கார்வை


ம்.வி.வி இளமையில் தன் சம வயது நண்பர்களிடம் பேசி களித்து பகடி செய்துகொண்ட காலங்கள் வேறு. அதெல்லாம் எங்களுக்கு செவி வழி செய்திகள்தான். அவர் எப்பவும் சீரியஸாத்தான் பேசுவார் என்று பிற்காலத்தில் அவரோடு பழகிய பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது அவ்வளவு உண்மை இல்லை. என்னைப் போன்ற  அவரது அறுபது வயதுக்கு மேல் பழக ஆரம்பித்த இளம் வயது நண்பர்கள் சிலரிடம் அவர் கேலி பேசியதைச் சொன்னால் உங்களுக்கு அது புரியும், எங்களை அவர் எப்படி கிண்டல் செய்து விளையாடுவார் என்று.

இன்றைக்கு திரைப்பட வசனகர்த்தாவாக இருக்கும் பிருந்தா சாரதியிடம் தனது ”காதுகள்” நாவல் வருவதற்கு முன் அதன் செராக்ஸ் பிரதியைக் கொடுத்து அதைப் பற்றிய அபிப்ராயத்தை அவரிடம் கேட்டார். ”சார் ரொம்ப டிஸ்டபென்ஸா இருக்கு சார். மூணு அத்யாயத்துக்கு மேல என்னால படிக்கவே முடியலை சார்” என்று அவர் அதை சில நாட்களில் திருப்பிக்கொடுத்துவிட்டார். ஒரு வாரம் கழித்து நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது ”அதை படிச்சு புரிஞ்சுக முடியலங்கிறத எவ்ளோ டேக்ட்டிலா (Tactical) சொல்றார் ரவி” என்றார்.

தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் ஒரு நாள் அவரை சந்திக்க வந்தார். பெயர் வேண்டாமென நினைக்கிறேன். அவரது படைப்புகளைப் பற்றி சிறுபிள்ளைத்தனமான அபத்தமான அபிப்ராயங்களை கூறியபடி இருந்தார். பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு அவர் போனதும், சற்று  வேகமாய் வாய் கொப்பளித்துவிட்டு வெற்றிலை போட்ட படி பேச ஆரம்பித்தார்.

”சில நாளைக்கு விதி இப்படி மனுஷ ரூபத்துல வரும் நாம அது தர துயரங்களை அனுபவிக்கிறத தவிர வேற வழியில்ல. எந்த மதியாலும் அத வெல்லவே முடியாது. ஸ்டூடண்ட் தப்பு பண்ணா கண்டிக்கலாம் இந்த மாரி விளைஞ்சு முத்தினத நாம என்ன பண்ண முடியும். இந்த வாத்தியார்களுக்கும் பத்திரிக்கைகாரன்களுக்கும் ஸ்டுடண்ட்ஸ் ரொம்ப உத்தமம்.”

”என்ன சார் சொல்றிங்க”

ஆமா. போன வாரம் செந்தில்வேலுன்னு எம். ஏ. தமிழ் படிக்கிற ஒரு பையன், என் படைப்புகள் பத்தி ஆராய்ச்சி பண்றேன்னு வந்திருந்தான். அவன் வாத்தியார் சொல்லி அனுப்பிச்சுருக்கார். உங்க ”வேள்வித் தீ” ”நித்திய கன்னி” தெரியும்ன்னான். தெரியும் சரி. அதெல்லாம் முதல்ல நீ படிச்சிருக்கியான்னு கேட்டேன். இனிமேதான் சார். இப்பதான உங்களை ஆராய்ச்சியே பண்ண போறேன்னான். எனக்கு உங்க படைப்புகளைப் பத்தி எதுமே தெரியாது நீங்கதான் என் புராஜக்ட் முடிய உதவி பண்ணனும்ன்னான். இந்த சரண்டர் எவ்வளவோ உத்தமம் இல்லயா” பின்னாளில் அவருக்கும் எனக்கும் நண்பரான அந்த செந்தில்வேலு தற்போது கோவையில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார்.

என்னோடு பேசிக்கொண்டிருக்கும் போது ஒருநாள் கேட்டார். ”என் படைப்புகள் பத்தி உனக்கு என்னா அபிப்ராயம்.” எனக்கு திக்கென்று இருந்தது. அபிப்ராயாம் சொல்லும் வகையில் எனக்கு அப்போது அவ்வளவு ஞானம் ஏதும் கிடையாது, இப்போதும்.

”அத எப்படி சார் நான் சொல்றது. அதெல்லாம் வேற லெவல் சார்.” என்றேன் மையமாய். சரி. சரி. எதாவது ஒழுங்கா முழுசா படிச்சிருந்தாதான சொல்ல முடியும்.  வா. நாம பஞ்சாமய்யர் கடைல மெதுவடை காப்பி சாப்பிட்டு வருவோம் என்றார்.

அது போலவே ”காதுகள்” நாவல் வெளியீட்டு விழாவில் அவருக்கு நான் சால்வை போத்தின போது “சால்வை போடும் போது கூட உனக்கு, உடம்புல கொஞ்சனாச்சும் பணிவு இருக்கா என்று கேட்டார். நான் மெல்ல அவர் காதருகில் சென்று ”இந்த பணிவு போதுங்களாய்யா” என்று சொல்லி பாதியாக மடங்கி கும்பிட்டேன். சிரித்துவிட்டார். சரி. முதல்ல சட்டை பட்டனை ஒழுங்கா போடு என்றார் மறுபடி. 2020 ஜூலை மாத ”காலச்சுவடு” இதழில் அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையோடு அந்த தருணத்தின் புகைப்படமும்  வெளியாகியுள்ளது.

