா செல்லம்மா, ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பால்துரை வாத்தியார், அன்னமரி டீச்சர், தியோடர், கட்டிலிலேயே நோயுற்றிருக்கும் சேசையா.
அவருடைய கதை மாந்தர் பிறழ்ந்து பட்டவர்களாயினும்கூட எங்கோ ஓரிடத்திலேனும் அப்பாத்திரத்தின் அறத்தை நாம் உணரும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தி விடுவார். சீட்டு விளையாடப் போகும் இடத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளும் திருநாவுக்கரசு குனிந்த தலை நிமிராது அமைதியாக வண்டியில் ஏறுமிடம்; சுத்தம் பார்க்கும் வெள்ளைமடத்தாச்சி, கோமதியின் அம்மாவிற்கு முறுக்கு மாவு அரைப்பதில் உதவுவதோடு முறுக்கு வாங்க வருவோர் பற்றிக் கண்டும் காணாமலும் இருப்பதாகச் சித்தரித்தல். ரெய்னீஸ் ஐயர் தெருவிலும் தன் மனைவியின் இறப்பில் மனம் தளர்ந்து குடித்துச் சீரழியும் தியோடர் அந்தத் தெருவில் யாராலும் விரும்பப்படாத போதும்கூட அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உதவி செய்வான்.
எளிய சிக்கனமான சொற்கள்; எளிய வாக்கியங்கள்; பூச்சுகளேதுமற்ற நேரடி மொழி; கூர்மையும் நுட்பமும் வாய்த்த உரையாடல்கள்; கதைக்கரு என்றில்லாமல் கதை மாந்தர்களின் சித்திரத் தீட்டுதல் வழியே கதை நகர்த்துதல்; அதில் கதாசிரியரின் சொற்கள் அத்தி பூத்தாற்போல் வந்து விழும், அதிலும்கூட இவர் இப்படித்தான் எனும் தீர்மானமோ, புகாரோ இருக்காது; ஆனால் இசைத்து வைத்த வாத்தியத்திலிருந்து எழும் ரீங்காரம்போல் மனத்தில் நீண்ட நாட்களுக்கு அந்தக் கதை மாந்தர் பயணித்தபடியே இருப்பர். மனித மனத்தின் கீழ்மைகளைச் சொல்லும் வகையிலும்கூட ஏதோவொரு அறம் பற்றி, மனித மனத்தின் நுட்பத்தைக் காட்டி அதிலொரு மேன்மையை உணரச் செய்து விடுவார்.
திருநெல்வேலியிலுள்ள ஒரு தெருவின் கதைதான் இந்த நாவல். ரெய்னீஸ் ஐயர் தெரு என்பது எதிரெதிரே ஆறு வீடுகள் கொண்ட தெரு. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அவ்வீடுகளில் வசிக்கும் மனிதர்களை இரத்தமும் சதையுமாக நம் கண் முன் உலவ விடுகிறார் வண்ணநிலவன். அத்தெருவில் வசிக்கும் தமிழ் வெள்ளாளக் கிருத்துவர்களுக்கு வண்ணநிலவன் தீட்டிய வண்ணம்தான் ரெய்னீஸ் ஐயர் தெரு. அத்தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதையையும் சொல்கிறார் அவர். வீடு மனிதர்களால் ஆனது. அந்த வீட்டு மனிதர்களைத் தீட்டுவதன் வாயிலாகக் கதையை விரிக்கிறார். பெண்களின் கதையை முன்வைத்தே கதை முன் செல்கிறது. பெண்களின் துயரமே கதையாகிறது.