தஞ்சை ப்ரகாஷ், எம்.வி.வெங்கட்ராம், தேனுகா

”இலக்கிய சந்திப்பு” கூட்டத்தில் ஒரு நாள் அவரது நெருங்கிய நண்பர் ஆசிரியர் கலியமூர்த்தி ஒரு கேள்விகேட்டார். ”நம்ம மரபார்ந்த இலக்கிய ஆக்கங்களுக்கு முன் உங்க நவீன படைப்புகளை வைக்கமுடியுமா சார்”  அவரைப் பார்த்து அவருக்கு பதில் சொல்லாமல், எங்களைப் பார்த்து லேசாய் தலை உயர்த்தி அசைத்து “தமிழ் வாத்தியாராம்” என்று  சொன்னர். இதெல்லாம் சிரிக்காமல் சொல்வார்.

எங்களில் மூத்தவர்களான தேனுகா, பிரகாஷ் போன்றவர்களிடம் குட்டிக் கதை போல சில சமயம்  ஜோக் சொல்வாரே தவிர, எனக்குத் தெரிந்து அவர்களை ஏதும் கிண்டல் செய்ததில்லை.

ஆனால், அம்மாவிடமும் இதைபோல எதாவது கேலி பேசுவார். ஒரு நாள் அவரைப் பார்க்க வந்த இலக்கிய தொடர்பில்லாத நண்பர் ஒருவரை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினார். ”இவர் பெரிய எழுத்தாளர். பெரிய பணக்காரர். ஏகப்பட்ட நிலபுலம், தோப்பு துரவு, வீடு, ஆள் அம்பு, கார் எல்லாம் இருக்கு. ஆனா என் ரசிகர் என்னைப் பாக்க வந்திருக்கார்”

அவர் ”சார்” என்றார். எம்.வி.வி அவரிடம் சும்மா இருங்கள் என்பது போல கண்ணால் சைகை செய்தார். உடனே அம்மா சற்றும் தாமதிக்காமல் ”அட எளுத்தாளர்லல்லாம் கூட, இவ்ளோ பெரிய பணக்காரங்க இருக்காங்களா” என்று கேட்டார். என்னிடம் மெதுவாக குனிந்து காதருகில் ”ஒப்பாரு இவங்க கூட எல்லாம் பழகுது”ன்னு சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். “அதான் சில சமயம் நாம புள்ளையார் புடிக்க நினைப்போம். அது இப்படி முடிஞ்சு தொலையும்” என்று சொல்லிவிட்டு அவரிடம் பேச்சை தொடர்ந்தார் எம்.வி.வி.

இலக்கியம் சாராத அவர் சமூகத்து நண்பர்கள் வருகையில் அவர்களிடம் எங்களை கேலி பண்ணுவார். ”இந்த இலக்கியம் படிச்சவன்ங்கள்கிட்ட பேசி பேசி மூளையே சூடாவுது. நல்ல வேளை நீங்க வந்திங்க. கோறா கிலோ என்ன விலை போகுது, ராமய்யர் மகன் கேஸ் என்னாச்சு, சுமதி இப்ப யாரை வச்சிருக்கா, பஞ்சாமய்யர் ஒட்டல்ல நாளைக்கு கடப்பா உண்டான்னு நிம்மதியா நாம எதாவது பேசிட்டு இருக்கலாம். நீங்க அந்த ஹிண்டு பேப்பரை படிங்க வரேன்” என்று எங்களைப் பார்த்து சொல்லிவிட்டு அவர்களிடம் பேசுவார்.

[ads_hr hr_style=”hr-dots”]

கிண்டல் கேலி விளையாட்டுகள் மட்டுமின்றி நண்பர்களிடம் அவர் கடுமையாக கோபப்பட்ட சம்பவங்களும் உண்டு. நானும் தேனுகாவும் யாராவது பெரிய பத்திரிக்கைகளின் நிருபர்கள்  வந்தால் அவர்களிடம் மெல்ல பேசி பேசி அவரை எதாவது இண்டர்வியூ எடுக்க ஏற்பாடு செய்துகொண்டே இருப்போம். கொஞ்ச காலம் போன பிறகு ”இனிமே இண்டர்வியூல்லாம் எடுக்க இந்த பத்திரிக்கைக்காரன்களை எல்லாம் ரெண்டு பேரும் கூட்டிட்டு வராதிங்க. எனக்கு பத்திரிக்கைலல்லாம் வந்து இனிமே என்னாகப் போகுது. பெரும்பாலும் அடிப்படையே தெரியாம வரான்க. இந்த மாதிரி முட்டாள்களை கட்டிகிட்டு அழ முடியல எனக்கு. ரொம்ப அவசியம்னா அவன்க என்ன கேக்கணுமோ அத சுருக்கமா நாலஞ்சு கேள்வியா எழுதி வாங்கிட்டு வாங்க. உங்களுக்காக நான் அதுக்கு வேணா பதில் சொல்றேன். அத நீங்க எழுதி குடுத்துருங்க இந்த வேலையெல்லாம் செய்யாதிங்க என்று கோபமாகச் சொன்னர். அவர்கள் கேட்கும் கேள்விகள் அப்படி இருக்கும். உதாரணத்துக்கு அந்த கேள்விகளில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

“நீங்க பொறந்தது 1931ன்னு தெரியும் (ஒரிஜினல் பிறந்த தேதி 18. 5. 1920) அந்த மாசம் டேட் மட்டும் கரெக்ட்டா சொல்லுங்க சார்.”

”மொத்தமா உங்க இலக்கிய கான்ட்ரிபூஷன் என்னன்னு டைட்டில் உள்பட வரிசையா சொல்லுங்க”

”இந்த காதுல வலி இருக்க பிரச்சனை பத்தி எழுதின நாவலை  சொன்னிங்களே சார், இன்னமும் காதுல அந்த வலி இருக்கா சார்.”

இந்த ரீதியில் அவர்கள் கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் போகும் போது ”இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் சார்” என்று விடைபெறுவார்கள்.

இதனால் ஏற்பட்ட மகா எரிச்சலில் அவர் அப்படி எங்களிடம் கோபப்பட்டார். அதே சமயம் எல்லா பத்திரிக்கையாளர்களிடமும் அவருக்கு அந்த எரிச்சல் வராது. அவரே சொல்வார். ”பிரபஞ்சன் ”கண்ணதாசன் இதழுக்காக என்னை இண்டர்வியூ பண்ணார், பிரகாஷ் ”இனியோ” என்னவோ அதுக்காக  செஞ்சார். ”சுபமங்களாவுக்காக” வண்ணநிலவன் இண்டர்வியூ பண்ணார். இதெல்லாம் எனக்கு சந்தோஷம். பிகாஸ் பர்ஸ்ட் தெம் செல்ப்ஃ தே ஆர் ரைட்டர்ஸ். அவங்களுக்கு என்ன கேக்கணும் எப்படி கேக்கணும்ன்னு தெரியும்.

ஞானக்கூத்தனிடம் ஒரு முறை அவர் கடுமையாக் கோபப்பட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாகிவிட்டது. ஏனெனில் ஞானக்கூத்தனும் எனக்கு நெருங்கிய நண்பர். எந்த அளவு என்றால் நான் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தும்கூட கேட்கும் போதெல்லாம் என் வெவ்வேறு தொகுப்புகளுக்கு மூன்று முன்னுரைகளை முகம் சுளிக்காமல் எழுதிக் கொடுத்தவர். என்னை கவிதைத் துறையில் முன்னிருத்தியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. சங்கீதத்தில் அதிக ஈடுபாடே இல்லாத – அவரின் கவிதையை நான் மெட்டமைத்தபோது முதலில் கடிந்துகொண்டு பின் அதை கேட்டதும் நெகிழ்ந்து மறுபடி மறுபடி பாடச்சொல்லிக்கேட்டவர். எம். வி. வி அப்படி அவரிடம் கோபப்பட்டதுக்கு வலுவான காரணங்கள் இருந்தன.

20. 1. 1994 வியாழன் மாலை ஆறுமணிக்கு சென்னை ஆழ்வார் பேட்டை டி. டி. கே சாலை சீனிவாச காந்தி நிலையத்தில் எம். வி. வி சாகித்ய அகாடமி பெற்றதன் பொருட்டு சுபங்களா வாசகர் வட்டம் சார்பில் கோமல் சுவாமிநாதன் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார். நானும் எம். வி. வியும் மட்டும் கும்பகோணத்திலிருந்து வந்திருந்தோம். எங்களுக்கு சென்னை தி. நகர் கீதாஞ்சலி ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம் போல் ஆறே முக்காலுக்கு கூட்டம் ஆரம்பமானது. சிட்டி தலைமை. வல்லிக்கண்ணன்,
மா. அரங்கநாதன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், விட்டல்ராவ், கோமல், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகியோர் பேசினர். கஸ்தூரி ரங்கன், ஜெயகாந்தன், கந்தசாமி, வண்ண நிலவன் போன்ற பெரும்பாலும் முக்கிய எழுத்தாளர்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர். சிட்டி துவங்கி கோமல் வரை எல்லோருமே எம். வி. வியை பாராட்டியே பேசினார்கள்.

வழக்கம் போல அசோகமித்திரன்தான் கூட்டத்தை கல கலக்க வைத்தார். “இந்த ஷாகித்ய அகாடமி எதோ திருந்திடுத்து அப்படின்னு நாமளா எதும் நினைச்சுண்ட்றப்படாது. அப்படி நினைச்சுண்டோம்ன்னா நம்மளை நாமே ஏமாத்திண்டுடறதாதான் அர்த்தம். அகாடமி பரிஷங்கிறது லாட்ரில பரிசு விழற மாரித்தான். அதுக்கு திறமை தகுதி இதெல்லாம் போறாது. முக்கியமா அதிர்ஷ்ட்டம் வேண்ட்ருக்கு. அதும் நம்ம எம். வி. விக்கு இருந்ததுனால இது கிடைச்சிருக்கு. ஏன் அப்படி சொல்லறேன்னாக்கா இந்த பரிசை பெரும்பாலும் தீர்மானிக்கிறவா ப்ரபஸர்ஸ். அது என்ன லட்சணத்துல இருக்கும். அவா எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சுட்டுதான் இப்படி தீர்மானிக்கிறா அப்படின்னுட்டும் நீங்க எதும் தப்பா நினைச்சுண்ட்றபடாது. ஏன்னா, அவாளுக்கும் எவ்ளோ பிரச்சனைகள் பாவம். ஒரு நிறுவன அமைப்பு முறைல, இந்த மாதிரி பரிசுகள் தீர்மானிக்கறதுல அமானுஷ்யமான சிரமங்கள்ளாம் வரும். அவாதான் அத ஒகே பண்ணி கையெழுத்து போட்டாளான்னுட்டு அவாளுக்கே சில சமயம் சந்தேகம் வராப்ல எல்லாம் நடந்துடும். அதுனால அவாள மட்டும் நாம குத்தம் சொல்லப்படாது. ஆனா, சில புஸ்தகங்கள் பரிசு பெறச்ச எல்லாத்தையும் மீறி, எனக்கு ஒரு சந்தேகம் வந்துண்டே இருக்கும். இவா கட்ட கடேசியா பரிசுக்குன்னு அறிவிக்க போற அந்த புஸ்தகத்தையாவது ஒரு தடவை முழுசா உக்காந்து இவா படிச்சிருப்பாளான்னுட்டு. ஒகே. சில வருஷம் நமக்கு பிடிக்கறது. சில வருஷம் பிடிக்காம போறது. எல்லா வருஷமும் ஒரே மாரி நடந்துண்ருந்தாலும் அது நன்னா இருக்காதில்லையா. எப்படியோ இவ்ளோ ஷிக்கல்களை எல்லாம் மீறி எம் வி விக்கு இந்த பரிசு கிடைச்சுருக்குன்னா அது அவர் அதிர்ஷ்ட்டம்ன்னுதான் சொல்வேன் நான்.”