முதல் வீட்டிலிருந்து துவங்கும் கதையில் டாரதி வீட்டில் அமர்ந்து தெருவோரம் மேயும் கோழிக்குஞ்சுகளை வேடிக்கை பார்த்தபடியிருக்கிறாள். தெருவில் யாராவது வந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறாள். தன் கடந்த காலத்தைப் பற்றி அவள் நினைக்கும்போதே மழை பெய்யத் தொடங்குகிறது. மழைத்தூறலுக்கிடையில் தேவாலயத்தின் மணியோசை கேட்கிறது. மழை தெருவிற்குப் புதுமணலைக் கொணர, அது எப்படி வருகிறது என்று அம்மாவிடம் கேட்கிறாள் டாரதி. இயேசு சாமிதான் போடுகிறார் என்று அம்மா சொன்னதை நினைத்துக் கொள்கிறாள். மழையும் காற்றும் அவளுக்குக் கல்யாணி அண்ணனை நினைவூட்டுகிறது.
இரண்டாவது வீட்டில் இருதயம் டீச்சர் வசிக்கிறார். அவரது கணவன் சேசய்யாவுக்கு 12 வருடங்களாகச் சளியும் இருமலும். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; என்றாலும் அவளுக்கு சேசய்யா மீது இருக்கும் அளவற்ற காதலை, ‘என் அதிகாரி’ என்று அவனைக் கட்டிக் கொள்வதும் நோயுற்றிருக்கும்போதும் அருவருக்காது அவனைக் கட்டிக்கொண்டு படுத்துக் கொள்வதுமாக, நோயாளிக் கணவனை அவள் கவனிப்பதும் அவன் மீதான அவளின் காதலும் மிகச் சிறிய இந்நாவலின் மீச்சிறு பகுதியாக வந்தாலும் அற்புதமான பகுதி; ஆண் பெண் இருமையில் அமைந்திருக்கும் ஒருமையை அழகிய கவிதையெனப் பேசும். இடிந்த கரையாள் என்றொரு பெண்; உண்மையான பெயரே தெரியாது; உவமைகளை அவ்வளவாகப் பயன்படுத்தாத வண்ணநிலவன், கருப்பட்டிப் புகையிலைத் துண்டு மாதிரி தொங்கும் சுருங்கிப்போன மார்புகள்’ என்று இடிந்த கரையாளின் மார்பகத்தைப் பேசுமிடத்தில் அதிர்ந்து நின்றேன். மூன்றாவது வீட்டிலிருப்பவர் இருதயம் டீச்சரின் மாணவி அற்புத மேரி; ஹென்றி மருதநாயகத்தின் மகள். டாரதி, ஜீனோ, ரெபேக்கா, அற்புதமேரி, இருதயம் டீச்சர், இடிந்த கரையாள் எனப் பல்வேறு பெண்களின் வாழ்வை, துயரங்களைப் பேசுகிறது நாவல்; அவர்களது நினைவுகளின் வழியே விரிவு கொள்கிறது. இப்பெண்களின் வாழ்வும் இப்பெண்களுக்குப் பிடித்த ஆண்களைப் பற்றிய அவர்களின் நினைவுப் பின்னலுமே இந்த நாவல்.
வண்ணநிலவனின் பெண்கள்; அவர் வடிக்கும் பெண்கள்; அவர் காணும் பெண்கள் என்று மனம் சொற்களில் தத்தளிக்கிறது. இருதயம் டீச்சரின் அப்பாவுக்கு அவர் மனைவி இறந்தவுடன் வாழ்வு இல்லாமலாகிறது. அவரின் கம்பீரம் காணாமல் போகிறது. அவருடைய பிரசங்கங்கள் சாதாரணமாகி விடுகிறது. இத்தனைக்கும் எந்தக் காலத்திலும் அம்மா, அப்பாவுக்குப் பிரசங்கம் தயாரித்துக் கொடுத்தது கிடையாது என்று இருதயம் சொல்கையில் அவளுடைய தந்தையின் உயிர்ப்பாக, கம்பீரமாக இருந்தது அவருடைய மனைவி என்பதை நாம் உணரச் செய்கிறார். எளிய சொற்களின் மற்றொரு அற்புத கணம் அது. அவர்களுடைய குடும்பம் நடத்துதல் பற்றிய விரிவேதும் நாவலில் இல்லை. ரெபேக்காளுக்கும் அவள் கணவனுக்குமிடையிலான அன்பு, ஆலீஸ் பற்றிய சிறிய சித்திரமென்று பெண்களை அவர் தீட்டும் முறை பெண்களின் மீதான அவரின் அன்பைக் காட்டுகிறது.
அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பெரியவர் ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபேக்காளும். இப்போது மாதத்தின் முதல் வாரத்தில் வரும் மணியார்டரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். டாரதிக்கு அருகில் அன்னமரியும் அவள் மகன் தியோடரும் வசிக்கின்றனர். மனைவி எலிசபெத்தின் மரணத்தை மறக்கக் குடித்துக்குடித்து முழுக்குடிகாரனாக மாறும் தியோடர், மற்றபடி நல்லவன் தான். அதைத் தொட்ட வீடு ஹென்றி மதுரநாயகம் பிள்ளையினுடையது. கடைசி வீடு ஜாஸ்மின் பிள்ளையெனும் வாழ்ந்து கெட்டவரின் வீடு. இப்போது அங்கு யாருமில்லை. இந்த ஆறு வீடுகளின், அங்கு வசிப்பவர்களின் கதை இது. நிகழ்வுகளில் தொடர்ச்சி இல்லை; பெரும்பாலும் நினைவுகள் மட்டுமே; அதிர்ச்சி தரும் திருப்பங்கள் ஏதுமில்லை. ஆனாலும் கதைமாந்தர் காலங்கடந்து வாழ்வது எழுத்தின் சாத்தியமாகவும் வெற்றியாகவும் இருக்கிறது.
வளரிளம் பருவத்தில் உணரும் முறையற்ற உறவுகளின் மீதான ஈர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இரு நாவல்களிலும் இடம் பெற்றிருக்கிறது. சிற்றப்பாவின் மகனான பாப்பையாவிடம் பழகும் கோமதிக்கு பாப்பையாவிடம் ஏற்படும் கவர்ச்சி; அவனும் அவளுடைய புடவை வாசனையும் தலையில் தடவியிருக்கும் தேங்காய் எண்ணெய் வாசனையும் நுகரும் அருகாமையில் அவளுடன் நடந்து செல்ல விரும்புகிறான். ‘என்னன்னு தெரியலை, அழணும்போல் இருந்துச்சி, அழுதேன்’ என்று பாப்பையா முன்னால் அழுது, தன் துக்கத்தை, குழப்பத்தை வெளிப்படுத்துகிறாள் கோமதி. அவளுக்கு எல்லாமே மறந்து போகிறது; இந்த உலகமே அவனுக்காகத்தான் படைக்கப்பட்டது போலிருக்கிறது; இந்தக் குளம் அவனுக்குரியது; காலடியில் கிடக்கும் தண்ணீர் அவனுக்காகவே தேங்கியிருக்கிறது; தச்சநல்லூர் ரோடும் அவனுக்காகவே போடப்பட்டிருக்கிறது என்று கோமதி நினைக்கும் அந்த இடம் உன்னதமானது. இருவருக்குமிடையில் ஏற்படும் பிணைப்பை மிக அழகாகச் சொல்லியிருப்பார் வண்ணநிலவன். இறுதியில் தன்னுடன் வேலை பார்க்கும் கதிரேசனைத் தன் மகளுக்கு மணமுடிப்பார் சரவணப்பிள்ளை. மறுத்து ஒரு வார்த்தை பேச முடியாது கட்டுப்படும் கோமதி, மணமேடையில் பாப்பையாவின் கால் நகங்களை நினைத்தபடியே கரடுமுரடாகச் சுருண்டு, அந்தச் சுருட்டையின் உள்ளே மண் ஏறிப் போயிருக்கும் கதிரேசனின் பாதங்களைப் பார்த்துத் தலைகுனிந்து தாலியை ஏற்றுக் கொள்கிறாள்.