அசோகமித்திரனின் இந்த பேச்சுக்கு பிறகு ஞானக்கூத்தன் எம்.வி.வியின் படைப்புகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதுதான் எம் வி வியின் அந்த கடுங்கோபத்துக்கு காரணமானது.

”மூத்த தலைமுறை படைப்பாளிகள்ல முக்கியமானவங்களைச்  சொல்ல சொன்னா பிச்சமூர்த்தி, மெளினி, க. நா. சு., எம்.வி.வி இவங்க பேரை நான் தயங்காம சொல்வேன். ஆனா, எம். வி.வியோட இந்த புஸ்தகத்த பத்து பக்கத்துக்கு மேல என்னால படிக்க முடியல. சிரமப்பட்டுதான் படிச்சேன். இத மேஜிக்கல் ரியலிசம்ன்னு சொல்றாங்க. நான் இத மேஜிக்கல் டெரரிசம்ன்னுதான் சொல்வேன். அப்படி இருக்கு. எம்.வி.வியோட முந்தைய எழுத்துக்கள் ஒரு பழைய பஞ்சாங்கம்தான். புராணம் இதிகாச பாத்திரங்களை மேனகை, ரம்பை, திலோத்தமைய வச்சிகிட்டு என்னா புதுசா எழுத முடியும். அத படிச்சப்ப இதல்லாம் படிச்சி இப்ப என்னா ஆகப்போகுதுன்னுதான் எனக்கு தோணுச்சி. அத படிக்கவும் நான் விரும்பல. அதுல புதுசா தெரிஞ்சுகவும் எனக்கு எதுமில்ல. பல விஷயங்கள் ஒரே பேத்தல். ஆனா, பழமைல தோய்ஞ்ச எம். வி. வி  இந்த காதுகள் நாவல் மூலமா சமகாலத்துக்கு தாவிருக்கார். இந்த புஸ்தகத்தில ஆன்மீகம் கலந்துருக்குன்னு இங்க பேசினவங்க சில பேர் சொன்னாங்க. ஆன்மீகம் ரொம்ப பெரிய விஷயம். அது தனியான விஷயம். கலை இலக்கிய விஷயங்கள் டோட்டலா வேற. அத கொண்டு வந்து இதுல எப்படி சேக்குறாங்கன்னு எனக்கு புரியல. ஆனா ஒரு நல்ல விஷயம் நடந்திருக்குன்னா இந்த புராண இதிகாச பழமை எல்லாத்தையும் விட்டுட்டு இப்பதான் அவர் யதார்த்த உலகத்துக்கு வந்திருக்கார். அதுனால இந்த புஸ்தகத்துக்கு அகாடமி பரிசு கிடைக்கலன்னா கூட ஒரு வகைல பொருட்படுத்த வேண்டிய நாவல்ன்னும் சொல்லலாம். நான் அவரை கும்மோணத்துல பாத்து ரெண்டு மூணு தடவை பேசிருக்கேன். எல்லாத்தையும் மீறி அவரை நான் பழமைக்கும் புதுமைக்குமான ஒரு பாலமா பாக்கிறேன்.”

இந்த ரீதியில் அவர் பேச்சு ஒரு இருபது நிமிஷம் போய்க்கொண்டிருந்தது. எப்போதும் தெளிவாக பேசக்கூடியவர் ஞானக்கூத்தன். தயாரிப்பில்லாமலும் வரமாட்டார். அன்று அவருக்கு  எதாவது பிரச்சனையா அல்லது ”மூட்” சரியாக இல்லையா என்று தெரியவில்லை.  சில தகவல் பிழைகளோடும் சற்று முன்னுக்குப் பின் முரணாகவும் பேசி முடித்தார்.

எம்.வி.வெங்கட்ராம் உடன் ரவிசுப்பிரமணியன்

எம்.வி.வியின் காது மந்த பிரச்சனையால் எல்லோரது பேச்சையும் முழுமையாய் அவரால் கேட்க முடியாதது போலவே ஞானக்கூத்தன் பேச்சையும் அவரால் முழுமையாக கேட்க முடியவில்லை. என் ஞாபகசக்தி மீது அவருக்கு அபார நம்பிக்கை உண்டு. விடுதிக்கு திரும்பியதும் அவர் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்துகொண்டு, உணவு முடித்து, மாத்திரைகள் சாப்பிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு, ”என்னா பேசினாங்க எல்லாம் சொல்லு” என்றார். நான், டேப் ரிக்கார்டர் ஆன் பண்ணியது போல இரவு முழுக்க எல்லார் பேச்சையும் சப்ஜாடாக அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.  அசோகமித்திரன் பேச்சுக்கு மட்டும் சிரித்துக்கொண்டே இருந்தார். ஞானக்கூத்தன் இப்படில்லாமா பேசினார். என்னதான் அவர் என்னை படிச்சிருக்கார். முழுசா படிக்காம விஷயம் புரியாம எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா மேடைல வந்து இப்படில்லாம் பேச இவங்களுக்கெல்லாம் தைரியம் வருதுன்னே தெரியலை என்று சொன்னார்.