தன் சித்தியுடன் முறையற்ற உறவு கொள்ளும் சாம்சன், அன்னமரி டீச்சர் உடை மாற்றுவதைக் கள்ளமாய் நின்று பார்க்கும் சாம்சன்; இப்படி இவை காதலா, காமம் மட்டுமா, பருவக் கிளர்ச்சியா, பாலியல் விழைவா எனச் சிந்திக்க வைக்கிறது. நதியென்பது அமைதியான நீர் மட்டும்தானா என்ன? போகும் போக்கெல்லாம் திசை மாறும் அதன் பாதையும் ஒழுங்கும்; நீர்வழிப் படூஉம் புணைபோல் வண்ணநிலவனின் கதைமாந்தர்கள்.
இரு நாவலிலும் மழையும் வாசனையும் தனிக் கதாபாத்திரம் போலவே உலவி நம் மனத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வின் ஆசீர்வாதம் பிள்ளை பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் அவரது உடம்பிலிருந்தும் உடைகளிலிருந்தும் அடிக்கும் சாக்பீஸ் பேப்பர் வாடை; அவருடைய மனைவி ரெபேக்காளின் உடலிலிருந்து எழும் காய்ச்சின பாலின் முறுகலான வாடை; வயதாக வயதாக இருவருமே அவர்கள் நேசித்த அந்த மணங்களை இழப்பதும் இருவர் உடம்பிலிருந்து பழைய அழுக்குத் துணி புழுங்கும் வாடை அடிப்பதும் அதுவே வீடு முழுவதும் நிறைந்திருப்பதாகவும் ஓரிடத்தில் சாதாரணமாகச் சொல்லிச் செல்வார். அந்த இடம் அவர்களின் முதுமை, தனிமை, இயலாமை, ஒவ்வொன்றாய் அவர்கள் இழந்து மரணத்தை வெறுமையை நோக்கி அவர்கள் நடப்பதைக் கொடுங்கனவாய்க் காட்டி நிற்கும். அடுப்பங்கரை நடைக்கல்லும் மேயும் கோழிக்குஞ்சுகளும்கூட நாவலுக்குள் சில விஷயங்களைச் சொல்லாது சொல்லி நிற்கும்.
கம்பா நதியிலும் சிவகாமியின் உடைகளிலிருந்து எழும் இளம் எலுமிச்சை வாடையும் அவளின் அம்மாவின் உடையிலிருந்து வரும் வறுத்த பாசிப்பருப்பின் மணமும் தாமிரபரணிக்குக் கோடைக்காலத்தில் வடிகால்கள் வறண்டு போவதால் எழும் முறுகிய இரும்பின் மணமும் சொல்லப்பட்டிருக்கும் தாமிரபரணி ஆற்றில் ஓடும் தண்ணீருக்கு ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு மணமும் ஒரு ருசியும் இருக்குமாம்.
வண்ணநிலவனின் கதைகளில் மீளமீள வரும் எஸ்தர், பிலோமி, கல்யாணி போன்ற பெயர்கள் புதிர்ப் பாதையில் நம்மை வழிநடத்தி பன்மாயச் சித்திரமொன்றைத் தனியாகத் தீட்டுவதையும் குறிப்பிட வேண்டும்.
அந்தத் தெருவுக்கும் மழைக்கும் அத்தனை பொருத்தம்; ஆசீர்வாதம் பிள்ளையின் வீடு பாழ்பட்டுப்போயிருந்த நிலையில், மழை வீட்டுச்சுவரை இடித்துப் போடுகிறது. அப்போது குடிக்கு அடிமையான தியோடர்தான் உதவி செய்கிறார். மழை நாவலோடே ஒரு கதாபாத்திரம்போல் டாரதியைப் பின்னோடித் தொடங்கி இறுதியில் ஆசீர்வாதத்தின் வீட்டில் முடிகிறது. கம்பாநதியிலும், “மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேசவிடாமல் அடக்கிவிடுகிறது. கோமதியும் தான் அவனிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறாள்”. ரெய்னீஸ் ஐயர் தெரு நாவலும் இப்படி முடிகிறது, “மழையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள்தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது. மழை எல்லாவற்றையும் உய்வித்து விடுகிறது”. இக்கட்டுரையைப் படிக்கும் இந்நேரத்திலும் மழை பெய்தால் அற்புதமாக இருக்கும்.