இந்த சம்பவம் நடந்து பல மாசங்களுக்குப் பின் ஞானக்கூத்தன் மாயவரம் வந்திருந்தார். நான் அவரை நம்ம லாட்ஜில் வந்து ரெண்டு நாள் இருந்து கோவில்கள் எல்லாம் பார்த்துவிட்டு போங்கள் என்று அழைத்தேன். வந்தார். எல்லாம் பார்த்தார். ரெண்டாம் நாள் காலை அவராகத்தான் எம். வி. வியை பார்க்கலாமா என்று கேட்டார். நான் எதையும் அவரிடம் சொல்லிக்கொள்ளவில்லை. ஒன்று எம்.வி.வி அந்த விஷயத்தை மறந்திருக்ககூடும். ஒரு வேளை மறக்காமல் இருந்து இவரிடம் எதும் கேட்டால் இவர் தரப்பை எதும் சொல்ல இவருக்கு வாய்ப்பிருக்கும் என்று  நினைத்தேன்.  அதனால் அந்த விஷயம் பற்றி ஏதும் சொல்லாமல் ஞானக்கூத்தனை ஜீப்பில் அழைத்துக் கொண்டு எம். வி. வி வீட்டுக்குப் போனேன். நாங்கள் வரும் விஷயத்தையும் அவருக்கு முன்னதாக  நான் தெரிவித்திருக்கவில்லை.

பதினோரு மணி வாக்கில் போனோம். எப்போதும் போல் இயல்பாக வரவேற்றார். அவர் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். காபி வந்தது. ஒரு பத்து நிமிஷம் ஆன பின், எம். வி. வி மெல்ல அன்னைக்கு நடந்த சுபமங்களா கூட்டம் சிறப்பான கூட்டம் இல்ல. அன்னைக்குத்தான நாம பாத்தோம். நூறு பேர் வந்திருப்பாங்களா என்று கேட்டார். ஞானக்கூத்தனும் உடனே உற்சாகமாக அது பற்றி பேச ஆரம்பித்தார். கொஞ்ச நேரம் அதை கேட்ட பின் அவர் களத்துக்கு வந்தார்.
எம். வி. வி. கருத்து ரீதியாக ஒருவரை அடிக்க வேண்டுமென நினைத்தால் ரெண்டு ரவுண்டு ஓட விட்டு மூன்றாம் ரவுண்டில்தான் வலிக்க வலிக்க அடிப்பார். அப்போது அவரை யாரும் கன்ரோல் செய்யவே முடியாது.

வழக்கம் போல சாத்வீகமாக முதல் ரவுண்டில் ஞானக்கூத்தன் பேசியதை எல்லாம் அவர் வாயாலேயே கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார். இரண்டாவது ரவுண்டில் அவர் அப்படி பேசியது குறித்த இவரது சந்தேகங்களை சாதரணமாக கேட்பது போல கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார். ஞானக்கூத்தனுக்கு ஒருவாறு விஷயம் புரிந்து உஷாராகிவிட்டார். பேச்சை வேறுபக்கம் திருப்ப தொல்காப்பியம், வக்ரோத்தி ஜீவிதம் என்று எதோ ஆரம்பித்தார். எம். வி. வி விடாமல் மூன்றாம் ரவுண்டுக்கு வந்துவிட்டார். பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேல் நீண்ட அந்த கோப கேள்விகள் நீண்டு சென்றன. எம். வி. வி. எழுப்பிய சில கேள்விகளை மட்டும் சொல்வது உசிதம் என்று நினைக்கிறேன்.

முதல்ல நீங்க என் புஸ்தகங்கள் என்னன்ன படிச்சிருக்கிங்க ஞானக்கூத்தன்.

அது எப்படி முற்ற முழுசா படிக்காம வெறும் இதிகாச நாவல்கள் எழுதுறவன்ற முடிவுக்கு வரிங்க நீங்க. நித்தியகன்னி நாவலை தவிர வேற எந்த நாவலும் இதிகாச பாத்திரத்தை அடிப்படையா கொண்டதில்ல. எதை படிச்சிட்டு சார் இப்படில்லாம் பேசுறிங்க நீங்க.

யார் யார் என்னென்ன கண்டெண்ட்ட எழுதணும்ன்னு சொல்ற அதிகாரத்த யார் உங்களுக்கு குடுத்தா. உங்க கவிதைக்கு அப்படி சொல்றாங்களா யாரும்.

முதல்ல பத்து பக்கம் கூட படிக்க முடியாத புஸ்கத்த பத்தி நீங்க ஏன் சார் பேச வந்திங்க?

ஆன்மீகம்ன்னா என்ன, கலை இலக்கியம்ன்னா என்னான்னு இனிமே நீங்க சொல்லி தெரிஞ்சுகிற நிலைலல்லாம் நான் இல்ல ஞானக்கூத்தன்.

நீங்க பெரிய கவிஞர், பொயட்டிக்ஸ் பத்தில்லாம் எழுதுற நல்ல கட்டுரையாளர் அப்படின்னெல்லாம் நினைச்சிட்டு இருக்கேன் நீங்க இப்படி பேசலாமா.?

கேள்விகள் வரிசையாக நீள நீள ஞானக்கூத்தனுக்கு அதை எவ்விதம் எதிர்கொள்வதென தெரியவில்லை. சாரி சார் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அந்த இடத்துக்கு அவர் வந்துவிட்டார். அவர் ரெண்டொரு வார்த்தை பேச எத்தனித்த போதும் எம். வி. வி அவரை விடவில்லை. அதனால் மெளனமாகவே இருந்தார்.

சற்று நேரத்தில் தணிந்த எம். வி. வி எழுந்து வந்து அவர் கையை பிடித்துக்கொண்டார் எதும் கோவமா. ஒரு ஞானஸ்த்தன் இப்படி நடந்துகலாமா பேசலாமாங்கிற ஆத்தாமைதான். விடுங்க. எல்லாத்தையும் மறந்துடலாம். இப்ப சொல்லுங்க அந்த தொல்காப்பியம் வக்ரோத்தி ஜீவிதம்ல்லாம் பத்தி. ஆனால் ஞானக்கூத்தனுக்கு எதுவும் பேச வரவில்லை. பிறகு எம். வி. வியே எப்ப ஊருக்கு போறிங்க. என்ன பயணம் என்றெல்லாம் கேட்டு அவரை சகஜமாக்க முயன்றார். அவர் சுரத்தே இல்லாமல் புறப்பட்டுவிட்டார். வழக்கம் போல் எம். வி. வி வாசல் வரை வந்து அடுத்த தடவை கும்மோணம் வந்தால் அவசியம் வீட்டுக்கு வாங்க என்று சொல்லி வழியனுப்பினார். அவரின் கோபம் எப்போதும் மனசில் உள்ளதை எல்லாம் கொட்டிவிடும் கோபமே தவிர ஒரு நாளும் பழி தீர்க்கும் கோபம் இல்லை.

திரும்பி வரும்போது என்ன பெரியவர் கடும் டென்ஷனா ஆயிட்டார் போலருக்கு என்று சொல்லி லேசாக சிரித்தார் ஞானக்கூத்தன். சார் சும்மா இருங்க சார். நீங்க அப்படி சொல்லலாமா சார். என்ன சொன்னேன். இதிகாசக் பாத்திரங்களை வச்சி கதைகள் எழுதுறவர்ன்னு சொன்னேன். அவர் ”அகலிகை முதலிய அழகிகள்”ன்னு ஒரு சிறுகதை புஸ்தகமே போடலையா. நான் அவர் நாவல்களை அப்படி சொல்றேன்னு நினைச்சுகிட்டு அவர் பதில் சொல்றார். ஏற்கனவே கோவமா இருக்கார். நாம வேற எதும் பதில் சொல்லவேணாம்ன்னு கம்முன்னு இருந்தேன். எல்லாத்தையும் படிச்சிட்டு பேசணும்ன்னா, இவர் புக்ஸே எதும் இப்ப பிரிண்ட் ல இல்ல. எப்படி நான் எல்லாத்தையும் படிக்கிறது. ஆனா, ”காதுகள்” பத்தி இப்பவும் என் அபிப்ராயம் அதுதான் மாற்றமில்ல. எல்லாம் சரி சார். நீங்க பேத்தல்ன்னு ஒரு வார்த்தை சொன்னது அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சி சார். பேத்தல்ன்னு ஒரு சொல்லுல என் படைப்புகளை டிஸ்கார்ட் பண்றாரா அவருன்னு அப்படின்னு சொல்லிட்டே இருந்தார் சார். இல்ல இல்ல எல்லாமே தப்பா புரிஞ்சிஞ்சுட்டுது அவருக்கு. நான் மகாபாரத பாத்திரங்களை வச்சி எழுதினத தான் பழைய பஞ்சாங்கம் சுத்த பேத்தல்ன்னு சொன்னேன். மொத்தமா நான் அப்படி சொல்வனா எனக்கு தெரியாதா. ஆனா, அந்த வார்த்தைய தவிர்த்திருந்திருக்கலாம் நான். உண்மைல அவர் எல்லா ஒர்க்கையும் நான் அப்படி சொல்ல ல ரவி.  உங்களுக்கு தெரியாதா. அப்படி எப்படி நான் சொல்வேன். அப்படி நான் நினைச்சிருந்தா ”கணையாழில” அவரை நான் இண்டர்வியூ பண்ணி போட்டுருப்பனா. இல்ல இப்ப நான்  நாலாவது தடவையா இங்க பாக்க வருவனா. அவர் டென்ஷனா இல்லன்னா நான் கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லிருப்பேன். வயசுல பெரியவர் நான் மறுபடி எதும் சொல்லப்போக கோபம் இன்னும் கூடிடுச்சின்னா என்ன பண்றதுன்னுதான் சும்மா இருந்தேன். ஆனா, அதும் ஒரு பதில்தான். அதுக்கு அவர் சொன்ன பதில்தான் எழுந்து வந்து அப்படி கைய புடிச்சது பாத்திங்கள்ள.

இரு மேன்மையான மனிதர்கள் ஒரு பிரச்சனையை எவ்விதமாக கையாள்கிறார்கள் என்ற வியப்போடு நான் ஞானக்கூத்தனைப் பார்த்தேன்.

[ads_hr hr_style=”hr-dots”]

ம். வி. வியின் ”என் இலக்கிய நண்பர்கள்” புத்தகம் வந்த பின்பு அந்த புத்தகத்துக்காக தேனுகா – ராமசாமி கோவில் பிரகாரத்தில் ஒரு இன்பார்மல் மீட்டிங்கில் எம். வி.வியை பேச ஏற்பாடு செய்திருந்தார். மொத்தமே நாங்கள் பத்து பேர்தான்.

இதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு எம். வி வி. ராமசாமி கோவிலில் பேசிய பேச்சோடு நான் மறுபடி ஆரம்பிக்கிறேன்.

தேனுகாவும் நானும் தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயிலுக்கு போயிருந்தோம். எல்லா நண்பர்களையும் இதயத்திலிருந்து கொண்டாடுவது போல எங்களையும் உற்சாகமாக உபசரித்து அவர் பேசிக்கொண்டிருந்தார். உரையாடினார் என்று பெரும்பாலும் சொல்லமுடியாது. அநேகமாய் அவர் கேட்டுக்கொண்டுதான் இருப்பார். நாங்கள் கரிச்சான் குஞ்சு ,எம். வி. வி பற்றி பலபட பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப நேரம் கேட்ட பின் அவர் இப்படிச்சொன்னார். ”நீங்க ரெண்டு பேரும் கரிச்சான் குஞ்சுமேலயும் எம். வி. வி மேலயும் வைச்சிருக்க அன்பு கேக்க சந்தோஷமா இருக்கு. ஆனா அவங்க ’உ’ போட்டுட்டா கூட ஆகா சிறந்த படைப்புன்னு நீங்க சொல்ல ஆரம்பிச்சிச்சின்னா அது ரெண்டு தரப்புக்கும் நல்லதில்ல.”  இதே அளவுகோட்டின் மூலம்தான் அவர் தன் நண்பர்கள் படைப்புகளையும் அணுகியிருக்கிறார் என்று அவர் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது.

சவுத் ஏசியன் புக்ஸ் முதல் பதிப்பாய் வெளியிட்ட இந்த ”என் இலக்கிய நண்பர்கள்” புத்தகம் குறித்து 1996 ஜூலை காலச்சுவட்டில் சுந்தர ராமசாமி ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். அது காலச்சுவடு 2004இல் வெளியிட்டுள்ள அவரின் ஆளுமைகள் மதிப்பீடுகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த மதிப்புரையில் எம். வி. வி மேல் அவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் வெளிப்படும் அதே சமயத்தில் இந்த புத்தகத்தைப் பற்றிய கறாரான விமர்சனங்களையும் இப்படி முன் வைக்கிறார்.

”ஒரு பதிப்பாசிரியரின் கடைக்கண் பார்வையில் பெற்றிருக்கக்கூடிய திருத்தங்களில் ஒன்றைக்கூட இந்தப் புத்தகம் பெறவில்லை. பல செய்திகளும் நினைவுகளும் சம்பவங்களும் முரண்பாடுகளின் சுவாரசியம்கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் வருவதில் அலுப்பு ஏற்படுகிறது. அச்சுப் பிழை, முகப்பட்டையில் ‘கா.நா.சு.’ என்று தடிமனில் ஆரம்பமாகிக் கடைசிப் பக்கம் வரையிலும் ஏமாற்றமளிக்காமல் தொடர்கிறது.”

அதே சமயம் அவர் எம். வி. வி மேல்கொண்ட மதிப்போடு எழுதிய சில பத்திகளை இந்த புத்தகத்தின் பின்னட்டையில் நீங்கள் பார்க்கலாம்.

[ads_hr hr_style=”hr-dots”]

”இது ரொம்ப சின்ன புத்தகம். கட்டுரை, கொஞ்சம் சுய சரிதை, பேட்டி அப்படி இப்படின்னு எல்லாம் கலந்து இருக்கு. இதான் என் கடைசி புத்தகமா இருக்கும். இது வரத்துக்கு தேனுகா எவ்வளவோ பாடுபட்டார். சவுத் ஏசியன் புக்ஸ் யார்ன்னே எனக்கு தெரியாது. இந்த மீட்டிங்கும் இப்ப அவர்தான் ஏற்பாடு பண்ணிருக்கார்.

என் கடைசி நாவல் ”காதுகள்” ரவியாலதான் வந்தது. அன்னம் புஸ்தகங்கள் நிறைய படிச்சிருக்கேன். ஆனா, எனக்கு மீராவை தெரியாது. இவங்க ரெண்டு பேரும்தான் இதுக்கெல்லாம் காரணம். அதுனால நான் இவங்களுக்கு நன்றில்லாம் சொல்லமாட்டேன். அது அப்படித்தான்.

என் நண்பர்கள் நிறைய பேரைப் பத்தி கட்டுரைகள் எழுதணும். காலமும் உடல் நலமும் கையும் இடம் குடுக்கல. முக்கியமா கு. ப. ரா, பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, சாலிவாகனன், திருலோகசீதாராம் பத்தில்லாம் எழுதணும். இதுல மெளனி, க. நா. சு, ஜானகிராமன் பத்தி எழுதினதும்கூட ரொம்ப குறைச்சல்.

திருலோகசீதாரம் கவிதைகள்  கட்டுரைகள்ன்னு நிறைய எழுதினார். ஏகப்பட்ட பத்திரிகைகள்ள சின்ன வயசுலேர்ந்து எடிட்டரா இருந்தார். பல எழுத்தாளர்களை எழுத வச்சார் அவரோட சிவாஜில. ஆனா அவர் புஸ்தகங்கள் வரதுல அவருக்கு ஆர்வமே இல்ல. எதோ ரெண்டு கவிதை தொகுதி கொண்டு வந்ததா ஞாபகம். எப்ப பாத்தாலும் பாட்டு பாட்டு தான். அதும் பாரதியார் பாட்டெல்லாம் பாடினார்ன்னா நம்மள அப்படியே புடிச்சி நிறுத்திடுவார். கிராம ஊழியன் ஆசிரியர் பூரணம் பிள்ளை மறைஞ்ச பிறகு அவரைதான் எடிட்டரா போட்டாங்க.
கு. ப. ரா ரொம்ப கஷ்ட்டப்படறார் அவரை கெளரவ ஆசிரியரா போடுங்கன்னு இவர் சிபாரிசு பண்ணினார். திருலோகத்துக்கும் அப்ப கஷ்ட்டம்தான். ஆனா  அத அவர் கு. ப. ராவுக்காக விட்டுக்குடுத்துட்டு ஆசிரியர் குழுல இருந்தார். அப்படி ஒரு மனசு உள்ள மனுஷன் அவர்.

மெளனியப்பத்தி சொன்னது காண்ட்ரோவர்ஷியல் ஆயிடிச்சு. நான் சொன்னது உண்மை. அவர் எனக்கு பத்து பன்னண்டு  வயசுக்கு மேல பெரியவர் அதனால நான் பதிலுக்கு பதில் பேசாம இருந்துட்டேன். நான் சொல்றது எதும்  புரியலன்னா இந்த புஸ்தகத்த படிக்காதவங்க படிச்சிப்பாருங்க புரியும்.

இங்க என்னா நடக்குதுன்னா இலக்கியவாதிங்கள்ல சில பேரை மட்டும் ஒஹோன்னு கொண்டாடுறது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒருத்தன் வாழ்க்கை முழுக்க என்ன எழுதிருக்கான்னுகூட பாக்கறதில்ல. இத சொல்றப்ப எனக்கு வேறொன்ணு ஞாபகம் வருது. அது வேறன்னாலும் இதோட தொடர்புள்ளதுதான்.

1954 அக்டோபர்ல நம்ம கும்மோணம் காலேஜ் நூற்றாண்டு விழா நடந்தது. நானும் ஜானகிராமனும் பொயிருந்தோம். அங்க இருக்க தமிழ் ஆசிரியர்களுக்கு ஒருத்தருக்குகூட எங்களை யார்ன்னு தெரியல. எங்களை மட்டுமில்ல. கு.ப.ரா., பிச்சமூர்த்தி, மெளனி யாரையுமே தெரியல. குறைந்த பட்சம் இந்த மாதிரி நம்ம ஊர் எழுத்தாளர்கள் அல்லது இந்த காலேஜ் ல வாசிச்சவங்கன்னு அவங்க படத்தை போன பிறகாவது அந்த தமிழ்த்துறைல வைக்கலாம். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.

கல்வி துறைதான் அப்படின்னா இலக்கிய துறைல வேற கூத்து. க. நா. சு – மெளனிய அப்படியே சாமி மாரி ஆக்கிட்டார். பத்தாதுக்கு புதுமைப்பித்தன் அவரை திருமூலர்ன்னு வேற சொல்லிட்டார்.  மெளனி பெரிய ரைட்டர்தான்.  அவர் மேல எனக்கு மரியாதை உண்டு அதெல்லாம் வேற விஷயம். அதுக்காக க. நா. சு அப்படி ஒரு ரசிகக்குஞ்சு மாதிரி செயல்பட்டிருக்ககூடாது. முதல்ல அவரைப்பத்தியே அவருக்கு தெரியல. அவர் நல்ல படைப்பாளி. அத விட்டுட்டு ஜாபிதா போடுற ஆளா மாறிட்டார். இந்த மாதிரி எல்லா சண்டைகளோடதான் எங்க நட்பெல்லாம் இருந்தது. கடைசி வரைக்கும் பங்கமில்ல.

ஒரு வகையில் நான் என் நண்பர்களின் அன்பால் வாழ்ந்தவன்னு சொல்லணும். இந்த புஸ்தகத்துல நான் எழுதினவங்க மட்டும் இல்ல. இந்த மழைல நான் எதோ சொல்லப்போறேன்னு கேக்க வந்திருக்கிங்களே நீங்களும் என் நண்பர்கள்தான். பெரும்பாலும் எல்லாரும் படிச்சிட்டு வந்திருக்கிங்கன்னு தேனுகா சொன்னார். சந்தோஷம். நான் மேல எதும் சொல்லல. எல்லாம் சொல்லியாச்சு. படிச்சத பத்தி நீங்கள்லாம் சொல்லுங்க. இல்ல கேள்வி கேளுங்க. நாம எல்லாரும் பேசலாம். ஒரு கலந்துரையாடல் மாரி வச்சிக்கலாம். சின்னதாவோ பெரிசாவோ ஒரு புஸ்தகம் வந்தா குறைந்த பட்சம் இதாவது நடக்கணும்.

என் கடைசி புத்தகங்கள் என்று எம்.வி.வி அன்று சொன்னாலும் அவர் எழுதி இன்னும் வெளிவராமலிருக்கும் ”மீ காய் கெரு” அவரின் இந்த நூற்றாண்டில் வெளி வர இருக்கிறது. சுமார் ஐம்பது சிறுகதைகளே கிடைத்த சூழலில் இதுவரை நூற்றி ஆறு கதைகளை நான் – நண்பர்கள் கல்யாணராமனோடும் தனசேகரோடும் இணைந்து தேடி எடுத்து மொத்த தொகுப்பாக ”காலச்சுவடு” வழியே கொண்டுவர உள்ளோம். மற்ற படைப்புகளை தனித்தனியே தொகுக்கும் திட்டங்களும் உள்ளன. தேர்ந்த கலைஞர்கள் மீட்டிச்சென்றுவிட்டாலும்கூட காலங்கடந்தும் அதன் கார்வைகள் எதிரொலித்தபடியேதான் இருக்கின்றன.

 


ரவிசுப்பிரமணியன் 

[ads_hr hr_style=”hr-dots”]

[tds_note]

சிறுவாணி வாசகர் மையம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட உள்ள எம். வி. வெங்கட்ராமின் “என் இலக்கிய நண்பர்கள்” நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.

நன்றி : ஆளுமைகள் மதிப்பீடுகள், காலச்சுவடு வெளியீடு.

[/tds_note]

[ads_hr hr_style=”hr-dots”]

[tds_info]

எம்.வி.வியின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர் இளம் வயதிலேயே அபூர்வமான – இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் – இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப்போனவர்.

அவரது இளமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக்கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள்.

மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உழைப்பையும்விட பிழைப்புக்காக கேவலப்பட்ட மனத்துடன் செலவிட நிர்பந்திக்கப்பட்ட காலமும் உழைப்பும் அதிகம்.

எம். வி. வியும் எவ்வளவோ நினைவுகளை நமக்கு பதிவு செய்து தந்திருக்க கூடியவர்தான். இன்னும் எவ்வளவோ படைப்புகளையும் தந்திருக்க கூடியவர்தான். ஏன் தரவில்லை என்று அவரிடம் கேட்க நமக்கு யோக்கிதை இல்லை என்பதையும் இந்த புத்தகம் உணர்த்துகிறது.

  • சுந்தர ராமசாமி

நன்றி : ஆளுமைகள் மதிப்பீடுகள், காலச்சுவடு வெளியீடு.

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.